Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நலம்வாழ
சினமும் சீற்றமும்
- மரு. வரலட்சுமி நிரஞ்சன்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeதினம்தினம் மனதுக்குள் ஒரு போர் நடப்பதை நம்முள் பலர் உணர்கிறோம். வேலைப்பளுவோ, வாகன நெரிசலோ, தூங்காமல் படுத்தும் குழந்தையோ ஏதோ ஒன்று நம்முள் கோபத்தைத் தூண்டிவிடுகிறது. கோபத்தின் வெளிப்பாடு பல்வேறு வகைகளில் தெரிகிறது. கோபம் அதிகமானால் மன அழுத்தம் உண்டாகிறது. இந்த உணர்வைக் கட்டுக்குள் கொண்டு வருவதைப் பற்றி மருத்துவ கோணத்தில் இங்கு அலசலாம்.

மனித உணர்வுகளில் ஒன்றான 'கோபம்' மற்ற உணர்வுகளைப் போலவே சராசரியான ஒன்றுதான். பசி, மகிழ்ச்சி, தூக்கம் ஆகியவை போல கோபமும் இயற்கையான உணர்வு தான். ஒருவர் கோபமே படுதல் கூடாது என்பது மருத்துவ கோணத்தில் சரியல்ல. கோபம் வருவது இயற்கை. அந்தக் கோப உணர்வைக் கையாளும் திறனில்தான் நாம் ஒருவருக்கு ஒருவர் வேறுபடுகிறோம். உணர்வது ஒரு பாகம் என்றால், அதை வெளிப்படுத்துவது மற்றொரு பாகம். ஒரு சில கோபங்கள் சமூக சீர்திருத்தங்களை உண்டு செய்ய வல்லன. நியாயம் கிடைக்கக் கோபப்படுவது நல்லதே. ஆனால், பலருக்கு சராசரி வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களுக்கே கோபம் உண்டாகிறது.

கோபத்தின் மூன்று பகுதிகள்

மனோதத்துவ ரீதியான பகுதி (Psychological component):

இது கோபத்தினால் ஏற்படும் உளவியல் உணர்வுகளைப் பற்றியது. கோபம் ஏற்படுத்தும் வருத்தம், சோகம், விரக்தி போன்ற உணர்ச்சிகள் இதில் உள்ளடங்கும்.

உணர்வு ரீதியான பகுதி (Emotional component):

இது கோப உணர்வை உடல் வெளிப் படுத்தும் தன்மையைக் குறிக்கிறது. நெஞ்சம் படபடத்தல், இரத்த அழுத்தம் கூடுதல் போன்றவற்றை உள்ளடக்கியது. ஒரு சிலர் வேகமாகச் சொற்களைப் பயன்படுத்திவிடுவர். பின்னர் ஏன் இப்படிப் பேசினோம் என்று வருத்தப்படுவதுண்டு. வேறு சிலர், ஏதும் பேசாமல் உள்ளுக்குள் வேதனைப்படுவதுண்டு.

அறிவு ரீதியான பகுதி (Cognitive component):

இது உணர்ச்சிகளை அறிவு மூலம் கையாளும் விதத்தைப் பற்றியது. முக்கியமாக, கோபம் வருவது இயற்கையானது என்பதை உணர்ந்து, ஒப்புக் கொள்ளுதல். கோபத் தினால் செய்யும் செயல்களை நியாயப்படுத் தாமல், கோபத்தை எப்படிக் கையாளுவது என்று சிந்தித்தல் ஆகியவை இதில் அடங்கும். 'எப்போதும் எனக்கு வீட்டு வேலையில் உதவுவது இல்லை' என்று சொற்களால் தாக்காமல், இன்று எனக்கு இந்த உதவி செய்து தாருங்கள் என்று கேட்பது இந்த வகைப்பாட்டில் அடங்கும்.

கோபம் வருபவர்கள் கெட்டவர்கள் என்றோ, கோபப்படாதவர்கள் நல்லவர்கள் என்றோ சொல்லாமல், கோபம் இயற்கையான உணர்வு என்பதை அறிவியல் ரீதியாக அறிந்து கொள்வதின் மூலம், இந்த மூன்று கோணங்களில் எந்த வகையில் பிரச்னை என்பதை ஆராய்வது நல்லது. அதன்மூலம், அந்த வகையில் தீர்வு காணவும் இயலும்.

ஏன் கோபம் வருகிறது?

முக்கியமாக, கோபம் வருவது இயற்கையானது என்பதை உணர்ந்து, ஒப்புக் கொள்ளுதல். கோபத் தினால் செய்யும் செயல்களை நியாயப்படுத் தாமல், கோபத்தை எப்படிக் கையாளுவது என்று சிந்தித்தல்
பல வேளைகளில் ஒரு குறிப்பிட்ட சங்கதி கோபத்தை உண்டு பண்ணுவது தெளிவாகிறது. வேலையில் இருக்கும் முரண்பாடோ, வாகன நெரிசலோ, தொலைபேசியில் நீண்ட நேரம் காத்திருத்தலோ இந்த கோபத்தை, எரிச்சலைக் கிளப்பி விடுகிறது. கோபம் கொள்பவர்கள் எப்போதும் கோபிப்பதில்லை. பெரும்பாலும் ஒருசில காரணங்களுக்கே கோபிப்பது வழக்கம். பழக்கப்பட்ட செயல் என்றபோதும் அது சில நேரங்களில் எரிச்சலூட்டலாம். நீண்ட நேரம் வண்டி ஓட்டி வேலைக்குச் செல்வதும், இரவு முழுதும் கைக்குழந்தை படுத்துவதும் இந்த வகையில் அடங்கும். எதிர்பார்த்த செயல்கள் என்ற போதும் வடிகால் இல்லாத வேளையில் கோபம் வெடிக்க வாய்ப்பு உள்ளது. கருத்து வேறுபாடு முக்கியப் பங்கு வகிக்கிறது. கணவன் மனைவிக்குள்ளும், வேலை செய்பவரிடத்தும், பதின்ம வயதுப் பிள்ளைகளிடத்தும் கருத்து வேறுபாடும் முரண்பாடும் கோபத்தைத் தூண்டுகின்றன.

கோபத்தைக் கையாளும் விதங்கள்

கொந்தளித்தல்:

சொற்களால், செயல்களால், வன்முறையால் கொந்தளித்தல் ஒரு விதம். காலை உதைத்து நடத்தல், கதவை வேகமாகச் சத்தம் வரும்படிச் சாத்துதல், உரக்கப் பேசுதல் போன்றவை இதில் அடங்கும். கொந்தளிப்பவர்கள் மூர்க்கமானால், வன்முறை அதிகமாகும். வீட்டில் வன்முறை உருவாவதைப் பற்றி அக்டோபர் 2006 தென்றல் இதழில் கண்டோம். வீட்டில், வேலையில், சமூகத்தில் வன்முறை உருவாக இது விதை போடுகிறது.

உள்ளுக்குள் அடக்குதல்:

கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கி, வேதனைப்படுவது மற்றொரு விதம். மௌனமாக அடங்கிப் போதல், முகத்தை தூக்கிவைத்துப் பேசாமல் இருத்தல், இல்லை, முடியாது என்று சொல்லத் தெரியாமல் தனக்குள் அச்சப்படுதல், அழுதுவிடுதல் போன்றவை இரண்டாம் வகையில் அடங்கும். உள்ளுக்குள் வைத்து முனகுபவர்களுக்கு, தலைவலி, உடல்வலி, மன அழுத்தம், (Depression), படபடப்பு (Anxiety, Panic attack) போன்ற உபாதைகள் வரலாம்.

ஆகவே மேற்கூறிய இரண்டு வித வெளிப் பாடுகளும் தீவிரம் அதிகமானால் பின் விளைவுகளை ஏற்படுத்த வல்லன. மனித வாழ்க்கையில் இந்த இரண்டு விதங்களும் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு தீவிரத்தில் வெளிப்படுதல் உண்டு. இரண்டுமே, தீவிரம் அதிகமானால் உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லதல்ல.
கோபத்தை வெளிப்படுத்தும் முறைகள்

கோபம் கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலை யிலும், கோபத்தைத் தூண்டும் படியானதொரு செயலோ, நபரோ இருப்பது வழக்கம். ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. இந்தச் செயல் அல்லது நபர் கோபத்தைத் தூண்டினார் என்று சொல்வதனால், கோபம் கொள்பவர் தப்பிக்க இயலாது. கோபத்தைத் தூண்டும் நபர் அல்லது செயல் எது வானாலும், வரும் கோபத்தைக் கையாளும் திறனில்தான் நம் அறிவின் செயல்பாடு சிறப்படைகிறது. உணர்ச்சியை வெளிப் படுத்தும் திறன் நம் கையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கோபத்தை வெளிப்படுத்துவது என்பது கற்றுக்கொள்ளும் நடத்தை (learned behavior). அதைச் சரியாகக் கற்றுக் கொள்வதும், தவறாகக் கற்றுக் கொண்ட நடத்தையை சரிப்படுத்திக் கொள்வதும் (unlearning) நம் கையில்தான் உள்ளது.

அதற்கான பயிற்சிகள்

ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. கோபத்தைக் கையாளும் திறனில்தான் நம் அறிவின் செயல்பாடு சிறப்படைகிறது. உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன் நம் கையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்தக் காலப் பள்ளிப் பாடத்திட்டத்தில் இதற்கான பயிற்சிகள் குழந்தைப் பருவத்தில் இருந்தே கற்றுத் தரப்படுகின்றன. எந்த வயதினரும் இவற்றைக் கற்றுக்கொள்ளலாம்.

1. கோபம் தூண்டப்பட்ட உடனே எதிர் வினை (react) செய்வதைத் தவிர்ப்பது நல்லது.
2. ஒன்றிலிருந்து பத்துவரை எண்ணுவதோ, அல்லது வேறு விதமாக மனத்தை திசை திருப்புவதோ நல்லது.
3. வேகமான நடை, உடற்பயிற்சி முதலியவை கோபத்தின் தீவிரத்தைக் குறைக்க உதவும்.
4. 'உன்னால் இது நடந்தது' என்று மற்றவரைச் சாடாமல், 'என்னால் இதைப் பொறுக்க முடியவில்லை', 'எனக்கு வருத்தம் தருகிறது' என்று தன்மீதே பொறுப்பை ஏற்றுப் பேசுவது உசிதம்.
5. கத்துவதையும், உரக்கப் பேசுவதையும் தவிர்த்தல் நல்லது.
6. சொல்ல வேண்டியதை அழுத்தமான குரலில் (assertive tone) சொல்வது நல்லது.
7. பிராணாயாமம், தியானம், யோகப் பயிற்சி போன்றவற்றை தினமும் செய்துவந்தால் நாளடைவில் உதவும்.
8. மன்னித்தலும், மறந்து போதலும் மனித இயல்புகளே என்பதைப் புரிந்து கொள்ளுதல் நல்லது.

இவை எல்லாம் செய்தும் கோபம் அதிகமாக ஏற்பட்டு, வேலையிலோ, வீட்டிலோ, சமூகத்திலோ பிரச்னை உண்டானபடியே இருக்குமேயானல், கோபத்தைக் கையாளும் விதம் பற்றி மருத்துவரை, குறிப்பாக மன நல ஆலோசகரை, நாடுவது நல்லது.

இதற்காக கோபநிர்வாக (Anger Management) வகுப்புகளுக்குப் போவது நன்மை தரும்.

மேலும் விவரங்களுக்கு:

மரு. வரலட்சுமி நிரஞ்சன்
Share: 




© Copyright 2020 Tamilonline