Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | நூல் அறிமுகம் | பொது | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சிறுகதை | சமயம் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
தீர்த்த யாத்திரையும் கந்தமாதனமும்
- ஹரி கிருஷ்ணன்|பிப்ரவரி 2020|
Share:
அர்ஜுனன் நீங்கலாக மற்ற நான்கு பாண்டவர்களும் தீர்த்த யாத்திரைக்குச் சென்றதும், எங்கெல்லாம் சென்றார்கள் என்பதும் இருநூறு பக்கங்களுக்கு மேல் இடம்பெறுகின்றன. வனவாசத்துக்குப் பாண்டவர்கள் தமது தேர்களையும் கொண்டு வந்திருந்தார்கள் என்ற போதிலும், அவர்கள் தீர்த்த யாத்திரைக்குச் சென்ற முழுக்காலமும் நடந்தேதான் சென்றார்கள். பயணக் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காக வழிநெடுக லோமசர் பற்பல வரலாறுகளைச் சொல்லிக்கொண்டு வருகிறார். தை மாதத் தொடக்கத்தில் தீர்த்த யாத்திரை கிளம்பிய பாண்டவர்கள், முதலில் தென்திசை நோக்கிச் சென்று கோதாவரியில் நீராடி, நைமிசாரண்யத்தை அடைந்து, அதன்பின்னர் அகஸ்திய ஆஸ்ரமத்தை அடைந்தனர். அங்குதான் லோமசர் அவர்களுக்கு அகஸ்திய முனிவர், வாதாபி, இல்வலன் ஆகிய அசுர சகோதரர்களை அழித்த வரலாறு, தமது வரலாறு, பரசுராமர் வரலாறு எல்லாவற்றையும் சொல்கிறார். ஒரு சதுர்த்தசி தினத்தன்று பரசுராமரே பாண்டவர்களுக்குக் காட்சியளிக்கிறார். இவ்வாறு பல இடங்களைக் கடந்த பாண்டவர்கள் பிரபாச தீர்த்தத்தை வந்தடைந்தனர். அவர்கள் அங்கு தங்கியிருப்பதைக் கேள்விப்பட்ட கிருஷ்ணன், பலராமன், சாத்யகி, கிருஷ்ணனுடைய மகன் ஸாம்பன், ப்ரத்யும்னன் என்று விருஷ்ணி குலத்தைச் சேர்ந்த பலரும் புறப்பட்டு, பாண்டவர்கள் தங்கியிருந்த இடத்தை வந்தடைந்தனர். அவர்கள் வந்த சமயத்தில் பாண்டவர்கள் பூமியில் படுத்திருந்தனர்; அழுக்கடைந்த மேனியை உடையவர்களாக இருந்தனர். உடல் மெலிந்திருந்த அவர்களைக் கண்ட கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் துக்கம் மேலிட்டு, இருவரும் கண்ணீர்விட்டு அழுதனர்.

எப்போதும் துரியோதனன் பக்கமாகவே பேசுபவரான பலராமருக்கே அந்த நிலை பொறுக்கவில்லை. அவர் அழுதது மட்டுமல்லாமல், கண்ணனைப் பார்த்து, "பாண்டவர்கள் இருக்கும் நிலையைப் பார்த்தால் எனக்கு தர்மத்தின் மீதுள்ள நம்பிக்கையே போய்விட்டது" என்று சொன்னதோடு, "தர்மத்தையே கடைப்பிடிக்கும் இவர்கள் இந்த நிலையில் இருக்கும்போது, துரியோதனன் அவ்வளவு செழிப்பாக இருப்பதை நினைத்து வருந்துகிறேன். இந்த பூமி இன்னமும் பிளந்து அவனை விழுங்காமல் இருக்கிறதே. ஒருபாவமும் அறியாதவர்களான பாண்டவர்களை இவ்வாறு துன்பப்படுத்துகிற திருதராஷ்டிரன், பாண்டவர்களைத் தன் மக்களைப்போல நடத்தியவனாக எவ்வாறு ஆவான்? பீஷ்மர், கிருபர், துரோணர் போன்றவர்களெல்லாம் என்ன செய்துவிட்டார்கள்!" என்றெல்லாம் மிக வருந்தினார். துரியோதனனையே பெரிதும் விரும்பும் அவர் இவ்வாறு பேசிய அபூர்வமான இடங்களில் ஒன்று இது.

தருமபுத்திரர், அஸ்திரங்களைப் பெறுவதற்காக அர்ஜுனன் இந்திரலோகத்துக்குச் சென்றுள்ளதையும், தாங்கள் துரியோதனனால் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்பட்டோம் என்பதையும் கிருஷ்ணனிடமும் பலராமரிடமும் பகிர்ந்துகொண்டார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சாத்யகிக்குப் பொறுக்க முடியவில்லை. சாத்யகி, ஒருவகையில் கண்ணனுக்குச் சகோதரன் முறை ஆகவேண்டும். அதுமட்டுமல்லாமல், இவன் துரோணரிடத்திலும் அர்ஜுனனிடத்திலும் அஸ்திரப் பயிற்சி பெற்றவனும்கூட. பதினான்காம் நாள் போரில் அர்ஜுனன், ஜயத்ரதனைக் கொல்வதற்காகச் சென்றபோது, தருமபுத்திரரைச் சிறைப்பிடிப்பதாக துரியோதனனிடம் உறுதி கூறியிருந்த துரோணரிடமிருந்து தர்மனைக் காப்பதற்காக அர்ஜுனன் சாத்யகியைத்தான் நியமிக்கிறான். இவனுக்கு யுயுதானன் என்றும் ஒரு பெயர் உண்டு. பதினான்காம் நாள் யுத்தத்தில் சாத்யகிக்கும் பூரிசிரவஸுக்கும் நடந்த யுத்தத்தின்போது, துரோணரிடம் போரிட்டுக் களைத்திருந்த சாத்யகியை பூரிசிரவஸ் கீழே தள்ளி, அவனைக் கொல்வதற்காகத் தன் வாளை ஓங்கியபோது, அர்ஜுனன் குறுக்கிட்டு பூரிசிரவஸின் வாள் பிடித்த வலதுகையைத் தன் அம்பால் அறுத்துத் தள்ளுகிறான். அறுந்து விழுந்த தன் வலதுகையை, இடதுகையால் எடுத்து பூரிசிரவஸ் அர்ஜுனன் மீது எறிகிறான். இவற்றையெல்லாம் உரிய இடங்களில் பார்ப்போம்.

பலராமருடைய கோபமான பேச்சை இடைமறித்துக் குறுக்கிட்ட சாத்யகி, "இது புலம்பிக்கொண்டிருப்பதற்கான சமயமில்லை. தர்மபுத்திரர் எப்போதும்போல பேசாமல் இருக்கிறார். பீஷ்மர், துரோணர் போன்ற தர்மம் தெரிந்தவர்கள்கூட எதுவும் பேசாமல் இருக்கின்றனர். இவர்கள் அனைவரையும் கலங்கடிக்க பீமசேனன் ஒருவன் போதும். விருகோதரன் என்று பெயர்பெற்ற அவன்கூட, தர்மபுத்திரருக்குக் கட்டுப்பட்டு மரவுரி அணிந்து வாளாவிருக்கிறான். திரெளபதி காட்டில் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறாள். துரியோதனனோ, நாட்டில் ஒரு சிரமமும் இல்லாமல் இன்பமாக வாழ்ந்துகொண்டிருக்கிறான். உறவினர்களான நாம், செய்யவேண்டியதைச் செய்வோம். நம் படைகளைத் திரட்டிக்கொண்டு துரியோதனன் மீது படையெடுத்துச் செல்வோம். துரியோதனனை அவனது சுற்றத்தாருடன் கொன்று, தர்மபுத்திரருக்கு ராஜ்யாபிஷேகம் செய்வோம்" என்றெல்லாம் மிகுந்த கோபத்துடன் பேசினான். இதைக் கேட்டுக்கொண்டிருந்த கிருஷ்ணன் புன்னகை பூத்து, "இது சாத்தியமில்லை. ஏனென்றால் யுதிஷ்டிரர், தானே வெல்லாத அரசை ஏற்கமாட்டார். அவரும் அவருடைய தம்பியரும், இந்த திரெளபதியும் தருமம் தவறி நடக்கமாட்டார்கள். இன்னும் சற்றுக் காலத்தில் போர் வரும். அந்தச் சமயத்தில் நாம் இவர்களுக்கு உதவுவோம் என்றார்.
இதன் பிறகு, தருமபுத்திரர் பலராமர், கிருஷ்ணன், சாத்யகி முதலானவர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார். பாண்டவர்கள் அங்கிருந்து புறப்பட்டு பயோஷ்ணி, நர்மதை முதலான நதிகளில் நீராடினர். லோமசர் அவர்களுடன் மார்க்கண்டேயருடைய ஆசிரமத்தை அடைந்தார். அங்கு சர்யாதி, மாந்தாதா, சோமகன் முதலானவர்களுடைய வரலாற்றையெல்லாம் லோமசர் பாண்டவர்களுக்குக் கூறினார். இந்த இடத்தில், "எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன்" என்று கண்ணகி வழக்குரை காதையில் சொல்லும் சிபிச் சக்கரவர்த்தியின் கதை சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில் சிபிச் சக்கரவர்த்தியின் கதை மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. இதன் பிறகு பாண்டவர்கள் நால்வரும் கைலாச யாத்திரைக்குக் கிளம்பினர். "இது மிகவும் சிரமமான பாதை. எனவே எச்சரிக்கையாக வாருங்கள்" என்று லோமசர் சொன்னார். இதுவரையில் இவ்வாறு சொல்லியிராத லோமசர் இப்படிச் சொல்லவே, தருமபுத்திரர், "திரெளபதி நடக்கச் சிரமப்படுவாள். எனவே, பணியாட்களும் சமையற்காரரும் அந்தணர்களும் தௌமியரும் திரெளபதியும் சகாதேவனும் இங்கேயே இருக்கட்டும். பீமா, நீயும் இவர்களுக்குத் துணையாக இரு. நானும் நகுலனும் லோமசரும் தொடர்ந்து சென்று வருகிறோம். நாங்கள் வரும் வரையில் நீங்கள் இந்த கங்கைக் கரையிலேயே இருங்கள்" என்று பீமனிடத்தில் கூறினார். "அண்ணா, உங்களாலும் எங்களை விட்டு இருக்க முடியாது; எங்களாலும் உங்களைப் பிரிந்து இங்கே இருக்க முடியாது. பணியாட்களும் சமையற்காரர்களும் திரும்பிச் செல்லட்டும். நாம் அனைவரும் சேர்ந்தே செல்வோம். நானும் திரெளபதியும் அர்ஜுனனைக் காணவேண்டும் என்று ஆவலாயிருக்கிறோம். திரெளபதியாலோ, வேறு யாராலோ நடக்க முடியாமல் போனால், நான் அவர்கள் எல்லோரையும் தூக்கிக்கொண்டு வருகிறேன். அரக்கர் நிறைந்த இந்தப் பாதையில் உங்களைத் தனியே அனுப்பச் சம்மதியேன்" என்றான் பீமன். அந்தப் பாதையில் நடக்கும்போது திரெளபதி அடிக்கடி மயக்கமடைந்தாள். ஆனாலும், அர்ஜுனனைக் காணவேண்டும் என்ற ஆவலால் உந்தப்பட்டிருந்தாள். சிறிது காலத்துக்குப் பிறகு பீமன், தன் மகனான கடோத்கசனை நினைத்தான். "நீங்கள் எங்கே, எப்போது நினைத்தாலும் அங்கே அந்த நிமிஷமே நான் தோன்றுவேன்" என்று வாக்களித்திருந்தபடி கடோத்கசன் அங்கே வந்தான். திரெளபதியைச் சுமந்து வருமாறு அவனிடத்தில் பீமன் சொல்ல, அவனும் தன் தாயான திரெளபதியைத் தூக்கிக்கொண்டான். அவனுடன் வந்திருந்த மற்ற அரக்கர்கள் மற்றவர்களைத் தூக்கிக்கொண்டு கந்தமாதனம் என்ற அந்த மலையின் மீது பாண்டவர்களுடன் ஏறினார்கள்.

தருமபுத்திரர் தன்னுடைய தம்பியருடன் அங்குள்ள முனிவர்களைச் சந்தித்து அவர்களுடைய ஆசிகளைப் பெற்றார். அந்தக் காட்டில் அவர்கள் ஆறு நாட்கள் தங்கியிருந்தனர். அப்படித் தங்கியிருக்கும்போது ஒருநாள் அங்கே வடகிழக்கிலிருந்து வீசிய காற்றில் ஆயிரம் இதழ்களை உடையதும் சூரியனைப்போலப் பிரகாசிக்கிறதுமான தாமரை மலரொன்று பாஞ்சாலியின் முன்னால் வந்து விழுந்தது. அந்த அழகிய மலரைப் பார்த்த பாஞ்சாலி, "மிக அழகாக உள்ள இந்த மலரை நான் தருமபுத்திரருக்குக் கொடுக்க விரும்புகிறேன். இதுபோன்ற இன்னும் சில மலர்களைப் பறித்து வாருங்கள்" என்று பீமனிடத்திலே சொன்னாள். அம்மலரின் நறுமணத்தைத் தேடிக்கொண்டு அந்த கந்தமாதன பர்வதம் முழுவதும் தேடியலைந்தான் பீமன்.

சற்றுத் தொலைவில் இன்னொரு வாயு புத்திரனான அனுமனைச் சந்திக்கப் போகிறோம் என்பதை அறியாமலேயே வாயு புத்திரனாகிய பீமன், அந்த மலையில் கர்ஜனை செய்த வண்ணமாக ஏறினான். அவனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கி நின்ற விலங்குளைக் கையால் அடித்து ஓட்டினான். அவனுடைய வருகையால் கலங்கிய சிங்கம், புலி போன்ற மிருகங்களும் யானைகளும் அந்த இடத்தை விட்டே ஓடின. சற்றுத் தொலைவில் பனைமரங்கள் அளவுக்கு ஓங்கி வளர்ந்திருந்த வாழைத்தோப்பு ஒன்றை அடைந்தான் பீமன். அங்கிருந்த குளத்தில் நீராடிவிட்டு, கரையேறி, அட்டகாசத்துடன் குரலெழுப்பினான். அந்த வாழைத் தோப்பில்தான் அனுமன் உறங்கிக்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பு மிகச் சுவையானது. அடுத்துப் பார்க்கலாம்...

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline