Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | சமயம் | சிறப்புப் பார்வை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள்
- கதிரவன் எழில்மன்னன்|மார்ச் 2020|
Share:
பாகம்-16b
முன்னுரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

வாருங்கள், ஆரம்பநிலை யுக்திகளை மேற்கொண்டு கற்கலாம்!

★★★★★


கேள்வி: நான் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நல்ல வேலையில் உள்ளேன். என் நண்பன் ஒருவனும் அதே நிறுவனத்தில் இருந்தான். ஆனால் சமீபத்தில் திடீரென வேலையை விட்டுவிட்டு, ஒரு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளான். அப்போதிலிருந்து என்னையும் தன்னோடு வந்து நிறுவனனாகச் சேர்ந்துகொள், நிறுவனத்தில் சமபங்கு தருகிறேன் என்று அரிக்கிறான். நான் வேண்டாம் என்றாலும் விட்டபாடில்லை. எனக்கும் இப்போது அவனோடு சேர்ந்து, உழைத்து நிறுவனத்தை வளர்த்துச் சாதிக்கலாம் என ஆர்வம் உண்டாகியுள்ளது. ஆனால் நல்ல வேலையையும் சுளையான சம்பளத்தையும் லேசில் உதறித்தள்ள இயலவில்லை. ஒரே குழப்பம், இருதலைக் கொள்ளி எறும்பு நிலை. நான் என்ன முடிவெடுக்க வேண்டும், ஒரு தீர்ப்பு கூறுங்களேன்?

கதிரவனின் பதில் (தொடர்ச்சி): சென்ற பகுதியில், பெருநிறுவனங்களில் வேலை நிலையானதென்று எண்ணி அதனால்மட்டும் ஆரம்பநிலை நிறுவனத்தில் சேராமலிருப்பது சரியாகாது என்று கூறி, எக்காரணங்களால் பெருநிறுவன வேலையை இழக்க நேரக்கூடும் என்பதைப் பட்டியலிட்டோம். அவற்றில் முதல் காரணமாக லாபக்குறைவைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம்.

நிறுவனத்தின் பங்கு விலையை நிர்ணயிப்பதற்கு ஒவ்வொரு காலாண்டிலும் (quarter) வெளியிடப்படும் வரவு மற்றும் லாப அறிக்கை ஒரு முக்கியத் தருணம். ஏனெனில் பங்குவிலை நிபுணர்கள் ‘ஒரு பங்குக்கான லாபம்’ (EPS) என்னும் புள்ளிவிவரத்தின் மடங்காக விலையை நிர்ணயிக்கிறார்கள். நாம் அதைத் தமிழில் ஒபலா என்று சுருக்கிக் குறிப்பிடுவோமா?

பெருநிறுவனங்கள், சென்ற வருடத்தில் அதே காலாண்டில் கிடைத்த ஒபலாவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த வருட ஒபலா அதிகம் இருந்தால், நிறுவன லாபம் வருடாவருடம் அதிகரித்து வருகிறது என்று கணித்து, பங்குவிலை ஏறும் என்று எதிர்பார்ப்பு அதிகமாகி, அதனால் விலையும் அதிகரிக்கும். ஆனால் ஒபலா குறைந்தால் பங்கு விலையும் சரிந்து விடும்! (டெஸ்லா போன்ற வேகவளர்ச்சி நிறுவனங்கள் இதற்கு விதிவிலக்கு. அவற்றுக்கு வருமான வளர்ச்சியே பங்குவிலையை நிர்ணயிக்கிறது. அத்தகைய நிறுவனங்களுக்கு ஒபலாவுக்கு ஈடானதாக வருமானத் தொகையை வைத்துக் கொள்ளலாம்.)

ஒபலா இந்தக் காலாண்டில் எவ்வளவு என்பது மட்டுமின்றி, பங்குவிலை நிபுணர்கள் சராசரியாகக் கணித்த அளவு வந்திருக்கிறதா இல்லை அதைவிட அதிகம் அல்லது குறைவாக உள்ளதா என்பதும் பங்குவிலையை மிகவும் பாதிக்கிறது.
அதனால், நிறுவனத்தின் ஒபலா சரிந்தாலோ அல்லது கணிப்பைவிடக் குறைந்தாலோ, பங்குவிலை சரியக்கூடும். இம்மாதிரி இரண்டு மூன்று காலாண்டுகள் அசம்பாவிதமாக நடந்தால் மீண்டும் சரிசெய்வதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கணை நிறுவனத் தலைவர்மீது தொடுக்கப்படும்.

அந்தத் தருணத்தில் நிறுவனத்தின் ஒபலாவை அதிகரிக்க எதையாவது செய்தே தீரவேண்டும். இதற்குச் சில வழிகள் உள்ளன. நிறுவனத்தில் நிறைய ரொக்கக் கையிருப்பு (cash) திரண்டிருந்தால் அதில் கணிசமான தொகையைச் செலவழித்து நிறுவனத்தின் பங்குகளைச் சந்தையிலிருந்து வாங்கிவிடலாம். அதனால், மொத்தப் பங்குகள் எண்ணிக்கை குறைவதால், அதே லாபத்துக்கு ஒபலா அதிகரிக்கும்.

அல்லது, அதே ரொக்கத்தை வைத்து மிகவும் லாபகரமாக உள்ள மற்றொரு நிறுவனத்தை வாங்கி மொத்த லாபத்தை அதிகரித்து அதன் மூலம் ஒபலாவை உயர்த்தலாம். அல்லது லாபம் அதிகம் தரக்கூடிய புதிய விற்பொருளைப் பற்றி உயர்த்திப் பேசி வருங்காலத்தில் ஒபலா அதிகரிக்கும் என்று காட்டி பங்குவிலைச் சரிவை ஓரளவு சமாளிக்கலாம்.

ஆனால் இவ்வாறு ஒபலா, வருமானம் மற்றும் லாபத்தை அதிகரிக்க முடியாவிட்டால் நிறுவனம் செலவைக் குறைத்தே தீரவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. அதற்கும் சில வழிகள் உள்ளன.

முதலாவதாக, நிறுவனம் தரும் சலுகைகளைக் குறைக்கலாம். பல சிலிக்கான் சமவெளி நிறுவனங்களில் உணவு மற்றும் பான வகைகள் விலையில்லாமலோ அல்லது மிகக்குறைந்த விலையிலோ அளிக்கிறார்கள். அல்லது குடும்பத்தின் மொத்த மருத்துவக் காப்பீட்டு மாதத் தவணையை நிறுவனமே அளிக்கக்கூடும். இத்தகைய சலுகைகளை லாபம் அதிகரிக்கும்வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்.

அது போதாவிட்டால், அல்லது அத்தகைய சலுகைகள் ஏற்கனவே இல்லாமலிருந்தால், அடுத்தபடியாகச் சம்பளத்தைக் குறைக்கலாம். அதுவும் போதாவிட்டாலோ, அல்லது அதனால் ஊழியர்கள் மனநிலை தொய்வாகும் என்பதால் அது சாத்தியமில்லை என்று நினைத்தாலோ அடுத்து என்னதான் செய்வது? ஆம், அதேதான்: ஆட்குறைப்பு! இதை ஊழியர் அளவுக்குறைப்பு (Reduction in force) அல்லது lay off என்று குறிப்பிடுவார்கள்.

இத்தகைய ஆட்குறைப்பு நிறுவனத்தின் எல்லா நிலைகளிலும் ஒரே அளவு (across the board) என்பது மிக அபூர்வம். சில குழுக்களில் அதிகமாகவும் சில அதிக முக்கியத்துவம் வாய்ந்த குழுக்களில் குறைவாகவும் செய்யப்படலாம். உதாரணமாக, முன்னரே உருவாக்கப்பட்ட விற்பொருளின் விற்பனைதான் முக்கியம் என்றால் பொறியியலாளர்கள் நீக்கப்படக் கூடும். அல்லது அடுத்த மேல்நிலை விற்பொருள் உருவாக்கியே தீரவேண்டும் எனில் வணிகக் குழுவைத் தற்காலிகமாகக் குறைக்கக்கூடும். (சிறிது காலம் கழித்து அதே வேலைகளுக்கு அவசரமாக ஆள்தேடும் குறும்பார்வைச் செயலாக இது இருக்கக்கூடும் என்பது வேறு விஷயம்!)

அத்தகைய ஆட்குறைப்பு தவிர்க்கமுடியாமல் போனால் உங்கள் வேலைக்கும் பாதகம் வரக்கூடுந்தானே? அடுத்த பகுதியில், பெருநிறுவனங்களில் வேலை இழப்பதற்கான மற்றக் காரணங்களையும், உங்கள் கேள்வியின் விடைக்கான மற்ற அம்சங்களையும் பார்க்கலாம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline