தமிழ்மொழியின் வளத்திற்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் அருந்தொண்டாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களுள் சிலர் சீரோடும் சிறப்போடும் விளங்கிய போதிலும், தமிழ்ப்பணி செய்வதையே வாழ்நாள் கடமையாக, குறிக்கோளாகக் கொண்டு புகழின் வெளிச்சம் சிறிதும் தம்மீது படுவதை விரும்பாமல் வாழ்ந்து மறைந்தோர் பலர். அவர்களுள் ஆவுடையார் கோயில் பஞ்சாபகேசன் சுவாமிநாத சர்மா எனும் ஆ.ப.சுவாமிநாத சர்மாவும் ஒருவர்.
இவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோயிலை அடுத்துள்ள குடிக்காட்டில் செப்டம்பர் 4-, 1900 நாளன்று பஞ்சாபகேச சர்மா – தர்மாம்பாள் தம்பதியினருக்கு மகவாகத் தோன்றினார். தந்தை பஞ்சாங்கத் தொழில் செய்து வந்தார். சொந்தமாகச் சிறிது விவசாய நிலமும் இருந்தது. தந்தைக்கு தெய்வபக்தி அதிகம். குறிப்பாக முருகன்மீது அளவற்ற பற்றுக் கொண்டவர். ஒவ்வோர் ஆண்டும் பங்குனி உத்தரத்தின் போது பக்தர்கள் புடைசூழக் காவடி மற்றும் பால்குடங்களுடன் குன்றக்குடி ஷண்முகநாதன் ஆலயத்திற்கு நடந்தே செல்வது அவரது வழக்கம். அதனால் 'குடிக்காட்டு குகானந்தர்' என்று அவர் போற்றப்பாட்டார். தந்தைக்கு இருந்த பக்தி தனயனுக்கும் வந்தது. சுவாமிநாத சர்மாவும் இளமை முதலே முருகன்மீதும், அம்பாள் மீதும் மிகுந்த பக்தி கொண்டவராய்த் திகழ்ந்தார். ஆவுடையார் கோயில் அரசு உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புவரை பயின்றார். பின்னர் சில சூழ்நிலைகளால் குடும்பம் புதுக்கோட்டைக்குக் குடிபெயர்ந்தது. புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் அரசுப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புவரை படித்தார். அதன்பின் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து நிறைவு செய்தார்.
 சக ஆசிரியர்களுடன் (வலக்கோடியில் அங்கஸ்வதிரம் அணிந்து அமர்ந்திருப்பவர்)
இளவயதிலேயே சர்மாவுக்கு ஆசுகவியாகத் தமிழ் பாடும் ஆற்றல் இருந்தது. வீட்டில் இருந்த பழைய ஓலைச்சுவடிகள் மூலம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். குறிப்பாக, சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றும், கவி வகைகளில் மிகக் கடினமானதுமான 'சித்திரக் கவி' வகைகளைப் பழுதறக் கற்றார். புதுக்கோட்டை ஆசான் மதுரகவி பு.க. ஆறுமுகம் பிள்ளையிடமிருந்து இலக்கண நுணுக்கங்களைக் கற்றறிந்தார். புலவர் மன்றங்களில் நடந்த போட்டிகளில் பங்கேற்றுப் பரிசுகள் வென்றார். இவரது கவியாற்றலையும் தமிழறிவையும் கண்ட புதுக்கோட்டை சமஸ்தானப் புலவர் மன்றம் இவருக்கு 'மதுரவரகவி' என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
ஜூலை 07, 1922 நாளன்று புதுக்கோட்டையில் உள்ள சாரதா பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். அக்காலத்தில் நடிகர் பி.யூ. சின்னப்பாவின் தந்தை உலகநாதன் பிள்ளை சர்மாவின் நெருங்கிய நண்பராகத் திகழ்ந்தார். அவருடன் இணைந்து நாடகங்களுக்குச் செல்வதுண்டு. பல நாடகங்களுக்குப் பாடல்கள் எழுதித் தரும் பணியையும் சில காலம் செய்தார்.
சர்மாவுக்கு உடன் பிறந்தோர் மூவர். ராமச்சந்திரன், பாலசுப்ரமணியன், ஆத்மநாதன். இவர்களில் பாலசுப்ரமணியன் இளவயதிலேயே காலமாகி விட்டார். ராமச்சந்திரன் புதுக்கோட்டையில் கடிகாரம் பழுதுநீக்கும் கடை ஒன்றை வைத்திருந்தார். அத்துடன் ஜாதகம், மாந்த்ரீகம், சித்து போன்றவற்றிலும் வல்லவராக இருந்தார். ஆத்மநாதன் ஆசிரியர் பயிற்சியை முடித்தபின் புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
 சர்மாவின் முதல் மற்றும் இரண்டாவது புத்தகம்
சுவாமிநாத சர்மா 1923ஆம் ஆண்டில், தமது 23ஆம் வயதில் தம் குல தெய்வமான சுவாமிமலை முருகன்மீது பாடல்கள் புனைந்து அதை 'சுவாமிநாதன் தோத்திரக் கொத்து' என்னும் பெயரில் வெளியிட்டார். அதுதான் அச்சில் வெளிவந்த அவரது முதல் நூல். பின்னர், திருப்பெருந்துறை, நாங்குபட்டி, மூக்கன்பட்டி போன்ற கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏப்ரல் 07, 1925ம் நாளன்று சர்மாவுக்குத் தமிழார்வலர் கோட்டையூர் திருக்குறள் சுப்ரமணிய ஐயரின் மகள் கோகிலாம்பாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
சுவாமிநாத சர்மா, சிவகங்கையில் உள்ள கண்டவராயன்பட்டி பணிச்சாருடையவர் தர்மகலாசாலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அக்காலத்தில் பள்ளியின் இலக்கிய மன்றத்துக்குப் பொறுப்பாக இருந்து பல நிகழ்ச்சிகளை நடத்தினார். கல்விப் பணியோடு இலக்கியப் பணியையும் கைக்கொண்டார். சந்தக் கவிகள் பாடுவதில் மிக வல்லவராக இருந்ததால் 'சந்தச் சரபச் சித்திரப் பாவல ஆசான்' என்று போற்றப்பட்டார். 1935ஆம் ஆண்டில் அப்பள்ளியில் இருந்த புகழ் வாய்ந்த விநாயகர் மீது 'வரத கணேச தோத்திரப் பாமாலை' என்ற நூலை இயற்றினார். இலங்கை ராபர்ட் அச்சியந்திர சாலையில் அந்நூல் பதிப்பிக்கப்பட்டு வெளியானது.
கண்டவராயன்பட்டியைத் தொடர்ந்து, கோனாபட்டு சரஸ்வதி உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் பணியாற்றும் வாய்ப்பு சர்மாவுக்கு வந்தது. அது அவரது வாழ்வின் திருப்புமுனை ஆனது. கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயர் பெற்றவராக அங்கு பணியாற்றினார். அவ்வூரின் எழிலும், அமைதியும் அவரது கவி ஆற்றல் மேலும் வளர வழி வகுத்தன. குன்றை மும்மணிக்கோவை, மயூரகிரி உலா, திருவேரகன் பதிகம், மால் அரன் மாலை மாற்று மாலை, புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் துதிப்பாசுரத் தொகை, கல்லம்பட்டி முத்து மாரியம்மன் துதிப்பாசுரத் தொகை, தேனிமலை முருகன் துதிப்பாசுரத் தொகை என பல நூல்களை இயற்றினார். சர்மாவுக்கு நல்ல குரல்வளம் இருந்தது. மிக அழகாகப் பாடுவார். நாடகங்களின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. சங்கரதாஸ் சுவாமிகளின் பல நாடக வசனங்களை மனப்பாடமாகச் சொல்வார்.
ஆ.ப. சுவாமிநாத சர்மா நூல்கள் சுவாமிநாதன் தோத்திரக் கொத்து, வரத கணேச தோத்திரப் பாமாலை, துதிப்பாசுரத் தொகை, குன்றை மும்மணிக்கோவை, மயூர கிரி உலா, திருவேரகன் பதிகம், மால் அரன் மாலை மாற்று மாலை, புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் துதிப்பாசுரத் தொகை, கல்லம்பட்டி முத்து மாரியம்மன் துதிப்பாசுரத் தொகை, தேனிமலை முருகன் துதிப்பாசுரத் தொகை, தேனிமலை முருகன் தோத்திரப் பாமாலை, சித்திரப்பாக் கோவை, மயூரகிரி மும்மணி மாலை, முருகன் மாலை மாற்று மாலை, கணக்கியல்
சித்திரக் கவியில் தேர்ச்சி பெற்ற்றிருந்ததால் முரசு பந்தம், மயூர பந்தம், நாக பந்தம், அட்டநாக பந்தம், கூடச் சதுக்க பந்தம், ரத பந்தம், கமல பந்தம், புட்ப பந்தம், வேல் பந்தம் என்று பல நூற்றுக்கணக்கான சித்திரக்கவிகளை இயற்றினார். சித்திரக் கவிகள் புனைவதிலேயே தனது பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். முருகன், அம்பாள், சிவன் உட்படப் பல தெய்வங்கள் மீது ஐந்நூற்றிற்கும் மேற்பட்ட சித்திரக் கவிகளைப் புனைந்திருக்கிறார். இவரது சித்திரக் கவிகளைக் கண்ட அக்காலத் தமிழறிஞர் நா. கனகராஜையர் மிகவும் வியந்து பாராட்டியிருக்கிறார். நங்கைபுரம் வித்வான் ந.து வேங்கடராமையர், புதுக்கோட்டை மதுரகவி பு.க. ஆறுமுகம் பிள்ளை போன்ற கவிச் சான்றோர்கள் இவருடைய இலக்கிய நூல்களுக்குச் சாற்றுக் கவி வழங்கிச் சிறப்பித்தனர்.
காஞ்சி மஹா பெரியவர் ஜகதகுரு சந்திரசேகரேந்திர சுவாமிகள் இளையாற்றங்குடியில் வந்து தங்கியிருந்தபோது ஆகஸ்டு 06, 1961 நாளன்று நடந்த சதஸ்ஸில் கலந்து கொண்டு பெரியவர்மீது பல பாடல்கள், சித்திரக் கவிகள் புனைந்து அவரது பாராட்டையும், ஆசியையும் பெற்றார். ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மீதும் சித்திரக்கவி இயற்றியுள்ளார்.
சுவாமிநாத சர்மா 1961ல் பணி ஓய்வு பெற்றபின், புதிய இலக்கியங்கள் படைப்பதில் ஈடுபட்டார். இலக்கியம் மட்டுமல்லாது கணிதம், ஜோதிடம், கதை, நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கணிதச் சூத்திரங்கள், விதிகள் பற்றி ஆய்வுசெய்து அவர் எழுதிய 'கணக்கியல்' என்னும் நூல் குறிப்பிடத்தக்கது. அதுபோக, கால ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருந்தார். கம்பன் பிறந்த நாள், மறைந்த நாள், அவன் சமாதி இருக்கும் இடம், அம்பிகாபதி-அமராவதி சமாதிகள் இருக்கும் இடம் பற்றியும் இவரது கையேட்டில் குறிப்புகள் காணப்படுகின்றன.
சுவாமிநாத சர்மா, நூல் சேகரிப்பாளராக இருந்தார். இலக்கியம், நாவல், ஜோதிடம், மாந்த்ரீகம், தத்துவம், சமயம் சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்களைச் சேகரித்து வைத்திருந்தார். பணியின் காரணமாகப் பல்வேறு ஊர்களில் வாழ வேண்டியிருந்த காரணத்தால், அவற்றைச் சரியாகப் பராமரிக்க முடியாததால், பல நூல்களை கோட்டையூர் ரோஜா முத்தையா செட்டியாரிடம் கையளித்து விட்டார். எஞ்சிய நூல்களில் சில அவரது வாரிசுகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
 சர்மா எழுதிய நூல்களின் கையெழுத்துப் பிரதிகள்
சுவாமிநாத சர்மாவுக்கு 1970ல் பார்வைக்குறைவு ஏற்பட்டு முற்றிலும் பார்வை இழந்தார். கண் பார்வை பறிபோனதால் அவரது முயற்சிகள் யாவும் தடைப்பட்டன. நீதி, நேர்மையோடு வாழ்வதே முக்கியம் என்ற கொள்கையை இறுதிவரை பின்பற்றிய அவர் ஜூலை 19, 1973ஆம் நாளன்று இவ்வுலக வாழ்வை நீத்தார்.
ஆ.ப. சுவாமிநாத சர்மாவின் பேரன்களில் கி. நடராஜன் (தேவகி மைந்தன்), அரவிந்த் சுவாமிநாதன் (பா.சு. ரமணன்), பா. சங்கர் ஆகிய மூவரும் எழுத்துத் துறையில் உள்ளனர். |