Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | விளையாட்டு விசயம் | அஞ்சலி | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
ஒரு செருசலேம்
- பா.செயப்பிரகாசம்|பிப்ரவரி 2006|
Share:
Click Here Enlargeதனது சிறிய பூப்பாதங்களால் ஏழே வயதை அவன் கடந்திருந்தான். அவனுக்கு நன்றாக நினைவிருந்தது. அந்தச் சோகமமயான நிகழ்ச்சி அவன் உள்மனசின் கூட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்தது. அவனது நினைவின் ஸ்பரிசங்கள் பட்டவுடன், அது பிடரியைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து எல்லாக் கம்பீரங்களையும் தின்றுவிட்டு, உறங்கிவிடும்.

அம்மாவின் கூந்தலைப் பிடித்துக் கொண்டு, வலது கையால் அப்பா ஓங்கி அறைந்தார். 'அம்மா' என்று அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு அம்மா சுருண்டு விழுந்தாள். கூந்தலைப் பிடித்த கை இன்னும் விடவில்லை. கீழே விழுந்தவளை, கூந்தலைப் பிடித்துக் கொண்டு தரையில் தரதரவென்று அப்பா சுற்றினார். கதறலுக்கும் அழுகைக்கும் இடையே - அவர் ஓங்கி அவளுடைய இடுப்பில் ஒரு உதை கொடுத்தார். அம்மாவின் முந்தானையைப் பிடித்துக் கொண்டிருந்த அவனும், அண்ணனும், சின்னத் தங்கச்சியும் சேர்ந்து கதறினார்கள். அவர்களுடைய கதறலைக் கேட்ட பக்கத்து வீட்டுச் சித்தப்பா, ஒரு ஆகாயப் பருந்து மண்ணில் பயந்து போயிருக்கிற கோழிக் குஞ்சைக் கால்களால் தாக்குவது போல் யுத்தம் செய்து கொண்டி ருக்கிற அப்பாவை விலக்கிவிட்டார்.

பாட்டி, அப்பாவைப் பெற்றவள், வாசற் படியில் நின்று இவைகளையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். மருமகள் அடி பட்டுச் சிதைபடுவதைப் பார்த்து, ''பொன்னையா, என்ன இது. நிறுத்து'' என்று அவள் ஒரு வார்த்தை சொல்லவில்லை.

அம்மாவைத் திண்ணையில் படுக்க வைத்திருந்தார்கள். மரணம் தனது விதைகளை அந்த உடலில் ஆழமாகத் தூவியிருந்தது. அவை பூப்பூக்கும் போது, அவள் இறந்துவிடக் கூடும். விட்டுவிட்டு வருகிற சுவாசம். அவள் உயிர் போய்ப் போய் வருகிறது என்பதைச் சந்தேக மில்லாமல் காட்டியது.

வயிற்றில் உதை விழுந்ததால், சிறு கர்ப்பம் கலைந்து காய் விழுந்து விட்டது. ஒரு நிலாக் காலத்தில் கொல்லைக்குப் போய் விட்டு வந்த அம்மா, தாகம் எடுத்த போது, குசவனின் வீட்டில் புளிச்ச தண்ணீர் கொடுக்கச் சொல்லிச் சாப்பிட்டாள் என்றும் பெண்கள் சொன்னார்கள். நினைவிழந்து மூச்சடங்கிப் போய்க் கிடந்தாள் அம்மா. சுற்றிலும் பெண்கள் கூடி நின்று சோக முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சோகமான புழுக்கம், அங்கே கனத்துக் கொண்டிருந்தது.

அவனையும் அண்ணனையும் பக்கத்தில் அழைத்தார்கள். முந்தானையால் கண்ணீரைத் துடைத்து மூக்கைச் சிந்தி உறிஞ்சியபடி, மங்கையர்க்கரசி அத்தை அவர்களிருவரையும் அருகில் இழுத்து ''அம்மாவுக்கு அன்னப்பால் விடுங்க மக்களே'' என்றாள். அவனைத் தன்னோடு அணைத்து, சேலைத் தலைப்பால், கண்ணீரைத் துடைத்து அவள் முகத்தைப் பார்த்தாள். அத்தையின் இதழ்களில் ஒரு வேதனையான புன்னகை வெளிப்பட்டது. ''ஐயோ மக்களே'' என்று அவள் விம்மலுடன் வெடித்துக் கூச்சலிட்டாள்.

அண்ணன் முதலில் பாலூற்றி விட்டு வந்தான். அந்தச் சிறு வயதிலிருந்து சோகங்களை மெளனமாக ஏற்றுக் கொள்கிற லாவண்யம் அண்ணனுக்குக் கை வந்திருந்தது. அதனால்தான் சோகங்கள் உள்ளுக்குள்ளேயே இறுகி, அந்த உடலை வளர்ச்சியில்லாமல், கட்டையாய் ஒல்லியாய் நறுங்கிப் போகச் செய்திருந்தது.

தலைமாட்டில் அம்மாவைப் பெற்ற பாட்டி, தலையில் முக்காடிட்டு உட்கார்ந்திருக் கிறாள். ஒரு வாரமாக அவளை - மகளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிற அவளை - அந்த இடத்திலேயே எல்லோரும் பார்த்தார்கள். அந்த மெலிந்த எலும்புக் கூட்டில், கண்ணீர் எங்கிருந்து ஊறி வருகிறது என்று எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

அவள் இரண்டு பெற்றாள். மூத்தவள் கல்யாணமாகி, முதல் வருசத்திலேயே இந்த உலகத்தையே முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டாள். அந்தச் சோகம் அழுது தீருமுன்னரே, இப்போது இரண்டாவது வாரிசும் மரணக் கோலத்தில் அவள் முன்னால் வைக்கப்பட்டதால் அவள் மரமாகி, கல்லாகி நின்று விட்டாள்.

தனக்கு முன்பே, தனது செல்வங்கள் சுடுகாட்டுக்கு முந்திக் கொள்கிற இந்தக் காட்சியால் அவள் நொறுங்கிப் போயிருக்க வேண்டும். மூத்தவள் தான் மட்டுமாகப் போய்ச் சேர்ந்தாள். இரண்டாவள் மூன்று குழந்தைகளோடு, பாலுக்கு மார்பு தேடுகிற ஈரமண்ணையும் அவள் கைகளில் ஒப்படைத்து விட்டுப் போக ஆயத்தமாக இருக்கிறாள்.

''வா, மகனே, பாலூத்து. உன் புண்ணியத்தாலே அம்மா பிழைத்து எழணும்'' மங்கையர்க்கரசி அத்தை அவன் கையைப் பிடித்துக் கூப்பிட்டுக் கொண்டு போனாள். ''உங்கை ராசியாலே, அம்மா பிழைச்சு வரணும். உயிர் கொடு சாமி''. அவள் மெல்ல அவன் கையில் பஞ்சை எடுத்துக் கொடுத்த போது, வேதனையான அபிலாஷை அவள் குரலில் வெளிப்பட்டது.

அவன் கண்களில் நீர் முட்டிக் கொண்டிருந்தது. இதுவரை அவன் கண்ட காட்சிகளாலேயே அந்த இடம் துக்கப்பட்டுப் போயிருந்தது. அவனால் அழுகையை அடக்க முடியவில்லை. பாலில் பஞ்சைத் தொட்டு அம்மாவின் வாய்க்கு அருகில் கொண்டு போனவன் ஓவென்று கதறி அழுதான். பால் சிதறி வாயில் விழாமல் அம்மாவின் முகத்திலும், கழுத்திலும் விழுந்தது.

பெருகி வரும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அம்மாவின் முகத்தினருகில் குனிந்து, பாட்டி, ''நாகம்மா'' என்றாள். உள்ளும் வெளியும் உருகும் இரவில், அவள் தீனமாக ''சின்னப் பையன் வந்திருக்கிறான் பார்'' என்றாள்.

தாயிடம் பாலுக்குப் போவதற்காக, இரு கைகளையும் நீட்டிச் சிறகு விரித்துக் கொண்டிருந்த பாப்பாவை வாங்கிப் பாட்டி அணைத்துக் கொண்டாள். அழுது அழுது கத்தி, முகமெல்லாம் வீங்கி, ஒரு சின்ன வெள்ளரிப் பழத்தைப் போலிருந்த குழந்தையை அம்மாவிடம் நீட்டி, பாட்டி உருக்கமாகக் கேட்டாள். ''இதுகளை யெல்லாம் விட்டுட்டு நீ போகப் போறியா, மகளே."

அம்மாவின் விழிகள் மேல் நோக்கி வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்தன. சாவின் திரையை விலக்கிக் கொண்டு, தனக்குப் பிரியமானவர்களையெல்லாம் கடைசியாகப் பார்த்துவிடத் தாபம் கொண்டதுபோல், அந்த இமைகள் கொஞ்சம் பிரிந்தன. பிரக்ஞையற்ற முகத்தில் சிறுசிறு அசைவுகள் நிழலாடின. விழிகளைத் திறந்து அம்மா ஒரு முறை, அவஸ்தையுடன், பார்த்தாள், அழுகிற கைக்குழந்தை மீது, கத்தி அழும் சின்னப் பையன் மீது, அவள் பார்வை பதித்திருந்தது. இதழ்கள் லேசாக அசைந்தன.
மறுநாள், பள்ளிக்கூடத்தில், செல்லம்மா டீச்சர் அவனைக் கூப்பிட்டனுப்பினார்கள். ''குமாரசாமி, நீ பைக்கூட்டை எடுத்துக்கிட்டு வீட்டுக்குப் போ.''

''டீச்சர்'' என்றான் அவன்.

பைக்கூட்டை எடுத்து அவன் தோளில் மாட்டி, நெற்றியில் ஒரு முத்தம் இட்டுச் செல்லம்மா டீச்சர் சொன்னாள். ''நீ வீட்டுக்குப் போ; அண்ணன் வந்திருக்கிறான்..''

அவன் வாசலைவிட்டு கீழேயிறங்கியபோது அண்ணன் கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றான். இருண்டு சாம்பலாகிக் கிடந்த அண்ணன் முகத்தை அவன் பார்த்தான். இடுப்பில் குழந்தையை அணைத்துக் கொண்டு கண்ணைத் துடைத்தபடி அண்ணன் சொன்னான்: ''தம்பி, அம்மா செத்துப் போச்சு''.

எல்லாத் திசைகளிலும் பஞ்சம் விழுதுகள் ஊன்றிக் கால்களைப் பரப்பியிருந்தது. பன்னிரண்டு வருசங்களாய்ப் பேச மறுத்த வானம் அந்த வருசமும் பேசவில்லை. அதன் மேக நாக்குகளே கருகிப் போய்விட்டன.

குதிரைக்குப் போடுகின்ற (கொள்) காணப்பயிறு மட்டும் கிடைத்தது. அதனால் காணப்பயிறுப் பஞ்சம் என்ற பெயரும் வந்தது. எது கிடைத்தாலும், அவர்களுக்கு உணவானது. கண்ணாடிக் காய் நெற்றுகளையும், அவர்கள் அவித்துத் தின்றார்கள். மஞ்சள் காமாலை வந்தது. வயிற்றுப் போக்கு எடுத்தது. இடுகாட்டில் ஒவ்வொரு நாளும் ஒரு அக்கினிப் புஷ்பம் மலர்ந்தது.

என்றோ ஒருநாள் வானம் மூக்குத் துடைத்தபோது சிந்திய உச்சி மழைக்கு முளைத்து, மனிதச் சாம்பலில் உணவு எடுத்துச் சுடுகாட்டில் உரம் கொண்டு நின்றன. கோரைப் புற்கள். நுனி கருகிய பூவுடன் குஷ்டத்தால் பளபளக்கும் விரல்களுடைய நாட்டியக்காரி போல் மேல்நீட்டி ஆடின. இதழ் கருகிப் போய் உயிரைக் காப்பதற்காக, தலைகீழாகவும் கால் மேலாகவும் தவம் செய்வது போலவும் அவை தோன்றின.

முதலில் மந்தி ராமசாமி சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.

முதலில் அவன்தான் எல்லோரையும் கூப்பிட்டான். கையில் ஒரு கொத்து கோரைப்புல்லை வைத்துக் கொண்டு வேரில் ஒட்டியிருக்கிற மண்துணுக்குகளைத் தட்டிவிட்டபடி சொன்னான்.

''டேய் சுடுகாட்டில் கோரைப்புல் பூத்திருக்கு, நான் பிடுங்கி வந்தேன். இப்போ யார் யார் வர்றீங்க.''

''அது எதுக்காம்?'' ஒரு சின்னப்பையன் கேட்டதற்கு மந்திராமசாமி சொன்னான். ''கோரைப் புல்லுக்குக் கீழ் சின்னச் சின்னக் கிழங்கு இருக்கு..''

''குண்டு குண்டா இருக்குமா?''

''இம்நூண்டு இம்நூண்டுதான் இருக்கு. ஆனா நல்லா இருக்கும்.''

பையன்கள் ஆவலோடு அவனைப் பார்த்தார்கள். குமாரசாமி அவன் பக்கத்தில் போய் நின்றான். ''நானும் வர்றேன்'' என்றான். ''நீ சின்னப் பையன், சின்னப் பையன்களெல்லாம் வரக் கூடாது பயந்து போயிடுவாங்க'' என்று மந்தி ராமசாமி மறுத்த போது, குமாரசாமியின் முகம் வருத்தத்தில் சுருங்கியது.

சுடுகாட்டை ஒட்டி அந்த வண்டிப்பாதை சென்றது. வண்டிப் பாதை வழியில் வடகாட்டுக்குப் போகிறபோதெல்லாம் - குருதைவாலி விதைக்கப் போகின்றபோது - களையெடுக்கப் போகிற போது - தாள் அறுக்கிறபோது - காட்டுக்குப் போய்விட்ட மாலையில் திரும்புகிற போதெல்லாம் சுடுகாட்டில் அம்மாவை எரித்த இடத்தை அவன் பார்த்துக் கொண்டே போவான். வடக்கு மூலையில் ஓடை மரத்துக்குக் கிழக்கேதான் அம்மாவை எரித்தார்கள். பச்சை மரங்கள் வெட்டி அடுக்கி, அதன் மேல் எரு இட்டு அம்மாவைப் படுக்க வைத்திருந்தார்கள். நடுங்கிய கைகளால், அம்மாவின் சேர்த்துக் கட்டப்பட்ட கைகளுக்குக் கீழே சேலைத் துணியில் வைக்கப்பட்டிருந்த வாய்க்கரிசியை எடுத்து பாட்டி, அம்மாவின் வாயில் இட்டாள். பார்வையை மறைத்த கண்ணீரைத் துடைத்து அம்மாவின் முகத்தைக் கூர்மையாகப் பார்த்தாள். பிறகு அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டாள். பிறகு இரு கைகளையும் விரித்து ''எல்லோரும் என்னை விட்டுப் போயிட்டீங்களே மக்களே'' என்றாள். அப்போது அவள் குரல் மக்கிப்போய் ஜீவனற்று ஒலித்தது. எல்லாவற்றையும் இழந்துவிட்ட விரக்தியில் இரு கைகளையும் அம்மாவை நோக்கிக் கூப்பி ''நீ மகராசியா போய்ட்டுவா மகளே'' என்றாள்.

கண்ணீர் பார்வையை மறைக்க அவன் அம்மாவுக்கு வாய்க்கரிசி இட்டான்; அவன் அண்ணன், தங்கை, ஆறு மாதக் கைக்குழந்தை, அப்பா, பாட்டி அத்தனை பேருடைய இதயங்களும் ஒன்றாகச் சேர்ந்து எரிவதுபோல், பின்னாலே ஒரு சிதை எரிந்தது.

சுடுகாட்டுப் பக்கம் போவதற்குச் சிறு குழந்தைகள் பயப்படுகிறபோது அவன் மட்டும் அங்கே போவதற்குச் சந்தோஷப் பட்டான். ஊரிலே ஏதாவது இழவு விழுந்தால்கூட அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பாடையின் கூடவே போய் அம்மாவை எரித்த இடத்தைப் பார்த்துவர அது அவனுக்கு வசதியாகயிருந்தது. ஊரில் யார் செத்தாலும் அந்தச் சிறுவன் சுடுகாட்டுக்குப் போவதும் நடந்தது.

சுடுகாட்டுக்குப் போவதாக மந்தி ராமசாமி சொன்னவுடனே அதனாலே குமாரசாமி மகிழ்ச்சி அடைந்தான். சின்னப் பையன்கள் எல்லோரும் வியப்படைந்தார்கள். சுடு காட்டில் கோரைப்புல் பூத்திருக்கிறது என்று சொன்னபோது அவர்களால் நம்பமுடிய வில்லை.

மந்தி ராமசாமி தலையைச் சாய்த்துக் கொண்டு தெற்கத்திக்கார்களுக்குரிய இடக்கான பாஷையில் சொன்னான். ''டே, நம்புனா நம்புங்க, நம்பாட்டா போங்க, சுடுகாட்டிலே கோரைப்புல் பூத்து குமரியாகி சரமாகக் கிடக்குது டேய்..''

எல்லோரும் அவனைத் தொடர்ந்து ஓடினார்கள். அவர்களது பாதங்கள் சூட்டினால் வெந்தன. வண்டிப் பாதை புழுதியில் ஓடியவர்கள் சூடு தாங்காதபோது சின்னஞ்சிறு கரம்பைக் கட்டிகளில் கால் வைத்துச் சூடு மாற்றிக் கொண்டார்கள்.

அனல்காற்று மூர்க்கத்துடன் மோது வதையும் சட்டை செய்யாமல், மூர்க்கத் தனமாக அவர்கள் முன்னேறிக் கொண்டிருந்தார்கள்.

சுடுகாட்டை அடைந்தபோது அவர்களுக்கு வாயடைத்துப் போயிற்று. மந்தி ராமசாமி அவர்கள் மத்தியில் அன்றைக்குக் கம்பீர புருஷனாக உயர்ந்து போனான்.

சுடுகாட்டில் சின்னஞ்சிறு கோரைப் புற்கள், செல்லமான சிணுங்கலுடன் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன. அங்கங்கே சுடுகாடு முழுவதும் திட்டுத் திட்டாகப் பசிய பழுப்பான சாம்ராஜ்யம் சிரித்திருந்தது.

பன்னிரண்டு வருசங்களாய்ப் பேசாத வானம் என்றோ ஒரு நாள் ஊமையன் ஒலிபோல் பேசியபோது இந்தக் கோரைப்புற்கள் உரம் கொண்டு வளர்ந்து விட்டன.

கால் சூட்டையும் சட்டை செய்யாமல் ஓடிப் போய்க் கோரைப் புல்லைப் பறித்து வந்து அதன் அடியில் குன்றிமணி அளவே உள்ள கிழங்கை உரித்து அவர்கள் தின்றார்கள். அவர்களுக்கு அது தித்திப்பாக இருந்தது. சூடு தாங்காத போது ஓடை மர நிழலுக்கு ஓடி வந்தார்கள்.

மந்தி ராமசாமி இரு கைகளையும் அகல விரித்துக் கால்களைப் பரப்பிப் புல் வளர்ந்திருந்த ஒரு பிரதேசத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தான். தற்செயலாக அவன் மீது விழுந்த பார்வையில், குமாரசாமியின் கண்கள் அக்கினி ரூபமாக மாறின. ஒரு மூர்க்கமான குரலில், அவன் கூட்டத்திற்குத் தலைவியைப் போலிருந்த மல்லம்மாவிடம் சொன்னான். ''அவனைப் போகச் சொல்லு''.

''ஏன்?'' என்ற பார்வையுடன் எல்லோரும் அவனைப் பார்த்தார்கள்.

''அது எங்க அம்மா செத்த இடம்'' ஒரு கணம் மெளனம் நிலவியது. கால்களையும் கைகளையும் அகலப் பரப்பிக் கொண்டு, ''இதை நான்தான் பார்த்தேன். வேற யாரும் பறிக்கக்கூடாது'' என்றான் மந்தி ராமசாமி. ''உங்க அம்மா செத்த இடம் என்று பட்டயம் எழுதி வச்சிருக்கா?''

''அவனைப் போகச் சொல்லு'' என்று இளகிய கெஞ்சும் குரல் மறுபடியும் கேட்டான் குமாரசாமி.

அவன் அடிவயிற்றிலிருந்து புஸ் புஸ் என்ற சத்தம் வந்தது. முகம் ஊதிப் புடைத்து விகாரம் அடைந்து அழுகையும் கோபமு மாகத் தடுமாறிய குரலில் வார்த்தை வார்த்தையாக அவன் பேசினான். ''டேய், அது எங்க அம்மா செத்த இடம்; பறிக்காதேடா.''

மந்தி ராமசாமியின் கைக்கு அடங்காமல் புல் சேர்ந்திருந்தது. அலட்சியமாகச் சிறு கட்டாகக் கட்டி, ஓரத்தில் வைத்துவிட்டு மறுபடியும் அவன் இறங்கினான்.

தாவித் தாவிப் பறித்துக் கொண்டிருந்த வனின் முதுகில் ஓங்கி ஒரு உதை விழுந்தது. சுடும் மணலில் குப்புற விழுந்தான். தாக்குதலில் இருந்து விடுபடுவதற்குள் அவன் முதுகில் ஏறி அமர்ந்து தலை மயிரைப் பிடித்து மண்ணில் அழுத்தியபடி, கண்கள் ஜொலிக்க, குமாரசாமி கத்தினான்: ''இனிமே எங்க அம்மா செத்த இடத்திலே பறிப்பியா?''

அடிவயிறும் மார்பும் சுடுசாம்பலில் அழுத்தித் தீயாய்த் தகித்தது. எரிந்த சவத்தின் எலும்புச் சில்லுகள் - உடைக்கப்பட்ட கொள்ளியின் ஓடுகள் முட்களாய்க் குத்தின. பொக்குளங்கள் தோன்ற அழுத்தி எடுத்தபடி குமாரசாமி கூச்சலிட்டான்: மினிமே பறிப்பியாடா? எங்க அம்மா செத்த இடத்திலே பறிப்பியாடா?''

மந்தி ராமசாமி திமிர முயன்று தோற்றுப் போனான்.

இன்னமும் வெறியோடு குமாரசாமி கத்திக் கொண்டிருந்தான். ''இப்போ வர்றியாடா பார்க்கலாம்.''

கத்திக் கத்தி மட்டுமே அவன் களைத்துப் போனான். அவன் களைப்படைந்து பிடியைத் தொய்யவிட்ட போது ஒரே உசுப்பில் அவனை உதறிக் கீழே தள்ளிவிட்டுத் தூரப் போய் விழுந்தான் மந்தி ராமசாமி.

மந்தி ராமசாமி கைகளைக் கீழே ஊன்றித் தடுமாற்றமுடன் எழுந்து நின்றான். உடலில் ஒட்டியிருந்த சுடுமணலைத் துடைத்துக் கொண்டு நொண்டி நொண்டி நடந்து ஓடை மரநிழலுக்குப் போனான்.

என்ன நடந்தது என்று அறிய முடியாத அவர்கள் எல்லோரும் திகைத்துச் சவமாகி நின்றார்கள். பஞ்சத்திலும் பெருவாரியாய்ச் செழித்துப் போன உடல் கொண்டவனை அவனைவிடச் சிறியவன் தாக்கியதை நம்ப மறுத்தவர்கள் போல் நின்றார்கள்.

அதிர்ச்சியாகி அவர்கள் எல்லோரும் பார்த்தார்கள். பார்த்த போது சிதை எரிந்த சுடு சாம்பல் மண்மீது ஒரு சிறுபாலகன் தண்ணீரில் நீச்சலடிப்பது போல் குப்புறப் படுத்தவண்ணம் அம்மா செத்த இடத்தை அணைத்துக் கொண்டிருந்தான்.

பா.செயப்பிரகாசம்
Share: 




© Copyright 2020 Tamilonline