Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | சமயம் | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | சிறுகதை | பொது
கதிரவனை கேளுங்கள் | Events Calendar | ஹரிமொழி | சாதனையாளர் | அன்புள்ள சிநேகிதியே | கவிதைபந்தல் | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கௌதமன்
- அரவிந்த் சுவாமிநாதன்|பிப்ரவரி 2022||(1 Comment)
Share:
ஆதரவற்ற குழந்தைகளுக்கான இல்லம் (பால கோகுலம்), மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான சேவை இல்லம் (அபாலா), கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான இல்லம் (சாரதேஸ்வரம்) என, பல ஆண்டுகளாகப் பல்வேறு சேவைப் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருபவர் கௌதமன். ஈ.வெ.ரா. பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, பின் விவேகானந்தரின் கருத்துக்களால் மடை மாற்றப்பட்டு சேவைப் பணியில் தீவிரமாக இயங்கி வருபவர். தனது சேவைப் பயணம் பற்றி மனம் திறக்கிறார். கேட்போம், வாருங்கள்.

★★★★★


வாத்சல்யம் அறங்காவலர்கள்: கௌதமன், தேவராஜன், ஆனந்தன்கே: உங்கள் இளமைப்பருவத்தை நினைவு கூரலாமா?
ப: நான் பிறந்தது கும்பகோணம் - திருவையாறு சாலையில், கபிஸ்தலத்திற்கு அருகே உள்ள மேட்டுத்தெரு கிராமம். அப்பா ராஜமாணிக்கம். அம்மா மங்களம்மாள். நாங்கள் ஐந்து பேர் சகோதரர்கள். ஒரே ஒரு அக்கா. எனக்கு ஒரு அண்ணா, அடுத்து ஒரு அக்கா. தம்பிகள் மூவர். அப்பா இரண்டாம் உலக யுத்த சமயத்தில் சிங்கப்பூர், மலேசியாவில் வேலை பார்த்தவர். நிறைய உலக அனுபவம் பெற்றவர். அதன் பிறகு தமிழகம் வந்து திருமணம் செய்துகொண்டார். நாங்கள் சிறுவயதாக இருக்கும்போது அப்பாவின் தொழில் நலிவடைந்து விட்டது. மிகவும் கஷ்டமான சூழ்நிலை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலை. அந்தச் சமயத்தில்தான் அம்மா வெளி வேலைக்குச் சென்றார்கள். களை எடுப்பது, சாணி எடுத்து வந்து வரட்டி தட்டி விற்பது என்று பல வேலைகளைச் செய்து குடும்பத்திற்கு உதவினார்கள். நான் அப்போது ஆறாவது, ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். உணவுக்கே மிகவும் சிரமமான சூழ்நிலை. அப்பாவின் கண்டிப்பான வளப்பில் வளர்ந்தோம்.அப்பா நாத்திகர். இறை மறுப்பாளர். சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். பெரியாரின் நண்பர். பெரியார் சுற்றுபயணத்தின்போது எங்கள் கிராமம் வழியாகச் சென்றபோது அவரால் எனக்கு வைக்கப்பட்ட பெயர்தான் கௌதமன் என்பது. அப்பா மிகவும் கண்டிப்பானவர். பிடிவாதக்காரர். வீட்டில் கடவுள் படங்கள் கிடையாது. விளக்கேற்றக் கூடாது. எங்கள் வயதொத்தவர் யாரிடமும் ஒட்டாமல் நாங்கள் எங்களுக்குள்ளேயே விளையாடுவோம்; சண்டை போட்டுக் கொள்வோம்.

ராஜகிரி, பாபநாசம், நீடாமங்கலம் ஆகிய ஊர்களில் என் பள்ளிப்பருவம் கழிந்தது. பத்தாவது வரை படித்தேன். அது அந்தக் காலத்து 11ம் வகுப்பு. அத்துடன் பள்ளிக் கல்வி முடிந்தது. அடுத்து அண்ணனின் வழிகாட்டலில் ஐ.டி.ஐ. மெக்கானிக் கோர்ஸ் அரியலூரில் படித்தேன். அக்கால கட்டத்தில் திராவிடர் கழகத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு. மாவட்ட அளவில் பொறுப்பில் இருந்தேன். அதனால் பொது வாழ்க்கைத் தொடர்புகள் அதிகம் இருந்தன. பின்தங்கிய கிராமப் பகுதிகளுக்குச் செல்வது, சமூகப் பணிகளை மேற்கொள்வது என்று ஆர்வத்தோடு செயல்பட்டேன்.கே: நாத்திகராக இருந்த நீங்கள், ஆன்மீகப் பாதைக்கு வந்தது எப்படி?
ப: சிறு வயதிலிருந்தே எனக்குக் காமராஜரைப் பிடிக்கும். 1976ல் நாங்கள் காங்கிரஸ் கட்சிக்காக வேலை பார்த்தோம். அப்போது பழைய காங்கிரஸ்காரர் ஒருவர் நண்பரானார். காமராஜர் கட்சியைச் சேர்ந்தவர். ஆன்மீகவாதி. நான் காமராஜர் கட்சியை ஆதரிக்கிறவன் என்றாலும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவன். பெரியார்வழித் தொண்டன். அந்த நிலையில் அந்தக் காங்கிரஸ் நண்பர் எனக்கு புத்தகம் ஒன்றைக் கொடுத்து, "இதைப் படியுங்கள். இது உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொடுக்கும்" என்று சொன்னார். சரி என்று நான் அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்க அந்த காங்கிரஸ் நண்பர் சொன்னது எவ்வளவு உண்மை என்பது புரிந்தது. அதைப் படிக்க ஆரம்பித்தது முதலே எனக்குள் மாற்றம் ஏற்படத் தொடங்கியது. அந்தப் புத்தகம் சுவாமி விவேகானந்தரின் 'எழுமின் விழிமின்'. அதைப் படிக்கப் படிக்க அதுவரை எனக்குப் புரியாமல் இருந்த பல விஷயங்கள் புரிய ஆரம்பித்தன. தேசம் என்றால் என்ன, தர்மம் என்றால் என்ன, கடவுள் என்றால் என்ன என்ற பல விஷயங்களை அன்று நான் புரிந்துகொண்டேன். அதில் மூன்று பக்கங்கள் பிராமணர்களைக் குறித்துப் பேசியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். அது எனக்கு மிகவும் பிடித்துப்போய் விட்டது. அந்தப் புத்தகத்தை முழுமையாகப் படித்ததும், விவேகானந்தர் என்னைக் கவர்ந்தவர் ஆகிவிட்டார். பெரியார் இரண்டாம் பட்சம் ஆகிவிட்டார். அன்றே திருநீறு பூசி, கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டுவிட்டு வீட்டுக்குப் போனேன்.ஆனால், அந்தக் கோலத்தில் என்னைக் கண்டதும் அப்பா வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. பலத்த அடியும் திட்டுக்களும் விழுந்தன. வீட்டுக்குள் வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு நான் சுயமாக விலகிப் போனேன். வேலைக்குப் போனேன். அப்படித்தான் நான் ஆன்மீக வாழ்க்கைக்குள் வந்தேன்.

மாணிக்கவாசகருக்கு, சிவபெருமான் எப்படிக் காட்சி கொடுத்து குருமுகமாகத் தடுத்தாட் கொண்டாரோ அப்படி சுவாமி விவேகானந்தர் என்னைத் தடுத்தாட் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். நான் மாணிக்கவாசகர் அளவுக்குப் பெரியவனல்ல. தன் பணி செய்யும் ஊழியத்திற்கு சுவாமி என்னை ஆட்கொண்டார் என்பதைத்தான் இப்படிச் சொல்கிறேன்.கே: மிகச்சிறப்பு. சமூகசேவையில் நாட்டம் வந்தது எப்படி?
ப: அப்பாவின் வழியில் சிறு வயதிலேயே சமூகப் பணிகளில் ஆர்வம் இருந்தது. பின் விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு ஆன்மீகப் பாதைக்குள் வந்ததும் அந்த ஆர்வம் மேலும் அதிகமானது. அதனால் நான் வீட்டைவிட்டு வெளியேறி, 1977-78களில் 'விஷ்வ ஹிந்து பரிஷத்'தில் சேர்ந்தேன். அப்போது 'விவேகானந்தா மெடிகல் மிஷன்' இருந்தது. எனக்கு அப்போது 'விஷ்வ ஹிந்து பரிஷத்'தா, 'ஆர்.எஸ்.எஸ்'ஸா, 'ராமகிருஷ்ண மடமா' எதுவுமே தெரியாது. தெரிந்ததெல்லாம் ஒன்றுதான். விவேகானந்தர் தான். 'விவேகானந்தா மெடிகல் மிஷன்' என்பது விவேகானந்தர் பெயரில் இயங்கும் அமைப்பு என்பதால் நான் அதில் சேர்ந்து இரண்டு வருடம் பணி செய்தேன். அப்போதுதான் ராமகிருஷ்ணர், சாரதாம்மா பற்றியெல்லாம் விரிவாக அறிந்துகொண்டேன். அவையெல்லாம் எனது சமூகப் பணிகளுக்கு மிகவும் உதவிகரமாக, அக்கறையுடன், அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்கு உதவுவதாக இருந்தன. திருநெல்வேலி, சென்னை இங்கெல்லாம் நான் அமைப்பின் முழுநேர ஊழியராகப் பணியாற்றினேன். அது மிசா காலம் என்பதால் கிட்டத்தட்ட தலைமறைவாக வாழ்ந்த காலம் என்றுகூடச் சொல்லலாம். சங்கத்தைச் சேர்ந்த மிகப்பெரிய தலைவர்கள் பலரது அறிமுகமும் நட்பும் எனக்குக் கிடைத்தன. அதெல்லாம் ஒரு பாக்கியம்கே: அதன் பின்?
ப: 1980ல் என் அப்பா என்னைத் தேடிக் கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதே ஆண்டில் திருமணம். 1981ல் அரசு ஊழியர் ஆனேன். நான் படித்த ஐ.டி.ஐ. படிப்பிற்கான வேலை எனக்குக் கிடைத்தது. கால்நடைப் பராமரிப்புத் துறையில் மெகானிக் ஆக ஒரத்தநாட்டில் வேலை. அங்கே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பகுதிப் பொறுப்பாளராகப் பணிபுரிந்தேன். கடுமையான வேலை. திராவிடர் கழகத்தின் பல்வேறு எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி இருந்தது. கடுமையான மிரட்டல் வரும். என் அப்பாவிற்கு ஃபோன் போகும். இப்படிப் பல்வேறு எதிர்ப்புகளை மீறி எனது சமூகப் பணிகளைத் தொடர்ந்தேன். 1991ல் நான் பணி மாறுதல் பெற்று ஓசூருக்கு வந்தேன். அங்கு சத்சங்கம், பஜனை மூலம் மக்களை ஒன்றுகூட்டி சமூகப் பணிகளைத் தொடர்ந்தேன்.

அப்போதுதான் அங்கு பல குழந்தைகள் ஆதரிப்பார் யாருமின்றி நிர்க்கதியாக இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று நினைத்தேன். 1994ல், சேவாபாரதி அமைப்பின் மூலம் 'அன்பு இல்லம்' என்ற ஆதரவற்றோருக்கான இல்லத்தை ஆரம்பித்தேன். தமிழகத்தில், முதன்முதலாக, சேவாபாரதி மூலம் ஓர் உறைவிடம் தொடங்கியது நிறைவான விஷயம். ஷண்முகநாதன் ஐயா, சூரிய நாராயண ராவ், வீரபாகு சார் எனப் பல பெரிய நிர்வாகிகள் அதற்கு ஒத்துழைப்பு நல்கினார்கள். 'சேவாபாரதி ஹோசூர் ட்ரஸ்ட்' என ஒன்றை ஆரம்பித்துப் பல சமூகப் பணிகளைச் செய்தோம். பின் 'சாரதா நிகேதன்', 1998ல் 'நிவேதிதா நிகேதன்', 'யோகா இல்லம்' என்று பல்வேறு விதமான சேவைகள் சேவாபாரதி மூலமாகத் தொடங்கப்பட்டு, நன்கு நடந்து வருகின்றன.

'அன்பு இல்லம்' ஒரு முன்மாதிரியான இல்லம். தமிழக அளவில் இன்றைக்கு 18 இல்லங்கள் இருக்கின்றன என்றால், அதற்குக் காரணம் அன்றைக்கு ஓசூரில் ஆரம்பித்த 'சாரதா நிகேதன்' தான்.கே: மனநோயாளிகளுக்கான இல்லமும் முன்னெடுத்து வருகிறீர்கள். அதுபற்றி விளக்குங்கள்?
ப: 2008ல் நான் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற விரும்பினேன். ஆனால், எனக்கு ஆறு ஆண்டு கால சர்வீஸ் இருந்தது. இருந்தாலும் சமூகப் பணி ஆர்வம் காரணமாக அதை விரும்பினேன். வீட்டிலும் பேசிப் பேசி சம்மதிக்க வைத்தேன். விருப்ப ஓய்வும் பெற்றேன். அதன் பிறகு 'வாத்சல்யம் ட்ரஸ்ட்' என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தேன். அதன் மூலமாக முதலில் செய்தது 'அபாலா' என்ற மனநலக் காப்பகத்தை ஆரம்பித்ததுதான்.

அப்போது ஓசூர் சப் கலெக்டராக இருந்த திரு. நாகராஜ் ஐ.ஏ.எஸ். இந்தப் பணியை மிகவும் ஆதரித்தார். 'மனநலம் பாதித்தவர்களை எல்லாம் எப்படிச் சேர்ப்பது, எப்படி இல்லம் நடத்துவது' என்றெல்லாம் நான் தயங்கியபோது, "ஒன்றுமில்லை கௌதமன். நீங்க ஆரம்பியுங்க. பார்த்துக்கலாம்" என்று என்னை உற்சாகப்படுத்தினார்.அப்படிப் பாதிக்கப்பட்ட ஒருவரை அவர் தனது பங்களாவில் வைத்துப் பராமரித்து வந்தார். அந்த நபரை எங்கள் இல்லத்தில் சேர்த்து என்னை ஊக்குவித்தார். தவிர, இடிந்து கிடந்த ஓர் அரசுக் கட்டிடத்தைச் சீரமைத்து கொடுத்து, அந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கித் தந்தார். அன்று ஒரே ஒருவரை வைத்துத் தொடங்கிய 'அபாலா' இல்லம் இன்றைக்கு மிகப்பெரிய இல்லமாக வளர்ந்திருக்கிறது. அங்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, முழுமையாகக் குணமாகித் தங்கள் இல்லம் திரும்பியவர்கள் சுமார் 70 பேருக்கு மேல். இன்றைக்கு அந்த இல்லத்தில் 52 பேர் உள்ளனர். அவர்கள் மனநலப் பயிற்சி, உடல்வளப் பயிற்சி, கவுன்சலிங் எல்லாம் பெறுகிறார்கள்.

கே: 'சாரதேஸ்வரம்' இல்லம் பற்றிச் சில வார்த்தைகள்...
ப: 'அபாலா'வைத் தொடர்ந்து இரண்டாவதாக 'பால கோகுலம்' என்ற பெயரில் ஒரு குழந்தைகள் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 5, 6 வயதுக் குழந்தைகளுடன் அந்த இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதுதான் எங்கள் இல்லம் பற்றிக் கேள்விப்பட்டு சென்னையைச் சேர்ந்த டாக்டர் ஷ்யாமா சுவாமிநாதன் உதவ முன்வந்தார். அவருடன் பேசி ஆலோசனை செய்த பின்பு, பெண் குழந்தைகளுக்கென்று பாதுகாப்பாக ஓர் இல்லம் அமைக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதுதான் இன்றைக்கு 'சாரதேஸ்வரம்' என்ற பிரம்மாண்ட அமைப்பாக வளர்ந்திருக்கிறது.அன்றைக்கு அந்த இல்லம் அமைக்க ஓசூரில் உள்ள தேன்கனிக்கோட்டையில் 1 1/2 ஏக்கர் நிலம் கிடைத்தது. எல்லா விதத்திலும் உதவி செய்யும் திரு. குமார் உள்படப் பலர் எங்களுக்கு அந்த இல்லம் அமைக்க உதவினர். மாருதி க்ரீம்ஃபீல்ட் நிறுவனரும் நண்பருமாகச் சேர்ந்து அந்த 1 1/2 ஏக்கர் நிலத்தை வாங்கி, எங்கள் ட்ரஸ்டுக்கு அளித்தனர். சென்னையில் ஷ்யாமா அம்மா பலரைச் சந்தித்து நிதி திரட்டி உதவினார். அவர்கள் ட்ரஸ்ட் மூலமாக சுமார் 19 பேருக்கான நிதியைத் திரட்டி அளித்தார். மொத்தம் 22 வீடுகள். எழுத்தாளர்கள் சிவசங்கரி, கடுகு எனப் பலர் பொறுப்பேற்று நிதி உதவினர்.

கே: சேவைப் பணிகளுக்கான நிதித் தேவைகளை எப்படி எதிர் கொள்கிறீர்கள்?
ப: கேடர்பில்லர், ஹார்மன் போன்ற பல நிறுவனங்கள் எங்களுக்கு உதவியுள்ளன. அந்த நிதி உதவியில் சுற்றுச்சுவர், தண்ணீர்த் தொட்டி, பஸ், கட்டடங்கள், சமையல் அறையுடன் உறைவிடம் எல்லாம் கட்டிக் கொண்டிருக்கிறோம். பணிகள் மார்ச், ஏப்ரலுக்குள் முடிந்துவிடும். இவை பல கம்பெனிகளின் நிதி உதவியால் கட்டப்படுபவை. தவிர, ஆயிரம் குடும்பங்கள் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றன. அவர்கள் தரும் பிறந்த நாள், நினைவுநாள், திருமண நாள் போன்றவற்றிற்கான அன்பளிப்புகள் எங்கள் அன்றாடத் தேவைகளுக்கு மிகவும் உதவுகின்றன. அது மட்டுமல்லாமல் ஓசூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து பலரும் அரிசி, பருப்பு, எண்ணெய் என்று பொருட்களைத் தந்து உதவுகின்றனர். எங்களுக்குத் தேவையானவை கிடைத்து விடுகின்றன.ராமகிருஷ்ண மடமும் அதன் சாதுக்களும் உறுதுணையாக உள்ளனர். சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவியின் கிருபை நன்றாகவே இருக்கிறது. க்ருஷ்ணப் ப்ரேமி அண்ணா போன்றவர்களின் ஆசியும் உறுதுணையாக இருக்கிறது. எங்களைப் பார்த்தவுடனே மிக்க அன்புடன் அண்ணா "என்ன குழந்தைகள் எல்லாம் சௌக்யமா?" என்று. அபலா ஹோம் பற்றி விசாரிப்பார். நடப்பதெல்லாம் இறைவன் செயல் என்றெண்ணி எங்கள் கடமைகளைச் செய்கிறோம்.

கே: உங்கள் இல்லத்தில் பயனாளர்களை நீங்களாகவே தேடி அறிந்து சேர்க்கிறீர்களா அல்லது நாடி வருபவர்கள் யாராக இருந்தாலும் சேர்த்துக் கொள்வீர்களா?
ப: இரண்டுமே உண்டு. பத்திரிகைச் செய்தி, காவல்துறை தகவல் இவற்றின் வழியாக நாங்கள் குழந்தைகளைத் தேடிச் சென்று மனநலக் காப்பகத்திற்கோ, அன்பு இல்லத்திற்கோ அழைத்து வருவோம். பரிச்சயமான நண்பர்களின் பரிந்துரையில் சேர்ப்பதுண்டு. சில சமயம் சில சகோதரிகள் வீட்டாருடன் கோபித்துக் கொண்டு நமது இல்லத்தைத் தேடி வருவதுண்டு. அவர்களுக்குப் பின்னர் கவுன்சலிங் அளித்து பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவோம். இங்குள்ள பொதுமக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் எங்களிடம் வரலாம். தீர்த்து வைத்து நல்வழி காட்டுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.கே: உங்களது இல்லத்தில் இருந்து படித்து, திருமணம் மற்றும் வேலைவாய்ப்புக் காரணமாக வெளியேறிச் செல்பவர்கள் இல்லத்துடன் தொடர்பில் இருக்கிறார்களா, இல்லத்துக்கு உதவுகிறார்களா?
ப: பலர் தொடர்பிலிருக்கிறார்கள். வாய்ப்பிருப்பவர்கள் உதவுகிறார்கள். இந்த இல்லத்தில் தங்கியிருந்த பெண்களில் 22 பேர் திருமணம் ஆகிச் சென்றிருக்கின்றனர். அவர்களில் பலர் எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவ்வப்போது வந்து செல்கிறார்கள். நல்ல பணிகளில் இருக்கிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் ஆச்ரமத்திற்கு இயன்ற அளவு உதவுகிறார்கள்.

அதுபோல ஆண்களில் கூட வாராவாரம் இங்கு வந்து, ப்ளம்பிங், எலக்ட்ரிகல் வொர்க் என்று தேவையான வேலைகளைச் செய்து தரும் இளைஞர்களும் இருக்கிறார்கள். வரும் ஜூன் மாதத்தில் ஹாஸ்டல் திறப்பு விழா நடக்கும்போது பழைய மாணவ மாணவிகளை, குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளும்படியான ஒரு நிகழ்ச்சியை நடத்தத் திட்டம் உள்ளது.கே: இந்த கோவிட்-19, ஓமிக்ரான் காலக்கட்டத்தை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
ப: கோவிட் காரணமாக குழந்தைகளை இல்லத்தில் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அரசு சொல்லி விட்டதால் பாதுகாப்பான, அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதனால் எங்களுக்குக் கிடைத்த நேரத்தில் மாவட்டம் முழுக்கச் சுற்றுப் பயணம் மேற்கொண்டோம். மாற்றுத் திறனாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவினோம். தண்டுவடம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்குத் தேவையான உபகரணங்களை அளித்தோம். மக்கள் அதிகம் செல்லாத மலைப்பகுதிகள் உள்பட பல இடங்களுக்கும் வீடு வீடாகப் போய், லிஸ்ட் எடுத்து, பிரச்சனைகள் என்ன என்பதைக் கண்டறிந்து உதவினோம். இந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று முறை தொடர்ச்சியாக இந்த வேலைகளைச் செய்திருக்கிறோம். அது மிகவும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகிறது.

ராமகிருஷ்ண மடம் எங்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள். நாங்கள் பல அமைப்புகளிடமிருந்து உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றைச் சேகரித்தோம். கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்களை தேவையான மக்களுக்கு அளித்தோம். இது ஒரு கடுமையான பணி. கோவிட் காரணமாக மக்களைத் தொடர்பு கொள்ளுதல் எளிதாகிக் கொஞ்சம் விரைவாகச் செய்ய முடிந்தது. நேரடியாகச் சென்று பார்க்கும் போதுதான் மலைவாழ் மக்கள், கிராமப்புற மக்கள் வறுமையால், பிணியால், சரியான மருத்து வசதியின்மையால், பொருளாதார உதவியின்மையால் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.கே: இந்தப் பணிகளின் போது சந்தித்த சவால்கள் என்ன?
ப: பிரச்சனைகள் மூன்று விதம். நம்முடன் இருப்பவர்களால் வருவது ஒன்று. அதிகாரிகளால் வருவது இரண்டு. அரசியல் காரணங்களால், அரசியல்வாதிகளால் வருவது மூன்று. இவை அவ்வப்போது வரத்தான் செய்யும். எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. நம்முடைய வேலையை நாம் ஒழுங்காகப் பார்ப்போம் என்றுதான் செயல்படுவேன். நம்முடன் இருந்துகொண்டே திடீரென நமக்கு எதிராகச் சிலர் திரும்பினால், அந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ளத் தனித்திறமை வேண்டும். இறையருளால் எந்த பாதிப்புமில்லாமல் பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மிக முக்கியமான காரணம் சரணாகதிதான். நான் எல்லாவற்றையும் சாரதா அம்மாவிடம் சொல்லிவிடுவேன். அன்னை பார்த்துக் கொள்வார். இது அவர் பணி. நான் ஊழியன். அன்னையிடம் கணக்குகளை ஒப்புவித்து விடுவேன். அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது.

சீனிவாசன் - வாலாம்பாள் அறக்கட்டளை
பெண்சிசுக் கொலையைத் தடுக்கவும், கிராமப்புறப் பெண்குழந்தைகளைக் காப்பாற்றி, வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரவும் எண்ணி, 2004ல் இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். ஆனால், நானோ சென்னையில் இருக்கிறேன். பிரச்சனையோ கிராமங்களில் இருக்கின்றது. எப்படி உதவுவது என்று யோசித்தபோதுதான் திரு. கௌதமன் அறிமுகமானார். அவர் ஓசூர் சேவாபாரதியில் இருந்தவர். சிறந்த சமூகப் பணியாளர். நான் பெண்சிசுக் கொலை சம்பந்தமாக பல கட்டுரைகளைத் தொடர்ந்து தினமணியில் எழுதிவந்தேன். அதைப் படித்துவிட்டு என்னுடன் தொடர்பு கொண்டார். தான் வளர்த்து ஆளாக்கிய ஒரு பெண் குழந்தைக்குத் திருமணம் செய்ய இருப்பதாகவும் நான் அதற்குத் தலைமை தாங்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அந்தப் பெண் 20 வருடத்திற்கு முன்னால் குடும்பத்தினரால் கைவிடப்பட்டவர். கௌதமன் தத்தெடுத்து வளர்த்து, ஆளாக்கித் திருமணம் செய்துவைக்கிறார். சிறப்பாக அந்தத் திருமணம் நடந்தது. நான் ஆச்சரியப்பட்டு கௌதமனிடம் கேட்க, அவர், இதுவரை இம்மாதிரி நான்கைந்து குழந்தைகளுக்குத் திருமணம் செய்திருக்கிறேன் என்று சொன்னார். நானும் உதவ விரும்பினேன்.

என் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசி ஓர் அறக்கட்டளை ஆரம்பித்து அதன்மூலம் கௌதமனின் பணிகளுக்கு உதவ முடிவுசெய்தோம். கௌதமனிடம் இதைப்பற்றிச் சொன்னோம். அவரும் ஹோசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டையில் 'வாத்சல்யம் அறக்கட்டளை'யை ஆரம்பித்தார். நான் சீனிவாசன்-வாலாம்பாள் அறக்கட்டளையை ஆரம்பித்தேன். பெண்சிசுக் கொலைகள் நடக்கும் இடங்களுக்குச் சென்று "குழந்தைகளைக் கொல்லாதீர்கள்; எங்களிடம் கொடுங்கள். எங்கள் ஆச்ரமத்தில் நாங்கள் வளர்க்கிறோம். நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லலாம்" என்பதைத் தொண்டர்கள்மூலம் எடுத்துச்சொன்னோம்.

ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு மூன்றுவேளை உணவு தருவதே சிரமமாக இருந்தது. பின்னர் அங்கிருந்த தொழிலபதிர்களை, சமூக சிந்தனை கொண்டவர்களை, அரசு அதிகாரிகளைச் சந்தித்து விளக்கிய பிறகு படிப்படியாக உதவி கிடைக்க ஆரம்பித்தது. பாரத் பேக்கேஜிங் கோவிந்தராஜன் தான் முதலில் உதவ முன்வந்தார். பின்னர் அவர்மூலம் படிப்படியாக பலரும் உதவ ஆரம்பித்தனர்.

தற்போது அங்கே பெண் குழந்தைகள்தான் என்றில்லாமல் ஆண் குழந்தைகளும் வளர்கின்றனர். பெற்றோர் இல்லாதவர்கள், இருந்தும் புறக்கணிக்கப்பட்டவர்கள், குடியால் உறவுகளை இழந்தவர்கள், தாய் ஓரிடம், தந்தை ஓரிடம் என்பதால் கைவிடப்பட்டவர்கள், குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள், வறுமையால் பாதிக்கப்பட்டோர் என்று பலதரப்பட்ட குழந்தைகள் அங்கே இருக்கின்றனர். முன்பெல்லாம் கைக்குழந்தைகள்முதல் மூன்று வயதுவரை உள்ள குழந்தைகள் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் தற்போது அரசாங்கம் ஐந்து வயதுவரை உள்ள குழந்தைகளை அரசுக் காப்பகத்திற்குத்தான் அளிக்கவேண்டும் என்று சட்டம் கொண்டு வந்ததால் ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளே உள்ளனர். சிறுகுழந்தைகளாக வந்தவர்களுக்கு இன்றைக்கு 12, 13 வயதாகிவிட்டது. வாத்சல்யம் ட்ரஸ்ட் பாதுகாக்கும் குழந்தைகளுக்கு சீனிவாசன்-வாலாம்பாள் ட்ரஸ்ட் உதவுகிறது. நிர்வாகச் செலவு என்று நாங்கள் பணத்தை விரயமாக்குவதில்லை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கல்வி, உணவு, உடை, இருப்பிடம், தங்குமிடம் என எல்லாவற்றிற்கும் உதவுகிறோம். அன்றைக்கு சேவாபாரதியில் இருந்து மூன்று குழந்தைகளுடன் கௌதமன் வந்தார். இன்றைக்கு 50க்குமேல் குழந்தைகள் உள்ளனர்.

டாக்டர் ஷ்யாமா, தென்றல் நேர்காணல், நவம்பர் 2015


கே: உங்கள் பணிகளில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் குறித்து..
ப: நான் மேனேஜிங் ட்ரஸ்டி. அனந்தன்ஜி என்று இன்னொரு ட்ரஸ்டி இருக்கிறார். மகாதேவன் என்றொருவர் முன்பு இருந்தார். திருச்சியைச் சேர்ந்தவர். அவர் சொந்தக் காரணங்களால் விலகிவிட்டார். தற்போது ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த தேவராஜ் ஐயா வந்து சேர்ந்துள்ளார். அவருக்கு 79 வயது. மிகச் சுறுசுறுப்பானவர். தினமும் யோகம் செய்பவர். இளமையாக இருப்பார். அனந்தன்ஜி யோகா தெரபிஸ்டும் கூட. வழிவழியாக காஞ்சி மகா பெரியவரோடு தொடர்புடைய குடும்பம் அவருடையது. இப்படிப் பலருக்கும் ஆன்மீகப் பின்னணி உண்டு. சமூகப்பணி என்ற நோக்கில் அனைவரும் ஒன்றுபட்டுப் பணி செய்கிறோம்.உள்ளூரில் நாங்கள் வளர்ந்ததற்கு அனந்தன்ஜி முக்கியமான காரணம். அவர் யோகா தெரபிஸ்ட் என்பதால் பல நிறுவனங்களுக்கு யோகம் சொல்லித்தரச் செல்வார். அங்குள்ள எம்.டி., சி.ஈ.ஓ. என்று பலரும் பயன் பெறுவர். அப்படியான தொடர்புகளின் மூலமாகத் தான் பல நிறுவனங்களின் உதவிகள் கிடைத்தன.

நடக்கும் வேலைகளை, இருக்கும் வேலைகளை ஒருங்கிணைப்பதுதான் தற்போது எங்கள் பணி. நாங்கள் அறங்காவலர்கள் மூவரும் நல்ல நட்புடனும் புரிதலுடனும் ஒற்றுமையாகப் பணிகளைச் செய்து வருகிறோம். எல்லாருமே 60 வயதைக் கடந்தவர்கள். எனக்கு 66 வயது. அனந்தன்ஜிக்கு 68. தேவராஜ் ஐயாவுக்கு 79. எங்களைப் பார்ப்பவர்கள் வயதானவர்கள் என்று சொல்லமாட்டார்கள். நான் ராமகிருஷ்ண மடத்தில் தீக்ஷை வாங்கியுள்ளேன். சுவாமி கமலாத்மானந்த மஹராஜ், சுவாமி ஆத்மானந்த மஹராஜ், முருகானந்த மஹராஜ் தொடங்கி பல சாதுக்களிடமும் நல்ல பரிச்சயமுண்டு. 30 வருடமாக அனைவரும் தொடர்பில் உள்ளனர். எங்கள் இல்லத்திற்கு ராமகிருஷ்ண மடம், ஆர்.எஸ்.எஸ். போன்றவை மிகப்பெரிய பலம். இந்தப் பணிகளைச் சுமையாகக் கருதாமல் மிகவும் மகிழ்ச்சியானதாகக் கருதிச் செய்து வருகிறோம். இறைவனின் பணிக்காகத் திருவருளும் குருவருளும் கூட்டி வைத்துச் செய்யும் பணியாக இவற்றைக் கருதுகிறோம்.கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: மனைவி கோமதி. எனக்கு ஒரு பையன், இரண்டு பெண்கள். பையன் அரவிந்தன்; ஹெ.சி.எல்லில் வேலை செய்கிறார். மணமாகி அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அடுத்து மகள் அமரபாரதி. அவளுக்கு மணமாகி, அவரது மகன் 10வது படிக்கிறான். மூன்றாவது மகள் சாரதாமணி. மணமாகிவிட்டது. இரண்டு பெண் குழந்தைகள். எனது பெண்கள் இருவருமே பி.ஈ. படித்திருக்கிறார்கள். கணவர்கள் நல்ல பணிகளில் உள்ளனர்.

நான் என்றைக்கு எங்கிருப்பேன் என்று சொல்ல முடியாதபடி பயணங்கள். எப்போதாவதுதான் வீட்டிற்குச் செல்வேன். வீட்டில் உள்ளவர்களும் புரிந்துகொண்டதால் பிரச்சனை ஏதும் இல்லை.கே: எதிர்காலத் திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்?
ப: இந்த இல்லங்கள் அமைப்பதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு வந்துவிட்டதாகத் தான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் சீரமைத்து ஒருங்கிணைத்து அனைத்தையும் சென்னை சாரதா மடத்திற்குக் கொடுத்துவிடும் திட்டம் உள்ளது. இது பெண்கள் தொடர்பான பணி என்பதால் சாரதா மடத்திடம் கையளிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. அதற்கு சாரதா அன்னைதான் அருள் புரியவேண்டும். அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அவர்களிடம் இதனை ஒப்படைத்துவிட்டு நான் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளில் ஈடுபட விரும்புகிறேன். கிராமப்புறங்களில் சுகாதார விழிப்புணர்ச்சி, விவசாய மேம்பாடு, சுய முன்னேற்றம், கல்வி மேம்பாடு போன்ற சமூகப் பணிகளில் எஞ்சிய காலத்தைச் செலவிட விரும்புகிறேன். எவ்வளவு நாள் இந்த உலகில் இருக்கக் கடவுள் அனுமதித்திருக்கிறாரோ அவ்வளவு நாள், இம்மாதிரி கிராமம் கிராமமாகச் சென்று கிராம சேவைப் பணிகளில் ஈடுபடவே விருப்பம். எல்லாவற்றிலிருந்தும் விலகி ஒரு சாட்சி பாவமாக என் மீதி வாழ்நாளைக் கழிப்பதே என் எதிர்காலத் திட்டம். என் கடைசி ஆசையும் கூட. அதையும் சுவாமி நிறைவேற்றி வைப்பார் என்பதில் ஐயமில்லை.

மிகப் பெரிய சாதனைகளைச் செய்தபடி, அதற்கும் தனக்கும் தொடர்பே இல்லாதது போல் விலகி நின்று பேசுகிறார் கௌதமன். அவரது முயற்சிகள் சிறக்க வாழ்த்துக் கூறி விடைபெற்றோம்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 
© Copyright 2020 Tamilonline