Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்
கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
டாக்டர். பாலா சுவாமிநாதன்
- வெங்கட்ராமன் சி.கே.|பிப்ரவரி 2018||(1 Comment)
Share:
மதுரையின் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றைச் சொந்த ஊராகக் கொண்ட டாக்டர். பாலா சுவாமிநாதன் கணிப்பொறி வித்தகர். தமிழில் நனைந்து குறளில் ஊறிய அவரது இளமைப்பருவத்தின் தாக்கத்தில் நியூ யார்க் தமிழ் அகாடமியைத் தொடங்கினார். ஆனால், தமிழின் தொன்மை, வரலாறு, கலை, கலாசாரம் ஆகியவை முறையாக ஆராயப்பட்டு உலக அளவில் அறியப்படவேண்டும் என்ற தணியாத ஆவல் இருந்து வந்தது. அதன் காரணமாக சுவாமிநாதனும் அவரது மனைவி பிரபாவும், ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் Anandavalli and Dr. G. Swaminathan Endowed Research Professorship in Tamil என்ற பெயரில் தமிழிருக்கை நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். அதைச் செய்வதொன்றும் எளிதாக இருக்கவில்லை. அவரைப்பற்றியும், அவரது முயற்சிகளைப் பற்றியும் அவரது வாய்வழியே கேட்டறியலாம் வாருங்கள்....

*****


சி.கே. வெங்கட்ராமன்: வணக்கம், நீங்கள் பிறந்தது, வளர்ந்தது, உங்கள் இளமைப்பருவம், எப்போது அமெரிக்காவிற்கு வந்தீர்கள் என்று சொல்ல முடியுமா?
டாக்டர் பாலா சுவாமிநாதன்: நான் பிறந்தது வளர்ந்தது மதுரை. எனது மனைவி பிறந்த ஊர் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி. 1990 ஆகஸ்ட்டில் நான் அமெரிக்காவிற்கு வந்தேன். பிறகு ஏழாண்டுகள் கழித்துத் திருமணமானது. நாங்கள் முதலில் செயின்ட் லூயிஸில் இருந்தோம். அங்கே வாஷிங்டன் யுனிவர்சிடியில்தான் நான் படித்தேன். அங்கு டாக்டரேட் வாங்கிய பிறகு ஐந்தாண்டு அங்கே வேலை பார்த்தேன். அதன் பிறகு டாலஸில் இரண்டு ஆண்டுகள். 2002 முதல் நியூ யார்க்கில் இருக்கிறோம்.

சி.கே: உங்கள் அடிப்படைத் திறன் என்ன?
பாலா: நான் கணினி அறிவியல் துறையில் டாக்டர் ஆஃப் சயன்ஸ் செய்தேன். டாக்டரேட் முடித்துவிட்டு ஃபுஜிட்சு நெட்வொர்க்கிங் கம்யூனிகேஷன்சில் 5 வருடம் ஆப்டிகல் நெட்வொர்க்கிங் துறையில் வேலை பார்த்தேன். பிறகு அவர்களுடைய டாலஸ் தலைமை அலுவலகத்தில் 2 வருடம் வேலை பார்த்தேன். அதன் பிறகு அவர்கள் ஆப்டிகல் நெட்வொர்க்கிங் டிவிஷனை மூடவே நான் வேலை இழக்க நேரிட்டது. வேலை கிடைப்பது அரிதாக இருந்த சமயம் அது. நியூ யார்க்கில் ஒரு நிதி நிறுவனத்தில் அழைத்தார்கள். அப்போது ரிஸ்க், டேடா அனாலிடிக்ஸ் எல்லாம் வந்துகொண்டிருந்த சமயம். ரெனய்சான்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் சேர்ந்தேன். அதில்தான் இன்னமும் இருக்கிறேன்.

சி.கே: அதில் முகுந்த் பத்மநாபன் இருக்கிறாரே?
பாலா: ஆமாம். மிக நல்ல நண்பர். குருக்ருபா ஃபவுண்டேஷன் வைத்திருக்கிறார். தமிழ்ப் பள்ளிகளுக்கெல்லாம் மிகவும் உதவி செய்கிறார். அவருடைய பையன் குருப்ரசாத்தும் என் மகனும் ஏழாவது கிரேடு, ஒரே வயதினர். அந்த வகையிலும் அவர் நல்ல பழக்கம். அவருடைய நேர்காணல் தென்றலில் வருமுன்பு என்னிடம்தான் கொடுத்துச் சரிபார்க்கச் சொன்னார். நினைவிருக்கிறது.

சி.கே: உங்கள் குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்..
பாலா: முதல் பையன் இசைமாறன், 11வது கிரேடு படித்துக் கொண்டிருக்கிறார். 2002ல் நாங்கள் லாங் ஐலண்டு வந்தோம். இங்கே அதிகம் தமிழர்கள் கிடையாது. அதனால் நானே அவனுக்குத் தமிழ் எழுதப் படிக்கச் சொல்லிக் கொடுத்தேன். அதைப் பார்த்து நண்பர்களின் குழந்தைகள் வர ஆரம்பித்தார்கள். அப்படியே 5, 7 என்று ஆகி பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்தார்கள். 2005ல் இரண்டாவது பையன் கவின்மதி பிறந்தார்.

2011 ஆண்டில் நிறையப் பேர் வந்துவிட்டார்கள். அதனால் முதன்முதலில் குழந்தையை எங்களிடம் படிக்கக் கூட்டிவந்த நண்பரிடம் நாமே தமிழ்ப்பள்ளி ஒன்று ஆரம்பிப்போம் என்று சொன்னேன். அப்படி ஆரம்பித்ததுதான் நியூ யார்க் தமிழ் அகாடமி. குழந்தைகள் தமிழ் படிப்பது மட்டும் முக்கியமல்ல. அவர்கள் தமிழ் தெரிந்தவர்களாக இருப்பார்களே தவிர, தமிழர்களாக இருக்க மாட்டார்கள். தமிழின் கலாசாரத்தை, பண்டை இலக்கியத்தைப் பற்றியெல்லாம் அவர்கள் அறியவேண்டும் என்று விரும்பினோம். திருக்குறள், திருவாசகம் எல்லாம் இருப்பதை அவர்கள் அறியவேண்டும் என்று ஆசைப்பட்டோம். அதற்காகச் சில முயற்சிகளை மேற்கொண்டேன். எங்கள் பேஸ்மெண்டில், நானே சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். பின்னர் ஒரு குழுவாக இணைந்து சொல்லிக் கொடுத்தோம்.சி.கே: தமிழிருக்கை நிறுவும் எண்ணம் எப்படித் தோன்றியது?
பாலா: குழந்தைகள் தாம் படிக்கும் இலக்கியத்தின் காலகட்டம் பற்றிக் கேட்பார்கள். நமக்கு அது தெரியாது. அதை ஆராய்ந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. பதினெண் கீழ்க்கணக்கு மாதிரி நிறைய நீதி நூல்கள் தமிழில் இருக்கின்றன. ஆண்டாளை எடுத்துக் கொண்டால் எப்படி வாழவேண்டும் என்பதைத் தனது பல பாடல்களில் சொல்லிக் கொடுத்திருக்கிறார். "அதாவது நீங்காத செல்வம் நிறைந்து" என்று சொன்னால், எதற்கு, என்னவெல்லாம் செய்தால் அப்படி வாழலாம் என்பதையும் சொல்லியிருக்கிறார். வள்ளுவரும் சொல்லியிருக்கிறார். இப்படி நீதிநூல்கள் 2500 வருடங்களாக வந்துகொண்டே இருக்கின்றன.

இவை வந்தது சமூகத்தைத் திருத்துவதற்காகவா அல்லதுஅப்போதிருந்த நியதிகளைப் பதிவு செய்து வைக்கவா? இப்படி நிறையக் கேள்விகள் இருக்கின்றன. யாரும் இதற்கு முன்னால் இதுபற்றி ஆய்வு செய்திருக்கிறார்களா என்பது தெரியாது. இதை ஒரு பேராசிரியர்தான் செய்யவேண்டும் என்று எண்ணினேன். அப்போது, தமிழுக்கு ஒரு இருக்கை அமைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

2014ல் ஸ்டோனி புரூக் பல்கலையுடன் பேசத் தொடங்கினோம். அவர்களுக்குத் தமிழ் என்றால் என்னவென்று தெரியாது என்பதால் மெள்ள மெள்ளப் புரிய வைத்தோம். 2016ல் ஹார்வர்டு தமிழிருக்கை அமைக்கப்பட இருப்பதை ஃபெட்னா மாநாட்டில் அறிவித்தார்கள். அங்கே நான் இருந்தேன்.

இதை ஸ்டோனி புரூக் பல்கலையினரிடம் சொன்னால் நன்றாக இருக்கும் என்று வந்தேன். அதற்குள் அவர்களே கேள்விப்பட்டு, என்னைக் கூப்பிட்டு, இப்படி ஒரு செய்தி வந்திருக்கிறது; உங்கள் விருப்பம் நிறைவேறிவிடும், வாருங்கள் நாம் பேசலாம் என்று அழைத்தார்கள். ஹார்வர்டு தமிழிருக்கை பற்றிய செய்தி எங்கும் எதிரொலித்ததுதான் அதற்கு முக்கியக் காரணம். இப்போது நீங்கள் செயின்ட் லூயிஸிலோ, மிசௌரியிலோ சிறு தமிழ்ப் பள்ளிகளை ஆரம்பிக்க விரும்பினால், அவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால்கூட, ஹார்வர்டில் இருக்கிறது என்று சொல்லிவிட்டால் போதும். ஆக, இது நடந்து ஓராண்டுக்குள் மடமடவென்று ஸ்டோனி புரூக்கில் தமிழிருக்கைக்கான நிதிக்கொடை ஏற்கப்பட்டுவிட்டது.

சி.கே: ஓ. மிக்க மகிழ்ச்சி. உங்கள் பெற்றோர்கள் பற்றிச் சில வார்த்தைகள்..
பாலா: என் தந்தை மருத்துவ டாக்டர் என்றாலும் தமிழ் இலக்கிய ஆர்வம் மிக அதிகம். தமிழ் இலக்கியம், வேத இலக்கியம் எல்லாம் ஆர்வத்துடன் வாசிப்பார். தமிழாசிரியர் ஒருவர் அவருக்கு மிக நெருங்கிய நண்பர். அவரிடம்தான் எங்களைச் சந்தேகம் கேட்க அனுப்புவார், விடை கிடைக்கும். அதேபோல என் பையன் சந்தேகம் கேட்டால், நான் அதை அப்பாவிடம்தான் கேட்பேன். அப்பா அவருடன் உரையாடி, எங்களுக்கு பதில் தருவார்.

சி.கே: நியூ யார்க் தமிழ் அகாடமி பற்றிக் கூறுங்கள்...
பாலா: 2014ல் பள்ளி செயல்படத் தொடங்கியது. இப்பவும் 35 மாணவர்கள்தான் இருக்கிறார்கள். தொலைதூரம் வரவேண்டும். 130 மைல் நீளம் இந்த லாங் ஐலண்டு. அதனால்தான் இந்தப் பெயர் அதற்கு. ஒரே ஒரு ஹைவேதான் நடுவில் போகிறது. அப்படி இருந்தும் பள்ளிக்கு அங்கீகாரம் (Accreditation) பெற்றுவிட்டோம். அதனால் இங்கு தமிழை இரண்டாவது மொழியாகக் கற்று இருமொழிச் சான்றிதழைப் பெறமுடியும்.சி.கே: மகிழ்ச்சி. அப்படியானால் அதற்காகப் பாடத்திட்டம், தேர்வுமுறைகள் எல்லாம் வைத்திருக்கிறீர்கள், அல்லவா?
பாலா: ஆமாம். நாங்கள் சொல்லிக் கொடுப்பது அமெரிக்கன் தமிழ் அகாடமி (ATA) வழிமுறையில், அவர்கள் புத்தகங்களை வைத்துத்தான். அங்கீகாரம் (Accreditation) வாங்கிவிட்டதால், எங்கள் ஆசிரியர்கள் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ATAவிடம் எங்கள் ஆசிரியர்கள் பயிற்சி பெறுகிறார்கள்.

சி.கே: நியூ யார்க் தமிழ் அகாடமியின் நிறுவனர், தலைவர் என்ற முறையில் பள்ளிக்குத் தொடர்ந்து செல்கிறீர்கள், இல்லையா?
பாலா: ஆமாம். நிச்சயமாக. என் பையன் லெவல் நான்கில் இருக்கிறான். நான் 3வது நிலை கற்பிக்கும் ஆசிரியரும் கூட. நான் ஒன்றுவிட்டு ஒரு வாரம், வார இறுதியில் தமிழ்ப் பள்ளிக்குச் செல்வேன்.

தமிழ் வகுப்பு இல்லாத வாரத்தில் இங்கே சதுரங்கம் சொல்லிக் கொடுக்கிறோம். யார் வேண்டுமானால் அதில் கற்கலாம், கட்டணம் வசூலிக்கிறோம். இந்த நிதி தமிழ்ப்பள்ளிக்கான வாடகை தர உதவுகிறது. பள்ளிக் கட்டணமாக மாணவர்களிடம் 100 டாலர்தான் வசூலிக்கிறோம். அதிலும் 40 டாலர் புத்தகங்களுக்குப் போய்விடும். மீதி மற்ற செலவினங்களுக்காக.

சி.கே: ஸ்டோனி புரூக் தமிழிருக்கை பற்றிச் சொல்லுங்கள்...
பாலா: அதற்கான முழுத்தொகையை நானும் என் மனைவி பிரபாவும் செலுத்திவிட்டோம். அநேகமாக ஜூலையில் ஆரம்பிக்கக்கூடும். ஆரம்பக்கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. அதில் யார் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் அவர்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழ் மொழி மட்டுமல்லாமல் அதன் இசை, கவிதை, கலை, பண்பாடு எல்லாமே இங்கு ஆய்வு செய்யப்படும். முதலில் மொழிக்கே யோசித்துக் கொண்டிருந்தவர்கள் பின்னர் இவற்றுக்கும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான ஆவணங்களை நான் கொடுத்திருக்கிறேன்.

சென்ற வருடம் வாஷிங்டன் பல்கலை இசைத்துறையில் உரைத்தொடர் ஒன்றை ஏற்பாடு செய்தோம். ட்ஸோயி ஷெரீனியன் என்பவர் பேசினார். அவர் தொல்லிசை குறித்து நிறைய ஆய்ந்திருக்கிறார். இந்தியாவில் அந்தக் காலத்தில் இசை உணர்வின் வெளிப்பாடாக இருந்தது, விற்பனைக்கானதாக இருக்கவில்லை. கலைஞனை மட்டுமின்றி அவனது சமூகப் பார்வையையும் ஆராய வேண்டும் என்று எண்ணிச் செய்திருக்கிறோம். ஹார்வர்டு பல்கலையின் அஜந்தா சுப்ரமணியம் வந்து உரையாற்றினார். மாணவர் கூட்டம் பெரிதாக வந்து அரங்கு நிரம்பியிருந்தது. மூன்று மாதங்கள் நடந்தது. "மீண்டும் எப்போது வருவீர்கள்?" என்று கேட்டு என்னை இப்போது அன்புத்தொல்லை செய்கிறார்கள்.சி.கே: இந்தத் தமிழிருக்கைக்கு ஒருமுறை நிதிக்கொடை தந்துவிட்டால் போதுமா, தொடர்ந்து பராமரிக்க வேண்டுமா?
பாலா: இதில் Anandavalli and Dr. G. Swaminathan Endowed Research Professorship in Tamil என்கிற நிதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து வரும் வருமானத்தில் பெரும்பகுதி தமிழிருக்கைக்குப் போகும். இந்த வைப்புநிதியின் மீது சுமார் 6% வருமானம் வருமென்று நினைக்கிறேன். இது அரசுப் பல்கலை என்பதால் பேராசிரியருக்கு அரசும் ஓரளவு நிதி ஒதுக்குகிறது. தவிர, ஒவ்வோராண்டும் ஒரு பட்டவகுப்பு மாணவருக்கேனும் படிக்க நிதி கொடுகிறார்கள். ஒருவர் PhD முடிக்க 6 ஆண்டுகள் ஆகும். அப்படியானால் ஆறாண்டுகளில் 6 மாணவர்கள் உதவிநிதி பெற்றுவிடுவார்கள். ஹார்வர்டில் ஓர் இருக்கைக்கு 3 மாணவர்கள் உதவப்படுகிறார்கள் என்பதால் அங்கே 18 மாணவர்கள் உதவி பெறக்கூடும். எஞ்சிய நிதி மீண்டும் வைப்புநிதியோடு சேர்க்கப்படும்.

சி.கே: ஆக, இங்கே இது முழுநேரப் பேராசிரியர் பதவி?
பாலா: ஆமாம், ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவார். அவர் தமிழில் முழுப்புலமை கொண்டிருக்க வேண்டும். ஆய்வுகள் செய்யவேண்டும். அத்தோடு, அவருக்குத் தமிழில் கற்பிக்கத் தெரிந்திருக்க வேண்டும். அது இல்லாமல் முடியாது.

சி.கே: இப்படி ஒரு முடிவு எடுப்பது தற்செயலாக நிகழ்வதில்லை. கொடுக்கின்ற மனோபாவம் உங்கள் இருவருக்கும் எங்கிருந்து வந்ததென்று சொல்லமுடியுமா?
பாலா: என் தந்தையார் மதுரைக்கு அருகே ஆண்டிப்பட்டியை அடுத்துள்ள சுப்பலாபுரம் என்ற குக்கிராமத்தைச் சேர்ந்தவர். அந்த ஊரிலிருந்து பட்டதாரியான முதல் டாக்டர் அவர்தான். மிகவும் வறுமை. தாத்தா, பாட்டி இருவருமே கைத்தறி நெசவாளிகள். அதனால் ஊரில் இருப்பவர்கள் யார் அப்பாவிடம் வந்தாலும் உதவுவார். படிப்புக்கு நிறைய உதவியிருக்கிறார். யாராவது கேட்டால் "கல்வியால் எதையும் தரமுடியும். அது ஒருபோதும் வீணல்ல" என்பார். என்னைப் பார்த்து, "உனக்குத் திருக்குறள் நிறையச் சொல்லிக் கொடுத்திருக்கேனே. அதுல ஒண்ணைச் சொல்லு!" என்பார். "இதெல்லாம் புகழுக்காகச் செய்வதில்லை. உதவி செய்துவிட்டு பின்னால் அவர்கள் நம்மைப் புகழ்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்பார். "அப்படி எதிர்பார்த்தால் ஏமாந்து போவாய்" என்பார். அது உண்மையும்கூட. "அப்படி எதிர்பார்த்து ஏமாந்தால், அடுத்த தகுதியுள்ள மனிதருக்கு உதவி செய்ய மறந்துவிடுவார்கள்" என்பார்.

"தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு"

என்ற குறளை அடிக்கடி சொல்வார். உழைத்துச் சம்பாதித்தால் அடுத்தவருக்கு உதவுவாய். உழைக்காமல் வந்த பணத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்வாய் என்பார். அவையெல்லாம் அவர் சொன்ன முக்கியமான அறிவுரைகள். அவர் இந்தியாவில் 'சிலம்பொலி ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பின் மூலம் உதவிகள் செய்து வருகிறார். நான் அதற்கு இணையதளம் அமைத்துக் கொடுத்தேன்.

அவர் அப்படிச் சொல்லிச் சொல்லி வளர்த்ததால் 'நாம் ஏதாவது செய்யவேண்டும்' என்பது மனதில் பதிந்துவிட்டது. சிறுவயது முதலே தமிழைப் படித்துவிட்டு தமிழாராய்ச்சி செய்ய ஆசைப்பட்டேன். வைதேஹி ஹெர்பர்ட்டின் நிகழ்ச்சி ஒன்றிற்குப் போனபோதுதான் அதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப்படுகிறது என்பதை உணர்ந்தேன். நானே செய்துவிட முடியாது என்பதைப் புரிந்துகொண்டேன்.அதற்கப்புறம் தான் ஆய்விருக்கை ஏற்படுத்தத் தீர்மானித்தோம். ஆனால் அதைச் செய்வது இங்கே எளிதல்ல. நான் பெங்களூரில் வேலை செய்திருக்கிறேன். திருச்சியில் படித்தேன். நமக்கு உழைக்கும் திறன் இருக்கிறது. ஆனால் ஆராய்ச்சி மனப்பான்மை இருப்பதுபோலத் தெரியவில்லை. அங்குள்ள உயர்ந்த கல்வி மையங்களில் இருந்து பெரிய அறிவாளிகள் வெளிவருகிறார்கள். ஆனால் peer reviewed research வருகிறதா என்றால், அத்தி பூத்தாற்போலத்தான் வருகிறது. அறிவியல் துறையிலேயே இப்படி என்றால் மற்றத் துறைகளில் என்ன சொல்வது? மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை. இந்த ஆதங்கம் எனக்கு எப்போதும் உண்டு.

இங்கே தமிழிருக்கை வந்து விட்டதென்றால் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டு இங்கு வந்து ஆராய்ச்சி நெறிமுறைகளைக் கற்கலாம். ஆராய்ச்சி என்றால் அதன் உச்சத்தை இங்கே பார்க்கலாம். தரமான ஆய்வு முறைகளைத் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்ல இதுவொரு நல்ல வாய்ப்பாக எனக்குத் தோன்றுகிறது.

சி.கே: ஆழமாக யோசித்திருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். இந்த ஊரில் நமது சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி...
பாலா: அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்கள் தமிழில் பேசுவதில்லை. எப்படித் தமிழ் வளரும் என்று ஒரு கேள்வி வரும். எனக்கே வருவதுண்டு. ஹார்வர்டு, டொராண்டோ, பெர்க்கலி, ஸ்டோனி புரூக் இங்கெல்லாம் இருக்கை இருந்தால் அது தமிழின் தனித்தன்மையை உலகத்துக்குச் சொல்லும்.

அதுபோல நமக்கு நெடுங்காலமாக இடையீடில்லாத 'பேசுமொழி' இருக்கிறது. அது மிகவும் அரிது. ஒரு ஆய்வாளருக்கு இது மிகவும் உற்சாகமான செய்தியாக இருக்கும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இடையறாத பேசுமொழி கொண்ட மொழி ஒன்று உண்டென்றால், அந்த மொழியின் உள்ளார்ந்த சிறப்பு என்ன என்று அவர் ஆராயலாம்.

சி.கே: உண்மை அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டுசெல்லவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தென்றல் செயல்பட்டு வருகிறது.
பாலா: ஆம். மிக நல்ல சேவை இது என்பதில் சந்தேகமில்லை.

சி.கே: நாடுவிட்டு நாடு வந்து வசிக்கும் தமிழ் மக்களுக்காகத்தான் இது, அல்லவா?
பாலா: ஆமாம். அமெரிக்கன் தமிழ் அகாடமி ஆசிரியர் சந்திப்பு ஒன்று வைத்தார்கள். அமெரிக்காவிலிருக்கும் தமிழ்ப் பள்ளிகளின் அபிப்பிராயங்களைக் கேட்டார்கள். "பசங்களை தமிழில் எழுதச் சொல்வது, படிக்கச் சொல்வது எல்லாமே நல்லதுதான். ஆனால், 'Exploring Spanish', 'Exploring French' போன்ற பள்ளிப் புத்தகங்களை எடுத்துப் பார்த்தால், முதலில் நிறங்கள், எண்கள் எல்லாம் சொல்லிக் கொடுப்பார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும், அவர்கள் என்ன சாப்பிடுவார்கள், எதற்குச் செய்கிறார்கள் என்றெல்லாம் விவரம் இருக்கும். நீங்களும் பாடப் புத்தகங்களில் தமிழ்க் கலாசாரத்தைச் சேருங்கள்" என்று சொன்னேன். மாணவர்களுக்கு முதலில் புரியாது. இருந்தாலும் ஆத்திசூடியாவது போடத் தொடங்கவேண்டும். கலாசாரத்தை மையப்படுத்துங்கள், தன்னால் மொழி வளரும் என்று சொன்னேன். செய்வார்கள் என்று நினைக்கிறேன். நல்ல வேளையாக, தமிழ் கலை, கலாசாரத்தில் பலபேர் இப்போது ஆர்வம் காட்டுகிறார்கள்.சி.கே: நூறு வருடங்களுக்குப் பிறகு இங்கே தமிழ்ச் சமூகம் எப்படி இருக்கும்?
பாலா: "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று 2000 வருடங்களுக்கு முன்னரே இலக்கியம் படைத்திருக்கிறோம். நமது ரத்தத்திலேயே அந்த உணர்வு கலந்திருக்கிறது. இதை உலகம் விரைவில் அறிந்துகொள்ளும். இப்போதெல்லாம் இணையம் விரிந்தபோதும் இதயங்கள் சுருங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். இந்த நிலையில் தமிழருடைய பொதுப்பார்வைக்கு அதிகம் பெரிதான அவசியம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இன்னும் ஐம்பது ஆண்டுகளில் திருக்குறள் என்ற பொதுமறை உலகத்தின் ஒழுக்கநெறி ஆகிற வாய்ப்பு இருக்கிறது. நல்ல ஒழுக்கநெறி என்றால் அதனை மூலமொழியில் படிக்கத்தானே நிறையப் பேர் விரும்புவார்கள்? நான் படிக்கும் காலத்தில் எமீல் டுர்க்கைம் (Emile Durkheim) என்ற தத்துவஞானியை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அதனால் பிலாஸஃபியை ஒரு பாடமாக எடுத்தேன். அவர் ஒரு ஃப்ரெஞ்ச் தத்துவஞானி என்று சொன்னார்கள். அவருடைய எழுத்தைப் படிப்பதற்காக நான் அந்த மொழியைக் கற்றேன். மொழிபெயர்ப்பில் பலவும் இழக்கப்படும்.

திருக்குறள் உலகப் பொதுமறை என்று தெரிய வரும்போது அதை மூலத்தில் படிக்க உலகம் விரும்பும். ஒரு ஐம்பது வருடத்திற்குப் பிறகு இது நடக்கும் எனக் கனவு காண்கிறேன்.

சி.கே: உண்மைதான். உலகம் ஏற்பது அதிகமாகும்.
பாலா: ஆமாம். இப்போது அவர்கள் காந்தியைப் பற்றிப் படிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் காந்தியை நேரில் பார்த்தவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். 'அந்த மாதிரி யாராலயும் இருக்க முடியாது' என்று பேசுவார்கள். 'அதெல்லாம் ஒரு ஆளா இருக்காது. நிறையப் பேரா இருப்பாங்க. ஒரு ஆள் இப்படி எல்லாம் செய்யமுடியாது' என்று சொல்வார்கள். அதற்கு அர்த்தம், காந்தி உலகளாவிய நபர் ஆய்ட்டாருங்கறது.

முகுந்த பத்மநாபன் தமிழ் அகாடமி ஆண்டு விழாவைத் தொடக்க காலத்திலிருந்தே ஆதரித்து வருகிறார் என்பதை விவரிக்கிறார் பாலா சுவாமிநாதன். நாமும் நமது தமிழ் ஆன்லைன் அறக்கட்டளை வழியே புதிய தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதியுதவி செய்துவரும் விவரங்களைச் சொல்கிறோம். சுய விளம்பரமில்லாமல் தமிழ், கலை, கலாசாரம், வரலாறு இவற்றை ஆய்வதையும், அவற்றை உலகறியச் செய்வதையுமே உயிர் மூச்சாகக் கொண்டிருப்பதை அவரது ஒவ்வொரு சொல்லும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அவரும் அவரது துணைவியார் பிரபாவும் ஸ்டோனி புரூக் தமிழிருக்கைக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பதைச் சொல்ல உறுதியாக மறுத்துவிடுகிறார்கள். வள்ளுவத்தை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் வாழ்நெறியாகவும் கொண்டிருக்கும் இந்த இணையருக்கு நெஞ்சார நன்றி கூறி, வாழ்த்தி விடைபெறுகிறோம்.

உரையாடல்: சி.கே. வெங்கட்ராமன்

*****
தினம் ஒரு திருக்குறள்
நாங்கள் படிக்கும் காலத்தில் மனப்பாடப் பகுதியோடு நிறுத்திவிடக் கூடாது என்பதில் அப்பா கவனமாக இருந்தார். தியாகராஜர் கல்லூரியில் பேராசிரியராக இருந்த அவரது நண்பர் டாக்டர் ராமகிருஷ்ணனின் இல்லத்திற்கு அப்பா அழைத்துச் செல்வார். நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். நானும் என் அண்ணனும் சைக்கிளில் போவோம். அவர், பாடத்தில் வராத செய்யுள்களை எங்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுப்பார். அவர் விளக்கும்போதே மனதில் தங்கிவிடும், அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கும். நன்கு புரியும். இதற்கு என் அப்பா, அம்மாவிற்கு நான் நன்றி சொல்லவேண்டும்.

அப்பா தினமும் ஒரு திருக்குறள் படிக்கச் சொல்வார். இப்போது எனக்கு நினைவில் தங்கி இருக்கும் பலதும் அந்தக் காலத்தில் படித்ததுதான். அதனால்தான் இந்த இருக்கையை அவர்கள் பெயரில் நிறுவ நாங்கள் முடிவெடுத்தோம்.

டாக்டர் பாலா சுவாமிநாதன்

*****


உலகறிய வேண்டிய உயர் கருத்து
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று நாம்தான் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அப்துல்கலாம் ஐயா சொன்னதால் இன்றைக்குப் பலருக்கும் தெரியும். எங்கள் அலுவலகத்தில் கூட ஒருவர் எழுதி வைத்திருக்கிறார்: 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று. அவர் ஒரு ரஷ்யன். அவருக்கு அப்துல்கலாமை மிகவும் பிடிக்கும். அதனால் எழுதி வைத்திருக்கிறார். நாளை ஹார்வர்டில், ஸ்டோனி புரூக்கில் சொன்னார்கள் என்றால் உலகமே அறிந்துகொள்ளும். நம்முடைய தனிப்பெருமை அது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் நம் முன்னோர் ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பது நமது தனிச்சிறப்பைக் காட்டுகிறது.

டாக்டர் பாலா சுவாமிநாதன்

*****


அடுத்த தலைமுறை மதிப்பதற்கு...
அமெரிக்காவின் பெரிய பல்கலைக் கழகங்களில் தமிழிருக்கை ஏற்பட்டால் இங்கிருக்கும் நமது அடுத்த தலைமுறைக்கு தமிழ் மீதும், தமிழின் வரலாறு மீதும் ஒரு பெரிய மதிப்பும் மரியாதையும் ஏற்படும். அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தமிழை இரண்டாம் மொழியாக எடுத்துப் படிக்கும் எண்ணத்தை அவர்களுக்குள் தூண்டினால் அதுவே நல்லதொரு வளர்ச்சிதான். இதேபோல, இன்னும் பல இடங்களிலும் இப்படி இருக்கைகள் அமைக்கும் எண்ணம் வரவேண்டும்.

டாக்டர் பாலா சுவாமிநாதன்

*****
Share: 
© Copyright 2020 Tamilonline