Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல்
Tamil Unicode / English Search
சமயம்
உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்
- சீதா துரைராஜ்|ஜனவரி 2022|
Share:
தமிழ்நாட்டில் திருச்சி மாவட்டத்தில் உறையூரில் அமைந்துள்ளது பஞ்சவர்ணேஸ்வரர் ஆலயம்.

தலப்பெருமை
மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர். புராணப்பெயர் திருமூக்கிச்சுரத்தடிகள். அம்மன் பெயர் காந்திமதி அம்மை. தீர்த்தம்: சிவ தீர்த்தம்; நாக தீர்த்தம். தலவிருட்சம் வில்வம். சைவ சமயக் குரவர்களில் திருஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் இத்தலத்து இறைவனைப் பாடி உள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் இது ஐந்தாவது. 274 சிவாலயங்களில் இது 68வது தேவாரத்தலம்.

இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். தங்கம், வெண்மை, செம்மை, கருமை, புகைவண்ணம் ஆகிய ஐந்து நிறங்களை இச்சிவலிங்கம் பிரம்மனுக்குக் காட்டியதால் இவருக்கு ஐவண்ணப்பெருமான் என்ற திருநாமமும் உண்டு. உலகில் எந்த இடத்தில் சிவபூஜை செய்தாலும், சிவ தரிசனம் செய்தாலும் அவையனைத்தும் இங்கு வந்து உறையும் என்பதால் இத்தலம் உறையூர் எனப்பட்டது. சோழ மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டது.

கார்க்கோடகன் என்கிற பாம்பும் கருடனும் இங்கு வந்து சிவனை வழிபட்டுள்ளனர். இங்கு வழிபட்டால் நமக்கு ஏற்பட்ட தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். படைப்பின் நாயகன் பிரம்மனே இங்கு வந்து பூஜை செய்ததால், நாம் செய்யும் எந்தத் தொழிலாக இருந்தாலும் இங்கு வந்து வழிபட்டால் வெற்றி நிச்சயம்.

ஒருமுறை நாத்திகன் ஒருவன் கோவிலில் கொடுத்த திருநீறை அணியாமல் அலட்சியம் செய்ததால் மறுபிறவியில் அவன் பன்றியாகப் பிறந்து சேற்றில் உழன்றானாம். தன் முந்தைய பிறவித் தவறை நினைத்து வருந்தினான். சிவனை வணங்கி, இங்குள்ள சிவதீர்த்தத்தில் நீராடிப் பாவ விமோசனம் பெற்றான் என்கிறது புராணம். இங்குள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் நாககன்னியரால் பூஜிக்கப்பட்டு சோழமன்னரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

உறையூர் வந்த பிரம்மா, இத்தலத்து ஈசனை வணங்கினார். அப்போது சிவன் தன்னிடம் இருந்து பொன் வண்ணம், வெண்மை, செம்மை, கருமை, புகை நிறம் ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தினார். பொன்னிறத்திலிருந்து மண்ணும், வெண்ணிறத்திலிருந்து தண்ணீரும், செம்மையிலிருந்து நெருப்பும், கருமையிலிருந்து காற்றும், புகை நிறத்திலிருந்து ஆகாயமும் வெளிப்படும் என்று கூறினார். நீராகத் திருவானைக்காவலிலும், நிலமாகக் காஞ்சிபுரத்திலும், நெருப்பாகத் திருவண்ணாமலையிலும், காற்றாகக் காளஹஸ்தியிலும், ஆகாயமாகச் சிதம்பரத்திலும் காட்சியளிக்கும் சிவன், ஐந்து பூதங்களையும் ஒன்றாக உள்ளடக்கி இங்கே உறைவதால் ஊருக்கு உறையூர் என்றும், சுவாமிக்குப் பஞ்சவர்ணேஸ்வரர் என்றும் பெயர் ஏற்பட்டது. "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்" என இவரைப் போற்றி மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.சோழ அரசர் ஒருவர் யானைமேல் உலா வந்தபோது யானைக்கு மதம் பிடித்து விட்டது. அரசனும், பாகனும் செய்வதறியாது திகைத்தனர். அப்போது கோழி ஒன்று குரலெழுப்பி வந்து, பட்டத்து யானையின் மத்தகத்தின் மேல் மூக்கால் கொத்தியதும், மதம் அடங்கிய யானை பழைய நிலையை அடைந்தது. யானையை அடக்கிய கோழி ஒரு வில்வ மரத்தடியில் சென்று மறைந்தது. அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது சிவலிங்கம் இருக்கக் கண்ட மன்னன், சிவனே தன்னையும், மக்களையும் யானையிடம் இருந்து காப்பாற்றியதை அறிந்து, அவருக்குக் கோவில் எழுப்பினான். சிவனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர் சூட்டினான். பலம் வாய்ந்தவர்கள் ஒருவரைத் துன்புறுத்தும் போது, யானையைக் கோழி அடக்கியது போல, அவர்களை அடக்கும் பலத்தை இத்தலத்து இறைவன் தருகிறார் என்பது ஐதீகம்.

இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் 'திருமூக்கீச்சுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. உதங்க முனிவர், மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடியபோது அவளை ஒரு முதலை இழுத்துச் சென்று சின்னாபின்னப் படுத்தியது. வாழ்வின் நிலையாமையை உணர்ந்தவர் முனிவர் என்றாலும், அவரது மனம் இது கண்டு தத்தளித்தது. மனநிம்மதிக்காக அவர் உறையூர் வந்து சிவனை வழிபட்டார். காலை வழிபாட்டில் ரத்தினலிங்கமாகவும், உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், மாலை வழிபாட்டில் பொன் லிங்கமாகவும், முதல்ஜாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், அர்த்தஜாம வழிபாட்டில் சித்திரலிங்கமாகவும் சிவன் அவருக்குக் காட்சியளித்தார். இதனாலும் சிவபெருமான் 'பஞ்சவர்ணேஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். அப்போது முனிவரது மனம் அமைதியுற்றது. ஞான அனுபவம் பெற்று முக்தியடைந்தார். ஆடிப் பௌர்ணமியில் உதங்க முனிவருக்கு ஐந்து வண்ணம் காட்டியதாக வரலாறு என்பதால் அன்று இறைவனைத் தரிசித்து வழிபடுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பைரவர், சனிபகவான், சூரியன் ஒரே சன்னதியில் வீற்றிருப்பதால் கிரக தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலம் இது. தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. உலகில் எவ்விடத்தில் சிவபூஜை, சிவதரிசனம் செய்தாலும் இத்தலத்து இறைவனை வந்தடையும் என்பது ஐதீகம். இக்கோயில் வரலாற்றுடன் சேவலுக்குத் தொடர்பு இருப்பதால், இத்தல முருகனைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இங்கு அம்பாள் காந்திமதி மற்றும் பஞ்சமுக விநாயகர் காட்சி தருகின்றனர். சாபம், பாவம், தோஷம் ஆகியவற்றிலிருந்து இத்தலத்து இறைவன் நிவர்த்தி அளிக்கிறார். சிவனுக்கும் அம்பிகைக்கும் அபிஷேகம் செய்து பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.

கருடன், காசியபர் மனைவி கத்துரு, மற்றும் அவர்கள் மகன் கார்க்கோடகன் இங்கே வழிபட்டுள்ளனர்.

சித்ரா பௌர்ணமி, வைகாசி பிரம்மோற்சவம், ஆனித் திருமஞ்சனம், ஆடிப் பௌர்ணமி, ஆவணி மூலம், நவராத்திரி, ஐப்பசிப் பௌர்ணமி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்றவை இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஆலயம் காலை 5.30 மணி முதல் 12.30 மணிவரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை திறந்திருக்கும்.

நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச்
சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான்
சீரினாலங் கொளிர்தென்ன வன்செம்பி யன்வில்லவன்
சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்ற தோர்செம்மையே

- திருஞானசம்பந்தர்
சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா
Share: 
© Copyright 2020 Tamilonline