Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
கலி·போர்னியா பாடங்களில் இந்துமதம் - ஒரு சர்ச்சை
- மணி மு.மணிவண்ணன்|ஜனவரி 2006|
Share:
Click Here Enlargeசாக்ரமென்டோ நகரில், டிசம்பர் 1 அன்று கூடுவதாக ஏற்பாடு செய்த கலி·போர்னியா பாடத்திட்டக் குழுவினர் அந்தக் கூட்டம் இவ்வளவு பெரிய சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இத்தனைக்கும் அப்படி ஒரு கூட்டம் நடக்கப் போகிறதென்றோ, அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு கருத்துச் சொல்லலாம் என்றோ பெரும்பாலான கலி·போர்னியா இந்திய அமெரிக்கர்களுக்குத் தெரியாது. ஒரு பக்கம் வேதிய அறக்கட்டளை ஸ்வாமினி, இந்துக் கல்வி அறக்கட்டளையைச் சார்ந்த குடும்பத்தலைவி தலைமையில் உலகமெங்குமிருந்து பல இந்து அமைப்புகள், இந்துத்துவப் பரிவாரங்கள், அவர்களைச் சார்ந்த விற்பன்னர்கள். மறுபக்கம் ஹார்வர்ட் மற்றும் கலி·போர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தலைமையில் உலகப் புகழ் பெற்ற இந்தியவியல் அறிஞர்கள் பிரதிநிதி. நடுவில் இந்து மதத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாத பாடத்திட்டக் குழுவினர். இவர்கள் எல்லோர் கவலையும் கலி ·போர்னியா பாடநூல்களில் இந்தியா, மற்றும் இந்து மதம் பற்றிய பாடங்களைப் பற்றிதான். இதை1990களில் கிறித்தவ அடிப்படைவாதிகள் டார்வின் பரிணாம வளர்ச்சிக்கு முரணாகப் படைப்பியல் வாதத்தை முன்வைத்துப் போராடிய போது எழுந்த சலசலப்போடு ஒப்பிட்டார்கள் சிலர்.

ஒரு பில்லியன் மக்கள் வாழும் இந்தியா இன்று முன்னணி நாடுகளின் வரிசைக்கு சீனாவுடன் போட்டி போட்டுக் கொண்டு விரைந்து கொண்டிருக்கிறது. அமெரிக்க இந்தியர்கள் சிலிகன் வேல்லியின் அசுர வளர்ச்சியில் பெரும்பங்கு வகிப்பவர்கள். அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்ப மையங்கள் பல இந்தியாவுக்குப் பெயர்ந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர், பொறியாளர்கள் பலர் இந்தியாவில் படித்தவர்கள். இந்திய அமெரிக்கர்களின் சராசரி வருமானம் அமெரிக்காவிலேயே முதல் இடத்தில். உலகமயமாக்கலின் தூண்களின் ஒன்றான இந்தியாவைப் பற்றி அமெரிக்கப் பள்ளி மாணவர்களுக்கு என்ன தெரியும்?

அமெரிக்கப் பாடங்களின் ஆழமின்மை

பொதுவாக அமெரிக்கப் பாடங்களில் மேற்கத்திய வரலாறு, அதன் தொடர்புள்ள யூத, கிறித்தவ, இஸ்லாமிய வரலாறுகளின் ஆழம் இந்திய வரலாறு பற்றி இருப்பதில்லை. பெரும்பாலும் இதற்கு இந்தியா பற்றிப் பள்ளிப் பாட நூலாசிரியர்களின் அறியாமை தான் காரணம். மேம்போக்காக கர்மா, பசு, ஜாதி (karma, cows, caste) என்ற சூத்திரத்துக்குள் இந்திய வரலாற்றை அடக்கி, இந்தியாவின் ஏழைச் சேரிப் பகுதிகள், சினிமா போஸ்டரைத் தின்று கொண்டிருக்கும் நோஞ்சான் பசுமாடு, காசியில் நடக்கும் ஈமக்கடன் கிரியைகள் இவற்றின் படத்தை இட்டு, ஒரு மாபெரும் நாகரிகத்தின் வரலாற்றை கார்ட்டூன் போலச் சிறுமைப்படுத்தி விடுவார்கள்.

அப்படி இருந்தாலும், ஒரேயடியாகத் தவறான செய்திகளையோ, புண்படுத்தும் வகையிலோ அமெரிக்கர்கள் பாடங்களை எழுத மாட்டார்களே என்று ஆச்சரியப்பட்டார் ஆர்டென்வுட் பள்ளி மாணவி ஆரபியின் தந்தை சிவா சேஷப்பன். இதுவரை அமெரிக்கப் பாடங்கள் வெகு நேர்மையாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். கலி·போர்னியா கிறித்தவ மிஷன் பற்றிய பாடங்கள் சார்பில்லாமல் எழுதப்பட்டிருக்கின்றனவே என்றார் அவர். தங்கள் பிள்ளைகள் படிக்கும் பாடநூல்களில் அப்பட்டமான தவறுகள் எதையும் பார்த்ததில்லை என்றனர் சான் ஓசேயின் தில்லை குமரனும், ·ப்ரிமான்ட் மிஷன் பள்ளி மாவட்டத்தின் கணேஷ்பாபுவும். கலி·போர்னியா பாடங்களைப் பற்றிய சச்சரவு, எல்லாப் பெற்றோர்களையும் பாடநூல்களை மிகக்கூர்மையாகக் கவனிக்க வைக்கும் என்றனர் இவர்கள்.

பாடநூல் திருத்த முயற்சி

அமெரிக்கப் பாடநூல்களில் இந்தியா பற்றிய பாடங்களைத் திருத்தும் முயற்சி முதலில் வர்ஜீனியா மாநிலத்தின் ·பேர் ·பேக்ஸ் மாவட்டத்தில் தொடங்கியது என்று ஏப்ரல் 2005இல் வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டில் வெளிவந்த தகவல்களின் மூலம் தெரிகிறது. பாடநூல்களில் சித்தரிக்கப்படும் இந்தியா, மூடநம்பிக்கைகள் நிறைந்த, பிற்போக்கான மூன்றாவது உலக நாடு என்ற தவறான கண்ணோட்டத்தைத் தருகிறது என்று எண்ணிய வர்ஜீனியாவாழ் இந்திய அமெரிக்கப் பெற்றோர்கள், ·பேர்·பேக்ஸ் கல்வி மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். அமெரிக்க வேதிய நண்பர்கள், வேதிய அறக்கட்டளையின் உதவியுடன் பல திருத்தங்களைச் சமர்ப்பித்தனர் இந்து அமெரிக்கப் பெற்றோர்கள். பல திருத்தங்கள் நுட்பமானவை. புராணங்களைக் கட்டுக் கதைகள் என்று சொல்லியிருப்பது தெய்வ நிந்தனை போன்றது என்றனர் இந்து அமெரிக்கர்கள். திருத்தங்களைப் பரிசீலனை செய்த அறிஞர்கள் எல்லாத் திருத்தங் களையும் ஏற்கவில்லை என்றாலும், பல மாறுதல்களுக்கு வழிவகுத்தார்கள்.

வர்ஜீனிய முயற்சி கொடுத்த ஊக்கத்தால், கலி·போர்னியா பாடநூல்களைப் பரீசீலிக்கத் தொடங்கின அமெரிக்க இந்து இயக்கங்கள். கலி·போர்னியா கல்வி வாரியம் ஆறாண்டுகளுக்கு ஒரு முறை, பாடங்களைத் திருத்துவது பற்றிப் பாடநூல் பதிப்பாளர்களோடு கலந்து ஆலோசிக்கிறது. பாடநூல்கள் மாநிலத்தின் எல்லாக் கல்வி மாவட்டங்களுக்கும் அனுப்பிப் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கருத்துகளை வரவேற்கிறது. ஓராண்டுக்கு முன்னர் தொடங்கிய இந்த சுற்று இந்து இயக்கங்களுக்கு ஓர் அருமை யான வாய்ப்பை அளித்தது. டெக்சாஸ் ஆஸ்டின் மாநகரின் வேதிய அறக்கட்டளை, இந்துக் கல்வி அறக்கட்டளையின் கலி ·போர்னியப் பிரிவு ஆகியவை இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கையுள்ள நிபுணர்களை அணுகத் தொடங்கின. கனடா பேராசியர் திலக், பேரா. சுபாஷ் கக், லிண்டா ஜான்சன், லாஹ்தி, பெத் குல்கர்னி, போன்றோர் மட்டுமல்லாமல், ஓய்வு பெற்ற ஆசிய வளர்ச்சி வங்கி அதிகாரி கல்யாணராமன், பேரா. என்.எஸ். ராஜா ராம், ஓய்வு பெற்ற இந்திய அகழ்வாய்த் துறைத் தலைவர் பி.பி. லால், ஆகியோர் கருத்துகளும் பாடநூல் திருத்த முயற்சிக்குத் துணைபுரிந்தன.

பாடநூல்களில் ஏளனத்தொனி

மிகப்பெரிய கலி·போர்னியா மாநிலம் தேர்ந்தெடுக்கும் பாட நூல்கள் பெரும்பாலும் அமெரிக்கா முழுவதிலுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றன. எனவே கலி·போர்னியப் பாடங்களைப் பரிசீலிக்கும் முயற்சி தீவிரமாயிற்று. இந்துக்கள் யானைகளையும், குரங்குகளையும், பசுக்களையும் வழி படுபவர்கள், ஆற்றில் குப்பை போட்டு அதே ஆற்றிலேயே குளிப்பவர்கள், பரம ஏழைகள் என்பவை போன்ற சித்தரிப்பு பெரும் பான்மைக் கிறித்தவர்களின் ஏளனத்துக்கும், சிறுபான்மை இந்து மாணவர்களுக்குச் சங்கடத்துக்கும் காரணமாயிற்று. மற்ற அமெரிக்கர்களைப் போல் நாமும் சாதாரணமாக இருந்து தொலைக்கக்கூடாதா என்பவை போன்ற எண்ணங்கள் இந்து அமெரிக்கக் குழந்தைகள் சிலரை வாட்டின.

சில புத்தகங்களின் அப்பட்டமான ஏளனம் இந்து அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியளித்தது. சிலிக்கன் வேல்லியில் வாழும் கலவை வெங்கட், ஆக்ஸ்·போர்டு பல்கலைக் கழகப் பதிப்பகத்தின் கலி·போர்னியா பதிப்பை எடுத்துக் காட்டுகிறார். ராமாயணத்தைப் பற்றிய பாடத்தை "குரங்கு ராஜா ஹனுமான் ராமன் மேலுள்ள பாசத்தால், ராமாயணக் கதை சொல்லுமிடமெல்லாம் இருப்பதாக ஐதீகம். உங்களைச் சுற்றிப் பாருங்கள், குரங்கு ஏதாவது தெரிகிறதா?" என்ற கிண்டலோடு முடிக்கிறது இந்த நூல். வேதிய அறக்கட்டளை, சகிக்க முடியாத மேலும் சில சித்தரிப்புகளைப் பட்டியலிட்டது.

இவற்றின் ஏளனத் தொனியை கிறித்தவ, இஸ்லாமிய மதங்களின் சித்தரிப்போடு ஒப்பிட்டுப் பாருங்களேன் என்கிறார் கலவை வெங்கட். இந்த மதங்களின் நம்பிக்கைகளை வரலாறுபோல் சித்தரிக்கும் பாடங்கள், இந்துக்களைச் சித்தரிக்கும்போது ஏளனம் செய்கின்றன என்கிறார். பாடங்கள் சமூக வழக்கங்களான ஜாதி, தீண்டாமை போன்றவற்றை இந்து மதத்தோடு பிணைத்து இந்து மாணவர்கள் தங்கள் மதத்தைப் பற்றி வெட்கப்பட வைக்கின்றன. வேதங்களைத் திரட்டியவர், மஹாபாரதம், பகவத் கீதை ஆகியவற்றை இயற்றியவர் என்ற பெருமைக்குரிய வேத வியாசர் ஒரு மீனவப் பெண்ணின் மகன். ராமாயணத்தை இயற்றிய வால்மீகி முனிவர் ஒரு பழங்குடி வேடர். திருக்குறளை இயற்றிய வள்ளுவர் ஒரு பறையர். சைவ நாயன்மார்கள் சிலரும், வைணவ ஆழ்வார்களில் சிலரும் கூட ஹரிஜனங்கள். கெட்டதைச் சொல்லும் பாடங்கள் நல்லதையும் சொல்லலாமே! இந்து மதத்தில் குறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டும் பாடங்கள், கிறித்தவ, இஸ்லாமிய மதங்களின் குறைகளைக் கண்டு கொள்வதே இல்லை. இஸ்லாம், கிறித்தவ மதங்களுக்கான அதே அளவுகோலில் இந்து மதத்தையும் சித்தரிக்கக் கோருவதில் தவறென்ன என்கிறார் கலவை வெங்கட்.
Click Here Enlarge"ஆரியர் படையெடுப்பு" சர்ச்சை

சின்னஞ்சிறு பிழைகள், தேவையற்ற ஏளனங்கள், தொனி இவற்றைத் திருத்துவதோடு மட்டுமல்லாமல், எல்லா இந்து இயக்கங்களும் ஒன்றாகக் குறி வைத்தது "ஆரியர் படையெடுப்பு" என்பதைத்தான். எல்லாப் பாடங்களும், இந்தியாவின் முதல் நாகரீகம் சிந்து சமவெளி நாகரீகம் என்றும், அது ஆரியர் வருகைக்கு முற்பட்ட, ஆரியரல்லாத மக்களின் நாகரீகம் என்றும் குறிப்பிடுகின்றன. மேலும், ஆரியர் மத்திய ஆசியாவிலிருந்து பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர் என்ற முப்பிரிவுகளோடு வந்த குடிகள் என்றும், இந்தியா ஏற்கனவே இருந்த மக்களில் சிலரை நாலாவது பிரிவாகச் சூத்திரர் என்றும், மற்றவர்களைப் பஞ்சமர் என்னும் தீண்டத் தகாதவர்கள் என்றும் அடிமைப்படுத்தினார்கள் என்று குறிப்பிடுவதை வன்மையாக எதிர்க்கின்றன இந்து இயக்கங்கள். ஜாதிகளும், தீண்டாமையும் இந்து மதம் சாராத சமூகப் பழக்கங்கள் மட்டுமே என்கின்றன இவை.

அண்மைக்கால மரபணு ஆராய்ச்சிகள், இந்திய மக்கள் அனைவரும் ஒரே சந்ததியினர், அவர்களில் ஜாதி வேறுபாடு இல்லாமல் வேற்றுக்குடிகளின் மரபணுக்களைவிட, நாட்டுக்குடிகளின் மரபணுக்களே அதிகமாய் இருப்பது, ஆரியர் படையெடுப்பு என்ற கட்டுக்கதைக்கு ஆதாரம் இல்லை என்று உறுதியாக்குகிறது என்கின்றன இந்து இயக்கங்கள். ஆரியர் படையெடுப்பு என்ற குறிப்பைப் பாடங்களிலிருந்து நீக்கி, ஆரியர் இந்தியாவில் தோன்றியவர்கள் என்பதை வலியுறுத்த இந்து இயக்கங்கள் பெருமுயற்சி எடுத்தன.

வாஜ்பாய் குழு பரிசீலனை

கலி·போர்னியா பாடத்திட்டக்குழு, யூத, இஸ்லாமிய, இந்து மற்றும் சீக்கியர்களைப் பற்றிய திருத்தங்களைப் பரிசீலிக்க ஓய்வுபெற்ற கலி·போர்னியா மாநிலப் பல்கலை, நார்த்ரிட்ஜ் வரலாற்றுப் பேராசிரியர் சிவா வாஜ்பாய் உள்ளிட்ட ஒரு சிறப்புக்குழுவை நியமித்தது. பாடங்களை முழுக்க முழுக்க மாற்ற முடியாது, பிழைகளை மட்டும் தான் களைய வேண்டும் என்று வரைமுறையை விதித்தது.

வேதிய அறக்கட்டளை கலி·போர்னியா பாட நூல்களின் குறைகளைப் பற்றி 27 பக்கக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்தது. அறக் கட்டளை இயக்குநர் ஸ்வாமினி ஜானேஷ்வரி தேவி சமர்ப்பித்த இந்தக் கட்டுரையில் இந்து மதத்தைப் பற்றிய பிழையான செய்திகளால் இளம் இந்து மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறது என்பதைக் குழந்தை மனநல மருத்துவர் ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தார். "ஆரியப் படையெடுப்பு" முற்றிலும் பொய் என்று வாதிட்டது மட்டுமல்லாமல், இந்து மதம் பல கடவுளர்களை வணங்கும் மதம் என்பதையும் வன்மையாக மறுத்தது வேதிய அறக்கட்டளை. எல்லா இந்துக் கடவுளரும், பிரம்மம் என்ற பரம்பொருளின் கூறு. இந்து மதம் ஒரே முழுமுதற் கடவுளை வணங்கும் மதம், உயிர்ப்பலிகள் இந்து மதப் பழக்கமல்ல என்றும் வாதிட்டது. புத்தர் வாழ்ந்த காலம் பாடநூல்கள் சொல்வது போல் கி.மு. 563 அல்ல, உண்மையில் கி.மு. 1894 என்று வாதிட்டது. இந்துக் கல்வி அறக்கட்டளையும் தன் திருத்தங்களைச் சமர்ப்பித்தது.

அக்டோபர் இறுதியில் பேரா. வாஜ்பாய் சமர்ப்பிக்கப்பட்ட பல திருத்தங்களை அப்படியே ஏற்றுக் கொண்டார். புத்தர் காலம் போன்ற சர்ச்சைக்குள்ளவற்றை ஒதுக்கி விட்டார். வேதிய அறக்கட்டளை சமர்ப்பித்த 353 திருத்தங்களில் பல உண்மையில் திருத்தங்கள் அல்ல புதிய படைப்பு கள் என்பதால் அவை விலக்கப்பட்டன.

இந்தியவியல் அறிஞர்கள் அதிர்ச்சி

ஆரியப் படையெடுப்பு பற்றி பேரா. வாஜ்பாய் எடுத்த முடிவு ஹார்வர்ட் பேராசிரியர் மைக்கேல் விட்சல் மற்றும் பல இந்தியவியல் அறிஞர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பேரா. விட்சல் தலைமையில் இயங்கும் இந்திய யூரேசிய ஆராய்ச்சிக் குழு பேரா. வாஜ்பாய், வேதிய அறக்கட்டளை மற்றும் இந்துக் கல்வி அறக்கட்டளைகளின் இந்துத்துவத் தொடர்புகளை அலசியது. அறக்கட்டளைகளின் பாடத்திட்டத் திருத்த முயற்சி இந்துத்துவ அரசியல் உள்நோக்கங் களுடன் இயங்குவது என்ற முடிவுக்கு வந்த பேரா. விட்சலும் மற்ற அறிஞர்களும், கலி·போர்னியா கல்வி வாரியத்துக்குத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்தக் கடிதத்தில் உலகப் புகழ் பெற்ற ஆஸ்கோ பார்ப்போலா, ரோமிலா தாபர், ஸ்டான்லி வோல்பர்ட், மாதவ் தேஷ் பாண்டே, உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் கையொப்பமிட்டனர்.

கலி·போர்னியா கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துப் ஹார்வர்ட் பேரா. விட்சல், யுசிஎல்ஏ பேரா. வோல்பர்ட், யுசிடேவிஸ் பேரா. ஹைட்ஸ்மன் ஆகியோரைக் கூடுதல் பரீசீலனைக் குழுவாக நியமித்தது. கலி·போர்னியா கல்வித்துறை அலுவலர்களும் விட்சல் குழுவினரும், வாஜ்பாய் குழுவின் முடிவுகளை மறுபரிசீலனை செய்தனர். சமர்ப்பிக்கப்பட்ட 153 திருத்தங்களில் வாஜ்பாய் குழுவின் 34 முடிவுகளை ஏற்ற விட்சல் குழுவினர், ஏனைய திருத்தங் களுக்குத் தங்கள் மாற்றுக் கருத்துகளை அளித்தனர். குறிப்பாக ஆரியர் வருகை பற்றி வாஜ்பாய் குழு ஏற்ற 58 திருத்தங்களை நிராகரித்தனர். நவம்பர் இறுதியில் இதைப்பற்றிக் கேள்விப்பட்ட பல இந்திய அமெரிக்கர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமெரிக்கப் பேராசிரியர்கள், தலித் குழுக்கள், தமிழ் ஆர்வலர்கள், பேரா. விட்சல் குழுவுக்கு ஆதரவு தெரிவித்து, இந்துத்துவ முயற்சி பற்றிக் கவலை தெரிவித்துக் கலி·போர்னியா கல்வித் துறைக்குக் கடிதம் எழுதினார்கள்.

பேரா. விட்சல் மேல் தாக்குதல்கள்

விட்சல் குழு நியமனம் இந்து இயக்கங்களுக்குப் பெருத்த அதிர்ச்சி அளித்தது. உலகமெங்கும் இருந்து இந்து இயக்க ஆர்வலர்கள் கலி·போர்னியா பாடத்திட்டக் குழுவுக்கு மனு அனுப்பினர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மனுவில் கையொப்பமிட்டனர். வேதிய அறக்கட்டளை, இந்துக் கல்வி அறக்கட்டளை, மற்றும் தோழமை இந்து இயக்கங்கள் தாங்கள் அரும்பாடுபட்டு முந்தைய சுற்றுகளில் பெற்ற வெற்றிகளைத் தக்க வைத்துக் கொள்ள பெருமுயற்சி எடுத்தன. பேரா. விட்சல் கடிதத்தில் கையொப்பமிட்ட எல்லோருக்கும் பல இந்து ஆர்வலர்கள் கண்டனக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டனர். பேரா. விட்சலுக்கு எண்ணற்ற மிரட்டல் கடிதங்கள் வந்தன.

முன்னாள் ஆசிய வளர்ச்சி வங்கி அலுவலர் கல்யாணராமன் நடத்தும் "இந்தியன் சிவிலைசேஷன்ஸ்" வலைக் குழுவிலும், பேரா. விட்சல் நடத்தும் இந்தோ-யூரேசியக் குழுவிலும் அனல் பறக்கும் கடிதங்கள் பறந்தன. பேரா. விட்சல் தெரிவித்த சில கருத்துகள் இந்திய அமெரிக்கர்கள், குறிப்பாக இந்துக்களுக்கு அவமதிப்பு என்று ராஹூல் டனேஜாவும், மைரன் டெர்ஷோவிட்ஸும் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துக்கு வலை மனு எழுதினர். அதற்கும் இது வரை 1400க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் வந்துள்ளன. கலி·போர்னியா பாடத்திட்ட முயற்சியில் ஈடுபடுவதால் இந்துத்துவ அணியினரிடமிருந்து தாக்குதல் கள் வரும் என்று பேரா. விட்சல் எதிர் பார்த்திருந்தாலும், தாக்குதல்களின் தீவிரம் பேரா. விட்சலையும் அவரது குழுவினரை யும் அதிசயிக்க வைத்தது. விட்சல் கடிதத்தில் கையொப்பமிட்ட ஒவ்வொரு வரையும் தரக்குறைவாகத் தாக்கி வந்த கடிதங்கள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களையும் அசர வைத்து விட்டாலும், தங்கள் செயல் நேர்மையானது, தேவையானது என்று தொடர்ந்தனர் விட்சல் குழுவினர்.

பாடத்திட்டக் குழுவின் பரிந்துரை

சாக்ரமென்டோவில் நடந்த இரு நாள் கூட்டத்தில் முதல் நாள் வேதிய அறக்கட்டளை, இந்துக் கல்வி அறக்கட்டளை, மற்றும் பல தோழமை இந்து இயக்கங்கள், இந்துப் பெற்றோர்கள் கலந்து கொண்டு திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கருத்து தெரிவித்தனர். இந்து இயக்கங்களின் திருத்தங்களை எதிர்த்துப் பேச ஒருவருமே வரவில்லை. மறுநாள் கூட்டத்தில் பாடத்திட்டக் குழுவின் கலந்துரையாடலில், பெரும்பாலான உறுப்பினர்கள் தங்களுக்கு இந்துமதம் பற்றி ஒன்றும் தெரியாது என்று ஒதுங்கி விட்டனர். கலி·போர்னியா மாநிலப் பல்கலையில் பேரா. வாஜ்பாயுடன் பணிபுரியும் உயிரியல் பேராசிரியரும், குழு உறுப்பினருமாகிய டாக்டர் ஸ்டான் மெட்சன்பெர்க், வாஜ்பாய் குழுவின் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டு, பின்னர், விட்சல் குழுவினரின் ஆட்சேபங்களை ஒவ்வொன்றாய்ப் பரிசீலிக்கலாம் என்று சொன்னதைக் குழு ஏற்றுக் கொண்டது.

ஸ்டான்·போர்ட் லீனியர் ஆக்சலரேட்டர் மையத்தைச் சேர்ந்த டாக்டர் சார்லஸ் மஞ்சர் மட்டுமே பேரா. விட்சல் குழுவின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் என்று வாதாடினார். ஆனால், பேரா. மெட்சன்பர்க், இந்துக்கள் தங்கள் மதத்தைப் பாடநூல்களில் இனங்காண முடிய வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆரியர் வருகை பற்றிய சர்ச்சையில், உயிரியல் பேராசிரியான மெட்சன்பர்க், மொழியியல் கருத்தின் அடிப்படையில் அமைந்த ஆரியர் வருகையை மரபணு, டிஎன்ஏ ஆராய்ச்சி சந்தேகத்துக்குள்ளாக்கி இருக்கிறது என்றார். இறுதியில், சில வரலாற்றா சிரியர்கள் "ஆரியர் வருகை கொள்கை"யை நம்புகிறார்கள் என்று குறிப்பிடலாம் என பாடத்திட்டக்குழு முடிவு செய்தது.

குறிப்பிடத்தக்க மாற்றங்கள்

1. "பெண்களுக்கு ஆண்களை விட உரிமைகள் குறைவு" என்பது "பெண்களுக்கும் ஆண்களுக்கும் வெவ்வேறு உரிமைகளும் கடமைகளும் இருந்தன" என்று திருத்தப்பட்டது.

2. "ஜாதீயமும், தீண்டாமையும், இந்து மதத்தின் கூறுகள், ஆரியர் வருகையால் ஏற்பட்டவை" என்ற கருத்துகள் "ஜாதீயமும், தீண்டாமையும் நிலவின, இந்தியச் சட்டத்தின்படி தீண்டாமை ஒரு குற்றம்" என்று மாற்றப்பட்டன.

3. "ஆரியர் படையெடுப்பு/ஆரியர் வருகை" தொடர்புள்ள செய்திகளில், "சில வரலாற்றாசிரியர்கள் 'ஆரியர் வருகை கொள்கை'யை நம்புகிறார்கள், ஆரியப் படையெடுப்புக் கொள்கைக்கு எதிராக சில ஆராய்ச்சிச் சான்றுகள் உள்ளன" எனத் திருத்தப்பட்டது.

4. இந்து சமவெளி நாகரீகம் இந்தியாவின் முதல் நாகரீகம் என்பது இந்து சமவெளி நாகரீகம் இந்தியாவின் முற்பட்ட நாகரீகங்களில் ஒன்று எனத் திருத்தப்பட்டது.

5. "தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப் பட்ட மக்கள், ஏனையோர் அருவருப்பானது என்று கருதிய வேலைகளைச் செய்தனர்" என்பது "ஏனையோர் அருவருப்பானது என்று கருதிய வேலைகளைச் செய்தவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்று அழைக்கப்பட்டனர்" என்று திருத்தப்பட்டது.

6. "பசுக்கள் தெய்வீகமானவை, வணங்கப் படுபவை" என்பது "மேலைநாடுகளில் நாய்களை நேசிப்பது போல் இந்தியாவில் பசுக்கள் குடும்பத் தில் ஒன்றாக நேசிக்கப்படுகின்றன. அதனால் பசுக்கள் தெய்வீகமானவை, வணங்கத்தக்கவை என்று பொருளல்ல; அவை நேசிக்கப்படுகின்றன, மதிக்கப்படுகின்றன."

"வெளியே இருந்து வந்த ஆரியர்கள் உள்நாட்டு மக்களைச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாகவும் மாற்றி அடிமைப் படுத்தினார்கள்" போன்ற செய்திகள் நீக்கப்பட்டன. ஆரியர்கள் கொள்கைகளோடு உள்நாட்டு மக்களின் நம்பிக்கைகளும் கலந்து உருவானது இந்துமதம் போன்ற செய்திகள், ஆரியக் கொள்கைகளோடு, சிந்து-சரஸ்வதி நாகரீக மக்களின் நம்பிக்கைகளும் கலந்து உருவானது இந்து மதம் என்று திருத்தப்பட்டது.

எதிர்வினைகள்

தாங்கள் எதிர்பார்த்த எல்லா திருத்தங்களும் ஏற்கப்படாவிட்டாலும், பெருவாரியானவை, அதிலும், ஆரியர் படையெடுப்பு பற்றிய மாற்றங்கள் முக்கியமானவை என்று திருப்தி தெரிவித்தனர் இந்து இயக்கங்கள். ஆனால், இந்தியவியல் அறிஞர்களின் பரிந்துரைகளைப் புறக்கணித்து மதவாதச் சமூக அமைப்புகளின் உள்நோக்குள்ள கருத்துகளை அப்படியே கலி·போர்னியா பாடத்திட்டக்குழு ஏற்றிருக்கக்கூடாது என்றார் தெற்காசியாவின் நண்பர்கள் (FOSA) அமைப்பின் அனு மண்டவில்லி. "ஆரியர் வருகை" எதிர்ப்புக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று கருதுகிறது ·போசா. "இந்தியாவில் தோன்றாத மதங்கள் இந்தியாவில் இருக்கக்கூடாது" என்ற அடிப்படையில் கிறித்தவ, இஸ்லாம் மத எதிர்ப்புகளுக்கு வழி வகுக்கும் எண்ணம் இது என்கிறார்கள். இந்த இயக்கங்கள் எல்லா இந்துக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று எண்ணுவது தவறு என்கிறார் ·போசாவின் ஆஷீஷ். இந்து மதம் ஒரு குடையின் கீழ் இயங்கும் மதம் அல்ல. ஒரு சில குழுக்கள் எல்லா இந்துக்களின் பிரதிநிதியாக இருக்க முடியாது என்று வலியுறுத்துகிறார்.

இந்து மதம் ஒரு முழுமுதற் கடவுளை வழிபடுவது, எல்லா இந்துக்களும் வேதத்தை ஏற்பவர்கள், வேதங்கள் மரக்கறி உணவை வலியுறுத்துகின்றன என்ற வேதிய அறக்கட்டளையின் கொள்கை தவறானது என்கிறார்கள் அறிஞர்கள். இந்துக்களில் வெகு சிலருக்கே வேதம் பற்றித் தெரியும், நாட்டுப்புற இந்துக்கள் பலர் நாட்டுத் தெய்வங்களுக்கு ஆடு, கோழி பலியிட்டு வணங்குபவர்கள் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். வேதத்தை ஏற்றுக்கொள்ளும் ஆஸ்திகச் சமயங்களில் ஒன்றான பூர்வ மீமாம்சமும், வேதத்தை மறுக்கும் நாஸ்திகச் சமயமான லோகாய தமும், ஒரு முழுமுதற் கடவுளை மறுக்கும் சமயங்கள். பக்தி வழி செல்பவர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல, இறைவனை மறுக்கும் ஞான வழி பின்பற்றுபவர்களும் இந்துக்கள் தாம். இதை மறைப்பதும், மறுப்பதும் தவறு என்றனர். நாட்டுப்புறத் தெய்வ வழிபாடு பற்றி வேதீய அறக்கட்டளையும், இந்துக் கல்வி அறக்கட்டளையும் கருத்துச் சொல்ல மறுத்து விட்டன.

பாடநூல்களில் பெண்ணுரிமை, அடிமை விடுதலை, போன்றவற்றில் அமெரிக்க வரலாறு நேர்மையாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இந்திய வரலாறும் எல்லாப்பக்கங்களையும் சித்தரிக்க வேண்டும் என்கிறார் சான் ஓசேயில் வாழும் ஒரு தந்தை. தலித் என்ற சொல்லை மட்டும் எடுத்து விட்டால் போதாது. ஜாதீயமும் தீண்டாமையும் இந்து மதத்தின் கூறுகள் இல்லையென்றால், கோவில்களில் பயிற்சி பெற்ற யார் வேண்டுமானாலும் அர்ச்சகராகலாமே! தலித்தாகப் பிறந்த ஒருவர் சங்கராச்சாரியார் ஆக முடியும் என்றால், இந்துமதத்துக்கும் தீண்டாமைக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒத்துக் கொள்ளலாம் என்கிறார் அவர்.

பேரா. விட்சல் மீதான தாக்குதல்கள் ஏமாற்றத்தைத் தருகின்றன என்றனர் பலர். முப்பது ஆண்டுகளுக்கு மேலாக சமஸ்கிருதம் படித்து, வாழ்நாள் முழுதும் இந்தியப் பண்பாட்டு ஆராய்ச்சியில் ஆழ்ந்திருப்பவர் இந்தியர்கள் மேல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர் என்பது பொருந்தாது.

அதே சமயம், தாங்கள் இந்துத்துவ அணியைச் சார்ந்தவர்கள் என்ற குற்றச்சாட்டை இந்துக் கல்வி அறக்கட்டளையின் ஸ்வாமினி ஜானேஷ்வரி தேவியும், வேதீய அறக்கட்டளையின் அஞ்சலி படேலும் மறுக்கின்றனர். தாங்கள் இந்து மதத்தில் ஆழமான நம்பிக்கை உள்ள எல்லோரோடும் இணங்கி வேலை செய்பவர்கள், இந்து அமெரிக்கக் குழந்தைகள் கல்வி பற்றி மட்டுமே அக்கறை உள்ளவர்கள் என வலியுறுத்துகின்றனர்.

பேரா. விட்சல்

பாடநூல் குழுவின் முடிவுகள் பற்றித் தனக்கு ஏமாற்றம் இல்லை என்கிறார் பேரா. விட்சல். இது வரை இந்துத்துவம் என்ன வென்று தெரியாமல் இருந்த கலி·போர்னியா கல்வித் துறைக்கு இது விழிப்பூட்டும் என நம்புகிறார். பரிந்துரைகளை ஏற்பதா வேண்டாமா என்பது கல்வித் துறையின் முடிவு என்கிறார். தவறான முடிவுகளை மிகுந்த பொருட்செலவில்தான் திருத்த முடியும். இந்தியாவின் பாடநூல்கள் திரிக்கப்பட்டு, தற்போது மிகுந்த செலவில் மீண்டும் திருத்தப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். தனிப்பட்ட முறையில் தன்னைத் தாக்குவதைப் பொருட்படுத்தாத பேரா. விட்சல், ஏற்கனவே இந்துத்துவக் குழுக்களுடன் போராடிய அனுபவம் உண்டு என்கிறார். "ஆரியர் வருகை" கொள்கை மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட இவர், மரபணு, டி.என்.ஏ. ஆராய்ச்சிகள் தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றன என்கிறார். பழங்காலத்தில் நாடு பெயர்வோர் பெரும்பாலும் பெண்களை அழைத்துச் சென்றதில்லை. mtDNA ஆராய்ச்சி, இந்தியர்கள், இந்தியப் பெண்களுக்குப் பிறந்தவர்கள் என்றுதான் சுட்டிக் காட்டுகிறது என்கிறார். y-chromosome ஆராய்ச்சி மூலம் தான் தந்தையர் சிலர் வெளிநாடுகளில் இருந்து வந்தனரா என்று காண முடியும் என்கிறார். இன்றைய y-chromosome ஆராய்ச்சி நிலையில், ஒரு குடியினர் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் வந்தவர்களா என்று திட்டவட்டமாகச் சொல்வது கடினம். ஆனால், மொழியியல் சான்றுகள் திட்டவட்டமாக ஆரியர் வெளியிலிருந்து வந்தவர்கள் தாம் என்று காட்டுகிறது என்கிறார்.

வாக்குவாதங்கள் தொடரும்

தமக்கு எதிராக வளரக்கூடும் காழ்ப் புணர்ச்சிகளைத் தணிக்கப் பாடத்திட்டங்களை மிக மிக எச்சரிக்கையாகத் திருத்த முயன்று வரும் யூத, இஸ்லாமியக் குழுக்கள், இந்துக்களின் திருத்த முயற்சியைப் புரிந்து கொள்கின்றன. "அமெரிக்காவில், பெரும்பாலான நகரங்களில், இந்து மதம் சாத்தானை வழிபடும் புறமதம், இந்துக்கள் பழுப்பு நிறப் புறமதத்தார் என்ற கருத்துதான் நிலவுகிறது. பாடநூல் திருத்தங்கள், ஓரளவுக்காவது மதம் பற்றிய செய்திகள் கொடுத்து, ஏனைய கலாச்சாரங்களை மதிக்கக் கற்றுக் கொடுக்கின்றன" என்கிறார் மைரன் டெர்ஷோவிட்ஸ்.

வர்ஜீனியா பாடநூல் பரிசீலனையின் போது ஜோர்ஜ்டௌன் இறையியல் பேராசிரியர் ஏரியல் குலுக்லிச் சொன்னது பொருத்தமாய் இருக்கும். பாடநூல்களில் இந்து மதத்தின் சித்தரிப்பு பற்றிய எதிர்ப்புக் குரல்கள் இன்னும் ஒரு 75 ஆண்டுகள் தொடரும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார் பேரா. குலுக்லிச். இந்து மரபு, பல உலகக் கோணங்களைத் தன்னகத்தே கொண்டது. பல விஷயங்களில் ஏக மனதான கருத்தொற்றுமை இருக்கப் போவதே இல்லை. பாடநூல் திட்டக் குழுக்கள் அவ்வளவு காலம் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்து வரலாற்றின் சரியான சித்தரிப்பு குறித்து ஆசிரியர்களும், இந்து சமூகத்தினரும், பாடநூல் பதிப்பாளர்களுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்றார் அவர். இந்த சர்ச்சையால் இந்து அமெரிக்கப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் வரலாறு, மதக் கல்வியில் மேலும் ஈடுபாடு காட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.

மணி மு. மணிவண்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline