Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
காமன்வெல்த் விளையாட்டுக்கள்
- சேசி|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeகுளிர்கால ஒலிம்பிக்ஸ் டொரினோவில் முடிந்த சூட்டோடு சூடாக (ஆல்ப்ஸ் மலையின் குளிருக்குச் சூடு தேவைதான்!) காமன்வெல்த் விளையாட்டுக்கள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் மார்ச் 15 முதல் 26 வரை நடக்கவிருக்கின்றன. ஒலிம்பிக்ஸிற்கு அடுத்தபடியான மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சி காமன்வெல்த் விளையாட்டுக்கள்தாம். ஆனால் இதுபற்றிய செய்திகளை அமெரிக்கத் தினசரிகளிலோ, தொலைக்காட்சிகளிலோ பார்க்க முடியாது. அமெரிக்கா காமன்வெல்த் நாடு இல்லை என்பதால் இந்த விளையாட்டுகளில் பங்கு பெறாது.

காமன்வெல்த் நாடுகள் மொத்தம் 53 என்றாலும், காமன்வெல்த் விளையாட்டு அமைப்புகள் மொத்தம் 71 இருக்கின்றன. உதாரணத்திற்கு இங்கிலாந்தில் ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வட அயர்லாந்து, வேல்ஸ், ஐல் ஆ·ப் மான், ஜெர்ஸி, கியர்ன்ஸே என்று ஏழு அமைப்புகள் இருக்கின்றன. இவை ஏழும் தனி நாடுகளாகப் பங்கேற்கின்றன.

முதலாவது காமன்வெல்த் விளையாட்டு 1930-ல் கனடாவில் ஹாமில்டன் நகரில் நடந்தது. அதிலிருந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை போட்டிகள் நடக்கின்றன. 1942-லும், 1946-லும் இரண்டாம் உலக யுத்தம் நடந்த காரணத்தால் விளையாட்டுகள் நடக்கவில்லை. 1934-லிருந்து இந்தியா இதில் பங்கேற்று வருகிறது.

ஆட்டங்கள் தொடங்குவதற்கு முன் நடக்கும் 'அரசியின் குழல் தொடர் ஓட்டம்' (Queen’s Baton Relay) இவ் விளையாட்டின் புதுமை. ஒலிம்பிக் தீப்பந்தத்தை நாடுகளிடையே ஊர்வல ஓட்டமாக எடுத்துச் செல்வதற்கு நிகரானது இது. 1958 விளையாட்டுக்களில் இருந்து இந்தப் பழக்கம் தொடங்கியது. இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் அரண்மனையில் இந்த ஓட்டம் ஆரம்பிக்கும். அரசியின் வாழ்த்துச் செய்தி குழலுக்குள் வைக்கப்படும். பல நாடுகளைக் கடந்து, விளையாட்டின் தொடக்க நாளன்று இந்த ஓட்டம் முடியும். அரசியின் பிரதிநிதி குழலுக்குள் இருக்கும் வாழ்த்துச் செய்தியைப் படித்து ஆட்டத்தைத் துவக்கி வைப்பார். வழக்கமாக இங்கிலாந்திலும், ஆட்டம் நடக்கும் நாட்டிலும் மட்டும்தான் இந்த ஓட்டம் நடைபெறும். 1998-ல் மற்ற காமன்வெல்த் நாடுகளுக்கும் இந்த ஓட்டம் சென்றது. 2002-ல் 100,000 கிலோமீட்டர்களுக்கும் அதிகமாகப் பிரயாணம் செய்து 23 காமன்வெல்த் நாடுகளுக்குக் குழல் கொண்டு செல்லப்பட்டது. இந்த வருடம் பங்கேற்கும் 71 நாடுகளுக்கும் இந்தக் குழல் கொண்டு செல்லப்படுகிறது.
2002-ல் இங்கிலாந்தில் நடந்த விளையாட்டுகளில் இந்தியா 30 தங்கப் பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பிடித்தது. முதல் ஐந்து இடங்களுக்குள் இந்தியா வந்தது இதுவே முதல் முறை. துப்பாக்கி சுடும் போட்டிகளில் 14 தங்கப் பதக்கங்களும் பெண்கள் பளு தூக்கும் போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்களையும் வென்றது குறிப்பிடத் தக்கது. 1978, 1982 ஆட்டங்களில் பூப்பந்தாட்டத்தில் (badminton) இந்தியா தங்கப் பதக்கத்தை வென்றது. 1978-ல் பிரகாஷ் படுகோனேயும், 1982-ல் சையது மோடியும் இந்தப் பதக்கங்களை இந்தியாவிற்குக் கொண்டுவந்தனர். 1974 ஆட்டங்களில் இந்தியாவின் மல்யுத்த வீரர்கள் 4 தங்கம், 5 வெள்ளி, ஒரு வெண்கலம் என பங்கெடுத்துக் கொண்ட ஒவ்வொரு வீரரும் ஒரு பதக்கத்தை வென்றனர். 1958-ல் இந்தியாவின் மிகச் சிறந்த ஓட்டக்காரரான மில்கா சிங் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கத்தை வென்று முதன்முறையாக காமன்வெல்த் போட்டிகளில் தங்கத்தை வென்று தந்தார்.

இந்த ஆண்டும் இந்தியா இந்த ஆட்டங்களில் சிறப்பாகப் பங்கேற்றுப் பல பதக்கங்களை வெல்லும் என்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த ஆட்டங்களில் இந்தியாவின் வெற்றியை கவனிக்க விரும்புவோர் கீழ்கண்ட வலைத்தளங்களில் செய்திகளைத் தெரிந்து கொள்ளலாம்:

http://www.melbourne2006.com.au/Channels/
http://www.thecgf.com/home.asp

2010-ல் காமன்வெல்த் விளையாட்டுகள் புதுடில்லியில் நடக்கவிருக்கின்றன. இதுபற்றிய செய்திகளை http://www.cwgdelhi2010.com/ என்ற வலைத்தளத்தில் காணலாம்.

சேசி
Share: 




© Copyright 2020 Tamilonline