Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
இசையுதிர் காலம்
- அரவிந்த்|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeசோதனைகள் இல்லாமல் சாதனைகள் இல்லை. ஒருவர் எந்தத்துறையில் வெற்றியாளராக விரும்பினாலும் அவர், வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்தே உயர்நிலைக்கு வரமுடியும். அவ்வாறு வெற்றிபெற்ற இசைக் கலைஞர்கள் சிலரது வாழ்விலிருந்து...

அந்தச் சிறுமிக்கு பத்து வயது இருக்கலாம். துறுதுறுவென்று பார்க்க மிகவும் அழகாக இருப்பாள். அழகான குரலில் அற்புதமாகப் பாடுவாள். அந்தச் சிறுவயதிலேயே அவள் பாடும் விதமும், குரல் வளமும் அனைவரையும் கவர்ந்தன. அன்றும் அப்படித்தான். மதுரை சேதுபதி அரங்கில் அவளுடைய அம்மா வீணைக் கச்சேரி செய்து கொண்டிருந்தார். திடீரென தனது கச்சேரியை நிறுத்தி விட்டு, 'குஞ்சம்மா நீ வந்து பாடு!' என்றார் அந்தச் சிறுமியிடம். வித்தகர்களும், கனவான்களும் கூடியிருந்த அந்த மிகப்பெரிய சபையில், எந்தவித சபைக் கூச்சமும் இல்லாது 'ஆனந்தஜா' என்ற ஹிந்துஸ்தானிப் பாடலை அழகாக அற்புதமாகப் பாடினாள் அந்தச் சிறுமி. பாடலா அது, தேவகானம்! சபையினரைத் தனது இனிய குரலால் கட்டிப் போட்ட அவளை, எல்லோரும் மனமுவந்து பாராட்டினர். அம்மாவுக்குப் பெருமை தாங்கவில்லை. எப்படியும் தன் மகளை ஒரு மிகப் பெரிய பாடகி ஆக்கிவிட வேண்டும் என்று உறுதி பூண்டார். அதற்காகக் கடுமையாக உழைக்கத் துவங்கினார்.

ஒருநாள், ஹெச்எம்வி நிறுவனத்திடமிருந்து, எல்.பி. இசைத்தட்டு ஒன்றின் ஒலிப் பதிவுக்காகச் சென்னைக்கு வருமாறு அவளுடைய அம்மாவுக்கு அழைப்பு வந்தது. மகளையும் கூட அழைத்துக் கொண்டு போனார். ஒலிப்பதிவின் போது மகளையும் சேர்ந்து பாடச் சொன்னார். 'மரகத வடிவும் செங்கதிர் வேலும்' என்ற பாடலை அந்தச் சிறுமி இனிய குரலில் பாட, அது இசைத்தட்டாக வெளிவந்தது. அதில் அந்தச் சிறுமியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதுதான் அவளது முதல் இசைத்தட்டு. பத்தே வயதான அவளுக்கும் அப்போதிலிருந்து நிறையக் கச்சேரி வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. மிருதங்க வித்வான் தட்சிணாமூர்த்திப் பிள்ளை போன்றோர் அவள் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டினர். 1935-ல் நடந்த தட்சிணாமூர்த்திப் பிள்ளையின் மணிவிழாவில் அவள் அற்புதமாகப் பாடினாள். அது பிரபல வித்வான்கள் பலரையும் கவர்ந்தது. அது முதல் தொடர்ந்து அவளுக்கு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தாய் கண்ட கனவு பலித்தது. தனது இனிய குரல் வளத்தால் பெரிய இசை ஜாம்பவான்களையும் கவர்ந்தாள். 'இசைக்குயில்' ஆனாள். திரைப்படங்களிலும் நடித்தாள். மகாத்மா காந்தி, நேரு என அனைவரையும் தனது இசைக்கு ரசிகர்களாக்கினார். இசையுலகமே போற்றும் அளவுக்கு 'இசையரசி' ஆக உயர்ந்தார்.

அவர்தான் எம்.எஸ். என்று அனைவராலும் போற்றிப் புகழப்பெற்ற மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

******


அக்காலத்தில், கச்சேரிகளில் தமிழ் சாகித்யங்களைப் பாடுவது சில வித்வான்களுக்கு அரிதான முயற்சியாக இருந்தது. அவர்களால் பாட முடியும் என்றாலும் சபையினர் ஏற்றுக் கொள்வார்களோ, சம்பிரதாயத்தை மீறிய குற்றங்கள் வந்து விடுமோ, பெரியவர்கள் அனுசரித்து வந்த முறையை மாற்றுவதாகுமோ என்றெல்லாம் நினைத்துத் தயங்கினார்கள். அந்தப் பிரபலமான வித்வானுக்கும் அப்படி ஒரு தயக்கம் இருந்தது. பலர் வற்புறுத்தியும் அவர் பிடிகொடுக்காமல்தான் இருந்தார். ஒருநாள் ஒரு ஆன்மிகப் பெரியவரைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது அவருக்கு. அவரோ, 'கச்சேரியில் தமிழிசையும் பாட வேண்டும். அதுவும் திருப்பாவைக்கு ஸ்வரம் அமைத்து நீயே பாட வேண்டும். உன்னால்தான் அது முடியும்' என்று கட்டளையிட்டு விட்டார். அவரது அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அந்தப் பெரியவரின் சொல்லை மீறமுடியுமா? உடனே தனது முயற்சியைத் தொடங்கினார் அந்த வித்வான். கடினமாக ஆய்வுகள் செய்து, திருப்பாவை, குலசேகர ஆழ்வார் பாடல்கள், ராமநாடகக் கீர்த்தனைகள் என எல்லா வற்றுக்கும் ஸ்வரக் குறிப்புகள் உருவாக் கினார். கச்சேரிகளில் பாடவும் செய்தார். அவற்றை அக்காலத்தில் பிரபலமான சுதேசமித்திரன் பத்திரிகையும், வாராவாரம் பெருமையுடன் வெளியிட்டது.

இவ்வாறு அந்த மனிதர் உருவாக்கிய வர்ணமெட்டுக்களைப் பயன்படுத்தியே பிற்காலத்தில் பலரும் பாடத் தொடங்கினர். அற்புதமான தனி சிஷ்ய பரம்பரையை உருவாக்கினார் அந்த மனிதர். தமிழிசை வரலாற்றில் தனக்கென தனி ஒரு இடத்தையும் தடம் பதித்தார்.

அவர்தான் 'அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்'. கச்சேரியில் தமிழ்ப்பாடல்களும் பாடப்படவேண்டும் என்று அவரை ஊக்குவித்த அந்த ஆன்மிகப் பெரியவர், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

******


அதை ஏன் கேட்கறீங்க, தோடி ராகம் வாசிக்கிற நாயனத்தை எடுத்து வைடான்னா, மறந்துட்டேன்னு சொல்றான்; என்ன பண்றது, அந்தக் கோபத்துல தான் அடிச்சேன்' என்றார். 'அய்யோ பரவாயில்லை, விட்ருங்க, பையனை அடிக்காதீங்க, அடுத்த கச்சேரியிலாவது கண்டிப்பா வாசிங்க' என்றார் மிராசுதார்
அவர்கள் இருவரும் சிறுவர்கள். ஒருவன் பெயர் வைத்யநாதன். மற்றொருவன் பெயர் ராமசாமி. இருவருக்குமே இசைமீது அளவற்ற ஆர்வம். அதைக்கண்ட அவர்களது தந்தை அவர்களுக்கு இசை கற்றுத்தர ஆரம்பித்தார். அவருக்கும் நல்ல இசைப்புலமை இருந்ததால் அது சாத்தியாமாயிற்று. தந்தை, சிறுவர்களைத் தான் கச்சேரிக்குச் செல்லும் பல இடங் களுக்கும் அழைத்துச் செல்வார். அதனால் பல பிரபல வித்வான்களுடனான அறிமுகம் அந்தச் சிறுவயதிலேயே அவர்களுக்குக் கிடைத்தது. அவர்களுள் தியாகையரின் வழி வந்த வெங்கடசுப்பையரும் ஒருவர். அவரது வீட்டில் தங்கி குருகுலமாக இசை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு அச்சிறுவர்களுக்குக் கிட்டியது. இருவருமே மிகுந்த ஆர்வத்துடன் இசையின் நுணுக்கங்களை நன்கு கற்றுத் தேர்ந்தனர். நன்கு பாடவும் ஆரம்பித்தனர். இல்லத்தில் நடந்த உபநயன விழாவின் போது பல கடினமான பதங்களைப் பாடி அப்போது பிரபல வித்வான்களாக இருந்த சிவகங்கை யைச் சேர்ந்த பெரிய வைத்தி, சின்ன வைத்தி போன்றோரது மனதைக் கவர்ந்தனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள் இருவருக்கும் பல கச்சேரி வாய்ப்புகள் வந்தன.
ஒருமுறை திருவாவடுதுறை மடத்தின் சார்பாக நடந்த விழாவில் பங்கேற்கச் சகோதரர்களுக்கு அழைப்பு வந்தது. இருவரும் அதில் கலந்து கொண்டனர். அதே விழாவில் வீணை சின்னையா பாகவதர், பிச்சுமணி பாகவதர், சிவகங்கை சின்ன வைத்தி, பெரிய வைத்தி ஆகியோரும் கலந்து கொள்ள வந்திருந்தனர். சிறுவனான வைத்யநாதனை, சிவகங்கை வைத்திகளுக்குப் போட்டியாகப் பாட வைத்தால் என்ன என்ற எண்ணம் தேசிகருக்குத் தோன்றியது. இருதரப்பினரும் சம்மதிக்கவே போட்டி தொடங்கியது. நடுவராக இருக்க வீணை சின்னையா பாகவதர் இசைந்தார். இருதரப்பினரும் சளைக்காமல் பல பாடல்களைப் பாடினார்கள். அதில் சின்ன வைத்தி நாட்டை ராகத்தில் பாடிய பாடல் ஒன்றின் ஸ்வரம் தவறு என்று சிறுவன் வைத்யநாதன் கூறினான். அதை வைத்திகள் ஒப்புக் கொள்ளவில்லை. ஆராய்ந்து பார்த்த நடுவர் சின்னையா பாகவதர், வைத்யநாதன் கூறியது சரிதான் என்றும், சின்ன வைத்தி பாடிய பாடலின் ஸ்வரம் தவறுதான் என்றும் தீர்ப்பளித்தார். தொடர்ந்து போட்டி களை கட்டியது. அடுத்து சக்கரவாஹ ராகத்தை ஆலாபனை செய்ய ஆரம்பித்தான் வைத்ய நாதன். அது அக்காலத்தில் மிக அரிதாக இருந்த ராகம் என்பதாலும், அப்போது பல மேளகர்த்தா ராகங்கள் பிரபலமாக இல்லாத காரணத்தாலும், பெரிய வைத்தி உட்பட யாராலும் அந்த ராகத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆலாபனையின் முடிவில் அந்த ராகத்தைப் பற்றி விளக்கிய வைத்ய நாதன், அந்த ராகத்தில் அமைந்த தியாகையரின் 'சுகுணமுலே' பாடலைப் பாடி, அனைவரது உள்ளத்தையும் கவர்ந்தான்.

மகிழ்ச்சியுற்ற சிவகங்கை வைத்திகள் சிறுவன் வைத்யநாதனுக்கு சிறந்த பட்டம் ஒன்றைச் சூட்டுமாறு ஆதீனகர்த்தரைக் கேட்டுக் கொண்டனர். அவரும் மனமுவந்து அந்தச் சிறுவனுக்கு 'மஹா' என்ற பட்டத்தைச் சூட்டினார். அன்று முதல் வெறும் பன்னிரண்டே வயதான அந்தச் சிறுவன், எல்லோராலும் மஹாவைத்யநாதன் என்று பெருமையுடன் அழைக்கப்பட ஆரம்பித்தான். பல்வேறு கச்சேரிகள் செய்து புகழ்பெற்றான். பின்னர் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகளிடம் தீட்சை பெற்று மஹாவைத்யநாத சிவன் ஆனார். இசைத்துறையில் பல சாதனைகள் செய்தார். குறிப்பாக, பெரியபுராணம் முழுவதையும் கீர்த்தனைகளாக இயற்றினார். பாடகராக, ஹரிகதா உபன்யாசக ராக, வாக்கேயக்காரராக எனப் பல பரிமாணங் களில் சிறந்து விளங்கினார். பல கீர்த்தனைகள் இயற்றினார். குறிப்பாக திருவையாற்றில் இருக்கும் ஈசனைக் குறித்து அவர் பாடிய 'ப்ரணதார்த்தி ஹர ப்ரபோ' எனத் தொடங்கும் பாடல் குறிப்பிடத்தக்கது. இப் பாடலின் சிறப்பு 72 மேளகர்த்தா ராகங்களும் ஒருங்கே ஒரே பாடலில் வருவதுதான். அந்த அளவுக்கு அசாத்தியத் திறமை படைத்தவராக வைத்யநாத சிவன் விளங்கினார். இசையுல கில் அதனால்தான் அவர் இன்றும் 'மஹா வைத்யநாத சிவன்' என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

அவர் ஒரு பிரபல நாதஸ்வர வித்வான். சிறந்த வாய்ப்பாட்டுக்காரரும் கூட. அவரது வாசிப்பு பாடுவதைப் போன்ற ஒலியை எழுப்பும் தன்மை கொண்டது. சாதாரண மக்கள் மட்டுமல்ல; பிரபல சமஸ்தான மன்னர்கள் கூட அவரது வாசிப்புக்கு அடிமையாக இருந்தார்கள். தங்களுக்கு இணையாக தர்பாரில் அமர்த்தி, அவரது தர்பாரைக் கேட்டு ரசித்திருக்கிறார்கள். பிரபல வித்வான்களால் மிகவும் பெருமை யாகப் போற்றப்பட்டவர். பல பிரபல சமஸ்தானங்களின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். அப்படிப்பட்டவர் ஒருமுறை ஒரு கச்சேரிக்கு அழைக்கப்பட்டிருந்தார். அழைத் தவர் மிகப்பெரிய செல்வந்தர். நிலச் சுவான்தார். வித்வானும் நாதஸ்வரத்தைக் கையில் எடுத்தார். வாசிக்க ஆரம்பித்தார். கூட்டம் தொடர்ந்து ஆரவாரித்து ஆர்ப்பரிக்க, தனது தனி முத்திரையான தோடி ராகத்தை வாசிக்க ஆரம்பித்தார். வாசித்துக் கொண்டே போனார். நேரம் மாலை கடந்து, இரவாயிற்று. வாசிப்போ தொடர்ந்து கொண்டே இருந்தது. மக்களும் அந்தத் தோடியில் மயங்கி நேரம் போவது தெரியாமல் கேட்டுக் கொண்டே இருந்தனர்.

ஒருவழியாகக் கச்சேரி முடிந்தது. நிலச் சுவான்தார் வித்வானைப் பாராட்டுவதற்காக மேடைக்கு வந்தார். வந்தவர், தாழ்ந்த குரலில், 'அய்யா, நீங்க தோடி ராகம் வாசிக்கிறதுல மன்னர்னு சொன்னாங்களே, கொஞ்சம் வாசித்துக் காண்பிக்கப்படாதா, எனக்காக நீங்க இன்னிக்கு தோடி வாசிச்சுட்டுதான் வீட்டுக்குப் போகணும்' என்றார். வித்வானுக்கு வந்ததே கோபம், பக்கத்தில் உதவிக்கு இருந்த பையனுக்கு ஓங்கி ஒரு அறை விட்டார். பையனுக்குப் பொறி கலங்கி விட்டது. மிராசுதார் சற்று அச்சத்துடன் வித்வானிடம் 'எதுக்கு அடிச்சீங்க?' என்று வினவினார். 'அதை ஏன் கேட்கறீங்க, தோடி ராகம் வாசிக்கிற நாயனத்தை எடுத்து வைடான்னா, மறந்துட்டேன்னு சொல்றான்; என்ன பண்றது, அந்தக் கோபத்துல தான் அடிச்சேன்' என்றார். 'அய்யோ பரவாயில்லை, விட்ருங்க, பையனை அடிக்காதீங்க, அடுத்த கச்சேரியிலாவது கண்டிப்பா வாசிங்க' என்றார் மிராசுதார். வித்வானும் சிரித்துக் கொண்டே, சரி, சரி அடுத்த கச்சேரில கண்டிப்பா உங்களுக்காகத் தோடி வாசிக்கிறேன்' என்று கூறி விடை பெற்றார்.

தனக்கு கச்சேரி வாய்ப்பைத் தந்தவர் 'ராகம்' பற்றிய விஷய ஞானம் ஏதும் இல்லாதவர் என்று தெரிந்தாலும், அனைவருக்கும் முன்னால் அவருக்கு அவமானம் தேடித் தராமல், பையனைக் கண்டிப்பது போல் நிகழ்வை மாற்றிப் பெருந்தன்மையாக நடந்து கொண்ட அவர்.... இந்திய சுதந்திரத்தின் போது முதன்முதல் இசை வாசித்த பெருமைக்குரியவர். நாதஸ்வரக் கலைஞர்கள் நின்று கொண்டே பாடுவதை மாற்றி, மற்ற பாடகர்களைப் போல அமர்ந்து கச்சேரி செய்யும் நிலையை ஏற்படுத்தியவர். 'திமிரி' நாயனத்தை எளிமையான 'பாரி' நாயனமாக மாற்றி வடிவமைத்தவர். நாதஸ்வரக் கலைஞர்களுக்கு மற்ற கலைஞர்களைப் போல சமுதாயத்தில் உயர் மதிப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்.

அவர்தான் 'இன்னிசை வேந்தர்', 'நாதஸ்வரச் சக்கரவர்த்தி' திருவாவடுதுறை டி.என். ராஜரத்தினம் பிள்ளை.

******


அவளுக்கு வயது நான்கு. விடியற்காலை மூன்று மணிக்கே அவளை எழுப்பி விட்டு விடுவர். முதலில் ஸ்லோகங்கள், அதன்பின் கீர்த்தனைகள் என ஆறு மணிவரை சாதகம் செய்ய வேண்டும். அதன் பின்தான் மற்ற வேலைகள். ஒவ்வொரு நாளும் பத்து கீர்த்தனைகள், அதுவும் வெவ்வேறு ராகங்களில் பாட வேண்டும். முதல் நாள் பாடிய பாடலை மறுநாள் பாடக் கூடாது. அதுவும் பாடல் நன்கு மனதில் பதியும்வரை, குறைந்தது ஐம்பது தடவையாவது பாட வேண்டும். புத்தகத்தைப் பார்த்துப் பாடவே கூடாது என்ற நிபந்தனை வேறு. அந்தச் சிறுமி அசரவில்லை. கடுமையான அந்தப் பயிற்சி களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தாள்.

ஒருமுறை பிரபல வித்வான் நயினாப்பிள்ளை ஒரு போட்டி நடத்தினார். அதில் அவள் கலந்து கொண்டாள். பைரவி ராகத்தில் அமைந்த 'ரஷ பெட்டரே' என்ற பாடலைப் பாடி, முதல் பரிசைப் பெற்றாள். பின் பள்ளியில் படிக்கும் போது 'சத்யவான் சாவித்ரி' நாடகத்தில் பங்கு கொண்டு 'தாயார் இருந்தென்ன தந்தையும் இருந்தென்ன' என்ற ராகமாலிகைப் பாடலைப் பாடி பாராட்டைப் பெற்றாள். அவளது புகைப்படம் பத்திரிகை யில் வெளியானது. அதைக் கண்டு உறவினர் களும் நண்பர்கள் சிலரும், குல வழக்கத்திற்கு இதெல்லாம் விரோதமானது என்று அந்தச் சிறுமியின் தந்தையிடம் ஆட்சேபம் தெரிவித் தனர். ஆனால் பள்ளித் தலைமை ஆசிரிய ரும், வித்வான் நயினாப்பிள்ளையும் அவள் தந்தையிடம் எடுத்துச் சொன்னதால், அவர் அவளை இசைத்துறையில் ஊக்குவித்தார். வானொலியில் பாடவும் அனுமதி வழங்கி னார். அன்று தொடங்கியது அவளது இசைப் பயணம்.
அதுநாள்வரை ஆண்களின் சாம்ராஜ்யமாக இருந்த இசைத் துறையில் தைரியமாக நுழைந்து, ஆணுக்குப் பெண் சளைப்பில்லை என்பதை நிரூபித்தார் அந்தப் பெண்மணி. அக்காலத்தில் பிரபலமாக இருந்த பல சங்கீத வித்வான்களின் பாராட்டைப் பெற்றார். திரையிசைப் பாடல்களும் பாடினார். கர்நாடக இசையிலும் அளவற்ற சாதனை படைத்தார். பல இசை வாரிசுகளை உருவாக்கினார்.

அவர்தான் டி.கே. பட்டம்மாள்.

******


அவர் ஒரு மிகச்சிறந்த இசைக் கலைஞர். எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.ஸி. வசந்த கோகிலம், டி.கே. பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி போன்ற இசைக்கலைஞர் களுக்குப் பக்கவாத்தியம் வாசித்திருக்கிறார். பிரபல பெண் இசைக் கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்த ஒரே ஆண் லய வித்வான் என்ற பெருமைக்கும் உரியவர். ஆண் வித்வான்களுக்கும் வாசித்திருக்கிறார். ஒருமுறை சென்னையில் மாலியின் புல்லாங்குழல் கச்சேரிக்கு ஏற்பாடாகி இருந்தது. மாலி அசுர சாதகர். கச்சேரி ஆரம்பித்தாரென்றால் நேரம் போவது தெரியாமல் வாசித்துக் கொண்டிருப்பார். அவருக்குப் பக்கம் வாசிக்க அசாத்தியத் திறமை வேண்டும். கச்சேரி ஆரம்பமானது. நேரம் போவதே தெரியாமல் வாசித்துக் கொண்டிருந்தார் மாலி. மாலியுடன் இணைந்து வாசிப்பது அந்த மிருதங்க வித்வானுக்கு முதல்முறை வேறு. ஆனாலும் விடாமல் மாலியின் வேகத்துக்கு ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் வேகமாக வாசித்து, வாசித்து விரல்கள் வெடித்து ரத்தம் வழிய ஆரம் பித்தது. ஆனாலும் விடாமல் வாசித்துக் கொண்டிருந்தார்.

கச்சேரி முடிந்தது. மிருதங்க வித்வானின் கைகளைப் பார்த்த மாலி திடுக்கிட்டார். 'என்ன இது, என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா? இப்படியா ரத்தம் சொட்டச் சொட்டக் கச்சேரி செய்வது' என்று அந்த வித்வானைக் கடிந்து கொண்டார். மேலும், 'இன்னிக்கு ரொம்பப் பிரமாதம். தஞ்சாவூர் பாணியை ரொம்ப அற்புதமாக வாசித்தீர். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு!' என்று கூறி அந்த வித்வானைக் கட்டிக் கொண்டார். மாலி அவ்வளவு சுலப மாக யாரையும் பாராட்டி விடமாடார். அவர் பாராட்டியதை வசிஷ்டர் வாயாலேயே பிரம்ம ரிஷி பட்டம் பெற்றதைப் போல நினைத்து அகமகிழ்ந்தார் அந்த வித்வான். அவருக்கு கைவலியெல்லாம் பறந்து போய் விட்டது.

இவ்வாறு ரத்தம் சொட்டச் சொட்ட மிருதங்கம் வாசித்த அந்த வித்வான், பிரபல மிருதங்கக் கலைஞர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ராவ்.

******
Click Here Enlargeஅவருக்கு இசையின் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. நல்ல குரல்வளம். அழகாகப் பாடும் திறமை. 1928-ல் மியூசிக் அகாடமியில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசாகத் தங்கப்பதக்கம் வாங்கியிருந்தார். நல்ல இசைக் கலைஞராக ஆக வேண்டும் என்று அவருக்கு அளவற்ற ஆர்வம். ஆனால் அவர் தந்தைக்கோ அதில் ஆர்வம் இல்லை. ஆத்ம திருப்திக்காக வேண்டுமானால் இசையை சாதகம் செய்யலாமே தவிர, அதை வைத்துக் கொண்டு காலம் தள்ளமுடியாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதனால், ஏற்கனவே பி.ஏ. ஹானர்ஸ் தேறியிருந்த தன் மகன், தொடர்ந்து படிக்க வேண்டும், வக்கீலாக வேண்டும், இசையெல்லாம் வேண்டவே வேண்டாம் என்று திட்டவட்ட மாகச் சொல்லி விட்டார். அந்த இளைஞ ருக்கோ அளவற்ற மன வருத்தம். கடைசியில் அந்த இளைஞரின் நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவரது தந்தையிடம் பலவாறாகப் பேசி அவர் இசைத் துறையில் ஈடுபடச் சம்மதம் பெற்றனர்.

அதுமுதல் அந்த இளைஞர் இசையையே தனது முழுநேர வாழ்க்கையாக அமைத்துக் கொண்டார். எப்பொழுதும் இசை பற்றியே சிந்தித்தார். ஒருமுறை, எதிர்பாராமல் வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மிக அற்புதமாகக் கச்சேரி செய்து பாராட்டைப் பெற்றார். அவரது கம்பீரமான குரல்வளம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது. அவருக்குக் கச்சேரி வாய்ப்புகள் பெருக லாயின. பல இடங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து கச்சேரிகள் செய்தார். பல இசைத் தட்டுக்களை வெளியிட்டார். சிஷ்ய பரம்பரைகளை உருவாக்கினார். திரைப் படங்களில் நடித்தார். தனக்கென தனிப் பாணியை வகுத்து, 250 கிருதிகளுக்கும் மேல் இயற்றி ராகம் வகுத்தார். சிறந்த வாக்கேயக் காரராக விளங்கினார்.

கர்நாடக இசைப் பிரியர்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் அந்த மாமேதை, ஜி.என்.பி எனப்படும் கூடலூர் நாராயணசாமி பாலசுப்ரமணியம்.

******


அந்த வீட்டில் எல்லோரும் சங்கீதத்தில் அளவற்ற ஆர்வம் உடையவர்கள். தந்தை ராமசாமி சாஸ்திரிகள் மிகச் சிறந்த ஹரிகதா வித்வான். சகோதர, சகோதரிகளும் வாய்ப்பாட்டில், மிருதங்கத்தில் கெட்டிக் காரர்கள். ஆனால் அந்தச் சிறுவன் மட்டும் விதிவிலக்கு. ஆடிப்பாடுவதும், ஆலயத்துக்குச் சென்று இறைவனைத் தொழுவதும், பஜனைக் கோஷ்டிகளோடு சுற்றிக் கொண்டிருப்பதுமே அவனது அன்றாட வழக்கம். வேறு எந்த ஆர்வமுமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்த அவனுக்குச் சக மனிதர்கள் வைத்த பட்டப் பெயர் மக்கு, மடையன், முட்டாள். தாய்க்குச் சிறுவனின் நிலை குறித்து மிகவும் கவலை. முருகப் பெருமானிடம் அனுதினமும் முறையிட்டு வந்தாள்.
ஒருநாள்... அந்தச் சகோதரிகளின் கச்சேரிக்கு வழக்கமாக வயலின் வாசிக்கும் ஒருவர் வரவில்லை. அதனால் வயலின் இல்லாமலேயே கச்சேரி முடிந்தது. தந்தைக்கோ மிகுந்த கோபம். மறுநாள் வீட்டுக்கு வந்த வயலின்காரரைக் கடிந்து கொண்டார். அவரோ எகத்தாளமாக, 'பொண்களைப் பாட வச்சுட்ட. பையனை மிருந்தங்கம் வாசிக்க வச்சுட்ட. ஆனா, வயலினுக்கு என்னை எதிர்பார்த்துத்தானே நிக்க வேண்டியிருக்கு!' என்று சொன்னார். ராமசாமி சாஸ்திரிகளுக்கு அளவற்ற கோபம் வந்து விட்டது. அப்போது பார்த்து கையில் பிரசாதத்துடன் அந்தச் சிறுவன் வீட்டில் நுழைந்தான். கெட்டியாக அவன் கையைப் பிடித்துக் கொண்டார் சாஸ்திரிகள். ' வயலின் வாசிக்க உன்ன எதிர்பார்த்துத்தான் நிக்க வேண்டியிருக்குன்னு சொன்ன இல்ல, இதோ இவனை நான் பெரிய வயலின் வித்வானா ஆக்கிக் காட்டறேனா இல்லையான்னு பார்!' சவால் விட்டார். வயலின்காரர் கிண்டலாக முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினார். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. ஆனால் அவன் தாய், அவன் மீது நம்பிக்கை வைத்து, ஆறுதலாகப் பேசினாள். அனைத்தையும் பணிவோடு தந்தையிடம் கற்றுக்கொள்ளும் படியாக வேண்டிக் கொண்டாள். அது முதல் தந்தையே அவனுக்கு குருவானார். அந்தப் பையனுக்குத் தீவிர இசைப் பயிற்சி தொடர்ந்தது.

ஒரே வருடம். வயலினை நன்கு கற்றுத் தேர்ந்தான் அந்தச் சிறுவன். ஷண்முகநாதப் பெருமான் ஆலயத்தில் சகோதரிகள் பாட, சகோதரர் மிருதங்கம் வாசிக்க, அழகாக, அற்புதமாக வயலினை வாசித்து அரங்கேற்றம் நிகழ்த்தினான். அந்த நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தவர் இவ்வளவுக்கும் காரணமான அதே வயலின்காரர் தான்.
அன்று சாதித்துக் காட்டிய அந்தச் சிறுவன்தான் இன்றைய வயலின் மேதை குன்னக்குடி வைத்தியநாதன்.

******


வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாரபட்சம் இல்லாமல் அவர் எழுதிய விமர்சனங்கள் அவருக்குப் பாராட்டையும் அதே சமயம் பலத்த எதிர்ப்புகளையும் தோற்றுவித்தது. ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் தொடர்ந்து எழுதினார். இசை, நாட்டியமே அறியாதவர் களும் இவரது விமர்சனங்களை ரசித்துப் படித்தனர்.
அவர் இசை ரசிகர். நன்றாகப் பாடக் கூடியவர். நாடகங்களிலும் நடித்திருக்கிறார். இசையின் நுணுக்கங்களை நன்கு அறிந்தவர். அவர் ஒருமுறை பத்திரிக்கை ஒன்றுக்கு வாசகர் கடிதம் எழுதியிருந்தார். அதில், 'சாத்தூர் ஏ.ஆர். சுப்ரமணிய அய்யர் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான். ஆனால் 'தாயே நீ இரங்காய்' என்று பாடும் போது ஐயர் ஏன் 'இற்ரங்காய்' என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தின் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்?' என்று வினவியிருந்தார். அந்தக் கடிதத்தில் இருந்த நயமும், நகைச்சுவையும் அப்போது ஆசிரியராகவும், இசை விமர்சகராகவும் இருந்த கல்கியைக் கவர, அவர் அந்தக் கடிதம் எழுதிய நபரை தொடர்ந்து இசை விமர்சனக் கட்டுரைகளை எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். அன்று கல்கியின் வேண்டுகோளுக்கிணங்க அவர் தொடங்கிய பணி, இறுதிவரை தொடர்ந்தது. செம்மங்குடி சீனிவாசய்யர், வீணை எஸ். பாலசந்தர், கே.ஜே. ஏசுதாஸ் என பிரபல வித்வான்களாக இருந்தாலும் யாரையும் விட்டு வைக்காமல் தமது விமர்சனக் கணைகளால் தாக்கினார். அதே சமயம் மாண்டலின் ஸ்ரீனிவாஸ், உன்னி கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ என இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கவும் செய்தார். வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாரபட்சம் இல்லாமல் அவர் எழுதிய விமர்சனங்கள் அவருக்குப் பாராட்டையும் அதே சமயம் பலத்த எதிர்ப்புகளையும் தோற்றுவித்தது. ஆனாலும் அதற்கெல்லாம் அஞ்சாமல் அவர் தொடர்ந்து எழுதினார். இசை, நாட்டியமே அறியாதவர் களும் இவரது விமர்சனங்களை ரசித்துப் படித்தனர்.

அவர்தான் இசை விமர்சகர் சுப்புடு.

******


சிறு வயதிலிருந்தே அந்தப் பெண்ணுக்கு இசை மீது ஆர்வம் அதிகம். வீட்டில் இருந்த பழைய ஒலிப்பதிவுக் கருவியில் தினமும் பாடல்களைக் கேட்டு, கூடவே பாடிக் கொண்டிருப்பாள். ஒன்பது வயதாக இருக்கும் போது வேலூர் சங்கீத சபாவில் ஒரு போட்டி நடந்தது. அதில் அவளும் கலந்து கொண் டாள். பாடலை இனிமையாகப் பாடினாள். அவளுக்கு முதல் பரிசு கிடைத்தது. ஆனாலும் சிபாரிசின் காரணமாக அந்தப் பரிசை வேறொருவருக்குக் கொடுத்துவிட்டு அவளுக்கு இரண்டாம் இடம் என்று அறிவித்து விட்டார்கள். அவளுக்கு அதில் சிறிது வருத்தம்தான் ஆனாலும் ஓர் மகிழ்ச்சி. காரணம், அந்தப் பரிசை அவளுக்கு வழங்கியது அந்தக் காலத்தின் மிகப் பிரபல வித்வான்களான அரியக்குடி ராமானுஜ அய்யங்காரும், மைசூர் சௌடய்யாவும். அன்று முதல் அவளது இசை ஆர்வம் மேலும் தீவிர மாகியது. தானும் ஒரு இசைக் கலைஞராக வேண்டும் என்று தீவிரமாக உழைத்தாள். வயலின் வித்வான் எல்லையாவிடமிருந்தும், நாதஸ்வரக் கலைஞர் முருகனிடமிருந்தும் பாட்டு கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.

அவள் அப்போது பத்தாவது படித்துக் கொண்டிருந்த நேரம். ஒருநாள் உள்ளூரில் நடந்த கச்சேரி ஒன்றில் தனித்துப் பாடும் வாய்ப்பு அவளுக்குக் கிடைத்தது. அவளுக்குச் சற்று பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பாடினாள். அவையினர் கரகோஷம் காதைப் பிளந்தது. அது முதல் அவளுக்கு வாய்ப்புகள் பெருகின. பல இடங்களுக்கும் சென்று கச்சேரி செய்தாள். பிரபல வித்வான்களின் பாராட்டுக்களைப் பெற்றாள். வெளிநாடுகளுக்கும் சென்று இசையின் பெருமையைப் பரப்பினார்.

அவர்தான் பிரபல கர்நாடகக் கலைஞர் மணி கிருஷ்ணசாமி.

அரவிந்த்
மேலும் படங்களுக்கு
Share: 




© Copyright 2020 Tamilonline