Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வேலையும் விவாகமும்
- ந. சிதம்பர சுப்ரமணியன்|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeமிஸ். குஞ்சிதம் மிஸஸ். பாஸ்கரன் ஆகவில்லை. சில நாட்களுக்கு முன்பு அவள் லேடி வெலிங்டன் ட்ரெயினிங் காலேஜில் படித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அதிகமாக அந்தப் பிரச்சினை விவாதிக்கப்பட்டு வந்தது. ''பள்ளிக்கூட உபாத்தியாயினிகள், கல்யாணம் செய்து கொண்டவர்களாக இருக்கக் கூடாது'' என்ற சீமைச் சட்டத்தைப் பற்றிக் கடிதங்களும், கண்டனங்களும் பத்திரிக்கைகளில் அடிக்கடி வந்து கொண்டிருந்தன. வெலிங்டன் கலாசாலையிலும் அது அலசி அலசி விவாதிக்கப்பட்டது. பலமாகச் சட்டத்தை ஆதரித்துப் பேசினாள் மிஸ். குஞ்சிதம். ''அப்படியிருக்க வேண்டியதுதான். சமூக நன்மைக்கு, தனி மனிதர்களின் நன்மையைத் தியாகம் செய்யலாம். பெரியதொரு நன்மைக்குச் சிறியதைப் பலியிடலாம் அது தியாகம். நாம் வாங்கும் சம்பளத்திற்குத் தகுந்தாற் போல் உழைத்தாக வேண்டும். தண்டத்திற்கு வேலை செய்யக் கூடாது" என்றாள். ''ரொம்ப நன்றாயிருக்கிறது. இதைப்போல் அக்கிரமமும், பைத்தியக்காரத்தனமுமான சட்டம் இருக்க முடியாது'' என்றாள் தவமணி ஞானமுத்து.

''நீ கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பாயா?'' என்று ஒரு குண்டை எடுத்து வீசினாள் மிஸஸ் வசுந்தரா. அவள் மிஸ் குஞ்சிதத்திற்கும் மிஸ்டர். பாஸ்கரனுக்கும் உள்ள பழக்கத்தைப் பற்றிய விவரங்களை நன்கு அறிவாள்.

''நான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதில்லை. கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்று சபதம் செய்தாள் மிஸ். குஞ்சிதம். இது 'பீஷ்ம பிரதிக்ஞை' அல்ல என்பதை மிஸஸ். வசுந்தரா அறிவாள். கேவலம் விவகாரத்திற்குச் சொன்ன பதில்தானே. ஆகவே, படிப்பு முடிந்து வேலையை ஒப்புக் கொண்டதற்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் குஞ்சிதத்தின் கல்யாணத்தை எதிர்பார்த்தாள் வசுந்தரா. ஆனால் குஞ்சிதம் கல்யாணம் செய்து கொள்ளும்படியான ஓர் ஏற்பாட்டையும் செய்யக் காணோம். 'சபதத்தை நிறைவேற்றி விடுவாளோ' என்று பயப்படும்படியாகக்கூட இருந்தது அவள் போக்கு.

பெண்களுக்கு ஏற்பட்ட பிடிவாத குணம் நிறைய இருந்தது குஞ்சிதத்தினிடம். அவள் ஒன்று நினைத்தால் செய்தாக வேண்டும். அரைகுறையாகச் செய்யும் வழக்கமே இல்லை. பரபரப்பும், துடிதுடிப்பும் அவள் காரியங்களை ஆவேசத்தோடு செய்ய உதவியாக இருந்தன. ''கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்'' என்றபொழுது, அதை விளையாட்டுக்காகச் சொல்லவில்லை; முழுத் தீர்மானத்துடன்தான் சொன்னாள். அதன் விளைவுகள், லாப நஷ்டங்கள் அவளுக்குத் தெரியாமலில்லை. உபாத்தியாயினியாய் இருப்பது ஒரு தொழில் அன்று; ஒரு சேவை. சேவை செய்யும்போது தியாகம் செய்துதான் ஆக வேண்டும். கஷ்டத்தை அனுபவிக்கத்தான் வேண்டும். அது அவள் முடிவாகக் கொண்ட தீர்மானம்; கண்ட லட்சியம். வாழ்க்கையில் அப்படியே நடத்திக் காட்ட எண்ணினாள்.

வாழ்க்கையை விளையாட்டாகவோ, வெறும் ஜீவன உபாயமான தொழிலாகவோ அவள் கருதவில்லை. வாழ்க்கை என்பது ஒரு யாத்திரை. ''நாம் இருப்பதற்கு என்ன நியாயம் இருக்கிறது? நாம் இருக்க வேண்டியதன் அவசியத்தை எப்படி ருசுப்படுத்துகிறோம்? சமூகத்திற்கு நம்மால் என்ன பிரயோஜனம்?" இப்படியெல்லாம் அவள் கேட்டுக் கொள்வதுண்டு. பெண்கள் சீர்திருத்தத்திற்கு உயிரையே கொடுத்தால் என்ன?

மிஸ். குஞ்சிதம், பி.ஏ., எல்.டி. தீவிர சீர்திருத்தவாதி. பெண் சுதந்திரம் முதலியவைகளில் திட்டமான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தாள். சோவியத் ரஷ்யாவில் மாதர்களுக்குக் கொடுக்கும் ராணுவப் பயிற்சி முதற்கொண்டு, ஸ்ரீமதி ரூஸ்வெல்ட், ''பெண்களுக்குச் சமைத்துப் போடுவதற்கும், வீட்டை கவனித்துக் கொள்வதற்குங்கூடச் சம்பளம் கொடுக்க வேண்டும்" என்ற ஒரு பிரச்சனையைப் பரப்பியது வரையில், எல்லா சமாசாரங்களையும் கவனித்துப் படிப்பாள்.

இத்தகைய முக்கியமான விஷயங்களைப் பிறருக்கு விவரமாக எடுத்துச் சொல்லுவாள். புதுமைப் பெண்ணின் வீரமொழிகளெல்லாம் அவளுக்கு உரு. ஜோன் ஆப் ஆர்க், ஜான்சி ராணி, சாவித்திரி, ஆகாய விமானி ஆமி முதலிய வீரதீரப் பெண்மணிகளைப் பற்றி அவளுக்கு நன்கு தெரியும். மனு பெண்களுக்குச் செய்திருக்கும் தீங்குகளைச் சொல்லும் போது கண்ணில் பொறி பறக்கும். மிகவும் கேவலமாகப் பிற்போக்கிலிருக்கும் இந்திய மாதர்களைப் பற்றி நினைக்கும்போது நெஞ்சம் குமுறும். படிப்பு, சொத்துரிமை, ஓட்டுரிமை எல்லாம் அவர்கள் தலையில் கொண்டு போய்க் கொட்ட வேண்டும்.

விவகாரத்து சீக்கிரம் வந்துதான் ஆக வேண்டும். ஒன்றன் பின் ஒன்றாக ஆயிரக்கணக்கான மாறுதல்கள் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் எப்படி சாத்தியம்! சீர்திருத்தச் சட்டம் சுலபத்தில் நிறைவேறுவதில்லை. நிறைவேறுபவைகள் சரியானபடி அமுலில் இருப்பதில்லை. இவற்றையெல்லாம் எண்ணும்போது அவள் மனம் ஏங்கும். பெருமூச்செறிவாள்.

தாடகை, சூர்ப்பனகை கோஷ்டிகளைச் சேர்ந்தவளல்ல அவள். குஞ்சிதத்தின் ரூபம், குணம், பேச்சு எல்லாவற்றிலும் சங்கீதத்திலிருக்கும் இனிமை இருந்தது. இல்லாவிடில் பாஸ்கரன் அவளைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்பானா? நிறம் மிகுந்த சிவப்பல்ல. மாநிறம்தான். பாஸ்கரன் மனத்தைக் கொள்ளைக் கொண்டவர்கள் இரண்டு பெண்கள். அதில் ஒருத்தி ஹாலிவுட் நடிகை லூயி ரெய்னர். இரண்டாம் பெண் மிஸ். குஞ்சிதம். அவள் அழகைப்பற்றி வேறு என்ன சொல்ல வேண்டும்? பெண்கள் இருக்கும் நிலைமையைக் கவனிக்கும்போதுதான் அவளுக்கு ஆவேசம், ஆங்காரம், கோபம் எல்லாம் வந்துவிடும். மற்ற சமயங்களில் மிகவும் சாது. பரம சங்கோசி. மிகுந்த கூச்சம் கொண்டவள். படிப்பும், நாகரிகமும் அவள் மூளையைத்தான் தாக்கியிருந்தன. குணத்தைத் தொடவேயில்லை.
அவள் சிந்தனைகளுக்கும், இருதயத்திற்கும் அடிக்கடி போராட்டம் ஏற்படும். அவள் இருதயத்தைப் பல்வேறு எண்ணங்கள் போர்த்தியிருந்தன. ஆனால், அவை பல சமயங்களில் பொருந்தாது இருந்தன. பேச்சு வார்த்தைகள் - அதுவும் பெண்கள் சம்பந்தப்பட்ட வரையில் ஆணித்தரமாகவும் பலம் கொண்டவையாகவும் இருக்கும். வெளிப்பேச்சு, சூடானதாக இருந்தாலும் உள்ளம் குளுமையானது. மிக்க மேன்மையான குணதைக் கொண்டவள். வாழ்க்கையின் புழுதியில் அவள் அதிகம் புரளவில்லை. ஆனால் அப்புழுதியில் வெறுப்பு மாத்திரம் ஏற்பட்டிருந்தது. அடிக்கடி அவள் மனம் குழம்பும். திடீரென்று என்ன தோன்றுகிறதோ அந்த வழியே அவள் வாழ்க்கை ஓடும்.

பாஸ்கரன் 'குஷி'ப் பேர்வழி. விளையாட்டுத்தனம் அவனிடம் மிகவும் உண்டு. பொழுது போக்குக்காக அவளைச் சதா வம்பு இழுப்பான். அவளைக் கேலி செய்து துன்புறுத்துவதில் அளவற்ற ஆனந்தம்! மனித சமூகத்தின் அழகுணர்ச்சிக்கும், நாகரிகத்துக்கும் காரணமானவள் பெண்; மனிதனை அலங்கரிக்க வந்த ஆபரணம் அவள் என்பது அவன் அபிப்பிராயம். ''குஞ்சிதம்! பெண்கள் சொத்தில் பங்கு எடுத்துக் கொள்ளட்டும், வோட்டுப் போடட்டும்; புருஷன் வேண்டாமென்று 'தலாக்' செய்யட்டும். எனக்குக் கொஞ்சங்கூட ஆட்சேபணையில்லை. ஆனால், அவர்கள் தயைசெய்து பெண்களாக மாத்திரம் இருக்கட்டும். இந்த மேல்நாட்டுப் படிப்பு, பெண்களைப் புருஷர்களாக ஆக்கிவிடுகிறதே; அதுதான் சகிக்கவில்லை. தயைசெய்து கொஞ்சம் பெண்களாயிருங்கள்'' என்பான் அவன்.

''மேல்நாட்டுப் படிப்பு உங்களைத்தான் சும்மாவிட்டதா என்ன? புருஷர்களைப் பெண்ணாக்கி விடுகிறது. ஆங்கிலம் படிக்கிறவர்களுக்கு உடம்பிலே சக்தியில்லை. மனதிலே தைரியமில்லை. அதுவும் இதுவும் சரிதானே'' என்பாள் அவள். இந்த வகையில் கொஞ்சம் போகும்.

''பெண் கேட்பது ஓட்டு அல்ல; சொத்து அல்ல; வேறு புருஷன் அன்று. நீட்ஷே சொல்வதை ஞாபகப்படுத்திக் கொள். சாட்டைதான் கேட்கிறாள் மனைவி. அதைக் கொடுத்து கொண்டே வந்தால் எல்லாம் சரிப்பட்டுவிடும்'' என்பான் அவன்.

''நீட்ஷே கிடக்கிறான்; திமிர்க்காரன். பேத்தினதிற்கேத்தாப் போல் பைத்தியம் பிடித்துச் செத்தான். புருஷன் பெண்ணின் குழந்தை. அவளுடைய விளையாட்டுப் பொம்மை. உங்கள் நீட்ஷேயே சொல்லியிருக்கிறானே. 'புருஷன் குழந்தை பெண்ணைக் கண்டு பயப்படட்டும்' என்று''.

''அப்படியானால், உன்னிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்கிறாயாக்கும்.''

''அடேயப்பா! நீங்கள்தான் சவுக்கைத் தூக்கிக் கொண்டு வருகிறவராயிற்றே.''

இம்மாதிரி, அவர்கள் தர்க்க குதர்க்கங்கள் தினமும் விதவிதமாகப் போய்க் கொண்டிருக்கும். பாஸ்கரன் எம்.பி.பி.எஸ். அவளுடைய டாக்டர். ''அவளுடைய இருதய வியாதிக்கு மருந்து கொடுக்கிறாயே'' என்று நண்பர்கள் அவனைக் கேலி செய்வது வழக்கம். ஆனால் பாஸ்கரனது இருதயத்துக்குத்தான் மருந்து தேவையாயிருந்தது.

அன்று காலை பாஸ்கரன் கடப்பையிலிருந்து வந்திருந்தான். பாஸ்கரனுக்குச் சில நாட்களாக அந்த ஆஸ்பத்திரியில் வேலை. வேலை ஒப்புக்கொண்டது முதற்கொண்டு கல்யாணப் பேச்சை ஆரம்பித்தான். ஆனால், இவளோ பிடிவாதம், லட்சிய நினைவு, சேவை உற்சாகம், பழைய பிரதிக்ஞை முதலியவைகளின் வேகத்தில் வேலையை விட்டுவிட விரும்பவில்லை. பாஸ்கரன் லேசான பேர்வழியல்ல. சென்னைக்கு வந்து இவளை ராஜிநாமா செய்யச் சொல்லி, கூட அழைத்துப் போக முயற்சி செய்வதில் கொஞ்சமேனும் தயங்குவதில்லை. அந்தக் காரியத்திற்காகத் தான் அன்றும் வந்திருந்தான்.

பாஸ்கரன் காலையில் வந்தான். ஆனால், தலைவலி அதற்கு முன்னாலேயே அவளிடம் வந்துவிட்டது. கொஞ்ச காலமாக அவள் உடம்பு செளக்கியமாயில்லை. உத்தியோக யந்திரத்திற்கு மனிதரின் சுகதுக்கம் ஒன்றும் இல்லை. தலைவலியுடன் பள்ளிக்கூடம் போனாள். சாதாரண நாளிலேயே கணிதமும் பூகோளமும் சொல்லிக் கொடுப்பவர்களுக்கும் சொல்லிக் கொள்பவர்களுக்கும் தலைவலியை உண்டு பண்ணிவிடும். தலைவலியுடன் ஆரம்பித்தால் கேட்பானேன்? பள்ளிக்கூடம் பெண்களைத்தாம் என்ன பாடுபடுத்துகின்றன?

ஒரு பக்கம் தலைவலி. மற்றோர் பக்கம் பாடம், வேறோர் பக்கம் பெண்கள். இம்மூன்று இம்சைகளையும், சாந்தமாக சகித்துக் கொண்டிருந்தாள். பொறுமையுடன் எல்லா வகுப்புகளுக்கும் போய்த் தினமும் போல் பாடங்களை நடத்தினாள். போதாக்குறைக்கு அன்று அதிகப்படி வேலையும் இருந்தது. அதையும் செய்து முடித்தாள். எல்லா வாத்தியார் அம்மாக்களுக்கும் முன்பே போய்விட்டனர். அவளும் மெதுவாக வீடு நோக்கிப் புறப்பட்டாள்.

கவனமெல்லாம் வேலையில் இருந்தபோது அவ்வளவாகத் தலைவலி தெரியவில்லை. வேலைமுடிந்து விட்டபடியால் அதைப்பற்றி நினைக்க அவகாசம் இருந்தது. அப்பொழுது அது பதின்மடங்கு அதிகமாய் விட்டதுபோல் தோன்றியது. சம்மட்டி எடுத்து அடிப்பதுபோல் போட்டுக் கொண்டிருக்கும் இத்தலைவலியுடன், எப்படி வேலை செய்தோம் என்று ஆச்சரியப்பட்டாள். தலைவலியின் உபத்திரவம், செய்த வேலையின் அலுப்பு, இரண்டும் சேர்ந்து அவளை மிகவும் சேர்வடையச் செய்தன. முகம் கனிந்து வாடியிருந்தது. நடப்பது கூடச் சிரமமாகத் தோன்றியது அவளுக்கு. டிராம் வழி கொஞ்ச தூரத்தில்தான் இருந்தது. அதை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்.

அற்ப விஷயம் அவளுக்குப் பெரிய மனச் சஞ்சலத்தை உண்டு பண்ணிவிடும். அது அவள் சுபாவம். சிறு அசெளகர்யம் கூட அவளுக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுத்துவிடும். நாயை எந்த இடத்தில் அடித்தாலும் காலைத்தான் தூக்கும். மனக்கிலேசம் ஏற்படும் போதெல்லாம் தன்னையே நொந்து கொள்ள ஆரம்பித்து விடுவாள். ஒருவித சலிப்பு அவளுக்கு வந்துவிடும். கோபம், துக்கம், வெறுப்பு எல்லாம் மாறி மாறி வந்து அவளைத் துளைத்தன. கசப்பு ஏற்படும் போது தன்னுடைய எந்த அம்சத்தில் விழும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்தது. அன்று அவளுடைய வேலையின் மேல் அந்தக் கோபம் பாய்ந்தது. அதற்குக் காரணம் இல்லாமலும் இல்லை.

பெண்களுடைய 'காம்போசிஷன்' நோட் புத்தகங்கள் வெகுநாட்களாகத் திருத்தப்படாமல் கிடந்து விட்டன. அதற்கு ஒரு டோ ஸ் கொடுத்தாள் தலைமை உபாத்தியாயினி. மத்தியானம் முதற்கொண்டு, அது வேறு அவளுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது. சேவைக்காக எடுத்துக் கொண்ட வேலை தலைவலிக்கு மேல் பிடிக்காததாயிற்று. வேலையின் அடிமைத்தனம் சிறுமை அடையச் செய்தது.

''என்ன வேலை இது? சொன்னதைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுக்க வேண்டியிருக்கிறது'' என்று மிகவும் சலித்துக் கொண்டாள். வேலை பிடிக்கவில்லை. வாழ்க்கை பிடிக்கவில்லை. கம்பெனிகளிலிருந்தும் ஆபீஸ்களிலிருந்தும் கும்பல் கும்பலாகக் குமாஸ்தாக்களும் உத்தியோகஸ்தர்களும் வந்து கொண்டிருந்தனர். சாதாரண நாளில் அந்தக் காட்சி அவள் மனத்தில் ஒரு கிளர்ச்சியையும் உண்டு பண்ணியிராது. ஆனால் அன்று அவர்களைப் பார்த்தவுடன் அவள் மன வேதனை அதிகமாயிற்று. ''புருஷாள் மாதிரிதான் நானும் ஓடி ஓடி சம்பாதித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று தன்னைத் தானே வருத்தத்துடன் நொந்து கொண்டாள். பெண்களின் சுதந்திரம், பெண்ணின் ஆண்மை முதலிய விஷயங்கள் அவளுக்கு ஞாபகம் வரவேயில்லை.

டிராம் வந்தது. ஐந்து மணிக்கு மேல், டிராம் எல்லாவற்றிலும் கூட்டம் எப்பொழுதும் அதிகமாகவே இருக்கும். வண்டியில் போகிறவர்கள் அநேகமாக எல்லோரும் ஆபீஸ்களிலிருந்து வீடு போகிறவர்கள. மூலை முடுக்குகளில் உட்கார்ந்து கொண்டும், வெளவால் போல் தொங்கும் அந்த வளையங்களைப் பிடித்துக் கொண்டும் அடைந்து கிடப்பார்கள். செக்கில் ஆட்டப்பட்டு மிஞ்சிய பிண்ணாக்கைப் போல, சக்கையாகும்படி, ஆபீஸில் வேலை செய்து விட்டுத் திரும்புகிறவர்கள் அவர்கள்.

வண்டி அசைந்து வந்து பெருமூச்சு விட்டுக் கொண்டு நின்றது. குஞ்சிதம் வண்டியில் ஏறிக் கொண்டாள்.

வண்டிக்குள் நெருக்கடி மிகுதி. அசாத்தியக் கூட்டமாக இருந்தது. ஓர் இடமும் காலியில்லை. நிற்பதற்குக் கூட போதுமான இடம் கிடையாது. அப்படியும், இப்படியும் தலையை நீட்டிப் பார்த்தாள். யாராவது பெருந்தன்மையுடன் எழுந்திருப்பார்களா என்று எதிர்பார்த்தாள். ஆபீஸ்களில் நன்கு பிழியப்பட்டுக் களைப்பு மேலிட்டுப் போகிறவர்கள் அவர்கள். அவர்களிடம் செளகர்யமும் பெண்களுக்கு உபசாரம் செய்யும் உற்சாகம் நிறைந்த தயாவீரமும் எதிர்பார்க்க முடியாது. உரல் மாதிரி ஒவ்வொருவரும் உட்கார்ந்திருந்தனர். வண்டி நகர்ந்தது. குஞ்சிதத்தின் பாடு திண்டாட்டாமாய்விட்டது. தலைக்கு மேல் தொங்கும் வளையத்தைப் பிடித்துக் கொண்டு நிற்க அவளுக்கு வெட்கமாயிருந்தது. சட்டென்று திரும்பி நிலைப்படி போன்ற பாகத்தைப் பிடித்து நின்றாள்.

மிகவும் கஷ்டமாயிருந்தது அவளுக்கு. 'பெண்களுக்குத் தனி இடம் காலம் தேவலைபோல் இருக்கிறதே' என்று நினைத்தாள். ஒதுக்கிவிடப்பட்ட பாகம் பாதுகாப்பல்லவோ கொடுத்துக் கொண்டிருந்தது? பெண்களுக்குப் பாதுகாப்பு அவசியந்தானே! தெருவில் போகும்போதே தன்னை யாராவது கவனிக்கிறான் என்று தெரிந்தால், அவளுக்கு மிகுந்த கூச்சம் ஏற்படும். சங்கோசத்தினால் நடையிலே மாறுதல் ஏற்படும்.

இப்பொழுது அவள் பல புருஷர்கள் கவனிக்கும்படி நின்று கொண்டிருக்க வேண்டி வந்தது. ஒருவர் கண்ணிலும் படாதபடி, தினம் போல் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தால் மனம் சங்கடப்பட்டிராது. ஆனால் இதை அவளால் பொறுக்க முடியவில்லை. ''சை! இதென்ன சிரிப்பாச் சிரிக்க வேண்டியிருக்கிறது. சந்தி சிரிக்கும்போல் இருக்கிறது என் பிழைப்பு'' என்று கடிந்து கொண்டாள். ''பாஸ்கரன் வெறும் விவகாரத்திற்குச் சொல்வதில்கூட ஓர் உண்மை இருக்கிறது. பெண்கள் வீட்டிற்குள்ளயே இருப்பதற்குத்தான் லாயக்கா? இன்றைய தினம் படும் அவஸ்தை போதாதா?'' என்று தன்னைத்தானே கேள்வி கேட்டுக் கொண்டும், சமாதானம் செய்து கொண்டும் இருந்தாள். அவள் உள்ளம் திரிந்து போயிருந்தது.

வண்டி நகர்ந்து வேகமெடுக்க ஆரம்பித்தது. அவசரமாக ஓடிவந்து ஏறினான் ஒருவன். ஏறின வேகத்தில் குஞ்சிதத்தை இடித்துக் கொண்டு போனான். அந்த அதிர்ச்சியால் அவள் குடையும் புத்தகங்களும் கீழே விழுந்தன. அவைகளைப் பொறுக்கக் கீழே குனிந்தாள். புடவையைச் சரிப்படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள். அநேக கண்கள் அவள் பக்கம் திரும்பியிருந்தன. அவள் உடம்பு குன்றிக் குறுகிப் போய் அவமானமும் துக்கமும் பொங்கிக் கொண்டு வந்தன. அவர்கள் பார்த்த பார்வை, அவளுடைய ஆண் எண்ணங்களைத் துளைத்து சென்று அவள் உள்ளத்தில் பாய்ந்து, பெண்மையையே தாக்குவதுபோல் இருந்தது. அவளுக்கு அப்பொழுது ஏற்பட்ட மனக்கொதிப்பில், வெகு நா஡ளாக இருந்த அவளுடைய எண்ணங்கள் பொசுங்கிப் பஸ்மமாகிப் போய்விட்டன. அந்தபுரத்தில் கோஷாவாக இருந்து, சாட்டை அடி வாங்குவதற்குப் பிரியப்படும் நிலைமை அடையும்படி அவள் மனம் பக்குவம் அடைந்து கொண்டிருந்தது.

சரேலென்று டிராமை நிறுத்தச் சொல்லி விட்டுக் கீழே இறங்கினாள். பாதையோரமாகப் போனாள். ரிக்ஷாவைக் கூப்பிட வேண்டுமென்ற எண்ணம். தெரு ஓரத்தில் இருந்த காட்சி அவள் மனத்தில் நிரம்பியது.

வீடில்லாத குடும்பம் ஒன்று அந்த ஓரத்தில் தங்கள் வீட்டைப் பரப்பியிருந்தார்கள். பீங்கான் சாமான்கள் உடையாமல் இருப்பதற்காக வைத்து வரும் நார்களைப் பற்ற வைத்து மூடப்பட்ட கல் அடுப்பிலே, பானை அரிசி கொதித்துக் கொண்டிருந்தது. அன்று வெயிலில் உழைத்து வேலை செய்து வந்த புருஷன் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் மனைவி பக்கத்திலே உட்கார்ந்தபடி அவனுக்குப் பேன் பார்த்துக் கொண்டிருந்தாள். மடியிலிருந்த குழந்தை, தன்பாட்டில் தாயின் பாலைக் குடித்துக் கொண்டிருந்தது. ''ஆங்'' என்று சிரித்துக் கொண்டு வசவு போன்ற வார்த்தைகளைக் குழந்தையிடம் உபயோகித்து அதைத் தூக்கிப் புருஷனிடம் கொடுத்தாள். அதை வாங்கி முத்தமிட்டு முத்தமிட்டுத் தன் வேலையின் களைப்பு முழுவதையும் மறந்து நின்றான் புருஷன்.

குஞ்சிதம் போய்க் கொண்டே இருந்தாள். அவள் முன் டிராம், பஸ், ரிக்ஷா எல்லாம் போய்க் கொண்டிருந்தன. அவை அவள் கண்முன் படவில்லை. ஆனால் அந்தக் குடும்பக் காட்சி அது கண்முன் நின்று கொண்டே இருந்தது. அவளுக்கு மிகவும் வருத்தமாயிருந்தது. உள்ளூர உறங்கிக் கொண்டிருந்த ஏதோ ஒன்று புரண்டு கொடுத்தது. அந்த இன்ப வாழ்க்கையில் பொறாமையுண்டாயிற்று. தான் இழந்து கொண்டிருப்பது என்னவென்பதை அறிந்து கொண்டாள். பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த ஏழை குடும்பப் பெண் அவளுக்கு லட்சியப் பெண் ஆனாள்.

நடந்தபடியே வீடு வந்து சேர்ந்தாள். வந்த ஒரு நிமிடத்திற்கெல்லாம், ஒரு கட்டுக் காம்போசிஷன் நோட் புத்தகங்களை கொண்டு வைத்தான் ஒரு பையன். அவள் அவற்றை வாங்கிக் கொண்டாள். அவைகளை அப்படியே அடுப்பில் போட்டு அடுப்புப் பற்ற வைக்கலாமா என்ற ஆத்திரம் உண்டாயிற்று.

முகத்தை அலம்பிக் கொண்டாள். கொதிக்கும் காபியில் காபியாஸ்பிரின் போட்டுச் சுடச்சுட ஒரு டம்ளர் குடித்தாள். சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டாள். தலைவலி குறைந்து கொண்டு வநத்து. ஆனால், உள்ளத்தின் வலி குறைந்தபாடில்லை. வாசலில் கார் வந்து நின்றது. பாஸ்கரன், ''வா, போகலாம்" என்று சொல்லிக் கொண்டே உள் நுழைந்தான். அவன் காரியம் எல்லாம் ஆர்ப்பாட்டந்தான்.

''எங்கே?'' என்று கேட்டாள் குஞ்சிதம்.

''எங்கேயாவது; பீச்சுக்குத்தான் போவோமே.''

''எனக்கு உடம்பு சரியில்லை தலைவலி. நீங்கள் போய்விட்டு வாருங்கள்'' என்றாள் அவள்.

பாஸ்கரனா லேசில் விட்டுவிடுவான்? ''சமுத்திரக் காற்றுப் பட்டால் தலைவலி மாயமாய்ப் போய்விடும். வா நீ; பக்கத்தில் டாக்டர் நான் இருக்கிறேன்'' என்று பெருமையுடன் தைரியப்படுத்தினான். வற்புறுத்தும்போது மறுத்துச் சொல்ல அவளுக்கு மனம் வருவதில்லை. பிறரைத் திருப்தி செய்வதில் தன் சிரமத்தைப் பொருட்படுத்தமாட்டாள்.

மணலில் போய் உட்கார்ந்தனர். அவள் மன அலைகளுக்கு ஒத்தவாறு சமுத்திர அலைகள் கொந்தளித்துக் கொண்டிருந்தன. மணி ஏழு இருக்கும். உலகின் உச்சியில் உட்கார்ந்திருந்த அவ்விருவரும் பிரபஞ்ச ஆரம்பத்தில் இருந்த ஆதி புருஷனையும், ஆதி பெண்ணையும் போல இருந்தனர். நீலவானுக்கும் நீலக்கடலுக்கும் நடுவேயுள்ள நிசப்தமான வெளிப்பரப்பை நீல இரவாகிய பெண் ஆக்கிரமித்துப் பிடித்துக் கொண்டாள். அவளுடைய விலையற்ற ஆபரணங்கள் மின்னிக் கொண்டிருந்தன. குஞ்சிதத்தின் மனத்திலும், உலகத்தின் வெளியிலிலும் இருள்பரவி கருகியிருந்தது. தலைவலி அநேகமாய்ப் போய்விட்டது. ஆனால் சிந்தனைகள், மனவேதனைகள் போகவில்லை.

''எப்பொழுது பார்த்தாலும் யோசனைதான். நாளைக்கு என்ன பாடம் தயார் செய்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி யோசனையா?'' என்றான் பாஸ்கரன்.

''நாளையிலிருந்து பள்ளிக்கூடம் போகப் போவதில்லை. அதைப் பற்றித்தான் யோசனை'' என்றாள் அவள்.

பாஸ்கரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஆச்சரியத்தில் திடுக்கிட்டான். மிகவும் பிரமித்துப் போனான். ஒன்றும் அவனுக்குப் புரியவில்லை.

''என்ன திடீரென்று...?''

''ஒன்றுமில்லை. ஒரு கவி சொல்லியிருக்கிறான்: 'நட்சத்திரங்களை ஆட்டி வைக்கும் ஆசையுடன் நான் பாட ஆரம்பிக்கிறேன். ஆனால், அது குரங்கை ஆட்டி வைக்கும் கேலிக் கூத்து ஆகிறது.' அது மாதிரிதான் ஆயிற்று என் வாழ்வும்'' என்றாள்.

''என்ன நடந்தது? விவரமாய்ச் சொல்லேன்.''

''என்ன நடந்தாலென்ன? இந்த வேலையை விட்டுவிடப் போகிறேன்'' என்றாள்.

பாஸ்கரன் அதற்கு மேல் கேள்வி கேட்க விரும்பவில்லை. தானே எல்லாம் தெரிந்து போகும் என்பது அவன் நம்பிக்கை. தவிர, இந்த மனமாற்றத்தைக் கண்டு அபரிமிதமான சந்தோஷம். ''நான்தான் அடிக்கடிச் சொல்வேனே. மலரை வைத்து மாலை கட்டலாம். கோட்டை கட்ட முடியுமா? புஷ்பத்திலிருந்து பொறி பறக்குமா? அனாவசியமாக அவஸ்தைப்படுத்திக் கொண்டாய். சரி, இப்பொழுது, என்ன கடப்பாவுக்குப் புறப்பட்டு வருகிறாயா? என்று பழைய பல்லவியில் முடித்தான். இவள் பதில் சொல்லவில்லை. இருந்தாலும் அவள் பதிலை ஊகித்து அறிந்துவிட்டான் பாஸ்கரன்.

அவளுடைய வெட்கத்தில் மலர்ந்த சிரிப்பு உலகமே ஓர் அழகான புன்சிரிப்பு என்று எண்ண வைத்தது. அவனிடம் பொங்கிக் கொண்டு வரும் சந்தோஷம் ஓசையுருக் கொண்டு வார்த்தைகளாகவும் சிரிப்பாகவும் மிதந்து வந்தது. வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு இருவரும் காரில் வந்து கொண்டனர்.

''நான் இனிமேல் உன் டாக்டர் அல்ல. உன் டிரைவர். வண்டியை ஓட்ட ஆரம்பிக்கலாமா?''

''என்னை என்ன கேள்வி? நான் உங்கள் சமையல்காரி.''

''சமையல்காரியா? என் உயிரையும், உணர்வையும் உலகத்தையுமன்றோ சமைக்கப் போகிறாய்!''

வண்டி புறப்பட்டது.

மிஸ். குஞ்சிதம், மிஸஸ். பாஸ்கரன் ஆகிவிட்டாள்.

ந. சிதம்பர சுப்ரமணியன்
Share: 
© Copyright 2020 Tamilonline