Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
ஹாக்கியும் ஹிட்லரும்
- சேசி|ஜனவரி 2006|
Share:
Click Here Enlarge'ஹிட்லருக்கும், ஹாக்கிக்கும் என்ன சம்பந்தம்?' என்று என் நண்பரிடம் புதிர் போட்டேன். இது என்ன பயித்தியக்காரத் தனமான கேள்வி என்பதுபோல் அவர் என்னைப் பார்த்தார். 'இதிலென்ன அதிசயம் - எல்லோரும் உன்னை அப்படித் தானே பார்க்கிறார்கள்?' என்று என்னை மடக்காதீர்கள்.

இந்தப் புதிர் மனதில் தோன்றக் காரணம், சென்னையில் நடந்து முடிந்த 2005-ம் ண்டு சஹாரா சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டி. ஆறு நாடுகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் சுழற்சுற்று ஆட்டங்களில் இந்தியா மிக மோசமாக ஆடி, நான்கில் தோற்று, பாகிஸ்தானை எதிர்த்து விளையாடிய ஒரே ஆட்டத்தில் மட்டும் வென்றது. சுழற்சுற்றில் பாகிஸ்தான் ஆஸ்திரேலியாவிடம் டிரா செய்ததைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் வெல்லவில்லை. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஐந்தாவது இடத்தை யார் கைப்பற்றுவார்கள் என்பதில் போட்டி. முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகள்தாம் அடுத்த வருடச் சாம்பியன்ஸ் கோப்பையில் நிச்சயமாகப் பங்குபெற முடியும். போட்டியின் இறுதி நாளன்று நடந்த இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வென்று இந்தியாவைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது.

ஹாக்கியில் அசைக்க முடியாத முதலிடத்தில் இருந்த இந்திய, பாகிஸ்தான் அணிகள் இப்படிக் கடைசி இரண்டு இடங்களுக்குத் தள்ளப்படக் காரணம் என்ன? அதை ஆராய்வதற்கு முன்னால் கொஞ்சம் பழம் பெருமையில் குளிர் காய்வோமா? அப்படியே எனது புதிருக்கும் விடை தேடலாம்!

எப்படி நம்ம ஊர் ·புட்பாலுக்கும், அமெரிக்க ·புட்பாலுக்கும் பெயர்க் குழப்பமோ, அதே போல நம்ம ஊர் ஹாக்கிக்கும், அமெரிக்காவில் பனிக்கட்டியில் சறுக்கி விளையாடும் ஹாக்கிக்கும் பெயர்க் குழப்பம் உண்டு. நம்ம ஊர் ·புட்பாலை சாக்கர் என்று அழைப்பதைப் போல, நம்ம ஊர் ஹாக்கியை ·பீல்ட் ஹாக்கி என்று அழைக்கின்றனர். ·பீல்ட் ஹாக்கியில் உலக அளவில் மூன்று முக்கியமான பந்தயங்கள் - ஒலிம்பிக்ஸ், உலகக் கோப்பை, மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை.

4,000 ஆண்டுகளுக்கு முன்னரே எகிப்தில் ஆடப்பட்டதாகக் கருதப்படும் ஹாக்கி, ஒலிம்பிக்ஸில் முதன் முதலாக 1908-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது. 1912-ல் சேர்க்கப்படவில்லை; மறுபடியும் 1920-ல் சேர்க்கப்பட்டது. ஹாக்கிக்கு உலக அளவு அமைப்பு இல்லை என்ற காரணத்தால் பாரிஸில் நடந்த 1924-ம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் மறுபடியும் விலக்கப்பட்டது. அதனால் 1924-ல் Federation Internationale de Hockey sur Gazon (F.I.H.) என்ற உலக அமைப்பு உருவானது. அதன் விளைவாக 1928-ம் ஆண்டிலிருந்து ஒலிம்பிக்ஸில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்தியா ஒலிம்பிக்ஸில் எவ்வளவு முறை தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்? எட்டு முறைகள்! 1928-ல் இருந்து 1956-வரை தொடர்ந்து ஆறு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இந்தியாவிற்குத் தான் தங்கம். ஹாக்கியில் இந்தியாவின் பொற்காலமாகக் கருதப்படும் இந்த வருடங்களில் ஒலிம்பிக்ஸில் 24 ஆட்டங்களில் தொடர்ந்து வென்று, இந்தியா 178 கோல்கள் போட்டது. அதே சமயம் இந்தியாவிற்கு எதிராகப் போடப்பட்ட கோல்கள் மொத்தம் ஏழே ஏழு! இந்தக் காலத்தில் இந்தியாவின் ஆதிக்கத்திற்கு மற்றொரு உதாரணம் அமெரிக்காவில் நடந்த 1932 ஒலிம்பிக்ஸில், அமெரிக்காவிற்கு எதிராக இந்தியா 24-1 என்ற கோல் கணக்கில் வென்றது. மிக அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தச் சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அந்த ஒரு கோலும் அமெரிக்கா போட்டதற்குக் காரணம், இந்தியாவின் கோல் கீப்பர் ஆட்டத்தில் ஆர்வம் இழந்து ரசிகர்களுக்கு ஆட்டோகிரா·ப் போட்டுக் கொண்டிருந்ததால் தானாம்! சுதந்திரத்திற்குப் பின்னால் ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தான் மூன்று முறை தங்கம் வென்றிருக்கிறது.

இந்தியாவிற்காக விளையாடிய திறமையான ஆட்டக்காரர்கள் கணக்கில் அடங்காதவர்கள். உத்தம் சிங், ரூப் சிங், சுரிந்தர் சிங் சோதி, பல்பீர் சிங் சீனியர், தன்ராஜ் பிள்ளை மற்றும் தற்போது விளையாடும் ககன் அஜித் சிங், V.S. வினய், இக்னேஸ் டிர்க்கி என்று அடுக்கிக் கொண்டே போகலாம். பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் ஹாக்கி ஆட்டக்காரர் என்ற பெருமை பல்பீர் சிங் சீனியருக்கு உண்டு. சமீப காலத்தில் விளையாடிய, பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழரான தன்ராஜ் பிள்ளை மட்டுமே நான்கு ஒலிம்பிக்ஸ், நான்கு உலகக் கோப்பை, நான்கு சாம்பியன்ஸ் கோப்பை, நான்கு ஆசியன் கேம்ஸ் மற்றும் நான்கு ஆசியக் கோப்பை ஆட்டங்களில் விளையாடிய பெருமை உடையவர்.

ஆனால் ஹாக்கியின் மாயா ஜாலக்காரர் என்று கருதப்படும் தியான் சந்த்-ஐக் குறிப்பிடாமல் இருக்கமுடியாது. மட்டையோடு பந்தை எடுத்துச் செல்வதில் (dribbling) இந்திய வீரர்கள் சிறந்தவர்கள் என்றாலும், தியான் சந்திற்கு நிகர் யாரும் இல்லை. ஹாலந்து நாட்டில் அவரது மட்டையை உடைத்து உள்ளே காந்தம் வைத்திருக்கிறாரோ என்று சோதித்துப் பார்த்தார்களாம். ஜப்பானியர்களோ அவர் ஒருவிதமான பசையை உபயோகித்துத்தான் பந்தை மட்டையோடு ஒட்டிச் செல்ல வைக்கிறார் என்று முடிவு எடுத்து விட்டார்களாம்! பத்மபூஷண் விருது பெற்ற இவரது இயற்பெயர் தியான் சிங். இவரது திறமையைப் பார்த்து வியந்த இவரது பயிற்சியாளர் இவர் சந்திரனைப் போலப் பிரகாசிப்பார் என்று கருதியதால் இவருக்கு சந்த் என்ற அடைமொழியைக் கொடுத்தாராம். அதுவே அவரது பெயரோடு ஒட்டி விட்டது. இவரும், இவரோடு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்ற ரூப் சிங்கும் சகோதரர்கள். இவரது மகன் அஷோக் குமாரும் புகழ்பெற்ற ஒலிம்பிக் ஹாக்கி வீரர்.

இந்தியாவின் ஹாக்கி சரித்திரத்தில் குறிப்பிட வேண்டியது 1936-ல் தியான் சந்த் தலைமையில் ஜெர்மனியில் நடந்த ஒலிம்பிக் போட்டி. ஹங்கேரிக்கு எதிராக 4-0, அமெரிக்காவிற்கு எதிராக 7-0, ஜப்பானுக்கு எதிராக 9-0, ·பிரான்சுக்கு எதிராக 10-0 என்று அதிரடியாக வென்று ஜெர்மனியை இந்தியா இறுதி ஆட்டத்தில் சந்தித்தது. 40,000 பார்வையாளர்கள் திரண்டு வந்திருந்த அந்த ஆட்டத்திற்கு முக்கிய விருந்தாளி, அப்போது உலகை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த சர்வாதிகாரி அடால்·ப் ஹிட்லர்! ஜெர்மனிக்கு எதிராக ஜெர்மனியிலேயே போட்டி நடப்பதோ, பார்வையாளர்களின் மத்தியில் ஹிட்லர் அமர்ந்திருப்பதோ இந்திய ஆட்டக்காரர்களைச் சிறிதும் தளர்த்தவில்லை. தன் இன மக்களே உயர் குலத்தவர் என்று கருதிய ஹிட்லரின் கண்ணெதிரேயே ஜெர்மானிய அணி நசுக்கப்பட்டது. ஜெர்மானிய அணியினர் விரக்தியில் விதிகளை மீறி இந்திய வீரர்களைத் தாக்க ஆரம்பித்தனர். அந்த மோதலில் தியான் சந்த் ஒரு பல்லை இழந்தார். ஆனாலும் இந்தியா 8-1 என்ற கணக்கில் ஜெர்மனியை வென்று தங்கத்தைக் கைப்பற்றியது.
தனது அணியின் மோசமான நிலைமையைப் பார்க்க முடியாமல் ஹிட்லர் பாதி ஆட்டத்திலேயே எழுந்து சென்று விட்டாராம். மறுநாள் ஹிட்லர் தியான் சந்த்தை அழைத்துத் தனியாகச் சந்தித்தார். இந்திய ராணுவத்தில் சாதாரண சிப்பாயாக இருந்த தியான் சந்த்திற்கு ஜெர்மானிய ராணுவத்தில் பெரிய பதவியைக் கொடுத்ததாகவும், ஜெர்மனியின் ஹாக்கி அணியில் விளையாட வாய்ப்புக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், பணத்தையோ, புகழையோ தேடாத தேச பக்தரான தியான் சந்த் அந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

நம் அனைவர் மனதிலும் இருக்கும் கேள்வி, இப்படி ஹாக்கியில் கொடிகட்டிப் பறந்த இந்தியா கடந்த 20 ஆண்டுகளாக ஏன் பின்தங்கிவிட்டது? 1980 ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு ஹாக்கியில் ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை. உலகக் கோப்பையை இந்தியா ஒரு முறை 1975-ல் மட்டுமே வென்றிருக்கிறது. இந்தியாவில் பல திறமையான ஆட்டக்காரர்கள் இருந்தாலும், ஏன் இந்த நிலமை நீடிக்கிறது? இந்தக் கேள்விகளுக்கு விடைகாண ஹாக்கி ஆட்டத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்க வேண்டும். 1970-களிலிருந்து இயற்கையான புல்தரையில் விளையாடுவது குறைந்து செயற்கைத் தளங்களில் ஆட்டம் நடக்கிறது. இந்த அரங்கங்களில் பயன் படுத்தத் தோலினால் செய்யப்பட்ட பந்துகள் போய் இப்போது கடினமான பிளாஸ்டிக் பந்துகள் உபயோகிக்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் மரத்தால் ஆன மட்டைகள் போய் இப்போது fiber glass, carbon fiber போன்ற செயற்கையான பொருட்கள் உபயோகப்படுத்தப் படுகின்றன. ஆட்டக்காரர்கள் அணியும் shoes, pads போன்ற உபகரணங்களும் மாறிவிட்டன. வேகமான தளம் மற்றும் பந்திற்கேற்ப மட்டைகளின் வடிவமும் சற்றே மாறிவிட்டது. அதனால் ஆட்டத்தில் வேகம் அதிகரித்து dribbling போன்ற நுணுககங்கள் குறைந்து வேறு பல புதிய யுத்திகள் புகுத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப விதி முறைகளும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மாற்றங்களுக்கு வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஈடு கொடுக்க முடியவில்லை. செயற்கைத் தளங்களை அமைப்பதற்குச் செலவு அதிகம் என்பதால் இத்தகைய தளங்கள் இந்தியாவில் அதிகம் கிடையாது. இந்திய வீரர்களுக்குப் புதிய நுணுக்கங் களைப் பழக வாய்ப்புக் குறைவு. எனவே ஹாக்கியின் ஆதிக்கம் ஆஸ்திரேலியா, நெதர்லாண்ட்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பணக்கார நாடுகளுக்குத் திரும்பி விட்டது.

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் வேகம், அவர்கள் செய்யும் கடுமையான பயிற்சி, மற்றும் தளர்ச்சி அடையாமல் விளையாடக் கட்டுக்கோப்பாக உடலை அவர்கள் வைத்திருக்கும் விதம் ஆகியவைதான். இந்தியாவின் பயிற்சி முறைகள் மாற வேண்டும்; பயிற்சிக்கான தளங்கள், வசதிகள் பெருக வேண்டும்; கிரிக்கெட்டிற்கு விளம்பரதாரர்கள் செல வழிப்பது போல் ஹாக்கிக்கும் வருமானம் பெருகவேண்டும். இந்த மாற்றங்களுக்கு அரசாங்கம் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் உதவ வேண்டும்.

கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு நோய்வாய்ப் படுக்கையில் இருந்த தியான் சந்த் தான் இறப்பதற்காக வருந்தாமல் 'இந்தியாவில் ஹாக்கி இறந்துகொண்டு வருகிறது' என்று வருந்தினாராம். அவரது ஆத்மா சாந்தி அடைய, நம் அனைவரின் ஏக்கங்களும் தீர இந்தியாவின் ஹாக்கி எதிர்காலம் விரைவில் ஒளிபெறும் என்று நம்புவோம்.

சேசி
Share: 




© Copyright 2020 Tamilonline