Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
முன்னோடி
சேகுனாப் புலவர்
- பா.சு. ரமணன்|நவம்பர் 2025|
Share:
சேகுனாப் புலவர், இஸ்லாமிய இலக்கியப் படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவர். 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி 19-ம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வாழ்ந்தவர். அதிக இஸ்லாமிய இலக்கிய நூல்களை இயற்றியதால் 'புலவர் நாயகம்' என்று போற்றப்பட்டவர். உமறுப்புலவர் இயற்றிய சீறாப்புராணத்தை 1842-ல் முதன் முதலில் அச்சிட்டுப் பதிப்பித்தவர். புராணம், அந்தாதி, கலம்பகம், மாலை, கீர்த்தனைகள் எனப் பல சிற்றிலக்கியங்களைப் படைத்த முன்னோடியாகவும், நான்கு காப்பிய நூல்களை இயற்றிய ஒரே இஸ்லாமியப் புலவராகவும் அறியப்படுகிறார்.

சேகுனாப் புலவர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரத்தின வியாபாரி ஹபீபு முகம்மது லெப்பைக்குப் பிறந்தார். இவர் பிறந்த ஆண்டைப் பற்றிய சரியான குறிப்பு கிடைக்கவில்லை. இயற்பெயர்: செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம். கீழக்கரை தைக்கா சாகிபு அவர்களிடம் அரபிக் கல்வி பயின்றார். குணங்குடி மஸ்தான் சாகிபின் ஒருசாலை மாணாக்கராக அறியப்படுகிறார். சமய அறிஞராக விளங்கியதால் 'ஆலிம் புலவர்' என்று போற்றப்பட்டார். தம் முன்னோர் வழியில் மாணிக்கம், ரத்தினக்கல் வணிகராகவும் ரத்தினங்களின் குணம் தெரிந்து உரைப்பவராகவும் இருந்தார். மனைவி: கதீஜா. இவர்களுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை.

சேகுனாப் புலவரின் நெற்றியில் மகர வடிவில் மச்சம் காணப்பட்டது. இளமையில் மந்தமாயிருந்த சேகுனாப் புலவர், ஒருநாள் காயல்பட்டினம் கப்டா பள்ளிக்கு அடுத்த புறவெளியில், எருக்கஞ் செடியின் கீழ் படுத்திருந்த போது கருநாகம் நாவில் தீண்டப் பெற்றதிலிருந்து கவிமழை பொழிந்தார் என்பது வரலாறு.
சேகுனாப்புலவர் தன் வாழ்வில் பல்வேறு அற்புதங்களைச் செய்தவராக அறியப்படுகிறார். சோறு விக்கிய குழந்தையின் தொண்டையைத் தடவிப் பிழைக்கச் செய்தார் என்றும், முகம்மது பந்தர் என்னும் ஊரில் அகமது மரைக்காயருக்குத் தாம் கடித்துத் தின்ற வாழைப்பழத்தில் பாதியைக் கொடுத்து உண்ணச் செய்து புலவராக்கினார் என்றும், கவிசாகரம் செய்கு நெய்னா மரைக்காயருக்குத் தாம் அருந்தி எச்சிற்படுத்திக் கொடுத்த குவளைப் பாலால் புலவராக்கினார் என்றும் கூறப்படுகிறது.

சேகுனாப் புலவர் எழுதிய நூல்கள்
குத்பு நாயகம், திருக்காரணப் புராணம், திருமணி மாலை, புதூகுஷ்ஷாம், கோத்திரமாலை, நாகை அந்தாதி, மக்காக் கலம்பகம், சொர்க்க நீதி, நிரூபச் செய்யுள், இன்னிசை, அட்டகனி, ஒரு பா ஒருபஃது, சிலேடை மாலை, முனாஜாத்து, பதங்கள், அகவல், பல்சந்தமாலை, ஆசிரிய விருத்தம், சித்திரக்கவி, சத்துரு சங்காரம், பூபாளைக் கண்ணி, சித்திர வண்ணம்


சேகுனாப் புலவர் தமிழ், அரபு, பார்ஸி மற்றும் வடமொழியில் தேர்ச்சி பெற்ற அறிஞராக இருந்தார். சிற்றிலக்கியம், காப்பியம், புராணம் எனப் பலவகை நூல்களை இயற்றினார். சேகுனாப் புலவர், அப்துல் கறீம் ஜீலி என்பவர் எழுதிய 'இன்ஸானே காமில்' (ஞான நூல்) எனும் அரபி நூலையும், முகியித்தீன் இப்னு எழுதிய 'புஸீ' என்னும் அரபி நூலையும் தம் கைப்படப் பிரதி செய்துள்ளார். இவை காயல்பட்டினம் மஹீளராவில் உள்ளன.

சேகுனாப் புலவர் 'பதினாறு கவனகர்' எனப்படும் சோடாசவதானியாகத் திகழ்ந்தார். சைனுத்தீன் புலவர், ஐதூறு நயினார் புலவர், கோட்டைக் குப்பம் உபதேசப் பாவலர், காயல் பட்டினம் அருணாசல உபாத்தியாயர் ஆகியோர் சேகுனாப் புலவரின் மாணவர்களாவர். நவீன அகஸ்தியர், புலவர் நாயகம், ஆலிம், ஹாபிஸ், மஷாயிகு ஆகிய பெயர்களால் சிறப்பிக்கப்பட்டார்.

சேகுனாப் புலவர் 1852-ல் காலமானார். இவரது உடல் சென்னையில் குணங்குடி மஸ்தான் சாகிபு அடக்கத்தலம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline