Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
டி.எஸ். சொக்கலிங்கம்
- அரவிந்த்|மே 2021|
Share:
எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறப்பான சாதனைகள் புரிந்தவர் டி.எஸ். சொக்கலிங்கம். சுதந்திரப் போராட்ட வீரர். தமிழில் இதழியல் முன்னோடி. தென்காசியில் சங்கரலிங்கம் பிள்ளை-லட்சுமி அம்மாள் இணையருக்கு, 3 மே 1899 நாளன்று பிறந்தார். மூன்று சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். தந்தை மளிகைக்கடை நடத்தி வந்தார். அதனால் 'மடத்துக்கடை சங்கரலிங்கம் பிள்ளை' என்று அழைக்கப்பட்டார். சிறந்த தேசபக்தரும்கூட. உள்ளூர்ப் பள்ளியில் கல்வி பயின்ற சொக்கலிங்கம், கிடைத்த நேரத்தில் தந்தையின் கடைக்குச் சென்று உதவுவார்.

இவரது சகோதரர் 'மடத்துக்கடை' சிதம்பரம் பிள்ளை தேசப்பற்று மிக்க வீரராகத் திகழ்ந்தார். செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சியின் உற்ற நண்பராக இருந்தார். 1911ல் ஆஷ் கொலையுண்டார். அந்தக் கொலை வழக்கில் தொடர்புடையவராக அடையாளம் காணப்பட்ட சிதம்பரம் பிள்ளை கைது செய்யப்பட்டார். சில மாதங்களிலேயே உடல் நலிவுற்றுத் தந்தை சங்கரலிங்கம் பிள்ளையும் காலமானார். குடும்பம் தத்தளித்தது. சொக்கலிங்கத்தின் கல்வி ஆறாம் வகுப்போடு நின்றுபோனது. தந்தையின் மளிகைக் கடையை நடத்தும் பொறுப்பை ஏற்கவேண்டி ஆனது. கடினமாக உழைத்துத் தந்தையின் நற்பெயரைக் காப்பாற்றினார். கல்வி ஆர்வத்தால் தனி ஆசிரியர்மூலம் கல்வி பயின்றார். ஓய்வுநேரத்தில் சுதந்திரப் போராட்டம் சார்ந்த இதழ்களைப் படிப்பதும் நண்பர்களுடன் அதுபற்றி விவாதிப்பதுமாக வாழ்க்கை சென்றது. சுதேசமித்திரன் இதழ், குறிப்பாக பாரதியாரின் எழுத்துக்கள், இவரை மிகவும் கவர்ந்தன. அதன் முகவராகவும் சில காலம் இருந்தார். (பிற்காலத்தில் அதில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.) சொக்கலிங்கம் எழுதிய முதல் கட்டுரை, 1916ல் 'ஆனந்தபோதினி'யில் வெளியாகி இவரது எழுத்தார்வத்தைத் தூண்டியது.

அது சுதந்திரக் கனல் சுடர்விடத் தொடங்கியிருந்த காலம். சுதேசி இயக்கம் சார்ந்த நூல்களைப் படிப்பதும், கூட்டங்களுக்குச் செல்வதும் வழக்கமானது. காந்தியக் கொள்கைகள் இவரை ஈர்த்தன. அதனால் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஒருநாள் புறப்பட்டு, காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார். அப்போது அவருக்கு வயது 18. காந்தியின் அன்புக்குப் பாத்திரமானார். சில வாரங்கள் கழித்து, தான் அங்கிருப்பதைக் குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். அவர்கள் வந்து வற்புறுத்தி அவரைத் தென்காசிக்கு அழைத்துச் சென்றனர். அண்ணன் சிதம்பரம் பிள்ளையின் உதவியுடன் கடையை நன்றாக நடத்தினார் சொக்கலிங்கம். பின்னர் தனியே கடை ஒன்றை ஆரம்பித்தார். அதற்கு, 'ஸ்டார் கம்பெனி' என்று பெயரிட்டார். சுதேசிப் பொருட்களை மட்டுமே அக்கடையில் விற்றார்.இந்நிலையில் குற்றாலம் சென்றுவந்த நண்பர்கள் மூலம், 'குற்றால அருவியில் வெள்ளையர்கள் குளித்துச் சென்றபின் தான் இந்தியர்கள் குளிக்க வேண்டும்' என்ற வழக்கம் பின்பற்றப்படுவதை அறிந்தார். மீறிக் குளிப்பவர்களை ஆங்கிலேய அரசு கைது செய்து தண்டித்தது. இது சொக்கலிங்கத்திற்குச் சினமூட்டியது. 'நமது நாட்டில், நமக்குச் சொந்தமான அருவியில் நாம் குளிக்கத் தடையா?' என்று மனம் வெதும்பினார். 'நீராடுவதற்கும் நிர்ப்பந்தமா?' என்ற தலைப்பில் துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு வெளியிட்டார். ஆங்கிலேய அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்தார். அதற்கு எந்தப் பலனும் இல்லாததால், நண்பர்களைத் திரட்டிச் சென்று, குற்றால அருவியில் குளிக்கும் போராட்டத்தைத் தொடங்கினார். அதன் பிறகே ஆங்கிலேய அரசு அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது.

தொடர்ந்து அந்நியத் துணிகள் புறக்கணிப்பு, மதுக்கடை எதிர்ப்பு போன்ற போராட்டங்களில் கலந்துகொண்ட சொக்கலிங்கம், 1920ல் காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்திற்காகத் தீவிரப் பிரசாரப் பணிகளை மேற்கொண்டார். பல அரசியல் தலைவர்களின் நட்பும், தொடர்பும் கிடைத்தது. தலைவர்களை அழைத்து வந்து பொதுக் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வம் காட்டினார். சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவைத் தென்காசிக்கு வரவழைத்துப் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். 'தேசபக்தன்' இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதிய அறிமுகம் மூலம், 1922ல், திரு.வி.க. தலைமையில் திருநெல்வேலி மாவட்ட அரசியல் மாநாட்டை நடத்தினார்.

டாக்டர் வரதராஜுலு நாயுடு, சேலத்தில் 'தமிழ்நாடு' இதழை நடத்தி வந்தார். இளைஞர் சொக்கலிங்கத்தின் ஈடுபாட்டையும் தேசப்பற்றையும் நன்கறிந்த அவர், தனது இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றச் சொக்கலிங்கத்தை அழைத்தார். அது அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. அவரைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் நாயுடு. 'தேவிதாசன்' என்ற புனைபெயரில் காத்திரமான பல கட்டுரைகள் மூலம் விடுதலைப் போராட்ட உணர்வினைத் தூண்டினார் சொக்கலிங்கம். அவரது கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வ.ரா., சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் சொக்கலிங்கத்தின் எழுத்தாற்றலைப் பாராட்டினர். 1925ல் 'தமிழ்நாடு' இதழ் சென்னைக்கு மாற்றப்பட்டது. நாயுடு மருத்துவர் என்பதால் சேலத்திலேயே தங்கி இருக்க நேர்ந்தது. அதனால் தமிழ்நாடு இதழின் முழு ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் சொக்கலிங்கம். 1926ல் தமிழ்நாடு வார இதழுடன், நாளிதழும் தொடங்கப்பட்டது. அவ்விதழ்களில் தனது கதை, கட்டுரை, உரையாடல்கள் மூலம் மக்களிடையே சுதந்திரக் கனலைத் தூண்டினார்.

1931ல், கருத்து வேறுபாடு ஏற்படவே, தமிழ்நாடு இதழிலிருந்து விலகி, 'காந்தி' என்ற பெயரில் வாரம் இருமுறை இதழ் ஒன்றைக் கொண்டு வந்தார் சொக்கலிங்கம். காலணா விலைகொண்ட அந்த இதழ் பரவலாக வாசிக்கப்பட்டது. 25000 பிரதிகளுக்கு மேல் விற்பனை ஆனது. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுயசரிதையின் இரண்டாம் பாகம் காந்தியில் தொடராக வெளியானது. வ.ரா. எழுதிய 'மகாகவி பாரதியார் வரலாறு' தொடர், வ.வே.சு. ஐயரின் திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு, புதுமைப்பித்தனின் முதல் படைப்பான 'குலோப்ஜான் காதல்' ஆகியவையும் காந்தியில் வெளியானவைதாம்.

படைப்புகள்

வாழ்க்கை வரலாற்று நூல்கள்
ஜவஹர்லால் நேரு
வீரர் சுபாஷ் சந்திர போஸ் (பிரிட்டிஷ் அரசால் தடைசெய்யப்பட்ட நூல்)
காமராஜர் (தமிழ், ஆங்கிலம் இரண்டிலும்)

மொழிபெயர்ப்பு நூல்கள்
போரும் வாழ்வும் - மூன்று பகுதிகள் (டால்ஸ்டாயின் 'War and Peace')

சிறுகதைத் தொகுப்பு
அல்லி விஜயம்

கட்டுரைத் தொகுப்புகள்
1945 - தமிழர் புரட்சி ('தினசரி' தலையங்கங்களின் தொகுப்பு)
எனது முதல் சந்திப்பு - (காந்தி, காமராஜ், ராஜாஜி, பாரதியார், வ.உ.சி., வ.வே.சு. ஐயர், வரதராஜுலு நாயுடு, குமாரசாமி ராஜா, பக்தவத்சலம், மணிக்கொடி சீனிவாசன், மட்டப்பாறை வெங்கட்ராம ஐயர் உள்ளிட்ட பலரைச் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பு)

நாவல்
பாய் பரமானந்தன் - (முதல் காந்தியப் புதினம்)

இவை தவிரச் சிறுசிறு பிரசுரங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார். இவரது சொற்பொழிவுகள் பலவும் சிறு பிரசுரங்களாக வெளியாகியுள்ளன. இவர் எழுதியவை பல இன்னமும் நூல் வடிவம் பெறாமல் இருக்கின்றன.


ஜனவரி 1932ல், காந்திஜியின் கைதைக் கண்டித்து ராஜாஜி எழுதிய அறிக்கையை காந்தி இதழில் பிரசுரித்தார் சொக்கலிங்கம். அதற்காக அவர் சட்டமீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகிக் கைதானார். ஆறு மாதக் கடுங்காவல் தண்டனையும், நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டன. சிறைவாசத்திற்குப் பின் மீண்டும் 'காந்தி' இதழை நடத்தினார். வாரம் மும்முறை இதழாக, பின் மாத இதழாக, தொடர்ந்து நாளிதழாக என 1934 வரை 'காந்தி' வெளிவந்தது. 1934ல், பீகாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனையொட்டி, 'சர்க்கார் எங்கே?' என்ற தலையங்கத்தை எழுதினார். அதனால் ராஜத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டார். பத்திரிகையும் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 'காந்தி'யின் அத்தியாயம் முற்றுப்பெற்றது.

இந்நிலையில், 'தினமணி' இதழ் தொடங்கப்பெற்றது. அதன் முதல் ஆசிரியர் ஆனார் டி.எஸ். சொக்கலிங்கம். அவரது நெருங்கிய நண்பரான ஏ.என். சிவராமன் உதவியாசிரியர். தனது தலையங்கங்கள், கட்டுரைகள் மூலம் 'பேனா'வின் வலிமையை நீருபித்தார். அதனால் 'பேனா மன்னர்' என்று போற்றப்பட்டார். அனல் கக்கும் எழுத்துக்களால் 'தினமணி' இதழுக்கு ஆதரவு பெருகியது. கிராமம் முதல் நகரம் வரை 'தினமணி' சென்று சேர்ந்தது. தினமணி கதிர் இதழில் சில சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார் சொக்கலிங்கம். 'ஊழியர் பஞ்சதாசர்', 'ஓடிய பரிசாரகன்', 'தலைவர் குஞ்சமரம்', 'உஷா பரிணயம்' போன்ற கதைகள் கதிரில் வெளியாகின. இவை பின்னர் தொகுக்கப்பட்டு 'அல்லிவிஜயம்' என்ற பெயரில் நூலாக வெளியாயின.

1937ல் சட்டப் பேரவைத் தேர்தலில் தென்காசித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். காந்தியின் கட்டளையை ஏற்று, 1941ல் தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டார். அதனால் அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து, திருச்சி சிறையில் அடைத்தனர். அதற்கு முன் தனது நண்பர் ஏ.என். சிவராமனை தினமணி இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்கச் செய்தார். சிறைவாசத்துக்குப் பின் மீண்டும் 'தினமணி'யில் சேர்ந்தபோதும், கருத்து வேறுபாட்டால் சில மாதங்களுக்குப் பின் அதிலிருந்து விலகினார்.

1944ல், 'தினசரி' என்ற நாளிதழைத் தொடங்கினார். அமிர்தபஜார் இதழின் ஆசிரியர் துஷார் காந்தி கோஷ் இவ்விதழைத் தொடங்கி வைத்து வாழ்த்தினார். 1952வரை அதன் ஆசிரியராகவும் உரிமையாளராகவும் இருந்து நடத்தினார் சொக்கலிங்கம். பத்திரிகை ஆசிரியரே அந்தப் பத்திரிகையின் உரிமையாளரராகவும் இருக்கவேண்டும் என்பது சொக்கலிங்கத்தின் எண்ணம். ஆனால், அது நடைமுறையில் சாத்தியமற்றது என்ற உண்மையை அவர் 'தினசரி' இதழை நடத்திய அனுபவத்தில் தெரிந்து கொண்டார். பத்திரிகைப் பணிகளை முழுமூச்சாகக் கவனித்த அவரால் விற்பனை மற்றும் நிர்வாகப் பணிகளை கவனிக்க இயலவில்லை. இதழின் விற்பனையில் சரிவு ஏற்பட்டது. தொழிலாளர் வேலைநிறுத்தம் காரணமாக 1952ல் அவ்விதழ் நின்றுபோனது. தொடர்ந்து 'ஜனயுகம்' என்ற வார இதழை நடத்தினார். ஆனால், அதுவும் வெகுநாள் தொடரவில்லை. 1959ல் 'பாரதம்' என்னும் தலைப்பிலான வாரம் இருமுறை இதழைத் தொடங்கினார். அதுவும் வெற்றிபெறவில்லை. 1960ல், காங்கிரஸ் கட்சியினருக்காக 'நவசக்தி'யைத் தொடங்கினார். ஆனால், அதுவும் வெகுநாள் நீடிக்கவில்லை. ராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட பலருக்கு மிக நெருக்கமானவர் சொக்கலிங்கம். 1944ல், சேலத்தில் நடந்த முதல் தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் தலைமையுரையாற்றியவர் இவர்தான்.

தனது பத்திரிகை ஆர்வம் பற்றி சொக்கலிங்கம், "அக்காலத்தில் கவர்ச்சிகரமாய்த் தமிழில் எழுதக் கூடியவர்கள் மூன்றே பேர்தான். ஒன்று பாரதியார், மற்றொருவர் வ.ரா. மூன்றாமவர் டாக்டர் வரதராஜுலு நாயுடு. இவர்கள் முறையே சுதேசமித்திரன், வர்த்தகமித்திரன், பிரபஞ்சமித்திரன் ஆகிய பத்திரிகைகளில் எழுதி வந்தார்கள். மற்றவர்கள் எழுதுபவையெல்லாம் வழவழா கொழகொழா என்றுதான் இருக்கும். இந்த மூவர் எழுதும் கட்டுரைகளை விடாமல் விருப்பத்தோடு நான் படிப்பதுண்டு. அதன் பலனாக நானும் பத்திரிகை நடத்த வேண்டும் என்ற விருப்பம் எனக்குத் தோன்றியது" என்று குறிப்பிட்டுள்ளார்.சொக்கலிங்கத்தின் எழுத்து வல்லமையைப் பின்வருமாறு மதிப்பிடுகிறார் சாமி. சிதம்பரனார், "பத்திரிகை ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ விளங்கவேண்டும் என்றால் அவர்கள் ஆங்கிலத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; தமிழிலும் சிறந்த புலமை பெற்றிருக்க வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை நெடுங்காலத்திற்கு முன் குடி கொண்டிருந்தது. இந்த நம்பிக்கையைச் சுக்கு நூறாக்கிய பெருமை திரு. சொக்கலிங்கம் அவர்களுக்கு உண்டு. சொக்கலிங்கம் புலவர் அல்லர். ஆனால், அவர் எழுத்து மிகவும் சக்தி வாய்ந்தது. அவர் என்ன சொல்ல நினைக்கிறாரோ அதை ஆணித்தரமாக எழுத்திலே பேசுவார். மக்கள் எதைச் செய்யவேண்டும் என்று நினைக்கின்றாரோ அதைச் செய்யும்படி எழுத்தின்மூலம் தூண்டிவிடும் வல்லமை அவருக்கு உண்டு."

'மணிக்கொடி' இலக்கிய இதழ் உருவானதிலும் சொக்கலிங்கத்தின் பங்களிப்பு உண்டு. அதுபற்றி அவர், "1933-ல் 'காந்தி' என்ற பெயரில் நான் பத்திரிகை நடத்தி வந்தபோது ஓர் இலக்கிய வாரப் பத்திரிகையை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு ஸ்டாலின் சீனிவாசன் பம்பாயிலிருந்து சென்னை வந்தார். திருவையாறு சென்று வ.ரா.வையும் அழைத்து வந்தார். ஒருநாள் சென்னை ஹைகோர்ட் கடற்கரையில் நாங்கள் மூவரும் உட்கார்ந்து புதிய பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தோம். அச்சமயம் கோட்டை மீது பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியின் கயிறு அறுந்து கீழே விழுந்தது. அது வீழ்ந்ததில் எங்களுக்குச் சந்தோஷம். 'பிரிட்டிஷ் கொடி வீழ்ந்தது. இனி நமது கொடிதான் பறக்கப் போகிறது' என்று பேசிக்கொண்டோம். அச்சமயத்தில்தான் புதுப் பத்திரிகைக்கு 'மணிக்கொடி' என்ற பெயர் உதயமாயிற்று." என்கிறார். ('மணிக்கொடி சீனிவாசன்' - எனது முதல் சந்திப்பு)

இயல்பிலேயே துணிச்சலும் போராட்டக் குணமும் கொண்டவர் சொக்கலிங்கம். அதனாலேயே 'தென்காசிச் சிங்கம்' என்று இவர் போற்றப்பட்டார். எழுத்தாளர்கள் தங்கள் பதிப்புரிமை, ஊதியம் போன்றவற்றை முறையாகப் பெறுவதற்காக பத்திரிகை நிர்வாகங்களுடன் பலமுறை போராடியிருக்கிறார். இவர் தினமணியில் பணியாற்றி வந்த காலத்தில், ஒரு தயாரிப்பாளர் சிட்டியின் கதையை அவரது அனுமதி பெறாமல் திரைப்படமாக்க முயற்சித்தார். இதை அறிந்த சொக்கலிங்கம், தினமணியில் அக்கதையைத் தொடராக வெளியிட்டு, அதை எழுதியவர் 'சிட்டி' என்ற உண்மையைப் பலரும் அறியவைத்தார். தன்னிடம் பணியாற்றும் உதவி ஆசிரியர்களுக்கு முழுச்சுதந்திரம் அளித்தார். அடுத்தவர்களது கருத்துக்கு எப்போதும் மதிப்பளித்தார். தானும் லட்சிய இதழாளராக இருந்த அவர், தன்னிடம் பணியாற்றியவர்களும் அவ்வாறு செயல்பட ஊக்குவிப்பவராகவும், அவர்களது முயற்சிகளுக்கு உந்துசக்தியாகவும் இருந்தார். இவரிடம் உதவி ஆசிரியராகியப் பணியாற்றிய பலர் பிற்காலத்தில் சிறந்த பத்திரிகை ஆசிரியர்களாகப் பரிணமித்தனர். புதுமைப்பித்தன், ஏ.என். சிவராமன், கு. அழகிரிசாமி, இளங்கோவன், என். ராமரத்தினம், எஸ்.எஸ். மாரிசாமி, ஏ.ஜி. வெங்கடாச்சாரி, பி.எஸ். செட்டியார், மயிலைநாதன் உள்ளிட்ட பலர் சொக்கலிங்கத்தின் கீழ் பணியாற்றியவர்களே! புதுமைப்பித்தனை மிகவும் ஊக்குவித்தவர்களுள் சொக்கலிங்கமும் ஒருவர். தான் ஆசிரியராகப் பணியாற்றிய காந்தி, தினமணி போன்ற இதழ்களில் புதுமைப்பித்தனுக்கு வாய்ப்பளித்தார்.

நிறைந்த தரம், குறைந்த விலை என்ற நோக்கத்தில் நல்ல நூல்களை வெளியிட ஆவல் கொண்டிருந்தார் சொக்கலிங்கம். அதற்காக இவர் ஆரம்பித்ததுதான் 'நவயுகப் பிரசுராலயம்'. ஏ.என். சிவராமனின் புகழ்பெற்ற நூலான 'மாகாண சுயாட்சி' அதன்மூலம் வெளியானதுதான். 'புதுமைப்பித்தன் கதைகள்' (அவரது கதைகளின் முதல் தொகுப்பு), 'பொம்மையா, மனைவியா?' (க.நா.சு.வின் முதல் மொழிபெயர்ப்பு நூல்), 'எல்லோரும் ஓர் குலம்' (வ.ரா.வின் முதல் நூல்), 'இரட்டை மனிதன்' (கு.ப.ரா.வின் மொழிபெயர்ப்பு நூல்) போன்றவை நவயுகப் பிரசுராலயம் மூலம் வெளியானவையே.

தேசியத்தையும் தமிழையும் இணைத்துச் செயல்பட்ட சொக்கலிங்கம், 1966 ஜனவரி 9ம் நாள் காலமானார்.
அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline