Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
காப்பீடு
ஜோடிப்புறா
- இராம வயிரவன்|பிப்ரவரி 2019||(1 Comment)
Share:
(இந்தச் சிறுகதை ஈராண்டுகளுக்கு முன்னே சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தின் 40ஆம் ஆண்டுவிழா ஆண்டுமலரில் வெளியாகி பலரின் பாராட்டைப் பெற்றது.)

பெரியவன் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது. நினைக்க நினைக்கச் சுப்பையாவின் மனம் கலங்கியது.

"சரி சரி, விடுங்கப்பா... ஷீ டைடு பீஸ்ஃபுலி. எல்லாரும் ஒருநாள் போகவேண்டியவர்கள்தான். அம்மாவுக்கும் வயதாகிவிட்டது. இருந்து அவளும் கஷ்டப்படாம, யாரையும் கஷ்டப்படுத்தாம போய்ச் சேர்ந்துட்டாங்க."

'விடுங்கப்பா' என்று எளிதாகச் சொல்லிவிட்டான். இத்தனை நாள் தன்னோடு இணையாக வந்தவளை எப்படி விட்டுவிட முடியும்? இவன்களால் விட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கமுடிகிறது. ஆனால் நானல்லவா அவளோடு இணைகோடாய் நீண்டுகொண்டிருந்தவன். எப்படி நினைவுகளிலிருந்து சட்டென்று அறுத்துக்கொள்ள முடியும்? அவளுக்கு எண்பது வயதாகி விட்டதுதான். வயதானால் இறக்க வேண்டியவள்தான். விடமுடியவில்லையே? அழுகை குமுறிக்கொண்டு வந்தது. அடக்கிக்கொண்டு பெரியவனை நிமிர்ந்து பார்த்தார். அவனால் அவர் கண்களைச் சந்திக்க முடியவில்லை. பெரியவன் 'ஏதோ தவறாய் கேட்டுவிட்டது போல' சுப்பையாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

"என்னங்க..." என்று கண் ஜாடை காட்டினாள் பெரியவனின் மனைவி விமலா. 'பேசத் தெரிந்தால் பேசுங்கள். இல்லாவிட்டால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க வேண்டியதுதானே!' என்பது அந்தப் பார்வைக்கு அர்த்தம்.

'அண்ணன் கொஞ்சம் சும்மா இருங்க. அவரு அழட்டும்," என்று சின்னவனும் வந்து அவரின் இன்னொரு கையைப் பற்றிக்கொண்டு அவருக்கு ஆதரவாகத் தரையில் உட்கார்ந்தான். சுப்பையா அழுது கொட்டித்தீர்த்து விடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அவரோ பிதுங்கிய உதட்டோடு எல்லோரையும் ஒரு வெற்றுப் பார்வை பார்த்ததோடு சரி. அழவோ பேசவோ இல்லை. அவளை மண்டாய் சுடுகாட்டில் கொண்டுபோய் எரித்துவிட்டு வந்த பிறகுதான் பெரியவன் அப்படிச் சொன்னதெல்லாம். அவன் அப்படிச் சொன்னது பெரியவரை எப்படியாவது நெகிழச்செய்து சோகத்தைக் கொட்டச் செய்துவிட வேண்டும் என்பதற்காகத்தான் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தார்கள். ஆனால் சுப்பையா இதுவரை சொட்டுக் கண்ணீர்கூட விடாமல் சோகத்தைச் சேமித்துக் கொண்டு கல்லுளி மங்கனாக இருந்துவிட்டார்.

வீடு கழுவி விடப்பட்டு சற்றுமுன் அவள் படுத்திருந்த இடத்தில் விளக்கேற்றி வைக்கப்பட்டிருந்தது. எத்தனை கழுவி விட்டாலும் ரோசாப்பூ வாசம் இன்னும் வீட்டுக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருந்தது. இன்னும் எத்தனை நாளைக்கு என்று நினைத்துக் கொண்டார் சுப்பையா.

ஊரிலிருந்து வந்திருந்த அவரின் தங்கை சிந்தாமணிதான் ஓடியாடி வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். ஹாலில் பெரிய ஜமக்காளம் ஒன்றைக் கொண்டுவந்து போட்டாள். பெண்கள் சிலர் அதில் போய் உட்கார்ந்துகொண்டு வள்ளியம்மையின் அருமை பெருமைகளைப் பேசித் தீர்த்தார்கள். சிந்தாமணி எல்லோருக்கும் காஃபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தாள். சின்னவன் மனைவி சியாமளாவும் பணிப்பெண்ணும் சிந்தாமணியோடு கூடமாட ஒத்தாசையாக வேலை செய்தார்கள்.

சின்னவன் சண்முகம் எழுந்து போய் வெளியில் கிடந்த நான்கு சேர்களைக் கொண்டுவந்து அப்பாவுக்கு முன்னே வட்டமாகப் போட்டான்.

சற்றுமுன்னர் பிரேத ஊர்வலம் ஆரம்பிக்குமுன் 'பாட்டி பாவம்' என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு நெய்ப்பந்தம் பிடித்த பேரன்பேத்திகள் இப்போது அறைக்குள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். வீட்டுக்குள் உறவுக்காரர்களும் தெரிந்தவர்களுமாய்க் கூட்டமாக இருந்தது. புதிதாக வந்தவர்கள் சுப்பையாவின் முன்னே சற்று நேரம் உட்கார்ந்து சுப்பையாவின் கையைப் பற்றியோ, தோளைத் தொட்டோ அல்லது 'என்ன செய்தது? என்பது போல ஏதாவது கேட்டோ துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் போய் உட்கார்ந்து கொண்டார்கள். பெரியவனும் சின்னவனும் அப்பாவுக்கு அருகில் நின்றுகொண்டு கேட்பவர்களுக்கு அம்மாவுக்கு என்ன நடந்தது என்று விவரித்துக் கொண்டிருந்தார்கள். சுப்பையா கைகளை விரித்துக் காட்டுவதோடு சரி. அவர் எப்போதுமே அதிகம் பேசமாட்டார். வயதாக ஆக அவரிடம் பேச்சு குறைந்து விட்டது. நெருக்கமானவர்கள், நண்பர்கள் வந்தபோது மட்டும் அவர்களை இறுகக் கட்டிக்கொண்டார்.

அவரின் நீண்டகால நண்பர் ஸ்டீஃபனும், அவர் மனைவி மாலாவும் வந்து உட்கார்ந்தார்கள். "எங்கே போனாலும் ஒண்ணாவே போவீங்க. அக்கா உங்கள விட்டுப் பிரியவே மாட்டாங்களே? ஜோடிப்புறா வந்துட்டாங்கன்னு எல்லாரும் பேசுவோம்" என்று மாலா கேட்டதற்கு 'ஆமாம்' என்பதுபோலத் தலையை ஆட்டி இருவரின் கைகளையும் இறுக்கிப் பிடித்துக்கொண்டார் சுப்பையா. ஸ்டீபஃன்தான் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு கைகளை விலக்கிக் கொண்டு பெரியவனிடம் "அப்பாவைத் தனியா விட்டுடாதீங்கப்பா" என்று கேட்டுக்கொண்டார். பெரியவன் ஒன்றும் பேசாமலிருந்தான்.
மாலா சொல்வது உண்மைதான். இருவரும் ஜோடிப் புறாக்களாகத்தான் பறந்து திரிந்தார்கள். இப்போது ஒரு புறா பறந்து போய்விட்டது. இல்லை, இன்னமும் சுப்பையாவின் மனத்துக்குள் அது பறந்து, பறந்து வட்டமடித்துக் கொண்டேதான் இருந்தது. "நான் இல்லாட்டி நீங்க எப்படி இருக்கப் போறீங்கன்னுதான் எனக்குக் கவலையா இருக்கு. அதுக்காச்சம் அந்த ஆண்டவன் என்னையப் பொளைக்க வைக்கணும்னு வேண்டிக்கிறேங்க" என்ற வள்ளியம்மையின் கடைசி வார்த்தைகள் சுப்பையாவுக்குள் இன்னமும் ஈரம் காயாமல்தான் இருந்தன.

சுப்பையாவின் ஒவ்வொரு அசைவிலும் வள்ளியம்மை தன்னை ஐக்கியப் படுத்திக் கொண்டிருந்தாள். இருவருக்குமே இரத்தக் கொதிப்பு, சர்க்கரை, முட்டி வலி என்று எல்லா நோய்களும் இருந்தன. ஆனாலும் சுப்பையாவை விட வள்ளியம்மை துவண்டுவிடாமல் தைரியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பாள். அப்படியிருந்தவளைத்தான் ஹார்ட் அட்டாக் வந்து ஒரே வாரத்துக்குள் சாய்த்துப் போட்டுவிட்டது.

பணிப்பெண் இருந்தாலும் சுப்பையாவுக்கு நேராநேரத்துக்கு மாத்திரை எடுத்துக் கொடுப்பது, குளிக்க வைப்பது, துவட்டி விடுவது, உடுத்தி விடுவது, அவருக்குப் பிடித்தவற்றை ருசியாகச் சமைத்துச் சாப்பிடவைப்பது, அவரைக் கைப்பிடித்து அழைத்துச் செல்வது என்று வள்ளியம்மை எல்லாப் பணிவிடைகளையும் செய்து வந்தாள். இப்போது தனியாக அவள் மட்டும் பறந்து போய்விட்டாளே? 'இனி நான் எப்படித் தனியாய' என்கிற கேள்வி சுப்பையாவுக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகிக் கொண்டே இருந்தது.

"இனிமே தனியா இருக்காதீங்க அண்ணேன். பிள்ளைங்க வீட்டுல போயி இருங்க" என்று மாலா சொல்லவும், அதிலிருந்து விடுபட்டார் சுப்பையா. சற்று யோசித்துவிட்டு மறுப்பதுபோலத் தலையை ஆட்டினார். அவளோடு வாழ்ந்த இந்த வீட்டிலேயே இருந்து அவள் நினைவுகளோடே இருந்துவிட வேண்டும் என்ற எண்ணம் காரணமாயிருக்கலாம். பிள்ளைகள் வீட்டில் போய் இருக்கமுடியும் என்று அவருக்குத் தோன்றவில்லை. பல ஆண்டுகள் பிள்ளைகளைப் பிரிந்து இருந்ததில் ஒட்டுதல் போய்விட்டதோ? அதற்குத் தாமும் காரணமாகிவிட்டோமே என்று எண்ணினார் சுப்பையா.

தூரம் அதிகமானால் இடைவெளி அதிகமாகி, அன்பும், அன்னியோன்யமும் குறைந்துகொண்டே போய், பாசம் இல்லாமலே போய்விடுகிறது என்பதை உணர, உணர ஆயாசமாய் இருந்தது சுப்பையாவுக்கு.

வள்ளியம்மை முன்பே அடித்துக் கொண்டாள். ஒருமுறை அல்ல; இரண்டு முறை! பெரியவன் சிவராமனை அமெரிக்காவிற்குப் படிக்க அனுப்பும்போது, "வேண்டாங்க, அவன் இங்கேயே படிக்கட்டுமே" என்று கெஞ்சிப் பார்த்தாள். "இல்லை வள்ளியம்மை, இப்போ எத்தனையோ தொழில்நுட்ப வசதிகள் வந்துவிட்டன. நினைத்தவுடன் உன் மகனிடம் பேசிக்கொள்ளலாம். ஏன் பயப்படுகிறாய். கைக்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல் வெளிநாடு போய்த்தான் படிக்கட்டுமே" என்று சொல்லிவிட்டார். அவன் அங்கேயே வேலையும் கிடைத்து செட்டில் ஆகிவிட்டான். வள்ளியம்மை சொன்னது உண்மைதான். எத்தனை தொழில்நுட்ப வசதிகள் இருந்தால் என்ன? உலகம் உள்ளங்கைக்குள் என்பதெல்லாம் வெறும் மாயை. நேரில் இருப்பதுபோல வருமா என்று இப்போதுதானே சுப்பையாவுக்குத் தோன்றுகிறது!

சின்னவன் சண்முகத்தையாவது 'நம்மகூட இருந்தா ஒத்தாசையா இருப்பான். நம்முடனே வைத்துக் கொள்வோம்' என்று சொல்லி வைத்திருந்தாள். அவனுக்கு அமெரிக்காவில் நல்ல வேலை கிடைத்தபோது 'வேண்டாம், இங்கேயே இருப்பா. எங்களுக்கு யார் இருக்கா?' என்று கெஞ்சினாள். "விடு வள்ளியம்மை, அவன்தான் சொல்றான்ல இரண்டு வருடத்துல திரும்பி வந்துடுவேன்னு..." என்று சொன்னார். ஆனால் அவனோ அங்கே வேறு வேலையில் மாறிக்கொண்டு அண்ணனைப் போலவே நிரந்தரமாய் அங்கேயே இருந்துவிட்டான்.

பின்னர் கல்யாணத்துக்குப் பிறகு வந்துவிடுவார்கள், குழந்தை பிறந்தால் வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து பின் முற்றிலும் அற்றுப் போனது. ஆனால் 'நீங்கள் எங்களோடு வந்து இருங்கள்' என்று இரு மகன்களும் எவ்வளவோ சொன்னார்கள். நாம்தானே போய் இருக்கவில்லை.

பாவம் பிள்ளைகளும் என்ன செய்வார்கள். அப்பாவையும் அம்மாவையும் வருந்தி வருந்தி அழைத்துச் சென்றாலும் அங்கே போய் ஒருமாதம் கூடத் தங்களால் இருக்கமுடியவில்லையே என்று நினைக்கையில் தவறு நம்மேலும்தான் என்று எண்ணினார் சுப்பையா. 'அம்மாவுக்கு ஹார்ட் அட்டேக்' என்று சுப்பையா ஃபோனில் சொன்னதும் அமெரிக்காவிலிருந்து சின்னவனும் பெரியவனும் குடும்பத்தோடு அலறி அடித்துக்கொண்டு உடனே புறப்பட்டு வந்துவிட்டார்கள். வந்து என்ன செய்ய? வள்ளியம்மைக்கு விதி முடிந்துவிட்டதே!

"அண்ணேன் சாப்பிடாம இருக்கப்பிடாது. ஏதாவது சாப்பிட்டுப் படுத்துக்குங்க" என்று தங்கை சிந்தாமணி வந்து சொன்னபோதுதான் நினைவுகளிலிருந்து மீண்டார் சுப்பையா. ஒரு இட்லி மட்டும் சாப்பிட்டுவிட்டு, போதும் என்று சொல்லிவிட்டார். அறைக்குள் மெல்ல நடந்துபோய்ப் படுத்துக்கொண்டார். சிந்தாமணி விவரமானவளாய் இருந்தாள். பெரியவனிடமும் சின்னவனிடமும் போய் "அப்பா கூடப்போய் படுத்துங்குங்கப்பா. அவரத் தனியாப் படுக்கவிடப்பிடாது" என்று கேட்டுக் கொண்டாள். இருவரும் யார் போய் படுத்துக் கொள்வது என்று தங்கள் மனைவிகளைப் பார்த்தார்கள். சின்னவன் அப்பாவின் அறைக்குள் சென்றதைப் பார்த்ததும்தான் விமலாவுக்கு மூச்சு வந்தது. சின்னவனும் சற்று நேரத்தில் திரும்பி வந்தான். "ஒருத்தரும் வரவேணாங்கிறாரு. அவரே படுத்துக்கிறாராம்" என்று சொல்லிக்கொண்டு தன் அறைக்குள் போய்விட்டான். சிந்தாமணி அண்ணன் படுத்திருந்த அறைக்கதவை சற்றே ஒருக்களித்தாற்போல் திறந்து வைத்தாள். பணிப்பெண்ணை அறைக்கு வெளியே வாசற்படிக்கு அருகே படுத்துக்கொள்ளச் சொல்லி அவளும் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். அடிக்கடி எழுந்து அண்ணனைப் பார்த்துக்கணும் என்று மனத்தில் நினைத்துக் கொண்டாள். பணிப்பெண்ணிடமும் சொல்லி வைத்திருந்தாள்.

பெரியவன் குடும்பம் படுத்திருந்த அறையிலிருந்து நீண்டநேரம் குசுகுசு என்று பேசும் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது.

"என்னங்க. மாமாவைக் கூட்டிப் போய் வெச்சுக்குங்கன்னு எல்லாரும் ஒங்ககிட்டவே வந்து சொல்றாங்க!"

"நான்தானே மூத்தவன். அதனால அப்படியிருக்கும். ஆனா பொதுவாத்தான் சொல்றாங்க."

"சரி நீங்க அதப்பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"யோசிப்போம்! அப்பா என்ன நினைக்கிறார்னு தெரியலை. அவரையே கேட்போம்."

"இதுல யோசிக்க என்ன இருக்கு? ஒங்களுக்கு ஏதாவது புரியுதா? நாம ரெண்டுபேரும் வேலைக்கிப் போறோம்! முன்னகூட்டிப் போயி வச்சிருந்தப்பவே அவங்களால ஒரு மாதம்கூட இருக்க முடியாம போறேன்னு பொறப்புட்டாங்க. இப்ப அத்தையும் இல்ல. மாமா மட்டும் தனியா இருப்பாரான்னு கேக்குறேன்."

சிவராமன் மௌனமாக இருந்தான்.

"ஆனா ஒங்க தம்பி வீட்டில அப்படியில்லை. சியாமளா வீட்டோடதான் இருக்கா. மாமா அங்க போயி இருக்கட்டும். நாம அவருக்கு ஆகுற செலவைக் கொடுத்துடுவோம்." சற்று நேரம் கழித்து "உங்க தம்பி வீடும் ஒத்துக்கலைன்னா, இன்னொரு யோசனை இருக்கு. சொன்னா நீங்க என்னத் திட்டக்கூடாது."

"சரி, சொல்லு."

"இப்பல்லாம் ஓல்ட் ஏஜ் ஹோம் நிறைய இருக்கு! வசதியாவும் இருக்குங்கிறாங்க! பெரியவங்க விரும்பியே அங்க போயி தங்கிக்கிறாங்களாம். நிறைய நண்பர்கள்! பொழுதுபோக்கு, மருத்துவ வசதின்னு எல்லாமே இருக்காம்" என்று சொல்லிவிட்டு என்ன சொல்லப் போகிறானோ என்று கணவனைப் பார்த்தாள் விமலா.

"நீயெல்லாம் ஒரு மனுஷியா... ச்சே! என் சொந்த அப்பாவை கூட்டிக் கொண்டுபோய் வச்சுக்கிறதுக்கு இவ்வளவு தூரம் பேசுறியே? உங்க அப்பாவா இருந்தா இப்படிச் சொல்லுவியா?" என்ற சிவராமனுக்குக் கண்கள் கலங்கின.

"சாரிங்க. நான் இப்ப உள்ள நிதர்சனத்தச் சொன்னேன். அப்பறம் உங்க விருப்பம். நல்லா கூட்டிவந்து வச்சுக்குங்க."

"அது சரி! அப்பாவோட இருக்கணும்னு எனக்கும் ஆசையிருக்கு தெரியுமா? அதப் புரிஞ்சிக்க நீ. ஆனா அவரு வரமாட்டாருன்னு தோணுது" என்று சொல்லிவிட்டு படுக்கையைப் பார்த்தான். அங்கே அவன் பிள்ளைகள் குறுக்கு நெடுக்காய் உறங்கியிருந்தார்கள்.

சுப்பையா ஒருவாரம் ஆஸ்பத்திரிக்கும் வீட்டுக்கும் அலைந்த அலைச்சலில் உண்டான உடல் சோர்வோடு, மனைவியைப் பறிகொடுத்த மனச்சோர்வும் சேர்ந்துகொள்ள, கண்களை மூடினார். நினைவிழைகள் அறுந்தன. ஆழமான உறக்கம் தழுவிக்கொண்டது. வள்ளியம்மை இப்போது கனவில் வருகிறாள்... 'என்னங்க மாத்திரை போட மறந்துட்டீங்களே' என்கிறாள். தண்ணீரும் மாத்திரையும் கொண்டு வந்து தருகிறாள். 'சரியா சாப்பிட்டீங்களா? பால் காய்ச்சித் தரட்டுமா' என்று சொல்லிவிட்டு வெள்ளைப்பூண்டு, மஞ்சத்தூள் போட்டுப் பால் கொண்டுவந்து தருகிறாள். 'கால் வலிக்குதா?' என்று கேட்டுக் காலைப் பிடித்து விடுகிறாள்!

'வள்ளியம்மை. போறும்மா; நீ படுத்துக்க' என்கிறார் சுப்பையா. ஆழ்ந்த உறக்கம் மெல்லத் தழுவுகிறது. நிம்மதியாய் உறங்குகிறார் சுப்பையா.

சின்னவன் அறையில்... சண்முகமும், சியாமளாவும் வெகு நேரம் உறங்கவில்லை. "அப்பாவை நல்லா பாத்துக்கணும்னு தோணுது" என்றான் சண்முகம்.

"நாம மாமாவைக் கூட்டிப் போலாங்க. எனக்கும் மாமா துணையா இருப்பாருங்க. உங்க அண்ணன்ட்ட சொல்லிடுங்க" என்றாள் சியாமளா.

"ஆனா அப்பா ஒத்துக்கணுமே!" என்றான் சண்முகம்.

"உங்க பேரன் பேத்தியோட விளையாடலாம் வாங்கன்னு கூப்பிட்டா ஒத்துக்குவாருங்க" என்றாள் சியாமளா.

அடுத்த நாள் காலையில்...

காலைக்கதிரவனோடு எல்லோரும் எழுந்து, அவரவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். சண்முகம் ஐந்தாம்நாள் சவண்டிக்கு ஐயருக்குச் சொல்லக் கிளம்பிவிட்டான். சிவராமன் எழுந்து சவண்டி விருந்துக்கான ஏற்பாடுகளுக்காக வெளியில் சென்றுவிட்டான். ஆனால் சுப்பையா இன்னும் எழுந்திருக்கவில்லை. சிந்தாமணிதான் அண்ணன் ஏன் இன்னும் எழுந்திருக்கவில்லை என்ற கவலை கொண்டவளாய் பேரப்பிள்ளைகளை அனுப்பி 'தாத்தாவை எழுப்புங்கப்பா' என்றாள். பேரப்பிள்ளைகள் 'தாத்தா எழுந்திருங்க தாத்தா..' என்று எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

எவ்வளவு எழுப்பியும் சுப்பையா எழுந்திருக்கவேயில்லை.

இராம வயிரவன்,
சிங்கப்பூர்
More

காப்பீடு
Share: 




© Copyright 2020 Tamilonline