Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
நேர்காணல்
சிக்கல் மாலா சந்திரசேகர்
"நான் அமெரிக்காவிற்குக் குடிபெயரவில்லை" - கே.ஜே. யேசுதாஸ்
- கேடிஸ்ரீ|மே 2004||(2 Comments)
Share:
Click Here Enlargeபடத்திற்குப் படம் புதுமுகங்களும், இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகர்களும் புதிது புதிதாய் அறிமுகமாகும் இந்தக் காலத்தில் தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கு மேல் தன் வசீகரமான குரலால் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் கே.ஜே. யேசுதாஸ்.

தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் வட இந்திய மொழிகளிலும் பாடிக் கலக்கியவர். ஒரு காலத்தில் சென்னைக்கும் மும்பைக்கும் மிக அதிகத் தடவைகள் பறந்ததற்காக இவரை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் கௌரவித்தது.

கர்நாடக இசையுலகிலும் முன்னணி இசைக்கலைஞர். அதுவமல்லாமல் இவர் சபரிமலைக்குப் போகும் கிறித்தவர்!

இவர் பாடிய 'தெய்வம் தந்த வீடு' இவரைத் தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் எல்லாம் பிரபலமாக்கியது என்றால் 'சித்சோர்' இந்திப் படத்தின் பாடல்கள் இவர் கொடியை வடக்கில் உயர்த்திப் பிடித்தது. இவரைப் பேட்டி கண்டபோது...

பூர்வீகம்

என் சொந்த ஊர் கேரளாவில் உள்ள கொச்சி. நான் ஜனவரி 10, 1940 அன்று பிறந்தேன். என் அப்பா அகஸ்டின் ஜோசப் நடிகர் மற்றும் பாடகர். அந்தக் காலத்தில் பாடுபவர்கள்தான் நடிக்க வரமுடியும் என்பதால் என் அப்பா நடிகராகப் புகழ்பெற முடிந்தது. அவர் சங்கீதம் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. செவிவழி ஞானமே. கர்நாடக சங்கீதத்தைத் தன் பிள்ளைகளில் யாருக்காவது கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிற ஆசை அவருக்கு இருந்தது.

நாங்கள் 5 குழந்தைகள் - எனக்கு மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. எங்கள் எல்லோருக்குமே சங்கீதத்தில் ஈடுபாடு இருந்தது. ஆனால் அப்பா என்னைத்தான் சங்கீதம் கற்றுக்கொள்ள வைத்தார். பொதுவாகக் கிறித்தவர்கள் சங்கீதம் - அதுவும் கர்நாடக சங்கீதம் - கற்றுக்கொள்ள முன்வரமாட்டர்கள் என்கிற கருத்திற்கு மாறாக அப்பா என்னைச் சங்கீதம் கற்க அனுமதித்தார். என்னுடைய 5வது வயதில் முறைப்படிச் சங்கீதம் கற்கத் தொடங்கினேன்.

குருவரிசை...

என் முதல் குரு அப்பாதான். பிறகு கொச்சியில் நாதஸ்வர வித்வான் ராஜரத்தினம் பிள்ளையின் சிஷ்யரான குஞ்சுவேலன் ஆசான் அவர்களிடம் கற்றுக்கொண்டேன். பிறகு ஜோசப், ராமகுட்டி பாகவதர், சிவராமன் நாயர் என்று பலரிடம் இசை கற்றுக்கொண்டேன்.

பிறகு நான் திருபுவனதுறையில் மியூசிக் அகடாமியில் சேர்ந்து படித்தேன். கேரளாவில் அப்போது இசைக்காக மூன்று அகாடமிகள் இருந்தன. திருபுவனதுறையில் உள்ள ஆர்.எல்.வி மியூசிக் அகாடமியில் என்னுடைய பள்ளி இறுதியாண்டுப் படிப்பை முடித்தவுடன் நான்கு வருடம் கானபூஷணத்திற்காகப் படித்தேன்.

ஏற்கெனவே எனக்கு ஓரளவுக்கு சங்கீதப் பயிற்சி இருந்ததால் இதை மூன்றே வருடத்திற்குள் படித்துமுடித்து கானபூஷணம் பெற்றேன். இதன் பிறகு வித்வான் படிப்புக்காக திருவனந்தபுரத்தில் உள்ள சுவாதித்திருநாள் அகாடமியில் சேர்ந்தேன். அப்போது அதன் முதல்வர் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர்.

ஆர்.எல்.வி மியூசிக் அகாடமியில் என்னால் மறக்க முடியாதவர் என் குரு கே.ஆர். குமாரஸ்வாமி. இவர்தான் என் இசையைப் பரிமளிக்க வழிசெய்தார். பல விஷயங்கள் இவர் மூலமாகத்தான் நான் அறிந்துகொண்டேன். திருவனந்தபுரத்தில் சுவாதித்திருநாள் அகாடமியில் ஒருவருடம் படித்தேன். உடல்நிலை சரியில்லாது போகவே நான் மறுபடியும் என் சொந்த ஊருக்கு (கொச்சி) வந்துவிட்டேன்.

திரைப் பயணத்தின் துவக்கம்

நான் கொச்சிக்குத் திரும்பி வந்த சிறிது காலத்தில் எனக்கு சினிமாவில் பாடச் சந்தர்ப்பம் ஏற்பட்டது. 1961ல் சினிமா பிரவேசம். 'கால்பாடுகள்' என்கிற அந்த மலையாளப் படத்தில் நான் பாடியது மொத்தம் நான்கு வரிகள்தான். ஆனால் அந்த வரிகள் என்னுடைய வாழ்க்கையைப் பொறுத்தவரை வைரவரிகள் என்றே சொல்வேன். இன்றும் அந்த வரிகள் நினைவில் நிற்கின்றன.

சாதிபேதம் மத துவேஷம் ஏதுமில்லா
சர்வரும் சோகதரத்துவன
வாழ்ந்த
மாத்ருகா ஸ்தானமிது

என்ற நாராயணகுருசாமி எழுதிய பாடல்தான் நான் முதன்முதலாகப் பாடிய பாடல். சாதி பேதமில்லாமல் எல்லோரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்கிற பொருள் கொண்ட அந்தப் பாடலை இன்றும் நான் எங்கு சென்றாலும் பாடுவேன். சாதி, மதப் பூசல்கள் நிறைந்த இக்காலத்தில் இப்பாடல் மிகவும் பொருத்தமானதானதாகும்.

தமிழ்த் திரையுலகில் நுழைந்தேன்

நான் சென்னையில் வசித்ததால் என்னைத் தமிழ் திரைப்படத்தில் பாட அழைத்தார்கள். எஸ். பாலசந்தரின் இசையமைப்பில் 'பொம்மை' படத்திற்காக 'நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடலைப் பாடினேன். அவரே அப்படத்தை இயக்கினார்.

ஆனால் அதன் பிறகு எனக்குத் தமிழில் பெரிய அளவில் வாய்ப்புக் கிட்டவில்லை. அது விஸ்வநாதன் ராமமூர்த்தி இணை கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலம். அவர்கள் என்னை 'காதலிக்க நேரமில்லை' படத்தில் பாட வைத்தார்கள். ஆனால் அதன் பிறகும் எனக்கு நீண்ட இடைவெளி. மறுபடியும் எம்.எஸ்.வி. 'அவள் ஒரு தொடர்கதை' படத்தில் வாய்ப்பு கொடுத்தார். 'தெய்வம் தந்த வீடு' பாடல் என்னைத் தமிழில் பிரபலமாக்கியது. அதன்பிறகு பல பாடல்கள் பாடினேன்.

எம்.ஜி.ஆருக்குப் பின்னணி பாடினேன்

ஒருநாள் எம்.ஜி.ஆர் என்னை அழைத்து (அதுவரை அவருக்குப் பாடியவர் டி.எம். செளந்தரராஜன்) 'உரிமைக்குரல்' படத்தில் 'விழியே கதை எழுது' பாடலைப் பாடச் சொன்ன போது நான் அளவில்லாத சந்தோஷம் அடைந்தேன். அது மிகப் பிரபலமானது எனக்கு மேலும் சந்தோஷத் தைத் தந்தது.

எம்.ஜி.ஆர் ஒரு மகா மனிதர். அவர் என்னைப் பாட வைத்தது என்னுடைய பாக்கியம். பின்னாளில் நான் அவரைப்பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன். இசைக்கு அவர் படங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்தார்.

அவர் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் குணம் உடையவர். சொல்லப் போனால் அன்று கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருந்தன. படத்தில் ஒரு பாடலுக்குப் பலர் பாடல் வரி எழுதிக் கொடுத்தும் திருப்தியாகவில்லை. கடைசியில் அவரே "ஏன் நாம் கண்ணதாசனை அழைக்கக்கூடாது?" என்று கூறினார். எல்லோரும் தயங்க "அதெல்லாம் இருக்கட்டும்... அவர் அவர்தான்... அவரிடம் சென்று கதைக்கான சூழலைச் சொல்லிப் பாடல் வாங்கி வாருங்கள்" என்றார். கண்ணதாசனும் அதற்குரிய பாடல் வரியை எழுதி அனுப்பினார். 'ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ' என்ற பாடல். அங்கு பகை ஓடியது. கலைதான் நின்றது. அவர் இசைக்காகப் பிறந்தவர். 10 டியூன் போட்டுக் காண்பித்தால் அதிலிருந்து அவரே செலக்ட் செய்வார்.

'சித்சோர்' செய்த மாயம்

மலையாளத்தில் நான் பிசியாக இருந்த நேரம், சலீல்செளத்ரி 'செம்மீன்' படத்திற்காக என்னைப் பாட வைத்தார். அது ஜனாதிபதி பரிசைப் பெற்றது. பாடல்கள் அத்தனையும் அற்புதம். மலையாள தேசத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமானது செம்மீன். அப்போது சலீல் செளத்திரி என்னை ஹிந்திப் படத்தில் பாடுமாறு கேட்டுக்கொள்ள 'ஆனந்த் மஹால்' என்கிற படத்தில் 'நிசகமபநி' என்கிற பாடலை பாடினேன். 'சோடி சி பாத்' முதலில் வந்தாலும் நான் பாடிய முதல் ஹிந்திப் பாடல் 'ஆனந்த் மஹால்'தான்.

'சித்சோர்'தான் எனக்கு ஹிந்தியில் பெரிய திருப்புமுனை. ரவீந்திர ஜெயின் பெரிய ஜீனியஸ். அவரே பாட்டு எழுதுவார்; அவரே இசையமைப்பார். ஹிந்தியில் நான் கால் ஊன்றியது 'சித்சோர்' படத்தினால்தான்.

பாடாத மொழியில்லை

தென்னிந்திய மொழிகளான மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் இவற்றில் பாடியிருக்கிறேன். ஹிந்தியில் பாடியிருக் கிறேன். எல்லா மொழிகளிலும் சேர்த்துக் கிட்டத்தட்ட 30,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளேன்.

பரிசுகள் பலப்பல

1972ல் 'அச்சனும் பாப்பையும்' (achanum bapaiyum) என்ற மலையாளப் படத்தில் பாடிய 'மனுசன் மதங்களை சிருஷ்டிச்சு' பாடலுக்குத் தேசிய விருது கிடைத்தது. அதன் பிறகு 1973ல் நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கி கெளரவித்தார்கள். ஐந்துமுறை மலையாளம், ஒருமுறை ஹிந்தி மற்றும் ஒருமுறை தெலுங்கு பாடல்களுக்காக தேசிய விருதுகள் பெற்றுள்ளேன். இதைத் தவிர தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் மாநில விருதுகளைப் பெற்றுள்ளேன்.

உடுப்பி, சிருங்கேரி, ராகவேந்திரா போன்ற ஆன்மீகத் தலங்களின் ஆஸ்தான வித்வான் பட்டமும் எனக்குக் கிடைத்துள்ளது.

'தரங்கிணி' தொடங்கியது

தரங்கிணி நிறுவனம் 1971ஆம் ஆண்டு உருவானது. அந்தக் காலத்தில் சில இசை நிறுவனங்களின் ஆதிக்கம் வலுவாக இருந்தது. தங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் துறையில் வரக்கூடாது என்பதில் அவர்கள் தீவிரமாக இருந்தார்கள். அவர்களை எதிர்க்க அன்று எல்லாக் கலைஞர்களும் பயந்தார்கள். நான்தான் தைரியமாகத் தரங்கிணியை ஆரம்பித்தேன். தரங்கிணி கடவுள் அருளால் இன்று நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது.

தமிழில் 'ப்ரியா' படத்தின் மல்டி ரிக்கார்ட் நாங்கள் தான் செய்து கொடுத்தோம். அந்தக் காலத்தில் ஆடியோ கேசட் வெளியீட்டில் தரங்கிணியின் பங்கு பெரியது. முதன்முதலாக கேரளாவில் தொடங்கப்பட்ட ஸ்டூடியோவும், ரிகார்டிங் சென்டரும் தரங்கிணிதான். அதன் பிறகு சென்னையில் குரல் விரவும் ஸ்டூடியோ (Voice mixing studio) தொடங்கப்பட்டது. தரங்கிணியின் மூலம் நான் பாடிய ஆல்பங்கள் பல வெளியாகியுள்ளன. வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களை வைத்தும் ஆல்பங்கள் பல தயாரித்துள்ளது தரங்கிணி.

இசையமைப்பாளர் ஆகும் ஆசை...

இருந்தது. நான் ஐந்தாறு மலையாளப் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். தமிழில் 'ஜீசஸ் கிரைஸ்ட்' என்கிற படத்திற்கு இசையமத்திருக்கிறேன். ஆனால் அந்த ஆசையைப் பாதியில் நிறுத்திவிட்டேன். காரணம் என்னுடைய நினைவாற்றல்.

ஒருமுறை நான் ஒரு பாடலைக் கேட்டேன் என்றால் அந்தப் பாடல் என்னுள் ஆழமாகப் பதிந்துவிடும். இதனால் நான் இசையமைக்கும் போது பல தடவை என் இசையமைப்பில் அந்தப் பாடல்களின் சாயல் பிரதிபலிக்கும். ஏற்கெனவே வந்த பாடல்களின் சாயல் என்னுடைய இசையில் மீண்டும் வருவதை நான் விரும்பவில்லை.

இக்காரணத்தினால் எனக்கு இசையமைக்க நிறைய நேரம் தேவைப்பட்டது. இன்றைய காலத்தில் உடனுக்குடன் எல்லாம் கிடைக்கவேண்டும் என்கிற நிலையில், தொடர்ந்து படங்களுக்கு இசையமைக்க முடியவில்லை.

பாடுபவரின் குரலை இன்றைய பின்னணி இசை விழுங்கிவிடுகிறதா?

ஆமாம். பாடுபவர்களின் குரலைவிட இசைதான் மேலே கேட்கிறது. இதைத் தவிர்க்க வேண்டும். காலத்திற்கேற்ப இசை மாறிவருவது தவிர்க்க முடியாதது. ஆனால் பழைய இசையையும் அறிந்துகொள்ள வேண்டும். எனக்குத் தெரியாது என்று சொல்லக்கூடாது.

பாட வந்த காலகட்டத்தில் சுசிலா, ஜானகி என்று பெரிய பாடகர்களுடன் பாடும்போது இருந்த உணர்வு...

எனக்கு எந்தவித பயமும் ஏற்படவில்லை. ஏனென்றால் அவர்கள் எனக்குப் பாடும் போது உறுதுணையாக இருந்தார்கள். நன்றாகப் பாடவேண்டுமே என்ற அச்சமே ஏற்படும். அன்றைய காலத்தில் சுசிலாம்மா, ஜானகியம்மா போன்றவர்களைப் பார்த்துக் கொண்டுதான் நாங்கள் பாடுவோம். ஆனால் இன்று அப்படியில்லை. அவரவர் பாடிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். யாரை யும் யாரும் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. பாடிய பின்பு பாடலில் என்ன மாற்றுகிறார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது.

ஜேசுதாசுக்குப் பிடித்த இசையமைப்பாளர், பாடகர்...

விஸ்வநாதன், இளையராஜா, தேவராஜன், தட்சிணாமூர்த்தி, பாபுராஜ் என்று பல இசையமைப்பாளர்களுக்குப் பாடியிருக்கிறேன். எனக்கு முகமது ர·பியின் குரல் பிடித்தமானது. அவருடன் எனக்குப் பாடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்று அமைந்தது. ஆனால் ஏதோ காரணத்தினால் நாங்கள் இணைந்து பாட முடியாமல் போய்விட்டது. அவர் என்னை மகனே ("பேட்டா") என்றுதான் அழைப்பார். அதை நான் பெருமையாகக் கருதுகிறேன். கிஷோர் குமாருடன் பழகியிருக்கிறேன்.

கர்நாடக சங்கீதமும், சினிமா இசையும்...

இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இசையில் கமகம்தான் மிக முக்கியம். ஒவ்வொரு ராகத்தையும் இணைத்துப் பாடுவதில்தான் வித்தியாசம் இருக்கிறது. அதாவது இரண்டையும் 'combine' பண்ணுவதில்தான் வித்தியாசம். சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். சினிமாவில் பாடுவதால் நான் இன்று வெளியுலகில் அறியப்படுகிறேன்.

இங்கு நான் ஒன்று சொல்ல வேண்டும். எனக்கு இரண்டு அம்மாக்கள். ஒன்று சினிமா அம்மா. மற்றொன்று கர்நாடக இசை அம்மா. எனக்கு தைரியம் கொடுத்தது சினிமா அம்மா என்றால் என்னுடைய ஒரிஜனல் அம்மா கர்நாடக இசை என்று சொல்வேன். சினிமா இசையில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன. அதுவும் உயர்ந்த இசைதான்.

இசை வாரிசு

என் இரண்டாவது மகன் விஜய் இப்போது பாடிக்கொண்டிருக்கிறான். ஆனால் இசையில் அவன் நிறையத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இப்போது என்னை எடுத்துக்கொண்டீர்களானால் நான் இன்றும் நிறையப் படித்துக் கொண்டிருக்கிறேன். என் மகனுக்கு நான் சொல்வதெல்லாம் என்னவென்றால் நிறையப் பாட வேண்டும். நிறையப் பயிற்சி செய்ய வேண்டும். சிந்தனை முழுவதும் இசையிலேயே செலுத்த வேண்டும் என்பதுதான்.

புரிந்தமொழியில் பாடினால்தான் ரசிக்க முடியும் - உண்மையா?

இசைக்கு மொழிபேதம் கிடையாது. எல்லா சங்கீதமும் ஒன்றுதான். தெலுங்குக் கச்சேரியை கேட்கிறவர்கள் அர்த்தம் தெரியாமல் ரசித்து கொண்டிருக்கிறார்கள் என்பது தவறு. பாடல்களைக் கேட்க வேண்டும். கர்நாடக சங்கீதம் எல்லோருக் கும் பொதுவானது. இது நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கிப் போய்விடக்கூடாது. வரவேண்டும். எல்லோரும் கேட்க வேண்டும்.

ஏன் தமிழிலேயே கீர்த்தனை பாடினால் எத்தனை பேருக்கு அதன் அர்த்தம் புரிகிறது. ஒருமுறை அராபியர்கள் மத்தியில் நான் அராபிய மொழிப் பாடலை ஆனந்த பைரவியில் பாடினேன். அவர்கள் அத்தனை பேரும் என்னைப் பாராட்டினார் கள். அதுபோல் ஆங்கிலப் பாடல் ஒன்றை ஒரு நிகழ்ச்சியில் பாடினேன். எல்லோரும் ரசித்தார்கள். காதுகொடுத்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் சங்கீதம் புரியும்.

உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து...

நான் சர்வதேசப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான நாடாளுமன்றத்தில் செனட் குழுவின் உறுப்பினராக உள்ளேன். 1965ல் இந்தியாவின் கலாச்சார தூதுவராக சோவியத் ரஷ்ய அரசின் வேண்டுகோளை ஏற்று அங்கு பல இடங்களில் இசை நிகழ்ச்சியை நடத்தியதுமட்டுமல்லாமல் கசக்கிஸ்தான் (அன்று ஒன்றாக இருந்த சோவியத் ரஷ்யாவின் ஓர் அங்கம்) வானொலியில் ரஷ்யப் பாடலை பாடி அந்நாட்டு மக்களின் பாராட்டுதலைப் பெற்றேன்.

1965 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் பங்களாதேஷ் போரின் போது இந்திய அரசுக்குப் பல இடங்களில் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தி நிதிதிரட்டி, அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் அளித்தேன். இதுதவிரப் பல வெளிநாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் நடத்தியுள்ளேன். ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஸ்வீடன் என்று பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று கச்சேரிகள் செய்திருக்கிறேன்.
செம்பையைப் பற்றி...

கர்நாடக இசையில் நான் இன்று இவ்வளவு பெரிய பெயரும் புகழும் அடைந்து உங்கள் முன் பேசுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் செம்பை (வைத்தியநாத பாகவதர்) அவர்கள்தான். முதன்முதலாக மும்பையில் நடந்த என் இசைநிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கியது மட்டுமல்லாமல் என்னைப் புகழ்ந்து பேசியதையும், என்னை ஆசிர்வதித்ததையும் என்னால் மறக்க முடியாது. அவரிடம் எனக்கு ஏற்பட்ட தொடர்பிற்குப் பிறகுதான் நான் இசையுல கில் பெரிதாக அறியப்படலானேன். நிச்சயமாக என் வளர்ச்சிக்கு குருநாதர் செம்பை அவர்களின் அனுக்கிரகம்தான் காரணம்.

எம்.எஸ். சுப்புலட்சுமி, மறைந்த செம்மங்குடி ஸ்ரீனிவாசஐயர் போன்றவர்களைப் பற்றி..

கர்நாடக சங்கீதத்திற்காக அவர்கள் செய்த தியாகம் அளப்பரியது. எம்.எஸ். அம்மா, செம்மங்குடி, செம்பை போன்றவர்கள் எந்தவித வசதியும் இல்லாத காலத்தில் பல இடங்களுக்குச் சென்று கர்நாடக சங்கீதத்தைப் பரப்பியிருக்கிறார்கள். அவர்கள் வாழும் காலத்தில் வாழ்வதே பெரும் பாக்கியம்.

திருவையாறு தியாகராஜ உற்சவமும் நானும்...

திருவையாறு உற்சவத்தில் நான் வருடாவருடம் கச்சேரி செய்வேன். ஆனால் இந்த வருடம் பாட முடியவில்லை. ஏனென்றால் மூகாம்பிக்கைக்கு எப்போதும் நான் செல்வது வழக்கம். ஒவ்வொரு வருடமும் அங்கு ஜனவரி 10ம் தேதி செல்வேன். பக்கத்தில் ஒரு கிராமத்தில் கச்சேரி இருந்தது. நான் அந்தக் கிராமம் மங்களூரிலிருந்து அருகில் இருக்கிறது என்று நினைத்தேன். 11ம் தேதி அங்கு கச்சேரியை முடித்துவிட்டு மங்களூரிலிருந்து விமானம் மூலம் திருவையாறு உற்சவத்திற்கு வந்துவிடலாம் என்று நினைத்தேன்.

ஆனால் என்னால் குறித்த நேரத்திற்கு விமானநிலையத்திற்கு வரமுடியவில்லை என்பதால் நான் குன்னக்குடி வைத்தியநாதனிடம் தொலைபேசி மூலமாக வர இயலாததற்கு மன்னிப்பு கேட்டேன்.

கர்நாடக இசை வளர்ந்து கொண்டு வருகிறதா?

இன்று இளைய தலைமுறையினரிடையே கர்நாடக இசை கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பது உண்மை. தொலைக்காட்சிகளில், குறிப்பாக 'சப்தஸ்வரங்கள்' போன்ற நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இளைய தலைமுறையினரின் ஆர்வத்தை அறிய முடிகிறது. மேலும் மேலும் இசைக் கலைஞர்கள் இத்தகைய நிகழ்ச்சிகளின் மூலம் உருவாகக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது.

இளம் கலைஞர்களுக்கு அறிவுரை...

நான் கூறுவது எல்லாம் ஒன்றுதான். பெரியோர்களின் பாடலைக் கேட்டு இசையில் அதிக ஈடுபாடு கொள்ள வேண்டும். இசைப் பயிற்சிக்குக் காலநேரம் பார்க்க கூடாது. அதுமட்டுமல்லாமல் நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டும். பாடப்பாடத்தான் ராகம். எந்த வகையிலும் நம் கலாச்சாரத்தை மறக்கக்கூடாது.

இணையத்தின் மூலம் இசை பயிற்றுவிக்கப்படுவதைப் பற்றி...

குருவிடம் சென்று இசை கற்றுக் கொள்வதற்கு அது ஈடாகாது. வெறும் புத்தகம் பைரவி ராகம் சொல்லித்தராது. கர்நாடகம் என்றால் ஏதோ கர்நாடகத்தி லிருந்து வந்தது என்பதில்லை. கர்ணம் என்றால் காது. அடக்கம் என்றால் காதில் அடக்க வேண்டியது என்று அர்த்தம். குரு முன்னால் உட்கார்ந்து அவரின் முக பாவத்திலிருந்து கற்றுக்கொள்வது போல் இணையத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியாது.

அமெரிக்காவிலே நிரந்தரமாக வாசமா?

எல்லோரும் அப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவிற்கு என் பிள்ளைகளின் படிப்பிற்காகச் சென்றேன். இப்போது நான் நிரந்தரமாக இந்தியா வந்துவிட்டேன். சென்னையில் தான் தங்கியிருக்கிறேன். இனிச் சென்னையில்தான் இருப்பேன்.

*****


கிறித்துவரின் ஐயப்ப பக்தி

கிறித்துவனாக இருந்தவன், இந்துவாக மாறிவிட்டேனோ என்று நிறையப் பேர் நினைக்கிறார்கள். நான் பரப்பிரம்மத்தை நேசிக்கிறவன். பிரம்மமான அந்த சக்தியை நான் எப்படி உணர்கிறேன் என்றால் அவர் பிறக்கவும் இல்லை, இறக்கவும் இல்லை. அப்படிப்பட்ட பரப்பிரும்மத்தை எந்த சாதியில் சேர்க்க முடியும்.

அந்த மாதிரிதான் ஐயப்பன். நீங்கள் பிராமணராக இருந்தாலும் சரி, தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் சரி, கிறித்துவராக இருந்தாலும் சரி, இந்துவாக இருந்தாலும் சரி - நீங்கள் மாலை போட்டுவிட்டீர்கள் என்றால் ஐயப்பன் ஆகிவிடுறீர்கள். உங்களுடைய நிஜப்பெயரே 48 நாட்களுக்கு மாறிவிடுகிறது. நீங்கள் ஐயப்பனாக மாறுகிறீர்கள். யாராக இருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும் அந்த 48 நாட்களும் ஐயப்பன் நாமத்தைத் தனக்கு வைத்துக் கொள்கிறீர்களே. இந்த மாதிரி எங்கேயிருக்கிறது?

ஐயப்பன் சன்னதி ஒன்றில்தான் நாம் எல்லோரும் சகோதரர்களாக பாவிக்கப்படுகிறோம். இன்று அரசியல்வாதிகளோ மற்றவர்களோ கூறுகிற சகோதரத்துவம் அங்கு இருக்கிறது. பம்பாவில் எல்லோரும் ஒன்றுகூடிச் சாப்பிடுவதில் நான் அந்தச் சமத்துவத்துத்தை பார்க்கிறேன். நான் செல்வது தேவலாயங்கள்தான். ஆகையால் என்னை யாரும் தவறாக நினைக்கவேண்டாம். கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஐயப்பன் கோவிலுக்குச் சென்று கொண்டிருக்கிறேன்.

சந்திப்பு: கேடிஸ்ரீ
தொகுப்பு: மதுரபாரதி
More

சிக்கல் மாலா சந்திரசேகர்
Share: 




© Copyright 2020 Tamilonline