|
|
 |
முனைவர் மு. சதாசிவம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரின் புலவர் குழுவில் இடம்பெற்றவர். பதிப்பாசிரியராகச் செயல்பட்டு 150க்கும் மேற்பட்ட அகர வரிசைகளைத் தனி ஒருவராக உருவாக்கிச் சாதனை நிகழ்த்தியவர். இவர் 1936ல் திருச்செங்கோடு வட்டத்தில் உள்ள உஞ்சனைக் கவுண்டம்பாளையம் என்ற சிற்றூரில், வி.வை. முருகேசன், பொன்னம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை உள்ளூர் திண்ணைப்பள்ளியில் பயின்றார். உலகப்பம்பாளையத்தில் உள்ள பள்ளியில் நடுநிலைக் கல்வியும், திருச்செங்கோடு உயர்நிலைப் பள்ளியில் உயர்நிலைக் கல்வியும் கற்றார்.
சென்னை லயோலா கல்லூரியில் கணிதப் பிரிவில் இண்டர்மீடியட் படித்தார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து எம்.ஏ., எம்.லிட்., டி.லிட். பட்டங்களைப் பெற்றார். தெலுங்கு, மலையாளம், கன்னடம், சமஸ்கிருதம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் சிறப்புச் சான்றிதழ்களைப் பெற்றுப் பன்மொழி அறிஞராகத் திகழ்ந்தார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இந்தி, வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ருஷ்யன் ஆகிய 10 மொழிகளைக் கற்றறிந்தார்.

சதாசிவம் கல்லூரியில் படிக்கும் போதே இலக்கிய ஆர்வம் கொண்டிருந்தார். திரு.வி.க.வின் சொற்பொழிவுகளால் தமிழார்வம் மிக்கவரானார் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளில் முதல் பரிசினையும், தங்கப் பதக்கத்தினையும் பெற்றார். இரண்டு தங்கப் பதக்கங்கள் உட்பட 6 ஆராய்ச்சிப் பரிசுகளைப் பெற்றார். சென்னை மயிலாப்பூர் திருவள்ளுவர் மன்றம் நடத்திய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றார். 1961ல் மதுரையிலிருந்து வெளிவந்த 'தமிழ்நாடு' நாளிதழ் நடத்திய கட்டுரைப் போட்டியிலும் முதல் பரிசு பெற்றார். 1957ல் கோவை அரசினர் கலைக் கல்லூரியில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். சென்னை கீழ்த்திசைச் சுவடி நூலகத்தில் நூலகராகப் பணி புரிந்தார். செந்தமிழ்ச் செல்வியில் பல தலையங்கக் கட்டுரைகளை எழுதியுள்ளார். 26 ஆண்டுகள் ஈரோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் விரிவுரையாளராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார்.
முனைவர் மு. சதாசிவம் எழுதிய, பதிப்பித்த நூல்களில் சில உலகத் தமிழியக்க ஆய்வுக் கோவை (1 முதல் 8 தொகுதிகள்), கம்பனின் அழகுத் தொடர்கள், கம்பனின் வைர வரிகள், கம்பன் கண்ட இராமனும் சீதையும், திருக்குறளில் பல்சுவை அகர வரிசைகள், ஆய்வுக் கட்டுரைகள், கம்பன் வழங்கும் மோனை இன்பம், வள்ளலாரின் பொன்மொழிகள், திருக்குறள் மொழியியல் ஆய்வுக் கட்டுரைகள், வள்ளுவர் உள்ளமும் வாழ்க்கைத் தத்துவங்களும், ஐம்பொறி அகராதி, கருத்துக் களஞ்சியம், இருபெயரொட்டுச் சொல்லகராதி, வசைமொழி அகராதி, நயமொழி அகராதி, திருக்குறள் பொருளடைவு மற்றும் பல.
(தகவல் உதவி, முனைவர் மு. சதாசிவம், எழுத்தாக்கம்: கே. இரா. கமலா முருகன், கலைஞன் பதிப்பக வெளியீடு)
கம்பன் பற்றிய ஆய்வுகள், பழமொழி விளக்கங்கள், திராவிட மொழிகளில் பண்பாடு: ஓர் ஒப்பீட்டாய்வு, இக்காலத் தமிழ்-ஆங்கில அகராதி போன்ற 150க்கும் மேற்பட்ட நூல்கள் வெளிவர உதவினார். 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். அவற்றில் 115 நூல்கள் அகராதி வடிவில் உள்ளன. அதிகமான அகராதிகளை எழுதியவர் என்ற பெருமைக்குரியவர். இவரது தமிழ்ப்பணிகளுக்காக ஈரோட்டில் உள்ள கோவை மாவட்டத் தமிழ்க் கவிஞர் மன்றம் இவருக்குப் 'பன்மொழிப் புலவர்' பட்டம் அளித்துச் சிறப்பித்தது. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 'சொல்லாய்வுக் கலைச் செல்வர்' பட்டத்தை வழங்கியது.
பிப்ரவரி 05, 2014ல், மு. சதாசிவம் காலமானார். அவரது படைப்புகள் அவரது சாதனை வாழ்க்கைக்குச் சான்றாக என்றும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. |
|
பா.சு. ரமணன் |
|
|
|
|
|
|
|