Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புதுமைத்தொடர் | இலக்கியம் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | பயணம் | புழக்கடைப்பக்கம் | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சிறுகதை
என் பேத்தி வருகிறாள் !
- உமா|ஜனவரி 2006|
Share:
Click Here Enlargeஎன் பேத்தி வருகிறாளாம். நேற்றுதான் மணியிடமிருந்து லெட்டர் வந்தது. இவர் தான் படித்துச் சொன்னார். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த பெண், ஏன் பாதி அமெரிக்கப் பெண்! அம்மா கேதரின் முழு அமெரிக்கர் தானே. கேட்டதிலிருந்து எனக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. நானோ இந்த கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத ரெண்டும் கெட்டான் ஊரிலேயே பிறந்து வளர்ந்து வாழ்க்கைப்பட்டு கிழவியும் ஆகிவிட்டேன். தமிழ்நாட்டை விட்டு வெளியே போனதில்லை.

என் பேத்திக்குத் தமிழ் பேச வருமோ? எப்படி வரும்! என் பிள்ளை மணி இங்கே பத்தாவது வரை தமிழ் மீடியத்திலே படித்தவன். அவனே இப்போது தமிழில் கடுதாசி எழுதுவதில்லை. இங்கிலீஷ் தான் எழுத வசதியாம். இந்தப் பெண் எங்கே பேசப் போகிறாள்.

மணி அமெரிக்காவுக்குப் படிக்கப் போய் ஆச்சு இருபத்தி ஏழு வருஷம். இருபத்தி இரண்டு வயசிலே இன்ஜினியர் படிப்பு முடித்த உடனே கிளம்பிப் போனான். அந்த நாளிலே அவன்தான் எங்கள் ஊரிலிருந்து முதன்முதலாக அமெரிக்காவுக்குப் படிக்கப் போனவன். பேப்பர்ல எல்லாம்கூட சேதி வந்தது. பேப்பர்னா எங்க ஊர் 'கதிரவன்' தான், ஏதோ இந்து பேப்பர் என்று நினைக்காதீங்கோ.

இவனுக்கு உதவித்தொகையுடன் சீட்டு கிடைச்ச சமாசாரம் வந்தவுடனே அவன் அப்பாவுக்குத்தான் என்ன பரபரப்புத் தெரியுமோ. பெருமையிலே தலை கால் புரியவில்லை. எனக்கும் பெருமைதான் என்றாலும் பிள்ளை இவ்வளவு தள்ளிப் போகிறானே என்ற துக்கம்தான் முதலில் தொண்டையை அடைத்தது. போகப்போக என்னைச் சமாதானம் பண்ணிக் கொண்டேன்னு வெச்சுக்கோங்கோ. கணபதி ஹோமம் பண்ணி, குலதெய்வத்துக்கு அபிஷேகம் செய்து, நல்லபடியாகப் படித்துச் செளகரியமாகத் திரும்பி வரணுமேன்னு தெரிந்த, தெரியாத கடவுளுக்கெல்லாம் நேர்ந்துண்டு அனுப்பி வைத்தோம்.

இப்போ அமெரிக்காவிலே நம்மவர்கள் கணக்கில்லாம இருக்கிறதா சொல்லிக்கறா. தமிழ்ப் பத்திரிக்கைகூட இருக்காமே. எங்க தெருவிலேர்ந்தே ஆறு, ஏழு பையன்கள் அங்கே உத்தியோகம் பண்ணுகிறார்கள். ஏன், கோடி வீட்டு மங்களத்தோட பேத்தி கூட போனமாசம் கிளம்பிப் போயிருக்காளே. ஆபிஸிலேயிருந்து அனுப்பியிருக்காளாம். ஒரு வருஷம் அங்கேயே இருப்பாளாம்.

மணி போனப்போ அங்கே எங்களுக்குத் தெரிஞ்சவா அறிஞ்சவா யாரும் கிடையாது. எங்க மூத்த பெண் ராதியோட ஓர்ப்படிக்கு அண்ணா பிள்ளை இருக்கறதா சொன்னா. விசாரித்ததில் அவன் எங்கேயோ மூவாயிரம் மைல் தள்ளி கனடாவில் இருக்கிறதாச் சொல்லிட்டா. ஆக மொத்தம் இவனுக்கு என்று கேட்க ஒரு நாதியும் கிடையாது.

ஏதோ எனக்குத் தெரிஞ்சது, கையிலே பொடி வகைகள், புளிக்காய்ச்சல், ஊறுகாய் கொடுத்து அனுப்பினேன். அதுவும் சாமான் எடை அதிகமாகிவிடும் என்று சின்ன பாட்டில்களில்தான்.

அவன் கிளம்பற நாள் என்ன ஒரு கூட்டம் தெரியுமோ? அத்தனை உறவுக்காராளும் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து மாலையெல்லாம் போட்டு அமர்க்களப்படுத்திட்டார்கள். நானும், அவன் அப்பாவும் சென்னை ஏர்போர்ட்டுக்குப் போய் வழியனுப்பினோம். கிளம்பறச்சே மணிக்கும் கண்ணில் நீர் ததும்பிவிட்டது. என்னை விட்டுப் பிரிஞ்சு ஒருநாள்கூட இருந்ததே இல்லை. என்ன செய்ய, பிள்ளைக் குழந்தைகள் படிப்பு, பிழைப்புன்னா எங்கே வேணுமோ போகத்தானே வேணும்.

அவன் அமெரிக்கா போன புதுசில் வாரம் தப்பாமல் கடுதாசு வரும் அவனுக்கும் அவன் அப்பாவைப் போல் இயற்கையை ரசிக்கிற சுபாவம். அவன் இருக்கிற ஊரை அப்படி வர்ணித்து எழுதுவான். மலையும், பள்ளத்தாக்கும், நதியும், எங்கே போனாலும் அடர்ந்த மரங்களும், இயற்கையை அழிக்காமல், போஷித்து பாதுகாக்கும் அக்கறையும் எல்லாமே அவனுக்கு வியப்பாக இருக்கும். நம்மூரிலே காட்டையெல்லாம் இப்படி அழிக்கிறோமே நதியெல்லாம் இப்படி கண்ட ரசாயனங்களைப் போட்டு கெடுக்கிறோமே, ஜனத்தொகை இப்படி கட்டுப்படாமல் பெருகிறதே என்று ஏகமாய்க் கவலைப்படுவான்.

சாப்பாட்டுக்குத்தான் ரொம்ப கஷ்டப்பட்டான். நம்மூர் சாமான் கிடைக்கிறதே சிரமமாம். தானே ஏதோ சமையல் செய்து சாப்பிடுவானாம். மீனாட்சி அம்மாள் 'சமைத்துப் பார்' புத்தகமெல்லாம் வாங்கி அனுப்பச் சொன்னான்.

அஞ்சு வருஷம் படித்து ரசாயனத்தில் டாக்டர் பட்டம் வாங்கினதும், மூன்று பெரிய கம்பெனிகள் அவனுக்கு வேலை கொடுக்க கியூவில் நின்னாளாம். அப்படி மகாகெட்டிக்காரன்னு பேராம். வேலையிலே சேர்ந்து ஒரு மூணு மாசம்தான் இருக்கும் குண்டைத் தூக்கிப்போட்டாப்பல ஒரு சேதி. அவன் அப்பாவுக்கு இங்கிலீஷிலே எழுதிட்டு எனக்கும் ஒரு பக்கம் தமிழிலே எழுதியிருந்தான். காதரின் என்கிற அமெரிக்கப் பெண்ணை ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிண்டுட்டானாம். நாலு வருஷமா படிக்கிற காலத்திலிருந்து பழக்கமாம். ரொம்ப நல்ல குணம், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண், நம்ம மதத்தை ரொம்பவே மதிக்கிறவள் என்று புகழ்ந்திருந்தான். "காதரின் இந்து விதிப்படி கல்யாணம் செஞ்சுக்க ரொம்ப ஆசைப்படுகிறாள். அப்பாவும் நீயும் வந்திருந்து, அமெரிக்காவிலேயே நடத்திக்கொடுக்க வேணும். கோவிலிலேயே எல்லா ஏற்பாடும் செய்ய வசதியிருக்கு...'' என்றும் எழுதியிருந்தான். விசா வாங்கும்படி ஏதோ சப்போர்ட்டிங் பேப்பர்கள் எல்லாம் அனுப்பியிருந்தான். தயாரானவுடன் டிக்கெட் வாங்கி அனுப்புகிறானாம்.

முன்யோசனை இல்லாமல் ஒரு காரியத்தையும் பண்ணிவிட்டு ஒன்றுமே நடக்காத மாதிரி இந்தப் பையன் எழுதியிருக்கிற கடிதாசைப் பார்த்து எனக்கு வயத்திலே பகீர் என்றது. என்ன பிள்ளை இவன்! ஆசையையும், அருமையையும் கொட்டி இவனை வளர்த்த வளர்ப்பென்ன, இந்த ஊரிலே உறவுக்காரா மத்தியில இவருக்கு இருக்கற மரியாதை என்ன? ஒரு நிமிஷத்திலே எல்லாம் தூக்கி உதறிட்டானே. எங்கள் சுத்துவட்டாரத்திலே ஒரு கல்யாணம் இவரைக் கலந்தாலோசிக்காம நடந்திருக்குமா? ஜாதகம் கையிலே எடுத்ததுமே எல்லோரும் இவர் அபிப்பிராயம் கேட்டுண்டுதான் அடுத்தப்படி மத்ததெல்லாம். எதையும் ஆற அமர ஆலோசனை பண்ணி, நல்லது கெட்டது விசாரித்து முழுத் திருப்தியானப்புறம்தான் ஒரு முடிவெடுப்பார். அவர் தீர்மானமாக ஒரு வார்த்தை சொன்னால் அது தப்பாக இருக்காது என்று மனுஷாளுக்கு அப்படி நம்பிக்கை.

அப்பேர்ப்பட்ட மனுஷரண்டை ஒரு வார்த்தை முன்கூட்டியே பேசி அவர் ஒப்புதல் வாங்கினப்புறம் கல்யாணத்தை வெச்சிக்க முடியாமல் அப்படி என்ன அவசரம்? இந்தக் கல்யாணத்திலதான் அவனுக்குச் சந்தோஷம் என்றால் அவர் என்ன தடுக்கிற மனுஷனா?

வாழ்க்கையிலே எத்தனை கஷ்டநஷ்டம் பார்த்தவர் அவர். அப்பாவும், அம்மாவும் ஒரு ரயில் விபத்திலே காலமான போது வயது இருவதுதான் அவருக்கு. கீழே மூணு தங்கைகள். ஒருத்திக்குத்தான் கல்யாணமாகி இருந்தது. பதினைஞ்சும், பனிரெண்டுமா இருந்த தங்கைகளைப் பொறுப்பாய் பார்த்துண்டு காலாகாலத்திலே கல்யாணம் பண்ணி, நிலபுலன்கள கட்டிக்காத்து, விவசாயம் எல்லாம் மேல்பார்வை பார்த்து, குத்தகைக்காரரண்டை பணம் எல்லாம் வசூல் செய்து, அத்தனை பொறுப்பையும் எத்தனை நேர்த்தியாக நிர்வாகம் பண்ணினவர் அவர். தங்கைகளைக் கரையேற்றி நிமிரும் போது அவருக்கு வயது இருபத்தேழு ஆயிற்று.

எனக்கு அப்போ பதினாறு வயசுதான். தினம் நான் வாசலில் கோலம் போடும் நேரம் அவர் கோயிலுக்குக் கிளம்புவார். பக்கத்து வீடு தானே... எங்காத்தைத் தாண்டித்தான் போகணும். அவர் கடைசித் தங்கை என் சிநேகிதி வேறு. அவரைப் பார்க்கறச்சே எல்லாம் இப்படி ஒருத்தர் தான் நமக்கும் புருஷனா வரணும் என்று வேண்டிப்பேன். ஊரிலே அவருக்கு அவ்வளவு நல்ல பெயர். அவருக்கும் என் மேல் ஒரு கண் இருந்தது எனக்கென்ன தெரியும்? நான் நன்றாகப் பாடுவேன். தினமும் காலையிலே சாதகம் செய்வேன். அவர் கிணத்தடியிலே நின்று கேட்டு ரசிப்பாராம். இந்த சமயத்திலே அவர் மாமா கல்யாணப் பேச்செடுக்க, இவர் மெள்ள ஒரு கோடிகாட்ட, புரிஞ்சுண்ட மாமா எங்கப்பாவை அணுக... கல்யாணமும் ஆச்சு.

நான் எங்கேயோ என் கல்யாணக் கதைக்கு போய்ட்டேனே? இதெல்லாம் எதுக்கு சொல்ல வரேன்னா நாங்களே அந்த நாளிலே விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணிண்டவா தானே, இப்போ பிள்ளையை மட்டும் கூடாதுன்னு சொல்லக்கூடியவர் இல்லையே.

எது எப்படியோ இப்போ கல்யாணம் முடிஞ்சுபோச்சு. என் கவலையெல்லாம் இவர் என்ன சொல்லப்போறாரோ என்று தான். பிள்ளை நம்மளை மதித்து ஒரு வார்த்தை கேட்டு நாமளும் பெருந்தன்மையா கல்யாணம் பண்ணி வெக்கறது நமக்கும் கெளரவம், அவனுக்கும் மரியாதை. ஆனால் இப்போ நம்மளை ஒதுக்கி வைச்சு, கல்யாணம் ஆனப்புறம் அந்தப் பொண் ஆசைப்பட்டாள் நீங்க வந்து மறுபடி இந்துக் கல்யாணம் பண்ணி வைங்கோன்னு இவன் சொல்றது ஏற்க கூடியதாக இல்லையே. நான் வாயே திறக்கவில்லை. எதுவானாலும் அவர் தீர்மானிக்கிறதுதான் என்று இருந்தேன்.

அவரும் இரண்டு நாள் பேசவே இல்லை. மூணாம் நாள் ஒரு லெட்டரைக் கொண்டு வந்து என்னிடம் நீட்டினார். தமிழிலேயே எனக்குப் புரியும்படி எழுதி யிருந்தார். அமெரிக்கா போறது பத்தியெல்லாம் பேச்சே இல்லை. ஏதோ மூணாம் மனுஷாளுக்கு எழுதற மாதிரி, ''கல்யாண சேதி கேட்டு சந்தோஷம், எங்கள் ஆசிகள். உன் அக்காக்கள் ராதியும், மீனுவும் அத்திம்பேர்களும்கூட ஆசிகள் அனுப்புகிறார்கள். முடியும்போது ஒருமுறை நீ எல்லோரையும் பார்க்க வரவும்'' என்று எழுதி முடித்துவிட்டார். சரியாக கவனியுங்கோ நீ வரவும் தான் நீங்கள் இல்லை.

மணியும் ரோஷக்காரன் தான். பதினெட்டு வருஷம் வரவேயில்லையே! எனக்கு ஏக்கமாகத்தான் இருந்தது. ஆனால் என்ன செய்ய? அவன் ஒரு முறையாவது வந்து போயிருந்தால் இவர் மனசு சமாதானமாகி வருத்தமும் ஏமாற்றமும் குறைந்திருக்கும். அவனும் தாழ்ந்து வரவில்லையே. லெட்டர் மட்டும் வரும். அவனுக்கு ஒரு பெண்ணும் ஒரு பிள்ளையும் பிறந்த சமாசாரத்திற்குப் போன் வந்தது. இவரும் குழந்தைகளைப் பற்றியோ, காதரினைப் பற்றியோ விசாரித்து ஏதும் எழுதவில்லை. அவனும் எழுத வில்லை. எனக்கு மனசு கிடந்து அடிச்சுக்கும். அவருக்கும் அடிக்காமலா இருந்திருக்கும். ஆனால் வெளிக்காட்ட மாட்டார். நெஞ்சழுத்தக்காரர். மணி மேல் அவர் உசிரையே வெச்சிருப்பது எனக்குத் தெரியாதா என்ன!

நாலு வருஷம் முன்னாடி ஒருநாள் இவர் நெஞ்சு வலின்னார். ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போறதுக்குள்ளே ரொம்பவே அதிகமாகி நேராவே எமர்ஜென்சிக்கு கொண்டு போகச் சொன்னார்கள். கடைசியில் மெட்ராசிலே கொண்டு போய் பைபாஸ் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல, கலங்கிப் போயிட்டோம். என் மாப்பிள்ளை தான் போன் செய்து மணிக்குச் சொன்னார். அவன் சேதி கேட்டு பதறிப் போய் அடுத்த பிளேனிலே கிளம்பி வந்துட்டான். அவரை ஐசியுவில பார்க்க அவனுக்குத் தாங்கவில்லை. அவர் கையைப் பிடிச்சுண்டு கதறிவிட்டான். அவர் கண்ணுலயும் கண்ணீர். ரெண்டு பேர் கோபமும் கண்ணீரிலேயே கரைஞ்சு போச்சு. ஆபரேஷனும் நல்லபடியாக நடந்து அவரை வீட்டுக்கு அழைச்சுண்டு வந்தோம். அவன்தான் அவருடனே இருந்து குழந்தையை கவனிக்கிறாற்போல் கவனிச்சுண்டான்.
மூணுவாரம் நிமிஷமாக ஓடிப்போயிடுத்து. கிளம்பற காலம் வந்துடுத்து. சாமான் எல்லாம் கட்டியாச்சு. ரயிலுக்கு கிளம்பறச்சே முதல் தடவையாக இவர் மாட்டுப்பொண் பேரன் பேத்தி பேரெடுத்தார். அவர்கள் படிப்பு பத்தியெல்லாம் விசாரித்தால், பேத்தி கர்நாடக சங்கீதம் கத்துக்கறதாகக் கேட்டு அவருக்கு ஆச்சர்யம். இப்போதெல்லாம் அமெரிக்காவிலே இந்தியர்களுக்கு எல்லா வசதியும் வந்துடுத்தாம். அதுவும் அவன் இப்போ இருக்கற ஊரில் தமிழாளும், தெலுங்காளும் அவ்வளவு அதிகமாம். தமிழ்ச் சங்கமாம், தெலுங்கு சங்கமாம். ''அப்பா, அம்மா உங்களுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் அடுத்தமுறை எல்லோரையும் அழைத்து வரனே..'' என்ற போது என் மனசு குதியாட்டம் போட்டது.

திரும்பிப் போன என் பிள்ளை ரெண்டு வருஷம் தள்ளிதான் வந்தான். கேதி என்கிற கேதரினுடனும், மகன் 'ஸாமி' என்கிற சுவாமிநாதனுடனும் வரும்போது பேண்ட், சட்டை போட்டிருந்தாலும் அங்கே இருந்த வரை என் மருமகள் சல்வார் ஸுட்டு தான் போட்டுண்டாள். பதவிசாக நடந்து கொண்டாள். தமிழ் பேசினாள். ஓரளவுக்கு வந்த உறவினர்களை எல்லாம் அமெரிக்கப் பெண் நம்மூர் பெண்ணுக்கு மேல் அடக்கமாக இருக்காளே என்று மூக்கிலே கையை வைக்க வச்சாள். என் பெரிய நாத்தனார் தவிர. அவளுடைய கடைசிப் பெண்ணை மணிக்குத்தான் கொடுக்கணும் என்று நினைச்சிருந்தது நடக்காமப் போன கோபம் இன்னும் அவளுக்கு.

கேதியின் அப்பா சின்ன வயசில் தன் பெற்றோருடன் இந்தியாவில் இருந்திருக்கிறாராம். அவர் அப்பாவுக்கு தூதரகத்தில் வேலையாம். அப்போது பல மதங்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள அவர் தந்தை குடும்பத்துடன் அரவிந்தர் ஆசிரமம், ரமணாஸ்ரமம், கல்கத்தாவில் ராமகிருஷ்ண ஆசிரமம் எல்லாம் அழைத்துப் போவாராம்.

வீடு நிறைய ஏராளமா, முக்கியமாக இந்து மதத்தைப் பற்றி, புத்தகங்களாம். சின்ன வயசிலிருந்தே கேதிக்கு அதில் சுவாரசியம் இருக்க, காலேஜிலேயும் அதையே முக்கிய பாடமாகப் படித்து ஆராய்ச்சியும் பண்ணி பிஎச்.டி. வாங்கினாளாம். கேட்கக் கேட்க எனக்கு ஒரே ஆச்சர்யம். மாமனாரும், மாட்டுப்பொண்ணும் எப்பவும் வேதாந்தமும், பிலாசபியும் அலசல்தான்.

கேதியின் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால் என் பேத்தி அவளுக்குத் துணையாகத் தங்கி விட்டாளாம். அடுத்த முறை அழைத்து வருவதாகச் சொன்னான் மணி. இந்த வருஷம் மணியும், என் பேத்தி நிஷாவும் மட்டும் வருகிறார்கள். மணி திரும்பின பிறகும் நிஷா எங்களுடன் தனியாக இரண்டு மாசம் இருக்கப் போகிறாள். மனசுக்கு நிறைவாக, சந்தோஷமாக இருந்தாலும் அவளுக்கு இந்தச் சின்ன ஊரிலே பொழுது எப்படிப் போகும், அவளிடம் நானும் அவரும் எதைப் பற்றி பேசுவோம் என்று கவலை.

அவள் வரும் நாளும் வந்தேவிட்டது. நேற்றே சென்னையில் இறங்கி டெலிபோன் பண்ணிட்டா. இவர் கிளம்பி சென்னையில் மீனு வீட்டில்தான் ரெண்டு நாளா இருக்கார். இதோ இன்னும் ஒரு மணி நேரம்தான் வண்டி வர. அப்புறம் ஸ்டேஷனிலிருந்து பத்தே நிமிஷம். என் பேத்தியைப் பார்க்கப் போகிறேன். மீனு பிள்ளை ரமேஷ் லீவுக்கு வந்தவன் ஸ்டேஷனுக்குப் போயிருக்கான்.

அவசரமாகச் சமையலை முடித்துவிட்டு குட்டிபோட்ட பூனையாய், கொல்லைக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தேன். வீட்டுக்கு முழுதும் பெயிண்ட் அடித்து அழகாக இருந்தது. தோட்டம் நிறைய பூச்செடியெல்லாம் பூத்துக் குலுங்கி நிற்க வீடே அழகாக இருந்தது. வாசல் நிறையக் கோலம் போட்டு செம்மண் இட்டு - எல்லாமே தயார்.

இதோ கார் ஹாரன் சத்தம் வந்தாச்சு. நான் வாசலுக்கு வரவும், கார் நிற்கவும் சரியாக இருந்தது. மணி முதலில் இறங்க பின்னாலேயே நிஷா. ஓ! அப்படியே அவள் அத்தை மீனுதான். அதே கருவண்டுக் கண்களும், கருத்த சுருட்டை முடியும்; என்ன மீனு மாநிறம், இவள் தொட்டால் கன்றிப் போற சிவப்பு; மீனு ஐந்தடிதான் இருப்பாள், இவள் நெடுநெடுன்னு ஐந்தே முக்கால் அடி இருப்பாள் போலிருக்கு. கொடி போல உடம்பு வாகு. என் பேத்தி அழகிதான்.

''பாட்டி''ன்னு வந்து கட்டிண்டவள். ''என்ன பாட்டி அப்படியே நின்னுட்டேள்?'' என்று கேட்க, பிரமிப்பிலிருந்து மீண்டு வந்தேன். எல்லோரையும் உள்ளே அழைச்சுண்டு போனேன்.

இரண்டு மாசம் ஓடியே போயிடுத்து.

என் பேத்தி. அழகாகத் தமிழ் பேசுகிறாள். பாட்டு கத்துக்க வேண்டி மணி தான் தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தானாம். உச்சாரணம் சரியாக வரதுக்காக வீட்டிலேயே அவளுடன் தமிழ்தான் பேசுவது என்று கண்டிப்பாக இருந்தானாம். பாட்டு டீச்சரும் பாட்டுக்கு அர்த்தம் தெரிந்து பாவத்துடன் பாடணும் என்று சொல்லு வாளாம். ஆக மொத்தம் நிஷாவுக்குத் தமிழ் நன்றாகவே வந்துடுத்து.

அவள் பாட்டைப் பற்றி நான் என்ன சொல்லட்டும். இயற்கையாகவே நல்ல குரல், நல்ல சிக்ஷை, நல்ல உழைப்பு. அருமையாகப் பாடுகிறாள். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டெல்லாம் அவள் பாடிக் கேக்க என்ன பெருமையாக இருக்கு தெரியுமா? அது மட்டுமா, என்னை உட்கார்த்தி, பாட வச்சு கேட்டாள். ''பாட்டி இந்த எழுபத்தி நாலு வயசிலேயும் குரலை எப்படி இவ்வளவு நன்னா வைச்சிருக்கேள்'' என்றவள் என்னிடம் நம்மூர் நலுங்கு, லாலி எல்லாம் கற்றுக் கொண்டாள். எங்கள் வீட்டில் பால் கறக்கும் சின்னப்பனை நாட்டுப் பாடல், தெம்மாங்கு எல்லாம் பாடச்சொல்லி ரசித்துக் கேட்டாள்.

அவள் கட்டடக்கலை பற்றிப் படிக்கப் போறாளாம். தென்னிந்தியக் கோவில் கட்டடக்கலை பற்றி ஒரு பேப்பர் எழுதணுமாம். மீனு பிள்ளை ரமேஷ் அவன் காரைக் கொண்டு வந்து எங்கள் எல்லாரையும் அழைச்சுண்டு போய் எல்லாம் சுற்றிக் காண்பிச்சான். ஆந்திராவிலே சிம்மாசலத்திலே தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும், மேற்கே கேரளம், உடுப்பி கர்நாடகமெல்லாம் ஒரு மாசம் அத்தனை கோயிலும் சுற்றி வந்தோம். அவளுக்குப் பார்க்கப் பார்க்க அப்படி ஒரு பிரமிப்பு. நம்மூரிலே 1000, 1500 வருஷம் முன்னாலே இத்தனை அழகாகக் கட்டியிருக்காளே, எத்தனை பெருமையான விஷயம் என்று நூற்றுக்கணக்கிலே போட்டோவும், வீடியோவும் பிடித்துத் தள்ளிவிட்டாள்.

ரெண்டு மாசம் ரெண்டு நிமிஷமாகக் கழிய நாளை நிஷா அமெரிக்கா திரும்புகிறாள். ரமேஷும் அடுத்த மாதம் படிக்க அங்கேதான் போகறதா இருக்கான்.

''பாட்டி நான் வருஷா வருஷம் இந்தியா வரப்போறேன் பாருங்கோ... படிச்சு முடிச்சப்புறம் இங்கே இருக்காப்போலே வேலை தேடப்போகிறேன்..'' என்று சொல்லற நிஷாவைப் பார்க்க, எங்கே போனாலும் எவ்வளவு தூரம் போனாலும் மறுபடி தன்கிட்டேயே இழுத்துக்கிற இந்திய மண்ணுடைய ஈர்ப்புச் சக்தி பற்றி எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு.. என் நம்பிக்கை சரிதானே? நீங்கள் என்ன சொல்றேள்?

உமா
Share: 




© Copyright 2020 Tamilonline