Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
குன்றக்குடி அடிகளார்
- பா.சு. ரமணன்|பிப்ரவரி 2026|
Share:
பிறப்பு
தென் தமிழ்நாட்டில் சைவநெறி தழைத்தோங்க உழைத்தவர்களுள் ஒருவர், குன்றக்குடி தெய்வசிகாமணி அருணாசால தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் என்னும் குன்றக்குடி அடிகளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடுத்திட்டு என்ற சிற்றூரில் ஜூலை 11, 1925 அன்று சீனிவாசம் பிள்ளை - சொர்ணத்தாச்சி இணையருக்கு கடைசி மகனாகப் பிறந்தார். இயற்பெயர் அரங்கநாதன். உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஒரு சகோதரி.

கல்வி
அண்ணன் கோபாலகிருஷ்ணன் அண்ணாமலை பல்கலையில் பயின்றார். அதற்காகக் குடும்பம் சிதம்பரத்திற்குக் குடி பெயர்ந்தது. அரங்கநாதனின் பள்ளிப்பருவம் சிதம்பரத்தில் கழிந்தது. குடும்பத்தினர் பால் வியாபாரம் செய்து வந்தனர். அண்ணாமலைப் பல்கலைகழகப் பேராசிரியர்களுக்குப் பால் கொண்டு செல்வார் அரங்கநாதன். அதன்மூலம் பல பேராசிரியர்களின் அறிமுகம் கிடைத்தது. ரா.பி. சேதுப்பிள்ளை மூலம் திருக்குறளில் ஆர்வம் வந்தது. தினம் ஒரு குறளை ஒப்பித்து அவரிடம் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கமானது. விபுலானந்தர், வேங்கடசாமி நாட்டார் ஆகியோர் மூலம் தமிழார்வம் வந்தது.

அரங்கநாதனின் அண்ணன் கோபாலகிருஷ்ணனுக்கு புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டியில் ஆசிரியர் பணி கிடைத்தது. அரங்கநாதனும் அவருடன் சென்று அங்கு படித்தார். பள்ளி இறுதி வகுப்புவரை படித்த அரங்கநாதன், தருமபுர ஆதீனத்தில் கணக்கர் பணி காலியாக இருப்பதை அறிந்து அதற்கு விண்ணப்பித்தார். அப்பணியோடு கூடவே அங்கு தமிழ் பயிலும் வாய்ப்பும் கிட்டியது. அங்கு தமிழ் பயின்று 'வித்துவான்' பட்டம் பெற்றார்.

துறவு
அரங்கநாதனின் அறிவுத் திறனால் கவரப்பட்ட அப்போதைய ஆதீனம், 25வது பட்டம் சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரங்கநாதனுக்குத் துறவு பெற விருப்பமா என்று கேட்டார். அவரும் சம்மதிக்கவே, குடும்பத்தினர் அனுமதியுடன் அரங்கநாதனுக்கு துறவு தீட்சை அளித்தார். 'கந்தசாமித் தம்பிரான்' என்ற பெயர் சூட்டப்பட்டது.

குன்றக்குடி அடிகளார்
அதுமுதல் பல சமயப் பணிகளைத் திறம்பட ஆற்றி வந்தார். அவரது பணிகளால் கவரப்பட்ட குன்றக்குடி திருமட ஆதீனகர்த்தர் ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், கந்தசாமித் தம்பிரானைத் தனது ஆதீனத்தின் இளைய தம்பிரானாக அனுப்பும்படி தருமை ஆதீனகர்த்தரிடம் கேட்டுக் கொண்டார். அவரும் இசையவே, கந்தசாமித் தம்பிரான் 1949-ல் குன்றக்குடி மடத்தின் இளைய தம்பிரானாகப் பொறுப்பேற்றார். 'தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' எனப் பெயர் சூட்டப்பட்டார். மடத்தின் செயல்பாடுகளை அங்குள்ள காரியதரிசியிடம் கற்றுக் கொண்டார். து.ச. துரைசாமி குருக்களிடம் சம்ஸ்கிருதமும் ஆகமங்களும் கற்றார். முறையாக ஆதீனப் பணிகளைச் செய்து வந்தார். மூத்த ஆதீனகர்த்தர் ஆறுமுக தேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் மறைவுக்குப் பின், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனத்தின் தலைமை ஆதீனகர்த்தராக, 45-வது குருமகா சன்னிதானமாக, 1952-ல் பொறுப்பேற்றார். அது முதல் மக்களால் 'குன்றக்குடி அடிகளார்' என்று அழைக்கப்பட்டார்.

சமயப் பணிகள்
குன்றக்குடி அடிகளார் பொறுப்பேற்ற காலத்தில், தமிழ்நாட்டில் நாத்திகப் பிரசாரமும், கருத்து மோதல்களும் அதிகம் இருந்தன. ஆகவே, இந்து மதத்தினரிடையே ஒற்றுமையையும், விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த விரும்பிய அடிகளார், சமயச் சான்றோர்களையும், தமிழறிஞர்களையும் ஒன்றுதிரட்டி, குன்றக்குடியில் மாநாடு ஒன்றை நடத்தினார்.

அருள்நெறித் திருக்கூட்டம்
குன்றக்குடி அடிகளார் சமய, ஆன்மிக ஒற்றுமைக்காக 'அருள்நெறித் திருக்கூட்டம்' என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இலங்கையிலும் பல கிளைகளைக் கொண்டு செயல்பட்டது. அதன் முதல் மாநாடு, 1954-ல் தேவகோட்டையில் மூதறிஞர் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது.



அருள்நெறித் திருப்பணி மன்றம்
ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், 1955-ல் 'அருள்நெறித் திருப்பணி மன்றம்' என்ற அமைப்பு குன்றக்குடி அடிகளாரால் ஏற்படுத்தப்பட்டது. அது பல்வேறு சமய, ஆன்மிக நற்பணிகளை முன்னெடுத்தது. தொடர்ந்து தமிழக அரசின் உறுதுணையுடன் 'தமிழ்நாடு தெய்வீகப் பேரவை' எனும் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. இதன் தலைவராக தருமை ஆதீன மடாதிபதி செயல்பட்டார். தொடர்ந்து 1969 முதல் 1976 வரை குன்றக்குடி அடிகளார் இவ்வமைப்பின் தலைவராகச் செயல்பட்டார்.

மக்களிடையே மத வேறுபாடுகளைக் களையும் முயற்சியில் ஈடுபட்டார். 1981ல் இராமநாதபுரம் இனக்கலவரம், 1981ல் புளியங்குடியில் நடந்த கலவரம், 1982ல் மண்டைக்காட்டில் நடந்த கலவரம் ஆகியவற்றில் அமைதி திரும்புவதற்காக நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார்.

சமூகப் பணிகள்
குன்றக்குடி அடிகளார் பல்வேறு சமூக நற்பணிகளை மேற்கொண்டார். பல சமபந்தி விருந்துகளை நடத்தி மக்களிடையே பேத உணர்ச்சி குறைவதற்கான வழிகளை மேற்கொண்டார். குன்றக்குடி கிராமத்தை தன்னிறைவுக் கிராமமாக ஆக்கும் திட்டத்தை தொடங்கினார். பெண்கள் பலருக்கு வேலைவாய்ப்பு அளித்து அவர்களைத் தொழில் முனைவோராக ஆக்கினார். குன்றக்குடியை அடுத்துள்ள கிராமங்களில் தீப்பற்றாத வீடுகளை அமைக்கும் பணியை மேற்கொண்டார். பல குடிசைத்தொழில்களை உருவாக்கி வேலைவாய்ப்பில் தன்னிறைவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்கினார். ஊரெங்கும், குடிநீர் வசதி உருவாக்குதல், கிராம நிர்வாக முறையை செம்மையாக்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டார். குன்றக்குடி கிராமத்தை முன்மாதிரிக் கிராமமாக முன்னேற்றும் பணிகளில் ஈடுபட்டார்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு இயக்கத் தலைவர், கிராமத் திட்டக்குழு நெறியாளர், தமிழக மேலவை உறுப்பினர் எனப் பல பொறுப்புகளில் ஈடுபட்டு மக்கள் பணியாற்றினார். இந்திய மற்றும் தமிழக அரசு அமைத்த பல்வேறு குழுக்களில் உறுப்பினராகவும், ஆலோசகராகவும் செயல்பட்டார். பல்வேறு வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

கல்விப் பணிகள்
குன்றக்குடி அடிகளார் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகக் குன்றக்குடியில் 1958ல் உயர்நிலைப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார். ஆர்வமுள்ளோர் தொழில்நுட்பக் கல்வி கற்க வழிவகை செய்தார். தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தக் குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகப் பாடத்திட்ட ஆலோசனைக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.

குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்கள்
திருவள்ளுவர், திருவள்ளுவர் காட்டும் அரசியல், திருவள்ளுவர் காட்டும் அரசு, குறட்செல்வம், வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை, திருக்குறள் பேசுகிறது, குறள் நூறு, சிலம்பு நெறி, கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம், பாரதி யுகசந்தி, பாரதிதாசனின் உலகம், கவியரங்கில் அடிகளார் (கவிதைகள்), மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு), அப்பர் விருந்து, அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர், திருவாசகத் தேன், தமிழமுது, சமய இலக்கியங்கள், நாயன்மார் அடிச்சுவட்டில், ஆலய சமுதாய மையங்கள், நமது நிலையில் சமயம் சமுதாயம், திருவருட் சிந்தனை, தினசரி தியான நூல், குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை (16 தொகுதிகள்).


இலக்கியப் பணிகள்
குன்றக்குடி அடிகளார் சிறந்த பேச்சாளர். பல்வேறு இலக்கிய, ஆன்மிக, சமயப் பட்டிமன்றங்களில் நடுவராகச் செயல்பட்டார். வழக்காடு மன்றங்கள் மூலம் பல விவாதங்களை ஏற்படுத்தி மக்களிடையே ஆன்மிக, இலக்கியச் சிந்தனைகள் விரிவடையக் காரணமானார்.

இதழியல் பணிகள்
குன்றக்குடி அடிகளார் 'மணிமொழி', 'தமிழகம்', 'அருளோசை', 'மக்கள் சிந்தனை', 'அறிக அறிவியல்' முதலிய இதழ்களை நடத்தினார்.

விருதுகள்
தமிழக அரசு வழங்கிய முதல் 'திருவள்ளுவர் விருது' குன்றக்குடி அடிகளாருக்குத்தான் வழங்கப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் செய்தித்தொடர்புத் துறை தேசியக்குழு விருதளித்துச் சிறப்பித்தது.

நாட்டுடைமை
குன்றக்குடி அடிகளாரின் படைப்புகள், அவரது மறைவுக்குப் பின், 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை செய்யப்பட்டது.

ஏப்ரல் 14, 1995ல், மதுரையில், குன்றக்குடி அடிகளார் காலமானார்.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline