Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
வாயு புத்திரர்கள் சந்தித்தபோது...
- ஹரி கிருஷ்ணன்|மார்ச் 2020|
Share:
பனைமரம் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்த அந்த வாழைத் தோப்புக்குப் போகும் வழியில், வழியை மறித்துக்கொண்டு, தன் வாலை நீட்டிக்கொண்டு அனுமன் படுத்திருந்தார். மிருகங்களைத் தாண்டிக்கொண்டு செல்லக்கூடாது என்ற மரபைக் கருதி பீமன் அங்கே நின்றான். "வானர சரீரத்தோடு இங்கே படுத்திருக்கும் நீர் யார்? எதற்காக இங்கே படுத்திருக்கிறீர்? க்ஷத்திரிய வம்சத்தவனும், குரு வம்சத்தைச் சேர்ந்தவனும், குந்தியின் கர்ப்பத்தில் வாசம் செய்தவனும், வாயுபுத்திரனுமான பீமன் உம்மைக் கேட்கிறான். பதில் சொல்லும்" என்று கோபத்துடன் கேட்டான். அனுமன், "நான் ஒரு குரங்கு உன் இஷ்டப்படி வழியை விடமாட்டேன். போதும். திரும்பிச்செல். அழிவை அடையாதே" என்றார். பீமனுக்குக் கோபம் வந்துவிட்டது. "அழிவோ, எதுவோ உண்டாகட்டும். நான் இந்த இடத்தைத் தாண்டிச் செல்லவேண்டும். வழியைவிடு. எழுந்திரு" என்று அதட்டினான். அனுமன் அரைக்கண் விழித்து அவனைப் பார்த்தார். "நானோ முதுமையால் தளர்ந்திருக்கிறேன். எழுந்திருக்கச் சக்தியற்றுக் கிடக்கிறேன். அவசியமாக நீ செல்லவேண்டுமானால், என்னைத் தாண்டிக்கொண்டு செல்" என்றார்.

"நிர்க்குணமான பரமாத்மா உனக்குள்ளும் வியாபித்திருக்கிறார். நான் உன்னைத் தாண்டிச் செல்லமாட்டேன். உன்னைத் தாண்டினால் அது பரமாத்மாவை அவமதிக்கும் செயல். இதை அறிந்ததால்தான் என்னால் உன்னைத் தாண்டமுடியவில்லை. இல்லையென்றால், அனுமன் கடலைத் தாண்டிச் சென்றதைப்போல உன்னைத் தாண்டிக் குதித்துச் சென்றிருப்பேன்" என்று பதிலளித்தான். "அது யாரோ அனுமன் என்கிறாயே, அது யார்? அவர் ஏன் கடலைத் தாண்டினார்" என்று அனுமன் அவனைச் சீண்டினார். பீமனும் "அவர் வானர ராஜர், ராமனுடைய பத்தினியைத் தேடுவதற்காக நூறு யோஜனை அகலமுள்ள கடலை ஒரே பாய்ச்சலில் தாண்டியவர் அவர்" என்று தொடங்கி யாரிடம் பேசுகிறோம் என்பதை அறியாமலேயே அனுமனுடைய பெருமைகளை பீமன் விரிவாகச் சொன்னான். "அவருக்கிணையான பலம் கொண்ட நான் உன்னைத் தண்டிக்க வல்லவன். இப்போது எழுந்து இடம் விடாவிட்டால் உன்னை யமலோகத்துக்கு அனுப்புவேன்" என்று சினந்தான்.

மனத்துக்குள் பரிஹாசமாகச் சிரித்துக்கொண்ட அனுமன், "இவன் தன்னுடைய பலத்தின்மீது பெருமை உள்ளவனாக இருக்கிறான்" என்று நினைத்துக்கொண்டார். "தோஷமற்றவனே! கோபந்தணிவாயாக. முதுமையால் நான் எழுந்திருக்கச் சக்தியற்றவனாக இருக்கிறேன். என்மீது கருணைகொண்டு, என் வாலைச் சற்று நகர்த்திவிட்டு நீ இந்த இடத்தைக் கடந்துபோகலாம்" என்றார். பீமனுக்குக் கோபம் வந்தது. "இந்தக் குரங்கை வாலைப்பற்றித் தூக்கி யமலோகத்துக்கு வீசிவிட்டுச் செல்கிறேன் பார்" என்று நினைத்துக்கொண்டு அவருடைய வாலைப் பற்றினான். அதை அவனால் அசைக்கக்கூட முடியவில்லை. இந்திரனுடைய வஜ்ராயுதத்தைப் போல உயர்ந்து நிற்கும் அந்த வாலை மறுபடியும் இரண்டு கைகளாலும் பற்றித் தூக்கினான். அசைக்க முடியவில்லை. இந்த முயற்சியில் அவனுக்குச் சற்று நேரத்தில் விழி பிதுங்கி, புருவங்கள் நெரியலாயின. தன் வலிமையின் மீது அவனுக்கிருந்த கர்வம் போயிற்று. படுத்துக்கிடந்த அனுமனின் முன்னால் மண்டியிட்டு வணங்கினான். "வானரோத்தமரே! நீர் யார்? நீர் ஸித்தரா, யக்ஷரா, கந்தர்வரா" என்றெல்லாம் பலவகையாகக் கேட்டுவிட்டு, "உம்மைச் சரணடைந்தேன். நீர் யார் என்பதை எனக்குச் சொல்லவேண்டும்" என்று வணக்கமாகக் கேட்டுக்கொண்டான். அனுமன் முறுவலித்தார்.

அவர் தன்னைப் பற்றிய அறிமுக மொழிகளாகச் சொன்னவை மிகவும் முக்கியமான குறிப்புகளை உடையவை. "அதற்கு ஹனுமான் (பீமனிடம்), "ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே, உனது ஆவலின் அளவை அறிந்து நான் விரிவாகவே உரைக்கிறேன். ஓ! பாண்டுவின் மகனே (பீமா) கேள். ஓ! தாமரைக் கண்ணனே, நான் உலகத்தின் உயிரான வாயுதேவனால், கேசரியின் மனைவியிடத்தில் பெறப்பட்டவன். நான் ஒரு குரங்கு, என் பெயர் ஹனுமான். பெரும்பலம் கொண்ட வானர மன்னர்களும், வானரத் தலைவர்களும், சூரியன் மகன் சுக்ரீவனிடமும், இந்திரன் மகன் வாலியிடமும் ஏவல் செய்து நின்றார்கள். ஓ! எதிரிகளை ஒடுக்குபவனே (பீமா), காற்றுக்கும் தீயிற்கும் இடையே இருப்பதுபோல எனக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நட்பிருந்தது. ஏதோவொரு காரணத்தினால் தனது தமையனால் (வாலியால்) துரத்தப்பட்ட சுக்ரீவன் என்னுடன் நெடுங்காலம் ரிஷ்யமுக பர்வதத்தில் வசித்துவந்தான். தசரதனின் பெரும்பலம் வாய்ந்த மகனும், விஷ்ணுவே மானுட வடிவெடுத்து வந்த வீரனுமான ராமன் இவ்வுலகத்தில் பிறப்பெடுத்தான்." (மஹாபாரதம், வனபர்வம், அத். 146) என்று தொடங்கி, ராமன் வனவாசம் சென்றது, ராவணன் சீதையைக் கவர்ந்து சென்றது என்று எல்லாவற்றையும் பீமனுக்கு விவரித்துச் சொன்னார்.

இங்கே முக்கியமான குறிப்பு என்னவென்றால், இன்னும் 137 அத்தியாயங்களைத் தாண்டி, பாண்டவர்களுக்குச் சொல்லப்படுகின்ற ராமோபாக்கியானம், "இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்தவன் அஜன் என்ற பேரரசன். அவனுக்கு, வேதம் பயிலத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவனும், நித்ய சுத்தனுமான தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளும், நல்லனவும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலவானான பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர். ராமனின் தாய் கௌசல்யை, பரதனின் தாய் கைகேயி. எதிரிகளுக்குச் சாட்டையான லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னன். சீதை அவனது மகள்" என்று விரிவான குறிப்போடு தொடங்குகிறது. இதை வைத்துக்கொண்டு ஜே.எல். ப்ராக்கிங்டன் என்ற மேற்கத்திய ஆய்வாளர், 'ராமாயணத்தில் பால காண்டத்தையும் உத்தர காண்டத்தையும் வால்மீகி இயற்றியிருக்க சாத்தியமே இல்லை. ராமோபாக்கியானம் அஜ மகராஜனுடைய மகனான தசரதனுக்கு மூன்று மனைவியரும், நான்கு குமாரர்களும் இருந்தார்கள்' என்றுதான் தொடங்குகிறது. ஆகவே, ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பது பிற்காலக் கற்பனை என்றெல்லாம் பலவிதமான வாதங்களை உள்ளடக்கிய The Righteous Rama என்ற புத்தகத்தையே எழுதினார்.
எந்த மஹாபாரதத்தின் ராமோபாக்கியானத்தில், ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்பதற்கான குறிப்பே இல்லை என்று அவர் மறுக்கிறாரோ, அந்த ராமோபாக்கியனத்துக்கு 137 அத்தியாயங்களுக்கு முன்னால் இங்கே பீமனிடத்தில் தன்னுடைய வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கும் அனுமன், "பிறகு விஷ்ணுவானவர் மானிட வடிவத்துடன் தசரதபுத்திரரும் வீரரும், மகா பலமுள்ளவருமான ராமராக (அவதரித்துப்) பூமியில் ஸஞ்சரித்தார்" என்று தொடங்குகிறார். (வன பர்வம், தீர்த்தயாத்ராபர்வம், அத். 149, பக். 539) அவர் இதைச் சொல்வதற்கு முன்னால் இன்னொன்றைச் சொல்கிறார்: "மிக்க பலசாலிகளான எல்லா வானரயூதபதிகளுக்கும், எல்லா வானரர்களுக்கும் அரசர்களான ஸூர்ய புத்திரனான ஸுக்ரீவனையும் இந்திர புத்திரனான வாலியையும் அடுத்திருந்தார்கள். பகைவரை வாட்டுபவனே! காற்றுக்கு நெருப்போடு நட்பு உண்டாவது போல எனக்கு ஸுக்ரீவனோடு நட்பு உண்டாயிற்று" (மேற்படி அத்தியாயம், மேற்படிப் பக்கம்) என்ற இந்த வாக்கியம், வால்மீகி ராமாயணம், உத்தர காண்டத்தில் அனுமனுக்கும் சுக்ரீவனுக்கும் இருந்த நட்பைப் பற்றி விவரிக்கும் அதே உவமையைக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. வால்மீகி சொல்கிறார்: "From his very boyhood he developed with Sugriva an unwarying and unbroken friendship, similar to that of the wind with fire." (வால்மீகி இராமாயணம், உத்தர காண்டம், ஸர்க்கம் 36, ஸ்லோகம் 40)

எனவே, "If the Uttara Kanda was extant in substantially its present form by the fourth century," he argues, "and in all possibility by the third, it is scarcely feasible to assign the Bala Kanda, which is in general earlier, to the end of the fourth century or later…" என்று வாதிடும் ப்ராக்கிங்டனுடைய வாதம் நொறுங்கிப் போகிறது. 'ராமாயணத்துக்குக் காலத்தால் மிகப் பிற்பட்டதான மஹாபாரத ராமோபாக்கியானமே உண்மைக்கு வெகு அருகிலுள்ளது' என்ற அவருடய வாதமும் தவிடுபொடி ஆகிறது. ராமன் விஷ்ணுவின் அவதாரம் என்று அனுமன் பீமனிடத்திலே சொல்வதால், அவதாரத்தைச் சொல்கிற பால காண்டமும் மஹாபாரதத்திலே சுட்டப்படுகிறது; 'காற்றுக்கும் நெருப்புக்கும் இருக்கும் நட்பைப் போல எனக்கும் சுக்ரீவனுக்கும் நட்பு இருந்தது' என்று அனுமன் சொல்லும்போது, வால்மீகி ராமாயணத்தின் உத்தரகாண்டமும் பாரதத்திலே இடம்பெற்றுவிடுகிறது. பால காண்டம், உத்தர காண்டம் இரண்டையும் வால்மீகி இயற்றவில்லை. அவை இரண்டும் இடைச்செருகல் என்ற வாதமும் அடிக்கின்ற அனுமப் புயலில் அடையாளம் தெரியாமல் சிதைந்து போகிறது. பாரதத்தின் மூன்று மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தபிறகு—இடைச்செருகல் என்று சொல்லவே முடியாதபடி இவற்றுக்கிடையே இருக்கும் ஒற்றுமையைப் பார்த்தபிறகு நான் சொல்வது இது.

நாம் இனி பாரதத்துக்குத் திரும்புவோம்....

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline