Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
வருகை
- விட்டல்ராவ்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeகோயிந்தனை இன்னும் காணோம். அழைத்துவரச் சென்ற மாதுவும் வரவில்லை. போன மாதமே மாது போய்விட்டு வந்தான். ஊருக்குக் குடும்பத்தோடு போனவன் திரும்பவில்லையென்று வந்து சொன்னான் மாது. அதற்கப்புறம் பத்து நாள் கழித்து மறுபடியும் அனுப்பியபோதும் இன்னும் வரவில்லையென்றுதான் மாது வந்து சொன்னான். மாதுவின்மேல் நாணுப் பாட்டிக்கு அவ்வளவாக நம்பிக்கை கிடையாது - படவா பொய் சொல்லுவான் - என்று சொல்லிக் கொள்ளுவாள்.

போன மாதம் மாதுவை கோயிந்தனின் வீட்டுக்கு அனுப்பியதுகூட அவன் வழக்கமாய் இங்கு வரும் நாள் கழித்துதான். கோயிந்தனைப் போய் அழைத்து வர வேண்டியதில்லை. இதுவரை அப்படிச் செய்ததில்லை. அவனுக்கே தெரியும் எல்லாம், நேரம் தெரிந்தவனாக நாள் தெரிந்தவனாக சரியாய், கணக்காய் பிசகாமல் அவனே காலையில் வந்து நிற்பான். அவன் வருவான் என்பதில் எந்தவித ஐயமுமில்லாமல் நாணுப் பாட்டியும் தயாராக இருப்பாள். அந்த மாதிரியாக இருந்து வந்த ஒரு நாள், ஒரு நேரம், போன மாதத்திலிருந்து தப்பியிருக் கிறது. போன மாதத்தில் தப்பிப்போன அந்த நாளோடு அந்த நேரத்தோடு தன்னோடு சம்பந்தப்பட்ட ஏதோ ஒருவித பாரம்பரியம் இற்றுப் பிய்ந்துவிடுவதாகத் தோன்றியது நாணுப்பாட்டிக்கு.

கிணற்றுக்கருகிலிருக்கும் கறிவேப்பிலை மரத்தடியில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக உட்கார்ந்திருந்தாள் பாட்டி. அப்படி உட்கார நேரும் சந்தர்ப்பத்தில் எதைப் பற்றி யெல்லாமோ நினைத்துப் பார்ப்பது போலவே அந்தக் கறிவேப்பிலை மரத்தைப் பற்றியும் நினைத்துப் பார்ப்பாள். அவளே வைத்து வளர்த்த மரம் அது. அவளுடைய பிள்ளை, மாட்டுப்பெண், பேத்தியெல்லாம் எத்தனை யோ தடவை வைத்துப் பார்த்துவிட்டார்கள். கறிவேப்பிலை வரவேயில்லை. முதலில் இவளுக்கும் வராமலிருந்து பிறகுதான் தழைத்தது. அது பெரிதாயிற்று. அதன் வேரிலிருந்து இடம் விட்டு இடம் நிறைய கன்றுகள் தோன்றி வளர்ந்து பெரியதாகி விட்டன. கிணற்றைச் சுற்றி சுமார் வளர்ச்சியில் பத்துப் பன்னிரண்டு கறிவேப்பிலைச் செடிகள் - மரம்போல் வளர்ந்து கிடந்தன. அந்த வீடு நூறு வருஷத்துக்கு முன் கட்டப்பட்டது என்பார்கள். அவ்வப்போது அங்கங்கே இடித்து இடித்து அவரவர் மனப்போக்குப்படி புதுப்பிக்கப்பட்டு வந்திருக்கும் அந்த வீடு தான் ஆதியிலிருந்த தோற்றத்தை ஏறக்குறைய முற்றிலும் இழந்து விட்டது. வெளிப்புறத்தில் நவீன அழகுத் தாவரங்கள் சட்டிகளில் ஏகமாய் இடம் பெற்றிருந்தன. அவற்றைப் பற்றி ஏதுமறியாத நாணுப்பாட்டிக்கு கறிவேப்பிலையைப் பற்றி மிகவும் நன்றாகத் தெரியும்.

ஒனக்கோசரந்தான் நாராயணம்மா. கை நடுங்கினாலும் சமாளிச்சிட்டு வந்திடறேன். காசுக்குன்னு இல்லே. ஒரு தொந்தம் பாரு. நம்ப ரண்டு பேரும் இஸ்கூல்லயிருந்தே பளகனவங்க.
'சாதாரணமாக ஆரு தொட்டு வச்சாலும் வந்துடாது இது. சில கை பட்டாத்தான் வரும்' என்று சொல்லிக் கொண்டே ஒரு கன்றைப் பிடுங்கி வேறொரு புறமாய் நட்டு வைப்பாள். அவள் கைராசிக்கு அது வளர்ந்து தழைக்கும். எத்தனையோ பெண்களுக்கு அவள் கறிவேப்பிலைக் கன்று எடுத்துக் கொடுத்திருக் கிறாள். பெரும்பாலும் வராமல் கருகிப் போயிருக்கும். பிறகு அவளே ஒன்றைத் தன் கையால் எடுத்துப் போய் நட்டு இரண்டு நாட்களுக்குத் தண்ணீர் விட்டுவிட்டு வருவாள். பற்றிக் கொள்ளும்.

நாணுப்பாட்டி முக்காட்டை தள்ளிக் கொண்டு மண்டையை மெதுவாகக் கோதிக் கொடுத்தாள். அரித்தது. சொறிந்துவிட்டாள். முழுக்க நரைத்தது. சீப்பு கொண்டு எடுக்காமலேயே நட்ட நடுவில் அப்படியொரு வகிடு, அதில் ஓரங்குலத்திற்கும் மேலேயே காணும் விளைச்சல்.

முக்காட்டை முன்போலவே இழுத்துத் தலையை மூடிக் கொண்டாள்.

பாட்டிக்கு என்ன வயதிருக்கும் என்று சமீபத்தில் யாரோ கேட்டார்கள். யாரது என்று யோசித்து பார்த்தாள். நினைவுக்கு வர வில்லை. யாரோ அதற்குத் தப்பாகச் சொல்லி வைத்தார்கள். அவளுக்கு என்ன வயதென்று யாருக்குமே சரியாகத் தெரியவில்லை. இதனால் விளைந்த குழப்பமோ என்னவோ நாணுப்பாட்டிக்கும் தன் சரியான வயதுக் கணக்கில் இப்படிப் படிப்படியாகச் சந்தேகம் வருகிறது.

அவளுடைய தோளில் ஏராளமாய்ச் சுருக்கங்கள். மிகவும் ஸ்தூலமாயிருந்தவள். இப்போது தசைத் தொங்கல்களும் தோல் சுருக்கங்களுமாய், இந்தத் தோற்றத்தைக் கண்டு திகில் கொண்டோ என்னவோ அவளை யாரும் சாதாரணமாய் வயது விவரம் கேட்பதில்லை.

அவளுடைய தலையில் தண்ணீரை நளினமாய்த் தெளித்து கத்தியை மிக மென்மையாக ஓட்டி--ஒரு கழுகு இறகால் தரையைப் பெருக்குவது போன்ற மென்மையும் ஓசையும் கூடியதாக--மழித்துக் கொண்டே கோயிந்தன்தான் கேட்டான்:

'நாராயணம்மா, இப்ப என்ன வயசாவுது?'

வெட்கம் வந்துவிடும். எல்லாம் நின்று வற்றிப்போய் தணிந்து காய்ந்து சுருங்கிப் போயும் கொஞ்சமே ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தப் பெண். வெட்கம் ஆகாரமும் மூச்சும் உள்ளே போய்க் கொண்டிருக்கும் வரை அடங்கியொழியாது போலும்.

'ஒன்னோட வயசுதானேயிருக்கோணும் நேக்கும்' என்பாள் கண்களை மூடியவாறு.

சட்டென்று கோயிந்தனுக்குக் கைகள் நடுங்கத் தொடங்கும். வேலையைச் சற்று நிறுத்திக் கொள்வான்.

அவனுக்கும் அவளுக்கும் இன்னொரு வகையிலும் ஒற்றுமையுண்டு. அவள் தெருவில் வந்து கொண்டிருக்கும் போது வீட்டை விட்டு வெளியில் புறப்படுபவரகள் அவள் எதிர்ப்படுவதை விரும்பாத காலம் அது.

பிணம் வந்தால் நல்ல சகுனம். ஆனால் சகேசி, ஒற்றைப் பிராமணன், புதுச்சட்டி, எண்ணெய்க்காரன், நாவிதன் இதெல்லாம் எதிர்ப்படுவது கெட்ட சகுனம் என்றிந்த போது கோவிந்தனும் அவளும் ஒன்று. இப்போது இருவருமே அந்தக் கொடுமையிலிருந்து மீண்டுவிட்டார்கள். சகுனம் பார்த்து வெளியில் புறப்படும்படியாக அலுவல், தொழில், போக்குவரத்து வசதி எதுவுமில்லை. மேலும் வளர்ந்த ஞானம் அதைப் புறக்கணித்துவிட்டது.

நாணுப்பாட்டிக்கு மீண்டும் தலையில் அரிப்பெடுத்தது. 'ஐந்தாம் வகுப்பு'டன் அவளுடைய படிப்பு நின்று விட்டது. அனேகமாய் கோயிந்தனும் பள்ளிக்கூடத்தை விட்டு அப்போது நின்றவன் தன்னுடைய தோப்பனோடு தொழிலில் உதவியாய் சுற்றத் தொடங்கிவிட்டான். காலாகாலமாய் தலைமுறைக் கணக்குப் பேசிக்கொண்டு அந்தத் தெருவில் கோயிந்தன் முன்னோர்கள் பண்டிதம் செய்து வந்தவர்கள். முடி திருத்தகங்கள் தோன்றி நாகரிக சிகையலங்காரம் மிகுந்துவிடவும், தெருவில் அலைந்து செய்யும் தொழில் மறையத் தொடங்கிவிட்டது. பழைய மனிதர்கள் தாம் கொண்டு வந்த அனுஷ்டானங்களுக்கும் கொள்கைகளுக்குமாய் வீட்டிலிருந்தவாறே கோயிந்தன் சமூகத்தை எதிர்பார்க்க வேண்டியிருந்தது.

நாணுப்பாட்டி முக்கி முனகி எழுந்து நின்று கொண்டாள். இன்னும் கோயிந்தனைக் காணோம். மாதுவையும் காணோம். இந்த மாது எப்போதும் இப்படித்தான். எங்கேயாவது எதற்காகவது போய்வாவென்று அனுப்பி வைத்தால் அதுதான் சாக்கென்று ஊர் சுற்றுவது. ஒருவேளை முன்பே யோசித்து முடிவு செய்தது போல் ஊரைப் பார்க்கப் போனவன் இன்னும் திரும்பவில்லையோ என்னவோ என்றும் கூடவே நினைத்தாள் பாட்டி.

குளிக்க வேண்டும் போலிருந்தது. அது அவள் தினமும் குளிக்கும் நேரம் தான். கிணற்றிடியிலேயே உட்கார்ந்து குளித்து விடுவாள். இப்போது குளிக்காவிட்டால் அப்புறம் கோயிந்தன் வந்துவிட்டுப் போனால் மறுபடியும் குளித்தாக வேண்டும். எனவே குளியலைத் தள்ளிப் போடவேண்டியிருந்தது.

ஐந்தாம் வகுப்பு படிக்கையில் பள்ளிக்கூடத்தில் நொண்டி விளையாட்டின் போது கால்விரல் நகம் பெயர்ந்து ரத்தம் வந்து விட்டது. அவ்வளவு ரத்தத்தைத் தன் உடம்பிலிருந்து அவள் அதுவரை பார்த்ததில்லையாதலால் மிரண்டும் போனாள். கோயிந்தன் ஏதோ துணியைத் தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்து கட்டுக் கட்டினான். ஒருமுறை சூறைக்காற்று கண்ணில் தூசு விழுந்துவிட்டது. அவன்தான் தன் சட்டையின் நுனியை வாயிலடைத்து ஊதி வெது வெதுப்பாக்கி அவளுடைய தூசு விழுந்த கண்ணில் வைத்து ஒற்றியொற்றியெடுத்தான்.

அதற்கப்புறம் அவள் வீடே கதியென்று உட்கார்ந்ததிலிருந்து கல்யாணமானபோது கூட கோயிந்தனைப் பார்த்ததில்லை. எத்தனையோ வருஷங்களுக்குப் பின் அவர் காலமான பிறகு நாணுப்பாட்டி இந்தக் கோலத்தில் இங்கு வந்துவிட்ட பிறகுதான் கோயிந்தனின் வருகை ஏற்பட்டது. ஒருமுறை அவன் கூறினான்:

'நானும் இந்தத் தொழிலைப் பண்ண வேண்டிதேயில்லேம்மா. ஒரு பையன் எலெக்டிரிக் ஆபிசிலே வேலை பாக்கறான். இன்னொரு பையன் பெரிய சலூன் வச்சி அஞ்சுபேரைப் போட்டு வேலை வாங்கறான். ஒரு சவரத்துக்கு ஒரு ரூபா வாங்கறான். கட்டிங்குக்கு அஞ்சு ரூபா.'

அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது.

'பின்னே எதுக்கு இன்னும் இந்தத் தொழிலைப் பார்க்கணும் நீ?' என்று கேட்டாள்.

அவன் சாவதானமாகச் சொன்னான்.

'ஒனக்கோசரந்தான் நாராயணம்மா. நா வராட்டி ஒனக்குப் பண்டிதம் பண்ண இப்பத்திக்கு இந்தூரில ஆரு இருக்கா? கை நடுங்கினாலும் சமாளிச்சிட்டு வந்திடறேன். நீயொண்ணு, அங்கொரு வூட்டுல இன்னொரு அம்மா அவ்வளோதான். காசுக்குன்னு இல்லே. ஒரு தொந்தம் பாரு. நம்ப ரண்டு பேரும் இஸ்கூல்லயிருந்தே பளகனவங்க.'

பாட்டிக்கு கண்கள் துளிர்த்துவிட்டது.

மாது வந்துவிட்டான். நாணுப்பாட்டி அவசர அவசரமாக உட்கார்ந்து முக்காட்டை அகற்றி மார்போடு சேர்த்துப் போர்த்தி மூடிக் கொண்டாள்.

'வந்தாச்சாடா?' என்று கேட்டாள்.

'கூட்டுண்டு வந்துட்டேன்' என்று அலட்சியமாய்க் கூறிவிட்டு உள்ளே ஓடிவிட்டான் மாது. பாட்டி நிமிர்ந்து பார்த்தாள்.

கோயிந்தன் இல்லை.
நீ யாரப்பா? கோயிந்தன் வர்லயா?'
அவரு போன மாசம் தவறிப் போயிட் டாருங்கம்மா. நா அவரோட ரண்டாவது புள்ளை.
இவன் வேறு யாரோ, லுங்கியும் பூப்போட்ட சட்டையும் முரட்டுத்தனமாய் கிருதாவும் மீசையும் ஒருவித பழைய காலப்பாணியில் பரட்டைத் தலையுமாய், பெரிய வாட்சு, மோதிரமெல்லாம் துலங்க வாட்ட சாட்டமாய் நிற்கும் இளைஞனைப் பார்த்தாள். உடனே சட்டென்று மார்பில் சுற்றிப் போர்த்தியிருந்த புடவையை சட்டென்று இழுத்து தலையை மறைத்து முக்காடிட்டுக் கொண்டு விட்டாள்.

'நீ யாரப்பா? கோயிந்தன் வர்லயா?'

'அவரு போன மாசம் தவறிப் போயிட்டாருங்கம்மா. நா அவரோட ரண்டாவது புள்ளை.'

சட்டென்று நெஞ்சையும் அடைத்துக் கொண்டது பாட்டிக்கு. கொஞ்ச நேரம் மெளனமாயிருந்துவிட்டு கேட்டாள் வேக வேகமாய்.

'சொல்லு. சொல்லு. எப்படிச் செத்தான்? எனக்கு யாருமே வந்து சொல்லலையே?'

'ஊருக்குப் போயிருந்தப்போ மார்வலியில போயிட்டாரு. பத்து நாளைக்கு முன்னாலே ஒங்கூட்டுப் பையன் வந்திச்சி சொல்லி வுட்டேம்மா. ஐயா போயிட்டாரு, நாந்தான் வர்ணும்னு. நா டவுனில பெரிய சலூன் வச்சிப் பார்த்துக்கறேன். வுட்டிட்டு வர்றது கஸ்டம். அதான் வர்லே...'

நாணுப்பாட்டிக்கு முதலில் துக்கமும் பின்னர் மாதுவின் மேல் அசாத்திய கோபமும் வந்தது. ஒரு கணம் எல்லாமே அர்த்தமற்றுப் போனாற்போல இருந்தது.

'வூட்டுக்கு வந்து செய்யறதுக்கெல்லாம் வேறே ரேட்டுங்கம்மா...' என்றவாரே அவன் தன் கான்வாஸ் பையின் ஜிப்பைத் திறக்க முற்பட்டான்.

அப்போது நாணுப்பாட்டிக்கும் வைராக்யம் போன்றதொரு தீர்மானம் வந்துவிட்டது.

ஏதோ சொல்ல வந்தவள் உடனே சட்டென்று தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை வழிமறித்தாற் போல் சொன்னாள்.

'வாண்டாம்பா, நேக்கு வாண்டாம், நீ போய்க்கோ'

'ஏங்கம்மா? வரச்சொல்லிபிட்டு...' என்றான் அவன் சினத்தோடு.

'கோயிந்தன் வந்திண்டு போயிண்டிருந்தான் பாவம், வந்து போனது இதை விடப் பெரிய விஷயம், ம்... அது ஒரு காலம், அது அவ்வளோதான். நீ போ...' என்று சொல்லிவிட்டு அவனுடைய கோபமான முகத்தைப் பார்க்காமல் எழுந்து குளிக்கத் தயாரானாள்.

கோயிந்தனின் மகன் முணுமுணுத்துக் கொண்டே போய்விட்டான்.

ஏதோ மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே நாணுப்பாட்டி ஜில்லென்று முதல் வாளித் தண்ணீரை தலையில் ஊற்றிக் கொண்டாள்.

விட்டல்ராவ்
Share: 


© Copyright 2020 Tamilonline