Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சாகித்ய அகாதமி விருது பெற்ற திலகவதி ஐ.பி.எஸ்.
- கேடிஸ்ரீ|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeதிலகவதி தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி. தற்போது கடலோரப் பாதுகாப்புப் படையின் கூடுதல் டி.ஜி.பி.யாகப் பொறுப்பு வகிக்கிறார். இதுவரை சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பல்வேறு நாவல்களும் எழுதியுள்ளார். அண்மையில் 'கல்மரம்' நாவலுக்காகச் சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.

தவிர, பல்வேறு மொழிகளில் உள்ள சிறந்த நாவல்களை மொழிபெயர்த்த அனுபவமும் இவருக்கு உண்டு. இவரின் 'பத்தினிப்பெண்' சிறந்த திரைப்படத்துக்கான தமிழக அரசு விருதினைப் பெற்றது. ஏராளமான விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ள இவரது படைப்புகள் எம்.பில், பி.எச்டி. பட்டங்களுக்காக ஆய்வு செய்யப்படுவது சிறப்பம்சம்.

தென்றலுக்காக அவரைச் சந்தித்தபோது...

தென்றல்: 'கல்மரம்' நாவல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றதற்காக தென்றல் சார்பாக வாழ்த்துக்கனைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்டிடத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சனைகள் பற்றிக் 'கல்மரம்' நாவலில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். இக்கதைக்கான கரு எப்படி உருவானது?

திலகவதி: வாழ்த்துக்கு நன்றி. கட்டிடத் தொழிலாளர் யாருடைய கண்ணுக்குமே தப்ப முடியாத விஷயம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வீடுகள் எல்லாமே அவர்களால் கட்டப்பட்டதுதான். ஆனால் வீடு என்று நாம் நினைக்கும் போது, பல விஷயங்கள் உடனடியாக நம் எண்ணத்தில் வருகின்றனவே தவிர, வீட்டைக் கட்டியவர்களைப் பற்றி ஒரு நிமிடம்கூட நாம் நினைப்பது கிடையாது.

நான் எஸ்.பி. சி.ஐ.டி.யாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், என் அலுவலக ஜன்னலுக்கு வெளியே பார்த்தால், வரிசையாக மரங்கள் இருக்கும். அவை ஏப்ரல், மே மாதங்களில் மஞ்சளாக, கொத்துகொத்தாகப் பூத்து, பார்ப்பதற்கு ரொம்ப அழகாகக் காட்சியளிக்கும். மாலைநேரங்களில் குருவிகள் வந்து அந்த மரங்களில் வந்தடையும். ஒருமுறை நான் ஒரு வாரம் வெளியூருக்குப் போயிருந்தேன். திரும்பி வந்து வெளியே பார்த்தால் மரங்கள் இருந்த இடம் வெறிச்சோடிக்கிடந்தது. மரங்கள் வெட்டப்பட்டு இருந்தன.

விசாரித்த போது அங்கு வீடு கட்டப்போவதாகச் சொன்னார்கள். அந்த இடமே ஏதோ குறைபட்டுப் போனதுபோல் இருந்தது. கொஞ்ச நாட்களில் அங்கே ஒரு கலகலப்பு தென்பட்டது. வீடு கட்டத் தொடங்கிவிட்டனர். அந்த ஆட்களை அருகிலிருந்து பார்க்கிற வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களின் வாழ்க்கையை நுணுகிக் கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களின் உணவு இடைவேளையின் போது அவர்களிடம் சென்று பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தேன்.

மேற்கொண்டு விசாரித்த போது 'கட்டிடம் மயம்' என்றோர் இடம் பற்றி அறிந்தேன். அது தொழிலாளர்கள் கூடும் இடம். அந்த இடத்தில் தன்னார்வ நிறுவனம் ஒன்று இவர்களின் பிரச்சனைகள் பற்றி ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பதாகத் தெரிய வந்தது. சென்னை ஹாரிங்டன் சாலையில் அந்த அமைப்பு இருந்தது.

அங்குள்ளவர்களைச் சந்தித்துப் பேசி, கட்டிடத் தொழிலாளர்கள் சார்ந்த சிக்கல்களை அவர்கள் மூலமாக நிறைய அறிந்து கொண்டேன். தொழிலாளர்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தேன். அவர்களின் வறுமை, பணியிடத்தின் அபாயங்கள், சிமெண்டிலும், சுண்ணாம்பிலும் தொடர்ந்து புழங்குவதால் நாளாவட்டத்தில் ஏற்படும் சுகக்கேடுகள் இவற்றை அறிந்தேன். பல நல்ல குணங்கள் இருப்பதைப் பார்த்தேன். இவற்றையெல்லாம் எழுத்தில் பதிவு செய்து வைக்க வேண்டும் என்று மனதில் தோன்றியதன் விளைவுதான் 'கல்மரம்'.

தெ: நாவலின் இறுதியில் முதலாளிக்கும் தொழிலாளிகளுக்கும் இடையே ஏற்படும் போராட்டத்துக்குத் தீர்வையும் சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் தீர்வு நடைமுறைச் சாத்தியம்தானா?

தி: நாவலின் இறுதியில் கட்டிடக் கலைஞர்களின் பிரச்சனைகளை ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தீர்த்து வைத்திருக்கிறேன். காரணம் இயல்பாக என்னிடம் இருக்கும் பொறுமையின்மைதான். பொறுமையின்மை என்றால், இந்த கஷ்டங்கள் எல்லாம் உடனடியாக தீர்ந்துவிடாதா என்கின்ற ஆதங்கமும் அதுசார்ந்த பொறுமையின்மையும்தான். பிரச்சனைகளுக்குத் தீர்வாக ஒரு சாவியைத் தன் கையில் வைத்திருக்கிற ஒரு லட்சிய மனிதர் வரமாட்டாரா என்ற என்னுடைய ஆதங்கத்தின் விளைவே ஒரு பாத்திரத்தின் மூலம் நான் கண்ட தீர்வு.

ஆனால் நிஜ வாழ்க்கையில் தீர்வுகள் அவ்வளவு சுலபமாகக் கிடைத்துவிடுவதில்லை என்பது உண்மைதான். இருந்த போதிலும்கூட, கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்க்கை ஐம்பது வருஷங்களுக்கு முன்னால் இருந்த அளவிற்கு, இப்போது அவ்வளவு ஆதரவற்றதாக இல்லை என்றே சொல்லலாம். தமக்குள் அமைப்புகளை ஏற்படுத்தி, பிரச்சனைகளுக்கு ஓரளவு தீர்வு கண்டிருக்கிறார்கள். ஆனாலும் எல்லாக் கஷ்டங்களும் தீர்ந்துவிட்டது என்று சொல்லவில்லை.

தெ: எப்படி நீங்கள் எழுத்துலகில் நுழைந்தீர்கள்? வாசிப்புப் பழக்கம் எப்படி ஏற்பட்டது?

தி: எங்கள் வீட்டில் பெரியம்மா ஒருத்தர் இருந்தார். அவருக்குச் சிறுவயது முதலே கம்பராமாயணம், வில்லி பாரதம் இவற்றை அவருடைய பெரியப்பா, சித்தப்பா கதையாகக் கூறுவார்களாம். அவற்றைக் கேட்டுக் கேட்டு பெரியம்மாவுக்கு அந்தப் பாடல்கள் மனப்பாடமாகவே ஆகிவிட்டன.

பெரியம்மா தான் கேட்ட கதைகளை எனக்குச் சொல்லுவார்கள். தவிர, நிறைய நாட்டார் கதைகள், மதனகாமராசன் கதை, விக்கிரமாதித்தன் கதை, ஆயிரத்து ஓர் இரவு அராபிய இரவுகள் போன்றவற்றைப் பெரியம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். எனக்கு எட்டு, ஒன்பது வயதானதும் நாமே நிறையக் கதைகளைப் படிக்கலாம் என்கிற எண்ணம் தோன்றியது.

கதை படிப்பது கெட்ட பழக்கம் என்று என் பெற்றோர் நினத்தனர். ஆகையால் புத்தகத்தை ஒளித்து வைத்துப் படிப்பேன். எனக்கு 10, 11 வயதானதும் நூலகத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன். யாராவது பார்த்து விடுவார்களோ என்று பயந்துக் கொண்டே போவேன். நூலகம் உள்ள பகுதியில் ஜனசந்தடி குறைச்சலாக இருக்கும் நேரத்தில் மின்னல் மாதிரி வேகமாக நான் நூலகத்துக்குள் நுழைந்துவிடுவேன். இந்தச் சூழ்நிலையில்தான் நான் படிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டேன்.

எங்கள் வீட்டுப் பக்கத்தில் ரங்கசாமி என்கிற ஓர் பள்ளியாசிரியர் குடிவந்தார். அவர் போர்ட் ஸ்கூல் நூலகத்திற்குப் பொறுப்பாளராக இருந்தார். புதிய புத்தகங்கள் பேரேட்டில் பதிவதற்கு அவரது வீட்டிற்கு வந்து சேரும். பதிகிற வேலையை நான் எடுத்துக் கொண்டேன். அதன்மூலம் நிறையப் புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. புதிதாக எங்கள் தெருவுக்கு யார் குடிவந்தாலும் முதலில் நான் அவர்கள் வீட்டில் பார்ப்பது ஏதாவது புத்தகம் இருக்கிறதா என்பதைத்தான். அவர்கள் வீட்டுக் குழந்தைகளைச் சிநேகம் பிடித்துக் கொள்வேன். பத்து, பதினோரு வயதிலேயே புத்தகம் படிப்பதில் அவ்வளவு ஆர்வம்!

என் அம்மா எனக்கு பாரதியார் கவிதைகளைக் கொண்டுவந்து கொடுப்பார்கள். திரும்பத் திரும்பப் படித்ததால் பாரதியாரின் எழுத்துகளில் முக்கால் வாசி எனக்கு மனனமாகவே ஆகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ரங்கசாமி அவர்கள் நிறைய கவிதைகள் எழுதுவார்கள். அவரது கவிதைகளின் முதல் வாசகியாக, முதல் விமர்சகியாக நான் இருந்தேன். திருக்குறள் துவங்கி யவனராணி வரையில் பல நூல்களை நான் அவருக்குப் படித்துக் காட்டுவேன்.

பெரியம்மாவிடம் கதை கேட்டது, நூலகம் தேடிச் சென்று படித்தது, ரங்கசாமி நயினாருடைய படைப்பாற்றலைப் பக்கத்தில் இருந்து பார்த்தது போன்ற விஷயங்கள் எனக்குள் இலக்கியத் தேடலை ஏற்படுத்தின.

நான் படித்த பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு வாழ்த்துக் கவிதைகள் எழுதிக் கொடுத்திருக்கிறேன். பள்ளித் தமிழ்ப் பேரவைப் போட்டிகளில் பங்கெடுத்து நிறையக் கவிதைகள், கட்டுரைகள் எழுதியதும் உண்டு.

தெ: சிறுகதைகள் எப்போது எழுத ஆரம்பித்தீர்கள்? உங்கள் முதல் சிறுகதைப் பற்றின விவரங்கள்...

தி: என் முதல் சிறுகதை எண்பதுகளில் வந்தது. கவிதைகள்தான் அதுவரை அதிகம் எழுதிக்கொண்டு இருந்தேன். பத்திரிகையாளர் ஒருவர் மலர் ஒன்றுக்காகச் சிறுகதை ஒன்றை என்னிடம் கேட்டுக்கொண்டார். பெண்சிசுக் கொலையைப் பற்றி அதிகம் பேசப்பட்டு வந்த காலகட்டம் அது. அது என்னை வெகுவாக பாதித்திருந்தது. அதையே மையக் கருத்தாக வைத்து 'உதைத்தாலும் ஆண் மக்கள்' என்கிற சிறுகதை ஒன்றை எழுதினேன்.

நான் எழுதிய கவிதைகளுக்கு இருந்த வரவேற்பை காட்டிலும் - வாசக எதிர்வினையைக் காட்டிலும் - இதற்கு அதிகமாக இருந்தது. என்னுடைய எழுத்தின் நோக்கமே கருத்துகளை, அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாக இருந்தது. கவிதையைக் காட்டிலும், சிறுகதையின் வீச்சு அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். தொடர்ந்து நிறைய சிறுகதைகள் எழுத ஆரம்பித்தேன். இரண்டு தொகுதிகள் வெளிவந்தன. பிறகு பல பத்திரிகைகளில் நாவல்கள், தொடர்கள் கேட்டார்கள். பலதடங்களில் கால் பதித்தேன்.

தெ: பெண் எழுத்தாளர்கள் அதிகளவில் பெண் சார்ந்த விஷயங்களையே எழுதுகிறார்கள். சமூகம் சார்ந்த விஷயங்கள் அதிகம் எழுதுவதில்லை. ஏன் அவர்கள் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர நினைப்பதில்லை?

தி: சங்ககாலத்தில் 51 பெண் எழுத்தாளர்கள் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள். அதற்குப் பிறகு பார்த்தோமானால் பெண்களுக்குக் கல்வி, பொதுவாழ்க்கை அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது. அவர்களுடைய அனுபவம் என்பது அடுப்படி சார்ந்ததாக மட்டும்தான் இருந்தது. அந்த நிலையிலிருந்து இந்த நூற்றாண்டில்தான் பெண்கள் எழுதவே தலைப்பட்டிருக்கிறார்கள். ஆகையால் அவர்களுடைய சொந்த வலிதான் எழுத்தாக வருகிறது. பெண்களுடைய வலி முழுவதும் அவர்களுடைய குடும்ப வாழ்க்கையைச் சார்ந்ததாக இருப்பதால் அவர்கள் எழுத்தில் அது வெளிப்பட்டிருக்கலாம். ஆனால் இதற்கும் நிறைய விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன.

தெ: உதாரணமாக எழுத்தாளர் வாசந்தியைக் கூறலாம். அவர் எண்பதுகளில் ஈழப்பிரச்சினை உச்சக்கட்டத்தை எட்டியிருந்த நேரத்தில் அதையே மையமாக வைத்து 'நிற்க நிழல் வேண்டும்' என்கிற பெயரில் தொடர் ஒன்றை எழுதினார். அதுபோல் நம்முடைய முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொலைசெய்யப்பட்ட பிறகு தில்லியில் என்ன நடந்தது என்பதையும் நாவல் ஒன்றில் தொட்டிருக்கிறார். சமகால அரசியலைப் பற்றிய மிகத் துணிச்சலான கருத்துகளை எல்லாம் தன்னுடைய 'பொய்முகங்கள்' என்ற கதையில் வைத்திருந்தார்கள்.

வாசந்தியைவிட மிகவும் துணிச்சலாக ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுபதுகளின் கடைசியில் 'ரோஜா இதழ்கள்' என்கிற நாவலில் தமிழகத்தின் அரசியலைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதுபோல் சூடாமணி அவர்கள் குடும்பம், வாழ்க்கை என்பதைவிடத் தனிமனிதனின் மனச்சிக்கல்களைத்தான் தன் எழுத்தில் அதிகம் வெளியிட்டிருந்தார்கள். கோவாவின் சுதந்திரப் போராட்டம், மலைவாழ் மக்களின் பிரச்சனைகள், தீப்பெட்டித் தொழிலாளர்கள், பெண் சிசுக்கொலை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் என்று நிறைய ராஜம்கிருஷ்ணன் எழுதியிருக்கிறார்கள். இதுமாதிரி விதிவிலக்குகள் எல்லாக் காலத்திலும் இருக்கத்தான் செய்கிறது.

தெ: பொதுவாக ஆண் ஆதிக்க உலகம் இது என்று சொல்லப்படுகிறது. இன்று பல்வேறு துறைகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக முன்னேறி வருகிறார்கள். ஆணாதிக்கத் தளைகளைத் தகர்ந்து சாதனைகள் படைக்கப் பல்வேறு போரட்டங்களை காண வேண்டியிருக்கிறது? இதைப்பற்றி உங்கள் கருத்து...

தி: என்னைப் பொறுத்தவரை ஆண்களைக் குற்றவாளிகளாகச் சொல்ல முடியாது. ஆண்களும் சரி, பெண்களும் சரி, காலம் காலமாகப் பெண் இப்படித்தான் இருக்க வேண்டும், பெண்ணின் இடம் வீடுதான், அவள் வெட்கப்படுபவளாக இருக்க வேண்டும், அவள் ஒரு தாயாக, மனைவியாக, மகளாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பெண்மையின் சிறப்பே அவள் தாய்மை அடைவதில்தான் இருக்கிறது என்கிற எண்ணம் இருக்கிறது.

வரலாற்று, கலாசார காரணங்களால் இவை பெண்களின் மீது திணிக்கப்பட்டன. அந்தக் காரணங்கள் மறைந்துபோன போது வாழ்க்கை முறையும் மாறியிருக்க வேண்டும். ஆனால் மாறவில்லை. மாறிவரும் எல்லா விஷயங்களையும் ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். வருமானம் வரும் எல்லா விஷயங்களையும் ஆண்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இல்லாததைப் பெண்கள் மேல் திணிக்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலமாக நாம் தேசத்தை நஷ்டத்திற்குள்ளாக்குகிறோம். மனிதசக்தியில் சரிபாதியை நாம் வீணாக்குகிறோம்.

ஒரு பறவை தன் ஒரு சிறகைக் கட்டிவைத்துவிட்டு, ஒரு சிறகால் பறந்தால் அந்தப் பறவைக்கு என்ன கஷ்டம் நேரிடுமோ, அப்படித்தான் ஆண்கள் குடும்ப வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆகையால் அவர்களும் பரிதாபத்திற்குரியவர்கள்தான். இங்கு குற்றவாளிகள் ஆண்கள் அல்ல; சில தவறான கருதோட்டங்கள்தான்.

அந்தக் கருத்தோட்டங்கள் மனுவின் காலத்தில் தோன்றியதாகச் சொல்கிறார்கள். மனுவையும் நான் குற்றம் சொல்ல நான் தயாராய் இல்லை. ஏனென்றால் அன்றைக்கு இருந்த போரிடும் சமூகத்தில் பெண் பலியாகிவிடக்கூடாது என்பதற்காக நியமிக்கப்பட்ட விஷயங்கள் அவைகள் எல்லாம். ஆனால் அந்த மாதிரியாக அரசர்கள் மோதுவது, இனக்குழுக்கள் மோதுவது போன்றவைகள் இன்றைக்குக் கிடையாது. இப்போதும் அன்றைக்குச் சொல்லப்பட்ட அதே நியாயங்களை, மரபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி வருவது பரிதாபகரமானது.

தெ: தலித் எழுத்தாளர்கள், ஜனரஞ்சக எழுத்தாளர், இலக்கிய எழுத்தாளர்கள் என்று எழுத்தாளர்கள் ரகவாரியாகப் பிரிக்கப்படுவது ஏன்? ஜனரஞ்சகமாக எழுதுபவர்கள் இலக்கிய எழுத்தாளர்களாகச் சிலரால் அங்கீகரிக்கப்படாதது ஏன்?

தி: எழுத்தாளர்களுக்குள் இத்தனை பிரிவுகள் வேண்டியதில்லை என்பதுதான் என்னுடைய அபிப்பிராயம். சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் எழுத்துகளைப் படித்துதான் நாங்கள் எழுத ஆரம்பித்தோம். சுஜாதா போன்றவர்கள் எல்லாம் பெரிய மேதைகள். பாலகுமாரன் கைகளில் இருக்கும் அந்த மொழிநடையும் வேகமும் ரொம்ப அற்புதமானது. அற்புதமான ஆற்றல் நிறைந்தவர் அவர். ஜனரஞ்சகமாக, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதுவதனாலுமே ஒருவர் தீவிர இலக்கியவாதி இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

வெகுஜன பத்திரிகைகளில் எழுதுவதில் வேறு சில சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட தேதியில் ஆரம்பித்து குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும் என்பதிலிருந்து, பக்கக் கணக்கு, நாங்கள் எதையும் வெட்டுவோம் என்று சொல்வது போன்ற சிக்கல்களை சொல்லலாம். இத்தகைய விஷயங்களுடன் எப்படி ஒருவரால் இணங்கிப் போக முடிகிறது என்பது ஒரு விஷயம். இரண்டாவதாக இன்று வெகுஜன பத்திரிகைகளில் எல்லாமே பலசரக்காக இருக்கின்றன. அதில் ஒரு பக்கத்தில் ஆபாசம், இன்னொரு பக்கம் ஆன்மீகம், ஒரு பக்கம் சமையல், கவிதை, கட்டுரை, மருத்துவம் என்று பக்கத்திற்குப் பக்கம் இருக்கும். இவற்றில் ரொம்பவும் மேலோட்டமாக விஷயங்கள் கையாளப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு இடத்தில் சமூகசிந்தனை உள்ள ஒரு நபர் இடம் பெறலாமா என்ற கேள்வியைத்தான் அவர்கள் வைக்கிறார்கள்.

ஆனால் ஒரு புத்தகம் என்றால் சுமார் 98 பக்கங்கள் இருக்கின்றன. அதில் சுஜாதாவின் கேள்வி பதில் வரும் பக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அவரது கற்றதும், பெற்றதும் பகுதி மிகவும் உபயோகரமாக இருக்கிறது. இப்படிப்பட்ட பயனுள்ள விஷயங்கள் அந்த 98 பக்கத்தில் நான்கு பக்கங்களை காப்பாற்றிவிடுகிறது அல்லவா? இந்த மாதிரிகூட நாம் பார்வையைத் திருப்பலாம்.

அதுபோல் சிறு பத்திரிகை நடத்துபவர்கள்கூடக் குற்றம் இல்லாதவர்கள் என்று சொல்வதற்கில்லை. அவர்களிடையே நிறைய குழுக்கள் இருக்கின்றன. அவர்கள் இருக்கின்ற இடம் சார்ந்து, இனம் சார்ந்து, சாதிகள் சார்ந்து, இவர் காலச்சுவடு குரூப், இவர் கணையாழி குரூப் என்று பத்திரிகைகளை சார்ந்து, பிறகு இவர் கரிசல் எழுத்தாளர், இவர் கொங்கு எழுத்தாளர் என்று வட்டங்கள் சார்ந்து நிறைய மோதல்கள் இருக்கின்றன. ஒருவரைஒருவர் தாக்கி எழுதுவது, காரசாரமாக விவாதம் செய்வது போன்றவைகள் எல்லாம் வருகின்றன.

எழுத்தாளர் இதற்கெல்லாம் அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவர் படைப்பாளியாக, மக்களுடைய குரலாக இருக்க வேண்டும். அடுத்து வரும் சமூகத்திற்கு, அடுத்து வரும் சந்ததிக்கு அவர்களது வாழ்க்கையை நாம் பிறந்த காலத்தில் இருந்ததைவிட இன்னும் கொஞ்சம் இனிமையானதாக ஆக்கிக்கொடுத்துப் போனவர்களாக இருக்க வேண்டும். எதிர்கால உலகத்திற்கான ஒரு ப்ளூ பிரிண்ட் போடுபவனாக இருக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இப்படியாக இயங்கக்கூடிய கட்டாயங்கள் எழுத்தாளர்களுக்கு உண்டு. அதை அவர்கள் உணராமல் எதற்கு இவ்வளவு பிரிவினைகள் என்று நான் நினைக்கிறேன்.
தெ: தலித் இலக்கியம் எழுதத் தலித் எழுத்தாளரால்தான் முடியும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் சுஜாதா போன்றவர்கள் தலித் எழுத்தை யார் வேண்டுமானாலும் எழுத முடியும் என்று சொல்கிறார்கள். உங்கள் நிலை என்ன?

தி: சுஜாதா சொன்ன கருத்துதான் என் கருத்தும். அவரவர்கள் அனுபவத்தைத் தான் அவரவர்கள் எழுத வேண்டும் என்றால் அதை டைரியில்தான் எழுதி வைத்துக் கொள்ள முடியும். படைப்பிலக்கியம் என்று வருகிறபோது, அதில் பல மனிதர்கள் வருவார்கள். உதாரணமாக டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' நாவலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் வருகிறார்கள். அதில் குழந்தையும் வருகிறது. கிழவனும் வருகிறார். வெளிநாட்டுக்காரரும் வருகிறார், உள்நாட்டுக்காரரும் வருகிறார். எல்லாமுமாக மாறக்கூடிய, எல்லாருடைய மனநிலைகளையும் அறியக்கூடிய அந்த விசித்திர ரசவாதம்தான் ஒருவரை எழுத்தாளராக ஆக்குகிறது.

ஒருவேளை நீங்கள் தலித்தாக இருந்தால் நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை அந்த விஷயங்கள் உங்களை இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும், திருத்தமாகவும், நுணுக்கமாகவும் சொல்வதற்கு வாய்ப்பிருக்கும். ஆனால் என் அனுபவத்தில் தலித் எழுத்துகளை நான் பார்த்தவரைக்கும், 'கண்டவர் விண்டதில்லை; விண்டவர் கண்டதில்லை' என்கிற நிலைதான். உண்மையாகவே தலித் வாழ்க்கையை வாழ்கிற யாருமே அதை எடுத்துச் சொல்கின்ற - எழுத்து வன்மை உடையவர்களாக இருப்பது கிடையாது. தலித் என்கிற முத்திரையில் எழுதுகின்ற பலபேர்கூட, அந்த தலித் வாழ்க்கையை வாழ்ந்தவர்களா என்று கேட்டால் நூறு சதவிகிதம் வாழ்ந்தவர்கள் கிடையாது. ஏனென்றால் அவர்கள் மேலே வந்துவிட்டார்கள். அவர்களுக்கு வேறுவிதமான வாழ்க்கைதான் கிடைத்திருக்கிறது.

அதுபோல் விதவைப் பெண்ணின் சோகம் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை பல நூற்றாண்டுகால வலி. ஆனால் அந்த வலியை முதன்முதலாகத் தமிழ்ச் சமூகத்திற்கு எடுத்து சொன்னது யார்? ஒரு வ.ரா.தான். அவர் விதவை இல்லையே. அவர் ஆண். அவர்தான் அந்த விஷயத்தை அழுத்தமாக சொன்னார். அதுபோல் பிரசவம் என்பது பெண்களுக்கே உரிய மிகமிக நுணுக்கமான ஒரு விஷயம். பிரசவத்தைப்பற்றிய விஷயத்தை சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடனில் வைரமுத்து எழுதியிருக்கிறார். இது எப்படி இவர்களுக்குச் சாத்தியமாயிற்று.

ஆக, என்னை கேட்டால், எழுத்து வன்மைகொண்ட அவ்வளவு எழுத்தாளர்களும் தலித்திற்கான சமூக உரிமையைப் பெற்றுத் தருகிற வரையிலும் நாங்கள் வேறு எதையுமே எழுத மாட்டோ ம் என்று ஒரு சபதம் எடுத்துக் கொண்டு எழுதி, தீண்டாமைக் கொடுமையை அழித்துவிடவேண்டும். இது எவ்வளவு பெரிய மோசமான விஷயம் என்பதை தங்கள் கைவசம் இருக்கக்கூடிய அத்தனை கலைப்படைப்புகளின் மூலமாகவும், அத்தனை நுண்கலைகளின் மூலமாகவும், அவர்கள் இனி வருகிற அடுத்த பத்தாண்டுகளுக்கு அதையே செய்ய வேண்டும்.

இன்றைக்குத் தீண்டாமை எவ்வளவு ஆழமாக வேர் பாய்ந்திருக்கிறது என்று சொன்னால், பேனா பிடித்திருக்கிற, தூரிகை பிடித்திருக்கிற, வீணையைக் கையில் வைத்திருக்கிற அவ்வளவு பேரும் சேர்ந்து இயங்கி இந்த விஷயத்தைக் கிண்டி, கிளறி அந்த வேர்களைப் பிடுங்கி வெளியில் எறிய வேண்டும் என்றெல்லாம் நான் ஆசைப்படுகிறேன். இதை விட்டுவிட்டு அதை நான்தான் எழுதுவேன், நீ எழுதக்கூடாது என்று சொல்வது சரியல்ல.

இதை நான் பரிவோடு பார்க்கிறபோது தலித் எழுத்தாளர்களின் சிந்தனைகளும் எனக்குப் புரிகிறது. என்னவென்றால் இந்தச் சமூகம் அவர்களைப் படுத்தி வைத்ததில், அடுத்தவர்கள் என்று சொன்னாலே அவர்கள் மனதில் அச்ச உணர்வு - அதாவது இந்த இலக்கியத்தின் உள்ளேகூட நமக்கான பரப்பில் சுதந்திரமாக இயங்கவிடமாட்டேன் என்கிறார்களே, நமக்குத் தெரிந்ததெல்லாம் இந்த வாழ்க்கைதான். இதையும் நான் எழுதுவேன் என்று சொன்னால் அப்போது நாம் எதை எழுதுவது என்று நினைக்கிறார்கள்.

சுஜாதாவை எடுத்துக் கொண்டால் அவர் உட்கார்ந்த இடத்திலேயே கம்ப்யூட்டர் சில்லுகளைப் பற்றி எழுதுகிறார். கனவு ஏன் வருகிறது என்பதைப் பற்றி எழுதுகிறார். சில நேரம் அகில இந்திய அரசியலைப் பற்றி பேசுவார். இதையும் தாண்டி குலசேகர ஆழ்வார் பற்றியும் முதலிலிருந்து கடைசிவரை சொல்லுவார். இப்படியாக இருக்கக்கூடிய ஒரு மனிதர் நான் தலித்தையும் எழுதுவேன் என்று சொன்னால், தலித்தாக இருக்கிற நான் என்ன செய்வேன்? இந்த ஆதங்கம் அவர்களிடையே இருக்கிறது.

தெ: நீங்கள் தேடித்தேடி புத்தகங்கள் படித்தீர்கள். அன்று வாசிக்கும் பழக்கும் பரவலாக இருந்தது. தற்போது பெருகிவரும் தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் படிக்கும் நேரத்தை விழுங்கி விடுகிறதோ? இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டதோ என்றும் தோன்றுகிறது. இதைப் பற்றிய உங்கள் கருத்து...

தி: உங்களது கவலை எனக்கு புரிகிறது. ஆனால் நீங்கள் இவ்வளவு கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றுதான் நினைக்கிறேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகச் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் விற்பனை நன்றாக இருந்தது ஒரு முக்கியமான விஷயம். அதுமட்டுமல்லாமல் இப்போது நிறையத் தமிழ் புத்தகங்கள் வெளிவருகின்றன. அவை உலகத் தரம் வாய்ந்தவையாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன; நல்ல விலைக்கும் விற்பனையாகின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்று சில இருப்பது போல், வாசிப்பு என்பதும் ஒரு அடிப்படைத் தேவையாக அவனுக்கு இருக்கிறது. எந்த விஷயமும் புத்தகத்திற்கு மாற்றாக வந்துவிட முடியாது. அவ்வளவு செளகரியமாக, அவ்வளவு வசதியாக வாசிக்கும் அனுபவத்தைத் தரக்கூடிய வேறு ஒரு ஊடகம் இன்னும் வரவில்லை.

இருந்தாலும்கூட இளைஞர்களின் படிக்கும் ஆர்வம் இன்னும் கொஞ்சம் அதிகரித்தால் நன்றாக இருக்கும். அதுபோல் பெண்களின் தொலைக்காட்சி மோகம் புத்தகங்களை நோக்கித் திரும்பினால் நன்றாக இருக்கும். சமீபத்தில் நான் கேரளாவிற்குச் சென்ற போது அங்கு எழுத்தாளர் பால் சக்கரியாவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னிடம் கேரளாவில் நூலக இயக்கம், வாசிப்பு இயக்கம் என்கிற இரண்டு இயக்கத்தைத் திட்டமிட்டு முன்னின்று நாங்கள் நடத்தினோம். அதன் மூலம் வாசிக்கும் தன்மையை ஊக்குவித்தோம் என்றார். எந்த முறைகளில் அவர்கள் செய்தார்கள் என்பதை மற்ற அமைப்புகளும் பயின்று கடைப்பிடித்தால் வாசிக்கும் பழக்கத்தை அதிகப்படுத்தலாம்.

நாங்கள் ஐ.ஏ.எஸ். படிப்புக்குத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது எங்கள் ஆசிரியர் ஒருவர் திங்கள் முதல் வெள்ளி வரை அதற்கான பாடங்களைப் படிக்கச் சொல்வார். சனிக்கிழமை ஒருநாள் முழுக்க சென்னையில் இருக்கும் புகழ்பெற்ற நூலகங்களில் சென்று படிக்கவேண்டும் என்பார். அதனால் பெரிய பயன் இருந்தது. அதுவரைக்கும் நூலகங்களுக்குப் போகும் பழக்கம் இல்லாதவர்கள்கூட அதன்பிறகு நூலகம் செல்வதைப் பழக்கமாகக் கொண்டார்கள். பள்ளியில் படிக்கும் சிறுவர்களுக்கும் நூலக வகுப்பு என்று ஒன்றை நாம் வைக்கலாம். இதன் மூலம் வாசிப்புப் பழக்கம் அதிகரிக்கும்.

நுகர்வோர் கலாசாரம், விளம்பரக் கலாசாரம் போன்றவை மறைமுகமாக மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. தேவைக்கதிகமான பொருட்களை வாங்க வேண்டும்; அந்தப் பொருட்களைத் துரத்த அதிகப்படியான பணம் கையில் இருக்க வேண்டும். அதைச் சம்பாதிப்பதற்கு பெரிய வேலைக்குச் செல்ல வேண்டும். அந்த வேலைக்கான படிப்பை நாம் படித்து அதில் அதிகமான மதிப்பெண் பெற வேண்டும். ஆகையால் பாடம் படிக்கிற நேரத்தை வேறு இலக்கியப் படிப்புக்குத் திருப்பிவிடக்கூடாது என்று நினைக்கிறார்கள். இது 'கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிய கதை'யாகிறது. இவர்களுக்கு பணம் கிடைக்கும். ஆனால் வாழ்க்கை கிடைக்காது. பொருள் கிடைக்கும். ஆனால் மகிழ்ச்சி கிடைக்காது. இவர்கள் வாங்கக்கூடிய அவ்வளவு பொருட்களும் இவர்களது புறவாழ்க்கையை வசதியுள்ளதாக ஆக்கும். ஆனால் மனம் அமைதி இழந்ததாக இருக்கும். இதனைச் சரி செய்வதற்கு இலக்கியத்தைத் தவிர வேறு மருந்தே கிடையாது. இதை நாம் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். புரிய வைக்க வேண்டும்.

தெ: தமிழகத்தில் சமீபகாலமாகத் தமிழ்மொழிப் பாதுகாப்பு, கலாசாரம், தாய்மொழி என்று நிறையப் பேர் பேசி வருகிறார்கள். தாய்மொழிக் கல்வியின் அவசியம் பற்றி உங்கள் கருத்து...

தி: குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வி தாய்மொழி வழியேதான் இருக்க வேண்டும். தாய்மொழிக் கல்விக்கு ஈடே கிடையாது. தாய்மொழி மூலம் விஷயங்களைத் தெரிந்து கொள்வது மனசில் படிமானமாக இருக்கும்; இயல்பானதாக இருக்கும். அது ஒரு குழந்தைக்கு அதிகப்படியான சுமையாக இல்லாமலும் இருக்கும். அப்புறம் அந்தக் குழந்தைக்கு எட்டு அல்லது பத்து வயது ஆகும் போது பெற்றோர் வாழ்க்கை, குழந்தையின் ஆர்வங்கள், திறமைகள் போன்றவற்றை அனுசரித்து வேறு மொழியைப் பயிற்றுவிக்கலாம். உலகத்தின் ஜன்னல் என்று சொல்லப்படும் பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற மொழிகளைக் கற்றுக் கொடுக்கலாம். அதன் பிறகு இந்தியா முழுவதும் சுற்றி வருவதற்கு செளகரியமாக இருக்கக்கூடியதான ஒரு மொழியையும் கற்றுக் கொடுக்கலாம். இப்படிச் செய்து கொடுத்துவிட்டால் குழந்தைக்குப் பிற்கால வாழ்க்கை செளகரியமானதாக ஆகிவிடும்.

இதை நான் என்னுடைய அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன். நான் படித்தது எல்லாம் தமிழ் மீடியம் பள்ளியில்தான். கல்லூரி வந்த பிறகுதான் ஆங்கில மீடியத்திற்கு மாறினேன். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் எங்களுக்கு ஆங்கிலம் போதிக்கப்பட்டது. அதன் பிறகு கொஞ்சம் பிரான்ஸ் மொழி, சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளை கற்றுக் கொண்டேன்.

தெ: பல்வேறு நாவல்களைத் தமிழில் நீங்கள் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள். உங்கள் மொழிபெயர்ப்பு அனுபவங்களைச் சொல்லுங்கள்...

தி: என்னுடைய படைப்புகளைப் படைத்து முடித்த பிறகு, அதை மீண்டும் படிக்கும்போது ஒரு நிறைவற்ற மனநிலையிலேயே தான் இருப்பேன். இந்த விருதுபெற்ற 'கல்மரம்' உள்பட என் அனுபவம் அதுதான். இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாமே என்று தோன்றும். நிறைகளைவிடக் குறைகள் தான் அதிகம் தோன்றும்.

ஆனால் மொழிபெயர்ப்புகள் எப்படி நான் செய்கிறேன் என்றால், நான் முன்பே சொன்னது போல் அடிப்படையில் நான் ஒரு வாசகி. எழுத்தாளராக ஆனது பின் நாளில்தான். மிகச் சிறந்த விஷயங்களைப் படிக்கிறபோது, இதைப் படிக்க முடியாத தமிழ்ச் சகோதரர்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற ஆவல் தோன்றும். அந்த ஆவலினால்தான் நான் அந்த நாவலை மொழிபெயர்க்கிறேன். அதனால் மிகச்சிறந்த படைப்புகளைத்தான் நான் மொழிபெயர்ப்புக்காகத் தேர்ந்தெடுக்கிறேன். அதில் எனக்கு மாற்றுக் கருத்தே கிடையாது.

சமீபத்தில் நான் மொழிபெயர்த்ததில் எனக்கு ரொம்பவும் பிடித்த நாவல் 'பிறவாத குழந்தைக்கு ஒரு கடிதம்'. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓரியாநா பெலசி என்கிற பெண் எழுத்தாளர் எழுதியது. இப்போது அவர் அமெரிக்காவில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்தக் கதையின் நடை, கதை சொல்லியிருக்கிற முறை அருமையானது. ஒரே வரியில் எழுதக்கூடிய கதைதான் அது. ஒரு பெண் கருவுற்றிருக்கிறாள். அந்தக் குழந்தையை பிரசவிக்க வேண்டுமா? இல்லை கருவிலேயே அழித்து விட வேண்டுமா? அந்தப் பெண் மனதில் ஒரு குழப்பம். இந்த விஷயத்தை மிக அருமையான நாவலாக எழுதியிருக்கிறார் அந்த அம்மையார்.

எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு நாவல் விபூதிபூஷண் பந்தோபாத்யாவின் 'அபராஜிதம்' ஆகும். அதை நான் மொழிபெயர்த்து சாகித்ய அகாதமிக்குப் பதிப்பிக்கக் கொடுத்திருக்கிறேன். இந்த புத்தகம் எழுதப்பட்டு 80 ஆண்டுகாலம் ஆகிறது. உலகப்புகழ் பெற்ற 'பதேர் பஞ்சாலி', 'அபுசன்', 'அபராஜிதம்' ஆகிய மூன்றையும் சத்யஜித் ராய் வங்காள மொழியில் மூன்று திரைப்படங்களாக எடுத்தார். ஆனால் என்னுடைய அனுமானத்தில் இந்த விபூதிபூஷன் படைத்திருக்கிற 'அபராஜிதம்' சத்தியஜித் ராய் படைத்திருக்கிற அபராஜிதத்தைவிடப் பல மடங்கு வளமுடையவன், செறிவுடையவன், அறிவுடையவன் என்று சொல்லாம். சத்யஜித்ரே மாதிரி ஒரு மேதையினால்கூட, இரண்டு மணிநேரம் ஓடக்கூடிய அந்த செல்லூலாயிட் சுருளுக்குள் அவனை அடக்கமுடியவில்லை. அவ்வளவு அழுத்தமான படைப்பு அது. இன்றைக்கு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்களை மிகுந்த கலைத்தன்மையுடன் சொல்கிறது.

அந்த ஒரு புத்தகத்தை நீங்கள் படித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு நீங்கள் சுயமுன்னேற்ற நூல்கள் எதையுமே தொடவேண்டியதில்லை. அடுத்தவேளை சாப்பாட்டிற்கு இல்லை; நேசித்தவர்கள் அவ்வளவு பேரும் மரணமுறுகிறார்கள்; வறுமை கொல்கிறது; போய் நிற்பதற்கு நிழல் இல்லை என்ற நிலைமையில்கூட ஒருவன் வாழ்க்கையை ரசிக்கிறான்; வாழ்க்கையை வாழ்கிறான்! வாழ வேண்டும் என்று நினைக்கிற மனத்தை உருவாக்கக்கூடியது அபராஜிதம் என்கிற அந்த நாவல். அதனால் அப்ராஜிதம் நாவலை எல்லோரும் படித்தாக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. எண்ணம் வந்தவுடன நானே இந்தப் புத்தகத்தை மொழிபெயர்த்து தருகிறேன் என்று சாகித்ய அகாதமியிடம் கேட்டுக்கொண்டேன். அதற்காக வங்காள மொழியைக் கற்றுக் கொண்டேன். வங்காள ஆசிரியரையும் ஒத்தாசைக்கு வைத்துக் கொண்டு இதைத் தமிழுக்குக் கொண்டு வந்தேன்.

தெ: சிற்றிதழ்கள் பற்றிய உங்கள் கருத்து...

தி: வரவேண்டியதுதான். அதில் தவறு இல்லை. பல்வேறு விதமான வாசிப்புத் தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதுபோல் பல்வேறு படைப்புத் தேவை உள்ளவர்களும் இருக்கிறார்கள். இத்தனை பெரிய ஜனத்தொகை கொண்ட நம் நாட்டில் சிற்றிதழ்கள் ஆயிரம் பிரதிகளை அடித்துக் கொடுப்பது ஒரு பெரிய கடலில் ஒருதுளியில் அணுத்துளி என்றுதான் சொல்ல வேண்டும். நியாயமான முறையில் சந்தோஷப்பட்டுக் கொள்வதற்கு அவர்களுக்கான இலக்கியத்தை அவர்கள் படைத்துக் கொள்கிறார்கள். இதில் யாருக்கும் இடையூறு இல்லையே...

தெ: எழுத்து, அலுவலகப் பணி, குடும்பம் என்று ...

தி: எல்லோருக்கும் இருக்கின்ற 24 மணிநேரம்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால் அந்த 24 மணி நேரத்தை பயன்படுத்துகிறார்களா என்பது அவரவர்களுக்கே தெரியும். ஆரோக்கியமான மனிதன் ஆறு மணி நேரம் தூங்கினாலே போதும். மீதி 18 மணிநேரம் இருக்கிறது. அந்த 18 மணிநேரம் உழைக்க வேண்டும் என்பதைப் பழக்கமாக வைத்திருப்பவள் நான். அலுவலகப் பணி முடிந்தவுடன் மாலை அல்லது இரவில் இலக்கியப் பணிகளுக்காக நேரம் செலவிடுவேன். என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தை என் பெற்றோர்கள் கவனித்துக் கொள்கிறார்கள்.

தெ: 'அம்ருதா' புத்தக நிறுவனம் பற்றி....

தி: இப்பதிப்பகம் என் மகன் டாக்டர் பிரபு திலக், தனது சில நண்பர்களுடன் இணைந்து துவக்கியிருக்கிறார். தமிழ்ப் புத்தகங்கள் வெளிநாட்டுப் புத்தகங்கள் போலத் தரமாக அச்சிடப்பட வேண்டும், அதே சமயம் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்று பாரதி நினைத்தார். அதை நனவாக்கும் வகையில் 'அம்ருதா' புத்தக நிறுவனம் செயல்படும். லாபநோக்கம் இல்லாமல் நல்ல பல நூல்களை வெளியிட வேண்டும் என்ற இலக்கைக் கொண்டு துவங்கப்பட்டுள்ளது.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
Share: 




© Copyright 2020 Tamilonline