Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2004 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | புழக்கடைப்பக்கம் | இலக்கியம் | கவிதைப்பந்தல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க சிரிக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புதிரா? புரியுமா? | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிரிக்க சிரிக்க
மீனாஸ்கி
- |மே 2004|
Share:
இந்த முதல் பெயர், நடுப் பெயர், கடைசிப் பெயர் என்பதெல்லாம் நான் தமிழகத்தில் இருந்தவரை அறிந்திருக்கவில்லை. மற்ற இனத்தவர் களிடையே, மேனன், நாயர், ரெட்டி, ஜோஷி, படேல் என்று முடிவுப் பெயர்கள் இருப்பது போல் தமிழர்களுக்கு அமைந்த தில்லை. மேலும் பெரும்பான்மையான தமிழ் மக்களைப்போல் எங்கள் குடும்பத்தில் யாவருக்கும் குடும்பப் பெயர் என்று ஒன்றும் கிடையாது. ஆனால் எல்லோருக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட நீளமான பெயர்கள் உண்டு. அதிலும் எனக்கு சூட்டப்பட்ட பெயர் விஸ்வரூபம் எடுத்த அனுமார் வால் போல் நீளமானது. அதனாலென்ன என்கிறீர்களா? சொல்கிறேன்.

எனது பெயர் சூட்டுவிழா சமயத்தில் எங்கள் குடும்ப வழக்கப்படி, எனது புதுப் பெயரான, என் தந்தை வழித் தாத்தா பெயரை எனது மாமா, என் காதில் சொல்லி முடிக்க மூன்று நிமிடம் எடுத்துக் கொண்டா ராம். பின்னே, அட்சரம் தப்பாமல் "ராம நல்லூர் வேதாந்த ஹரிஹரசுப்ரமணிய வெங்கடகிருஷ்ண மீனாட்சிசுந்தரம் கோதண்டராமன்" என்ற பெயரை மூன்று முறை காதில் சொல்லவேண்டுமே!

இந்தப் பெயரைத்தான் எனக்கு வைக்க வேண்டும் என்று இரட்டைக்காலில் நின்றவள் என் வருங்கால மனைவியைப் பேத்தியாகப் பெற்ற, 'வைரத்தோடு' அத்தைப் பாட்டி. அத்தைப்பாட்டியாக இருந்தாலும், அத்தை என்றேதான் நாங்கள் அழைக்க வேண்டும் என்று உத்தரவு போட்டவள். எங்கள் குடும்பத்தில் அவள் தான் சுப்ரீம் கோர்ட். இடிஅமின். அமெரிக்கா அமுக்கிப் பிடிக்காத சதாம் உசேன். அவள் சொன்ன சொல்லுக்கு மறுபேச்சு என்பதே கிடையாது.

மேலும் அந்தப் பெயர், ராமநல்லூர் என்று ராமாவில் ஆரம்பித்து, கோதண்ட ராமன் என்று ராமனில் முடிவது, என் வைரத்தோடு அத்தைக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த ஸ்ரீராமபிரானே தம் குடும்பத்தில் பேரனாக அவதரித்து விட்டதாக எண்ணி எண்ணி சந்தோஷம் கொண்டாள்.

முதல் ஐந்து வயது வரை, எல்லோரும் என்னை "சமத்துக்கட்டி" என்றும், பிறகு எனது சொந்தப் பெயரான கோதண்ட ராமனைச் சுருக்கி "கோண்டு" என்றும் அழைத்தனர். அதற்குப் பிறகு எனது முழுப் பெயரைச் சொல்லி யாரும் என்னை அழைத்ததாகத் தெரியவில்லை. வைரத் தோடு அத்தை மட்டும் அவ்வப்போது ராமபிரானை பக்தியுடன் நினைத்து, என்னை முழுப்பெயரில் கூப்பிட்டு, நான் அழுவதைப் பார்த்து சந்தோஷப்படுவாள். ஆனால் வத்சு மட்டும் "கோது" என்று செல்லமாக அழைப்பாள். வத்சு எனப்படும் வத்சலா வைரத்தோடு அத்தைப்பாட்டியின் பேத்தி. அத்தையின் வைரத்தோடுக்கு ஒரே வாரிசு மற்றும் என் வருங்கால மனைவி.

என்னைப் பள்ளியில் சேர்க்கும்போது அந்த நீளப் பெயரான ராமநல்லூர் to கோதண்டராமன் என்ற சொற்பொழிவை என் பெயராக முன்மொழிய வைரத்தோடு அத்தையும், என் அப்பாவும் கூடவே வந்தனர். தலைமை ஆசிரியரிடம் என் பெயர்த்தொடரை அத்தை சொல்லி முடித்து மூச்சு வாங்கிக் கொண்டிருந்தபோது, தலைமை ஆசிரியர் ஆச்சரியப்பட்டு "என்னது? இவன் ஒருத்தன் தானே இருக்கான். மத்த பேரெல்லாம் எங்கே?" என்று மூக்குக் கண்ணாடியை நுனி மூக்கில் இறக்கி வைத்துக் கொண்டு அறைக் கதவுக்கு அப்பால் கீழ்ப்பார்வை பார்த்தபடியே "அத்தனை பேரையும் சேர்க்கறதுக்கு இந்தப் பள்ளியில் இடம் இல்லை" என்று கறாராகக் கனைத்து முடித்தார்.

எப்போதாவது அபூர்வமாக வரும் சிரிப்பை பக்பக் என்று அவிழ்த்து விட்ட அத்தை "இவன் ஒருத்தன் பேருதான் இது. இந்த மாதிரிப் பேர் வைக்கறது வழிவழியா வர்ற எங்க குடும்ப வழக்கம்" என்றாள். தலைமை ஆசிரியர் "அவ்வளவு பெரிய பேர் எழுதற மாதிரி என்கிட்ட ரெஜிஸ்டர் இல்லை. ஒரு இனிஷியலோடு இவன் பேரை எழுதிக் கிறேன்" என்று அத்தையை ஒரு வழியாகச் சமாதானப்படுத்திப் பிறகு அவரே என் பெயரை "மீ. கோதண்டராமன்" என்று சுருக்கி, பதிவேட்டில், ஆங்கிலத்திலும், தமிழிலும் அட்சர சுத்தமாக எழுதிக் கொண்டார்.

பள்ளியில் பிச்சுமணி வாத்தியார் கணக்குப் பாடத்தில் புலி. அவரை நாங்கள் குச்சிமணி என்று தான் அழைப்போம். மூன்றடி நீள பிரம்புக் குச்சியை வைத்துக் கொண்டு, மனிதர் ருத்ரதாண்டவம் ஆடு வார். புஷ்ஷ¤க்கும், சதாமுக்கும் எவ்வளவு நெருக்கமோ, அவ்வளவு நெருக்கம் எனக்கும், கணிதப் பாடத்திற்கும். அன்று எந்தப் பட்சிதான் பிச்சுமணி சாரிடம், எனக்கு விடை தெரியாது என்று சொல்லியிருக் குமோ, எனக்குத் தெரியாது. அத்தகைய தினங்களில் சரியாக என்னைப் பிடித்து வைத்துக் கொண்டு "அடேய் கோண்டு, 24 சென்டிமீட்டர் நீளமும், 13 சென்டிமீட்டர் அகலமும் உள்ள செவ்வகத்தின் மூலை விட்டம் என்ன?" என்பது மாதிரியான கேள்வியை குச்சியை உருட்டியபடியே கேட்பார்.

இந்த மூலைவிட்டம், என் சிறிய மூளைக்குள் வட்டம்போட, முட்டைக் கண்களை முழித்துக் கொண்டு தொடை நடுங்க நின்று கொண்டிருப்பேன். சற்றும் எதிர்பாராத நேரத்தில் அவரது குச்சி என் உள்ளங்கையில் சுளீரென்று இரண்டு மூலைவிட்டங்களை எக்ஸ் வடிவத்தில் அழுத்தமாகப் போடும். "இன்னிலேந்து உன் பேரை கோண்டுக்கு பதிலா, மண்டுன்னு வைச்சுக்கோடா" என்ற வசைச் சொற்களும் உபரியாகக் கிடைக்கும்.

இப்படியாகக் கோண்டு என்றும், மண்டு என்றும், தண்டம் என்றும், கோதண்டராமன் என்ற என் பெயரைப் பகுதி பகுதியாகப் பிரித்து, அவரவர் வசதிக்குத் தகுந்த மாதிரி அழைக்க ஆரம்பித்தனர். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்த மன்னன் போல் பிச்சுமணியிடம் தப்பி வந்து, பட்டப் படிப்பெல்லாம் ஒருவழியாகத் தேறி, வெளிநாட்டில் வேலை தேட, அமெரிக்கா என்னை அரவணைத்துக் கொண்டது.

"கோட்டு போட்டுண்டு கொலராடோவுல வேலைக்குப் போப்போறான் நம்ப கோண்டு. என்ன இருந்தாலும் நான்தானே மொதல் மொதல்ல அவனைப் பள்ளிக் கூடத்து ரெஜிஸ்டர்ல பேர் எழுதிச் சேத்து விட்டேன். அத்தை கைராசி வீணாவாப் போகும்?" என்று, வைரத்தோடு அத்தை சொல்ல, அம்மாவும் "அவன் என் புள்ளை! புத்திசாலித் தனத்துல அப்டியே எங்க பரம்பரை. கோண்டுவா, கொக்கா" என்று தன் பங்குக்கு "கொக்கு" என்று கொசுறுப் பெயரும் சூட்டினாள். பிறகு அமெரிக்கா போக பாஸ்போர்ட் வாங்கும் போது என் தந்தையார் பெயரை என் பெயருடன் இணைத்து "மீனாக்ஷ¢ சுந்தரம் கோதண்டராமன்" என்று ஆங்கிலத்தில் ஒரு பெரிய பாராவாக கருப்பு மசியில், மடித்து மடித்து பாஸ்போர்ட்டில் எழுதியிருந்தார்கள். அந்தப் பெயர் தான் என் ஆயுளுக்கும் என்பது அப்போது தெரியவில்லை. வைரத்தோடு அத்தையும், பாஸ்போர்ட்டைப் பிரித்துப் பார்த்துவிட்டு, "ஏண்டா, தாத்தா பேரெல்லாம் இதுல இல்லையே!" என்றாள்.

கொலராடோ பனியில், எனக்கு வழங்கப்பட்ட பணியில் சேர்வதற்காக அலுவலகம் சென்ற முதல் நாள், லேசான உடை அணிந்த அமெரிக்கப் பெண் லூசி, தன்னை மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சில படிவங்களைக் கொடுத்து நிரப்பச் சொன்னாள். அதில் முதல் பெயர், நடுப் பெயர், கடைசிப் பெயர்களை எப்படி எழுதுவது என்று தெரியாமல் விழித்தேன். அவளே மிகவும் கருணையுடன், "கையெழுத்து மட்டும் போட்டு விடுங்கள், மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்", என்று சொல்லி, லேசாகச் சிரித்துச் சென்றவளைக் கண்டு வியந்து போனேன், அதன் பின்விளைவு தெரியாமல்! (வளைவு என்று படித்து விடாதீர்கள்). எங்கள் அலுவலகத்தில் நிறைய இந்தியர்கள் இருந்தனர். பெரும்பாலும் வட இந்தியர்கள். லூசி அவர்களுடன் அதிகம் பழகியிருந்ததால், இந்தியக் கலாசாரம் தனக்கு அத்துப்படி என்பதில் பிடிவாதமாக இருந்தாள். அவளுக்குத் தெரிந்ததெல்லாம், சப்பாத்தியும், ஆலு கோபியும், காகித தோசையும், நமஸ்கார் போன்ற இந்தி வார்த்தைகளும் தான். வட இந்தியர்களின் பெயர்கள் தெளிவாக முதல், நடு, கடைசி என்று இருக்கும். எப்பொழுதும் சாதனை செய்யத் துடிக்கும் லூசி, அவர்கள் பெயர்களில் செய்ய முடியாத சாதனையை என்னுடைய பெயரில் செய்தாள். தனக்குத் தெரிந்த அரைகுறை (வட)இந்திய ஞானத்தை முன் மாதிரியாகக் கொண்டு என் பெயரை மாற்றினாள்.

எனது பாஸ்போர்ட்டில் வழங்கப்பட்டிருந்த மீனாட்சிசுந்தரம் கோதண்டராமன் என்ற நாற்பது எழுத்துகள் கொண்ட முழுப் பெயரை உடைத்து, மீனாட்சி என்பதை முதல் பெயராகவும், சுந்தரம் என்பதை நடுப் பெயராகவும் கோதண்டராமனைக் கடைசிப் பெயராகவும் எனக்குச் சூட்டி, சமூகக் காப்புச்சேவை (சோசியல் செக்யூரிட்டி) அலுவலகத்துக்கும் எனது ஏனைய அமெரிக்க வாழ்வுக்குத் தேவையான அத்தனை அரசாங்க அலுவலகங்களுக்கும் இந்தப் பெயரையே வாரி வழங்கினாள். நானும் அவளிடம் சிரித்துக் கொண்டே "பிரமாதம்! பெயரை நன்றாகப் பிரித்திருக்கிறாய்" என்றேன், முதல் பெயரான மீனாட்சியிலிருக்கும் "பெண்மையை" உணராமல்!

அமெரிக்க நண்பர்கள் என் கடைசிப் பெயர் நீளமாக இருப்பதாகவும், எனவே என்னை முதல் பெயரிலேயே அழைக்க விரும்பதாகவும் சொல்ல, நானும் கோண்டு என்று கூப்பிடப் போகிறார்கள் எனத் தப்பாக நினைத்து சரி என்று உடனே சிரித்துக்கொண்டே அனுமதி தந்தேன்.

தந்தி மாதிரி தாவி வந்தது வினை. லூசி எனக்கு வழங்கிய முதல் பெயரான மீனாட்சி என்ற பெயரை, அமெரிக்க அலங்காரம் செய்து, என்னை அழைக்கப் பயன்படுத்தப் போகிறார்கள் என்ற விபரீதம் போகப் போகத்தான் புரிந்தது.

ஒருமுறை இரண்டு மூன்று சக அமெரிக்கத் தொழிலாளர்கள், பேசிக் கொண்டிருந்த போது, அவர்கள் பேச்சில் "மீனாஸ்கி" என்ற சொல் அடிக்கடி தட்டுப்பட்டது. நான் ஏதோ, தஸ்கி (TSCII), ஆஸ்கி(ASCII) என்று கணினியில் வரும் எழுத்துத் தரம் மாதிரி, மீனாஸ்கி என்பது புதிய எழுத்துத் தரம் என்று நினைத்திருந்தேன். அப்புறம்தான் தெரிந்தது, என்னைத்தான் அவர்கள் அந்தப் பெயரில் குறிப்பிட்டார்கள் என்பது!

ஒருவன் "மீஈஈஈனாக்ஸ்ஹி" என்று அழைத்தான். ஒருத்தி "மினசக்கி" என்றாள். இவ்வாறாக என்னை, மீனகாச்சி, மீனாகாஸ்ஹி, மீனாக்ஸ்கி என்றெல்லாம் அழைப்பார்கள். சிலர் "மீ...." என்று சொல்லி நிறுத்தி, உச்சரிக்கத் தடுமாறு வார்கள். அவ்வாறு நேரும் போதெல்லாம் அவர்களின் துயர் துடைக்கும் ராமனாக, "எஸ். இட்ஸ் மீ" என்று கூறி அவர்கள் சங்கடங்களைத் தவிர்ப்பேன். இன்னும் சிலர் இவ்வாறு அழைத்துவிட்டு கூடவே, "உன் பெயரைச் சரியாக உச்சரித்தேனா? எனக்கு ஆசியப் பெயர் என்றாலே அலர்ஜி!" என்று சிரித்துக் கொண்டே சொல்வார்கள்.

இப்பொழுதெல்லாம் கால் சென்டர் எனப்படும், அமெரிக்க அழைப்பு மையங்கள் இந்திய நகரங்களில் குறிப்பாக சென்னை, பெங்களூர் நகரங்களிலிருந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வகை மையங்களிலிருந்து, குறைந்தது தினமும் நான்கு முறையாவது இலவசக் கடன் அட்டை வாங்குவதற்கும், மலிவு விலைத் தொலைபேசி இணைப் பிற்கும் வழிசெய்து தருவதாக நாம் கேட்காமலே, நல்ல ரசம் சாதம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அழைப்பார்கள்.
இந்தப் பணியில் இருப்பவர்கள் பெரும் பாலும் தமிழர்கள். பெயர் தமிழரசி என்று இருக்கும். இந்த அழைப்புச் சேவைக்காக, டாமி (Tammy) என்று பெயர் மாற்றி, அவசரமாகக் கற்ற அமெரிக்க உச்சரிப்புடன் தொ(ல்)லை பேசுவார்கள். அமெரிக்காவில் இருந்து பேசுவதாக நாம் நினைக்க வேண்டும் என்பதற்காக ரொம்பவே பிரயத்தனப்படுவார்கள்.

ஒருமுறை தொலைபேசியை எடுத்தபோது "மீனாட்சி கோதண்டராமனுடன் பேச முடியுமா" என்ற அமெரிக்க-ஆங்கில, செயற்கை உச்சரிப்புடன் ஒரு ஆண்குரல். அழைப்பு மையத்திலிருந்து தான் அந்தக் குரல் என்று உடனே புரிந்தது. ஆனால் மீனாட்சி என்ற பெயரை அட்சர சுத்தமாக விளித்தார் அழைத்தவர். நானும் உடனே புளகாங்கிதம் அடைந்து "ஆமாம், நான் தான் மீனாட்சி பேசுகிறேன்" என்று சந்தோஷமாகக் கூறினேன்.

அவர் திரும்பவும் "மீனாட்சியுடன் பேச முடியுமா" என்றார். நானும் "மீனாட்சிதான் பேசுகிறேன்" என்றேன். அவர் திரும்பவும் "மீனாட்சியுடன் பேச முடியுமா" என்றார். நானும் "மீனாட்சிதான் பேசுகிறேன்" என்றேன். திரும்பவும் அதே கேள்வி. அதே பதில். சளைக்காமல் ஒரு ஐந்து, ஆறு முறையாவது கேட்டிருப்பார். நானும் பொறுமை இழந்து "ஆமாம்யா, நான் தான் மீனாட்சி சுந்தரம் கோதண்டராமன், நீங்க யார்?" என்றேன்.

அழைத்தவரோ ஒரு ஆண். எங்கோ சென்னையிலோ, பெங்களுரிலோ இருப்பவர். அவரும் மன்னிப்புக்கோரி, "நான் கெவின் கெரி பேசுகிறேன். உங்கள் பெயர் மீனாட்சி என்று பெண் பெயராக இருப்பதால், சந்தேகம் கொண்டு திரும்ப திரும்பக் கேட்டேன், மன்னிக்கவும்..." என்றார் அந்த அமெரிக்க உச்சரிப்புடன்.

எனக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. "என் பெயர் பெண்களுக்கான பெயர் என்று அமெரிக்கரான உமக்கு எப்படிய்யா தெரியும்? இவ்வளவு சுத்தமாக மீனாக்ஷ¢ என்ற வடமொழி கலந்த பெயரைச் சரியாக உச்சரிக்கிறீர்களே, நிச்சயமாக நீங்கள் அமெரிக்காவிலிருந்து அழைக்கவில்லை. உங்கள் பெயரும் கெவின் கெரி என்றிருக்க முடியாது. உங்கள் உண்மைப் பெயர் என்ன? எங்கிருந்து அழைக்கிறீர்கள்" என்று அந்த நிஜ கோதண்டராமன் போல் கேள்விக் கணைகளைச் சரமாரியாக ஆங்கிலத்தில் எறிந்தேன்.

அவரும் "சாரி சார். சாரி சார்" என்று பலமுறை கூறிவிட்டு, "என் பெயர் கல்யாண கிருஷ்ணன். பம்பாயிலிருந்து அழைக்கிறேன். தப்பாக நினைக்காதீர்கள். எங்கள் பணி அப்படிப்பட்டது. இதெல்லாம் தொழில் ரகசியம். யாருக்கும் சொல்லக் கூடாது" என்றார்.

நானும், "சரி சரி.. கல்யாண கிருஷ்ணன் என்ற பெயர் கெவின் கெரி ஆகும்போது, எனக்கு ஏன் மீனாட்சி என்று பெயர் இருக்கக்கூடாது" என்று சொல்லி போனை டொக்கென்று துண்டித்தேன்.

அன்றே முடிவெடுத்தேன். என் வருங்கால சந்ததியினருக்கு இந்த மாதிரி பெயர் உபத்திரவம் இருக்கக் கூடாது எனப் படுக்கையில் படுத்தபடியே சபதம் எடுத்தேன். எனக்குத் திருமணம் ஆகி, பிறக்கப் போகும் குழந்தைக்கு, ஆங்கிலத்தில் எழுதினால் ஒரு பத்து எழுத்துக்கு மிகாமல் வருமாறு பெயர் வைக்கவேண்டும். முதல் நான்கு எழுத்தில் முதல் பெயரும், அடுத்த எழுத்தை நடுப் பெயராகவும், மீதி எழுத்துகளில் கடைசிப் பெயர் அமையுமாறும் பெயர் வைக்கத் தீர்மானித்தேன்.

சபதம் எடுத்த களைப்பில் சற்றுக் கண்கள் செருக, வத்சு, "கோது" என்று காதில் கிசுகிசுத்தாள். பஞ்சு மேகங்களும், வெள்ளுடை அணிந்த பெண்களும், அபார வயலின் இசையூடே ஆட, நானும், வத்சுவும், அவர்கள் நடுவே, மெது ஓட்டம் ஓடினோம். "சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்" பாடல் காட்சி போல், வத்சுவுடன் எனக்கு கல்யாணம் ஆவது முதல் குழந்தை பெறுவது வரையான கனவுக் காட்சிகள் என் மனதை மகிழ்ச்சியுடன் நனைத்தது.

ஆ! அது என்ன, வயலினில் ஒரு அபசுரம்! கூடவே, பளிச்சென்று இரண்டு முழு நிலவுகள்? என்னதான் கனவு என்றாலும், இரண்டு நிலாக்கள் ஒருவர் கனவில் வருமோ? ஒருவேளை வத்சுவும் என்னைப் போலவே கனவு கண்டு, அவள் கனவில் வரும் நிலாவும் எனக்குத் தெரிகிறது போலும்! ஆஹா, எங்களுக்குள் என்ன பொருத்தம்!

என்னை நோக்கி இரு நிலவுகளும் அருகே வர, அது என்ன, நடுவில் ஒரு மூஞ்சி? ஆ! அத்தை ! அந்த நிலவுகள், அவளின் வைரத்தோடு அல்லவா? திடீரென, என் மனசாட்சி அந்தக் கனவுக் காட்சியைக் கலைத்து, என் வைரத்தோடு அத்தையின் பலவித முகபாவங்களை முப்பரிமாணத்தில் காட்டியது. விலுக்கென்று உதறிக்கொண்டு எழுந்தேன். நெஞ்சு பயத்தில் பட படவென அடிக்க, என் சபதம் நொறுங்கியது. அய்யய்யோ! நான் கல்யாணம் செய்து கொள்ள இருப்பது என் வைரத்தோடு அத்தையின் பேத்தியை அல்லவா? அத்தைதானே, எங்கள்

குடும்பத்தில் பெயர் வைக்கும் அதிகாரி. எனக்கும் வத்சுவுக்கும் பிறக்கப்போகும் குழந்தைக்கு அவள் தானே பெயர் வைக்கப் போகிறாள்! அத்தையின் குடும்ப வழக்க நீளப் பெயரிலிருந்து எப்படித் தப்பிப்பது?

என் வேதனை புரிந்த நீங்களாவது ஏதேனும் வழி சொல்லுங்களேன்.
Share: 




© Copyright 2020 Tamilonline