Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கவிமாமணி பா. வீரராகவன்
- மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2020||(1 Comment)
Share:
கவிமாமணி பா. வீரராகவன் மூத்த கவிஞர், சிறந்த பேச்சாளர், சமூக ஆர்வலர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், ஆலோசகர். பாரதி கலைக் கழகம் வழங்கிய கவிமாமணி, பாரதி யுவகேந்திரா வழங்கிய பாரதி புரஸ்கார், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வழங்கிய நல்லோர் விருது, ஹைதராபாதின் நிறை இலக்கிய வட்டம் வழங்கிய கெளத ராஜு சாஹித்ய புரஸ்கார், சென்னை வானவில் பண்பாட்டு மையம் வழங்கிய பாரதி பொற்கிழி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றவர். அவருடனான உரையாடலில் இருந்து...

★★★★★


கே: உங்களுக்குள் ஒரு கவிஞனை எப்போது கண்டறிந்தீர்கள்?
ப: சிறுவயதில் கவிதை முயற்சியில் ஈடுபடவில்லை. பள்ளியில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, மனப்பாடப் பகுதிப் போட்டி போன்றவற்றில் வென்றிருக்கிறேன். எனது கவிதை ஈர்ப்புக்கு இரண்டு காரணங்கள். என் தந்தையார், வைணவ நெறிப்படி தினமும் திருவாராதனம் செய்யும்போது, திவ்வியப் பிரபந்தப் பாசுரங்களை - குறிப்பாக, நீராட்டம், பூச்சூடல் போன்றவற்றை - ராகம் போட்டுச் சொல்லுவார். அது எனது நெஞ்சில் ஆழப்பதிந்து என்னையுமறியாமல் ஒரு தாளலயம் என்னுள் ஏற்பட்டிருந்தது. ஆனால், நான் வேலைக்குச் சென்றதும் சுற்றியுள்ள சமுதாயம் என்னைப் பெரிதும் பாதித்தது.

நான் முதன்முதலில் வேலை செய்தது எவரெடி பேட்டரி தொழிற்சாலையில் சூப்பர்வைசராக. அன்றைக்கு தினக்கூலி ஒருவரின் ஒருநாள் சம்பளம் ரூ.6.75. அதற்காக அவர் செய்யும் வேலையைப் பார்த்தால் கண்ணீர் வரும். ஒவ்வொன்றும் 16 கிலோ எடையுள்ள 60 க்ரேட்டுகளை ஒரு மணி நேரத்தில் அவர்கள் தூக்கிவைக்க வேண்டும். இப்படித் தொடர்ந்து எட்டுமணி நேர வேலை. இந்த வேலையைச் செய்ய தினமும் வாசலில் பலர் வரிசையில் நிற்பார்கள். இந்த ஏழைகளின் அவலம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எனக்குள் முதல் கவிதை பிறந்தது. அதை ஒரு மே தினத்தன்று எழுதினேன்.

கண்ணீரில்தான் கவிதை பிறக்குமென்றா
கண்ணீரை எனக்கு உடைமை ஆக்கிவைத்தாய்?
வெந்நீராய் உள்ளம்தான் கொதித்தபோதும்
வெந்தேதான் எண்ணங்கள் சாவதில்லை.


இதுதான் நான் எழுதிய முதல் கவிதை.

சமுதாயம் எனக்குள்ளே ஏற்படுத்திய உணர்ச்சிகளும் எனக்குள் இருந்த தாள உணர்வும் என்னைக் கவிஞனாக்கின.

TVS மோட்டார்ஸ் மேலாளர் பயிலரங்கம்



கே: அரங்கேற்றமான முதல் கவிதை எது, அந்த நாளை நினைவுகூர இயலுமா?
ப: எனது ஆரம்பகாலப் பணியின்போது சிறு சிறு கவிதைகள் எழுதுவேன். தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்கள் செய்யும் தவறுகளை மையமாக வைத்து நகைச்சுவையாக, நையாண்டியாக எழுதப்பட்டவை. இவை பெரும்பாலும் தாள அமைதியோடு இருக்குமே தவிர. ஒரு வடிவத்தோடு இருக்காது. அதாவது அவை செய்திகளாக இருக்கும். பெரிதாகக் கவித்துவம் இருக்காது.

ஒரு சமயம் ஒரு தொழிலாளி தனது வேலைப்பளு, குடும்பச்சூழல் இவற்றால் மிகுந்த மன வருத்தமடைந்து என்னிடம் வந்து பேசினார். அப்போது எனக்கு வயது 22 இருக்கும். நான் பொதுவாகவே அருகேயிருக்கும் சகமனிதனின் நிலையை அறிய விரும்புபவன். Empathy என்று சொல்வார்களே, அது என்னிடம் அதிகம். இப்படிப் பலபேர் தம் கதையை என்னிடம் சொல்வார்கள். என்னிடம் பேசிய தொழிலாளிக்கு 40 வயது இருக்கும். குடும்பம் இருக்கிறது. சில சூழல்களால் 'தற்கொலை செய்துகொண்டு விடலாமா?' என்ற எண்ணத்தில் அவர் இருந்தார். அவரிடம் பேசிப்பேசி, மெல்ல மெல்ல அவரது பிரச்சனைகளைத் தெரிந்துகொண்டு, மேலதிகாரிகளிடம் பேசி, அவருடைய வேலைப்பளுவைக் குறைத்து, வேலையிடத்தில் அவருக்குக் கொஞ்சம் நல்ல சூழலை ஏற்படுத்தியதில் மெல்ல மெல்ல அவர் அந்த எண்ணத்தில் இருந்து மீண்டார். நாளடைவில் நல்ல நிலைக்கு வந்தார். அப்போது எழுதிய கவிதை.

சாவக்கண்டு ஓடினாலும் கோழையென்பீங்க
சாவத் தேடி ஓடினாலும் கோழையென்பீங்க


இவையெல்லாம் அரங்கேறாத கவிதைகள்.

விசாகப்பட்டினத்தில் கவியரங்கம்
படத்தில் (இ-வ) வீரராகவன், R.S. மணி, ஹரி கிருஷ்ணன்



முதன்முதலில் அரங்கேறிய கவிதைபற்றிச் சொல்கிறேன். அப்போது நங்கநல்லூரில் ரூட் நம்பர் 70 பேருந்து மீனம்பாக்கத்திலிருந்து பிராட்வே போகும். அதில் மக்கள் தொங்கிக்கொண்டே போவார்கள். அப்போது பழவந்தாங்கல் ரயில் நிலையம் கிடையாது. அந்தப் பேருந்தின் நடத்துநர், மிகச் சிறப்பான, தன்னலமற்ற, கடின உழைப்பாளி. பெயர் வேணுகோபால். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். அவரைப் பாராட்டி ஒரு விழா எடுக்கவேண்டும் என்று நண்பர் கே.வி. அருணாசலம் விரும்பினார். கிரிக்கெட்டில் அவர் ஒரு ஜாம்பவான். ரஞ்சி ட்ராஃபி அம்பயர். அவருடைய முன்னெடுப்பில் நண்பர்கள் இணைந்து, வேணுவுக்கு ஒரு விழா எடுத்தோம்.

நம்பர் 70 பஸ் போகிற தடத்தின் இரண்டு முக்கியமான இடங்களில் இரண்டு தட்டுக்கூடைகள் போட்டு இரண்டு அருமையான நிழற்குடைகள் அமைத்தோம். எங்களை 'Squirrels' (அணில்கள்) என்று அழைத்துக்கொண்டோம். விழாவில் வேணுவைப் பாராட்டினோம். இரண்டு நிழற்குடைகளையும் திறந்து வைத்ததும் அவரேதான். இதை ஒரு பெருமையாக பல்லவன் போக்குவரத்துக் கழகம் கருதி, அவருக்குப் பதவி உயர்வும், சிறப்பு ஊக்கத்தொகையும் அளித்தது. போக்குவரத்துக் கழகத்தின் PRO தீனதயாளன் அவர்கள் அந்த நிகழ்வுக்கு வந்து, நடத்துநரைப் பாராட்டிப் பேசினார். அந்த நிகழ்ச்சி பத்திரிகைகளில் வெளிவந்து மிகவும் பிரபலமானது.

அப்போது வேணுவைப் பாராட்டி நான் ஒரு கவிதை எழுதி வாசித்தேன்.

அதன் ஒரு பகுதி:
நின்னை நான் போற்றியிங்கே
ஆக்கிய உரைகளெல்லாம்
மன்னும் நின் வழியில் நின்று
மற்றவரும் நடப்பர் என்று
எண்ணி நான் முடித்ததன்றி
நோக்கம் வேறொன்றுமில்லை


என்று முடித்திருந்தேன். இது 'பலச்ருதி' ஆகச் சொல்லப்பட்டது. எங்களுடைய நோக்கமும் அதுதான். அதைத் தெளிவாக வெளிப்படுத்தியதால் பலரும் அந்தக் கவிதையைப் பாராட்டினார்கள். அப்படிப் பாராட்டி என்னுடன் தொடர்புகொண்ட இனிய நண்பர்தான் கவிஞர் ஹரி கிருஷ்ணன் (ஹரிமொழி கட்டுரையாளர்). இதுதான் முதலில் அரங்கேறிய கவிதை.

பெண்களுக்கு அலுவலக நிர்வாகத்தில் பயிற்சி



கே: நல்லூர் இலக்கிய வட்டத்துடனான உங்கள் தொடர்பு பற்றி...
ப: நல்லூர் இலக்கிய வட்டம் எனக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம். எனது சிறு சிறு கவிதை முயற்சிகளுக்கு வடிகாலாக அமைந்தது அது. அதே 1970-71களில் பேராசிரியர் நாகநந்தி அவர்கள் தி.நகரை விட்டு நங்கநல்லூருக்குக் குடிபெயர்ந்தார். நல்லூர் இலக்கிய வட்டத்தின் முதுகெலும்பு என்று சொன்னால் அது இசைக்கவி ரமணன்தான். ரமணன் ஒரு கிரியா ஊக்கி. 'ஓர் அமைப்பைத் தொடங்கலாம்' என்று தூண்டிக்கொண்டே இருப்பான். எனக்கும் இயல்பாகவே ஓடியாடி வேலை செய்வதில் விருப்பமுண்டு. NSS, NCC, Squirrels, நங்கநல்லூர் ஸ்டூடண்ட் ஆர்கனைசேஷன், Nallur Entertainers இப்படிப் பல அமைப்புகளில் நான் அணில்போல வேலை செய்திருக்கிறேன். 'நல்லூர் இலக்கிய வட்டம்' என்று பெயர் சூட்டுவதற்கு முன்னாலேயே சில கவியரங்குகளை நடத்தினோம். 1972 ஜனவரியிலிருந்து தொடர்ந்து மாதம் ஒரு கவியரங்கு நடத்தினோம்.

ஒவ்வொரு கவியரங்கிற்கும் தலைப்பே ஒரு சவாலாக இருக்கும். பெரும்பாலான தலைப்புகள் பேராசிரியர் நாகநந்தி கொடுத்தது. நங்கநல்லூரில் ஹரி கிருஷ்ணன், ரமணன், கோபால், பொன். சுசீலா, குணசேகரன் என்று அருமையான கவிஞர்கள் இருந்தார்கள். ஒவ்வொரு கவியரங்கமும் ஒரு போட்டியைப் போல இருக்கும். எந்தக் கவிதை சிறந்தது, யார் சிறப்பாகச் சொல்கிறார்கள், யார் கவிதையை மக்கள் ரசித்தார்கள் என்றெல்லாம் கவியரங்கம் முடிந்தபின் பல மணி நேரம் உரையாடுவோம். பேராசிரியர் நாகநந்தி, "இது ஒரு ஜிம்னாஸியம். இதிலே நீங்கள் பயிற்சி செய்யுங்கள். விழுங்கள்; தவறு செய்யுங்கள்; எழுங்கள். திரும்பப் பயிற்சி செய்யுங்கள். இதுதான் உங்களைப் பெரிய அளவிலே கொண்டு செல்லும்" என்று சொல்வார். அவர் வாக்கு இன்றைக்குப் பலித்திருக்கிறது. அவர் தன்னை ஒரு 'தோஷக்ஞர்' என்று சொல்லிக்கொள்வார். அதாவது "எந்தக் கவிதையிலும் குற்றம் கண்டுபிடிக்கவே நான் இருக்கிறேன்" என்பார்.

கடைசி வரிசையில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு கவிதைகளைக் கேட்பார். தமது முடிவுரையில் ஒவ்வொரு கவிதையையும் அலசுவார். அவர் அலசுகின்ற கோணமே தனி. அதிலே விருப்பு, வெறுப்பின்றி, எல்லாவற்றையும் ஒரு தராசிலே நிறுத்துவார். அவரிடம் திட்டு வாங்காத கவிஞர்களே கிடையாது. பாராட்டியும் இருக்கிறார். அந்த பாக்கியமும் எனக்கு இரண்டுமுறை கிடைத்தது. பலமுறை திட்டு வாங்கியிருக்கிறேன்.

ஹரி கிருஷ்ணன்கூடத் திட்டு வாங்கியிருக்கிறார். 'வெள்ளை மலர்' என்று ஓர் அற்புதமான கவிதையை அவர் எழுதியிருந்தார். சுடுகாட்டிலே இருக்கின்ற ஒரு செடியில் இருக்கின்ற ஒரு வெள்ளை மலர். அது பாடுவது போல ஒரு கவிதை அமைத்திருந்தார். அந்தக் கவிதையின் கடைசி வரி, "செத்த பிணமதன் மேலேனும் பறித்தெனை எறியீரோ" என்று இருக்கும். ஒரு பெண் புலம்புவது போல, ஒரு மலர் புலம்புவது போல மிகவும் உருக்கமாக அந்தக் கவிதையை அமைத்திருந்தார். அதன் கடைசி வரிக்கு நான் கை தட்டினேன்.

நல்லூர் இலக்கிய வட்டம் - சில நினைவுகள்
நல்லூர் இலக்கிய வட்டத்திற்கு நல்ல கவிஞர்கள் வந்து சேர்ந்தார்கள். பொன். சுசீலா அங்கு வந்த முதல் பெண் கவிஞர். ஆண்டு விழாப் போட்டியிலே முதல் பரிசு வென்றார். சாரதா சுப்பிரமணியன் என்ற கவிஞர் நிகழ்ச்சிகளுக்குக் குடும்பத்துடன் வருவார். சிலரை நினைத்தாலே அவர்களுடைய அற்புதமான கவிதைகள் நினைவுக்கு வருகின்றன. கோபால் என்றால், "கமலத்தில் அழகு வைத்தான்; அதன் கர்வத்தையே போக்க எந்நாளும் சேற்றிலே காலினால் நிற்க வைத்தான். அமலன் மயில் படைத்தான். அதற்கு ஆட்டத்தில் புகழ் தந்து அழகற்ற குரலீந்து அகந்தையை அடக்கி வைத்தான்" என்ற கவிதை நினைவுக்கு வரும். குணசேகரன் அவர்கள் "ஆகப் பசித்தவன் உண்ணுவதில் அலுக்க உழைத்தவன் உறங்குவதில் நோகப் பிரிந்தவர் சேருவதில் நுவலரும் இன்பமே கோடியடா" என்று பாடினார். புதுவயல் செல்லப்பன் "அழவிடு முருகா அழவிடு" என்று கவிதை பாடி அரங்கில் இருந்த அத்தனை பேரையும் அழ வைத்தார். அவருடன் வீர மெய்யப்பன் வந்தார். அவர் அப்போது அமெரிக்காவில் கல்வித்துறையிலே இருந்தார். இப்போது இல்லை. "எதுகைக்காய்ப் பாடாதே; மது கைக்கப் பாடிவிடு" என்று பாடினார். கனடாவில் இருந்த R.S. மணி சார் அருமையான இசைப்பாடல்களைப் பாடுவார். "ஓசையுடன் ஓடிவந்த வெள்ளமெங்கே போச்சுதம்மா; ஆசையுடன் நாடி வந்த உள்ளமென்ன ஆச்சுதம்மா" என்று புலவர் பொன்னடியான் தலைமையில் அவர் பாடியது. இன்னமும் நினைவில் இருக்கிறது.

புலவர் பொன்னடியான், புலமைப்பித்தன், ஆற்றலரசு, கபிலவாணன், இளங்கார்வண்ணன், அனந்தன், இளையவன், மதிவண்ணன், இலந்தை சு. ராமசாமி போன்ற அத்துணை பெரிய கவிஞர்களும் நல்லூர் இலக்கிய வட்டம் வந்திருக்கிறார்கள். தலைமை தாங்கியிருக்கிறார்கள். கவிதை படித்திருக்கிறார்கள்.
கவிமாமணி பா. வீரராகவன்


நிகழ்ச்சியின் முடிவுரையில் பேசும்போது நாகநந்தி, "கவிதையின் கடைசியில் கை தட்டினீர்களே, என்ன ரசித்தீர்கள்?" என்று என்னிடம் கேட்டார். "கடைசி வரியை ரசித்தேன். மிக நன்றாக இருந்தது" என்றேன்.

"ஒரு மலர், பெண்ணுக்குச் சமம். ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமை அடைவது தாய்மையில்தான். மலர் பாடுவதுபோல் அமைந்தது இக்கவிதை. அந்த மலர் காயாகி, பழமாவதைத் தான் விரும்புமே தவிர, கூந்தலிலே சூடப்பட வேண்டும், பிணத்தின் மேல் எறியப்பட வேண்டும் என்றெல்லாம் விரும்பாது" என்று நக்கீரரைப்போல அவர் பொருட்குற்றம் கண்டார்.

அவர் அலசுகிற அழகே தனி. அவர் சொன்ன பின்னர்தான் எங்கள் மரமண்டையில் உரைத்தது. "ஒரு கவிஞனின் பார்வையில் மலரைப் பற்றிப் பாடினால் இது தவறல்ல. ஆனால், ஒரு மலரே தன்னைப்பற்றிப் பாடுவதாக வரும்போது இது பொருந்தாது" என்று அவர் விளக்கிச் சொன்னார்.

மாறாக, கவிமாமணி 'மஹி' குருசாமி. எந்தக் கவிதை நன்றாக இருந்தாலும் வாய்விட்டுப் பாராட்டுவார். தவறு இருந்தால், "இப்படிப் பாடு" என்று சொல்லிக் கொடுப்பார். இப்படித்தான் நாங்கள் வளர்ந்தோம். அதனால் நல்லூர் இலக்கிய வட்டத்தில் மிகச்சிறந்த கவிஞர்கள் உருவானார்கள்.

நீதியரசர் ஜகதீசன் கையால் 'கவிமாமணி'



கே: பாரதி கலைக் கழகத்தின் 'கவிமாமணி' விருது பெற்றவர் நீங்கள். அதனுடனான உங்கள் செயல்பாடுகள் குறித்துச் சொல்லுங்கள்.
ப: 2009 டிசம்பர் மாதம் நடந்த பாரதி கலைக்கழகத்தின் 52வது ஆண்டு விழாவில் எனக்குக் 'கவிமாமணி' பட்டம் அளித்துச் சிறப்பித்தனர். நீதியரசர் ஜகதீசன், மூத்த வழக்குரைஞர் காந்தி ஆகியோர் வந்து சிறப்பித்தார்கள். பாரதி கலைக் கழகத்துடனான எனது தொடர்பு மிக நீண்டது. நாங்கள் நல்லூர் இலக்கிய வட்டம் ஆரம்பிக்கும் முன்பே அதைக் குறித்துக் கொஞ்சம் அறிந்திருந்தோம். கவிஞர் இளங்கார்வண்ணன், அவரது அண்ணன் அனந்தன், கவிஞர் ஐயாறப்பன், சுராஜ் இவர்களெல்லாம் சேர்ந்து பாரதிக்கு ஓர் அமைப்பை ஏற்படுத்தி, தொடர்ந்து கவியரங்குகள் நடத்தவென ஓர் அமைப்பை ஆரம்பித்தார்கள். இளங்கார்வண்ணன், தன் வீட்டு வெள்ளிப் பொருள்களை விற்று, இதனை ஆரம்பிக்க உதவியதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

கவியரங்க ஜாம்பவன்கள் 'பீஷ்மன்' என்ற நா.சீ. வரதராஜன், கு. தேவநாராயணன், குரோம்பேட்டை சகோதரர்களான எதிரொலி விசுவநாதன், முருகசரணன், மதிவண்ணன் இவர்களெல்லாம் சிறப்பான கவியரங்குகளை நடத்திக் கொண்டிருந்தார்கள். 1972லிருந்து தொடர்ந்து அந்தக் கவியரங்குகளுக்குச் செல்வேன். அதை நிறுவிய 'பாரதி' சுராஜ் அருமையான ரசிகர். ஒரு நிகழ்ச்சியை நடத்துவதானால், அதைப்பற்றியே எப்போதும் சிந்திப்பார். அவர் ஒரு தூண்போல. உயர்ந்த நோக்கம் கொண்டவர். அவருக்கு வேண்டாதவர் யாருமில்லை. ஒரு குழந்தையைப் போலப் பேசுவார், பழகுவார்.

பாரதி கலைக்கழகத்தின் மூலம் பலரின் அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக பேராசிரியர் வ.வே.சு. அவருடன் மிக நெருங்கிப் பழகியிருக்கிறேன். பல அருமையான பாடல்களை இசையோடு பாடுவார். நல்ல கவிஞர், பேச்சாளர், இசைஞர் என்பதையெல்லாம் தாண்டி நல்ல மனிதர்.

கே: இன்றைய கவிதை உலகம் எப்படி உள்ளது?
ப: இளைஞர்களிடையே கவிதைக்கு வரவேற்பு குறைந்துவிட்டது. வெகுசிலரே மரபுக் கவிதை எழுதுகிறார்கள். வடிவமற்ற கவிதைகளைப் பலர் எழுதுகிறார்கள். பேராசிரியர் நாகநந்தி சொல்வார் "ஆங்காங்கே மின்னல்போலச் சில தெறிக்கும்" என்று. ஆனால், இன்று ஓரிடத்தில் கவிதை இருப்பதுபோல இருக்கிறது. ஆனால் அதனோடு நின்றுபோய் விடுகிறது. ஒரு தொடர்ச்சி இல்லை. கோவையில் மரபின் மைந்தன் பாசறையில் நிறையக் கவிஞர்கள் இருக்கிறார்கள். சென்னையில் விவேக் பாரதி போன்றவர்கள் நல்ல மரபுக்கவிதை எழுதுகிறார்கள்.

கவிதையில் கவித்துவம் இருக்க வேண்டும். பத்திரிகைகள் கவிதை வெளியிடுவதில்லை. வெளியிட்டாலும் பெரும்பாலும் காதல் கவிதைகள், டெலக்ஸ் வடிவக் கவிதைகள்தாம் வருகின்றன. கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது.

"கணந்தான் கொண்ட கனந்தான் நெஞ்சில் கனன்று கவியாகும்" என்ற கவிமாமணி இலந்தை ராமசாமி அவர்களின் கவிதை வரி நினைவுக்கு வருகிறது. கவிதை என்பது நெஞ்சிலே கனக்க வேண்டும். வாசிப்பவனை ஒருநாள் தூக்கமில்லாமல் செய்யவேண்டும். அப்படிப்பட்ட கவிதைகள் இப்போது அபூர்வமாகத்தான் வருகின்றன. பெரும்பாலானோருக்குப் படிக்க நேரமில்லை என்றாலும் இலக்கியப் புத்தகங்கள் விற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. கவிதைகள் இன்னமும் வளரவேண்டும் என்பது எனது கருத்து.

மும்பையில் கவியரங்கத் தலைமை



கே: உங்கள் சமுதாயப் பார்வை, பணிகள் குறித்துச் சொல்லுங்கள்.
ப: சேவை செய்வதற்குப் பணம், அதிகாரம் இவற்றைவிடச் சேவை செய்யவேண்டும் என்ற மனம்தான் வேண்டும். தனிமனிதனின் மனநிலை மேம்பட வேண்டும். அப்பொழுதுதான் இது நடக்கும். எங்கள் காலனியில், எங்கள் குடியிருப்பில், இதனை முன்னெடுக்க முற்பட்டபோது ஒரு பெரியவர், "youngsters are turks" (முரடர்கள், வன்முறையாளர்கள்) என்றார். அவர் பெரிய தனியார் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருந்தார். சற்று வருத்தத்துடன் சொல்கிறேன், அதற்கு முந்தைய தலைமுறை இளைஞர்களுக்கு வழிகாட்ட மறந்துவிட்டது. அதனால்தான் வளராமல் தேங்கினோம். தேக்கமே தேய்வுதான்.

நான் செய்த சமூகப்பணி என்றால், தனிப்பட்ட முறையிலே ஏழைகளுக்கு உதவியிருக்கிறேன். ஆன்மிக அமைப்புகள் மூலமும் உதவியிருக்கிறேன். NSS உறுப்பினராக இருந்தபோது பல முகாம்கள் நடத்தியிருக்கிறேன். ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை, ரோட்டரி சங்கத்திலே கம்யூனிடி சர்வீஸ் டைரக்டராக இருந்தபோது கண்ணகி நகர் பகுதி போன்றவற்றில் எல்லாம் மருத்துவமுகாம் நடத்தியிருக்கிறோம். நானே ஒலிபெருக்கியுடன் வண்டி எடுத்து வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறேன். குடிசைவாழ் மக்களை எல்லாம் அழைத்து வந்து, ரொட்டேரியன் வீரமணி, செட்டிநாடு மருத்துவமனை ஆகியோரின் உதவியுடன், 400, 500 பேருக்கு ஹெல்த் கேம்ப் நடத்தியிருக்கிறோம். சேவாலயா, கில்டு ஆஃப் சர்வீஸ் போன்ற சேவை அமைப்புகளில் இலவசமாகப் பயிற்சி முகாம்கள் நடத்தியிருக்கிறேன். பொருளாதார ரீதியில் பிற்பட்ட மாணவிகளுக்கு ரீடெயில் சேல்ஸ், ஃப்ரண்ட் ஆஃபிஸ் போன்றவற்றில் பயிற்சி கொடுத்து வேலையில் அமர்த்தியிருக்கிறேன். நிறையச் செய்ய ஆசை உண்டு.

கே: ஒரு தொழில்முறை மார்க்கெட்டிங் நிபுணராக உங்கள் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: முன்பு ஒரு கவிதை எழுதினேன். ஆங்கிலத்திலே.

This Dark forest
Was once the tiny seed
This towering Inferno
Was a little spark
This gushing river
Was a little spring
Every pinnacle of life
He climbs by His Grace
Was always
Small in the beginning


என்று முடித்திருப்பேன். எந்தவொரு மிகப்பெரிய சாதனையும் மிகச்சிறிதாகத்தான் ஆரம்பமாகிறது. மார்கெட்டிங் துறையில் நான் நுழைவதற்கு முன், 1970 ஜூலையிலே நான் பட்டம் பெற்ற பிறகு, தற்காலிக வேலைகளில் இருந்தேன். 1972 ஃபிப்ரவரியில் யூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராகச் சேர்ந்தேன். தொழிலாளர்களை மேற்பார்வை செய்வது. சரியான பணியினை அளிப்பது, உற்பத்தியைத் திட்டமிடுவது அனைத்தையும் ஏழரை மணி நேர ஷிஃப்டில் நான் பார்க்கவேண்டும். சரியான அளவில் மூலப் பொருள்களைப் பயன்படுத்தி, ஆட்களைச் சரிவரப் பயன்படுத்தி, சரியாக இயந்திரங்களை இயக்கவைத்து, தரமான பொருட்களை, குறிப்பிட்ட அளவு உற்பத்தி செய்யவேண்டும்.

மறக்கமுடியாத ஆண்டுவிழா
நல்லூர் இலக்கிய வட்டத்தின் ஆண்டுவிழாக்கள் மிகச்சிறப்பாக நடக்கும். ஒருமுறை உவமைக் கவிஞர் சுரதா தலைமையிலே கவியரங்கம். பிறகு கொத்தமங்கலம் சுப்பு பேசினார். பேசிக்கொண்டிருந்த போது, மூதறிஞர் ராஜாஜி மறைந்த செய்தி வந்தது. மின்சாரம் வேறு போய்விட்டது. சுப்பு அவர்களிடம் இந்தச் செய்தியை எப்படிச் சொல்வது என்று தயங்கினோம்.

பேராசிரியர் நாகநந்தி அறிமுக உரையில் கொத்தமங்கலம் சுப்புவைப் பற்றிச் சொல்லும்போது, "வேட்ட முடிஞ்சு போச்சு தம்பி, வீட்டுக்கு வாங்க" என்ற கவிதையின் சில வரிகளை எடுத்துச் சொன்னார். அதிலே உணர்ச்சி வசப்பட்டு சுப்பு அவர்கள், அந்தப் பாட்டை முழுக்கப் பாடினார். "மீசைக்காரர் என்னை அழவச்சுட்டார்" என்று சொல்லி அவர் கண்ணீர் விடும்போது, மேலும் அழுகை வரக்கூடிய இந்தச் செய்தி வந்தது. அந்த இருட்டிலேயே அவருக்குச் செய்தியைச் சொன்னோம். அதன் பிறகு அவர் 30 நிமிடம் ராஜாஜிபற்றிப் பேசினார். வசிஷ்டர், வாமதேவர், வியாசர், வைசம்பாயனர் என்றெல்லாம் புகழ்ந்தார். அந்த ஆண்டு விழா மறக்க முடியாத ஒன்று.
கவிமாமணி பா. வீரராகவன்


உற்பத்தி, விற்பனை என எல்லாப் பணிகளிலுமே ஓர் இலக்கு நிர்ணயிக்கப்படும். 'இத்தனை வங்கிக் கணக்குகளைச் சேர்', 'இத்தனை லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வை', 'இத்தனை லட்சம் பொருட்களை உற்பத்தி செய்' என்பதாக வாழ்க்கையே இன்றைக்கு எண்களைத் துரத்துவதாக ஆகிவிட்டது.

ஐந்து வருடம் தொழிற்சாலையிலே - எனது குருகுலம் என்று சொல்லலாம் - பலவற்றை மிகக் கடினமான முறையில் கற்றுக்கொண்டேன். என்னுடைய மேலதிகாரி கேப்டன் ராமநாதன் அற்புதமான மனிதர். நடுநிலையானவர். அகலாது அணுகாது தீக்காய்வார் போல என்கிறாற்போல அவரை நெருங்குவதும் கஷ்டம், நெருங்காமல் இருப்பதும் கஷ்டம். அப்படி எங்களை வழிநடத்தினார். அங்கு கற்றுக்கொண்ட பாடங்கள் எனக்கு வாழ்நாளில் பெருமளவிற்கு உதவின.

1977ல் சந்தையில் ஒரு பின்னடைவு உண்டானது. என்னைப் போன்ற இளைஞர்களை விற்பனைப் பிரிவுக்கு மாற்றிவிட்டார்கள். இதனால் நான்கு மாற்றங்கள் எனக்கு. ஒன்று, சென்னையிலிருந்து ஆந்திரா போனேன். இரண்டு, பேட்டரியிலிருந்து சினிமா ஆர்க் கார்பன் என்ற பொருளுக்கு மாறினேன். மூன்றாவது தெலுங்கு கற்கும் கட்டாயம். நான்காவது, லைஃப் ஸ்டைல் மாற்றம். வாரத்திற்கு ஆறு நாள் வேலை, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது மாறியது. 11 முதல் 22 நாள் சேர்ந்தாற் போல் டூர் செய்ய வேண்டும். ஆந்திரா முழுக்கச் சுற்றவேண்டும். அப்போது சாலைகள், பேருந்துகள் எப்படி, அதிலும் ஆந்திராவில் எப்படி இருந்திருக்கும் என்று நீங்களே நினைத்துப் பார்க்கலாம். வாடிக்கையாளர்கள் கிராமம், நகரம் என்று பரவி இருந்தார்கள். அதனால் நான் நேராக ரயிலில் ஓரிடத்துக்குப் போகமுடியாது. அப்போது இந்தியாவிலே 8600 திரையரங்குகள் இருந்தன. ஆந்திராவில் மட்டும் 2200. கிராமங்களுக்கெல்லாம் நான் செல்ல வேண்டியிருந்தது. இதனால் என்னுடைய வாழ்க்கை முறையே முற்றிலும் மாறிவிட்டது.

போட்டி மிக அதிகம். பொருளில் பெரிய வித்தியாசம் இல்லை. விலையில் பெரிய வித்தியாசம் இல்லை. என்னுடைய உறவுமுறை, வாடிக்கையாளர்களை நான் அணுகும் முறை, எங்களுடைய சேவை இது மட்டுமே விற்பனைக்குக் காரணமாக அமைந்தது. இதைப் புரிந்துகொண்டேன். மிக வெற்றிகரமாகச் செயல்பட்டேன்.

ஆறு வருடங்களுக்குப் பின் சென்னை வரவேண்டிய சூழல் ஏற்படவே, சென்னையில் HCL நிறுவனத்தில் சேர்ந்தேன்.

நவராத்திரிக் கவியரங்கம்



கே: HCL நிறுவனத்தில் உங்கள் சாதனை என்ன?
ப: ஹிந்துஸ்தான் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஆஃபிஸ் ஆட்டொமேஷன் எக்யுப்மெண்ட் டிவிஷனில் ஒரு டெரிடரி மேனேஜராகச் சேர்ந்தேன். முன்னர் எனக்குக் கிடைத்த அனுபவங்களைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை நேரடியாகச் சென்று சந்தித்து, அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்பச் செயல்பட்டேன். வாடிக்கையாளருக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது, உடன் வரும் சேல்ஸ் எக்சியுக்யூடிவ்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது, நாம் முன்னுதாரணமாக இருப்பது, வாடிக்கையாளரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து நினைவில் வைத்திருப்பது என்று நானே சுயமாகப் பலவற்றைப் பயின்றும், உடன் இருப்பவர்களுக்குப் பயிற்றுவித்தும் எனச் சிறந்த முறையிலே பணியாற்றினேன். முதலில் 'பெஸ்ட் டெரிடரி சூபர்வைசர்' என்று அவார்ட் கொடுத்தார்கள். தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை, மூன்று ஆண்டுகளுக்கொரு முறை, பதவி உயர்வு வந்தது. 95ல் நான் பணியை விட்டு விலகும்போது தென்னாட்டின் ரீஜனல் கமர்ஷியல் மேனேஜராக ஆகிவிட்டேன். பலமுறை விருதுகள் வாங்கியிருக்கிறேன். என்னை XLRI என்ற புகழ்பெற்ற நிறுவனத்திற்கு அனுப்பிப் பயிற்சி அளித்தார்கள்.

பிறகு ஏர்செல் நிறுவனத்தில் ரீஜனல் பிஸினஸ் ஹெட் ஆகப் பணி செய்தபோது கோவையும், மதுரையும் செய்யமுடியாத ஒரு சாதனையை நான் திருச்சியில் செய்தேன். 1999ல், திருச்சியில் செல்லுலார் ஃபோன் சேவை லாஞ்ச் செய்யும்போது, முதல் நாளிலேயே ஆயிரத்திற்கு மேற்பட்ட இணைப்புகளை நான் விற்றேன். எங்கள் சேர்மன் திரு சிவசங்கரன் அமெரிக்காவின் சன்னிவேல் நகரத்திலிருந்து என்னை அழைத்துப் பாராட்டினார்.

இன்றைக்கு என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் I do two things - selling and telling. விற்பனை செய்வது பயிற்றுவிப்பது இரண்டும் எனக்கு இரண்டு கண்களைப்போல.

கே: மனிதவள மேம்பாட்டுப் பயிற்சிகளை பாரதத்தின் பலபகுதிகளிலும் நடத்தி வருகிறீர்கள். அந்த அனுபவத்தில் பெற்றது என்ன?
ப:
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
வாழும் மனிதருக் கெல்லாம்;
பயிற்றிப் பலகல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்


"சிறியாரை மேம்படச் செய்தால் - தெய்வம் எல்லாரையும் வாழ்த்தும்" என்று பாரதி சொல்லுவான். கஞ்சி குடிப்பதற்கிலார், அதன் காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார் என்பது நிதர்சனமாகத்தான் இருக்கிறது. நல்ல திறமை, செயல்திறன், கடின உழைப்பு எல்லாம் இருந்தாலும், மனிதர்களைக் கையாளும் திறன் போன்ற சில திறன்கள் இல்லாததால் தொழிலில் முன்னேறுவதில்லை. எனக்கு இந்தப் பயிற்சி அனுபவம் மிகப்பெரிய வரமாகவே அமைந்தது.

ஒருசமயம் எனக்குத் தெரிந்ததை, என் சக ஊழியர்களுக்குச் சொல்லிக் கொடுத்ததை, மேலும் பிறருக்குச் சொல்லிக் கொடுத்தால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. நான் முயற்சித்தபோது, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் அப்படி ஒரு வாய்ப்புக் கிட்டியது. தென்னாடு முழுவதுமுள்ள அனைத்துப் பெட்ரோல் பங்க்குகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு அது. வகுப்பறையிலும், அவர்கள் பணியிடத்திலும் பயிற்சி நடக்கும். வாடிக்கையாளர் வந்து செல்லக்கூடிய அந்த ஐந்து நிமிடத்திற்குள், எப்படி அவருக்குத் திருப்தி உண்டாகும் அளவிற்குச் சேவை செய்வது என்பது நான் அளித்த பயிற்சி.

சரவணன் சென்னையில் வேலை செய்கிறார். அவர், "சார், வாடிக்கையாளர் வரும்போது புன்னகையோட வரவேற்கணும்னு சொல்றீங்க. எப்படி சார் முடியும்? நான் காலைல ஆறு மணிக்கு செங்கல்பட்டிலேர்ந்து வர்றேன். இது கார்னர் பங்க். எல்லா வண்டியும் நிறுத்துவாங்க. எல்லாரும் அவசரத்துல இருப்பாங்க. நம்மையும் அவசரப்படுத்துவாங்க. மூணு நிமிஷத்துக்கு மேல இருக்கமாட்டாங்க. மேல பாருங்க, இருக்கற கூரை பத்தாது. 12 மணி வெயில்ல நான் எப்படி சார் புன்னகை செய்ய முடியும்?" என்று கேட்டார். அருமையான கேள்வி. அந்த நிலையிலிருக்கும் ஒருவர் வாய் திறந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

"இப்படி யோசிங்க. கஸ்டமருக்கு சரியா சர்வீஸ் பண்ணலை, கோபத்துடன் அல்லது ரஃப் ஆக வாக்குவாதம் செஞ்சீங்கன்னா அப்புறம் இங்கே வரமாட்டார். அப்படிப் பல பேர் வரதை நிறுத்தினா, உங்க நிறுவனத்துக்கு நஷ்டம். நஷ்டம் வர்ற வியாபாரத்தை யாரும் செய்யமாட்டாங்க. குறைப்பாங்க. அப்போ அடிபடறது நீங்கதான். உங்க வருமானம், உங்களோட ஊக்கத்தொகை எல்லாம் குறையும். ஒருநாள் வேலையே இல்லாமலும் போகலாம். கஸ்டமர் வந்துகிட்டே இருக்கணும். அப்பத்தான் வேலை நிலைக்கும். நீங்க முன்னேற முடியும்" என்று கூறி நிறுத்தவில்லை. "எப்படி கஸ்டமர் வந்தா உங்க மகிழ்ச்சியைக் காட்டுவீங்க?" என்று அவரிடமே கேட்டு அவரையே பேசச் சொன்னேன்.

"உங்கள் அருமைத் தங்கைக்கு எவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் பண்ணீங்க, அதைச் சொல்லுங்க" என்றேன். அவருக்கு நிஜமாகவே ஒரு தங்கை இருந்தார். எவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் செய்தார் என்பதில் ஆரம்பித்து எல்லாம் சொன்னார். தங்கையின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தியாகங்கள் செய்திருக்கிறார். பணக்கஷ்டம், உடல் கஷ்டம், மனக்கஷ்டம், உறவுகளால் கஷ்டம் என்று எத்தனை இருந்தாலும், அந்த முகூர்த்த நேரத்தில், முதலாளி வந்து ஐநூறு ரூபாய் மொய் எழுதுகிறார் என்றால் முகத்தில் அத்தனை சந்தோஷம். அந்தச் சந்தோஷம் எதுக்கு வருகிறது?

"நாம் சின்னப் பத்திரிகை வைத்தோம், இதை மதிச்சு வந்தாரே நம்ம முதலாளி என்ற எண்ணம் வருகிறதல்லவா? இப்படி அந்த 'நாம்', 'நம்முடைய' என்ற எண்ணம் வந்தால் முகத்தில் சந்தோஷம் வரும். ஆனந்தம் இருக்கும். நம்ம கஸ்டமர். அவர் வந்தாதான் நமக்கு வியாபாரம். அவர் வந்தாதான் நம்ம முதலாளிக்கு லாபம், அந்த லாபத்திலதான் நமக்கு சம்பளம், நமக்கு இன்சென்டிவ், நமக்கு யூனிஃபார்ம் எல்லாம். இப்படி நினைத்துப் பாருங்கள்" என்றேன்.

இன்றைக்கு அந்த பங்க் சென்னையில் நம்பர் ஒன் பங்க்.

எதற்காகச் சொல்கிறேன் என்றால், அவர்கள் உள்ளத்தைத் தொடுமாறு நம்மால் கருத்தைக் கூறமுடியும் என்றால் அந்தப் பயிலரங்கம் சிறப்பாக இருக்கும்.

கவிதை நூல் வெளியீடு



கே: யார் யாருக்கெல்லாம் பயிற்சி அளித்திருக்கிறீர்கள்?
ப: சாதாரண ஊழியர் தொடங்கி, பொது மேலாளர் அளவிலுள்ள உயரதிகாரிகள்வரை நடத்தியிருக்கிறேன். பெண்களுக்கென்று தனியாக நடத்தியிருக்கிறேன்.

கில்டு ஆஃப் சர்வீஸ், சேவாலயா மாணவர்கள், மிகச் சாதாரண நிலையில் இருந்து வருபவர்கள். "சிறியரை மேம்படச் செய்தால் தெய்வம் வாழ்த்தும்" என்பதை நான் அடிமனதிலிருந்து நம்புகிறவன். அவர்களுக்கு நாம் வழிகாட்ட வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் 'என்ன பயத்ததோ சால்பு' என்று வள்ளுவர் சொன்னதைப் போல என்னுடைய அனுபவங்களும், என்னுடைய சிந்தனைகளும், என்னுடைய வாழ்க்கை நெறிகளும் பயனற்றதாகி விடும்.

மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் பல பயிற்சி அரங்குகளுக்கு என்னை விரும்பி அழைக்கிறார்கள். இந்த லாக் டவுன் காலக்கட்டத்திலேகூட ஆன்லைன் மூலம் சொல்லிக் கொடுக்கிறேன். எதற்காகச் சொல்கிறேன் என்றால் பயிற்சி மனதைத் தொடுகிற வகையிலே இருக்க வேண்டும். நாம் செய்து காட்ட வேண்டும், நான் பாவித்துக் காட்ட வேண்டும். அப்போதுதான் பயிற்சியில் வெற்றியடைய முடியும்.

மிகப்பெரிய ஐ.டி. நிறுவனம் ஒன்று சென்னையில் 2005ம் ஆண்டில் கிட்டத்தட்ட 5000 பேரை வெளியில் அனுப்பினார்கள். வேலைக்குறைப்பு. திடீரென்று கூப்பிட்டு பிங்க் ஸ்லிப்பையும் செட்டில்மெண்ட் செக்கையும் வைத்து விடை கொடுத்து விடுவார்கள். நான் ஒரு HR நிறுவனத்தின் மூலம் கேரியர் ட்ரான்சிஷன் கௌன்சலிங் (CTC) பணிக்கு அமர்த்தப்பட்டேன். வேலைநீக்கக் கடிதம் கொடுக்கும் அறைக்கு அடுத்த அறையில் நான் இருப்பேன். கிட்டத்தட்ட 50 பேருக்கு நான் கௌன்சலிங் செய்திருக்கிறேன். அழுவார்கள். கோபப்படுவார்கள். ஆத்திரத்துடன் இருப்பார்கள். ஆக்ரோஷப்படுவார்கள். வாய்க்கு வந்ததைப் பேசுவார்கள். சம்பந்தமே இல்லாத என்னையும் திட்டுவார்கள். ஒவ்வொருவருக்கும் மூன்று அமர்வுகளில் கௌன்சலிங் நடக்கும். அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்டு, அவர்கள் நிலையில் என்னை வைத்துப் பார்க்கவேண்டும். பின் அவர்கள் மூலமாகவே அவர்களது பலம், பலவீனத்தை அறிந்து அதை உணரவைக்க வேண்டும். மூன்றாவது நிலையில் அவர்களுக்கு என்னென்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் புரியவைக்க வேண்டும்.

தனியாகத் தொழில் செய்ய, கன்சல்டிங் செய்ய, மேலே படிக்க, புதிய தொழில்நுட்பம் கற்க, வேறு வேலை தேட என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை வாய்ப்பு. சிலர், தாங்கள் என்ன தவறு செய்தோம், எப்படித் திருத்திக் கொள்ளலாம், மீண்டும் செய்யாமல் இருக்கலாம் என்பதை உணர்ந்தார்கள். இப்படிப் பலருக்குப் பலவிதமாக நான் கூறினேன். அதை உணர்ந்து அடுத்த அடியை எடுத்து வைத்தார்கள்.

இவர்களில் பலர் நெடுநாள் என்னுடன் தொடர்பில் இருந்தனர். ஒரிசாவைச் சேர்ந்த ப்ரீதி.என்ற பெண்மணி, சென்னையிலிருந்து, பெங்களூரிலே வேறு வேலை கிடைத்து, திருமணம் செய்துகொண்டு, மீண்டும் ஒரிசாவில் செட்டில் ஆனார். தொடர்ந்து எனக்கு அப்டேட் செய்வார். நம்மால் ஒருவர் பயனடைந்து, அவர் அதை மறக்காமல் இருக்கிறார் என்றால் அதுதான் சிறியரை மேம்படச் செய்தல். அந்த வகையில் இது எனக்கு மனத்திருப்தியை அளிக்கிறது.

பித்துக்குளி முருகதாஸ் கையால் 'பாரதி புரஸ்கார்'



கே: உங்களுடைய பிற ஆர்வங்கள் என்னென்ன?
ப: கர்நாடக இசை, பழைய திரைப்படப் பாடல்களில் விருப்பமுண்டு. நாடகங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதியிருக்கிறேன். நடித்திருக்கிறேன். ஜே.எஸ். ராகவனின் கதைகளை அகில இந்திய வானொலியின் இளைய பாரதம் நிகழ்ச்சிக்காகவும், நல்லூர் என்டர்டெய்னர்ஸ் அமைப்புக்காகவும் மேடை நாடக வடிவத்தில் எழுதி அமைத்திருக்கிறேன். கிரிக்கெட்டில் ஆர்வம் உண்டு. 10 வருடங்களாக சமையலில் ஆர்வம் வந்திருக்கிறது. மதுரபாரதி கூறியது போல "சின்னச் சின்ன ஆசைகளின் சிலந்தி வலையில் வாழுகிறோம்".

ஆந்திரத்தில் சில அனுபவங்கள்
ஆச்சார்ய ரங்கா, ஒரு திரையரங்க உரிமையாளரின் நெருங்கிய உறவினர். பலமுறை நான் அந்த அரங்கிற்குச் செல்லும்போது அவரை அங்கே பார்த்திருக்கிறேன். அவரிடம் பேசியிருக்கிறேன். 'சங்கராபரணம்' விஸ்வநாத் அவர்களைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். அவரது அந்தப் படத்தால் ஈர்க்கப்பட்டு பலமுறை அவரது வீட்டிற்கே சென்று உரையாடியிருக்கிறேன். ஆலப்பாடி சுப்பாராவ் போன்ற நல்ல மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். நான் யாரோ ஒரு சாதாரண விற்பனைப் பிரதிநிதி. திரையரங்களுக்குத் தேவையான நூற்றுக்கணக்கான பொருட்களிலே ஒரு சின்னப் பொருளை விற்பவன். இருந்தாலும் எனது அணுகுமுறை, நட்புமுறை பெரிதும் பயன்பட்டது.

1979, நவம்பர் 19 அன்று மிகப்பெரிய புயல். அதில் சிக்கியிருக்கிறேன். எங்கிருக்கிறேன், யாருடன் இருக்கிறேன் என்றே தெரியாதபடி, கும்மிருட்டில் ஓரிடத்தில் சிக்கியிருக்கிறேன். அதனால் எனது இடது காது பழுதுபட்டு அது சரியாவதற்கு மூன்று ஆண்டுகள் ஆயின. மறுநாள் காலை சூரியன் வெளிச்சம் வந்தபின்தான் என்ன நடந்தது என்பதை ஊகிக்க முடிந்தது. கிட்டத்தட்ட 6000 பேர் இறந்து விட்டார்கள். "காத்தது தெய்வ வலிமையன்றோ" என்ற பாரதி வரியை நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

கிழக்கு கோதாவரி ஜில்லாவில் மலக்கிபுரம் என்ற ஊரிலிருந்து மேற்கு கோதாவரி ஜில்லாவில் நரசாபுரம் போகவேண்டும். இரவில் நதியைப் படகில் கடந்து செல்வேன். சாலை வழியாக நாலரை மணி நேரம் ஆகும். படகில் 30 நிமிடத்தில் சென்றுவிடலாம். அந்த நதிக்கே 'சைலண்ட் கில்லர்' என்று பெயர். தனியார் படகுகளில் எத்தனை பேரை ஏற்றுகிறார்கள் என்பதுகூடத் தெரியாது. அந்த இளவயதில், எந்தப் பயமுமில்லாமல் கும்மிருட்டில் பலமுறை இறைவனை மட்டுமே நம்பிப் பலமுறை போயிருக்கிறேன். "காத்துச் சுகம் பல நல்குவை" என்ற பாரதியின் வரிதான் நினைவுக்கு வரும்.
கவிமாமணி பா. வீரராகவன்


வானவில் பண்பாட்டு மையம் பாரதி விழாவில் பொற்கிழி, சால்வை



கே: இன்னும் செய்யவேண்டும் என்று நீங்கள் நினைப்பது ஏதேனும் உண்டா?
ப: விற்பனைத் துறை, விற்பனைத் திறமைகள் பற்றி தமிழில் நூல் எழுதவேண்டும். 'Business is People' என்று எப்படி நமது பழகும் முறை வணிகத்துறையில் உதவும் என்பதுபற்றி ஆங்கில நூல் எழுதும் எண்ணமும் இருக்கிறது. இதற்கான அடிப்படைப் பணிகளைச் செய்துவிட்டேன். இறையருளால், அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் இதைக் கொண்டுவந்து விடுவேன் என்று நம்புகிறேன்.

"நேர்மையாய் வாழ்வதில் தோல்வியே இல்லையே" என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். 'Ethics' என்பதை வலியுறுத்தியே எழுதுவேன். வாணிபமாகட்டும், வேலையாகட்டும், விற்பனைப் பணி ஆகட்டும், சூப்பர்வைசர் பணி ஆகட்டும், கன்சல்டன்ட் பணி ஆகட்டும், எந்த வேலையாக இருந்தாலும், வாழ்க்கையாக இருந்தாலும், சமுதாயமாக இருந்தாலும் அறவழியில் நடப்பவர்களுக்குத் தோல்வியில்லை என்பதை வலியுறுத்துகிறேன்.

மதுரபாரதி, அரவிந்த் சுவாமிநாதன்
Share: 




© Copyright 2020 Tamilonline