Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | அஞ்சலி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
வளவ. துரையன்
- அரவிந்த்|ஜூன் 2021|
Share:
கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் சிறகுகளை விரித்திருப்பவர் வளவ. துரையன். இயற்பெயர் அ.ப. சுப்பிரமணியன். விழுப்புரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வளவனூரில், ஜூலை 15, 1949 அன்று, அ. பரமேசுவரன் - ப. லலிதா இணையருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். ராமாயண, மகாபாரத இதிகாசங்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவை குறித்துச் சொற்பொழிவாற்றும் அளவிற்கு தேர்ந்த அறிவு கொண்டவர். ஓய்வுநேரத்தில் தன் குழந்தைகளுக்கு அவற்றைக் கதையாகச் சொல்வார். நூலகங்களுக்கு அழைத்துச் சென்று நல்ல பல நூல்களை அறிமுகப்படுத்தினார். இளவயதிலேயே வளவ. துரையனுக்கு வாசிப்பார்வம் வந்துவிட்டது. வளவனூரில் உள்ள ஜார்ஜ் நடுநிலைப்பள்ளியில் (தற்போது கோவிந்தையர் பள்ளி) சேர்ந்து இடைநிலை வகுப்புவரை பயின்றார். பள்ளியில் வாரந்தோறும் நடக்கும் இலக்கிய மன்றத்தில் பேசுவது வழக்கமானது. பேசப்பேச மேடைப்பேச்சு கைவந்தது. பள்ளி இலக்கிய மன்றச் செயலாளராக இருந்த வளவ. துரையன் கையெழுத்து இதழ் ஒன்றை ஆரம்பித்தார். மாணவர்களிடையே மட்டுமல்லாமல் ஆசிரியர்களிடையேயும் அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. உள்ளூர் நூலகத்திலும் அந்த இதழ் வாசிக்கப்பட்டது.மாநில அளவில் நடந்த எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெற்று வளவனூர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். தமிழாசிரியர் புலவர் தா.மு. கிருஷ்ணன் தொடங்கி ஆசிரியர்கள் ராமதாஸ், தலைமை ஆசிரியர் துரை உள்ளிட்டோர் இவரது ஆர்வம் மற்றும் திறமை அறிந்து ஊக்குவித்தனர். எழுத்து, பேச்சு இரண்டிலும் வல்லவரானார். கவிதை ஆர்வமும் சுடர் விட்டது.

பள்ளியிறுதி வகுப்பு முடித்தபின் வடலூரில் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து கிருஷ்ணாபுரத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். வளவனூரில் நண்பர்களுடன் சேர்ந்து 'திருக்குறட் கழகம்' அமைப்பை நிறுவினார். அது இவரது இலக்கியச் செயல்பாடுகளுக்குக் களமாக விளங்கியது. திராவிட இயக்க ஈடுபாட்டால் அண்ணாத்துரையின் பெயரிலுள்ள 'துரை'யையும், தன் சொந்த ஊரான வளவனூரை முன்னொட்டாகக் கொண்டு வளவ. துரையன் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார். முதல் சிறுகதை, 1966ல் அரு. ராமநாதனின் 'காதல்' இதழில் வெளிவந்தது. "செல்வந்தன் ஒருவனுடன் நம்பிப் பழகிப் பிள்ளையும் பெற்ற ஒருத்தியின் கதை அது. அவன் கைவிட்ட பிறகு, அவள், அவனைப் பேருந்து நிறுத்தம், கடைத்தெரு, அலுவலக வாசல் எனப் பல இடங்களில் பார்க்கும் போதெல்லாம் தன் குழந்தைக்கு அவனைக் காட்டி "தோ பாரு.. உன் அப்பா" என்று சொல்லி வருகிறாள். இதனால் ஒரு கட்டத்தில் அவன் அவமானமடைந்து மன அழுத்தத்துக்கு ஆளாகித் தற்கொலை செய்துகொள்கிறான். இதுதான் கதை. இதனைத் தொடர்ந்து வளவ.துரையன் எழுதிய கதை நாவலர் நெடுஞ்செழியன் நடத்திவந்த 'மன்றம்' இதழில் வெளியானது. மாலிக்காபூர் ஓர் அரசியின் மீது காம எண்ணம் கொண்டு அவள் நாட்டின்மீது படையெடுக்கிறான். அவள் தன் மார்பகங்களை அறுத்து அவனுக்குப் பரிசாக அனுப்புகிறாள். அவன் வெறுப்படைந்து கிளம்பிவிடுவதாக இருக்கும் கதை. 'பரிசுவந்திருக்கிறது' என்னும் தலைப்பில் இச்சிறுகதை 1970ல் வெளியாகிப் பலராலும் பாராட்டப்பட்டது.தொடர்ந்து தஞ்சை சுகன், தினமணி கதிர் போன்ற இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின. கவிதைகளும் எழுதினார். திண்டிவனத்தில் மருத்துவர், கவிஞர் வகாப் நடத்திய 'குயில்', சென்னை தெசிணி நடத்திய 'கவிதை', கஸ்தூரிரங்கனின் 'கணையாழி' போன்ற இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகின. தொடர்ந்து சிறுகதை, மரபு மற்றும் நவீன கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் என்று எழுதினார். முதல் சிறுகதைத் தொகுதி 'தாயம்மா' பரவலான வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து சங்க இலக்கியம் சார்ந்த செறிவான கட்டுரைகளின் தொகுப்பான 'சிகரங்கள்' ஜெயமோகனின் சிறப்பான அணிந்துரையுடன் வெளியானது. 'சங்க இலக்கியத்தில் உழவு', 'சூளாமணியின் பெருமை', 'இலக்கியத்தில் காதல்' எனப் பல காத்திரமான கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரி வானொலியில் பல ஆண்டுகளாக இவர் நிகழ்த்திய உரைகள் தொகுக்கப்பட்டு 'பெரியோர் சிந்தனை' எனும் பெயரில் நூலாக வெளியாகியுள்ளது. இவரது சிறுகதை, 'சேலத்தார் வண்டி' வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்ட வகுப்பிற்குப் பாடமாக வைக்கப்பட்டது. இவரது படைப்புகளுக்குப் பல்வேறு அமைப்புகளின் பரிசுகளும் கிடைத்துள்ளன. கதைப் பித்தன், பசு மணி போன்ற புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறார்.

சங்கு பத்திரிகைவைணவத்திலும் வளவ. துரையனுக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. சப்தகிரி, ஆலயதரிசனம், திருமால், சொல்வனம் (இணைய இதழ்) இதழ்களில் வைணவம் தொடர்பான பல படைப்புகளைத் தந்திருக்கிறார். இவரது வைணவம் சார்ந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, 'வைணவ விருந்து', 'ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய வைபவம்' எனும் தலைப்புகளில் நூல்களாக வெளியாகியுள்ளன. தனது வைணவ ஈடுபாடு பற்றி வளவ. துரையன், "நான் 1966ல் இலக்கியத்தில் நுழையும்போது எனக்கு வாய்த்த நண்பர்கள் பெரும்பாலும் இறை மறுப்பாளர்கள்தாம். அப்பொழுது திராவிட இலக்கியத் தாக்கம் அதிகம். 1968ல் திருவாரூர் தங்கராசுவை நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து அழைத்துக் கூட்டம் நடத்தினோம். மொத்தச் செலவே நூற்றைம்பது ரூபாய்தான். ஆனால் நான் அடிப்படையில் புராண மரபில் வந்தவனன்று. பட்டிமன்றங்களுக்காகக் கம்பனையும் வில்லியையும் படிக்கத் தொடங்கினேன். புதுவை கம்பன் விழா தொடர்ந்து பதினைந்து ஆண்டுகள் போய்வந்ததில் கம்பன் பிடித்துக்கொண்டான். கடலூர் வந்துசேர்ந்தபோது பெருமாள் கோயிலில் நடந்த வைணவ மாநாட்டிற்கு என்னோடு நெருங்கிய தொடர்பில் இருந்த பெரியார்கள் மறைந்த நூற்கடல் தி.வே. கோபாலையர் மற்றும் இன்றும் 'பேசாத நாளெல்லாம் பிறவாநாளே' என்று கருதும் மதுராந்தகம் ரகுவீர பட்டாச்சார்யார் போன்றோரின் வைணவ உரைகள் கேட்கச் சென்றேன். அத்தொடர்பால் 'வாரம் ஒர் உரை நடத்துங்கள்' எனக் கடலூர் அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில் பொறுப்பாளர்கள் கேட்க, அதற்காக திவ்யப் பிரபந்தம் பழக்கமாயிற்று. வைணவ மாநாடுகள் நடத்துவது, திருப்பாவை மற்றும் கம்பராமாயண உரைகள் ஏற்பாடு செய்வது என்று திசையே மாறிவிட்டது." என்கிறார்.

கவிதை உறவு விழாவில்மகாபாரதம் பற்றிச் சொற்பொழிவாற்றி வரும் அறிஞர்களில் வளவ. துரையனும் ஒருவர். அதுபற்றி அவர், "நான் சுமார் முப்பது ஆண்டுகள் பல சொற்பொழிவுகளைக் கேட்டவன். எனவே என் உரைகளில் புதிய செய்திகள் கிடைக்கும். அது ஓரளவு நாடக பாணியில் இருக்கும். கடலூரில் பதினொரு நாள் மகாபாரதம் உரையாற்றி இருக்கிறேன். தவிர, கம்பராமாயணம் பத்து நாள் மற்றும் திருப்பாவை மார்கழி முப்பது நாள் எனத் தொடர் உரைகள் ஆற்றியுள்ளேன். அது மட்டுமன்று, தொடர் உரையாற்றச் சுமார் ஆறு பேரையாவது நான் உருவாக்கியிருக்கிறேன்" என்கிறார்.

வளவ. துரையன் படைப்புகள்
சிறுகதைத் தொகுப்பு:
தாயம்மா, தேரு பிறந்த கதை, கூச்சம், வளவ. துரையன் கதைகள். (முழுத் தொகுப்பு), வலையில் மீன்கள், சாமி இல்லாத கோயில், அன்று.. இன்று.. இனி, மீண்டும் ஒரு தொடக்கம்.

நாவல்கள்:
மலைச்சாமி, சின்னசாமியின் கதை, இரண்டாவது மதகு.

கட்டுரை நூல்கள்:
சிகரங்கள் (சங்க இலக்கியக் கட்டுரைத் தொகுப்பு), பெரியோர் சிந்தனைகள் (வானொலி உரைத் தொகுப்பு) முக்திநாத் யாத்திரை (பயணநூல்)

சமய நூல்கள்:
வைணவ விருந்து, ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்ய வைபவம்

கவிதை நூல்கள்:
அர. இரசாராமன் ஆற்றுப்படை (மரபிலக்கியம்), பசி மயக்கம் (மரபுக்கவிதை), விடாத தூறலில்... (நவீன கவிதை), ஒரு சிறு தூறல் (நவீன கவிதை), அருள்மிகு வரதராஜப் பெருமாள் போற்றி (மரபுக் கவிதை), அருள்மிகு ஆஞ்சநேயர் போற்றி (மரபுக்கவிதை) அப்பாவின் நாற்காலி (நவீன கவிதை), இயற்கைப் பாவை (மரபுக்கவிதை)

உரை நூல்கள்:
திருக்கோளுர் பெண்பிள்ளை ரகசியம், சீரங்க நாயகியார் ஊசல், முத்தொள்ளாயிரம், ஐங்குறுநூறு,

தொகுப்புநூல்:
அதிகாரம் இழந்த அதிகாரங்கள் (மரபுக்கவிதைகள்)


தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களாகக் கல்கி, சாண்டில்யன், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராசன் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். "தற்கால எழுத்தாளர்களின் எல்லாப் படைப்புகளையும் படிக்கிறேன். இருந்தாலும் மிகவும் பிடித்தவர்கள் என்றால் பாவண்ணன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன் ஆகியோரைக் குறிப்பிடலாம். கவிஞர்களில் அன்பாதவன், சுகிர்தராணி, விக்ரமாதித்யன் ஆகியோரைச் சொல்லலாம். இதில் சில பெயர்கள் விடுபட்டிருக்கலாம்." என்கிறார்.

ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்ய வைபவம் - வெளியீட்டு விழா'சங்கு' என்ற இலக்கியக் காலாண்டிதழை நாற்பதாண்டுக் காலமாக நடத்தி வருகிறார் இவர். "நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி நடத்தியவன். பின்னரும் அவ்வப்போது நடத்தி வந்தேன். நான் பொறுப்பில் இருந்த திருக்குறட் கழகத்தில் எல்லாருமே படைப்பாளிகள். பெரும்பாலும் கவிஞர்கள். எழுதும் படைப்பைப் பிறரிடம் காட்டவேண்டும் அல்லவா? அதற்காகவே 'சங்கு' இதழ் தொடங்கப்பட்டது. அதன் இறுதியில் படித்தவர்கள் கருத்துகளை எழுத இடம் விட்டிருந்தோம். வளவனூர் நூலகத்திலும் அதைப் படிக்க வாய்ப்பளித்தோம். நூலகத்தில் சிலநாள் இருந்தபின் அது பக்கத்துக் கிராமங்களுக்கும் நண்பர்கள் மூலம் சென்றது. கையெழுத்திதழ், பின் ஒளியச்சு இதழ், அதன் பின் உருட்டச்சு இதழ் என்று தொண்ணூற்று ஒன்பது இதழ்கள் நடந்தபின் நூறாவது இதழிலிருந்து அச்சிதழாக வருகிறது. அதில் எழுதிய படைப்பாளிகள் என்று பாவண்ணன், நாஞ்சில்நாடன், தேவதேவன், அன்பாதவன், பழமலய், எஸ்ஸார்சி, முருகேசபாண்டியன், எஸ். சங்கரநாராயணன், ராஜ்ஜா, இறையடியான் போன்றோரைச் சொல்லலாம். கேட்டவுடன் கவிதை அனுப்பிய நீல. பத்மநாபன், கலாப்ரியா ஆகியோரையும் சொல்லவேண்டும். இவர்களின் படைப்புகள் எல்லாமே முக்கியமானவை" என்கிறார். மேலும் பொன்னீலன், சி. மகேந்திரன், பேராசிரியர் சற்குணம், ஹரணி, முருகேசபாண்டியன், முனைவர் தமிழரசி போன்றோரின் நேர்காணல்கள் அவ்விதழில் வெளிவந்துள்ளன.

நாஞ்சில் நாடன், பாவண்ணன் ஆகியோருடன்"இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடிதான். தொன்மம் உட்பட நேற்று நடந்ததைச் சொல்லி நீ கற்றுக் கொள் என்று வாசகனுக்குச் சொல்லலாம். இன்று நடப்பதை யதார்த்தமாகச் சொல்லிப் புரியவைக்கலாம். 'எதிரதாக் காக்கும் அறிவினார்க்கில்லை அதிர வருவதோர் நோய்' என்பதால் வருங்காலத்தில் நடக்கப்போவதையும் உரைக்கலாம். ஆனால், ஒரு மொட்டு தானாக மலர்வதுபோல ஓர் இலக்கியம் வாசகன் மனத்தில் தானாக ஓர் எண்னத்தை விதைக்க வேண்டும்." என்கிறார்.

கடலூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய பாரதிதாசன் விருது, 'சங்கு' இதழுக்காக தமிழ்நாடு சிற்றிதழ்கள் சங்கம் அளித்த நல்லிதழ் விருது, கம்பம் பாரதி இலக்கியப் பேரவை வழங்கிய சிறுகதை நூலுக்கான முதல் பரிசு, சேலம் கே.ஆர்.ஜி. அறக்கட்டளை அளித்த சிறுகதை நூலுக்கான முதல் பரிசு, திருப்பூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய புதினத்துக்கான முதல் பரிசு, சேலம் எழுத்துக் களம் அமைப்பினர் வழங்கிய புதினத்துக்கான முதல் பரிசு, வளவனூர் திருக்குறட் கழகம் மற்றும் தமிழ் இலக்கியப் பேரவையின் பாராட்டு, கடலூர் கவிச்சித்தர் க.பொ. இளம்வழுதி அறக்கட்டளையின் பாராட்டு, கரூர் திருக்குறள் பேரவை வழங்கிய தமிழ் இசைச் சங்கம் மரபுக் கவிதை நூலுக்கு சிறப்புப் பரிசு, கவிஞர் தாராபாரதி அறக்கட்டளை வழங்கிய நவீன கவிதை நூலுக்கான பரிசு, சென்னை என்.தங்கமுத்து நினைவு அறக்கட்டளையினர் வழங்கிய நாவலுக்கான முதல் பரிசு, வள்ளியப்பா இலக்கிய வட்டம் வழங்கிய சிறுவர் பாடலுக்கான பரிசு போன்றவை இவர் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தகுந்தவை.

அழகியசிங்கருடன்மனைவி அலர்மேல் மங்கை இளங்கலை தமிழ் பயின்றவர். இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றிப் பணி ஓய்வு பெற்றவர். மகன்கள் எழிலன் மற்றும் முகிலன் சென்னையில் கணினிப் பொறியாளர்கள். மகள் அல்லி மணமாகிப் புதுக்கோட்டையில் வசிக்கிறார். பணி ஓய்வுபெற்று, மனைவியுடன் கடலூர் கூத்தப்பாக்கத்தில் வசித்து வரும் வளவ.துரையன் கதை, கவிதை, கட்டுரை, நூல் விமர்சனம் என்று தனது இலக்கியப் பயணத்தைத் தீவிரமாகத் தொடர்கிறார். 'இலக்கியச் சோலை' என்ற அமைப்பை நிறுவி இலக்கியப் பணியாற்றி வருகிறார். வளவ.துரையனின் படைப்புகளை sanguithazh.blogspot.com என்ற வலைமனையில் வாசிக்கலாம்.
அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline