Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
February 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | மேலோர் வாழ்வில் | அஞ்சலி | முன்னோடி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | சமயம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
லலிதாராம்
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜனவரி 2018||(1 Comment)
Share:
பெங்களூரில் பொறியாளராகப் பணியாற்றுகிறார் லலிதாராம், பிறந்து வளர்ந்தது சென்னையில். இயற்பெயர் ராமச்சந்திரன். 'லலிதா' ராகம் ஈர்க்கவே 'லலிதாராம்' ஆனார். இசை குறித்து எண்ணற்ற கட்டுரைகளையும், 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி.', 'துருவநட்சத்திரம்' என்கிற நூல்களையும் எழுதியிருக்கிறார். ஜி.என்.பி. நூலை ஆங்கிலத்தில் ராம் நாராயணன் மொழிபெயர்த்துள்ளார். ஆவணப் படங்கள் தயாரித்திருக்கிறார். 'கூடு' இணைய இதழில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. சொல்வனம் இணைய இதழிலும் நிறைய எழுதியிருக்கிறார். கமகம் என்ற இவரது வலைப்பூ நன்கறியப்பட்டது. 'பரிவாதினி' என்ற இசைக்கான இன்டர்நெட் சேனல் ரசிகர்களிடையே மிகப்பிரபலம். வரலாற்றாய்விலும் மிகுந்த விருப்பமுடையவர். அது குறித்தும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அவருடன் உரையாடியதில் இருந்து...

*****


பிடித்தது இசைப் பைத்தியம்
என் இரண்டு தாத்தாக்களுக்கும் இசையார்வம் உண்டு. வீட்டில் அருணாசலக் கவிராயர் பாடல்கள், தியாகராஜர் கீர்த்தனைகளைச் சிறுவயதில் கேட்டதுண்டு. அம்மாவழித் தாத்தாவிடம்தான் வளர்ந்தேன். அவர் சென்னை அயோத்யா மண்டப நிகழ்வுகளுக்கு என்னைக் கூட்டிப்போவார். வளர வளர பாரதியார் பாடல்களில் மனம் லயித்தது. நான் +2 முடித்த பிறகு எஞ்சினியரிங் கவுன்சிலிங் மிகவும் தாமதமானது. கோர்ட்டில் வழக்கு நடந்து கொண்டிருந்ததால், கல்லூரியில் சேரும்வரை மிக நீண்ட விடுமுறை கிடைத்தது. பக்கத்துவீட்டில் இருந்தவரிடம் நிறைய கர்நாடக இசை கேசட்டுகள் இருந்தன. அவற்றை வாங்கிக் கேட்பேன். மாண்டலின் சீனிவாஸ், ஏசுதாஸ் எனக்கு மிகவும் பிடித்துவிட்டன.

தஞ்சாவூர் சாஸ்த்ரா கல்லூரியில் இடம் கிடைத்தது. முறையாக சங்கீதம் பயின்றவர்கள் அங்கு ஒரு மியூசிக் கிளப் வைத்திருந்தார்கள். அதில் வாராவாரம் கலந்துரையாடல்கள், ராக விளக்கங்கள், அனுபவப் பகிர்தல்கள் நடக்கும். டெக்னிகலாக நிறையப் பேசுவார்கள். அதில் நிறையக் கற்றுக்கொண்டேன்.

விடுமுறையில் சென்னை சென்றேன். அது 1997ம் வருடம். மியூசிக் அகாடமிக்கு அன்றுதான் முதன்முதலில் போகிறேன். ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி. ஸ்டேஜ் டிக்கெட் விலை 5 ரூபாய். ஆர்ட்டிஸ்ட்களுக்குப் பக்கத்தில் அமர்ந்து கேட்டேன். குருவாயூர் துரை, ஹரிசங்கர் அன்றைக்கு மிருதங்கம் மற்றும் கஞ்சிராவில். தனி ஆவர்த்தனத்தை வெகு அருகில் அமர்ந்து கேட்டேன். இசைப் பைத்தியம் பிடித்துவிட்டது.

நண்பர்கள் சிலரிடம் சபா சீசன் டிக்கெட் இருந்தது. அவர்கள் போகாதபோது அதை வாங்கிக்கொண்டு நான் போவேன். நிறையக் கேசட்டுகளும் வாங்கிக் கேட்டேன். ஸ்ரீராம் என்று ஒரு நண்பர், அவருக்கும் இசையார்வம் அதிகம். இருவரும் சேர்ந்து கேசட்டுகள் வாங்கிக் கேட்போம். நான்கு வருடங்களில் நூற்றுக்கணக்கான கச்சேரிகளைக் கேட்டேன். நான் தஞ்சாவூரில் படித்ததால் திருவையாறு தியாகராஜ ஆராதனைக்குப் போவேன். தொடர்ந்து கச்சேரிகளைக் கேட்கவே ராகங்கள் பிடிபட ஆரம்பித்தன. பாடகர் பாட ஆரம்பித்ததும் ராகத்தைக் கண்டுபிடிப்பதில் பெரிய த்ரில். சினிமாப் பாடல்களின் ராகத்தைச் சொல்வதும் சுவாரஸ்யமாக இருந்தது. More than a serious hobby ஆக இருந்தது. பிறகு நான் மேல்படிப்புக்காக அமெரிக்கா போனேன்.அமெரிக்காவில் வளர்ந்த ஆர்வம்
இணையம் பிரபலமாகத் தொடங்கிய காலம் அது. இசையை விவாதிக்கும் மின்குழுக்கள் அப்போது அறிமுகமாகின. அவற்றில் கர்நாடக சங்கீத மேதைகள், பழம்பெரும் கலைஞர்கள் பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது. பலர் தங்கள் தனிப்பட்ட சேகரிப்பிலிருந்து தகவல்களைக் பகிர்ந்து கொண்டார்கள். கடைகளின் விற்பனைக்கு வராத தனியார் பதிவுசெய்த இசை இருக்கிறது என்பது அங்கே போய்த்தான் தெரிய வந்தது.

எனக்கு ஜி.என். பாலசுப்பிரமணியம் பாடல்கள் மிகவும் பிடிக்கும். அவருடைய கச்சேரிப் பதிவுக் கேசட்டுகள் இருப்பது அமெரிக்க இசை நண்பர்கள் மூலம் தெரியவந்தது. அவற்றைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அது என்னை ஜி.என்.பி. பாடல்களைத் தவிர வேறு எந்தப் பாடலையும் கேட்க விரும்பாதவனாக மாற்றிவிட்டது.

நண்பர் ஒருவர் ஃப்ளோரிடாவில் இருந்தார். ஒருமுறை அவர் மதுரை மணி ஐயர் கேசட் ஒன்றைக் கொடுத்து "அவசியம் கேளுங்கள்" என்று சொல்லி அனுப்பினார். நானும், "அனுப்பி விட்டாரே!" என்று வேண்டா வெறுப்பாக ஒருநாள் அதைக் கேட்டேன். அது ஒரு ரேடியோ கச்சேரி. உடன் சௌடையாவும், பழனி சுப்பிரமணிய பிள்ளையும் வாசித்திருந்தனர். அந்தப் பாடலை முன்னர் நான் ஜி.என்.பி. பாடிக் கேட்டிருந்தேன். சலிப்புடன் கேட்க ஆரம்பித்தேன். கேட்கக் கேட்க அசந்துவிட்டேன். எனக்கு மிகவும் பிடித்துப் போனதோடு, என் கண்ணையும் திறந்துவிட்டது. ஜி.என்.பி.தான் என்றில்லை, இன்னும் பல ஜாம்பவான்கள் இருந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது. அவர்கள் சாதித்தவற்றை எல்லாம் புரிந்துகொள்ள ஒரு வாழ்க்கை போதாது என்பதும் புரிந்தது.

எழுத்தில் இசை...
"தினம் ஒருகவிதை" என்ற மின்குழுவைத் திரு. சொக்கன் நடத்திக் கொண்டிருந்தார். நானும் கவிதைகள் சிலவற்றை எழுதி அனுப்பினேன். அவை எப்படிக் கவிதையல்ல என்பதை சொக்கன் நாசூக்காகக் குறிப்பிட்டுப் பதில் எழுதுவார். நாங்கள் மின்னஞ்சலில் உரையாடிக் கொள்வோம். அது பெரும்பாலும் இளையராஜா பற்றியதாக இருக்கும். 'திரையில் மலர்ந்த கவிதைகள்' என்ற தலைப்பில் நல்ல கவித்துவமான பாடல்கள் பற்றி அவர் ஒரு தொடர் எழுதினார். அது அநேகமாக ஏதாவது ஒரு நல்ல ராகத்தில் அமைந்ததாக இருக்கும். நான் அந்த ராகம் குறித்து அவருக்கு எழுதுவேன். "உங்களுக்குக் கவிதையைவிட உரைநடை நன்றாக வருகிறது. அதை நீங்கள் முயலலாம். நீங்கள் ராகங்கள் பற்றி எழுதிய விஷயங்கள் பலருக்குத் தெரியாது. இதையேகூட விரிவாக எழுதலாம்" என்றார்.

நான் ராயர் காபி கிளப், மரத்தடி போன்ற குழுக்களில் இசை சம்பந்தமான செய்திகளை எழுத ஆரம்பித்தேன். பின்னர் சொக்கனின் குழுவிலேயே 'திரையில் மலர்ந்த ராகங்கள்' என்று சினிமாப் பாடல்களின் ராகங்களின் சிறப்புகளை எழுதினேன். நல்ல வரவேற்பு கிடைத்தது. காரணம், கதை, கவிதை எழுதுவோர் இருக்கிறார்கள். ஆனால், இசையைப்பற்றி எழுதுபவர்கள் குறைவு. இரா. முருகன், ஹரி கிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்கள் பாராட்டினார்கள். அப்போது எனக்கு 22-23 வயதுதான். 2003ல் படிப்பை முடித்துவிட்டுச் சென்னைக்கு வந்தேன். மீண்டும் இசைநிகழ்ச்சிகளுக்குப் போக ஆரம்பித்தேன். எழுதவும் செய்தேன்.குறை சொன்னல் வரவேற்பு!
நான் எழுதுவது விமர்சனம் அல்ல, அனுபவப் பகிர்வு என்று சொல்லலாம். ஆரம்பத்தில் இசையைப் பற்றித் தெரியாதவர்களுக்குத் தெரியவைக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அப்படி இல்லை. இசைக்கு விமர்சனம் தேவையா என்பதே இன்றைக்கு என் கேள்வியாக இருக்கிறது. அன்றைக்கு அதற்குத் தேவை இருந்தது. எங்கோ ஓரிடத்தில் கச்சேரி நடக்கும். அதுபற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ள விமர்சனம் உதவியது. உலகம் முழுவதும் அறிந்துகொள்ளப் பத்திரிகையில் வரவேண்டி இருந்தது. இன்றைக்கு எல்லாமே இணையமயம். கச்சேரிகளை யூ-ட்யூபில் பார்க்க முடிகிறது. நேரலையாகவும் பார்க்க முடிகிறது.

அன்றைக்குப் பத்திரிகையில் விமர்சனம் வந்தால், அதைப் பார்த்துப் பாடகரைப் பல ஊர்களிலும் அழைப்பார்கள். ஆனால், இன்றைக்கு, விமர்சனம் என்பது, எனக்கு இது தெரியும் என்பதைக் காண்பிப்பதாக, அல்லது இது தவறு என்று காட்டுவதற்காகத்தான் இருக்கிறது. நூறு நல்ல விஷயம் சொன்னால் யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், நன்றாகவே இல்லை என்று சொல்லிவிட்டால் அதற்கு பயங்கர வரவேற்பு இருக்கிறது. யாரையாவது திட்டினால் வரவேற்பு இருக்கிறது. தமிழ்ப் பத்திரிகைகளில் விமரசனம் எழுதக் கூப்பிட்டார்கள். நான் மறுத்துவிட்டேன்.

பிரபல கலைஞர்களின் இசையை விமர்சித்து எழுதி என்ன ஆகப்போகிறது, அதனால் யாருக்குப் பயன்? அவர்களுக்குக் கூடுதலாக இரண்டொரு கச்சேரிகள் வருமா? பத்திரிகைப் பிரதிகள் அதிகம் விற்குமா? இல்லை! இது ஒரு சடங்காக நடந்துகொண்டே இருக்கிறது.

இசையுலக இளவரசர்
தற்போது ஆவணப்படுத்துவதில் என் கவனம் இருக்கிறது. இப்பொழுது மதுரை மணி ஐயரை வரலாறு படைத்தவர் என்கிறோம். அவருடைய வாழ்க்கை வரலாறு தேடினால் கிடைப்பதில்லை. அதுபோல்தான் எம்.எல். வசந்தகுமாரியும். அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் ஆவணப்படுத்தல் அவசியம்.

ஆர். வெங்கடேஷ் அப்போது விகடன் பிரசுரத்தின் செயல் தலைவராக இருந்தார். அவர் என்னிடம் இசைத்துறை குறித்து ஒரு புத்தகம் - அதுவும் 15 நாட்களுக்குள் - எழுதித் தருமாறு கேட்டார். நான் சில வருடங்கள் முன்பே ஜி.என்.பி.யின் குடும்பத்தினரையும், அவரோடு தொடர்பு உடையவர்களையும் சந்தித்து உரையாடித் தகவல் சேகரித்திருந்தேன். அப்படி உருவானதுதான் 'இசையுலக இளவரசர் ஜி.என்.பி.' என்ற எனது முதல் நூல்.

துருவ நட்சத்திரம்
அடுத்து பாலக்காடு மணி ஐயரைப் பற்றி எழுத ஆர்வம் கொண்டேன். தகவல் சேகரிக்க ஆரம்பித்தேன். 2008ல் பழனி சுப்ரமணிய பிள்ளையின் நூற்றாண்டு வந்தது. அது நாரத கான சபாவில் நடந்தது. அதிகக் கூட்டம் இல்லை. எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. இன்னமும் பெரிய அளவில் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால், மணி ஐயரைப் பற்றி எழுதுவதற்கு முன்னால் இவரைப்பற்றி எழுத நினைத்தேன். பிள்ளையின் சீடரும், அவருடன் நெருங்கிப் பழகியவருமான கே.எஸ். காளிதாஸ் அவர்களிடம் பேசினேன். அவர் ஊக்குவித்தார். பழனி சுப்ரமணிய பிள்ளை, புதுக்கோட்டை வழிமுறை, மான்பூண்டியா பிள்ளை, தக்ஷிணாமூர்த்திப் பிள்ளை, முருகபூபதி என்று பலரைப் பற்றிய விவரங்களைச் சேகரித்தேன். கூடவே மிருதங்கம், புதுக்கோட்டை பாணி, அதன் முன்னோடிகள் எல்லாம் விளக்குவதற்காக நிறைய உழைத்துத் தெரிந்துகொண்டேன். மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின் உருவானது பழனி சுப்ரமணிய பிள்ளையைப் பற்றிய 'துருவ நட்சத்திரம்'.எஸ். ராஜம் என்ற மேதை
நான் ஜி.என்.பி. தேடலில் இருந்த காலம். மதுரை சுப்பிரமணிய ஐயர் ஜி.என்.பி.யின் குரு. அவரைப் பற்றி விவரம் எதுவுமே கிடைக்கவில்லை. ஒருசமயம் ராஜம் அவர்கள் மதுரை சுப்பிரமணிய ஐயரைப் பற்றிப் பேசியிருந்த விஷயங்கள் எனக்குக் கிடைத்தன. மேல் விவரங்களைப் பெறுவதற்காக நான் ராஜம் ஐயாவைச் சந்திக்கப் போனேன். அது 2006, செப்டம்பர், விஜயதசமி நாள். அவர் அப்போது சற்று உடல்நலமில்லாமல் இருந்தார். "மேக்ஸிமம் டென் மினிட்ஸ் பேசுவேன்" என்று சொல்லி வரச் சொன்னார். அன்றைக்கு என்னிடம் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசினார்.

நான் கிளம்பும்போது அவர் டேபிள்மேல் இருந்த பெயிண்டிங்கில் சப்தமாதாக்களை வரைந்திருந்ததைப் பார்த்தேன். முற்காலச் சோழர் காலத்துச் சிலைகளுக்கும், அவர் வரைந்திருந்த படத்துக்கும் இடையே வேறுபாடுகள் இருந்தன. "இது நான் பார்த்த சப்தமாதாக்கள் மாதிரி இல்லை" என்று சொன்னேன். எனக்கு வரலாற்று ஆர்வம் உண்டு. டாக்டர் மா. இராசமாணிக்கனாரின் மகன் டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்களுடன் பல வரலாற்றாய்வுகளில் ஈடுபட்டிருக்கிறேன். பல ஆலயங்களுக்கு நண்பர்களுடன் சென்றிருக்கிறேன். அந்த அனுபவத்தில்தான் சொன்னேன்.

"நீ என்ன பார்த்தாய், எங்கே பார்த்தாய், அதன் ஃபோட்டோக்கள் கிடைக்குமா?" என்றெல்லாம் கேட்டார். நான் சென்ற ஆலயங்கள் பற்றியெல்லாம் சொன்னேன். அவரும் தான் பார்த்த, பார்க்காத ஆலயங்கள் பற்றிப் பேசினார். அவர் கேள்விகளுக்கெல்லாம் நான் பதில் சொன்னேன். அவருக்கு எனது வரலாற்று ஆர்வம் மிகவும் பிடித்துவிட்டது. "இந்த மியூசிக் அது இதெல்லாம் விட்டுடுப்பா. நீ சொல்ற இந்த ஹிஸ்டரி, கல்சர் பத்தியெல்லாம் எழுதத்தான் ஆள் இல்லை. நீ அதைச் செய்" என்று என்னிடம் அடிக்கடி சொல்வார்.

அவர் கேட்ட படங்களை எல்லாம் ப்ரிண்ட் போட்டுக் கொடுத்தேன். நான் எங்கு போனாலும் டிஜிடல் கேமராவில் படம் எடுத்து அவருக்கும் ஒரு செட் கொடுப்பது என் வழக்கமாயிற்று. ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்தித்து உரையாடுவவேன். இசை சம்பந்தமான நிறைய செய்திகளை அறிந்துகொண்டேன்.. ஆனால் அவருக்குத் தெரிந்திருந்ததில் 10 சதவீதம் கூட கேட்டுக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு அவரிடம் விஷயஞானம். அப்போதுதான் ஜி.என்.பி.யின் நூற்றாண்டு வந்தது.

ஆவணப்படத்தின் வலிமை
ஜி.என்.பி. நூற்றாண்டு விழாவுக்காக 'கந்தர்வ கானம்' என்ற நூற்றாண்டு மலரைத் தொகுத்திருந்தேன். அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் இருப்பதைவிட அதிக விஷயங்களை அதில் சேர்த்திருந்தேன். ஜி.என்.பி. பற்றிய கட்டுரைகள், ஜி.என்.பி. எழுதிய கட்டுரைகள், அவரது தந்தையார் எழுதிய கட்டுரை என்று நிறைய அதில் இடம்பெற்றிருந்தன. ஜி.என்.பி. பற்றிய ஆவணப்படம் ஒன்றும் அன்று வெளியானது. (பார்க்க) நான் எழுதிய வாழ்க்கை வரலாறு, தொகுத்த நூற்றாண்டு மலர் ஆகியவற்றிலிருந்து தகவல்களை எடுத்து டாக்குமெண்டரியை வடிவமைத்திருந்தார்கள்.

எழுத்தைவிட டாக்குமெண்டரி என்கிற மீடியம் அதிக வலிமை உள்ளதாகத் தோன்றியது. உடனே எஸ். ராஜம் பற்றி ஒன்றைத் தயாரிக்க ஆசை வந்தது. காரணம் அந்த அளவுக்கு அவரைச் சந்தித்து உரையாடியிருக்கிறேன், தகவல்களைப் பெற்றிருக்கிறேன். புத்தகமாக எழுதும் எண்ணம் இருந்தது. இப்போது அந்த எண்ணம் மாறிவிட்டது. அதுமுதல் ராஜம் அவர்களைக் காணச் செல்லும்போதெல்லாம் கேமராவில் உரையாடலைப் பதிவுசெய்யத் தொடங்கினேன்.

அவர் இருக்கும் ஃபுட்டேஜ் மட்டுமே 25 மணி நேரம் இருந்தது. மற்றவர்கள் சொன்னதெல்லாம் சேர்த்தால் 50, 55 மணி நேரம் இருந்தது. எனக்கு அவர் பேசியிருந்த எல்லாமே முக்கியமானதாகப் பட்டது. அவருக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுக் கொண்டிருந்ததால் அவர் இருக்கும்போதே தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்தேன். டைரக்டர் எஸ்.பி. காந்தன் அவர்களிடம் ஃபுட்டேஜைக் கொடுத்து ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். ஆனால், அடுத்த வாரத்திலேயே ராஜம் காலமாகி விட்டார். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அது இரண்டரை மணி நேர ஆவணப்படமாக வெளியானது. அவருடைய ஓவியம், இசை இரண்டையும் உள்ளடக்கி அதனை உருவாக்கியிருந்தோம். நம்முடன் வாழ்ந்த ஒரு மேதையைப் பற்றிய ஆவணம் என்ற விதத்தில் அதனை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். (பார்க்க)'பரிவாதினி'
நானும் என் நண்பர் வெங்கட்ராகவனும் இணைந்து ஆரம்பித்த மியூசிக் சேனல் 'பரிவாதினி'. ராஜம் பற்றிய ஆவணப்பட வெளியீட்டின்போது அவரைச் சந்தித்தேன். அவருக்கும் சோஷியல் மீடியா, இசை போன்றவற்றில் அதிக ஈடுபாடு. ஆகவே இருவரும் சேர்ந்து இசைக்காக ஒரு யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்கத் திட்டமிட்டோம். லைவ் ஸ்ட்ரீமிங் அப்போதுதான் அறிமுகமாகி இருந்தது. ஆகவே ஒரு கச்சேரியை லைவ் ஸ்ட்ரீம் செய்ய நினைத்தோம். மயிலை ராகசுதா ஹாலில் நடந்த ஒரு கச்சேரியை அனுமதியுடன் லைவ் ஸ்ட்ரீம் செய்தோம். நல்ல வரவேற்பு. அது பலருக்கும் புதுமையாக இருந்தது. ஒரு சாதாரண வெப் கேமரா, மைக் உடன்தான் அதை மிகவும் சிம்பிளாகச் செய்தோம். 2013 அக்டோபரில் ஆரம்பித்தோம்.

இளைஞர்களுக்கு ஓர் அறிமுக மேடை
டிசம்பர் சங்கீத நிகழ்வுகளில் எனக்குப் பிடித்த சில கலைஞர்களின் கச்சேரிகளை நேரலையில் காண்பிக்க முடிவுசெய்தேன். ஆனால், அவர்களுக்கு அரங்குகள் கிடைக்கவில்லை. நன்றாகப் பாடக் கூடியவர்களுக்கு மேடை இல்லை என்பது அதிர்ச்சியாக இருந்தது. நாமே ஏன் ஒரு மேடை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடாது என்ற எண்ணம் தோன்றியது. தி.நகர் சோஷியல் கிளப் (அதற்கும் சங்கீதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை) கிடைத்தது. அங்கே மூன்று நாட்கள் கச்சேரி ஏற்பாடு செய்தோம். ஏஷியானா அபார்ட்மெண்ட் கம்யூனிடி ஹால் கிடைத்தது. அதில் இசை நிகழ்ச்சி நடத்தினோம். இப்படி 10, 12 கச்சேரிகளை நடத்தினோம். கலைஞர்களுக்குச் சன்மானமுண்டு. ஆனால், ரசிகர்களுக்கு இலவசம். எங்கள் கைக்காசைச் செல்வழித்துத்தான் செய்தோம். காலையில் லெக்சர் டெமோ, மாலை கச்சேரி என்றெல்லாம் செய்தோம். இளைஞர்கள், அதிகம் மேடை கிடைக்காதவர்கள், திறமை இருந்தும் அதிகம் அறியப்படாதவர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து டிசம்பர் சீசனில் 400 கச்சேரிகளை லைவ் ஆகக் காண்பித்தோம்.

2014ல் நான் வேலையை விட்டுவிட்டு முழுமையாகப் பரிவாதினியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தினேன். அதன் வளர்ச்சிக்காக நிதி திரட்டுவதில் ஈடுபட்டேன். அது சாத்தியப்படவில்லை. சபாக்கள் நடத்தும் கச்சேரியைத்தான் நாம் நேரலையில் தருகிறோம். We are not the owners of the contens. நாம் நடுவில் இருக்கும் ஒரு enabler தான். ஆகவே இதை ஒரு தொழிலாகச் செய்வது சாத்தியப்படாது என்பது புரிந்தது. ஆகவே பரிவாதினியை சேவையாகச் செய்ய முடிவெடுத்து ஒரு அறக்கட்டளையாகப் பதிவு செய்துவிட்டேன். வெங்கட்ராகவன் இதனை விரும்பாததால் வெளியேறிவிட்டார். அதுமுதல் நான்மட்டுமே இதில் தற்போது முழுக்கவனம் செலுத்தி வருகிறேன்.

கச்சேரிகளை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இருந்த இடத்தில் இருந்தே பார்க்கமுடியும் என்பதுதான் பரிவாதினியின் முக்கியமான சிறப்பு. ஆர்வமிருந்தும் போக முடியாதவர்கள், வயதானவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் என்று பலருக்கும் இது பயனுள்ளதாக இருக்கிறது. லைவ் ஆகப் பார்க்கும் த்ரில்லும் இருக்கிறது. கச்சேரிகளைக் காண்பிப்பதோடு நின்றுவிடாமல் பரிவாதினி விருது என்ற ஒன்றையும் ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருகிறோம்.

வேருக்கான விருது
நண்பரும் வித்வானுமான திருவனந்தபுரம் பாலாஜி என்னிடம், "எது எதெற்கோ விருது தருகிறார்கள். ஆனால் இந்த இசைக்கருவிகளைச் செய்பவர்களை யாருமே கண்டுகொள்வதில்லையே" என்று சொன்னார். எனக்கு அது நியாயமாகப் பட்டது. அதனால் பரிவாதினி சார்பாக நாமே ஒரு விருதைத் தந்து விடலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு 'பர்லாந்து விருது' என்று பெயர் சூட்டினோம்.

அவருடைய பெயர் ஃபெர்னான்டஸ். பரம்பரையாகத் தஞ்சாவூரில் மிருதங்கம் செய்யும் குடும்பம். பாலக்காடு மணி ஐயர், பழனி சுப்ரமணிய பிள்ளை ஆகியோருக்கு மிருதங்கம் செய்து கொடுத்தவர் அவர்தான். அவருடைய பெயரில் அவ்விருதைத் தர ஆரம்பித்தோம். முதல் விருதை அவருடைய பையன் செல்வத்திற்குக் கொடுத்தோம். அவரும் பாலக்காடு மணி ஐயருக்கு மிருதங்கம் செய்து கொடுத்திருக்கிறார். அவரை மணி ஐயர் லண்டன் செல்லும்போது கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். இரண்டாவது வருட விருது அளிக்கும்போது அது மிருதங்க மேதை முருகபூபதியின் நூற்றாண்டு என்பதால் அவருக்கு மிருதங்கம் செய்து கொடுத்த வரதன் என்பவருக்குக் கொடுத்தோம். மூன்றாவது வருட விருதை வீணை செய்யும் கலைஞர், பெங்களூரைச் சேர்ந்த ராஜம் என்பவருக்குக் கொடுத்தோம். போன வருடம் விருதை மானாமதுரையைச் சேர்ந்த கடம் செய்யும் கலைஞர் ஈ.வி.கே. ரமேஷ் அவர்களுக்குக் கொடுத்தோம். இந்த வருட விருதை திருவையாறில் வசிக்கும், தவில் தயாரிக்கும் பரமசிவத்துக்குக் கொடுக்கிறோம்.

இந்த விருதுகளை நான் மிக முக்கியமானவையாகக் கருதுகிறேன். ரசிகர்களுக்கும் கூட 'ரசிகா அவார்ட்' இருக்கிறது. ஆனால், இவர்களை கௌரவிக்க யாருமில்லை. வேருக்கான விருது என்ற முறையில் எனக்கு இது ஆத்மதிருப்தி அளிக்கிறது.ஒரு சிறிய வட்டம் ஏன்?
சங்கீதம் ஒரு சிறிய வட்டத்தில் இருக்கிறதென்பது சரியா என்று சிலர் கேட்கிறார்கள். ஒரு பக்கத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இது சரி, இது தவறு என்று சொல்லிவிட முடியாது. கர்நாடக சங்கீதம் இன்றைக்கு ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் இருப்பது உண்மைதான். ஆனால், அது ஏன் அப்படி இருக்கிறது என்பதை ஆராயவேண்டும். ஒரு 50, 60 வருடம் முன்னால் பார்ப்போம். இசை வேளாளர்கள் இல்லை என்றால் இன்றைய கர்நாடக சங்கீதம் இல்லை. அவர்கள்தாம் இதனைப் பேணி வளர்த்தெடுத்திருக்கிறார்கள். 1930 முதல் 1960 வரை இசையின் பொற்காலம் சென்று சொல்வார்கள். அந்தக் காலத்தின் ஜாம்பவான்கள் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்திருப்பது நாகஸ்வரம்தான். மதுரை மணி ஐயர், ஜி.என்.பி., செம்மங்குடி சீனிவாச ஐயர் எல்லோருமே நாகஸ்வரத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். அரியக்குடி ராமானுஜ ஐயங்காரை எடுத்துக் கொண்டால் அவருக்கு வீணை தனம்மாள் இன்ஸ்பிரேஷன். இதிலிருந்தே இசை எப்படி வளர்ந்து வந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அதுபோல இசையைக் கேட்க வருபவர்களும் ஒரு சிறிய வட்டத்தினர்தாம். என் அனுபவத்தைச் சொல்கிறேன். நாங்கள் நாகஸ்வரக் கச்சேரியும் வைத்தோம். பாட்டுக் கச்சேரியும் வைத்தோம். நாகஸ்வரத்திற்கு கூட்டம் வரவில்லை. மற்ற கச்சேரிகளுக்கு வந்தார்கள். இவர்கள் எல்லாருமே தேர்ந்த இசை ரசிகர்கள் என்று சொல்லமுடியாது. நாகஸ்வரத்தைக் கோயிலில் கேட்கலாம், ஹாலில் கேட்க நன்றாக இருக்காது என்றுகூடச் சிலர் நினைக்கிறார்கள். இப்படி தேவையில்லாத மனத்தடைகளை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோமோ என்று ஆராய வேண்டியிருக்கிறது. எல்லோரையும் பாகுபாடின்றி இசையை ரசிக்க வைக்க வேண்டும் என்பதே என் கருத்து.

இசை என்னும் அனுபவம்
இசையை நிறைய கற்கக் கற்க ரசிப்பதில் தடை ஏற்படும். இதை இப்படிப் பாடுகிறாரே, இது சரியில்லையே, அது நன்றாக இல்லையே, இது தப்பாச்சே என்றெல்லாம் தோன்றும். கர்நாடக இசையைக் கேட்டு ரசிப்பவர்கள் எல்லாம் அதைப் புரிந்து தெரிந்துதான் ரசிக்கிறார்கள் என்பதில்லை. யாழ்ப்பாணம் தக்ஷிணாமூர்த்திப்பிள்ளை மியூசிக் அகாடமியில் வாசித்தோ, கிருஷ்ண கான சபாவில் வாசித்தோ பெரிய மேதை ஆகவில்லை. தஞ்சாவூரின் சாதாரண குக்கிராமங்களில் இருக்கும் சிறுசிறு கோயில்களில் அவர் வாசித்திருக்கிறார். கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து கேட்டார்கள் என்றால், இசை தெரிந்து, தேர்ச்சி பெற்று அவர்கள் அங்கு கேட்க வரவில்லை. அது ஒரு அனுபவம், ரசிப்போம் என்பதாலேயே அவர்கள் வருகின்றனர். இது 1970வரை நடந்திருக்கிறது. மெட்ராஸில் இருக்கும் இருபது சபாக்களை மட்டுமே நம்பி அவர்கள் இருக்கவில்லை. கிராமம் கிராமமாக வாசித்துப் பிரபலமான பின்னர்தான் அங்கும் வாசித்திருக்கிறார்கள். காலப்போக்கில் இதெல்லாம் குறைந்துவிட்டது ஏன் என்பது நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

ஒரு கலைஞனை, ஒரு காலகட்டத்தில், அவனையும் மீறிக் கலை ஆட்கொண்டுவிடும். Art takes over the artist. அந்த மாதிரித் தருணங்களில் அவன் வேறொரு லெவலில் இருக்கிறான். அந்த நிலையில், ஒரு சாதாரண ரசிகனுக்குள் ஒரு மாற்றம் நிகழ்கிறது. அது முழுக்கப் புரிவதில்லை. வேறொரு மனநிலைக்கு நம்மை எடுத்துக்கொண்டு போகிறது. இன்றைக்கும் மதுரை மணி ஐயர் போன்ற ஜாம்பவான்களின் இசையைக் கேட்கும்போது தன்னைக் கரைத்துக்கொண்டு இசையில் மூழ்கி அவரது அனுபவம் வெளிப்படுவதை நாம் உணர முடியும். அது பரவசப்படுத்துகிறது; பிரமிப்பைத் தருகிறது. ஆக, இசை என்பது எல்லாருக்குமானதுதான்.

ஆந்திராவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஒருவரைப் பற்றியும் பின்னர் ஆந்திர இசைப் பாரம்பரியம் பற்றியும் எழுத ஆவல் இருக்கிறது. மூத்த இசைக்கலைஞர்களை நேர்காணல் செய்யும் ஆர்வமும் உண்டு. நம்மிடம் இசை சார்ந்து அதிகப் பதிவுகள் இல்லை. இசைபற்றி முன்னர் வெளிவந்த அனைத்து விஷயங்களையும் தொகுக்கும் எண்ணமும் இருக்கிறது. எது எப்போது முழுமையடையும் என்பது தெரியாது. முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது.

உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்

*****
கல்கியும் சுப்புடுவும்
தமிழில் இசை விமர்சனம் என்றால் அதற்கு முன்னோடி கல்கிதான். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டுத் தான் எனக்கு வரலாற்றில் ஆர்வம் வந்தது. எனக்குச் சென்னையில் படிக்க இடம் கிடைத்தும்கூட, நான் தஞ்சாவூரில் படிக்க முடிவெடுத்தது கல்கியின் எழுத்தில் காணப்படும் இடங்களைப் பார்க்கும் ஆசையில்தான். அவர் தமிழிசை வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவரது விமர்சனத்தில் அவரது இசைஞானம் வெளிப்படவில்லை. அதையே இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக, சொல் விளையாட்டுகளோடு, இசைபற்றி அறியாதவர்கூட விமர்சனத்தைப் படித்தவுடனேயே தனக்கு ஏதோ தெரிந்துவிட்டதாக எண்ணும் மாயையை உருவாக்கியவர் சுப்புடு.

- லலிதாராம்

*****


புதியவர்களை அறிமுகப்படுத்த விமர்சனம் தேவை
இன்றைய பத்திரிகைகளில் பிரபலமானவர்களின் கச்சேரிகளைப் பற்றியே எழுதுகிறார்கள். புதிதாக இத்துறைக்கு வரும் இளைஞர்களின் கச்சேரி பற்றி எழுதாவிட்டால் அது நடந்ததே தெரியாமல் போய்விடும். அதுபோல சிலர் ரொம்ப வருடமாகப் பின்வரிசையிலேயே இருப்பார்கள். ஆனால் பெரிய ஞானஸ்தர்களாக, வித்வத் உள்ளவர்களாக இருப்பார்கள். யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களைப்பற்றி எழுதினால் இசைத்துறைக்கு நன்மை அத்தகைய விமர்சனங்களை வரவேற்கலாம்.

அந்த வகையில் தினமணி சிவகுமார் செய்தது முக்கியமான பணி. தினமணிகதிரில் இசைகுறித்து நிறைய எழுதியிருக்கிறார். கதிரின் இசைமலர் கொண்டு வந்திருக்கிறார். அவை தொகுக்கப்பட வேண்டும். தமிழில் சிறப்பாக இசை விமர்சனம் எழுதுபவர் ஐ.ஐ.டி. பேராசிரியர் அருண் நரசிம்மன். சமீபத்தில் நாவல்களும் எழுதியிருக்கிறார். இசைக்கான இதழ்களில் Sruti Magazine முக்கியமானது. தமிழில் அப்படி ஓர் இதழ் இல்லை.

- லலிதாராம்

*****


வரலாறு.காம்
ஒரு கோயில் என்றால் என்ன, அதில் என்னவெல்லாம் பார்க்க வேண்டும், அதன் கட்டடக்கலை நுட்பங்கள் என்ன, கல்வெட்டுக்கள் என்ன சொல்கின்றன என்றெல்லாம் டாக்டர் கலைக்கோவன் மூலம் கற்றுக்கொள்ள முடிந்தது. சில நண்பர்கள் சேர்ந்து ஆய்வுப் பயணங்களை மேற்கொண்டோம். கலைக்கோவனின் புத்தகங்களை அந்தந்த இடத்திற்கே எடுத்துச் சென்று, ஒப்பிட்டு கற்றுக் கொண்டோம். அப்படிக் கற்றுக் கொண்டதைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று 2004ல் Varalaaru.com தளத்தை ஆரம்பித்தோம். தற்போது மற்றப் பணிகளின் காரணமாக என்னால் அதிகம் பங்களிக்க முடியவில்லை.

- லலிதாராம்

*****


சைவ, வைஷ்ணவ மரபுகள்
"நாதமும் நாதனும்" என்ற ஆவணப்படத்திற்கு நான் பங்களித்திருக்கிறேன். நாகஸ்வரத்திற்கென்று கோயில் சார்ந்த மரபு இருக்கிறது. குறிப்பாக சிவாலயங்களில் இந்த வழிபாட்டில் இந்த ராகத்தை வாசிக்கவேண்டும் என்ற முறை இருக்கிறது. மடப்பள்ளியிலிருந்து சுவாமிக்கு பிரசாதம் கொண்டு செல்லும்போது தளிகை மல்லாரி, அபிஷேகத்துக்குத் தீர்த்தம் எடுத்துவரும்போது தீர்த்த மல்லாரி என்று வாசிப்பார்கள். திருநாட்களின் நாகஸ்வரம் வாசிக்கப்படும். குறிப்பாக ஐந்தாம் திருநாள் என்றால் அன்று ஐந்துவித மல்லாரிகளை வாசிப்பார்கள். தேர் அன்று தேர் மல்லாரி வாசிப்பார்கள். இன்று அநேகமாக இது வழக்கொழிந்து போய்விட்டது. ஆனால், சிதம்பரம் தலத்தில் இன்றைக்கும் இருக்கிறது. அந்தக் கோவிலின் ஆஸ்தான வித்வான் ஆச்சாள்புரம் சின்னத்தம்பிப் பிள்ளை. அவரை வைத்து, நெய்வாசல் கோயிலில் உற்சவம் ஒன்றைச் செய்து அதைப் பதிவு செய்திருக்கிறோம்.

இதன் தொடர்ச்சியாக வைஷ்ணவத்தில் நாகஸ்வர மரபைப் பதிவிடும் முயற்சியில் இருக்கிறேன். சிதம்பரம் கோவிலிலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கு நவராத்திரி விழாவில் மங்கல இசை உண்டு. இரண்டு மரபுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. அதைப்பற்றிய தகவல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதற்குக் கொஞ்சம் நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. மேலும் ஆச்சாள்புரம் சின்னத்தம்பிப் பிள்ளைக்கு 90 வயதுக்குமேல் ஆகிவிட்டது. அந்த அவசரமும் சேர்ந்துகொள்கிறது.

- லலிதாராம்

*****
Share: 
© Copyright 2020 Tamilonline