Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | எங்கள் வீட்டில் | பொது | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | தகவல்.காம்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
கேள்விகளெல்லாம் கேள்விகள்தாமா?
- ஹரி கிருஷ்ணன்|மே 2009||(1 Comment)
Share:
Click Here Enlargeகனகலிங்கத்துக்கு பாரதி பூணூல் அணிவித்ததன் தொடர்பாகச் செய்யப்பட்டுள்ள ஓர் ஆய்வைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ‘பாரதி 125' பன்னாட்டு ஆய்வுக் கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள ‘பாரதி 125 - ஆய்வுக் களஞ்சியம்' என்ற புத்தகத்தில் இடம்பெற்றுள்ள “பாரதி” யார்? என்ற தலைப்பில் திரு. தி. அன்பழகன் செய்துள்ள ஆய்வுக் கட்டுரையை ஆய்வுக்குட்படுத்தத் தொடங்கியிருந்தோம். 23 ஏப்ரல் 2005 அன்று சென்னை சமஸ்கிருத சேவா சமிதியில் எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசியதாகக் குறிப்பிடப்படும் சில கருத்துகளின் அடிப்படையில் இந்த ஆய்வாளர் ஒரு சில வினாக்களை எழுப்பியிருக்கிறார் என்பதையும் பார்த்தோம். இப்போது, ஆய்வாளர் எழுப்பியுள்ள--‘கனகலிங்கம் பூணூல் விவகாரத்தில் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகள்' என்று ஆய்வாளர் குறிப்பிடும்--வினாக்களுக்கு வருவோம். ஆய்வாளர் சொல்கிறார்:

“ஜெயகாந்தன் சொற்படிப் பார்போமேயானால், கீழ்கண்ட அம்சங்களையும் அலசி ஆராய்ந்தாக வேண்டும்.

1. பிராமணனுக்குக் கர்ப்பத்திலிருந்து எட்டு வயதில் பூணூல் அணிவிக்கும் உபநயனச் சடங்கு செய்ய வேண்டும். (மனு சாஸ்திரம், அத். 2, சுலோ. 36)

2. உபநயனம் ஆனபின்புதான் சமிதாதானம் முதலிய விரதானுஷ்டாமும் வேதாத்தியானமும் வரிசையாக விதிக்கப்பட்டிருக்கின்றன. (மனு சாஸ்திரம், அத். 2, சுலோ. 173)

3. பிராமணர்களுக்கு பஞ்சால் ஆன பூணூல்தான் அணிவிக்க வேண்டும்.

4. பிராமண மரபுப்படி பூணூல் அணிவித்த பிறகு, சர்ம நாமம் எனும் வேறொரு பெயர் சூட்டப்பட வேண்டும்.

மேற்கண்ட விதிகளும் கறாராகப் பின்பற்றப்பட்டனவா என்பதெல்லாம் கனகலிங்கம் பூணூல் விவகாரத்தில் புதைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளாகும்.”

பூணூல் அணிவிக்கும்போது பிராமணர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை பாரதி சொல்லாமல் பிரம்மோபதேசம் செய்துவைத்தார்' என்று ஜெயகாந்தன் பேசி இருப்பதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஜெயகாந்தன் பேசியிருந்திருந்தால், அது குறித்த ஆய்வாளரின் கருத்து என்ன என்பது இந்த ஆய்வில் தெளிவாக வெளிப்படவில்லை.
இதன் பிறகு ஆய்வாளர் பாரதியைச் சரியென்று சொல்கிறாரா, தவறென்று சொல்ல வருகிறாரா, குறை காண்கிறாரா, நியாயம் கற்பிக்கின்றாரா என்பது எதுவுமே சரிவரப் புலப்படாத வகையில் பட்டும் படாமலும் தன்னுடைய ஆய்வை நகர்த்திக் கொண்டு போகிறார். எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற வகையில் பாரதியை ஆய்வதில் “பகுத்தறிந்து திறனாய்வு செய்யும் எவருக்கும் மகிழ்ச்சி இருக்க முடியாது எனலாம்” என்று கூறித் தன் ஆய்வை முடித்துக் கொள்கிறார். என்றாலும், அவருடைய மேற்படி வினாக்களும், வேல்ஸ் இளவரசருக்கு பாரதி வரவேற்பு இயற்றியதைக் குறித்த அவருடைய தவறான முடிபும் விளக்கம் பெறாமல் அப்படி அப்படியே தனித்தனித் துண்டுகளாக நிற்கின்றன. ‘பாரத மாது தானே பணித்ததன்று' என்று வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு அளிக்கும் கவிதைக்கு உபதலைப்பு இருப்பதைச் சுட்டி, ‘அப்படி வரவேற்று எழுதுவதில் பாரதிக்கு விருப்பம் இருக்கவில்லை. பத்திரிகை ஆசிரியருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு பாரதி இதை எழுதியிருக்கிறான்' என்ற வகையில் முடிவு காண்கிறார். ‘பாரத மாது தானே பணித்தன்று' என்றுதான் அந்த உபதலைப்பு இருக்கிறதே தவிர, ‘பணித்ததன்று' என்று இல்லை; பணித்தன்று என்றால் ‘சொல்வதைப்போல்' என்று பொருள்படும்; எனவே, ‘பாரதத்தாய் தானே வேல்ஸ் இளவரசரை வரவேற்பதுபோல அமைந்த கவிதை' என்றுதான் உபதலைப்பு பேசுகிறது என்ற இந்த விஷயத்துக்குள் போனால் அது இன்னொரு தலைப்பாகிவிடும். அதை இன்னொரு சமயம் விளக்குவோம். இப்போது மேற்படி வினாக்களுக்குத் திரும்பலாம்.

‘எட்டு வயதுக்குள் பூணூல் அணிவிக்கப்பட வேண்டும்' என்ற விதி, கனகலிங்கம் விஷயத்தில் பொருந்தாது. பிராமணர்களுக்குள்ளேயே கூட, பற்பல இளைஞர்களுக்கு இருபதும் அதற்கு மேற்பட்டுமான வயதில் பூணூல் அணிவிக்கப்படும் வழக்கமும் இன்றைய காலகட்டத்தில் நிலவத்தான் செய்கிறது. இவர்களுக்கெல்லாம் எந்த விதி பொருந்துகிறதோ அதே விதி கனகலிங்கம் விஷயத்தில் பொருந்துகிறது என்று சொன்னால் யாருக்கும் மறுப்பிருக்க முடியாது. எனவே, முதல் மர்மத்தில் மர்மமோ முடிச்சோ இல்லை.

இரண்டாவதாக எழுப்பப்பட்டிருக்கும் ‘மர்ம முடிச்சை' சற்றே உற்று நோக்குவோம். என்ன சொல்கிறது இந்த மர்ம முடிச்சு? ‘உபநயனம் ஆனபின்புதான் சமிதாதானம் முதலிய விரதானுஷ்டாமும் வேதாத்தியானமும் வரிசையாக விதிக்கப்பட்டிருக்கின்றன'. உபநயனம் செய்விக்கப்பட்ட பிறகுதான் ஒருவனுக்கு விரதங்களை மேற்கொள்ளவும் வேதங்களைப் பயிலவுமான தகுதி ஏற்படுகிறது என்ற விதிமுறை ‘கனகலிங்கம் விஷயத்தில் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டதா' என்று கேட்க வருவதன் மூலம் என்ன சொல்ல நினைக்கிறார் ஆய்வாளர்? அந்த விதிமுறை கடைப்பிடிக்கப்படவில்லை என்று வைத்துக் கொண்டால், ‘உபநயனம் செய்விக்கப்படுவதற்கு முன்னதாகவே விரதானுஷ்டானங்களும், வேதப் பயிற்சியையும் மேற்கொள்ளுமாறு கனகலிங்கம் செய்விக்கப்பட்டாரா? நிச்சயமாக இல்லை. சரி. அதற்குப் பின்னர் கனகலிங்கம் இவற்றை மேற்கொள்ளவில்லை என்று சொல்ல வருகிறாரா? அப்படியானால், பூணூல் அணிவிக்கப்படும் ஒவ்வொருவரும் வேதப் பயிற்சியை மேற்கொள்கிறார்களா, விரதங்களை அனுசரிக்கிறார்களா என்ற கேள்விக்கும் விடைகாண வேண்டிவரும்.

இது இல்லை என்றால், அது இல்லாமல் இருந்திருப்பதில் தவறேதும் இருக்க முடியாது. (நான் இந்தப் பகுதிக்கான முழு விடையையும் இன்னமும் சொல்லவில்லை. கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திர உபதேசம் ஆனதா இல்லையா என்பதைப் பார்த்த பிறகே இந்த ‘விரதானுஷ்டான' விஷயத்தைப் பற்றி எதுவும் பேசமுடியும். ஆகையாலே, இப்போதைக்கு வேதப் பயிற்சிகளை கனகலிங்கம் மேற்கொள்ளாதிருந்திருந்தால் அதில் ஆச்சரியமேதும் இல்லை என்று சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறேன். இதைப் பற்றி மேலும் பேசுவோம்.) எனவே, இரண்டாவது மர்ம முடிச்சில் முடிச்சே விழவில்லை. அப்புறம்தானே அந்த முடிச்சு மர்மமானதா இல்லையா என்பதைக் குறித்துப் பேச!

மூன்றாவது ‘மர்ம முடிச்சாக' ஆய்வாளர் குறிப்பிடுவது, ‘அந்தணனுக்குப் பஞ்சால் ஆன பூணூலைத்தான் அணிவிக்க வேண்டும்' என்பதை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். பஞ்சு, பட்டு, கம்பளம் என்ற மூன்று வகைகளைத் தவிர வேறு ஏதாவது வகையில் நூல் நூற்கப்பட்டோ, திரிக்கப்பட்டோ இருந்திருக்குமானால், ‘அந்தணனுக்குப் பஞ்சிலும், மற்ற இன்ன வருணத்தாருக்கு இன்ன வகையில் நூற்கப்பட்ட நூலிலும் ஆன பூணூலை அணிவிக்க வேண்டும்' என்றும்; அதில் ‘பஞ்சால் நூற்கப்பட்ட பூணூல் கனகலிங்கத்துக்கு அணிவிக்கப்பட்டதா, அல்லது வேறு ஏதேனும் வகையில் நூற்கப்பட்ட நூல் பயன்படுத்தப்பட்டதா' என்ற கேள்விக்குள் புகலாம். இருப்பதோ ஒரே ஒரு வகைப் பூணூல்தான். அது பஞ்சினால் மட்டுமே ஆனதாகத்தான் கிடைக்கவே கிடைக்கிறது. பிறகு கனகலிங்கத்துக்குப் பஞ்சால் ஆன பூணூலை அல்லாமல் வேறு என்ன நூலால் செய்யப்பட்ட பூணூலை பாரதி அணிவித்திருக்க முடியும்? ஆக, மூன்றாவது ‘மர்ம முடிச்சும்' காற்றில் உடைந்த சோப்புக் குமிழ்போல சிதறுண்டு போகிறது. இவற்றையெல்லாம் ஒரு விஷயமாகக் கருதி, இவற்றையும் வாதங்களாக எடுத்து வைத்திருக்கும் ஆய்வாளருடைய நோக்கம்தான் உண்மையிலேயே ‘மர்ம முடிச்சாக' நிற்கின்றது.

நான்காவதாகச் சொல்லப்படுவது. ‘பூணூல் அணிவிக்கப்பட்ட பிறகு, அணிவிக்கப்பட்டவருக்கு சர்ம நாமம் என்று “வேறொரு” பெயர் சூட்டப்படவேண்டும்' என்பது. இது கொஞ்சம் நுட்பமான செய்தி. பூணூல் அணிவிக்கப்படும்போது, அபிவாதன மந்திரத்தின் சந்த ஓட்டத்துக்கு இசைய, ஒருவருடைய பெயரில் சிறிய அளவில் மாற்றம் செய்யப்படுவது உண்டுதான். மாத்திரை, அசை கணக்குகளுக்கு ஒருவருடைய பெயர் பொருந்தி வராவிட்டால் ‘ஸ்ரீ' என்று சேர்த்தோ அல்லது வேறு சிறிய மாறுதல்களைச் செய்தோ ஒருவருடைய பெயரை மந்திரத்தின் சந்தத்துக்கு இயைய மாற்றி அமைப்பதும் ஒரு வழக்கம்தான். அப்படி ஒவ்வொருவர் விஷயத்திலும் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அவருடைய பெயர் இயற்கையாகவே சந்தத்துக்கு இயைந்ததாக இருந்தால் அந்தப் பெயரில் மாற்றம் செய்யப்பட வேண்டியதே இல்லை. எடுத்துக்காட்டாக, என்னுடைய பெயரில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என்பதையே சான்றாகக் காட்ட முடியும். எனவே, நான்காவது ‘மர்ம முடிச்சும்' காணாமல் போய்விடுகிறது.

‘கனகலிங்கம்' என்றப் பெயரை முற்றிலுமாக மாற்றி, வேறொரு பெயரைச் சூட்டினால்தான் அந்தச் சடங்கு சாத்திரபூர்வமாகப் பூர்த்தி அடையும்; அவ்வாறு செய்யப்படாவிட்டால்--ஏதோ வெளிவேஷத்துக்காகவும், பகட்டுக்காகவும் பாரதி, கனகலிங்கத்துக்குப் பூணூல் அணிவித்ததைப் போலவும் தோற்றம் ஏற்படும் வகையில் பேசப்பட்டுள்ள இந்த--விதிமுறைகள் எதுவும் மீறப்படவில்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றன அல்லவா? ஆகவே, ஆய்வாளர் குறிப்பிடுவதுபோல் இவற்றை ‘அலசி ஆராய்ந்தாக' வேண்டிய அவசியம் எதுவுமே இல்லை என்பதுதான் நிதரிசனம்.

இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் விடை காணப்படாமல் நிற்கும் அம்சத்துக்கு வருவோம். ‘இப்பூணூல் அணிவிக்கும்போது பிராமணர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை பாரதி சொல்லாமல் பிரம்மோபதேசம் செய்துவைத்தார்' என்று ஜெயகாந்தன் பேசி இருப்பதாக ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு ஜெயகாந்தன் பேசியிருந்திருந்தால், அது குறித்த ஆய்வாளரின் கருத்து என்ன என்பது இந்த ஆய்வில் தெளிவாக வெளிப்படவில்லை. கருத்து ஜெயகாந்தனுடையதாகினும் சரி; கட்டுரையாளர் அதை மறுத்தோ, ஆதரி்த்தோ எப்படிப்பட்ட நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக இல்லாமல் போனாலும் சரி. பிரம்மோபதேசம் என்றாலே காயத்ரி மந்திரத்தை உபதேசிப்பது என்றுதான் பொருள். ‘காயத்ரி மந்திரத்தை உபதேசிக்காமல் பிரம்மோபதேசம் செய்வித்தார்' என்று சொல்வது, ‘அரிசியை உலையில் இடாமலேயே சோறு வடித்தார்; ‘அ, ஆ' எழுதக் கற்றுக் கொடுக்காமலேயே தமிழ்ப் பள்ளியில் சேர்த்தார்; துணியே இல்லாமல் சட்டை தைத்தார்; காற்று இல்லாமலேயே மூச்சு விட்டார்' என்றெல்லாம் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது.
குருநாதர் என்னை ஆசீர்வதித்து, ‘இன்றுமுதல் நீ பிராமணன்' என்று உரத்த குரலில் கோஷித்தார். ‘இனி, யாராகிலும் என்ன ஜாதி என்று கேட்டால் ‘நான் பிராமணன்'என்று தைரியமாகச் சொல்லு' என்று கட்டளையிட்டார்.
இந்த நுட்பங்கள் தெரியாத ஒருவர் இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்தார் என்றால் அதற்கு ஏதேனும் காரணங்கள் இருந்திருக்கக் கூடும் அல்லவா? அப்படி ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதைப் பார்ப்பதற்காக, தனக்குப் பூணூல் அணிவிக்கப்பட்ட சம்பவத்தை கனகலிங்கம் எவ்வாறு விவரிக்கிறார் என்று எடுத்துப் பார்த்தேன். கனகலிங்கம் சொல்கிறார்:

“கூடத்தில் லட்சுமி, ஸரஸ்வதி, கிருஷ்ணன் ஆகிய மூவருடைய படங்கள் மாட்டியிருந்தன. இம்மூன்று படங்களையும் பூக்களால அலங்கரித்தார் பாரதியார். கிருஷ்ணன் படத்திற்கு அடியில் பிச்சுவா என்ற வளைவான கத்தியொன்று மாட்டியிருந்தது. அந்தக் கத்திக்கும் குங்குமப் பொட்டு இட்டார். சற்று நேரம் பராசக்தியைத் தியானித்துப் பாடினார். பிறகு என்னிடம் வந்து கிழக்குமுகமாய் உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்ததும், அந்த வீர விழியால் ஒரு பார்வை என்னைப் பார்த்துவிட்டுக் குருநாதர், தம் திருக்கரத்தால் என் நெற்றியிலும், புயத்திலும் மார்பிலும் திருநீற்றுக் காப்பு இட்டார். பிறகு என்னை மண்டியிட்டு உட்காரச் சொன்னார். கையில் பூணூலை எடுத்துக்கொண்டு சூரிய வழிபாடு செய்து வெகுநேரம் ஜபம் செய்து முடித்ததும், எனக்குப் பூணூலை அணிவித்தார்.

நான் உடனே சாஷ்டாங்கமாக விழுந்து பாதத்தைத் தொட்டு நமஸ்கரித்தேன். குருநாதர் என்னை ஆசீர்வதித்து, ‘இன்றுமுதல் நீ பிராமணன்' என்று உரத்த குரலில் கோஷித்தார். ‘இனி, யாராகிலும் என்ன ஜாதி என்று கேட்டால் ‘நான் பிராமணன்'என்று தைரியமாகச் சொல்லு' என்று கட்டளையிட்டார்.”

கனகலிங்கத்தின் விவரணை மேலே தொடர்கிறது. ஆட்சேபணை செய்பவர்கள் ஒன்று கேட்கக் கூடும். “கையில் பூணூலை எடுத்துக்கொண்டு சூரிய வழிபாடு செய்து வெகுநேரம் ஜபம் செய்து முடித்ததும், எனக்குப் பூணூலை அணிவித்தார்” என்றுதானே கனகலிங்கம் சொல்கிறார்? ‘பாரதி வெகுநேரம் ஜபம் செய்தார் என்று சொல்லும் கனகலிங்கம், தனக்கு அவர் காயத்ரி மந்திரத்தை உபதேசித்ததாகச் சொல்லவில்லையே! ஆகவே, பாரதி கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கவில்லை என்பது நிறுவப்படுகிறது இல்லையா' என்று அந்த அன்பர்கள் கேட்கக்கூடும்.

அதற்குத்தான் எந்த விஷயத்திலும் முழுப்பார்வை தேவை என்பது. பாரதி கனகலிங்கத்துக்கு மட்டுமில்லை; வள்ளுவப் பண்டாரம் எனப்படும் முத்துமாரியம்மன் கோவில் பூசாரிக்கும் பூணூல் அணிவித்தார் என்பது பலருக்குத் தெரியாத செய்தி. அந்த நிகழ்வையும் பார்த்தால் மட்டுமே, கனகலிங்கம் இங்கே தனக்கு ‘காயத்திரி மந்திரம்' உபதேசிக்கப்பட்டதாகச் சொல்லாமல் விட்டிருப்பது தற்செயலா, அல்லது உண்மையிலேயே பாரதி அவருக்கு உபதேசிக்காததைத்தான் இது சொல்கிறதா என்ற கேள்விக்கான விடையைக் காண முடியும். வள்ளுவப் பண்டார சங்கதிக்கு வருவோம்.

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline