Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
திருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா
பக்தி இலக்கியங்களும் திருவாசகமும்
திருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு
இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...
இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்
முதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...
இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு!
குற்றம் குற்றமே!
பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல
தமிழிசை மரபை மெல்ல இழந்து...
இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா
சிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா
திருவாசகம் - ஆங்கிலமொழிபெயர்ப்பு
சிம்பொனி இசையில் திருவாசகம் - இளையராஜாவின் புதிய தடம்
- மணி மு.மணிவண்ணன்|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeஆண்டு 1900. நாள் ஏப்ரல் 24. ஆக்ஸ்·போர்டு பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் உக்லோ போப்புவின் 80வது பிறந்தநாள். 17வது வயதில் தான் கற்ற முதல் தமிழ்ப் பாடத்தை நினைவு கூர்கிறார். 19வது வயதில் தமிழ்நாட்டுக்கு வந்து 42 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்குத் திரும்பிய அவர் தனது தலைசிறந்த படைப்பை நிறைவு செய்து முன்னுரைக்குத் தேதியிடுகிறார். தன் நெடுங்காலத்துத் தமிழ் ஆய்வும் நிறைவு பெறுகிறது என்று உணர்ச்சிவசப்படுகிறார். அவர் எழுதிய நூல் "மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச்செய்த திருவாசகம்" மற்றும் "இங்கிலீஷ் மொழிபெயர்ப்பு".

அவர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்: "எல்லோரும் அடிக்கடி கேட்கிறார்கள். திருவாசகம் போன்ற நூல்களை மறுபடியும் பதிப்பித்து, மொழிபெயர்த்து, தொகுப்பதால் என்ன பயன்? இதையெல்லாம் யார் படிப்பார்கள்?" அப்படிப் படிக்கக்கூடியவர்கள் அபூர்வம் என்றாலும் இது கண்டிப்பாகச் செய்ய வேண்டியது என்று தொடர்கிறார். "ஏனென்றால் இது தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையான தலை சிறந்த தமிழர்களின் நெஞ்சில் வாழும் நெறி. ஒவ்வொரு நாளும் தென்னிந்தியாவின் மாபெரும் சிவன் கோவில்களிலும், ஒவ்வொருவர் உதடுகளிலும், நல்ல மனிதர்கள் பலரின் நெஞ்சிலும் வாழும் பதிகங்கள்." இந்து சமயத்தை, சைவ நெறியை, தமிழ் மக்களை ஆங்கிலேயர் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் திருவாசகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

"கிறிஸ்துவ வேதசாஸ்திரியாராகிய ஜீ. யூ. போப்பு ஐயரவர்கள்" என்று தன்னை அழைத்துக் கொண்ட அந்தத் தமிழாசிரியர் இதை எழுதிய சமயத்தில் திருவாசகம் தமிழ்மண்ணில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் செழித்திருந்தது. பக்திக்கும் தத்துவ மரபுக்கும் பாலமாய் அமைந்திருந்தது. மெய்கண்ட சாத்திரத்துக்கும், தென்னிந்திய சைவசித்தாந்த மரபுக்கும் வித்திட்டு, வாழும் சைவ மதத்தின் ஆணிவேராய்த் திகழ்ந்திருந்தது. வள்ளலார் இராமலிங்க அடிகளாரை மட்டுமல்லாமல், ரமண மகரிஷியையும் ஈர்த்தது திருவாசகம். சித்தாந்திகளும், வேதாந்திகளும் சொந்தம் கொண்டாடிய தமிழ்த் திருமுறையாய் இலங்கி நின்றது திருவாசகம். அதன் ஈர்ப்பு கிறித்தவர்களையும் விட்டு வைக்கவில்லை.

ஆனால், கடந்த நூற்றாண்டின் அரசியல், சமூக, சமய, தொழில்நுட்பப் புரட்சிகளும் தேசிய, உலகமயமாக்கல் உந்துதல்களும், திருவாசகத்தை மட்டுமல்ல, பண்டைத்தமிழ் இலக்கிய, சமய மரபுகள் அனைத்தையுமே பின் தள்ளி விட்டன என்பது மிகையாகாது. தமிழோடு பின்னிப் பிணைந்திருந்த சைவ, வைணவ மதங்களும் நலிந்திருக்கின்றன. அரிமர்த்தன பாண்டியனின் முதலமைச்சராய் இருந்த மாணிக்கவாசகர் கண்ட தமிழகத் திலும் புறமதச் சிந்தனைகளும், இறை மறுப்புக் கொள்கைகளும் ஓங்கியிருந்தன. மாணிக்கவாசகரின் ஆன்மீக வேட்கைக்குக் கிடைத்த விடைதான் திருவாசகமாக உருவெடுத்தது. அதனால்தானோ என்னவோ, திருவண்ணாமலையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கிரிவலம் வந்து கொண்டிருந்த இசைஞானி இளையராஜாவின் ஆன்மீகத் தேடலுக்கும் திருவாசகமே விடையாகத் தோன்றி இருக்க வேண்டும்.

திருவாசகத்தை ஒரு பிரம்மாண்டமான சிம்·பொனி இசைவடிவில் வழங்க வேண்டும் என்ற இளையராஜாவின் எண்ணத்தைப் புரிந்து கொள்வது எளிதல்ல. மரபு சார்ந்த சைவர்கள் சிலருக்கு, ஓதுவார்கள் வழிமுறையில் தமிழ்ப் பண்ணோடு பாடுவதைத் தவிர வேறு முறையில் பாடுவது தெய்வத்தைப் பழிக்கும் குற்றம் போல் தோன்றும். தமிழ் இலக்கிய மரபில் ஆழ்ந்தவர்களுக்கு மேற்கத்திய இசையோடு தமிழைக் கலப்பது சிறுமைப் படுத்துவது போல் தோன்றும். திரைத்துறையில் உள்ளவர்களுக்கோ, ஏற்கனவே பட்டிதொட்டியெல்லாம் முழங்கும் இரைச்சலான பக்திப் பாடல்களைப் போன்ற மலிவான திட்டமாகத் தோன்றியிருக்கும். மேற்கத்திய இசை ரசிகர்களுக்கோ பழங்காலத்துப் பக்தித்தமிழுக்கு இருபத்தோராம் நூற்றாண்டில் என்ன வேலை என்று தோன்றியிருக்கும். இறுதியில் இசைஞானியின் வேட்கையைப் புரிந்து கொண்டு ஆதரவளிக்க முன் வந்தவர் சென்னை தமிழ் மையத்தைத் தொடங்கிய கத்தோலிக்கப் பாதிரியார் அருள்திரு ஜெகத் காஸ்பர் ராஜ் அவர்கள்.
தன் சொந்தப் பணத்தைச் செலவழித்து திருவண்ணாமலையிலும், திருவரங்கத்திலும் கோவில் ராஜகோபுரம் கட்ட உதவிய இளையராஜாவுக்கு இந்தத் திட்டத்துக்குத் தன் பணத்தையே செலவிடுவது ஒரு பொருட்டல்ல. ஆனால், மறைந்த காஞ்சி பரமாச்சாரியார் ஒரு முறை சொன்னது இசைஞானியின் நினைவிலிருந்தது. பழைய காலத்தில் அரசனே கோபுரம் கட்ட விரும்பினாலும், சொந்தப்பணத்தில் கட்டாமல், மக்களிடம் உண்டியல் குலுக்கித் திரட்டிய பணத்தில் தான் கட்டுவானாம். அப்போதுதான், கோவில் கட்டுவதில் மக்களின் பங்கேற்பும் இருக்குமாம். அது போல், இந்தத் திருவாசகத் திட்டத்தையும் ஒரு திருப்பணியாகக் கருதிய இளையராஜா மக்களிடமிருந்து ஆதரவு பெறுவதையே விரும்பினார்.

இதன் நோக்கம் தன் இசைத்திறமையைப் பறைசாற்றிக் கொள்வதோ, திருவாசகத்தைப் புதுக்கோணத்தில் தருவதோ இல்லை என்கிறார் இளையராஜா. தமிழகத்தின் உயர்ந்த மரபுகளையும் பண்பாடுகளையும் பற்றி இளைய தலைமுறைக்குத் தெரிய வேண்டும், திருவாசகம் போன்ற சமய, இலக்கியப் பொக்கிஷங்களை அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உந்துதலே இதன் பின்னணி என்று வலியுறுத்துகிறார். தனது பாணியைக் குறை சொல்பவர்கள் இருக்கிறார்கள் என்று உணர்ந்த அவர் இதை இப்படித்தான் பாட வேண்டும் என்று காட்டுவது தன் நோக்கமல்ல என்று மறுக்கிறார்.

எது எப்படியோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒரு பக்தி இலக்கியத்தைத் தமிழ் கூறும் நல்லுலகத்தின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது இந்த முயற்சி. பொதுவாழ்வில் சமயம், பண்டைத் தமிழ் இலக்கியம் பற்றிக் கண்ணியத்துடன் பேச வழி வகுத்துள்ளார். கத்தோலிக்கப் பாதிரியார்கள் துணையில் சைவ சமயப் பக்தி இலக்கியத்துக்குத் திரையிசை வல்லுநரும் மேற்கத்திய இசைக்கலைஞர்களும் சேர்ந்து இசைவடிக்க, ஒரு நாத்திக அரசியல்வாதியின் விளக்கத்தோடு வெளியீட்டு விழா நடத்துவது என்பது "நான் காண்பதென்ன கனவா!" என்று வியக்கத்தக்க செய்தி. அதிலும், அமெரிக்கத் தமிழர்கள் இதில் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள் என்னும்போது இது உள்நாட்டுச் செய்தியாக, நம் வீட்டுச் செய்தியாகி விடுகிறது.

தமிழ்ச் சங்க இலக்கிய அகத்திணை மரபுகளையும், இளம்பெண்களின் நாட்டுப் பாடல் வடிவங்களையும், சமயத் தத்துவங்களையும் பின்னிப் பிணைத்து பக்திரசத்தைப் பிழிந்து கொடுத்து தமிழ் இலக்கிய மரபின் உச்சத்தைத் தொட்டார் மாணிக்க வாசகர். அந்தப் பாடல்களுக்கு மேற்கத்திய மரபு இசை வடிவம் கொடுத்து ஒரு புதுத்தடம் பதித்திருக்கிறார் இசைஞானி இளையராஜா. இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றித் தென்றல் வாசகர்களுக்கு ஒரு பறவைக் கண்ணோட்டம் கொடுக்க முயன்றிருக்கிறோம்.

இது மட்டுமல்லாமல், திருவாசகம் இசைத் தட்டை வெளியிட்டுள்ள சென்னை தமிழ் மையத்தின் நிறுவனர் அருள்திரு ஜெகத் காஸ்பர் ராஜ் அவர்களைப் பற்றிய கட்டுரையும் இடம் பெறுகிறது.

ஜீ. யூ. போப் அஞ்சியது போல அவரது மொழிபெயர்ப்பு படிக்கப்படாமல் இல்லை. நூறு ஆண்டுகள் கழித்தும் இன்றும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. இளையராஜாவின் புதிய தடமும் நூறு ஆண்டுகள் கழித்துப் பேசப்படுமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லும்.

மணி மு. மணிவண்ணன்
More

திருவாசகம் ஆரட்டோரியோ வெளியீடு விழா
பக்தி இலக்கியங்களும் திருவாசகமும்
திருவாசகம் சிம்·பொனி - அமெரிக்கத் தமிழர்களின் பங்கு
இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...
இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலர்களும் கணைகளும்
முதல் பாடலை எடுப்பாகவும் மற்றவற்றைத் தொடுப்பாகவும்...
இளையராஜாவின் இசையில் திருவாசகம் - மலைப்பு!
குற்றம் குற்றமே!
பிழைகள் இம்மியளவும் ஏற்கத்தக்கவை அல்ல
தமிழிசை மரபை மெல்ல இழந்து...
இது நிலைக்கும் என்பதெல்லாம் சுத்த புருடா
சிரிச்சு சிரிச்சு ஆடினாரய்யா சினா நனா
திருவாசகம் - ஆங்கிலமொழிபெயர்ப்பு
Share: 
© Copyright 2020 Tamilonline