Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
குளித்தலை கடம்பவனேஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|பிப்ரவரி 2022|
Share:
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ளது கடம்பவனேஸ்வரர் ஆலயம் மூலவர் நாமம் கடம்பவனேஸ்வரர். உற்சவர் சோமாஸ்கந்தர். அம்பாள் நாமம் முற்றிலா முலையம்மை, பாலகுஜாம்பாள். தீர்த்தம் காவிரி, பிரம்ம தீர்த்தம். புராணப் பெயர் கடம்பந்துறை, குழித்தண்டலை. தலவிருட்சம் கடம்ப மரம். திருநாவுக்கரசர், அருணகிநாதர் இத்தல இறைவனைப் போற்றிப் பாடியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது இரண்டாவது.

தல வரலாறு:
தூம்ரலோசனன் எனும் அசுரன், தேவர்களை துன்பப்படுத்தி வந்தான். அவர்கள் அம்பாளிடம், அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். அம்பாள் துர்க்கை வடிவம் எடுத்து அவனை அழிக்கச் சென்றாள். அசுரன் தான் பெற்றிருந்த வரத்தினால் துர்க்கையுடன் தொடர்ந்து சமபலத்துடன் மோதவே, துர்க்கையின் பலம் குறைந்தது. எனவே, சப்த கன்னிகைகளை அனுப்பி அசுரனுடன் போர்புரியச் செய்தாள். அவர்களை எதிர்க்க முடியாத அசுரன், அவர்களிடமிருந்து தப்பி வனத்திற்குள் ஓடினான். அங்கு கார்த்தியாயன மகரிஷியின் ஆசிரமத்திற்குள் ஒளிந்து கொண்டான். சப்த கன்னிகைகளும் ஆசிரமத்திற்குள் சென்றனர். அங்கு முனிவர் தவத்தில் இருந்ததைக் கண்ட அவர்கள், தூம்ரலோசனன்தான் முனிவர்போல உருமாறி அமர்ந்திருப்பதாகக் கருதி, முனிவரை அழித்து விட்டனர். இதனால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அவர்கள் தங்களது தோஷம் நீங்க அருளும்படி அம்பாளை வேண்டினர்.



அம்பாள், இத்தலத்தில் சிவனை வேண்டிக்கொள்ள விமோசனம் கிடைக்கும் என்றாள். அதன்படி சப்த கன்னிகைகள் இங்கு வந்து தவமிருந்தனர். சிவன் அவர்களுக்கு கடம்ப மரத்தில் காட்சி தந்து விமோசனம் அளித்தார். இங்கு சிவன் வடக்கு நோக்கிய சுயம்புலிங்கமாக இருப்பது ஒரு சிறப்பு. கருவறையில் லிங்கத்துக்குப் பின்புறத்தில் சப்தகன்னிகைகள் இருப்பது மற்றுமொரு சிறப்பு.

சிவன் சாபவிமோசனம் கொடுத்தபோது, சப்த கன்னியர், அசுரனை அழித்துத் தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டிக்கொண்டனர். சிவன் சப்த கன்னிகைகளுக்குப் பாதுகாப்பாக இருந்து, அசுரனை அழித்தார். சிவன் இத்தலத்தில் சப்தகன்னிகைகளுக்குப் பாதுகாவலராக இருப்பதாக ஐதீகம். சுவாமிக்கு நேர்பின்புறம் உள்ள சாமுண்டியை, துர்க்கையாக வழிபடுகின்றனர். துர்க்கைக்கு தனிச்சன்னதி இல்லை. பெண்கள், துர்க்கை வழிபாட்டை சிவன் சன்னதி முன்பு செய்கின்றனர்.

இங்குள்ள விநாயகர் அனுக்ஞை விநாயகர். இங்குள்ள விமானம் திரிதளம். ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. சிவன் வடக்கு நோக்கி இருப்பதால், கோஷ்டத்தின் பின்புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி உள்ளார். வழக்கமாகத் தெற்கு நோக்கி உள்ள சண்டிகேஸ்வரர் மேற்கு நோக்கியும், வடக்குப் பார்த்திருக்கும் பிரம்மா கிழக்கு நோக்கியும் உள்ளனர். பிரகாரத்தில் உள்ளே நவக்கிரக சன்னதியின் மேலே முருகன் வள்ளி, தெய்வானை உள்ளனர். செவ்வாய் தோஷ பாதிப்பு உள்ளவர்கள் முருகனையும், நவக்கிரகத்தில் செவ்வாயையும் வழிபடுகின்றனர். சனீஸ்வரருக்குத் தனிச்சன்னிதி உள்ளது.



திருவிழா
மாசியில் 13 நாட்கள் பிரம்மோத்சவம், தைப்பூசம், வைகாசி விசாகம், கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக பெண்கள் இங்கு வேண்டிக்கொண்டால், அவர்களுக்குச் சிவன் துணையாக இருந்து காப்பார் என்பது நம்பிக்கை. பெண்கள் தங்கள் குறைதீர இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். சுவாமி, அம்பாளுக்கு திருமணம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றுகின்றனர்.
ஆலயம், காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அரிய நான்மறை ஆறங்கமாய் ஐந்து
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சுண்டவன்
கரிய கண்டத்தினான் கடம்பந்துறை
உரியவாறு நினை மடநெஞ்சமே

- திருநாவுக்கரசர்
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 




© Copyright 2020 Tamilonline