Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
படித்திரு, திளைத்திரு, விழித்திரு
- ஹரி கிருஷ்ணன்|ஜூன் 2009||(1 Comment)
Share:
Click Here Enlarge‘பாரதி கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கவே இல்லையா' என்ற கேள்விக்கு விடை காணும் நோக்கில், வள்ளுவப் பண்டாரத்துக்கு பாரதி பூணூல் அணிவித்த நிகழ்வைக் கனகலிங்கம் எவ்வாறு விவரிக்கிறார் என்பதையும் பார்த்த பிறகே எந்த முடிவுக்கும் வரமுடியும் என்று சென்றமுறை சொல்லியிருந்தோம். வள்ளுவப் பண்டாரத்துக்கு பாரதி பூணூல் அணிவித்த நிகழ்வுக்கு வருவோம்.

‘எனக்கு உபநயனம் செய்த சில தினங்களில் வேறொரு உபநயனமும் இந்த ரீதியில் நடைபெற்றது' என்று கனகலிங்கம் குறிப்பிடுவதால், இரண்டு நிகழ்வுகளும் சில தினங்கள் இடைவெளியில் நடைபெற்றவை என்பதாலும்; இரண்டு நிகழ்வுகளிலும் நாயகர் ஒருவரே--பாரதியே--என்பதாலும், இரண்டு நிகழ்வுகளையும் விவரிப்பவரும் ஒருவரேதான் என்பதாலும் இவை இரண்டுமே ஒன்றுக்கொன்று ஒப்பான, ஒன்றைப்போலவே நடைபெற்றவைதாம் என்பதை உறுதிப்படுகிறது. வள்ளுவப் பண்டாரம் என்று இங்கே நாம் குறித்திருப்பவருடைய பெயர் நாகலிங்கம்--அல்லது நாகலிங்கப் பண்டாரம்--என்பதாகும். புதுச்சேரியில் உள்ள தேசமுத்துமாரி அம்மன் கோவிலில் பூசாரியாகப் பணியாற்றியவர் இவர். பூசாரி என்பது பகுதிநேரச் செயல்பாடுதான். உண்மையில் இவரும் கனகலிங்கமும் புதுச்சேரியில் இருந்த ‘கோதார்' என்ற இரும்பாலையில், ஒரே இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள் என்று கனகலிங்கம் குறிப்பிடுகிறார். ஆகவே, நாகலிங்கப் பண்டாரம் பகுதிநேரம் குமாஸ்தாவாகவும், பகுதிநேரம் பூசாரியாகவும் பணியாற்றி இருந்திருக்கலாம். இந்த தேசமுத்து மாரியம்மன் கோவில் ‘புதுவை உப்பளம் நடுப்பகுதியில் வசிக்கும் ஹரிஜனங்களுக்குச் சொந்தமாயிருந்தது' என்றும் கனகலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் அம்பிகையின் பேரில் இயற்றப்பட்டதுதான் ‘தேடிஉனைச் சரணடைந்தேன் தேசமுத்து மாரீ! கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரம் தருவாய்' என்று தொடங்கும் பாரதி பாடல். பாரதி, நாகலிங்கப் பண்டாரத்திடம் இந்தப் பாடலைப் பாடிக் காட்டிய நிகழ்வையும், பின்னால், இந்தப் பாடலைப் பண்டாரம் பாராயணம் செய்து வந்தததையும், பாரதியின் முன்னிலையில் பல சமயங்களில் பண்ணோடு இந்தப் பாடலை அவர் இசைத்த செய்திகளையும் கனகலிங்கம் ‘உப்பளம் தேசமுத்துமாரி' என்ற தலைப்பிட்ட அத்தியாயத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.

‘ஸார்! அப்படியானால் எனக்கும் உபநயனம் செய்து வைக்கவேண்டும். வடமொழியும் பாரதியாரிடம் கற்றுக்கொள்ள எனக்கு ஆசையுண்டு. தாங்கள் சிபாரிசு செய்யவேண்டும்'
இவையெல்லாம் உபநயன நிகழ்வுகளுக்குச் சிலகாலம் கழித்து நடந்தவை. கனகலிங்கத்துக்கு உபநயனம் செய்த சில தினங்களுக்குப் பிறகு வள்ளுவப் பண்டாரம்--நாகலிங்கம்--தன் வீட்டைத் தேடிவந்ததாகக் கனகலிங்கம் சொல்கிறார். பண்டாரம் கனலிங்கத்தை, “ஸார்! உங்களைப் பாரதியார் விஷயமாக ஒரு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். உங்கள் குரு யாரோ ஒரு ஹரிஜனனுக்குப் பூணூல் போட்டுவிட்டாராமே, அது குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா” என்று கேட்டார். நான் சிரித்துக் கொண்டே “பண்டாரம்! எனக்குத்தான் பாரதியார் உபநயனம் செய்துவைத்தார்” என்றேன். பண்டாரம் திகைத்து நின்றார். நான் மேலும், “அதுமாத்திரம் அல்லாமல், இனி யாராகிலும் என்ன என்ன ஜாதி என்று கேட்டால், ‘பிராம்மணன்' என்று தைரியமாகச் சொல்லவேண்டும் என்றும் கட்டளையிட்டிருக்கிறார்” என்றேன்.

“இது கேட்ட பண்டாரம், ‘ஸார்! அப்படியானால் எனக்கும் உபநயனம் செய்து வைக்கவேண்டும். வடமொழியும் பாரதியாரிடம் கற்றுக்கொள்ள எனக்கு ஆசையுண்டு. தாங்கள் சிபாரிசு செய்யவேண்டும்'என்று என்னை வேண்டிக்கொண்டார். நானும் அப்படியே ஒருநாள் பண்டாரத்தைப் பாரதியாரிடம் அழைத்துப்போய்ச் சிபாரிசு செய்துவிட்டு, என் வீட்டுக்குப் போய்விட்டேன்” என்று கனகலிங்கம் குறிப்பிடுகிறார். இது ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெற்றிருக்கிறது. பாரதியும் வள்ளுவப் பண்டாரமும், அறிமுகத்துக் பிறகு உரையாடிக் கொண்டிருந்தனர்; கனகலிங்கம் தன் வீட்டுக்குப் போய்விட்டார். இதற்கடுத்த ஞாயிற்றுக் கிழமை வள்ளுவப் பண்டாரம் பாரதியைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார். அங்கே நடந்தனவற்றைப் பின்வருமாறு கனகலிங்கம் விவரிக்கிறார்:
“அடுத்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4-மணி சுமாருக்குப் பண்டாரம் பாரதியார் வீட்டுக்குப் போனதும், ‘வாரும், வாரும் குருக்களே!' என்று பாரதியார் வரவேற்றாராம். ‘என் ஞாயிற்றுக்கிழமைச் சீடன்' என்று அழைத்து, ஒருநாள் தாமே பண்டாரத்திற்குப் பூணூலும் போட்டு, காயத்ரி மந்திரமும் உபதேசித்தாராம். பண்டாரம் என்னைச் சந்தித்தபோது, ‘பாரதியார் வீட்டுக்குப் போய்வருகிறீரா?' என்று கேட்டேன். அதற்கு அவர் ‘அன்று நீங்கள் சிபாரிசு செய்தபடி ஒன்றும் குறைவில்லை. காயத்ரி மந்திரம் முதலியவற்றைச் சொல்லிக்கொடுத்து நேற்று எனக்கு உபநயனமும் செய்வித்தார்' என்று பதில் சொன்னார்.”

பிழைபட்ட கருத்துகளை, வேறு எதையோ சொல்லவரும் நேரத்தில் தற்செயலாகச் சொல்வதைப்போன்ற ஒரு தொனியில் வெளிப்படுத்தி, அதையும் ஓர் ஆய்வரங்கில் படிக்கலாமா என்பதே கேள்விக்குரிய ஒன்று
நாகலிங்கப் பண்டாரத்துக்கு பாரதி காயத்ரி மந்திரத்தை உபதேசித்தார் என்பது ஒன்றுக்கு இரண்டுமுறையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது; குறிப்பிட்டிருப்பவர் அதே கனகலிங்கம். அப்படியானால், யாருடைய சிபாரிசின் பேரில் நாகலிங்கப் பண்டாரம் பாரதிக்கு அறிமுகமானாரோ, அவருக்கு உபதேசிக்காத ஒன்றையா பின்னவருக்கு உபதேசித்திருக்க முடியும்? அவ்வாறிருப்பி்ன், ‘எனக்கு அவ்வாறு செய்யவில்லை. பண்டாரத்துக்கு உபதேசித்தார்' என்றல்லவா கனகலிங்கம் சொல்லியிருப்பார்! ஆகவே, தனக்கு உபநயனம் செய்ததைப் பற்றி விவரிக்கையில் இந்த ‘காயத்ரி மந்திர உபதேசம் பற்றி' கனகலிங்கம் குறிப்பிடாமல் விட்டிருப்பது தற்செயலே என்பது மிகமிக வெளிப்படையாகத் தெரிகிறது. ஒருவேளை கனகலிங்கத்துக்குப் பயிற்றுவிக்காத எதையேனும் நாகலிங்கப் பண்டாரத்துக்கு பாரதி பயிற்றுவி்த்திருந்தால், அது, பண்டாரமே மிக விரும்பிக் கேட்டுக்கொண்ட வடமொழிப் பயிற்சியாக இருக்கலாம். இது குறித்துத் துல்லியமான விவரங்கள் எதுவும் இல்லை. எது எப்படி இருப்பினும், கனகலிங்கத்துக்கு காயத்ரி மந்திர உபதேசம் நடைபெறவில்லை என்ற கருத்து அடிப்படையற்றது என்பது தெளிவாகவே தெரிகிறது.

நாம் அலசி வருவது ஒரு பன்னாட்டுக் கருத்தரங்குக்கான ஆய்வுக் கட்டுரை; ‘ஆய்வுக் களஞ்சியம்' என்ற பெயரில் புத்தகமாகப் போகிற ஒரு கட்டுரை; காலகாலத்துக்கும் பிற்கால ஆய்வாளர்கள் ‘இதை அப்படியே நம்பலாம்; இந்த விவரங்கள் எல்லாமே மிகச் சரியானவைதாம்' என்று முழுமையான நம்பிக்கை வைத்து, மேலும் இந்தத் திறக்கில் ஆய்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையாக அமையப் போகிற கட்டுரை. பிழைபட்ட கருத்துகளை, வேறு எதையோ சொல்லவரும் நேரத்தில் தற்செயலாகச் சொல்வதைப்போன்ற ஒரு தொனியில் வெளிப்படுத்தி, அதையும் ஓர் ஆய்வரங்கில் படிக்கலாமா என்பதே கேள்விக்குரிய ஒன்று. நூலாக வெளியிடப்பட்டும் விட்டது. இத்தகைய தவறுகளை எங்கேனும், யாராகிலும் சுட்டாமல் விட்டுவிட்டால், ஏற்கெனவே பல்லாயிரம் விவரப் பிழைகளையும், பொருத்தமற்ற தகவல்களையும் சுமந்துகொண்டிருக்கும் பாரதியின் வரலாற்றுப் பக்கங்களில் இப்படி ஒரு தவறு இடம்பெற்று, அதை ஒருவருமே மறுத்துப் பேசவில்லை என்றால் இந்தத் தவறான தகவல்களின் அடிப்படையில்--அதுவும் தகவல் புரட்சி நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்--மேலும் தவறான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட இடமிருக்கிறது அல்லவா? இந்த அக்கறையில்தான் இந்த ‘ஆய்வின் மேலான ஆய்வை' மேற்கொண்டோம். நம்முடைய நோக்கம் அம்மட்டே.

எடுத்துக்காட்டாக ஓர் ஆய்வின்பேரில் மேற்கொண்ட முயற்சிதான் இது. ரீவண மஹராஜன் கதை என்ற பெயரில் பாரதி எழுதியுள்ள வேடிக்கைக் கதை ஒன்றின் அடிப்படையில் ‘ராவணன் பிறன்மனை நயவாதவன்' என்று பாரதி கருதினான்' என்றெல்லாம் செய்யப்பட்டு, இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ஆய்வுக்கட்டுரைகளை எல்லாம் விவாதத்துக்கு எடுத்தோம் என்றால், நம் தொடரே திசைமாறிப் போய்விடும் என்பதனால் இந்த ஒன்றோடு விட்டுவிடுகிறேன். எந்த ஆய்வாயினும்--அதைச் செய்திருப்பது நான் உள்ளிட்ட யாராகினும்--வாசகன் விழித்திருக்கக் கடவன். ஏனெனில், உலகில் அடிப்படை, ஆதாரங்களை எல்லாம் சரிபார்த்த பிறகு எழுதத் தொடங்கும் ஆராய்சியாளர்களும் உண்டு; அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என்று பீறாய்ந்துகொண்டு எழுதும் பீறாய்ச்சியாளர்களும் உண்டு. எனவேதான், வள்ளலாருடைய உபதேசத்தைச் சற்றே மாற்றினோம். படித்திரு, திளைத்திரு. விழித்திரு.

ஹரிகிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline