Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சித்திரம் | மாயச்சதுரம் | மூளைக்கு வேலை | Sudoku |
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
இனிப்பு நீரின் மர்மம்
- ராஜேஷ்|ஏப்ரல் 2020|
Share:
அத்தியாயம் - 4
மதிய உணவுக்குப் பின் அருணுக்குக் கொஞ்சம்கூட வகுப்பில் மனம் பதியவில்லை. தான் குடித்த தண்ணீரின் ருசிபற்றியே யோசித்தான். ஏதோ வானத்திலிருந்து கொட்டிய அமிர்தம்போல அவனுக்கு அதன் ருசி தோன்றியது. யாராவது தெரியாமல் ஒருவண்டிச் சர்க்கரையை அதில் கொட்டிவிட்டார்களோ என்று தோன்றியது. வீட்டுக்குப் போகுமுன்னர் தனது நெருங்கிய தோழி சாராவிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும் என்று சொல்லிக்கொண்டான்.

பள்ளிக்கூடம் முடிந்தது. வகுப்பில் இருந்து வெளியே வரும்போது மிஸ் டிம்பர் "நாளைக்கு வீட்டுப்பாடம் எல்லாரும் முடிச்சிருக்கணும், சரியா? எவனாவது காப்பி கொட்டிருச்சு, நாய் சாப்பிட்டுருச்சு அப்படி இப்படினுன்னு காரணம் சொன்னீங்கன்னா, உதைதான் கிடைக்கும்" என்றார்.

"கவலையே படாதீங்க மிஸ் டிம்பர்" என்று சொல்லிக்கொண்டே சாம் வகுப்பை விட்டு வெளியே வந்தான்.

"தோஸ்த், நாளைக்கு உன்னைத்தான் முதல்ல கேட்பேன்" என்று சாமி வயிற்றில் புளியைக் கரைத்தார் மிஸ் டிம்பர். அருண் தண்ணீரின் அசட்டுத் தித்திப்பைப் பற்றியே யோசித்துக் கொண்டிருந்தான். ஆசிரியை நின்று கொண்டிருந்ததைக் கூட கவனிக்கவில்லை.

"ஹலோ யங் மேன், நீ எதையோ மறந்தமாதிரி தெரியலே?" என்று கேட்டு மிஸ் டிம்பர் அருணை யோசனையிலிருந்து விடுவித்தார்.
எதற்காகத் தன்னை இப்படிக் கேட்கிறார் என்று அருணுக்குப் புரியவில்லை. அவன் மனமெல்லாம் சாராவிடம் தனது சந்தேகத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்பதிலேயே இருந்தது. சாராவோ சற்றுத் தொலைவில் காரில் ஏறவேண்டிய இடத்தை நோக்கி நடந்து போய்க்கொண்டிருந்தாள். காரில் ஏறுவதற்குள் அவளைப் பிடிக்கவேண்டும்.

"யங் மேன், நீ எதையோ மறந்துட்டியோ?’ என்று மீண்டும் மிஸ் டிம்பர் கேட்டார். என்ன சொல்வது என்று தெரியாமல் அருண் விழித்தான். சாரா எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் அவனுக்கு அவசரம் அதிகமானது.

"தெரியல, மிஸ் டிம்பர்." குனிந்து பார் என்றார் அவர். அப்போதும் ஒன்றும் புரியவில்லை. "ஷூ லேசஸ்" என்றார். "ஒழுங்கா கட்டிக்கோ. எங்காவது தடுக்கி விழுந்திரப் போற" என்றார்.

அருண் சட்டென்று குனிந்து ஷூ லேஸைக் கட்டினான். தூரத்தில் சாராவின் அம்மா காத்திருப்பதைப் பார்த்தான்.

"சாரா! சாரா! ஒரு நிமிஷம் நில்லேன்" என்று கத்திக் கூப்பிட்டான். அருணின் திடீர் கத்தலைக் கேட்டு சாரா திடிக்கிட்டுத் திரும்பினாள்.

"சாரா" அருண் அருகே ஓடிப்போய் மூச்சிரைக்க நின்றான்.

சாராவின் அம்மா ஏதாவது ஆகிவிட்டதோ என்று பயந்து போனார். "அருண், என்னப்பா ஆச்சு?" என்று அக்கறையுடன் கேட்டார். "இப்படி எல்லாம் ஓடினா, எங்காவது கீழே விழுந்து அடிபட்டுரும் கண்ணா."

அருண் மூச்சிரைப்பு நிற்காமல் "ஹலோ மிஸ் ஃபிளவர்ஸ், நான் சாராவோடு ஒரு நிமிஷம் பேசலாமா?" என்றான். சாராவின் அம்மா புன்சிரிப்போடு சரி என்று தலையாட்டினார்.

"அருண், எனக்கு நீச்சல் வகுப்புக்குப் போகணும். நாளைக்குப் பேசலாமே?" என்று சாரா அருணைத் தடுக்கப் பார்த்தாள்.

அருண் அவளை விட்டபாடில்லை. சாராவுக்குச் சற்று கோபம் வந்தது. அவளைத் தனியே அழைத்துப் போய் அம்மா அவளைச் சமாதானப்படுத்தினார். சாரா போன்ற ஒரு துடுக்குப் பெண்ணுக்கு, அருண் போல அவளை மதித்துப் போகிற நண்பன் கிடைக்காது என்பது அவருக்குத் தெரியும். அருணின் நட்புமட்டும் இல்லாவிட்டால் சாரா ஒரு புத்தகப் புழுவாகத்தான் இருப்பாள் என்று சாராவின் அம்மா நம்பினார்.

"அம்மா, இவன் எப்பவுமே இப்படித்தான். பாடாப் படுத்திடுவான்" என்று அம்மாவிடம் சாரா புகார் செய்தாள்.

"ஸ்வீட்டி, இவன் உன்னோட நல்ல நண்பன்" என்றார் சாராவின் அம்மா. "என்ன அருண். அப்படி என்ன அவசரம்?" என்று கேட்டாள் சாரா.

அருண் சாராவின் கையைப் பிடித்து குடிநீர்க் குழாய் அருகே அழைத்துச் சென்றான். சாராவிற்கு மீண்டும் அவ்வளவு தூரம் திரும்பி நடக்கவேண்டுமே என்று கோபம் வந்தது. "அருண், என்னது இது. எனக்குத்தான் நீச்சல் வகுப்பு இருக்குனு தெரியுமில்ல? நாளை வரைக்கும் காத்திருக்க முடியாத அவசரம் என்ன உனக்கு?" என்று மெஷின் கன் போலப் பொரிந்து தள்ளினாள்.

அருண் ஒன்றுமே பேசவில்லை. சாராவிடம் தண்ணீரைக் குடித்துப் பார்க்குமாறு சொன்னான். சாரா குடித்தாள்.

"எப்படி இருக்கு, சாரா?"

"புரியலை. தண்ணில என்ன தப்பு? நல்லாதானே இருக்கு?"

"ரொம்ப இனிப்பா படலை?"

"அதனால?"

"தண்ணீர் சுவை, மணம் இல்லாமல் இருக்கவேண்டாமா?"

"எனக்கு வாசனை ஒண்ணும் தெரியல."

"நான் நாத்தம் வருதுன்னு சொல்லலை. அந்த அசட்டுத்தனமான தித்திப்புதான்."

அதற்க்குள் சாராவின் அம்மா "சாரா, நேரமாச்சு கண்ணா. வா போகலாம். அருண்கிட்ட நாளைக்குப் பேசிக்கலாம், சரியா?" என்று குரல் கொடுத்தார்.

"அருண், நான் கிளம்பறேன். சின்ன விஷயத்துக்கெல்லாம் ரொம்ப டென்ஷன் ஆகாதே, சரியா?" என்று சொல்லிவிட்டு, சாரா ஓடிப்போனாள்.

சாரா சொன்னதுபோல் நான்தான் காரணம் இல்லாமல் சந்தேகப் படுகிறோமோ என்று நினைத்தான். சந்தேகம் ஒரு மாயையாக இருக்கக்கூடுமோ என்று வியந்தான். பள்ளிக்கூடத் தண்ணீரின் வித்தியாசமான தித்திப்புக்கும், ஹோர்ஷியானா நிறுவனத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கமுடியுமா என்றுகூட யோசித்தான்.

எல்லாவற்றையும் டேவிட் ராப்ளேயுடன் முடிச்சுப் போடப் பார்க்கிறோமே என்று எண்ணினான். எங்கே இதனால் மீண்டும் அம்மா அப்பாவுக்குத் தலைவலி கொடுக்கப் போகிறோமோ என்ற பயம் வந்தது. ஏதாவது ஹோர்ஷியானா, டேவிட் ராப்ளே என்று புகார் செய்தால் அப்பா எரிமலை ஆகிவிடுவார். எதற்கு வம்பு என்று அப்பாவின் நண்பர்கள்கூட அப்பாவை வீட்டுற்கு வந்து பார்ப்பதைத் தவிர்ப்பார்கள்.

அவனை அழைத்துப் போக ஆயா மிஸ் லேக் வருவதைப் பார்த்தான். அவர் பதட்டத்தோடு ஒடிவந்தார்.

"அருண் கண்ணா, சாரி நேரமாயிடுச்சு. வா, வீட்டுக்குப் போகலாம். பக்கரூ நமக்காகக் காத்துகிட்டு இருப்பான். உன் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு வா. நடக்கலாம் நாம" என்றார் மிஸ் லேக்.

அருணின் சட்டையில் இருந்த ஈரத்தைப் பார்த்து, "அருண், நீ என்ன தண்ணீர் ஃபவுண்டன்ல இருந்து தண்ணி குடிச்சயா? இரு நானும் ஒரு வாய் குடிச்சுக்கிறேன். தாகமா இருக்கு."

மிஸ் லேக் ஃபவுண்டனிலிருந்து தண்ணீர் குடித்தார். அருண் அவரையே கூர்ந்து பார்த்தான். "அருண், இதென்ன ஒரு அசட்டுத் தித்திப்பு" என்றார் மிஸ் லேக்.

அருணின் முகத்தில் ஆயிரம் வாட் பல்பின் பிரகாசம் தெரிந்தது.

(தொடரும்)

ராஜேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline