Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சாதனையாளர் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | கவிதைப்பந்தல் | சிறப்புப் பார்வை | மேலோர் வாழ்வில் | நூல் அறிமுகம் | வாசகர்கடிதம் | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
அதிபர் பதவிக்குப் போட்டியிடுகிறார் கமலா ஹாரிஸ்
- மதுரபாரதி|பிப்ரவரி 2019|
Share:
ஜனவரி 27ம் தேதியன்று, தான் பிறந்த ஊரான ஓக்லாண்டில் (கலிஃபோர்னியா) அமெரிக்க அதிபர் பதவிக்காக வேட்பாளர் பிரச்சாரத்தைக் கமலா ஹாரிஸ் தொடங்கியபோது அங்கே வானதிர மகிழ்ச்சி ஆரவாரம் செய்தவர்கள் 20,000 பேருக்கு மேல்! "நாகரீகம், நீதி, உண்மை, சமத்துவம், சுதந்திரம், ஜனநாயகம் - இவை வெறும் சொற்களல்ல. அமெரிக்கர்கள் என்ற முறையில் நாம் போற்றும் விழுமியங்கள். இந்தக் கணத்தில் இவை பலிபீடத்தில் கிடக்கின்றன" என்கிறார் ஜனநாயகக் கட்சியினரான கமலா ஹாரிஸ்.

சென்னையின் பெசன்ட் நகர் கடற்கரையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சிறுமியாகத் தனது தாத்தாவின் கையைப் பிடித்துக்கொண்டு நடக்கையில் இவரது காதுகளில் விழுந்து தாக்கம் ஏற்படுத்திய சொற்கள் இவை. ஓய்வுபெற்ற இந்திய அரசு அதிகாரியான அவர் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு போகையில் விழுந்த சொற்களில் 'ஊழல் ஒழிப்பும்' அடக்கம். இவருடைய பாட்டியும் லேசுப்பட்டவரல்ல. போகும் ஊரிலெல்லாம் பெண்களை ஒன்று திரட்டிப் பெண்கள் வன்முறை, தாம்பத்திய உரிமை, மகப்பேறு உரிமை எனப் பல விஷயங்களில் அவர் விழிப்புணர்வு ஊட்டுவாராம். இவருடைய தாயார் டாக்டர் சியாமளா ஹாரிஸ் ஒரு புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மட்டுமல்லாது சமுதாயச் செயல்பாட்டு வீரரும்கூட.



எனவே கமலா ஹாரிஸுக்குச் சமுதாயக் கண்ணோட்டமும் செயல் ஊக்கமும் ரத்தத்தில் ஊறிப்போனதில் வியப்பில்லை. "நமது வாழ்க்கையிலேயே பார்த்திராத அளவில் இன்றைக்கு அமெரிக்காவில் தலைமையிடப் பிரச்சனை உள்ளது. சக்தி வாய்ந்த குரல்கள் வெறுப்பையும் பிரிவினையையும் நம்மிடையே விதைக்கின்றன" என்கிறார் கமலா.

அன்னையரிடமிருந்து பலவந்தமாகப் பிரிக்கப்பட்ட குழந்தைகள், அடிமட்டக் குடிமகனுக்கு மருத்துவக் காப்பீடு எட்டாக்கனி ஆகிப்போனது, பெரும் தனவந்தர்களும் கார்ப்பரேட்டுகளும் வரிக்குறைப்பை அனுபவிக்கையில், நடுத்தர அமெரிக்கனின் முதுகில் அதிக வரிச்சுமை ஏறிப்போனது, லாபநோக்கில் நடத்தப்படும் சிறைச்சாலைகள் தொடங்கி எண்ணற்ற பிரச்சனைகள் ஒரு நல்ல நிர்வாக மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்பதை அவரது முதிர்ந்த அரசியல் நோக்கு காண்கிறது.

"என்னுடைய பிரச்சாரம் இப்போதைய அதிபருக்கு எதிரானதல்ல. அது இந்த தேசத்துக்குச் சாதகமான, மக்களுக்குச் சாதகமான பிரச்சாரக் களமாக அமையும்" என்று தெளிவாகக் கூறுகிறார் கமலா ஹாரிஸ்.

தாய் வழியில் இந்தியப் பாரம்பரியமும், தந்தை வழியில் ஆப்பிரிக்கப் பாரம்பரியமும் கொண்ட கமலா ஹாரிஸ், 2003ம் ஆண்டு மேற்சொன்ன வம்சாவளிகளில் வந்த முதல் பெண் மாவட்ட அட்டார்னியாக சான் ஃபிரான்சிஸ்கோவில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து 2010ல் கலிஃபோர்னியா மாநில அட்டார்னியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனவரி 2017ல் அமெரிக்க செனட்டர் ஆன போதிலும் அமெரிக்க அளவில் இந்தப் பின்னணி கொண்ட முதல் பெண்மணி என்ற பெருமையைத் தக்கவைத்துக் கொண்டார். எந்தப் பதவியை எடுத்துக்கொண்டாலும் அதைத் தனது உயிர்மூச்சாகக் கொண்டு பொதுநலனுக்கு உழைப்பது இவரது தனித்தன்மை.



கணவர் டக்ளஸ் எம்ஹாஃப் (Douglas Emhoff) கூட வழக்கறிஞர்தாம். கமலா ஹாரிஸ் 'Smart on Crime: A career prosecutor's plan to make US safer' (2009), 'The Truths We Hold: An American Journey' (2019) ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய 'Superheroes are Everywhere' (2019) சிறுவருக்கானது.

2010 அக்டோபர் தென்றல் இதழுக்காக இவரை நேர்காணல் செய்த திருமதி அனு நடராஜன், "ஒரு வார்த்தை. அமெரிக்காவின் முதல் பெண் அதிபராகும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு என்பதாக ஒரு பேச்சு உள்ளது" என்று கூறினார். அந்தக் கேள்விக்கு நல்லதொரு விடை நமக்கு 2020ல் கிடைக்கப் போகிறது.

தென்றலில் கமலா ஹாரிஸ்
அட்டார்னி ஜெனரல் பதவிக்குப் போட்டியிட்ட செய்தி (டிசம்பர், 2008)
சுவையான நேர்காணல் (அக்டோபர், 2010)
கமலாவின் அன்னை சியாமளா ஹாரிஸ் நேர்காணல் (ஃபிப்ரவரி 2004)
மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline