Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | வாசகர்கடிதம் | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
சுந்தரபாண்டியன் (காவ்யா சண்முகசுந்தரம்)
- அரவிந்த்|ஏப்ரல் 2021|
Share:
எழுத்தாளர், ஆய்வாளர், பதிப்பாளர், பேச்சாளர், பேராசிரியர், பத்திரிகை ஆசிரியர் எனப் பல திறக்குகளிலும் குறிப்பிடத்தகுந்த சாதனைகளை நிகழ்த்தியிருப்பவர் சுந்தரபாண்டியன் என்னும் காவ்யா சண்முகசுந்தரம். இவர் டிசம்பர் 30, 1949 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இருக்கந்துறையில் சுடலைமுத்துத் தேவர் - இசக்கியம்மாள் இணையருக்கு மூத்தமகனாகப் பிறந்தார். காலாங்கரையில் தொடக்கக் கல்வியை முடித்து, உயர்நிலைக் கல்வியை வடக்கன்குளத்தில் பயின்றார். பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் தமிழில் இளங்கலைப் பட்டப்படிப்பை நிறைவுசெய்த பின், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியம் பயின்று தேர்ந்தார். இளவயது முதலே தேடித்தேடி நூல்களை வாசிக்கும் வழக்கம் இருந்தது. கவிதை மிகவும் ஈர்த்தது. நிறையக் கவிதைகளை எழுதினார். 1972ல் தனது கவிதைகளைத் தொகுத்து, 'கதம்பம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

கல்விமீதும், நாட்டுப்புற ஆய்வுகளின் மீதும் இருந்த ஆர்வம் காரணமாக, சென்னைப் பல்கலையில் 'திருநெல்வேலி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்களில் சமுதாய அமைப்பு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். நாட்டுப்புறவியல் குறித்த தனது ஆய்வை 'நாட்டுப்புற இயல்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார். 1975ல் மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட அந்த நூல்தான் இவரது முதல் ஆய்வுநூல். தொடர்ந்து, இலக்கிய மாணவர் வெளியீடு அமைப்பின் உறுதுணையுடன், 1976ல், 'நாட்டுப்புற இலக்கியத்தின் செல்வாக்கு' என்ற நூலை வெளியிட்டார். நாட்டுப்புற இலக்கியங்களின்மீது பலரது கவனம் திரும்ப இந்த நூல்கள் காரணமாயின.

இலக்கிய வீதி விருது



1978ல் பெங்களூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில், தமிழ்ப் பேராசியராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. இலக்கிய வளர்ச்சிக்காக 'படிகள்', 'இங்கே இன்று', 'வித்யாசம்', 'தன்னனானே' போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தொடர்ந்து நாட்டுப்புற இயல் குறித்த பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டார். 1981ல், தனது மகளின் பெயரில் 'காவ்யா' பதிப்பகத்தை ஆரம்பித்தார். இவரது முதல் நாவல், 'கன்னடியர் மகள்' 1982ல், காவ்யா பதிப்பகம் மூலம் வெளியானது. தொடர்ந்து 'திப்புசுல்தான்', 'சாணக்கியன்' போன்ற நாவல்களை எழுதினார்.

1993ல், இவர் எழுதிய 'ஆராரோ' நாவல் இலக்கிய உலகில் வெகுவாகப் பேசப்பட்டது. இந்நாவல் பற்றி சுஜாதா, "ஆராரோவில் நான் ரசித்தது இரண்டு விஷயங்கள். நாவல் முழுவதும் லேசான கொச்சையில் எழுதப்பட்டிருந்தாலும் இலக்கிய மதிப்பில் தாழவில்லை.... நான் என்னை அறியாமல் வாய்விட்டுச் சிரித்து ரசித்த பகுதிகள் இந்த நாவலில் உள்ளன. நினைவிருக்கட்டும்; ஒரு எழுத்தாளனைச் சிரிக்க வைப்பது ரொம்ப கஷ்டம்" என்கிறார். சிறுகதைகளின் மீதும் ஆர்வம் கொண்டிருந்த சுந்தரபாண்டியன், தனது சிறுகதைகளைத் தொகுத்து 'களவு' என்ற தலைப்பில் 1995ல் வெளியிட்டார். அதுதான் இவரது முதல் சிறுகதைத் தொகுதி. தனது சிறுகதைகளை இவர் பத்திரிகைகளிலும் வெளியிடவில்லை. நேரடியாகவே புத்தகமாக்கி வெளியிட்டார். அதுவே இவரது தனித்த அடையாளம் என்றும் சொல்லலாம்.



முதல் நாடக நூல் 'அக்னி' 1998ல் வெளியானது. சிறுகதை, நாவல், நாடகம் மட்டுமல்லாது ஆய்வு சார்ந்து, சமூகம் சார்ந்து பல்வேறு நூல்களை எழுதி வெளியிட்டார். சிறந்த ஆய்வு நூல்கள் பலவற்றைத் தனது காவ்யா பதிப்பகம் மூலம் வெளியிட்டுப் பலரை ஊக்குவித்தார். 'Folklore' என்ற சொல்லுக்கு 'நாட்டுப்புறவியல்' என்ற மொழியாக்கத்தை உருவாக்கியவர் காவ்யா சண்முகசுந்தரம்தான்.

"சுந்தரபாண்டியனின் சிறுகதைகள் உணர்வுபூர்வமாக, நிஜமென்ற நம்பகத்தன்மையைக் காட்சியாலும், மொழியாலும், பேச்சாலும் சம்பவங்களாலும் கொண்டு இருக்கின்றன. சாதாரணம் போல பாவனை தரும் சிறுகதைகள், மரபு என்னும் வளத்தோடு சேர்ந்து போய் மேலும் பலவிதத்திலும் அர்த்தம் கொள்ள வைக்கின்றன" என்று இவரது சிறுகதைகளை மதிப்பிடுகிறார் சா. கந்தசாமி. வெங்கட் சாமிநாதனும் சுந்தரபாண்டியனின் படைப்புகளை வெகுவாகப் பாராட்டியுள்ளார். அவருடைய போக்கிற்கு மாறுபட்ட விமர்சனத்தை முன்வைக்கும் கோவை ஞானியாலும் சிலாகித்துப் பாராட்டப்பட்டவை சுந்தரபாண்டியனின் எழுத்துக்கள். கி. ராஜநாராயணன், தி.க. சிவசங்கரன், நீல. பத்மநாபன், நகுலன், பாவண்ணன், தமிழவன், கோமல் சுவாமிநாதன் எனப் பலர் இவரது படைப்புகளைச் சிலாகித்துள்ளனர்.

தன் கதைகள் பற்றிச் சுந்தரபாண்டியன், "நானும் என்னோடு வாழ்ந்தவர்களும் வாழ்கின்றவர்களும் ஏன் வாழப் போகிறவர்களும் கூட என் கதைகளில் முகம் காட்டத்தான் செய்வார்கள். ஏனென்றால், நான் என் கதைகளை வெளிநாட்டுக் கதைகளைப் படித்தோ, வெளியாட்களின் கதைகளைக் கேட்டோ, அதிர்ச்சி அளிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடோ, அந்தரங்க ஆசைகளின் வடிகால்களாகவோ, கனவுகளின் பீறல்களாகவோ, காசு சேர்க்கும் உத்தியாகவோ எழுதிக் குவிக்கவில்லை" என்கிறார். மேலும் அவர், "நான் கதை எழுதிப் பிழைப்பு நடத்துபவன் அல்லன்; அல்லது கதைமூலம் எனது புஜ பல பராக்கிரமங்களைக் கடை விரிப்பவனும் அல்லன். ஒரு கதைசொல்லி. இது உங்களுக்காக மட்டுமல்ல; எனக்காகவும் கூடத்தான்" என்கிறார். எழுத்துப்பற்றி இவர் கூறும், "எழுத்து வரம்; எழுதுவது தவம்; எழுதுபவன் பிரம்மா... இதெல்லாம் கனவான்களின் கப்ஸா: அறிவுஜீவிகள் தரும் அல்வா; என்னைக் கேட்டால் எழுத்து ஒரு பிரசவம். அவ்வளவுதான்" என்ற வரிகள் சிந்திக்க வைக்கின்றன.



'ஆறுமுகம்' என்ற சாகாவரம் பெற்ற ஒரு கதாபாத்திரத்தைத் தனது பல படைப்புகளில் உயிர்ப்புடன் உலவ விட்டிருக்கிறார் சுந்தரபாண்டியன். பள்ளி மாணவன், கல்லூரி மாணவர், வேலை தேடும் பட்டதாரி இளைஞர், திருமணமான நடுத்தர வயது ஆண், வியாபாரி, ஆசிரியர், வங்கிப் பணியாளர், கூலித் தொழிலாளி, விரிவுரையாளர் என்று புனைவுகளில் பலமுகம் காட்டும் ஆறுமுகம், சுந்தரபாண்டியனைப் பிரதிபலிக்கும் ஒரு புனைவு அவதாரமே! மண்ணின் மணம் கமழும் கதைகளை உயிர்ப்புடனும் துடிப்புடனும் எழுதுகிறவராக இவரை மதிப்பிடலாம். வாசகனை ஈர்த்துப் படைப்பிற்குள் அமிழ்த்திவிடும் ஆற்றல் இவரது படைப்புகளுக்கு இருக்கிறது. வாசிக்க வாசிக்கக் காட்சிகளாக விரியும் தன்மை மிக்கவையாய், உண்மைகளை முகத்தில் அறையும்படி அதே சமயம் மிகையேதும் இல்லாமல் கண்முன் வைப்பனவாய் இவரது படைப்புகள் அமைந்துள்ளன. கிராமத்து மனிதர்களோ, நகரத்து மனிதர்களோ தனது படைப்புகளில் அவர்களை உயிர்ப்புடன் உலவ விடுகிறார். அந்த உயிர்ப்புத்தன்மையே இவரது எழுத்தின் பலம் என்றும் சொல்லலாம். திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சென்னை, பெங்களூரு என்று கிராமங்கள், நகரங்கள், அவற்றில் வாழும் மனிதர்கள், அவர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள், குடும்பம், உறவுகள், சிக்கல்கள், சிடுக்குகள், சந்தோஷங்கள் என்று மானுடர்களின் வாழ்க்கையைப் பாசாங்கற்றுக் காட்சிப்படுத்துகிறார். கிராமங்கள் நகர மயமாவதால் ஏற்படும் பிரச்சனைகள், கூட்டுக்குடும்பம் குலைவதால் ஏற்படும் சிக்கல்கள், வழிவழியாகத் தொடரும் நாட்டுப்புறப் பண்பாடுகள் என ஒரு பண்பாட்டுக் கலவையாய் இவரது படைப்புகள் மிளிர்கின்றன. தனது படைப்புகளில் நெல்லை வட்டார வழக்கை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.

படைப்புகள்
கவிதைத் தொகுப்புகள்: கதம்பம், பகல் கனவுகள், மேலும் பகல் கனவுகள்
சிறுகதைத் தொகுப்புகள்: களவு, வரம், அம்மா, சாபம், சுந்தரபாண்டியன் சிறுகதைகள் (சிறுகதைகளின் முழுத் தொகுப்பு)
நாவல்கள்: கன்னடியர் மகள், திப்புசுல்தான், சாணக்கியன், ஆராரோ, அந்தி
நாடகம்: அக்னி
பதிப்பித்த, தொகுத்த நூல்கள்: பி.யு. சின்னப்பா, அண்ணா திரை, பாரதிராஜா, வைரமுத்து வரை, காலந்தோறும் கண்ணகி கதைகள், நீலபத்மநாபம், முன்றில், பகதூர் வெள்ளை, நாட்டாரியம், சங்க இலக்கிய வரலாறு, வேலு நாச்சியார், சி.சு. செல்லப்பா - இலக்கியத் தடம், வைரமுத்து - இலக்கியத் தடம், கலைஞர் - இலக்கியத் தடம், தஞ்சை பிரகாஷ் கட்டுரைகள், மருதநாயகம், தமிழில் நாட்டுப்புறப் பாடல்கள், நாட்டுப்புற இயல் சிந்தனைகள், வள்ளுவர்கள், தமிழில் வட்டார நாவல்கள், பாவேந்தரின் தமிழ்ப் போராட்டங்கள், நாட்டுப்புறவியல் - உளவியல் பார்வை, சுடலைமாடன் வழிபாடு, திருக்குறள் காவ்யா உரை, நகுலன் கவிதைகள், உடுமலை நாராயணகவி பாடல்கள், நெல்லைச் சிறுகதைகள், சென்னைச் சிறுகதைகள், பெங்களூர் சிறுகதைகள், தஞ்சை பிரகாஷ் கதைகள், க.நா.சு. கதைகள் (இரண்டு பாகங்கள்), பம்மல் சம்பந்தம் நாடகக் களஞ்சியம், பல்கலைத் தமிழ் தெ.பொ.மீ., ரசிகமணி ரசனைத் தடம், இராஜராஜ சோழன், திருத்தொண்டர் காப்பியத்திறன், தமிழ் நாடக சரித்திரம், முதல் விடுதலை வீரர் பூலித்தேவர், பசும்பொன் கருவூலம், பசும்பொன் களஞ்சியம், பசும்பொன் பெட்டகம், பசும்பொன் சரித்திரம், அ.ச.ஞா. இலக்கியக் கலை, கம்பன் கலை, வேலுநாச்சியார், விந்தன் கதைகள், விந்தன் கட்டுரைகள், விந்தன் நாடகங்கள், கவி கா.மு. ஷெரீப் கதைகள், கவி கா.மு. ஷெரீப் கவிதைகள், கவி கா.மு.ஷெரீப் கட்டுரைகள், வ.ரா. கட்டுரைக் களஞ்சியம், வ.ரா. கதைக் களஞ்சியம், ராமாமிர்தம் (இரண்டு தொகுதிகள்), நகுலன் படைப்புகள் (ஐந்து பாகங்கள்), அகத்தாரும் புறத்தாரும், பெண் வாசனை மற்றும் பல.


இவரது 'சுடலைமாடன் வழிபாடு' ஆய்வு நூலுக்கு, சிறந்த ஆய்வுக்கான தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் பரிசு கிடைத்தது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு, "நாட்டுப்புறத் தெய்வங்கள்: களஞ்சியம் - அம்மன் முதல் விருமாண்டி வரை" நூலுக்குக் கிடைத்துள்ளது. இவரது 'களவு' சிறுகதை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு, புகழ்பெற்ற 'பாரதீய சாகித்யா' இதழில் வெளியானது. 'களவு' சிறுகதைத் தொகுப்பு தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றது. 'வரம்' சிறுகதைத் தொகுப்பு கோவை லில்லி தேவசிகாமணி பரிசு பெற்றது. 'ஆராரோ' நாவலுக்குச் சிறந்த நாவலுக்கான விருதை கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிச் சிறப்பித்தது. நீலகிரி தமிழ்ச்சங்கமும், புதிய பார்வை இதழும் இணைந்து நடத்திய நாவல் போட்டியிலும் இந்நாவல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. 'அந்தி' நாவலுக்குத் திருப்பூர் கலை இலக்கியப் பேரவை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பரிசு கிடைத்தது. 'அக்னி' நாடகத்தை, 1998ன் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுத்து திருப்பூர்த் தமிழ்ச்சங்கம் சிறப்புச் செய்தது.



இவரது சிறுகதைகள் ஆங்கிலம், ஹிந்தி, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது படைப்புகள் கல்லூரிகளில் பாடநூலாகவும் இடம்பெற்ற சிறப்பையுடையன. அறிஞர் அண்ணா, உடுமலை நாராயணகவி பற்றி இவர் எழுதிய நூல்களை சாகித்ய அகாதமி வெளியிட்டுள்ளது. இவரது ஆய்வு நூல்கள் சிலவற்றை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பதிப்புப் பணிக்காக 'உ.வே.சா. விருது' பெற்றுள்ளார். இவரது படைப்புகளை ஆராய்ந்து பலர் எம்.ஃபில்., பிஹெச்.டி. பட்டங்கள் பெற்றுள்ளனர். 'சுந்தர பாண்டியன்', 'காவ்யா சண்முகசுந்தரம்' என்ற பெயரில் மட்டுமல்லாது, 'எஸ்.எஸ். சுந்தர்', 'காக்கரை சுந்தரம்' போன்ற புனைபெயர்களிலும் எழுதியிருக்கிறார். இவரால் 1981ல் தொடங்கப்பட்ட காவ்யா பதிப்பகம் கதை, கவிதை, கட்டுரை, நாவல், நாடகம், திரைப்பட ஆய்வுகள், இலக்கிய விமர்சன நூல்கள், ஆய்வு நூல்கள், விமர்சன நூல்கள் என இதுவரை 800க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் பரிசு உள்பட 30க்கும் மேற்பட்ட விருதுகளை, பரிசுகளை 'காவ்யா பதிப்பகம்' பெற்றுள்ளது.

2006ல் விருப்ப ஓய்வு பெற்றார் சுந்தர பாண்டியன். அதன்பின் தீவிரமாகப் பதிப்புப்பணியில் ஈடுபட்டார். செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பல்வேறு ஆய்வுப் பணிகளை முன்னெடுத்தார். 'நாட்டுப்புற அரங்கியல்', 'காலந்தோறும் கண்ணகி கதைகள்', 'நாட்டுப்புற தெய்வங்கள் வழிபாடும் பண்பாடும்' போன்றவை அவற்றில் முக்கியமானவை. சென்னை குறள் பீடத்தில் செயற்குழு உறுப்பினராகப் பணிபுரிந்திருக்கிறார். சாகித்ய அகாதெமியில் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தகைசால் பேராசிரியரும் கூட.



தான் பேசுவதைவிட, தனது படைப்புகள் பேசட்டும் என்ற சிந்தனைப் போக்கு உடையவர் காவ்யா சண்முகசுந்தரம். 70 வயதைக் கடந்தாலும் எழுத்து, ஆய்வு, பதிப்பு, பத்திரிகை, படைப்பிலக்கியம் என்று, இன்றும் ஓர் இளைஞரைப்போல உற்சாகமாகச் செயல்பட்டு வரும் இவர், மனைவி முத்துலட்சுமியுடன் சென்னையில் வசிக்கிறார். ஒரே மகன் முத்துக்குமார், மகள் டாக்டர் காவ்யா.

தமிழ் இலக்கிய உலகிற்கு காத்திரமான பங்களிப்பைத் தந்திருக்கும் காவ்யா சண்முகசுந்தரத்தின் நூல்களும், காவ்யா பதிப்பகமும் ஆய்வாளர்களின், ஆய்வு மாணவர்களின் வேடந்தாங்கல் என்றால் மிகையில்லை.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline