Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சமயம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | இதோ பார், இந்தியா!
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
கடன்
- எஸ். பொன்னுத்துரை|நவம்பர் 2007|
Share:
Click Here Enlargeஇரவு ஒன்பது மணிக்குப் பிள்ளையார் கோயில் மணியும் அடித்துவிட்டது.

இலேசாகத் தென்றல் வீசிக்கொண்டிருந்தது. அழகுக்கு அழகு சேர்த்ததுபோல ஆகாயத்தில் நிறைநிலா பவனிவந்து கொண்டிருந்தது.

கதாசிரியர் கந்தசுவாமி மட்டும் கவிஞனாகப் பிறந்திருந்தால், இந்த மோகனச் சூழ்நிலையில் எத்தனையோ தேன் கவிதைகளைப் 'பொழிந்து' தள்ளியிருப்பார். கந்தசுவாமி அவ்வளவு பாக்கியம் செய்தவரல்லர். அவர் ஒரு சிறுகதை எழுத்தாளர். இப்பொழுது சிறுகதையொன்றைச் சிருட்டிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்.

அன்றிரவு எப்படியாவது ஒரு சிறுகதை எழுதி முடித்துவிட வேண்டுமென்று வெறி அவருக்கு. வெறி என்று சொல்வது அவ்வளவு பொருத்தமில்லை; வாழ்க்கைப் போராட்டம் என்று சொல்வதுதான் சரி. நாளைய தபாலிலேயே கதையை அனுப்பாவிட்டாற் கிடைத்து வரும் கால்வயிற்றுக் கஞ்சிகூடக் 'கோவிந்தா' வாகிவிடும். அவர் ஒரு காலத்திற் கதை எழுதுவது கலை என்றும், கலை கலைக்காகத்தான் வாழவேண்டுமென்றும் பெருமை பேசியிருக்கின்றார். ஆனால், இன்று கதை எழுதுவது என்பது வயிற்றுப் பிழைப்பென்பது அவருடைய அனுபவம்.

சிந்தனையில் ஆழ்ந்திருந்த அவர் மேஜை மீது சாய்ந்து விட்டார். அது பயங்கர சப்தத்துடன், 'முறிந்து விழுந்து விடுவேன்' என்று பயமுறுத்திய வண்ணம், சன்னி வேகத்தில் ஆடியது. அந்த மேசையும் ஒரு மாமாங்கக் காலமாய் உயிர் வாழ்ந்துவிட்டது. வீட்டிலிருந்த பழைய 'பக்கூஸ்' பெட்டி யொன்றுதான், கந்தசுவாமியின் கற்பனைத் திறனால் இந்த மேஜையாகத் 'திரு அவதாரம்' எடுத்திருந்தது.

மேஜையின் ஓலத்திற் கந்தசுவாமியின் மெளனம் கலைந்தது. தாறுமாறாகக் கிடந்த தாள்களை எடுத்து அடுக்கி வைத்தார். பூண் பிடித்த ஓட்டைப் பேனாவை எடுத்துப் பிள்ளையார் சுழி போட்டார்.

பிள்ளையார் சுழி போட்டதுமே, கதாசிரி யருக்குக் கற்பனை காட்டாற்று வெள்ளத்தைப் போன்று பெருக்கெடுத்து வருமென்றும், உடனேயே பக்கம் பக்கமாகக் கிறுக்கித்தள்ள ஆரம்பித்துவிடுவார் என்றும் நினைத்து விடாதீர்கள். அவர் இனித்தான் கதைக்குக் கருத் தேடப் போகின்றார். கதாசிரியர்கள் அனைவரும் 'ஞான நிலையில்'தான் கதைகள் எழுதுகின்றார்கள் என்பதெல்லாம் சுத்த அபத்தம். இப்படியான இனிய நினைவுடன், கதாசிரியர்களாற் கந்தர்வ லோகத்தில் வாழமுடியும். ஆனால் வயிற்றை நிரப்ப வேண்டுமென்றால் நிசமான உலகிற்கு வந்துதான் ஆகவேண்டும். இதற்காகக் கதாசிரியர்களைக் குறைசொல்லாதீர்கள்.

கந்தசுவாமி கதையைப் பிள்ளையார் சுழியுடனே விட்டு வைப்பதினால் அவரை ஒரு 'ஏனோதானோ' எழுத்தாளர் என்று நினைத்துவிடாதீர்கள். அவர் ஒன்றும் கன்னா பின்னா என்று திருடி, மற்றவர்களுடைய கதைகளுக்கு மெருகிட்டு முன்னுக்கு வரவில்லை. அவருடைய படைப்புகளெல்லாம் சாகாவரம் பெற்றவை.

அவரைப் போன்று சாப்பாட்டுக்குத் 'தரி கிணத்தோம்' போடும் சில எழுத்தாளர். 'அபார சிருஷ்டிகர்த்தா' என்று வாயாரப் புகழ்ந்திருக்கலாம். ஆனால், அவருக்கு நாட்டிலே நல்ல பேரும் புகழும் இருக்க வில்லை. காரணம் அவருக்குச் சுட்டுப் போட்டாலும் 'காக்கா பிடி'க்கவோ 'சுயபுராணம் வாசி'க்கவோ தெரியாது. இதனால் அவர் இலைமறை காயாக, பிரசுரகர்த்தாக்கள் என்ற 'பெருச்சாளி'கள் கண்களிற் படாமலிருந்தார்.

அப்படி அவர் கவனிப்பாரற்று இருந்த காலத்திற் கூரையைப் பிய்த்துத் தெய்வம் வரம் அருளியது. 'பரணி' வாரப் பத்திரிகை ஒரு சிறுகதைப் போட்டி நடத்தியது. அதன் முதற்பரிசைக் கந்தசுவாமி தட்டிவிட்டார். அதிலிருந்து அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம். அவர் பொந்துக்கிளியானார். வானவெளியிற் பறக்க இயலாது. பத்திரிகை யின் கண்ணோட்டம் என்ற கூண்டுக் குள்ளேயே சிறகடித்தார். வாரம் ஒரு கதை வீதம் உற்பத்தி செய்யும் அந்த இயந்திரத் துக்கு மாதம் எண்பது ரூபாய் சம்பளம்.

கதாசிரியர் கந்தசுவாமி கற்பனை உலகிற் சஞ்சரிக்க முயன்றார்; ஆனால் அவருக்குக் கற்பனையே ஓடவில்லை. கற்பனை என்பது நமது சட்டைப் பையிலா இருக்கின்றது? கற்பனை குப்பை மேட்டில் வளரும் கிள்ளுக்கீரையல்ல. நினைத்தவுடன் கதை என்ற கறிசமைக்க.

அவர் பேனாவை மேஜையில் வைத்துவிட்டு, வெற்றிலைத் தட்டை எடுத்தார். வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பி, எச்சில் சாளரத்தின் வழியாகத் துப்பினார். பரவலாக விழுந்த வெற்றிலை எச்சில் மண்ணெண்ணெய் விளக்கை அவித்துவிட்டது. மறுபடியும் விளக்கேற்ற, தீப்பெட்டியைத் தேடி அலைந்தார். 'எங்கே இந்தச் சனியன் நெருப்புப் பெட்டி' என்று முணுமுணுத்தபடி, நிலவின் மங்கல் ஒளியில் தேடினார்.

மேஜையிலே திறந்து கிடந்த மைப் போத்தலைக் கவிழ்த்து ஒரு கோர நாடகம் நடத்திய பின்னர்தான், நெருப்புப் பெட்டியை மாடக்குழியில் வைத்தது அவர் ஞாபகத்திற்கு வந்தது. விளக்கை ஏற்றினார்.

வெற்றிலை எச்சிலை மிடறு முறித்து விழுங்கினார். செல்லம்மா ஆஸ்பத்திரிக்குப் போனதும் 'போதும், நான் படும்பாடும் போதும்' என்று அலுத்துக்கொண்டார்.

கதாசிரியர் கந்தசுவாமியின் மனைவிதான் செல்லம்மா. அவரைத் தன் கழுத்தைத் தொட்டுத் தாலிகட்ட விட்ட குற்றத்திற்காக, ஆறு ஆண்டுகளில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துவிட்டாள். நல்ல வேளையோ என்னவோ ஒரு குழந்தை மண்ணில் அவதரித்த மூன்றாம் மாதமே 'பரமபதம்' சேர்ந்துவிட்டது. இப்பொழுது அவள் கந்தசுவாமியைப் பரிதவிக்கவிட்டு நாலாவது பிரசவத்திற்காக அரசினர் கட்டியிருக்கும் 'பிறந்தக'மான பிரசவ விடுதிக்குச் சென்று விட்டாள்.

செல்லம்மாவுக்கு முன்னர், கந்தசுவாமியும் இரண்டு மாதங்கள் அரசினர் வைத்திய சாலையை முகாமிட்டிருந்தார். வாய்க்குள் நுழையாத ஒரு முழுநீள லத்தீன் பெயரைக் கொண்டது அந்த வியாதி. அது அவரை இரண்டு மாத காலம் படுத்த படுக்கையாக்கிவிட்டது.

இந்த மூன்று மாத காலமும் தன்னுடைய ஓட்டைப் பேனாவுக்கு ஓய்வு கொடுத்திருந்தார். ஆனால் அது இனித் தூங்க முடியாது. அப்படி அவரைச் செய்தது 'பரணி'யின் கடிதம்.

'பரணி' ஆசிரியர் அனுப்பிய கடிதம் ஞாபகத்திற்கு வரவே, அவருடைய நினைவுகள் அதில் தேங்கி நின்றன. மறுபடியும் அந்தக் கடிதத்தை வாசிக்க வேண்டுமென்ற தவிப்பு அவருக்கு ஏற்பட்டது! அந்தக் கடிதத்தை வாசிக்கலானார்.

அன்புள்ள கந்தசுவாமி அவர்களுக்கு,

நீங்கள் சுகமடைந்த செய்தி கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி. சுகமடைந்த பின்னரும் போதுமான ஓய்வும் எடுத்துக்கொண்டீர்கள். இனியாவது நமது பத்திரிகைக்கு ஒழுங்காக எழுதுங்கள். முன்னர்தான் சுகவீனமாக இருந்தீர்கள். இப்பொழுது என்ன வந்துவிட்டது?

நமது கஷ்டமும் உங்களுக்குத் தெரியும் என்று நம்புகின்றோம். எல்லாப் பத்திரிகை களுமே பிர்லாக்களால் நடத்தப்பட்டால், எழுதாதவர்களுக்கும் சம்பளம் கொடுத்துப் பத்திரிகை நடத்த முடியும். அது நம்மால் முடியாது என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்ளுகின்றோம்.

நாம் வாராவாரம் எப்படியும் பத்திரிகையின் பக்கங்களை நிரப்ப வேண்டும். உங்களைப் போன்ற நமது நிரந்தர எழுத்தாளர்கள் எழுதினால்தான் நம்மாற் பக்கங்களை நிரப்ப முடியும். இந்த உண்மையை நீங்கள் உணருவதாக இல்லை.

இந்த விஷயத்தைக் குறிப்பிடுவதற்கு நம்மை மன்னிக்கவும். 'பரணி'யில் எழுதுவதற்கு எத்தனையோ எழுத்தாளர் போட்டி போடுகின்றனர். சினிமாவுக்கு வசனமெழுதிப் புகழ்பெற்ற கலைஞர் உதயணன் கூட நமது பத்திரிகைக்கு எழுத விரும்புகின்றார்...

ஆனால் உங்களை ஊக்குவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைவோம். நாளைய தபாலிலேயே இந்த வார இதழில் வெளியிடத் தக்கதாக ஒரு சிறுகதை அனுப்பி வைக்கவும். இல்லாவிட்டால் நமது ஒப்பந்தத்தை நீக்கிவிட வேண்டி நேரிடும். இப்படிக் கண்டிப்பாக எழுதுவதற்கு வருந்துகின்றோம்.

வணக்கம்,
என்றும் அன்புள்ள,
கருணாகரன்
'பரணி' ஆசிரியர்.
கடிதத்தை ஒரு உஷ்ணமான பெருமூச்சுடன் வாசித்து முடித்தார். அவர் உள்ளம் வெதும்பியது.

பத்திராதிபரென்றால் ஆகாயத்திலிருந்து குதித்தவன் என்று நினைத்துக் கொள்வதா? அவர்களும் எழுத்தாளர்களென மண்ணின் புழுதியிலே பல காலம் புரண்டுதானே முன்னேறினார்கள்? சிறுகதை என்றால் அது, சிறுகதை என்றால் இது என்றொல்லாம் சொல்லித் திரிகின்றார்களே! சிறுகதை என்பது மீன்பிடித் தொழிலல்ல. பேனா என்ற தூண்டில் முள்ளில், வீசிவிட்டு, மிதப்புத் தாழுகின்றதா என்று பார்த்துக் கொண் டிருக்க... அதுவும் ஒரு வாளி கிணற்றுத் தண்ணீரில் தூண்டில் வீசினால் மீன் அகப்படுமா?

போனாற் போகிறது என்று கேட்கின்றார். இப்பொழுது எனக்கு என்னவாம்! எனக்கு ஒரு வியாதியுமில்லைதான். ஆனால் என் மனைவி அல்லவா ஆஸ்பத்திரியிற் படுத்துக் கிடக்கின்றாள். நாம் என்ன மேற்கு நாடுகளிலா இருக்கின்றோம்? பிள்ளைகளைப் பார்க்க ஒரு தாதியை நியமித்து விட்டு, சுழலும் மின்சார விசிறிக்குக் கீழிருந்து கதைகளைக் கிறுக்கித் தள்ள... கேவலம், தமிழ் எழுத்தாளர்! கற்பனைத் திறனையும், பட்ட கஷ்டங்களையும் விட்டுத் தள்ளுங்கள். உபயோகப்படுத்தும் காகிதம் முத்திரை இவற்றின் பெறுமானத்திற் காவது சன்மானம் வேண்டாம்? விளம்பரங் களைப் போன்ற கதைகளைப் பிரசுரிப்ப தற்குத் தமிழில் பத்திரிகைகள் பணம் வசூலிக்க ஆரம்பித்து விடுமோ என்னவோ...

'கலைஞர் உதயணன் என்றால் கொம்பு முளைத்தவனா? வெறும் கற்றுக்குட்டி. கலைஞர் என்ற பட்டத்தைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டு கையிலே பைல் எடுத்துச் செல்பவன் எல்லாம் எழுத்தாளனா? ஏதோ அவன் அதிர்ஷ்டம். இரண்டு பெரிய மனிதர்களின் சிபாரிசைச் சரி செய்து கொண்டு சினிமாவில் நுழைந்தான். பார்த்த ஆங்கிலப் படங்களிலும் ஹிந்திப் படங்களிலு முள்ள காட்சிகளை வெட்டித் தமிழ் மயமாக்கி ஒட்டினான். திருடக்கூட ஒழுங்காக வராது. நட்சத்திரக் குவியல்; பாட்டுகளும் நன்றாக அமைந்துவிட்டன. படம் வெளுத்து வாங்கியது; மேலும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவருடைய சரக்குடன் இரண்டு மூன்று படங்கள் வெளிவந்தன. எல்லாம் மண் கவ்வின. பட உலகம் அவரை விரட்டி யடித்தது. இவரைப் பெரிய எழுத்தாளன் என்று கொண்டாடப் பரணி ஆசிரியருக்கு வெட்கமாக இல்லை? புலமைக் காய்ச்சலல்ல. நான் சிருஷ்டித்த 'கல்லறைக் காவியத்'தைப் போன்ற ஒரு சிறுகதை எழுதட்டும்; நான் எழுத்துலகிற்கே முழுக்குப் போட்டுவிட்டு எந்தக் குளத்திலோ குட்டையிலோ விழுந்து தொலைக்கின்றேன்...'

கந்தசுவாமியின் உள்ளத்தில் இவ்வாறு பல சிந்தனைகள் குமிழ்விட்டன. எழுத்தாளர்கள் சிந்திக்கும் பிராணிகள்; வாய் பேசாப் பூச்சிகள். அவருக்கு வந்த ரோஷத்தில், 'அப்படி என்றால் கலைஞர் உதயணனைக் கொண்டே எழுதுவியுங்கள்' என்று எழுதியிருப்பார். அதன் பலாபலன் அவருக்குத் தெரியும். கிடைத்துவரும் எண்பது ரூபாயும் நின்றுவிடும். இந்தக் காலத்தில் உத்தி யோகங்கள் தெருவிலா போட்டுக் கிடக்கின் றன? எழுத்தாளனுக்குக் கணக்குப் பிள்ளை வேலை தானும் ஒத்துவருமா? ஆனால் பத்திராதிபரைப் பொறுத்தவரையில் யார் எழுதினாலென்ன பக்கங்கள் நிரப்பப்பட வேண்டும். வாசகநேயர் ஏதோ வாசித்தோம் என்று திருப்திப்படும் 'தஞ்சாவூர் பொம்மைகள்'!

கதாசிரியரின் சிந்தனைகளெல்லாம் சிதறி ஓடின. அவற்றை எல்லாம் வளைத்துப் பிடித்து, மறுபடியும் சிறுகதை என்று உருவாக்கும் பணியிலே படியச் செய்தார்.

ஆம்; வந்துவிட்டது. கதை அவர் மனதிலே உருவாகியது... கிராம வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டது. பொன்னி, ஆற்றங்கரைக் கஞ்சிப் பானையுடன் வருகின்றாள். வழியிலே அவள் வருகையை எதிர்பார்த்து நிற்கின்றான் வேலன். அவன் மாமன் மகன் என்றாலும், இரு குடும்பங் களுக்கிடையேயும் வைரப் பகை...

'ஆகா அற்புதம்' என்று வாய்விட்டே சொல்லிவிட்டார் கந்தசுவாமி. எத்தனையோ பேர், ஷேக்ஸ்பியர் காலந்தொட்டே கைவைத்த கருவேதான். ஆனால், புதிய பாணியிலே கதை சொல்லிவிடலாமென்ற நம்பிக்கை. கதாசிரியர் கந்தசுவாமி கையிலே பேனாவைத் தூக்கினார். பேனா எழுத ஆரம்பித்தது.

அருவியிற் புதுவெள்ளம் புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. அந்தப் புதுவெள்ளத்தின் வேகத்திலேயே, உள்ளத்தில் ஆசைகள் என்ற அலைகள் கொந்தளிக்க, தலையிற் கஞ்சிக் கலயத்தை வைத்துக்கொண்டு நடந்தாள் பொன்னி.

'ஐயோ...! அப்பா...' என்ற பயங்கர அலறலைக் கேட்டுத் திடுக்கிட்டார் கந்த சுவாமி. அவருடைய கற்பனையும் தடைப் பட்டது; எழுத்தும் தடைப்பட்டது.

அவருடைய இரண்டாவது புத்திர பாக்கியமான இளங்கோ விழித்துக் கொண்டான். அவன் பாயிலிருந்து எழுந்து உட்கார்ந்து, தூக்கக் கலக்கத்துடன் கண் களைக் கசக்கியபடி அழுதுகொண்டிருந்தான்.

'என்னடா கழுதை'

'ஆ...ஆ...'

'சொல்லித் தொலையடா கழுதை...'

கந்தசுவாமியின் எரிச்சல் அந்தப் பிஞ்சு நெஞ்சுக்கு எங்கே தெரியப்போகின்றது? முதலில் ஆத்திரம்; பின்பு அன்பு சுரக்கின்றது.

'என்னடா இளங்கோ?' என்று செல்லமாகத் தட்டிக்கொடுத்தார். இராகம் ஓய்ந்தது.

'கனவப்பா... பிசாசுகள் வந்து...'

'சரி, சரி, கண்ணல்லே! படுத்துக்கொள்.'

'எனக்குப் பயமாய் இருக்கு... நீ கூடப் படுத்துக்கோ...'

'நீ முதலிற் படுத்துக்கொள். அப்புறம் அப்பா படுக்கும்.'

'நீ பொய் சொல்லிறாய்...'

இளங்கோ தூங்கிவிட்டான்.

நேரமும் நடுநிசியைத் தாண்டிவிட்டது.

'இனி எழுதிக் கிழித்தாற்போலத்தான்' என்று சலித்துக் கொண்டார்.

எழுந்து மேஜைக்கு வந்தார். கற்பனை ஓடவில்லை. கதை எழுதவேண்டுமென்றும் தோன்றவில்லை.

அவர் ஆரம்ப எழுத்தாளனாக இருந்த காலத்தில், 'நன்றியுடன் திருப்பி அனுப்பப் பட்டது...' என்று திரும்பி வந்த கதைகள் ஏதாவது இருக்குமோ என்று துருவிப் பார்த்தார். ஐந்து வருட எழுத்துப் பிழைப்பு. ஒன்றுகூட மிச்சமில்லை.

அவருடைய உடலும் உள்ளமும் சோர்வடைந்தன. 'இது என்ன? இது என் எழுத்து மில்லையே. இது கடிதமல்ல; கதை--இரண்டு புத்தகங்களுக்கிடையிற் செருகப்பட்டிருந்த அந்தக் கதையைப் பார்த்ததும் அவருடைய கண்கள் ஆச்சரியத்தால் அகல விழித்தன.

அவருடைய தலையில் இன்னும் நரை மயிர் பரவவில்லை. இருந்தும் ஞாபகசக்தி எப்படியெல்லாம் குறைந்து வருகின்றது... அப்பாடா! இப்பொழுது அது அவர் ஞாபகத்திற் சிக்கிற்று.

குப்பைத் தொட்டிகளை நிரப்புவதற்காகத் தான் எழுதிக் குவிக்கின்றோம் என்று திருப்திப்படும் ஆயிரம் குட்டி எழுத்தாளர் களுள் ஒருவன் துரைராசா. அது அவருடைய படைப்புதான். கந்தசுவாமியை இலக்கிய வழிகாட்டி என்று நினைத்திருந்த அவன் இவரிடம் அதைத் திருத்தங்களுக்கும் விமர்சனத்திற்கும் சமர்ப்பித்திருந்தான். வேலைப் பளு காரணமாக அதை ஒரு மூலையிலே ஒதுக்கிப் போட்டிருந்தார்.

கதை சுமாராக அமைந்திருந்தது. அங்கும் இங்கும் இலேசாகக் 'கை' வைத்தால் வெளியிடுவதற்குத் தகுதியான கதைதான். இதையே தன் பெயரில்...

அவர் உள்ளம் துணுக்குற்றது. திருட்டுப் பிழைப்பா? பேனாவைக் கையிலெடுத்த காலந்தொடக்கம் இன்றுவரை அவர் செய்யாத ஒன்று. அவருடைய இலக்கிய வாழ்க்கையில் என்றுமே போக்கமுடியாத கறை.

தேவைதான் மனிதனைத் திருடனாக்கு கின்றது. அதற்கான சமாதானங்களையும் கண்டுபிடிக்கத் தூண்டுகின்றது.

'இது திருட்டல்ல, அவனுக்கு வேறு ஒரு கதையை ஆறுதலாக எழுதிக் கொடுக்கலாம். கதைக்குக் கதை; பண்டமாற்று. அவ்வளவு தானே?' அங்கலாய்த்த அவர் மனம் அமைதியுற்றது.

'பரணி'க்கு, அடுத்த நாள் தபாலிலேயே கதாசிரியர் கந்தசுவாமியின் பெயரில் ஒரு கதை பிரயாணம் செய்து கொண்டிருந்தது.

எஸ். பொன்னுத்துரை
Share: 
© Copyright 2020 Tamilonline