Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
ஹரிமொழி
கர்ணன் பிறப்பும் குந்தியின் ஆசிகளும்
- ஹரி கிருஷ்ணன்|மே 2021|
Share:
'மந்திர பலத்தால் என்னை அழைத்த நீ, எனக்குச் சம்மதிக்காவிட்டால் உனக்கு இந்த மந்திரத்தைக் கற்பித்தவரையும் உன் பெற்றோர்களையும் சபித்துவிடுவேன்' என்று சூரியன் கடுமையான வார்த்தைகளைப் பேசியதால் சம்மதித்த குந்தி, கருவுற்றாள். கருவடைந்ததும் உறவினர்களிடத்திலும் பெற்றோரிடத்திலும் உள்ள பயத்தால் தான் கருவடைந்த செய்தியை முற்றிலும் மறைத்தாள். பாரதம் சொல்கிறது: "அழகிய பின்தட்டுள்ளவளும் சிறுமியுமான அந்தக் குந்தியானவள் பந்துக்களிடத்தினின்று உண்டான பயத்தினால் அந்தக் கர்ப்பத்தை மறைத்துத் தரித்து வந்தாள். இவளை சனங்கள் அறியவில்லை. கன்யாந்தப்புரத்தை அடைந்திருப்பவளும் ரஹஸ்யத்தைப் பாதுகாப்பதில் வல்லவளுமான அந்தச் சிறுமியை, வளர்ப்புத் தாயைத் தவிர வேறு ஒரு ஸ்திரீயும் அறியவில்லை. பிறகு சிறந்த காந்தியுள்ள அந்தப் பெண் அந்தத் தேவனுடைய அருளால் உரிய காலத்தில் தெய்வம்போலப் பிரகாசிக்கின்ற ஒரு குழந்தையைப் பெற்றாள்" (வனபர்வம், குண்டலாஹரண பர்வம், அத். 309, பக். 1138). இந்தப் பகுதியை கிஸாரி மோஹன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: And that damsel of excellent hips from fear of her friends, concealed her conception, so that no one knew her condition. And as the damsel lived entirely in the apartments assigned to the maidens and carefully concealed her condition, no one except her nurse knew the truth. And in due time that beauteous maiden, by the grace of deity, brought forth a son resembling a very god.

தமிழில் 'வளர்ப்புத்தாய்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆங்கிலத்தில் nurse என்று சொல்லப்பட்டுள்ளது. சில பதிப்புகளில் இது 'செவிலித்தாய்' என்றும் சொல்லப்பட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் இது குந்திபோஜனுடைய மனைவியான, குந்தியைத் தத்தெடுத்த தாயைக் குறிக்கவில்லை என்பது நிச்சயம். குந்திபோஜனால் நியமிக்கப்பட்ட வளர்ப்புத் தாய் இவள். ரகசியத்தைக் காப்பதில் வல்லவள் என்று பாரதம் இவளைக் குறிப்பிடுகிறது. குழந்தை, சூரியன் கொடுத்திருந்த வரத்தின்படி கவச குண்டலங்களோடு பிறந்தது. தன் ரகசியத்தை அறிந்திருந்த ஒரே பெண்ணான இந்த வளர்ப்புத் தாயுடன் ஆலோசித்துவிட்டு குந்தி, குழந்தையை நதியில் விட்டுவிட நிச்சயித்தாள். இந்த ஒற்றை நிச்சயத்துக்குப் பின்னால் எத்தனையெத்தனை முன்ஜாக்கிரதைகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை பாரதம் விரிவாகவே சொல்கிறது. கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பில் இந்த இடத்தைப் பார்ப்போம்: And no sooner was the beauteous girl delivered of a child, then she consulted with her nurse and placed the infant in a commodious and smooth box made of wicker work and spread over with soft sheets and furnished with a costly pillow. And its surface was laid over with wax, and it was encased in a rich cover. ஆங்கில மொழிபெயர்ப்பில் 306ம் அத்தியாயமாக வரும் இந்தப் பகுதி, தமிழ் மொழிபெயர்ப்பில் 309ம் அத்தியாயத்தில் இடம்பெறுகிறது. அந்தப் பெட்டி, பெரிதாகவும், பிரம்பைப் போன்ற மிதக்கக்கூடிய பொருளால் செய்யப்பட்டதாகவும், நீர்புகாமல் இருப்பதற்காக தேன்மெழுகு பூசப்பட்டதாகவும் இருந்தது என்கிறது பாரதம். 'மெதுவான தோல்களால் விரிக்கப்பட்ட பெட்டி; தொழில் அறிந்த சில்பிகளால் (தச்சர்களால்) செய்யப்பட்டது; பலவிதமான மிதப்புகளால் சேர்த்துக் கட்டப்பட்டது; வழவழப்பானது; அதனுள் எல்லாப் பக்கத்திலும் நல்ல விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன. குந்தி, குழந்தைக்கு மெல்லிய தலையணை ஒன்றை வைத்திருந்தாள் என்றெல்லாம் பாரதம் விவரமாகச் சொல்கிறது.

குழந்தையை வைத்திருந்த பெட்டியை அஸ்வ நதியில் விடுவதற்காக எடுத்து வந்த குந்தியால் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. 'மகனே! உனக்குப் பால் கொடுக்கப் பொகிறவள் பாக்கியம் செய்தவள். உன்னை நதியில் வருணன் காக்கட்டும். எல்லா இடங்களிலும் உன்னுடைய தந்தையான சூரியன் காக்கட்டும்' என்றெல்லாம் மிக விரிவாகச் சொல்லிக் குழந்தையை ஆசிர்வதித்தாள். இன்னது செய்கிறோம், இதன் விளைவு இன்னது என்று உணராமல் ஒரு செயலைச் செய்துவிட்ட ஒரு சிறுமிக்கு, எதிர்பாராதவிதமாகப் பிள்ளை பிறந்து, சமூகக் கட்டாயங்களுக்காக அதை அவள் துறக்க நேர்ந்தபோது அவள் எப்படியெல்லாம் துடித்துப் போனாள் என்பது கவனிக்கத் தக்கது.

அதுமட்டுமல்ல. குழந்தையை வைத்த பேழை நதியின் ஓட்டத்தில் எங்கெல்லாம் செல்கிறது, குழந்தையை எந்த இடத்தில், எந்த நாட்டில், யார் எடுத்துப் போகிறார்கள் என்ற எல்லா விவரங்களையும் அவள் ஒற்றர்கள் மூலமாக அறிந்துகொள்கிறாள் தன்னை மீறிய ஒரு சக்திக்கு ஆட்பட்டு அந்தக் குழந்தையைப் பெற்றிருந்தாலும் குந்தி, பெற்ற குழந்தையை—எல்லோரும் சொல்வதைப்போல—ஏதோ ஆற்றில் எறிந்துவிட்டு அதை மறந்துவிடவில்லை. பேழை, நதியின் ஓட்டத்தில் எங்கெங்கு செல்கிறது, குழந்தையை யார் எடுத்துச் செல்கிறார்கள் என்று எல்லா விவரங்களையும் அவள் ஒற்றர்கள் மூலமாக அறிந்தே இருந்தாள். அப்படியானால், அந்தப் பேழை ஒருவேளை நதியில் மூழ்கியிருந்தாலோ, குழந்தைக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டிருந்தாலோ அதையெல்லாம் அந்த ஒற்றர்கள் கவனித்துச் சரிசெய்யவும் ஏற்பாடு செய்திருந்தாள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அதற்குப்பிறகு அவள் சொல்லும் ஒரு வாக்கியம் மிகவும் முக்கியமானது: 'புத்திரா! நீ எந்த தேசத்திலிருந்தாலும், உன் கவச குண்டலங்களால் நான் உன்னை அறிவேன்'. (Even in foreign lands I shall be able to recognise thee by this mail of thine என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு. இந்தக் கர்ணனைத்தான் குந்தி கவச குண்டலங்களோடு ஆட்டக் களத்தில் பார்க்கிறாள். அந்த ஆட்டக் களத்தில்தான் கர்ணன், அர்ஜுனனை சவாலுக்கு அழைக்கிறான். அவனோடு தொந்த யுத்தம் செய்ய விரும்புவதாகச் சொல்கிறான். தொந்த யுத்தம் என்பது, சமமான வாகனங்களையுடைய, சம பலம் கொண்ட இருவர் செய்யும் யுத்தம். அதுவோ ஆட்டக் களம். அங்கே சமமோ சமமற்றதோ எந்த வகையான யுத்தத்துக்கும் இடமில்லை. That was a place intended for the display of skills, not for wars. அந்த இடத்தில் கவச குண்டலங்களோடு கூடிய கர்ணனைப் பார்த்ததும், குந்தி, 'இவன் தன் மகன்' என்பதை உணர்கிறாள். மூர்ச்சையடைகிறாள். விதுரர் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தைத் தெளிவிக்கிறார். (ஆதி பர்வம், அத். 157)
பிள்ளை பிறந்து சுமார் பதினேழு, பதினெட்டு வருடங்களுக்குப் பின்னால் அவனைத் தன் மகன் என்று உணர்ந்து, அந்த மகன், தன்னுடைய இன்னொரு மகனை, தன் தம்பியைப் போருக்கு அழைப்பதைக் கண்டு, அதைத் தடுக்கவும் முடியாமல் வெளியில் சொல்லவும் முடியாமல் மூர்ச்சையடைந்த பரிதாபத்துக்குரிய ஒரு தாயின் நிலை இது. யுத்தம் தொடங்குவதற்குச் சில காலத்துக்கு முன்னால் இந்த மகனைச் சந்திக்கிறாள். தாய், மகன் இருவருமே உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்த ஒரு கட்டம் அது. அங்கேயும், 'அர்ஜுனனைத் தவிர மற்ற மகன்களைக் கொல்லக்கூடாது' என்று வரம் வாங்கியதாகக் குந்தியின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அது குந்தி கேளாமல், கர்ணனே தந்த வாக்குறுதி. வரமில்லை. அதையெல்லாம் பின்னால் உத்தியோக பர்வத்தில் பார்க்கலாம்.

இப்போது கர்ணனுடைய கவச குண்டலங்களை அந்தணன் வடிவத்தில் இந்திரன் யாசிப்பதற்காக வந்த அந்தக் கட்டத்துக்குத் திரும்புவோம். இந்திரன் ஏன் அர்ஜுனனுக்கே தெரியாமல் கர்ணனுடைய கவச குண்டலங்களை யாசிக்க வந்தான் என்பதற்கும் காரணம் இருக்கிறது. இந்த முக்கியமான செய்தி, குண்டலாஹரண பர்வத்தின் தொடக்கத்தில் ஜனமேஜயருக்கும் வைசம்பாயனருக்கும் நடக்கும் உரையாடலில் வெளிப்படுகிறது. அதைப் பார்ப்போம்:

"ஜனமேஜயர், 'பிராமணரே! (மந்திரங்களை) ஜபிக்கிறவர்களுள் சிறந்தவரே! உன் மனத்திலிருக்கிறதும் மிகப் பெரிதும் ஒருவரிடத்திலும் நீ சொல்லாததுமான பயத்தையும் தனஞ்சயன் இவ்விடத்திலிருந்து (தேவலோகத்திலிருந்து) புறப்பட்டுப் போனவுடன் போக்குவேன்' என்று இந்திரன் சொல்லியதாகப் பாண்டுபுத்திரரான யுதிஷ்டிரரைக் குறித்து அப்பொழுது லோமசர் பெரிய வாக்கியமாகக் கூறியதும் கர்ணனைப் பற்றியதும் பெரிதுமான பயம் என்ன இருந்தது? அந்தப் பயத்தைத் தர்மாத்மாவான யுதிஷ்டிரர் ஏன் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்?' என்று வினவ, வைசம்பாயனர் சொல்லலானார்."

"ராஜஸ்ரேஷ்டரே! நான், கேட்கின்ற உமக்கு இந்த கதையைச் சொல்லுகிறேன். பரதர்களுள் சிறந்தவரே! என்னுடைய வசனத்தைக் கேளும். பன்னிரண்டு வருஷங்கள் சென்று பதின்மூன்றாவது வருஷம் வந்தவுடன், பாண்டவர்களுக்கு நன்மையைச் செய்பவனான இந்திரன், கர்ணனை யாசிப்பதற்காக முயன்றான்." (வனபர்வம், குண்டலாஹரண பர்வம், அத். 301, பக். 1117)

போரி பதிப்பில் இதை பிபேக் தேப்ராய் பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: Janamejaya asked, 'O great brahmana! When Lomasha conveyed Indra's message to Pandu's son, Yudhishthira, he spoke these words. "When Savyasachi has gone from here, I will remove the terrible fear that you do not talk about." O foremost among learned ones! What was that great fear concerning Karna? Why did the great-souled one not talk about it to anyone?' Vaishampayana said, 'O tiger among kings! Since you have asked, I will tell you about it. O best of the Bharata lineage! Listen to my words. When twelve years were over and the thirteenth year had started, Shakra wished to ensure the welfare of the Pandavas and went begging to Karna. (Bibek Debroy. The Mahabharata, pp. 563-564; Penguin Books Ltd. Kindle Edition.)

அதாவது, அர்ஜுனன் தேவலோகத்திலிருந்தபோது, யுதிஷ்டிரர், கர்ணன் மீது தனக்கு இருக்கும் அச்சத்தைக் குறித்து இந்திரனிடம் தெரிவித்திருந்தார். 'அர்ஜுனன் இந்திரலோகத்திலிருந்து புறப்பட்டுப் போனபிறகு உன்னுடைய அச்சத்தைப் போக்குகிறேன்' என்று தர்மபுத்திரருக்கு இந்திரன் உறுதிமொழி கொடுத்திருந்தான். அதன்படி இப்போது கர்ணனிடத்தில் அவனுடைய கவச குண்டலங்களை யாசிக்க வந்திருக்கிறான். 'யார் வந்து என்னை யாசித்தாலும் நான் இல்லையென்று சொல்லமாட்டேன்' என்று கர்ணன் சபதம் செய்திருந்தான். ("அப்பொழுது கர்ணன் அந்தத் துரியோதனனைப் பார்த்து, 'ராஜகுஞ்சர! என் சொல்லைக் கேள். அர்ஜுனன் கொல்லப்படுகிற வரையில் நான் கால்களை அலம்புகிறதில்லை; மாம்ஸத்தைப் பக்ஷிக்கிறதில்லை; மதுவில்லாமல் உண்கிற விரதத்தைக் கைக்கொள்ளுவேன். எவனால் யாசிக்கப்பட்டாலும் நான் இல்லை என்கிற சொல்லைச் சொல்லமாட்டேன்' என்று சொன்னான்" (வனபர்வம், கோஷயாத்ரா பர்வம் அத். 258, பக். 957) என்பது கர்ணனுடைய சபதம். காண்க: 'கர்ணன் வள்ளலான கதை'

கர்ணன் அந்தணர்களிடத்தில் பெரிய மரியாதை வைத்திருந்தவன் என்பதனால், '(அந்தணன் யாசித்தால் கர்ணனால் மறுக்க முடியாது' என்ற காரணத்துக்காக) இந்திரன் அந்தணக் கோலத்தில் வந்தான். தர்மபுத்திரனுக்குக் கர்ணனிடத்தில் ஏற்பட்டிருந்த அச்சத்தைப் போக்குவதற்காகவே இந்திரன் இவ்வாறு செய்தான் என்பதும், அர்ஜுனனுக்கு இது தெரியாது என்பதும் நோக்கத் தக்கன. இந்திரன் இவ்வாறு வருகிறான் என்பதை அறிந்த சூரியன் கர்ணனுடைய கனவில் வந்து அவனை எச்சரித்தான். கர்ணனுக்கு, சூரியன்தான் தன்னுடைய தகப்பன் என்ற விவரம் இதுவரையில் தெரியாது. சூரியனுடைய எச்சரிக்கையையும் கர்ணனுடைய மறுமொழியையும் அடுத்ததாகப் பார்க்கலாம்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline