Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | அமெரிக்க அனுபவம் | சமயம் | பொது
கதிரவனை கேளுங்கள் | அஞ்சலி | ஹரிமொழி | வாசகர்கடிதம் | மேலோர் வாழ்வில் | கவிதைபந்தல் | சிறுகதை | சாதனையாளர் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
டாக்டர் பிரேமா நந்தகுமார்
- அரவிந்த்|ஏப்ரல் 2020|
Share:
எழுத்தாளர், கட்டுரையாளர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், சொற்பொழிவாளர் என்று பல திறக்குகளிலும் முத்திரை பதித்திருப்பவர் டாக்டர் பிரேமா நந்தகுமார். இவர் திருநெல்வேலியை அடுத்த, கார்க்கோடகநல்லூர் என்னும் இயற்பெயருடைய கோடகநல்லூரில், பிப்ரவரி 23, 1939ல், கே.ஆர். சீனிவாச ஐயங்கார்-பத்மாசினி அம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை கல்லூரிப் பேராசிரியர். ஆந்திரா, கர்நாடகம் என்று பல்வேறு இடங்களுக்குப் பணிமாற்றம் நிகழ்ந்த சூழலில் பிரேமா வளர்ந்தார். சீனிவாச ஐயங்கார் பாகல்கோட்டில் உள்ள பஸவேச்வர் கல்லூரியில் பணியாற்றியபோது அவ்வூர்ப் பள்ளியில் பிரேமா சேர்க்கப்பட்டார். தமிழ்தான் தாய்மொழி, இருந்தாலும் அங்கே கன்னட மொழியிலேயே பாடங்களைக் கற்றார். தந்தை, தாயிடமிருந்து சம்ஸ்கிருதம் நன்கு பேச, எழுத கற்றுக்கொண்டார்.

தந்தை தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழிகளில் தேர்ந்தவர். அம்மொழி நூல்களைக் கொண்ட மிகப்பெரிய நூலகம் வீட்டில் இருந்தது. புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்ப்பதும், அவற்றில் பென்சிலால் கோடு கிழிப்பதும் குழந்தை பிரேமாவின் வழக்கம். புத்தகங்களுடனான இந்த உறவு, வளர வளர வாசிக்கும் வழக்கமானது. தமிழ், கன்னடம், ஆங்கிலத்தில் இதழ்களை, நூல்களை வாசிக்க ஆரம்பித்தார்.

ஒரு சமயம் தமிழில் வெளிவந்திருந்த 'நந்துவின் தம்பி' என்ற சிறுகதை பிரேமாவை மிகவும் கவர்ந்தது. அதைக் கன்னடத்தில் மொழிபெயர்த்தார். அப்போது அவருக்கு வயது ஏழு. கதையை ஆசிரியரிடம் காட்ட, அவர் பாராட்டியதுடன், அதில் திருத்தங்களைச் சொல்லி 'ஜெய கர்நாடகா' என்ற இதழுக்கு அனுப்பக் கூறினார். அந்தச் சிறுகதை பிரசுரமானது. ஏழு வயதிலேயே எழுத்தாளராகி விட்டார் பிரேமா. மட்டுமல்ல; தமிழில் அந்தச் சிறுகதையை எழுதியவரே பிற்காலத்தில் பிரேமாவுக்கு மாமியாராகவும் வாய்த்தார். ஆம், குமுதினி எழுதிய கதையே அது.



தந்தைக்கு அடிக்கடி கர்நாடகம், ஆந்திரா என்று மாற்றலாகிக் கொண்டிருந்ததாலும், அது கல்விக்குத் தடையாக இருந்ததாலும் பிரேமா சில காலம் தாத்தா-பாட்டியின் ஊரான கோடகநல்லூருக்குச் சென்று படித்தார். பத்தமடையில் உள்ள ராமசேஷய்யர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். சில ஆண்டுகளில் தாத்தா காலமாகவே, மீண்டும் தந்தை வசித்த வால்டேருக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார். மெட்ரிக்கில் தேர்ச்சி பெற்றார். ஏற்கனவே தமிழ், கன்னடம், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் அறிந்திருந்த பிரேமா தந்தையின் அறிவுறுத்தலால் தெலுங்கு மொழியை நன்கு கற்றுத் தேர்ந்தார். வால்டேரில் இருந்த ஆந்திர பல்கலையில் சேர்ந்து, ஆங்கில இலக்கியத்தில் ஆனர்ஸும் தொடர்ந்து முதுகலைப் பட்டமும் பெற்றார்.
பெற்றோர் இருவருமே ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் பக்தர்கள். தந்தை கே.ஆர். சீனிவாச ஐயங்கார்தான் முதன் முதலில் ஸ்ரீ அரவிந்தரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக எழுதியவர். அவர்கள் வழி பிரேமவும் ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னை பக்தரானார். ஸ்ரீ அரவிந்தரின் 'சாவித்ரி' மகா காவியம் இவரை மிகவும் ஈர்த்தது. அதை அனுதினமும் பயின்றார். 'சாவித்ரி'யையே தனது ஆய்வுத் தலைப்பாக்கி, மிக விரிவான ஆய்வு மேற்கொண்டு 1961ல் ஆந்திர பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். முதன்முதல் 'சாவித்ரி' பற்றி வெளிவந்த மிக விரிவான ஆய்வுநூல் அதுதான். அப்போது பிரேமாவுக்கு வயது 22. ஆந்திர பல்கலையில் அவ்வளவு இளவயதில் முனைவர் பட்டம் பெற்றவரும் அவர் ஒருவர்தான்! (இன்றளவும் அவரது அந்தச் சாதனை முறியடிக்கப்படவில்லை). அதே ஆண்டில் குடும்ப நண்பரான நந்தகுமாருடன் திருமணம் நிகழ்ந்தது. கணவருடன் ராஞ்சிக்குச் சென்று இல்லற வாழ்க்கை தொடங்கினார் பிரேமா நந்தகுமார்.

கணவர், மனைவியின் பல்வேறு திறமைகளை அறிந்து, புரிந்துகொண்டு ஊக்குவிப்பவராக இருந்தார். நிறைய நூல்களை வாங்கியளித்து மேலும் வாசிக்க, ஆய்வுகளைத் தொடர ஊக்கினார். ராஞ்சியில் பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகளில் பணியாற்ற வாய்ப்பு வந்தபோதும் பயணத்தொலைவு காரணமாக பிரேமா நந்தகுமார் ஏற்கவில்லை. தனக்கான ஓய்வு நேரம் முழுவதையும் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவிட்டார். நூல்களை வாசிப்பது, குறிப்பெடுப்பது, ஆய்வுக் கட்டுரைகளை எழுதி இதழ்களுக்கு அனுப்புவது என்று அவரது பணி தொடர்ந்தது.

1966ல் கணவருக்கு விசாகப்பட்டினத்திற்கு மாற்றலானது. பிரேமா நந்தகுமார் அக்காலக்கட்டத்தில் ஆந்திர பல்கலையில் முதுநிலை ஆய்வாளராகச் சேர்ந்தார். சில காலம் ஆங்கிலத்துறை முதுநிலைப் பட்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்தினார். அடுத்தடுத்த மகப்பேறுகளால் ஆசிரியப்பணியில் தொடர முடியாத போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகக் கருத்தரங்குகளிலும், இலக்கியக் கூட்டங்களிலும் பங்கேற்றுச் சொற்பொழிவாற்றி வந்தார். மலேசியாவின் கோலாலம்பூரில் நிகழ்ந்த சர்வதேசத் தமிழ்க் கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார். 1968ல் சென்னையில் நிகழ்ந்த சர்வதேசத் தமிழ்க் கருத்தரங்கில் இவர் ஆற்றிய உரை அக்காலச் சான்றோர்களால் கவனிக்கப்பட்டது. பாராட்டப்பட்டது. தொடர்ந்து கருத்தரங்குகளில் உரையாற்ற வாய்ப்புகள் வந்தன. இந்தியாவின் பல பகுதிகளிலும் மற்றும் மலேசியா, ஸ்வீடன், சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பல நாட்டுக் கருத்தரங்குகளில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்புரையாற்றினார்.



கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட பிரேமா நந்தகுமார், கல்வித்துறை சார்ந்த பல்வேறு அமைப்புகளில் பல உயர்பொறுப்புகளை வகித்தவர். சுயசரிதை, மொழிபெயர்ப்பு, திறனாய்வு, விமர்சனம், புனைகதை எனப் பல திறக்குகளில் படைப்புகளைத் தந்துள்ளார். ஸ்ரீ அரவிந்தரின் படைப்பான சாவித்ரி பற்றிய இவரது ஆய்வுநூலான 'Sri Aurobindo's Savitri: A Study of the Cosmic Epic' என்ற நூல் முக்கியமானது. தந்தையாருடன் இணைந்து இவர் எழுதிய 'Introduction to the Study of English Literature' குறிப்பிடத்தகுந்த ஒன்று. பாகவதம் பற்றிய 'Srimad Bhagavatam - At Each Step a Luminous World' நூல் இவரது மேதைமைக்குச் சான்று. பாரதியின் மீது பிரேமா நந்தகுமாருக்கு ஈர்ப்பு அதிகம். அவரது கவிதைகளை வரிக்கு வரி ரசித்துச் சுவைத்தவர். பல்வேறு பேச்சரங்குகளில் பாரதி குறித்துப் பேசியவர். பாரதியைப்பற்றி விரிவாக ஆராய்ந்து முதன்முதலில் ஆங்கிலத்தில் ஆய்வுநூல் எழுதியவர் இவர்தான். அந்நூலை ராஜாஜி, நாமக்கல் கவிஞர், தெ.பொ.மீ., பெ.நா. அப்புசாமி உள்ளிட்ட பலர் பாராட்டி வரவேற்றனர். பாரதிபற்றிய பல அரிய செய்திகளைக் கொண்ட இவரது 'சுப்ரமணிய பாரதி' நூலை நேஷனல் புக் ட்ரஸ்ட் 1973ல் வெளியிட்டது. 1978ல் சாகித்ய அகாதமி மூலம் பாரதி பற்றிய விரிவான இவரது தொகுப்பு நூல் வெளியானது. பாரதியாரின் கவிதைகளை சாகித்ய அகாதமிக்காக மொழிபெயர்த்திருக்கிறார். அந்நூல் மிகச் சிறப்பானதாக ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.

ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதனைத் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களான 'ஏலாதி'யையும் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். அதனை திராவிடப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இவரது 'வேதங்களில் பெண்கள்' குறிப்பிடத் தகுந்த நூல். ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர், ஆதிசங்கரர், சுவாமி விவேகானந்தர், பாரதியார், டாக்டர் ராதாகிருஷ்ணன், குமுதினி பற்றிய வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். 'சாவித்திரியில் ஒரு பயணம்' என்ற இவரது ஆய்வு நூல் முக்கியமானது. நம்மாழ்வார் பாடல்கள், திருவிருத்தம் போன்றவற்றையும் ஆங்கிலத்தில் பெயர்த்துள்ளார். சாகித்ய அகாதமி பரிசுபெற்ற சமன் நாஹல் எழுதிய 'ஆஸாதி' என்ற ஆங்கில நாவலை 'விடுதலை' என்ற பெயரில் தமிழில் பெயர்த்திருக்கிறார். சாகித்ய அகாதமியே அதை வெளியிட்டது. சாகித்ய அகாதமிக்காக நீல.பத்மநாபனின் படைப்புகள் பற்றிய அறிஞர்களின் ஆங்கிலக் கட்டுரைகளைத் தொகுத்திருக்கிறார். ஸ்ரீ அரவிந்தர் எழுதிய 'Perseus the Deliverer' என்ற நாலை ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் மூலம் பதிப்பித்துள்ளார். கோவிந்தன் ஆங்கிலத்தில் எழுதிய 'Kriya Yoga Sutras of Patanjali & the Siddhas' என்ற நூலை 'பதஞ்சலி மற்றும் ஏனைய சித்தர்களின் கிரியா யோக சூத்திரங்கள்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார். 'Atom & The Serpent' என்பது இவர் எழுதிய ஆங்கில நாவல்.

தி இந்து, டெக்கான் ஹெரால்டு, அமுதசுரபி, ஸ்ரீ ந்ருசிம்ஹப்ரியா திருக்கோயில், சப்தகிரி, வேதாந்த கேசரி, ஆத்மஜோதி, பிரபுத்த பாரதா, மதர் இந்தியா, தி ஸ்கூல் போன்ற நாளிதழ்களில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கட்டுரைகள், சிறுகதைகள் விமர்சனங்கள் எழுதியுள்ளார். (தற்போதும் எழுதி வருகிறார்) உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்விதழ்களில் இவர் எழுதியிருக்கும் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் புகழ்பெற்றவை. தமிழிலும் நிறைய சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 'செங்கண் மால்தான் கொண்டு போனான்' என்ற தலைப்பிலான 1978ல், கலைமகள் இதழில் வெளியான சிறுகதை அந்த ஆண்டின் சிறந்த சிறுகதையாக 'இலக்கியச் சிந்தனை' அமைப்பினரால் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1983ல் வெளிவந்த 'அமுதத் துளி உதிர்ந்தது' என்னும் இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு நூல் தமிழக அரசின் பாராட்டையும், சிறந்த நூலுக்கான பரிசையும் பெற்றது. 'மாசுபடிந்த உறவுகள்' படைப்பிற்காக அமரர் ராமரத்தினம் விருது கிடைத்தது. 'புயல் நிலைப்பதில்லை' மற்றொரு சிறுகதைத் தொகுப்பு. 'ஒருநாள் பொழுது' என்பது இவர் எழுதிய நாவல். இதன் குறிப்பிடத்தகுந்த அம்சம் ஒரு கல்லூரிப் பேராசிரியரின் காலை முதல் இரவு வரையிலான ஒருநாள் அனுபவமும் சிந்தனைகளுமே!



ஆய்வு மற்றும் இலக்கியப் பங்களிப்பிற்காக பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார் பிரேமா நந்தகுமார். மேற்கு வங்காளத்தின் ஸ்ரீ அரவிந்த பவன் நிறுவனம் வழங்கிய 'ஸ்ரீ அரவிந்தோ புரஸ்கார்', 'ஆழ்வார்கள் ஆய்வு மையம்' வழங்கிய 'எம்.ஜி.ஆர் விருது', சென்னை சேக்கிழார் ஆய்வு மையம் வழங்கிய 'சேக்கிழார் விருது', கோயில் கந்தாடை ரங்காச்சாரியா நிறுவனம் வழங்கிய 'பண்டித ரத்னா', பாரத விகாஷ் பரிஷத் அமைப்பு வழங்கிய 'வியாச ப்ரவீனர் விருது', 'ஸ்ரீரங்க ரத்னா', வாழ்நாள் சாதனையாளர் விருது, பாரதியார் விருது, மதுரை காமராசர் பல்கலை வழங்கிய 'பேரவைச் செம்மல்', உ.வே.சா. விருது, 'முத்தமிழ் மாமணி', 'ஆங்கில திராவிட பாஷா விசக்ஷணா', 'தமிழ்நெறிச் செம்மல்', 'பன்மொழி வித்தகர்', வித்வஜ்ஜன விநோதினி எனப் பல்வேறு அமைப்பினரிடமிருந்து பல்வேறு விருதுகளையும் பட்டங்களையும் பெற்றிருக்கிறார். பண்ருட்டியைச் சேர்ந்த ஸ்ரீ ராமானுஜ நாவலர் சுவாமி சபை இவருக்கு 'அபிநவ ஆண்டாள்' என்ற பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது. இவரது இலக்கியப் பணிகளுக்காக தமிழக அரசின் திரு.வி.க. விருதும் இவரைத் தேடி வந்தது.

வேதங்கள், ஹிந்து, பௌத்த மற்றும் சமண காவியங்கள், இந்திய மற்றும் சர்வதேச இலக்கியம் எனப் பல துறைகளில் ஆழங்காற்பட்ட அறிவுடையவர். விசிஷ்டாத்வைத தத்துவத்திலும், பிரபந்தங்கள் மற்றும் பாஷ்யங்களிலும் தேர்ந்த பயிற்சி உடையவர். 1985 முதல் ஸ்ரீரங்கத்தில் நிரந்தரமாகக் குடும்பத்தினருடன் வசித்து வரும் டாக்டர் பிரேமா நந்தகுமார், மிக இனிமையான குரல்வளம் மிக்கவர். கர்நாடக சங்கீதம் அறிந்தவர். அழகாகப் பாடக்கூடியவரும் கூட. கணவர் நந்தகுமார், ஸ்ரீரங்கம் எஜுகேஷனல் சொசைட்டி பள்ளிகளின் தாளாளராக உள்ளார்.

டெக்கான் ஹெரால்ட் இதழில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கதை, கட்டுரை, விமர்சனங்கள் எழுதி வரும் பிரேமா நந்தகுமார், 80 வயது கடந்தும் இன்றளவும் தமிழ் மற்றும் ஆங்கிலப் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline