Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2021 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | பொது | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்கச் சிரிக்க | அஞ்சலி
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்
- பா.சு. ரமணன்|மே 2021|
Share:
ஞானிகளின் வாழ்க்கை புனிதமானது மட்டுமல்ல, புதிரானதும் கூட. சாதாரண மானுட அளவுகோல்களுக்கு அப்பாற்பட்ட மனிதப் புனிதர்கள் அவர்கள். மானுடம் உயர்த்தி மக்களின் சிந்தனைகளை மேல்நிலைக்கு உயர்த்துவதே அவர்களின் அவதார நோக்கம். பாரதத்தில் இப்படி எண்ணற்ற மகான்கள், யோகிகள், ஞானிகள் வாழ்ந்து மறைந்துள்ளனர். அவர்களுள் ஒருவர் ஸ்ரீ குமரகுருபரர்.

தோற்றம்
ஸ்ரீ வைகுண்டத்தை அடுத்த கைலாசபுரத்தில் வாழ்ந்து வந்தவர் சண்முக சிகாமணிக் கவிராயர். பெரும்புலவரான இவர் மிகுந்த சிவபக்தி உடையவர். சைவத்தைப் போற்றித் தொழுபவர். சைவ வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். அறநெறி வழுவாது வாழ்ந்தவர். இவரது மனைவி சிவகாமி அம்மையார். இவர்களது இனிய இல்லற வாழ்க்கையில் இவர்களுக்கு இருந்த ஒரே குறை புத்திரப் பேறின்மைதான்.

தங்கள் குறையைப் போக்கவேண்டி, குலதெய்வமான திருச்செந்தூர் முருகப் பெருமானுக்கு விரதமிருந்து வழிபட்டார்கள். நல்லது நடப்பதற்கு வேளை வரவேண்டுமல்லவா? அந்த வேளையும் வந்தது. சிவகாமி அம்மை கருவுற்றார். பத்தாவது மாதம், பொது சகாப்தம் 1615ல் ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்த குழந்தை அழவே இல்லை. நாளடைவில் சரியாகிவிடும் என்று பெற்றோர் நினைத்தனர். குழந்தைக்கு முருகப் பெருமானின் பெயரான 'குமரன்' என்ற பெயரைச் சூட்டி அன்புடன் வளர்த்தனர். குழந்தை வளர்ந்தது. சிரித்தது. கை, காலை அசைத்து, உதைத்து விளையாடியது. ஆனால், பேச்சு மட்டும் வரவில்லை.

முன் நின்ற முருகன் அருள்
குழந்தைக்கு ஐந்து வயதானது. எந்த மாற்றமும் இல்லை. ஆகவே குழந்தையுடன் தங்கள் குலதெய்வமான செந்தூர் முருகன் ஆலயத்திற்குச் சென்றனர். அங்குள்ள சண்முக விலாசம் என்னும் ஆலய முன்மண்டபத்தில் தங்கினர். தினந்தோறும் விரதமிருந்து முருகனை வழிபட்டனர். ஒரு மண்டலம் அவர்கள் விரதமிருந்தும் பலனில்லை. மிகவும் மனம் நொந்த அவர்கள், மறுநாள் காலை குழந்தை பேசாவிட்டால் கடலுள் பாய்ந்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுத்துவிட்டு உறங்கச் சென்றனர்.

ஆனால், குழந்தை குமரனுக்கு உறக்கம் வரவில்லை. அவன் அங்கும் இங்கும் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அங்கே பேரொளி ஒன்று தோன்றியது. ஒளிக்கு ஒளியான ஒளியான் அங்கே காட்சியளித்தான். ஆம், முருகனின் அருட்காட்சி அக்குழந்தைக்குக் கிட்டியது. கண்களில் கண்ணீர் சொரிய, வாய் பேசமுடியாத அக்குழந்தை, ஜோதிக்கெல்லாம் ஜோதியான பேரொளியைக் கண்டு தன் இருகரம் கூப்பித் தொழுதது.

காசியில் ஸ்ரீ குமாரசுவாமி மடம்



கந்தர் கலிவெண்பா
குறுநகையுடன் காட்சி அளித்த முருகப் பெருமான் குழந்தையை நோக்கி, 'நீ யார்?' என்று கேட்டார். அதுவரை பேசாமல் மௌனியாய், ஊமையாய் இருந்த குழந்தை, 'அடியேன்' என்று சொல்லி முருகனைத் தொழுது வணங்கி நின்றது. முருகப் பெருமானின் காலடி பணிந்து எழுந்தது. முருகப் பெருமான் குழந்தையை 'குருபரா' என்று அன்போடு அழைத்து, நாவில் சடாக்ஷர மந்திரமெழுதி ஆசிர்வதித்து மறைந்தார்.

முருகப் பெருமானின் அருட்காட்சியும் ஆசியும் கிடைத்த அந்தக் கணம் முதல் பேச்சு மட்டுமல்ல; உலக ஞானம் அனைத்தும் ஓதாது கை வந்தது குமரனுக்கு. வாயளித்த வள்ளலை வாயாரப் பாடினார் அவர்.

பூமேவு செங்கமலப் புத்தேளுந் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
நாதமுநா தாந்த முடிவு நவைதீர்ந்த
போதமுங் காணாத போதமாய்


எனத் தொடங்கிக் 'கந்தர் கலிவெண்பா'வாக அது முகிழ்த்தது.

பொழுது விடிந்தது. குழந்தைக்குப் பேச்சு வந்தது குறித்துப் பெற்றோர்கள் மகிழ்ந்தனர். முருகப் பெருமானின் திருவருளை எண்ணி வியந்தனர். குருவருள் பெற்ற குமரனை, 'குமரகுருபரன்' என்று அழைத்தனர். அப்பெயரே நிலைத்தது.

முருகனின் திருவருளால் அனைத்தையும் ஓதாதுணர்ந்த குமரகுருபரர், தன் ஊரில் எழுந்தருளியிருக்கும் கைலாசநாதர் மீது 'கயிலைக் கலம்பகம்' என்ற நூலைப் பாடியருளினார். தூய தவநெறி வாழ்வை மேற்கொள்ள விரும்பிய அவர், பெற்றோரின் அனுமதி பெற்று திருத்தலந்தோறும் சென்று இறைவனைத் தொழுதார். ஒரு சமயம் திருச்செந்தூர் சென்றபோது, தனக்குத் தக்கதொரு குருவைக் காட்டி அருளுமாறு முருகப் பெருமானிடம் வேண்டிக் கொண்டார். "உனது குருவை நீ காணும்போது அவரது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலை ஏற்பட்டு நீ மௌனியாவாய். அவரையே உனது குருவாகக் கொள்வாய்" என்னும் முருகனின் அருள்வாக்கு அவருக்குக் கிடைத்தது.

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்
முருகனின் வாக்கைப் பெற்ற நிறைவுடன் பயணத்தைத் தொடர்ந்தார் குமரகுருபரர். மதுரை திருத்தலத்தை அடைந்தார். மீனாட்சி அம்மையை தரிசனம் செய்தார். குமரகுருபரரது புகழைக் கேள்விப்பட்ட திருமலை நாயக்க மன்னர், அவரை அரசவைக்கு அழைத்து கௌரவித்தார். அன்னைமீது பாடல் புனையுமாறு வேண்டினார். குமரகுருபரர் மீனாட்சி அம்மன் சன்னதியில் 'மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்' என்னும் நூலை அரங்கேற்ற, அதனை அப்பாட்டுடைத் தலைவியாகிய மீனாட்சி அன்னையே, ஆலய அர்ச்சகரின் குழந்தை வடிவில் வந்து மன்னன் மடியில் அமர்ந்து கேட்டாள்.

தொடுக்கும் கடவுட் பழம்பாடல்
தொடையின் பயனே நறைபழுத்த
துறைத்தீந் தமிழின் ஒழுகுநறுஞ்
சுவையே அகந்தைக் கிழங்கையகழ்ந்து
எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்
கேற்றும் விளக்கே வளர்சிமைய
இமயப் பொருப்பில் விளையாடும்
இளமென் பிடியே எறிதரங்கம்
உடுக்கும் புவனம் கடந்துநின்ற
ஒருவன் திருவுள் ளத்தில்அழகு
ஒழுக எழுதிப் பார்த்திருக்கும்
உயிரோ வியமே மதுகரம்வாய்
மடுக்கும் குழற்கா டேந்தும்இள
வஞ்சிக் கொடியே வருகவே
மலையத் துவசன் பெற்றபெரு
வாழ்வே வருக வருகவே!


என்ற பாடலைக் குமரகுருபரர் அரங்கேற்றும்போது மனம் மகிழ்ந்த அன்னை, மன்னனின் கழுத்திலிருந்த மணிமாலையைக் கழற்றி அதனைக் குமரகுருபரரின் கழுத்தில் அணிவித்துவிட்டு மறைந்தார். அது கண்டு அனைவரும் வியந்தனர். குமரகுருபரரைப் பணிந்தனர். தொழுதனர்.

ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள்



நீதிநெறி விளக்கம்
தொடர்ந்து அன்னை மீனாட்சி மீது மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை போன்ற நூல்களை இயற்றினார் குமரகுருபரர். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி அரசனுக்கும் மக்களுக்கும் எது நீதி என்பதைப் போதிக்கும் வகையில்

நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று


என்று துவங்கும், 'நீதிநெறி விளக்கம்' என்ற நூலையும் இயற்றியருளினார்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்


என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற நூலும் அதுதான். அம்மையைப் பாடியவரை, அப்பனையும் பாடும்படி மன்னர் வேண்ட, 'மதுரைக் கலம்பகம்' பாடி மதுரை மன்னவன் சிவபெருமானைத் தொழுதார் குமரகுருபரர். பின் மன்னரிடம் விடைபெற்று தனது திருத்தல யாத்திரையைத் தொடர்ந்தார்.

சிராப்பள்ளியில்...
திருச்சிராப்பள்ளியை அடைந்தார் குமரகுருபரர். அப்பகுதியை அப்போது ஆண்டு வந்த நாயக்க மன்னர் இவரைப் பணிந்து வரவேற்றார். அங்கு சில நாட்கள் தங்கினார். பின் திருவரங்கத்தில் அஷ்டப் பிரபந்தம் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரைச் சந்தித்து உரையாடி மகிழ்ந்தார். சமயவாதிகள் பலரது வேண்டுகோளுக்கிணங்க, பிள்ளைப் பெருமாள் ஐயங்காருடன் சமய வாதம் நிகழ்த்தி வென்றார்.

குருவைத் தேடி...
பல தலங்களைத் தரிசித்துவிட்டுத் தருமபுரம் சென்றார். அத்தலத்தின் ஆதீனகர்த்தர் மாசிலாமணி தேசிகரால் வரவேற்கப்பட்டார். ஆதீனகர்த்தர் இவரிடம், பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குருபரரும் தகுந்த விடைகளை அளித்து அவரை மகிழ்வித்தார். இறுதியில் தேசிகர்,

ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடு மானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்


என்ற பெரியபுராணப் பாடலைக் கூறி, அதன் அனுபவப் பொருளை விளக்குமாறு கேட்டுக் கொண்டார்.

திகைத்துப் போனார் குமரகுருபரர். அது தில்லையில் உறையும் அம்பலக் கூத்தனின் ஆனந்த நாட்டியத்தைக் கண்டு வார்த்தையற்று மெய்யுருகி நின்ற சுந்தரமூர்த்தி நாயனாரின் நிலையைச் சொல்வதாகும். அந்த அனுபவத்தை எப்படி அதனைப் பெறாத குமரகுருபரரால் சொல்ல இயலும்! அனுபவித்து அறியவேண்டியதை அவ்வாறு அறியாத அவரால் எப்படி விளக்கிச் சொல்ல இயலும்? அதனால் பதில் கூறமுடியாமல் மௌனியானார் குமரகுருபரர்.

அதே சமயம், "உனது குருவை நீ காணும்போது உன்னால் அவரது கேள்விக்கு பதில் சொல்ல இயலாத நிலை ஏற்பட்டு மௌனியாவாய்" என்ற முருகனின் வாக்கு அவருக்கு நினைவுக்கு வந்தது. மாசிலாமணி தேசிகரே தனது குரு என்பதை அடையாளம் கண்டுகொண்டவர், ஆதீனகர்த்தரைப் பணிந்து வீழ்ந்து வணங்கி, தன்னைச் சீடனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார்.

ஆதீனகர்த்தர், இவரைச் சிதம்பரத்துக்குச் சென்று அம்பலவாணரைத் தரிசித்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார்.
மீண்டும் தல யாத்திரை
அவ்வாறே சிதம்பரத்துக்குப் புறப்பட்டார் குமரகுருபரர். சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் எனப் பல தலங்களுக்கும் சென்றார், வைத்தீஸ்வரன் கோயிலில் முருகப்பெருமானை வழிபடச் சென்றபோது, அர்ச்சகர் உருவில் அந்தச் சன்னிதிக்கு வந்த ஒருவர், இவருக்குத் திருநீறு அளித்து, 'அம்மையைப் பாடியதுபோல் எம்மீதும் ஒரு பிள்ளைத் தமிழ் பாடுவாயாக!' என்று கூறினார். இவர் புரியாது திகைத்து நிற்கும்போது, புன்னகைத்தவாறே அவர் மறைந்துவிட்டார். வந்தது முருகன்தான் என்பதை அறிந்த குமரகுருபரர், ஆலயத்திலேயே தங்கியிருந்து 'முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்' என்னும் சொற்சுவை, பொருட்சுவை மிக்க நூலை அரங்கேற்றினார். பின் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர்த் தலத்தை அடைந்தார் அங்கு இறைவனைப் புகழ்ந்து, 'திருவாரூர் நான்மணி மாலை' நூலைப் பாடியருளினார். பின்னர் இறுதியாகச் சிதம்பரம் திருத்தலம் சென்றார்.

சிதம்பரத்தில் சில நாட்கள்
சிதம்பரம் தலத்து இறைவனைப் புகழ்ந்து 'சிதம்பர மும்மணிக் கோவை' என்ற நூலை இயற்றித் தொழுதார். அங்கு அவர் தங்கியிருந்த நாட்களில் அங்கிருந்த புலவர் ஒருவர், மற்றொரு புலவரிடம், குமரகுருபரரைப் பற்றி மிகவும் இகழ்ச்சியாக, "அவர் என்ன யாப்பிலக்கணம் முறையாகக் கற்ற கவியா என்ன! வரகவிதானே! இலக்கணக்கவியா என்ன?" என்று கிண்டலாகக் கேள்வி எழுப்பினார்.

இது குமரகுருபரர் செவிக்கும் சென்றது. அவர் தன்னிடம் அந்தத் தகவலைச் சொன்னவரிடம், "பரவாயில்லை. வருந்திப் பெறுவது இலக்கணம்; வரமாக, இயல்பாகப் பெறுவது வரகவி. 'வரகவி' என்பது இகழ்ச்சியானது இல்லை. உயர்வானதுதான். அந்த வேறுபாடு அந்தப் புலவருக்குப் புரியவில்லை போலும். பரவாயில்லை" என்று சொல்லி, அந்தப் புலவருக்கு விடையாக, 'சிதம்பர செய்யுட் கோவை' என்னும் யாப்பிலக்கண நூலை இயற்றினார். அந்நூல் யாப்பருங்கலக்காரிகைக்கு தக்கதொரு மாற்றாக விளங்கியதைக் கண்ட புலவர், குமரகுருபரரின் பெருமையை உணர்ந்தார். தனது செயலை மன்னிக்கும்படி வேண்டி, குமரகுருபரரின் அடியவரானார். சைவ சித்தாந்தம்பற்றி ஐயம் கொண்டிருந்தவர்களுக்கு அதுபற்றி விளக்கி அவர்களுக்கு உண்மையைப் புரியவைத்தார். தில்லை சிவகாமியம்மை மீது 'சிவகாமி இரட்டை மணிமாலை' என்ற நூலையும் இயற்றியருளினார்.

துறவு
பின்னர் மீண்டும் தருமபுரம் சென்றார். ஆதீனகர்த்தர் ஸ்ரீ மாசிலாமணி தேசிகரை அணுகி, அவரது ஆசி மற்றும் அனுமதி பெற்றுத் துறவு பூண்டார். தம்முடைய ஞானாசிரியரின் பெருமையை விளக்கும் பொருட்டு 'பண்டார மும்மணிக் கோவை' என்ற நூலை இயற்றினார். பின்னர் தன் குருநாதரான மாசிலாமணி தேசிகரின் கட்டளைப்படி காசித் திருத்தலம் நோக்கிப் பயணமானார்.

காசியில் ஸ்ரீ கேதாரீஸ்வரர் திருக்கோவில்



காசி
புனித க்ஷேத்திரமான காசி நகர் குமரகுருபரரை வரவேற்றது. அங்கு ஒரு சத்திரத்தில் அவர் தங்கினார். அவர் கனவில் காட்சி தந்த கேதாரீஸ்வரர் தாம் பல இடிபாடுகளுக்கிடையே புதைந்திருப்பதாகத் தெரிவித்து, அந்த இடத்தையும் காட்டியருளினார். குமரகுருபரர் மறுநாள் காலை தனது அடியவர்களுடன் தேடிச்சென்று அந்த இடத்தைக் கண்டார். அதனைச் சீர் செய்தவதற்கான வழிமுறைகளில் இறங்கினார்.

அப்போது காசியில் ஹிந்துஸ்தானி மொழி ஆதிக்கம் செலுத்தியது. தாரா ஷூகோ என்ற இஸ்லாமிய மன்னர் ஆண்டு வந்ததால் உருது மொழிக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ் மட்டுமே அறிந்திருந்த குமரகுருபரர், மன்னரின் உதவியைப் பெற்று காசியில் திருமடம் அமைக்க எண்ணினார். அதற்காக மன்னனைச் சந்திக்க அரண்மனைக்குச் சென்றார்.

ஆனால், குமரகுருபரரின் பெருமை அறியாத மன்னன், அவரது எளிய தோற்றத்தைக் கண்டு உதாசீனம் செய்தான். அமர்வதற்கு ஆசனமும் கொடுக்கவில்லை. குமரகுருபரர் தனது வேண்டுகோளை முன்வைத்தபோது மிக அலட்சியமாக, "நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என் மொழியில் பேசினால்தான் நான் உங்களுக்குப் பதில் கூறமுடியும். அதுவும் நான் மதிக்கத்தக்க வகையில் நீங்கள் வந்தால் தான் உங்களுடன் உரையாட முடியும்" என்று ஆணவத்துடன் பதில் அளித்தான்.

மறுநாள் வருவதாகக் கூறிவிட்டுக் கிளம்பினார் குமரகுருபரர். அவரை அவமானப்படுத்தி விட்டதாக எண்ணி மகிழ்ந்தது மன்னனின் அவையுள் இருந்த துதிபாடிகள் கூட்டம்.

சகலகலாவல்லி மாலை
மறுநாள் பொழுது புலர்ந்தது. எழுந்து கங்கையில் நீராடி வந்தார் குமரகுருபரர். பின் கலைவாணியை தியானம் செய்தார். தொடர்ந்து, கலைமகளைத் துதித்துப் பாட ஆரம்பித்தார்.

"வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ..."


என்று தொடங்கி

"மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பலகோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகலகலா வல்லியே!"


என்று 'சகலகலாவல்லி மாலை' நூலைப் பாடி முடித்தார். கலைமகளின் அருளால் உடனடியாக அவருள் ஞானம் பொங்கியது. ஹிந்துஸ்தானி மொழியின் வார்த்தைகளும் இலக்கணங்களும் முழுமையாக அறியப் பெற்றார்.

சிங்கம் ஒன்று புறப்பட்டதே!
'உன் வாகனத்தைச் சிறிது நேரம் எனக்கு இரவலாகத் தரவேண்டும்' என்று அம்பிகையை வேண்டித் துதித்தார். உடன் அங்கே கர்ஜனை ஒலி கேட்டது. அம்பிகையின் வாகனமான சிங்கம் தோன்றியது. துணையாகச் சில சிங்கங்களும் அங்கே வந்தன. சிங்கம் ஒன்றின்மீது தாவி அமர்ந்து மன்னனைக் காணப் புறப்பட்டார் குமரகுருபரர்.

அரண்மனைக்குள் சிங்கம் நுழைந்ததும் அங்குள்ளோர் அச்சத்தில் சிதறி ஓடினர். சிம்ம கர்ஜனையால் அந்த இடமே போர்க்களம் போல் ஆனது. குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து வருவதைக் கண்ட மன்னன் தாரா ஷூகோ அயர்ந்தான், அஞ்சினான். அதன்மேல் அமர்ந்து அஞ்சாது வந்த தமிழ் முனியைக் கண்டு வியந்தான். பின் அவர் ஒரு மகாஞானி என்பது புரிந்து பணிந்தான்.

காசியில் பறந்த கருடன்
மன்னனிடம் குமரகுருபரர் ஹிந்துஸ்தானி மொழியிலேயே தன் வேண்டுகோளை முன்வைத்தார். மன்னனும் அதனை நிறைவேற்றுவதாக வாக்களித்தான். குமரகுருபரர், காசியில் தான் தங்குவதற்கும் திருமடம் அமைப்பதற்கும் தேவையான நிலம் வேண்டுமென்று கேட்டார். மன்னன் அதற்கு, "காசியில் கருடன் பறப்பதில்லை. கருடன் வட்டமிட்டால் அவன் வட்டமிடும் இடம் முழுவதையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று வாக்களித்தான்.

மறுநாள் காலை தான் தங்கியிருந்த இடத்திற்கு வருமாறு மன்னனைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றார் குமரகுருபரர். அதுபோல மறுநாள் குமரகுருபரர் இருக்குமிடத்திற்குப் பரிவாரங்களுடன் சென்றான்.

குமரகுருபரர் அவனை வரவேற்றார். தியானத்தில் அமர்ந்து சிவபெருமானைத் துதித்தார். உடன் குரலெழுப்பியவாறு வானில் கருடன் தோன்றியது. மன்னன் வியந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே மேலே வட்டமிடத் தொடங்கியது. மூன்று முறை அவ்வாறு வட்டமிட்டுப் பின் விரைந்து பறந்து காணாமல் போனது.

காசியில் கருடன் வட்டமிட்ட அதிசயம் பலராலும் வியந்து பேசப்பட்டது. மன்னனும் தான் கூறியவாறே கருடன் வட்டமிட்ட அந்த நிலப்பகுதியை குமரகுருபரருக்கு அளித்தான். அந்த இடம்தான் 'கேதார் காட்' பகுதியில் இருக்கும் காசி குமாரசுவாமி மடம். தனது திருமடத்தில் நாள்தோறும் ஹிந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் சொற்பொழிவாற்றித் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவை புரிந்தார் குமரகுருபரர். கம்ப ராமாயணம் குறித்து அவர் ஆற்றிய சொற்பொழிவுகளைத் துளசிதாசர் தினந்தோறும் வந்து கேட்டதாக ஒரு நம்பிக்கை உண்டு.

ஆன்மிக, இலக்கிய சேவை
காடுகளாலும், கட்டிடங்களாலும் சூழப்பட்டிருந்த கேதாரேஸ்வரர் ஆலயத்தைப் புதுப்பித்து தினந்தோறும் பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தார். பல ஆண்டுக் காலம் காசியில் வாழ்ந்த குமரகுருபரர் தனது குருவைத் தரிசிக்கும் ஆசையில் தமிழகம் திரும்பினார். குருவைத் தரிசித்தார். குருவுடனேயே இறுதிவரை வாழ வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார், குருவோ காசியிலேயே இருந்து தொண்டாற்றி வரும்படிச் சீடரைப் பணித்தார். அதனை ஏற்று மீண்டும் காசிக்குத் திரும்பி தன் இலக்கிய, ஆன்மீக சேவைகளைத் தொடர்ந்தார் குமரகுருபரர்.

காசியில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திச் சைவத்தின் பெருமையைப் பரப்பினார். மாற்று மதத்தவரும் மதிக்கத்தக்க மகாஞானியாய் அவர் விளங்கினார். அத்தலத்தின் முக்கியத் தெய்வமான துண்டி விநாயகர் மீது 'காசி துண்டி விநாயகர் பதிகம்' பாடினார்.

காணுங் காணு நதிகளெல் லாம்புனற்
கங்கை யேயங் குளதெய்வம் யாவையும்
தாணு வெங்க ளகிலேச ரேமற்றைத்
தலங்கள் யாவுந் தடமதிற் காசியே


என்று காசியின் புகழைக் கூறும் 'காசிக் கலம்பகம்' என்னும் நூலை இயற்றியருளினார். நேபாள நாட்டின் 'மோரங்கி' என்ற ஊரிலும் தன் காலத்தில் கிளைமடம் ஒன்றை ஸ்தாபித்தார் குமரகுருபரர்.

மகா சமாதி
காசியில் மகாஞானியாக வாழ்ந்த குமரகுருபரர், மே 1668ல் வைகாசி மாதப் பௌர்ணமியை அடுத்த மூன்றாம் நாள், திருதியை திதியில் மகா சமாதி அடைந்தார். ஆண்டுதோறும் அவரது குருபூஜை குமாரசாமி மடத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இம்மடத்திற்கு திருப்பனந்தாள் மடம், காசி மடம் என்று வேறு பெயர்களும் உண்டு. கேதார் காட்டில் உள்ள கேதாரீஸ்வரர் ஆலயம் இம்மடத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தமிழுக்கும், கல்விக்கும் முதலிடம் கொடுத்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து செயலாற்றி வருகிறது இம்மடம். மேலும் காசி யாத்திரை வரும் யாத்ரீகர்களுக்குத் தங்க இடம், உணவு அளித்து அவர்கள் கர்ம காரியங்களை முறைப்படிச் செய்வதற்கும் உதவி வருகிறது.

முகவரி
KUMARASAMY MUTT, Kedarghat, Sonarpura,
Near Abhay Hanuman Mandir, Bangali Tola,
Varanasi,
Uttar Pradesh 221001


ஸ்ரீவைகுண்டத்தில் 'ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மடம்' என்ற அமைப்பு இயங்கி வருகிறது. 'குமரகுருபரன்' என்ற மாத இதழும் பல ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

சுவாமிகளின் 333வது குரு பூஜை ஆராதனை விழா இவ்வாண்டு மே, 29 (வைகாசி மாதம் தேய்பிறை திரிதியை) அன்று கொண்டாடப்பட இருக்கிறது.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline