Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | சமயம் | சிறுகதை | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | முன்னோடி
Tamil Unicode / English Search
சிறுகதை
வேர்களும் விழுதுகளும்
ஹெல்மெட்
- ஆர். நடேசன்|ஜனவரி 2019|
Share:
"என்ன மூர்த்தி சார், நாளைக்கு ஆபீசுக்கு லீவு போட்டு இருக்கீங்க. என்ன விசேஷம்?"

"ஒண்ணும் பெரிசா இல்லப்பா. ரொம்ப நாளா யோசனை பண்ணிக்கிட்டே இருந்த விஷயம்தான். ஒரு ஸ்கூட்டர் வாங்கறேன். அதைரெஜிஸ்ட்ரேஷன் எல்லாம் பண்ண நிறைய நேரம் ஆகுமாம். நாளைக்குத்தான் நாள் நல்லாஇருக்காம். என் பெண்டாட்டி நான் அந்த ஸ்கூட்டரை டெலிவரி எடுத்து நாளைக்கு சாயங்காலம் அவளை அவ ஆபீசில இருந்து அதில கூட்டிக்கிட்டு கோவிலுக்குப் போயிட்டு அப்புறம்தான் வீட்டுக்குப் போகணுமாம். விட்டா அப்புறம் பத்து நாளைக்கு எடுக்கக்கூடாதாம். ஐம்பதாயிரத்துக்கு மேலே பணத்தைக் கட்டியாச்சு. அதனாலதான் லீவு போட்டிட்டு டெலிவரி எடுக்கப் போறேன்"

"ஆமா, ரொம்ப நாளா யோசனை பண்ணீங்க, இப்ப என்ன திடீர்னு?

"அதுவும் என் பொண்டாட்டியாலதான். நாங்க ரெண்டு பேரும் ஆபீசுக்கு பஸ்ல போய் வர செலவு இப்ப ஜாஸ்தி ஆயிடிச்சாம்."

"வாழ்த்துக்கள். நாளன்னைக்கு எங்க எல்லாருக்கும் சுவீட்டோட வாங்க. அதோட மூர்த்தி சார், மறக்காம ஒரு ஹெல்மட்டும் வாங்கிடுங்க. இல்லேன்னா போலீசுக்கு மாமூல் கொடுத்தே போண்டி ஆயிடுவீங்க."

"அத அந்த டீலரேசொல்லிட்டாம்பா. அவன் கடையிலேயே சீப்பா ஒண்ணை வாங்க வேண்டியதுதான்."

"இங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. ஹெல்மெட்ல மிச்சம் பண்ணாதீங்க. நல்ல ஃபுல் சைஸ்ல காதையெல்லாம் மூடற மாதிரி ஒண்ணுவாங்கிக்கிங்க. அனுபவஸ்தன் சொல்றேன். கேட்டுக்கிங்க."

*****


"வாழ்த்துக்கள் சார். இந்தாங்க வண்டி சாவி. மூணு சர்வீஸ் ஃப்ரீ. அப்புறமும் நம்பகிட்டயே கொண்டு வாங்க. இந்தாங்க நீங்க கேட்ட மாதிரி எங்க ஷோ ரூம்லயே மிகக் கொறஞ்ச விலை ஹெல்மெட். ஒங்களுக்கு இதை நாங்க 50 சதவீதம் தள்ளி கொடுக்கறோம்."

"இல்ல சார். எங்க ஆஃபீஸ்ல எல்லாரும் நல்லாதலையை ஃபுல்லா கவர்பண்ற மாதிரி வாங்கிக்கச் சொல்லி அட்வைஸ் பண்ணாங்க. அது மாதிரியே ஒண்ணுகொடுங்க."

"சார், உங்க ஆஃபீஸ் நண்பர்கள் நல்ல அட்வைஸ் கொடுத்திருக்காங்க. நாங்க சொன்னா சேல்ஸுக்காக சொல்றோம்னுநினைப்பீங்கன்னு சொல்லலே. இந்தாங்க உங்க வண்டியோடகலருக்கு மேட்ச்சா ரெட் கலர்ல. போட்டுப்பாருங்க சைஸ் கரெக்டா இருக்கான்னு."

"ரொம்ப நன்றி. நான் வரேங்க."

மூர்த்தி மனைவியின் ஆஃபீஸ் பக்கம் வண்டியை ஓட்டினார்.

*****


"ஏம்மா, அதான் நீ சொன்ன மாதிரியே வண்டிக்குப் பூஜை போட்டாச்சே. வீட்டுக்குப் போகலாமா? பசங்க ஸ்கூட்டரைப் பாக்கணும்னு ஆசையா இருப்பாங்க. அவங்களயும் ஒரு ரவுண்டு கூட்டிகிட்டுப் போகணும் இல்லே."

"எல்லாம் போகலாம். முதல்ல இங்க உக்காருங்க. நீங்க வண்டிய டெலிவரி எடுத்துக்கிட்டு இருந்தீங்க போல இருக்கு. உங்க அக்கா நீங்க கிடைக்கலேன்னு எனக்கு ஃபோன் பண்ணிச்சு. வர சனிக்கிழமை உங்க அம்மா வராங்களாம். அதப்பத்தி உங்ககிட்ட பேசணும். வீட்டில பேசினா நாம பெத்தது ரெண்டும் பேசினதை முதல்ல பாட்டிகிட்ட சொல்லும். அதுகளா சொல்லாட்டியும் உங்க அம்மா கேட்டு தெரிஞ்சிக்குவாங்க."

"பேச ஆரம்பிச்சா நேரம் ஆயிடும்மா. ஸ்கூட்டர்ல போகும்போது நீ சொல்லிக்கிட்டே வா, நான் கேட்டுக்கிறேன்."

"அதுவும் சரிதான். வாங்க போகலாம்."

ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தார்.

"உங்க அம்மா எதுக்கு வராங்கன்னு தெரியுமா?"

மூர்த்தியிடமிருந்து பதில் இல்லை.

"உங்களுக்குத் தெரியாதுன்னு எனக்குத் தெரியும். நீங்க ஒண்ணும் பதில் பேச வேண்டாம். ரோடப் பாத்து வண்டிய ஓட்டுங்க."

பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் பார்த்த மூர்த்திக்கு ஷாக். மனைவி அவர் தோள்மீது முகத்தை வைத்துக்கொண்டு கைகளால் அவர் இடுப்பைக் கட்டிக்கொண்டு இருந்தாள். ஏதோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தது.

"உங்க அக்கா அவ பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணி இருக்காளாம். அத உங்ககிட்ட சொல்லி எவ்வளவு பணம் பிடுங்க முடியுமோ அவ்வளவையும் பிடுங்கத்தான் உங்க அம்மாவை அனுப்பியிருக்கா உங்க அக்கா."

திடீரென்று முகத்தைத் தோளிலிருந்து எடுத்துவிட்டு தோளில் எதற்குத் தட்டுகிறாள் என்று மூர்த்திக்குப் புரியவில்லை. நல்ல வேளையாக வண்டி ஒரு சிக்னலில் நின்று கொண்டிருந்தது.

மெல்லத் திரும்பிப் பார்த்தார்.

"நான் சொல்றதை கேட்டுக்கிட்டு இருக்கீங்களா?"

காதில் எதுவும் விழாத மூர்த்தி வழக்கம்போல் தலையை மட்டும் ஆட்டினார்.

"சரி, சரி. நீங்க மெள்ள ஓட்டுங்க. வீடு வரதுக்குள்ள நான் எல்லாத்தையும் சொல்லிடறேன்."

வண்டி கிளம்பியது!

"முதல்ல உங்க நல்ல சட்டை எல்லாத்தையும் உள்ள வச்சிட்டு தெனம் நான் கொடுக்கிற சட்டையை போட்டுக்குங்க."

மூர்த்தி தோளில் ஒரு சின்ன அடி பெண்டாட்டி கையால் கிடைத்தது. எதற்கு என்று புரிந்துகொண்டவர் தலையை ஆட்டினார்!

"நல்ல வேளையா பழைய துணிக்குக் கொடுக்கிற பாத்திரக்காரன் வரலே. இந்த ஸ்கூட்டரை ஆபீஸ்ல லோன் போட்டு வாங்கியிருக்கேன், மாசாமாசம் நிறைய பிடிச்சிடுவாங்கன்னு சொல்லுங்க."

மறுபடி ஒரு சின்ன அடி, உடனே ஒரு தலையாட்டு. மூர்த்திக்கு ஒன்று புரிந்தது. தோளில் பெண்டாட்டி முகம் இருந்தால் பேசிக் கொண்டிருக்கிறாள். ஒரு சின்ன அடி கொடுத்தால்தான் தலையாட்ட வேண்டும்!

"உங்க அக்கா பொண்ணோட கல்யாணத்தைப் பத்தி சொன்ன உடனே முடிஞ்சா நீங்க வரதாகவும் எனக்கும் பசங்களுக்கும் லீவு கிடைக்கிறது சந்தேகம்னும் சொல்லுங்க."

சின்ன அடி......

"வீட்டு வாடகை மூணு மாசமா பாக்கி நிக்குது, எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியலைன்னு சொல்லுங்க."
சின்ன அடி.....

"நல்ல வேளையா சனிக்கிழமைதான் வராங்க உங்க அம்மா. நான் என் நல்ல புடவையெல்லாம் உள்ள மறைச்சு வச்சிட்டு பழசையெல்லாம் கட்டிக்கிறேன். தினம் பைல உங்களுக்கு ஒரு நல்ல ஷர்ட்டும் எனக்கு ஒரு நல்ல புடவையும் வைக்கிறேன். ஆபீஸ் போனதும் மாத்திக்கலாம். சாயங்காலம் ஆபீஸ்ல இருந்து கிளம்பும்போது மறக்காம பழைய சட்டையை மாத்திக்குங்க."

சின்ன அடி.....

"உங்க அம்மா ஊருக்குக் கிளம்பறவரைக்கும் வீட்ல சமையல் ரொம்ப சிம்பிளாத்தான் இருக்கும். பகல்ல ஆபீஸ்ல நல்ல லஞ்ச்சா சாப்பிட்டுக்கோங்க. நான் பசங்க கைல காசு கொடுத்து அனுப்பிடறேன்."

நல்ல வேளையாக வீடு வந்துவிட்டது. மூர்த்தியின் தோள் பிழைத்தது. பசங்க ரெண்டு பேரையும் ஒரு ரவுண்டு ஸ்கூட்டரில் அழைத்துக்கொண்டு போய் விட்டு, ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு உள்ளே வந்தவரின் காதில் அவர் மனைவி மெல்லக் கிசுகிசுத்தாள்.

"பசங்க எதிர்ல நாம பேசினதைப்பத்தி எதுவும் பேசாதீங்க. நான் மிச்சத்தை நாளைக்கு ஆஃபீஸ் போகும்போது சொல்றேன்."

புல் சைஸ்ல காத மூடற மாதிரி ஹெல்மெட் வாங்கச்சொல்லி யோசனை சொன்ன அனுபவசாலி நண்பருக்கு மனதில் நன்றி சொல்லிக்கொண்டே சாப்பிட உட்கார்ந்தார் மூர்த்தி.
"அம்மா வா, கனகா நீ இன்னிக்கி வரதா சொல்லிச்சாம். ஆனா எந்த வண்டில வரேன்னு சொல்லலியாம். சொல்லியிருந்தா நான் நேர வந்து உன்னை அழைச்சுக்கிட்டு வந்திருப்பேன்ல, பாரு புது ஸ்கூட்டர் வாங்கியிருக்கேன்."

"உனக்கு எதுக்குப்பா வீண் அலைச்சல். எனக்கென்ன உன் வீட்டுக்கு வர வழி தெரியாதா? புது ஸ்கூட்டரா? நல்லா இருக்கு. நான் இதில எல்லாம் உக்காந்துகிட்டு வர மாட்டேன். பயம். கைல பொட்டி வேற. அத விடு. இது எவ்வளவு ஆச்சு?"

"ஐம்பத்தி ரெண்டாயிரம் ஆச்சும்மா. நாங்க ரெண்டு பேரும் இப்ப ஆஃபீசுக்கு இதிலேயே போயிடறோம். பஸ்ஸுக்கு செலவாற காசவிட இப்பச் செலவு கம்மிம்மா. வீட்டுக்கும் சீக்கிரம் வந்திடறோம். பசங்கள கவனிக்க சௌகரியமாயிருக்கு."

சமையலறையில் இரண்டு மூன்று பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது!

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது மூர்த்தி தன்னுடைய குழியை இன்னும் கொஞ்சம் ஆழமாக வெட்டிக்கொண்டார்!

"அம்மா, கனகாப்பொண்ணுக்கு கல்யாணம்னா நம்பவே முடியல. அந்த சின்னப் பொண்ணுக்கு கல்யாண வயசாயிடிச்சான்னு இருக்கு. நான்தானேம்மா ஒரே தாய்மாமன். நான் என்ன செய்யணும்னு நீ கரெக்ட்டா சொல்லிடும்மா. நல்லா செஞ்சிடறேன்" (செத்தாண்டா சேகரு!)

"நீ நல்லா செய்வேன்னு தெரியும்பா. ஐஞ்சு பவுன்ல ஒரு செயின் பண்ணிப் போட்டிடு. அதவிட முக்கியம் உனக்காகவே அவ பார்த்து கல்யாணத்தை ஞாயிற்றுக்கிழமை வச்சிருக்கா. நீ குடும்பத்தோட வந்து மாமனா கல்யாணத்த நடத்திக் கொடு."

"நிச்சயம்மா. பசங்களுக்கு ஸ்கூல் லீவுதான். ஒரு பிரச்சினையும் இல்ல."

*****


"என்ன மூர்த்தி சார். ரொம்ப டல்லா இருக்கீங்க? பஸ்ல இருந்து இறங்கி வரதைப் பாத்தேன். ஸ்கூட்டர் சர்வீசுக்குப் போயிருக்கா?"

"இல்லையப்பா. சார் வீட்ல வண்டிய எடுத்துக்கிட்டுப் போயிருப்பாங்க. நான் நேத்திக்கு பஜார்ல அவங்க ஸ்கூட்டர் ஓட்டிகிட்டுப் போறதப் பாத்தேன்."

"அப்படீன்னா சார இங்க இறக்கி விட்டிட்டுப் போயிருப்பாங்களே? என்ன சார் நாங்க எல்லாரும் பேசிக்கிட்டேஇருக்கோம். நீங்க ஒண்ணும் பேசாம இருக்கீங்க."

"என்னத்தை சொல்ல? எனக்கும் ஸ்கூட்டருக்கும் ராசி இல்லப்பா."

"ஏன் சார் ஏதாவது ஆக்சிடென்ட் ஆயிடிச்சா?"

"அதெல்லாம் இல்லேப்பா. என் அக்கா மகளுக்கு கல்யாணம். நான் மாமன் சீர்செய்ய என் பொண்டாட்டி என் ஸ்கூட்டரை வித்து, வர பணத்திலதான் செய்யணும்னு சொல்லிட்டா. அதான் வித்துட்டேன்."

"ஆனா அவங்க ஸ்கூட்டர்ல போறத நான் பாத்தேனே?"

"அது அடுத்த சோகம். கவர்ன்மெண்டில லேடீஸுக்கு ஸ்கூட்டர் வாங்க பாதிப்பணம் கொடுக்கறாங்க இல்லே, அதுல வாங்கிக்கிட்டா. எல்லா பிரச்சினைக்கும் காரணம் நீ சொன்னபடி அந்த ஃபுல்சைஸ் ஹெல்மெட்தான்."

"அதெப்பெடி சார். நான் உங்க நல்லதுக்குதான் சொன்னேன்."

"நீ நல்லதுக்குதான் சொன்னேப்பா. அத மாட்டிகிட்டதாலே என் பொண்டாட்டி சொன்ன எதுவும் காதில விழாமப் போயி, நான் மாட்டிக்கிட்டேன்."

ஆர். நடேசன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா
More

வேர்களும் விழுதுகளும்
Share: 
© Copyright 2020 Tamilonline