தமிழில் பல்வேறு இலக்கண, இலக்கிய நூல்களை எழுதி 'பாவலரேறு' என்று போற்றப்பட்டவர் ச. பாலசுந்தரம். ஜனவரி 18, 1924 அன்று தஞ்சாவூருக்கு வடக்கிலுள்ள கருந்திட்டைக்குடியில் மு. சந்திரசேகரன் பிள்ளை - விஜயம்மாள் தம்பதிக்குப் பிறந்தார். சட்டைநாத வாத்தியார் நடத்திய திண்ணைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி கற்றார். தூய பேதுரு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புவரை படித்தார். கல்விக் கட்டணம் கட்ட இயலாததால் படிப்பு தடைப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பின் 8-ஆம் வகுப்புத் தேர்வெழுதித் தேர்ச்சி அடைந்தார். இடைநிலையிலும் தேர்ச்சியடைந்து, புலவருக்குப் பயின்று பட்டம் பெற்றார்.
ச. பாலசுந்தரம், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். பின் துணைமுதல்வராக உயர்ந்தார். இக்கல்லூரியில் 1950 முதல் 1982 வரை 32 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி பங்கஜவல்லி. மகன் பா. மதிவாணன், தமிழவேள் உமாமகேஸ்வரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார். மகள், தமிழ்மணி மாவட்டக் கல்வி மைய அதிகாரியாகப் பணிபுரிந்தார்.

ச. பாலசுந்தரம், இளவயது முதலே இலக்கண, இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். இலக்கிய இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். 'ஆதிமந்தி', 'புலவர் உள்ளம்', 'கரந்தைக் கோவை', 'அண்ணாவின் இதயம் அருந்தமிழ்க் கலைஞர்' போன்ற நூல்களை எழுதினார். தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்காகச் சுவடிகளை ஆராய்ந்து 'தனிப்பாடல் திரட்டு' இரண்டு பாகங்களை பொழிப்புரை, விளக்கத்துடனும், 'திருப்பெருந்துறைப் புராணம்', 'திருநல்லூர் புராணம்', 'நீதித்திரட்டு' ஆகிய நூற்களை குறிப்புரைகளுடனும் பதிப்பித்தார். 'தமிழ்ப் பொழில்' இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
தஞ்சை தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவராகவும், தஞ்சை தொல்காப்பியர் கழகத் தலைவராகவும் பணியாற்றி, பல்வேறு இலக்கிய, இலக்கணப் பணிகளை முன்னெடுத்தார். 1952 தொடங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களைத் தலைமையேற்று நடத்தினார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கணிப்பொறி வழி சங்க இலக்கிய அகராதி, சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணிகளில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம், மதுரை காமராசர் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக் கழகம் போன்றவற்றில் தேர்வாளராகவும், வினாத்தாள் தொகுப்பாளராகவும் செயல்பட்டார். வானொலி நாடகங்கள் பலவற்றிலும் பங்கேற்றார்.
ச. பாலசுந்தரம் ஆய்வு நூல்கள்: ஆதிமந்தி, புரவலர் உள்ளம், புலவர் உள்ளம், கரந்தைக் கோவை, புகழ் பெற்ற தலைவர்கள், இரு பெரும் கவிஞர்கள், அருட்புலவோரும் அரும் பெறற் கவிஞரும், மழலைத்தேன், அண்ணாவின் இதயம் அருந்தமிழ்க் கலைஞர், தொல்காப்பியம் - ஆராய்ச்சிக் காண்டிகையுரை (எழுத்து, சொல், பொருள் என ஐந்து பாகங்கள்), மடைமாறிய தமிழ் இலக்கண நூல்கள், தென்னூல் - எழுத்து - சொல்படலம், தென்னூல் - இலக்கியப் படலம், மொழியாக்க நெறிமரபு, மொழி இலக்கண வரலாற்றுச் சிந்தனை, மொட்டும் மலரும் மற்றும் பல.
பாலசுந்தரத்தின் இலக்கிய, இலக்கணப் பணிகளுக்காக, 'கவிஞர் கோ', 'தொல்காப்பியப் பேரறிஞர்', 'தொல்காப்பியப் பேரொளி', 'தொல்காப்பியச் சுடர்', 'இலக்கணப் பேரொளி', 'செந்தமிழ்ச் செம்மல்', 'குறள்நெறிச் செம்மல்', 'தமிழ்ப்பேரவைச் செம்மல்', 'செஞ்சொற் கவிவளவன்' போன்ற பல்வேறு விருதுகள் அளிக்கப்பட்டுப் பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டார். தமிழக அரசின் 'பாரதிதாசன் விருது', திருப்பனந்தாள் பாவலர் மன்றத்தின் 'பாவலரேறு', உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வழங்கிய 'தொல்காப்பியச் செம்மல்' போன்றவை பாலசுந்தரம் பெற்ற விருதுகளுள் குறிப்பிடத்தகுந்தன.
ச. பாலசுந்தரம் ஆகஸ்ட் 1, 2007 அன்று காலமானார். அவரது மறைவுக்குப் பின் 'பாவலரேறு ச. பாலசுந்தரம்' என்ற தலைப்பில் ம. கண்ணம்மாள் நூல் ஒன்றை எழுதினார். அதனைக் கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறை மற்றும் மலாயா இந்திய ஆய்வியல் துறையுடன் இணைந்து, 2015-ல் வெளியிட்டது.
ச. பாலசுந்தரம் பதிப்பித்த நூல்கள்: தனிப்பாடல் திரட்டு - 2 பாகங்கள் (பொழிப்புரை, விளக்கத்துடன்), திருப்பெருந்துறைப் புராணம், திருநல்லூர் புராணம், நீதித்திரட்டு
ச. பாலசுந்தரம் கல்வியாளராக நீண்டகாலம் இலக்கியம் பயிற்றுவித்தார். இலக்கியம் சார்ந்த நூல்களை எழுதினார். பண்டை நூல்களைப் பதிப்பித்தார். எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், கல்வியாளர் ஆகிய நிலைகளில், தமிழின் மூத்த அறிஞராக, முன்னோடியாக என்றும் மதிக்கத்தக்கவர், ச. பாலசுந்தரம். |