சாமுவேல் தருமராஜர் சற்குணர் என்னும் ச.த. சற்குணர், பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழறிஞர்களுள் ஒருவர். அ.கி. பரந்தாமனாருடன் இணைந்து சென்னையில் 'தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கம்' என்ற அமைப்பை நிறுவியவர். இவரது மணிவிழாவுக்குத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்ததுடன், வாழ்த்துரை வழங்கியும் கௌரவித்தவர் உ.வே. சாமிநாதையர். உ.வே.சா. மட்டுமல்லாமல் அக்காலத்துத் தமிழறிஞர்கள் பலராலும் பாராட்டப்பட்ட. சற்குணர், மே, 25, 1877-ல், திருநெல்வேலியில் உள்ள முதலூர் என்ற சிற்றூரில், சாமுவேல் சற்குணர் - ஞானப்பூ அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். 'சா.த. சற்குணர்' என்று தம் பெயரை அமைத்தால் அமங்கலச் சொல் வருவதாகக் கருதி, ச.த. சற்குணர் என்று பெயரை அமைத்துக் கொண்டார். தொடக்க மற்றும் உயர்நிலைக் கல்வியைத் தந்தையாரிடமே கற்றார். சி.எஸ்.எம். உயர்தர கலாசாலையில் புகுமுக வகுப்பு படித்தார்.
சென்னை கிறித்தவக் கல்லூரியிற் சேர்ந்து உயர்கல்வி பயின்றார். ஆங்கிலத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தார். வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார், கோபாலாச்சாரியார், மகாதேவ முதலியார், மறைமலையடிகள் போன்றோர் சற்குணருக்குத் தமிழாசிரியர்களாக இருந்தனர். அவர்களிடம் தமிழையும், பிற ஆசிரியர்களிடம் ஆங்கிலமும் பயின்று இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். பி.ஏ. வகுப்பில், கல்லூரியில் தமிழில் முதன்மையாகத் தேறியதற்காகச் சேதுபதியின் பொற்பதக்கம் பெற்றார். மதுரை தமிழ்ச் சங்கத் தேர்விலும் முதல் பரிசு பெற்றார். வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார்.
படிப்பை முடித்தபின் 1905ல் சென்னை ஹாரிஸ் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 9 ஆண்டுகள் அங்கே தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழறிஞர் கா. நமசிவாயம் அக்காலகட்டத்தில் சென்னை வேப்பேரி பவுல் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர், 1914ல் அப்பள்ளியின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகினார். அவர் விலகியதும் சற்குணர் அந்தப் பொறுப்பை ஏற்றார். அவர் மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் ஏற்படுத்தினார். அவர்களுக்கு இலக்கிய நுணுக்கங்களைப் போதித்து, செய்யுள் இயற்றுமளவுக்குப் பயிற்றுவித்தார்.
ச.த. சற்குணரின் புகழ் சென்னை நகரமெங்கும் பரவியது. தமிழறிஞர்கள் பலரும் அவரை நாடி நட்புக் கொண்டனர். சற்குணரின் திறமையை அறிந்த சென்னை கிறித்தவக் கல்லூரித் தலைவர் மெஸ்டன் துரை, சற்குணரை கிறித்தவக் கல்லூரியில் சேர்ந்து பணியாற்ற அழைத்தார். தான் பயின்ற கல்லூரி என்பதால் சற்குணரும் ஆவலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றார். அங்கு அவர் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ஒவ்வோர் ஆண்டிலும் 95 சதவிகிதத்துக்கு மேல் மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெற்றார்கள்.
சற்குணர் ஆய்வு மனப்பான்மை கொண்டிருந்தார். சங்க நூல்களில் மிகுந்த விருப்பம் இருந்தது. புறநானூறும், சீவக சிந்தாமணியும், கலித்தொகையும் அவரை மிகவும் கவர்ந்தன. சமகாலத்து உரைநடை நூல்களைவிடச் செய்யுள் நூல்களையே அதிகம் விரும்பினார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக சற்குணர், 'இலக்கண ஆக்கம்' என்ற நூலை எழுதினார். மாணவர்களுக்காக 'தமிழ் இலக்கியத் தொகுதி' என்னும் தமிழ்ப் பாடப் புத்தகத்தை எழுதினார். 'கலை கட்டுரைகள்' என்ற சற்குணரின் நூல் குறிப்பிடத் தக்கது.
சற்குணர் ஆங்கிலத்தை முறையாக அறிந்திருந்தாலும், தமிழ் மாணவராகவே தன்னை எப்போதும் முன்வைத்தார். பல ஆங்கிலேயர்களுடன் நட்புக் கொண்டிருந்தபோதிலும், இந்திய பாணி உடைகளையே அணிந்து, ஓர் இந்தியராகவே எப்போதும் காட்சி அளித்தார். குடுமி வைத்து, அதற்குமேல் தலையில் வெள்ளிச்சரிகை இழைத்த டர்பன் அணிந்து, பஞ்சகச்ச வேட்டியுடன்தான் வகுப்புக்கு வருவார். இதுபற்றி தெ.பொ.மீ., "ஆங்கிலப் பகட்டு எல்லோரையும் அடிமையாக்கிய அந்தக் காலத்திலேயே, அதன் வலையிற் சிக்காமல் ஆங்கிலத்தைத் துறை போகக்கற்று, அதன் சிறப்பில் தோய்ந்து மகிழ்ந்து, அதுபோலத் தமிழும் சிறப்புற வேண்டித் தமிழன்னைக்குத் திருத்தொண்டு செய்யப் புகுந்து, நுனிப்புல் மேயாது, தமிழ் ஆழ்வாராகித் தம்மிடம் வந்த மாணவர்களையெல்லாம் வாயளவில் அன்றி உண்மையில் உலகம் ஈடேறும் வகையில் தமிழன்பர்களாக்கித் தம் முயற்சியில் வெற்றி பெற்றவர்” என்று குறிப்பிட்டுளார்.
தமிழ் பயில மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்; எளிய முறையில் அவர்கள் பயில உதவ வேண்டும் என்பது சற்குணரின் எண்ணம். அதே எண்ணம் கொண்டிருந்த தம் மாணவர் அ.கி. பரந்தாமனாருடன் இணைந்து ஜனவரி 15, 1925ல், சென்னையில், 'தென்னியந்திய தமிழ்க் கல்விச் சங்கம்' என்னும் அமைப்பை நிறுவினார். சற்குணர் தலைவராகவும் பரந்தாமனார் செயலாளராகவும் பணியாற்றினர். சென்னை பல்கலைக்கழக வித்துவான் தேர்விற்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சங்கம் முழுக்க முழுக்க சற்குணரின் சொந்தச் செலவில் நடத்தப்பட்டது. அவ்வமைப்பு மூலம் மாணவர்கள் பலர் தமிழ் கற்றனர். தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியும் என்ற கொள்கை உடையவர் ச.த. சற்குணர். மாணவர்கள் பலரையும் அவ்வாறே தமிழோடு பிற மொழிகளையும் கற்க அவர் ஊக்குவித்தார். ஞாயிற்றுக்கிழமை தோறும் புரசைவாக்கம் நகராண்மைப் பள்ளியில் வித்துவான், மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் பட்டங்களுக்கு இலவச வகுப்புகளை நடத்தினார்.
தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் முயற்சியால் சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப். பள்ளியில் நடந்த தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சற்குணர், 'கிறித்தவமும் தமிழும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அதனால் ஊக்கம் பெற்றே மயிலை சீனி வேங்கடசாமி 'கிறித்தவமும் தமிழும்' என்ற நூலை எழுதினார். அந்த நூலை வேங்கடசாமி எழுதப் பல விதங்களிலும் சற்குணர் உறுதுணையாக இருந்தார். அ.கி. பரந்தாமனார், நடேச நாயக்கர், அ.கு. ஆதித்தனார், பண்டிதர் .ரா. நடேச நாயகர், பிற்காலத்தில் அறநிலையத்துறை ஆணையராகத் திகழ்ந்த நரசிம்மன் போன்றோர் சற்குணரின் மாணவர்களாவர்.
ச.த. சற்குணர், மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவிக்கும் பணிகளிலேயே முழுமையாக ஈடுபட்டதால் அதிகம் நூல்களை எழுதவில்லை. சற்குணரின் மணிவிழா அவரது மாணவரான அ.கி. பரந்தாமனாரின் முயற்சியால் சென்னையில் 1937ம் ஆண்டில் நடைபெற்றது. மணிவிழாவுக்குத் தலைமை தாங்கி நிகழ்ச்சியைச் சிறப்பித்ததுடன், வாழ்த்துரையும் வழங்கிக் கௌரவித்தார் உ.வே. சாமிநாதையர். சற்குணர் மீதும் அவரது தந்தை மீதும் உ.வே.சா. மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். சற்குணரின் தந்தை சாமுவேல் பற்றி உ.வே.சா., "சற்குணர் தகப்பனார் ஒரு பெரும் தமிழன்பர். நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீவக சிந்தாமணியை அச்சிட முயன்று கொண்டிருந்தபோது, எனக்குத் தோன்றாத் துணையாய் ஊக்கமளித்தவர்களில் அவர் ஒருவர். வாராவாரம் கடிதம் எழுதி எனக்கு அவ்வேளையில் உற்சாகம் உண்டாக்கினார். 'குலவிச்சை கல்லாமற் பாகம் படும்' என்பதற்கேற்ப சாமுவேலின் தமிழறிவு, சற்குணரிடத்தில் அமைந்து கிடக்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ச.த. சற்குணர், சென்னை அரசின் பள்ளிப் பாடநூல் தேர்வுக்குழுத் தலைவராகவும், சென்னைப் பல்கலைக் கழகப் பாடத்திட்டக் குழு மற்றும் தமிழ்க்குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். தாம்பரத்தில் தம்முடைய வீட்டிற்குத் தமிழகம் எனப் பெயர் வைத்திருந்தார்.
வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவும், தமிழ் உயர்வுக்காகவும் உழைத்த ச.த. சற்குணர் டிசம்பர் 23, 1952ல் காலமானார். தமிழ்ப்பற்றுள்ளோர் என்றும் மறக்கக்கூடாத முன்னோடி, ச.த. சற்குணர்.
(தகவல் உதவி: சற்குணர் மலரும் சற்குணீயமும் நூல், தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகம்) |