Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | முன்னோடி | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | கவிதைப்பந்தல் | எங்கள் வீட்டில் | பொது | நூல் அறிமுகம் | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
சிறுகதை
பவித்ராவின் போராட்டம்
வாழ்வில் வந்த வசந்தம்
- எல்லே சுவாமிநாதன்|ஜனவரி 2009||(3 Comments)
Share:
Click Here Enlargeஆபீசுக்குக் கிளம்பி வெளியே வந்தபோது தபால்காரர் எதிரில் வருவது தெரிந்தது. தபால் வருகிறதோ என்ற எதிர்பார்ப்பில் சற்று நேரம் நின்றான் வசந்தன். ஒரு கட்டுக் காகிதங்களை கையில் திணித்தார் தபால்காரர். இரண்டு மூன்று கனத்த உறைகள். ஒரு கல்யாண அழைப்பிதழ். மூன்று நோட்டிசுகள். டெலிபோன் பில். இத்துடன் அந்த வெள்ளைக் கவர் எடுப்பாகத் தெரிந்தது.

"கதை திரும்பிடுச்சா?" என்று கேட்டுப் புன்னகைத்து நகர்ந்தார் தபால்காரர். அவரைப் பளாரென்று கன்னத்தில் ஒரு அறை அறைய வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் கட்டிப் போட்டான். கதை திரும்பினா என்னா, கட்டுரை திரும்பினா என்ன. தபாலைக் கொடுத்துட்டுப் போகாம என்ன வீண் வம்பு இந்த ஆளுக்கு?

வசந்தனும்தான் விடாமல் ஒவ்வொரு பத்திரிக்கையாக முயற்சித்து வருகிறான். 'உங்கள் கதை எங்கள் இதழுக்குப் பொருத்தமானதாய் இல்லை என்பதால் திருப்பி அனுப்புகிறோம்' என்ற அனுதாப வரிகளோடு கதைகள் திரும்பும்.

பிறந்த ஊர், வசித்த இடங்கள், படித்த பள்ளிகள், பெற்ற பட்டம் எல்லாம் எழுதின பின் பாதித்தாள் நிரம்பியது. வேலை செய்த இடங்கள், உடல் எடை, உயரம், வந்த வியாதிகள், சாப்பிட்ட மருந்துகள் எல்லாம் போட்ட பிறகு ஒரு பக்கம் நிரம்பியது.
இன்றைக்கும் அப்படித்தான். 'ஜயவிலாசம்', 'மணிக்கொடி', 'முல்லை' பத்திரிக்கைகளுக்கு அனுப்பின கதைகள் வந்துவிட்டன. கதை திரும்புவது வாடிக்கையான நிகழ்ச்சியாகி விட்டது. கல்யாணப் பத்திரிக்கையைப் படித்தான். யாரோ தூரத்து உறவினருக்குக் கல்யாணமாம். அதுவும் நாளைக்கு மதுரையிலாம். விமானத்தில் போனால்கூடப் போய்ச் சேர முடியாது. மனுசன் வந்துடக் கூடாதுன்னே இப்படி தாமதமாக அனுப்புகிறார்களோ? தபாலில் வந்த டெலிபோன் பில் அநியாயமான பெரிய தொகை காட்டியது. இது சாயங்காலம் மெதுவாக உட்கார்ந்து சரி பார்க்க வேண்டிய சமாசாரம். கடைசியாக அந்த வெள்ளைக் கவரைப் பிரித்தான்.

அதிலிருந்த கடிதம் ரோஜா பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து வந்திருந்தது.

"அன்புள்ள வசந்தன்,

'வாழ்க்கையில் வராத வசந்த காலம்' என்ற உங்கள் சிறுகதை வரப்பெற்றோம். இதை ரோஜாவில் பிரசுரிக்க எண்ணியுள்ளோம். உங்கள் புகைப்படத்தோடு உங்கள் வாழ்க்கை வரலாறைச் சுருக்கி எழுதி அனுப்புங்கள்.

இப்படிக்கு,
ராதாபாய்,
துணை ஆசிரியை, ரோஜா

ஒரு நிமிஷம் மின்சாரத்தால் தாக்குண்டவன் போலத் திகைத்தான் வசந்தன்.

கடைசியில் என் கதை ஒரு பத்திரிக் கையில் அச்சேறப் போகிறது. கண்ணில் நீர் துளிர்த்தது. அந்தக் கடிதத்தைப் பத்து முறை படித்திருப்பான்.

வாழ்க்கை வரலாறு வேணுமாமே. நான் என்ன அன்னை தெரசாவா, அப்துல் கலாமா? என்ன பெரிய வரலாறு எனக்கு, கட்டைவிரல் நகத்தில் எழுதி விடலாமே! அலுவலகத்தை அழைத்து 'உடல் நிலை சரியில்லை. ஒரு நாள் லீவு வேண்டும்' என்று மானேஜரிடம் சொல்லிவிட்டு, அறைக்குள் போய் தன் வாழ்க்கைக் குறிப்பை எழுதலானான்.

பிறந்த ஊர், வசித்த இடங்கள், படித்த பள்ளிகள், பெற்ற பட்டம் எல்லாம் எழுதின பின் பாதித்தாள் நிரம்பியது. வேலை செய்த இடங்கள், உடல் எடை, உயரம், வந்த வியாதிகள், சாப்பிட்ட மருந்துகள் எல்லாம் போட்ட பிறகு ஒரு பக்கம் நிரம்பியது. ஒரு பக்கம் வாழ்க்கைக் குறிப்பா?

கதையே ரெண்டுபக்கம்தான். உன் கதையும் வேண்டாம் வாழ்க்கைக் குறிப்பும் வேண்டாம் என்று அனுப்பி விடுவார்களோ? இன்னொரு தாளில் சின்ன எழுத்தில் நுணுக்கி அரைப்பக்கம் எழுதி ஒரு புகைப்படத்துடன் ரோஜாவுக்கு அனுப்பினான்.

இரண்டு நாளில் ரோஜாவிலிருந்து இன்னொரு கடிதம் வந்தது. "உங்கள், புகைப்படமும், வாழ்க்கைக் குறிப்பும் கிடைத்தன, கதையைப் பற்றி விவாதிக்க அலுவலகத்துக்கு ஒரு வாரத்தில் நேரில் வாருங்கள். வரும் தேதியை முன்னதாகச் சொல்லிவிட்டு வரவும்" என்று எழுதியிருந்தார்கள்.

இதென்னது இல்லாத கூத்தா இருக்கு. கதையை விவாதிக்கணுமா. தன் அலுவலக நண்பன் கோபுவிடம் தனக்கு வந்த கடிதங்களைக் காட்டி யோசனை கேட்டான்.

"நீ பயப்படாதே. ஒருவேளை இதை சினிமாக்கு யாராவது கேட்டு இருப்பாங்க. நீ திரைக்கதை வசனம் எழுதுவியானு கேட்க கூப்பிடாறாங்க போல. ஆமா அப்படி என்னதாண்டா எழுதின கதையில. சுருக்கமா சொல்லேன்" என்றான் கோபு ஆர்வத்துடன்.

வசந்தன் மகிழ்ச்சியோடு தொண்டையைக் கனைத்துக் கொண்டு விவரித்தான்.

"கருப்பா ஒரு பையன் இருக்கான். தான் கருப்பா இருக்கோம்னு அவனுக்கு வருத்தமா இருக்கு. ஒரு நாள் பள்ளிக்கூடத்தில வாத்தியார் 'ஏய், கரிப்பானை, சளசளனு பேசாம பாடத்தைக் கவனி'ங்கறாரு. லதானு ஒரு அழகான பொண்ணு அதைக்கேட்டு சிரிக்கறா. அவனைக் கரிப்பானைனு கலாட்டா பண்றா. இவன் மனசுக்குள்ள அழுதுட்டு 'ஆமா. நான் கரிப்பானை'தான்னு சொல்ல அவளுக்கு அவன்மேல ஒரு பரிதாபம் வருது. அதுவே மெதுவா காதலாயிடுது. பள்ளி நட்பு கல்லூரியிலும் தொடருது. கல்லூரிப் படிப்பு முடிஞ்ச உடனே அவளோட அப்பாகிட்ட போயி பொண்ணு கேட்கிறான். நீ ஏழை. என் பொண்ணை வசதியா வெச்சுக்க உன்னால முடியாது, போடான்னு வெரட்டிடராரு.

அவன் சோகத்தில கோவையிலிருந்து சென்னைக்குப் போயிடறான். ஒரு வேலை தேடிக்கறான். அவளோட நினைவை அவனுக்கு மறக்க முடியல. அப்ப நண்பன் ஒருத்தன் வந்து அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாயிருக்குனு சொல்றான்.

இவன் வருத்தத்தோட தன்னுடைய காதல் கடிதங்களையெல்லாம் பீச்சில கிழிச்சிப் போட்டிட்டு கடல்ல இறங்கித் தற்கொலை பண்ணிக்கறான். இதான் 'வாழ்க்கையில் வராத வசந்தம்' கதையோட சுருக்கம்".

கோபுவின் முகத்தில் சலனம் எதுவுமில்லை. இதை மெனக்கிட்டு எழுதின வசந்தன் முட்டாளா இல்ல இதைக் கதைனு மதிச்சு பத்திரிக்கையில போட இருக்கிற ரோஜா ஆசிரியர் ராதாபாய் பெரிய முட்டாளானு அவனுக்கு யோசனை.

"என்ன கோபு. கதை எப்படி இருக்கு" என்றான் வசந்தன்.

கோபு ஒரு செயற்கைச் சிரிப்போடு "ஆடிப் போயிட்டேண்டா. சூப்பர் கதை. ரோஜால போட்டுடுவாங்க. வாழ்த்துகள். இதையே விஜயையும் த்ரிஷாவையும் போட்டு படமா எடுக்கலாம். விஜய்க்கு கரிப்பானை கெட்டப் இருக்கு. 'ஒல்லி ஒல்லி இடுப்பு' மெட்டில ஒரு டூயட் போட்டுறலாம். கருப்பு கருப்பு மூஞ்சி மூஞ்சி கடிச்சிதே கொரங்கு இஞ்சின்னு த்ரிஷா பாட, 'வெள்ளை வெள்ளை பூனையே, நான் ஒனக்கு வெளையாடக் கெடச்ச பானையே'ன்னு விஜய் எடுக்க... ஓ... ஓ! படம் நூறு நாள் ஓடிடும்ப்பா" என்றான்.

வசந்தன் முகம் மலர்ந்தது. கதை, திரைக்கதை வசனம் - வசந்தன் என்று திரையில் பார்ப்பதுபோல் பிரமை ஏற்பட்டது.

"அப்ப நான் ரோஜா ஆபீசுக்கு போய் ராதாபாயைப் பார்க்கலாம்கிறாயா..."

"ஆமா. போ. எதுக்கும் முன்ஜாக்கிரதயா சொல்லிடு 'எதுவானாலும் பேசி தீத்துக்கலாம். அடிதடி வாணாம்'னு. தடிமனா ரெண்டு சட்டை, ஸ்வெட்டர் போட்டுக்கிட்டு போ. சும்மா ஒரு தற்காப்புக்குத்தான். காயம்பட்டாலும் ஊமைக்காயமா இருக்கும்"

ரோஜா அலுவலகம் எங்கியோ திருவான்மியூர் தள்ளி இருந்துது. ஆட்டோக்காரன் நூத்தி ஐம்பது ரூபாய் கேட்டான். ’கதைக்கு சன்மானம் உண்டானு தெரியல. ஆனா செலவு மட்டும் ஆகுது’ கடைசியில் ஆட்டோ பிடித்து அங்கே போனான்.

கட்டிடத்தின் முகப்பில் பத்திரிக்கையின் பெயர்ப்பலகை கால் ஒடிந்து 'ரே ஜா' என்று காணப்பட்டது. ஆசிரியர் அலுவலகம் இரண்டாம் மாடியில்.

ஆசிரியர் அறைக்கு அழைத்துப் போனார்கள். ராதாபாய் டெலிபோனில் பேசிக் கொண்டிருந்தாள். எதிரே நாற்காலியைக் காட்டி உட்காரச்சொல்லி சைகை காட்டினாள். வசந்தன் அமர்ந்தான்.

"என்னய்யா அச்சுக் கோக்கறீங்க. மாலாவின் உதட்டு சாயம்னு போட்டிருக்கு. மாலாவின் உதட்டுச் சாயம்னு இருக்கணும். உதட்டுக்கு 'ச்' எங்க போச்சு?" ராதாபாய் யாரிடமோ கத்திக் கொண்டிருந்தாள்.

"உதட்டுல 'இச்' கொடுத்தா மாலா வெட்கப்படும்னு நெனச்சு, 'இச்' போடாம விட்டுட்டாரு போல" என்றான் வசந்தன்.

ராதாபாய் வசந்தனை முறைத்தாள். தடித்த கண்ணாடியினூடே அவள் சிறுத்த கண்கள், அவனுக்கு பள்ளியில் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியையை நினைவூட்டியது.

சே... ஒரு ஜோக்கா சொன்னாக் கூட ரசிக்க மாட்டேங்கறா. இன்னிக்கி நம்ம கதை கந்தல் தான். ஏண்டா கதை எழுதினேனு பெஞ்சி மேல ஏத்தப் போறா என்ற பயம் ஏற்பட்டது.

ஒருவழியாக அவள் பேசிமுடித்து, வசந்தனைப் பார்த்தாள்.

"யாரு நீங்க? உங்களுக்கு என்ன வேணும்?" என்றாள்.
கருப்பா இருக்கறது தப்பில்ல. கருப்பா இருக்கோம்னு தாழ்வு மனப்பான்மை கூடாது. சிவப்பா பொண்ணு வேணும்னு கேக்கறீங்க. உங்களுக்கு பொறக்கிற குழந்தை கருப்பா இருந்தா குப்பைத் தொட்டியில தூக்கி எறிஞ்சிடுவீங்களா?
"நாந்தான் வசந்தன். 'வாழ்க்கையில் வராத வசந்தம்'னு ஒரு கதை அனுப்பி இருந்தேன். நேரில வந்து பார்க்கச் சொல்லி நீங்க லெட்டர்..."

மேஜையைத் திறந்து ஒரு ஃபைலை எடுத்துப் பிரித்தாள். அதில் அவன் கதை, புகைப்படம், வாழ்க்கைக் குறிப்பு எல்லாம் இருந்தது.

புகைப்படத்தை பார்த்து விட்டு "இதான் நீங்களா? இதுல வெளுப்பா இருக்கீங்க. எக்ஸ் ரே படத்தை எதுக்கு அனுப்புனீங்க?" என்றாள் சந்தேகத்துடன்.

"என் படம்தாங்க. எக்ஸ்போஷர் குறைச்சு வெச்சதில வெள்ளையா வந்திடுச்சு. கருப்பா இருந்தா அசிங்கமா இருக்கும். வெள்ளையா பார்க்க நல்லாயிருக்கும்னு இதையே அனுப்பினேன்" என்றான்.

வாழ்க்கைக் குறிப்பை மேலெழுந்த வாரியாகப் பார்த்தாள். புருவத்தை உயர்த்தி "இதென்ன கி..ஆ..பெ..வி..பா..ப.? திக்குவாயன் திருக்குறள் சொல்றாப்புல?"

"கி.ஆ.பெ. விசுவநாதம் பாலர் பள்ளிங்கறதைச் சுருக்கியிருக்கேன்"

அவன் கதையை எடுத்தாள். அதில் பல இடங்களில் சிவப்புக்கோடு போட்டுத் திருத்தப்பட்டிருந்தது.

"உங்க கதாநாயகன் காதல்ல ஏமாற்றம் அடைஞ்சு கடற்கரைக்கு வந்து காதலி எழுதிய கடிதங்களைக் கிழிச்சுப் போடறதா எழுதியிருக்கீங்க"

"ஆமாங்க.. அவளுக்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு. இந்தக் கடிதங்களை வெச்சிட்டு என்ன செய்யறது. அவனுக்கு விரக்தி வந்து..."

"விரக்தி, வேதனை எதுவாணா வரட்டும். அதுக்குனு பீச்சில் போயா பேப்பரைக் கிழிச்சு எறியறது? ஒரு படிச்சவன் செய்யிற காரியமாங்க இது? ஏற்கனவே பீச்சில சுண்டல் இலை, கடலை பேப்பர், பேல்பூரி தட்டு, தண்ணி பாட்டில்னு இறஞ்சு கிடக்கு. இதுல இவனும் போய் பேப்பர் கிழிச்சுப் போட்டா. சுற்றுச் சூழல சுத்தமா வெச்சிக்கணும்னு அறிவு வேணாம்?"

"என்னங்க இதைப்போய் சீரியசா எடுத்திக்கிட்டு... கதைதானே... சரி பீச்சுக்கு வர வழியில பாரதியார் சாலை முனையில குப்பைத் தொட்டில போடறதா எழுதிடறேன். இல்ல பேரீச்சம் பழக்காரன் கிட்ட போட்டு அம்பது கிராம் பேரீச்சம் பழம் வாங்கித் தின்னதா மாத்தி எழுதிடறேன்"

"யெஸ். தட்ஸ் பெட்டர். அது கெடக்கட்டும். ஏன் சார், ஆசைப்பட்ட பொண்ணு கிடக்கிலன்னதும் கடல்ல விழுந்து சாகணுமா? ஏற்கனவே கடல் சுனாமி, மண்ணாங்கட்டினு குப்பையா இருக்கு."

"மேடம். தப்புதான்... வேணும்னா அவன் கிணத்துல விழுந்து சாகறதா மாத்திடவா?"

"இருவது வருஷமா போரிங் பம்பு போட்டு நிலத்தடி நீர் கீழ போயிட்டுது... எந்தக் கிணத்திலயாவது ஆள் முழுகற மாதிரி தண்ணி இருக்கா?"

"கிணத்தில குதிச்சு தண்ணியில முழுகல. கிணத்தில இருந்த பாறையில தலை இடிச்சு செத்துட்டான்னு..."

"ஏன் சார் அவன் தற்கொலை பண்ணிக்கறான்? அவனுக்கு அப்பா, அம்மா இல்ல? படிக்க வெச்சு ஆளாக்கின அவங்களுக்கு அவன் என்னத்தைச் செஞ்சான்? அவனுக்குத் தம்பி, தங்கை இல்லியா? அவங்களைக் கரையேத்த வாணாமா? யாருமே இல்லேனு வெச்சாக்கூட சமூகத்துக்கு தொண்டு செய்யலாமில்ல. சாகறது முட்டாத்தனமில்ல."

சரி இன்னிக்குத் தனக்கு அடி தராமல் வீட்டுக்கு அனுப்பமாட்டாள் இவள் என்று தோன்றியது.

"மேடம்... அவனை என்னதான் பண்ணணும்கிறீங்க? சொல்லுங்க ஒரு வழி பண்ணிடறேன்"

"ஏன் சார். தான் ஆசைப்பட்ட பொண்ணுக்குக் கல்யாணம் நிச்சமாயிடுச்சுனு யாரோ சொன்னத நம்பிட்டானே. இவன் தீர விசாரிக்க வேணாம். நேரில போயிப் பாக்க வேணாமா? அட்லீஸ்ட் கல்யாணத்துக்கு போய் வாழ்த்து சொல்லிட்டு, தன்னைக் காதலிச்ச பொண்ணுக்கு ஒரு ஸ்டிக்கர் பொட்டாவது கல்யாணப் பரிசா கொடுக்க வேணாமா?"

அவன் ஒரு குற்ற உணர்வில் தலை குனிந்தான்.

"உண்மையைச் சொல்லுங்க வசந்தன். இது உங்க சொந்தக் கதைதானே?"

"மேடம் இது நான் எழுதின கதைனு கையெழுத்துப் போட்டிருக்கேன் பாருங்க"

"அதைச் சொல்லலே. இது உங்களுக்கு நடந்ததுதானே. கரிப்பானைங்கறது நீங்கதானே..."

"எப்படிக் கண்டுபிடிச்சீங்க மேடம்?" என்றான் வியப்புடன்.

"நீங்க கண்ணாடியில மூஞ்சியப் பார்த்துக்கிறதில்லயா" என்று சொல்ல வந்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு, "சும்மா ஒரு ஊகம்தான். ஆமா நீங்க லதாவோட படிச்சவர்தானே. அவளைத்தானே காதலிச்சீங்க.."

"ஆமாம்"

"உங்க லதாவுக்கு திருமணம் நிச்சயமானது உண்மைதான்... ஆனா நின்னு போச்சு. அவ உங்களுக்குக் காத்திட்டு இருக்கா இன்னும். இங்கயே வந்திருக்கா" என்றவள், டெலிபோனை எடுத்து ஒரு நம்பரை சுழற்றி, "கோவிந்து, லதாவை மேல என் ரூமுக்கு வரச்சொல்லுங்க" என்றாள்.

வசந்தன் திடுக்கிட்டுப் பார்த்தான். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.

சில நிமிடங்களில் லதா உள்ளே நுழைந்தாள்.

"உங்களை நான் அறிமுகம் செஞ்சு வெக்கத் தேவையில்லை. ரெண்டு நிமிஷம் ஆர்ட் டிபார்மெண்டுக்குப் போயிட்டு வரேன்" என்று இங்கிதமாய் ராதாபாய் வெளியே போனாள்.

"லதா... லதா... லதா..." வசந்தன் மகிழ்ச்சியில் தடுமாறினான்.

"வசந்த்..." லதா அவனைப் பார்த்தாள்.

"லதா உனக்கு கல்யாணம் நின்னு போச்சாமே? மெய்தானா?"

"ஆமா. நானே நிறுத்திட்டேன்"

"எப்படி?"

"கல்யாணம் பண்ணிக்க வந்தவருக்கு நம் காதலைப் பத்தி எழுதிப் போட்டேன். அவர் கௌரவமா ஒதுங்கிட்டார்... எங்க அப்பா முதல்ல கோபிச்சாரு... பின்னால என் இஷ்டத்துக்கு உங்களையே கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லிட்டாரு.

நீங்க சொல்லாம போயிட்டீங்க. உங்களைத் தேடி சென்னைக்கு வந்து ராதாபாய் வீட்ல இருக்கேன்"

"ராதாபாயை எப்படித் தெரியும் உனக்கு?"

"அவங்க எனக்கு தூரத்து உறவு... உங்க கதையைப் பத்தி யதேச்சயா சொன்னாங்க. விவரமா விசாரிங்கன்னு நாந்தான் சொன்னேன். நீங்க இன்னிக்கு வர சேதி சொல்லி என்னை வரவழைச்சு கீழ பிரிண்டிங் பிரஸ் ரூம்ல உட்காரச் சொல்லியிருந்தாங்க..."

அவள் கன்னத்தில் ஒரு கருப்புக் கோடு இருந்ததை அவன் கவனித்தான்.

"கன்னத்தில என்ன கரியா கோடு?" என்று சொல்லிக் கன்னத்தைத் தொட்டான்.

"கரிப்பானை. கொன்னுடுவேன், இதான் சாக்குனு கன்னத்தைத் தடவினா" என்றவள் கைப்பையிலிருந்து கண்ணாடியை எடுத்துப் பார்த்துக் கொண்டாள்.

"கீழ எழுத்துரு அச்சை எடுத்துப் பாத்திட்டிருந்தேன். அதிலேருந்து பட்டிருக்கு போல". கைக்குட்டையால் துடைக்க கருமை போகாமல் திட்டாகப் பரவியது.

"பாத்ரூம்ல போயி கழுவிக்க" என்றான் வசந்தன்.

ராதாபாய் உள்ளே நுழைந்தாள். "என்னம்மா லதா... இது உங்காளுதானே என்ன சொல்றாரு. தற்கொலைக்கு புதுசா ஏதாச்சும் ஐடியா வெச்சிருக்காராமா?"

"மேடம். உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல. எங்களைச் சேர்த்து வெச்சீட்டிங்க" என்று குழைந்தான் வசந்தன்.

"நன்றி கிடக்கட்டும். கல்யாணச் சாப்பாடு போடற வழியப் பாருங்க. அய்யோ, என்ன லதா கன்னம் இப்படி இருக்கு? அவரு உன்னைக் கிள்ளிட்டாரா என்ன?"

வசந்தன் சற்று துணுக்குற்றான். "மேடம். நீங்க பெரியவங்க... இப்படியா என்னைக் கேலி பண்ரது... நான் கருப்புதாங்க. தொட்டா ஒட்டிக்கற மாதிரியா இருக்கு? சத்தியமா நான் அவங்க கன்னத்தைக் கிள்ளலீங்க. அவங்க அச்சுக் கோக்கிற இடத்தில..."

"கருப்பா என்ன சொல்றீங்க" என்ற ராதாபாய் லதாவின் இரு கன்னங்களையும் பார்த்தாள். "ஓ நான் கருப்பை கவனிக்கல. கல்யாணம்னவுடன் அவள் வலது கன்னம் சிவப்பாச்சு. அது வெட்கத்தில சிவந்துதா இல்ல நீங்க கிள்ளி சிவந்திச்சானு கேட்டேன். இடது கன்னத்தில இருக்கிற கருப்பை நான் கவனிக்கல. கருப்பா இருக்கறது தப்பில்ல. கருப்பா இருக்கோம்னு தாழ்வு மனப்பான்மை கூடாது. சிவப்பா பொண்ணு வேணும்னு கேக்கறீங்க. உங்களுக்கு பொறக்கிற குழந்தை கருப்பா இருந்தா குப்பைத் தொட்டியில தூக்கி எறிஞ்சிடுவீங்களா?"

"மேடம்..."

"சரி... சரி... கல்யாணம் மெதுவா நிச்சயம் பண்ணிக்குங்க... மொதல்ல கதையை மாத்தி எழுதி அவன் லதாவை சந்திச்சு கல்யாணம் பண்ணிட்டதா பண்ணுங்க. அப்படியே தலைப்பை மங்களகரமா 'வாழ்வில் வந்த வசந்தம்னு' மாத்துங்க"

"ரோஜால வரப்போற இவர் கதைக்கு சன்மானம் உண்டா?" என்றாள் லதா.

"சன்மானமா? என்ன லதா பேசற? உன்னையே இவருக்குக் கொடுத்தாச்சு. இதென்னா ஆட்டோவா? மீட்டருக்கு மேல போட்டுத்தரனுமா? வசந்தன் சார், ஒண்ணுமட்டும் நல்லா நெனைவு வெச்சிங்க. படிக்கிறவன் நொந்து போற மாதிரி நெகடிவ் மெசேஜ் வெச்சு கதை எழுதாதீங்க. வாழ்க்கையில ஒரு தைரியத்தை, தன்னம்பிக்கையை, மகிழ்ச்சியை ஏற்படுத்தற மாதிரி எழுதுங்க"

வசந்தன் வெண்ணிறப் பற்கள் கரிய முகத்தில பளிச்சிட தலையாட்டிச் சிரித்தான்.

எல்லே சுவாமிநாதன்
More

பவித்ராவின் போராட்டம்
Share: 




© Copyright 2020 Tamilonline