Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம் | பயணம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | சாதனையாளர் | வாசகர் கடிதம் | மேலோர் வாழ்வில்
Tamil Unicode / English Search
நேர்காணல்
கோபி ஷங்கர்
- அரவிந்த், ஸ்ருஷ்டி|மார்ச் 2018|
Share:
கோபி ஷங்கருக்கு வயது 26. இவர் ஆணா, பெண்ணா என்றால் இரண்டுமல்ல. சரி, அப்படியானால் திருநங்கை, திருநம்பி போன்றவரா. அதற்கும் இல்லை என்பதுதான் விடை. இவரை இடைப்பாலினர், இடையிலிங்கத்தவர் அல்லது பால்புதுமையர் (Intersex person) என்பர் (விவரமாக அறியப் பெட்டிச்செய்தி பார்க்கவும்). மாநிலங்களவைக்கு மாற்றுப் பாலினத்தவர் மசோதா தாக்கல் செய்ய சாட்சியமாக அழைக்கப்பட்டவர். 2016 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இந்தியாவின் இளம் வேட்பாளரும் கூட. தமிழகத்தில் நடைபெறவிருக்கும் பாடத்திட்டச் சீரமைப்புக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனை வழங்கியிருக்கிறார். சமீபத்தில் பேங்காங்கில் நடைபெற்ற இன்டர்செக்ஸ் நபர்களுக்கான மாநாட்டில் சிறப்புரையாற்றித் திரும்பியிருக்கிறார். மதுரையில் "ஸ்ருஷ்டி" அமைப்பின் மூலம் சமூக நற்பணிகளைச் செய்துவரும் கோபி ஷங்கருடன் உரையாடியதில் இருந்து...

*****


கே: இடைப்பாலினர் மற்றும் திருநங்கை, திருநம்பிகளுக்கும் என்ன வேறுபாடு?
ப: அடிப்படையில் பால் வேறு; பாலினம் வேறு. 12, 13 வயதுகளில் ஒருவர் தன்னை எந்தப் பாலினத்தைச் சேர்ந்தவர் என்கிற தீர்மானத்துக்கு வரலாம். தன்னை அப்படி அடையாளப்படுத்திக் கொள்ளலாம். பிறப்பால் ஆணாகப் பிறந்தவர் ஆணாகத்தான் வாழ வேண்டும், பெண்ணாகப் பிறந்தவர் பெண்ணாகத்தான் வாழ வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. அதாவது ஆணாகப் பிறந்து பெண்ணாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் திருநங்கைகள். பெண்ணாகப் பிறந்து ஆணாக அடையாளப்படுத்திக் கொள்பவர்கள் திருநம்பிகள். இவ்விருவரும் சேர்ந்த சமூகம் 'திருநர் சமூகம்'. மருத்துவ அறிவியல் இருப்பது இரண்டு பாலினங்கள்தான் என்கிறது: ஆண் மற்றும் பெண். இன்டர்செக்ஸ் என்பது ஒரு கண்டிஷன் அல்லது நிலைமை. அதே சமயம் இன்டர்செக்ஸ் என்பது வேறு ட்ரான்ஸ்ஜெண்டர் என்பது வேறு. செக்ஸ் என்பது வேறு; ஜெண்டர் என்பது வேறு.

நீங்கள் உங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதற்கும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதற்கும் உள்ள வேறுபாடு இது. அதாவது திருநங்கைகள் தம்மைப் பெண் என்று சொன்னாலும், உணர்ந்தாலும் அறிவியலின்படி, அதாவது அவர்கள் அவர்களது பிறப்பின்படி ஆண்தான். திருநங்கையாக இருந்தாலும அவர் XY க்ரோமோசோம் கொண்டவர்தான். ஆண்தான். பெண்ணாகப் பிறந்த ஒரு திருநம்பி ஆணாக உணர்ந்தாலும், அறிவியலின்படி அவர் XX குரோமோசோம் கொண்ட பெண்தான். ஆனால், நமது சட்டம் அவர் ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்க அங்கீகாரம் அளிக்கிறது.

ஆனால், இடைப்பாலினர் அப்படிப்பட்டதல்ல. அவர்கள் பிறக்கும்போதே குரோமோசோம் வேறுபட்டு, உடலியல் அமைப்பே வேறுபட்டு வித்தியாசமாகப் பிறக்கிறார்கள். எல்லோரையுமே transgender என்ற வகையில் அடக்கும் குழப்பம் அருந்ததிராயில் ஆரம்பித்துப் பலரிடம் இருக்கிறது. sex, gender, sexual orientation இவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு புரிந்தால் இந்த வித்தியாசங்கள் புரிந்துவிடும்.



கே: இடையிலிங்க மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்னென்ன?
ப: சொல்கிறேன். குழந்தை பிறக்கும்போதே இடையிலிங்க நிலையில் இருப்பது பெற்றோருக்குத் தெரிய வரலாம். சிலரை ஆணாகவோ, பெண்ணாகவோ வரையறுத்த பிறகு, வளரும்போது தெரியவரலாம். பல இடையிலிங்கத்தவருக்கு தாம் அந்தப் பிரிவினர் என்பதே தெரியாமலும் போகலாம். இருவேறு தெளிவற்ற பாலியல் உறுப்புக்களுடன் பிறக்கும் இவ்வகைக் குழந்தைகளுக்கு "செக்ஸ் செலக்‌டிவ் சர்ஜரி" எனப்படும் பாலியல் உறுப்பு அறுவை சிகிச்சை செய்துவிடுகின்றனர். இது தவறு. இதனால் வளர்ந்த பிறகு அவர்களுக்கு பல்வேறு மனநல, உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனால் Bodily integrity பாதிக்கப்படுகிறது. இது ஒரு நோயோ, குணப்படுத்தக் கூடிய விஷயமோ அல்ல. ஒரு குழந்தையை ஆணாக மாற்றிவிட்டு, வளரும்போது அது ஆணாக வளர விரும்பவில்லை என்றால் என்ன செய்வது? ஆகவே, இது அறிவியல் பூர்வமாகச் சரியானதல்ல.

WHO இதைப் பற்றி ஆய்வுகள் செய்து வருகிறது. கடந்த அக்டோபரில் அமெரிக்க சர்ஜன் ஜெனரல், "தனிநபர் உடலின் இறையாண்மையைச் சீர்குலைக்கும் இவ்வகை மருத்துவப் பரிசோதனைகளையும், அறுவை சிகிச்சைகளையும் எந்தக் குழந்தையின் மேலும் நடத்தக் கூடாது" என்று ட்ரம்ப் அரசுக்குப் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவில் இந்த மாதிரி அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. அது தவறு, அதனை எதிர்த்து நாங்கள் வழக்குத் தொடுக்க இருக்கிறோம்.

இம்மாதிரிப் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு, சலுகைகள், உரிமைகள் தரவேண்டும்; அவர்களுடைய பிரைவசி, அவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் ஆலோசனை, உதவிகள் போன்றவை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். அரசின் குழந்தைநலக் கொள்கை (Child Welfare Policy) இவர்களைக் கண்டுகொள்ளவே இல்லை. மக்கள்தொகைக் கணக்கிலும் இவர்களுக்கு இடமில்லை. இப்படி 10,000 குழந்தைகள் இருக்கின்றன. இன்டர்செக்ஸ் சிசுவதை, அல்லது அவர்கள் மீதான அறுவை சிகிச்சையைத் தடை செய்ய இந்தியாவில் சட்டம் கிடையாது. அதனைக் குறிவைத்து நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

கே: நீங்கள் சொல்லும் "செக்ஸ் செலக்‌ஷன் சர்ஜரி" என்றால் என்ன?
ப: ஒரு குழந்தை இடையிலிங்கப் பிரிவைச் சார்ந்தது என்பது தெரிய வந்தால் உடனடியாக அதற்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சைதான் 'செக்ஸ் செலக்டிவ் சர்ஜரி'. பெரும்பாலும் அதை ஆணாக மாற்றி விடுகின்றனர். திருநங்கைகள் வளர்ந்தபிறகு செய்து கொள்வது பால் மாற்று அறுவை சிகிச்சை (sex re-assignment surgery). இடையிலிங்கக் குழந்தைகளுக்குச் செய்யப்படுவது sex selective surgery மற்றும் sex corrective surgery ஆகியன. இந்தப் பால் அறுவை சிகிச்சை செய்யக் கூடாது என்று ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையம் 2015லேயே அறிக்கைகளை வெளியிட்டிருக்கிறது.

தனது பால் அடையாளத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை குழந்தையிடம்தான் இருக்க வேண்டும்; பெற்றோர் அல்லது மருத்துவரிடம் அல்ல என்பதை ஆணையம் வலியுறுத்துகிறது. இல்லாவிட்டால், வளரும்போது தாம் விரும்பும் பாலினத்தைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அந்தக் குழந்தை இழக்கிறது. எனவே இந்த அறுவைசிகிச்சை மனிதநேயமற்ற செயலாகும். மனித உரிமை மீறலும் கூட. ஒரு நாட்டுக்கு இறையாண்மை (integrity) இருப்பதுபோல உடலுக்கும் இருக்கிறது. இது விவாதத்துக்கு அப்பாற்பட்டது.



கே: பிறந்தவுடன் அறுவைசிகிச்சை செய்துவிட்டால், குழந்தை வளர்ந்த பிறகு, தான் இன்டர்செக்ஸ் என்பதை எப்படித் தெரிந்துகொள்ளும்?
ப: அறுவை சிகிச்சை செய்தாலும், குழந்தை ஆணாக வளருமா, பெண்ணாக வளருமா என்று யாரும் சொல்லமுடியாது. சிறந்த மருத்துவர்கள் கூட, நமது உடம்பை மீறி ஏதோவொன்று செயல்படுகிறது; அதை நிர்ணயிக்க முடியவில்லை, அதை எங்களால் மாற்றமுடியாது என்றுதான் சொல்கிறார்கள். அதாவது நாட்டைவிட்டு விரட்டப்படுபவர்கள் அகதிகளாவது போல இம்மாதிரி அறுவை சிகிச்சை செய்யப்படும் குழந்தைகள் வளர்ந்து ஆளாகும்போது அவர்களது உணர்வுக்கேற்ற உடலில் இல்லாமல் போய்விடும்; தனது உடலே அவர்களுக்கு அன்னியமாகி விடுகிறது. அது உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது.

கே: உளவியல் ரீதியாக என்ன மாதிரி பாதிப்புகள் ஏற்படும்?
ப: பலர் மனவெறுப்புக்கும் அதீத மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார்கள். தன் உடம்பினுள் நடக்கும் போரில் தன்னை அடையாளம் காண முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். திருநங்கைகளுக்கும் இன்டர்செக்ஸுக்கும் இடையிலான வித்தியாசமே பலருக்குப் புரிவதில்லை. உயர்கல்வி கற்றவர்கள், மத்திய அரசின் அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்களுக்குக் கூடப் புரியவில்லை. எந்தக் குழந்தையுமே பிறக்கும்போதே கொலுசும், வளையலும் போட்டுக் கொண்டு பிறப்பதில்லை. வளரும் சூழல் அதைத் தீர்மானிக்கின்றது. என்றாலும், பாலியல் மாற்றத்தில் அதையும் தாண்டிப் பல விஷயங்கள் இருப்பதாக மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கே: இவர்களுக்கு உளவியல் சிகிச்சைகள் பலன் தராதா?
ப: இல்லை. அவை பலன் தருவதில்லை. இது மனதின் குறைபாடோ, மனநோயோ கிடையாது. அப்படி வளர்ந்த குழந்தைகள் பலர் அமெரிக்காவில் கோர்ட்டுக்குப் போய் சேலஞ்ச் செய்திருக்கிறார்கள். ஒரு குழந்தை ஏன் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ வாழ வேண்டும், அதற்கென்ன அவசியம் இருக்கிறது என்ற நவீனவகைச் சிந்தனைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகள் வளர்ந்து ஆளான பிறகு அவர்கள் உடல், மன வளர்ச்சிக்கேற்ப அவர்கள் முடிவு செய்யட்டும் என்று இன்றைக்குச் சொல்கிறார்கள். அதுதான் சரி.

கே: இன்டர்செக்ஸ் பிரிவினருக்கு திருமண வாழ்க்கை, இல்லறம் சாத்தியம் தானா?
ப: இடைப்பாலினர் பிரிவில் பிறந்தவர்கள் திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு வாழலாம். சிலரால் அப்படி வாழ இயலாமலும் போகலாம். இடையிலிங்கப் பிரிவில் இருக்கும் சில பெண்கள், திருமணமாகிக் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளனர். சர்வ சாதாரணமாக மூன்று குழந்தைகள் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதேபோல் குழந்தை பிறக்க இயலாதவர்களும் உள்ளனர். சிலருக்கு ஆணுறுப்பு இருக்கலாம். ஆணைப் போலக் கட்டுடல் இருக்கலாம். ஆனால், கர்ப்பப்பையும் இருக்கும். மருத்துவ அறிவியல் ரீதியாக மெக்டலீனா வென்ச்சுரா என்பவர்தான் இப்படி அடையாளம் காணப்பட்டவர். இவர் ஸ்பெயினைச் சேர்ந்தவர். அவருக்குத் தாடி இருந்தது. பெண் உறுப்புகளும் இருந்தது. அவர் பூப்பெய்தியது 38 வயதில், குழந்தை பிறந்தது 47 வயதில். ஒவ்வொருவருடைய உடலின் திறனைப் பொறுத்தது அது. ஆனால், குழந்தை பெற்றுக்கொள்வது மட்டுமே வாழ்க்கையில்லை, அல்லவா?

கே: உண்மைதான். 'ஸ்ருஷ்டி', அதன் நோக்கம் பற்றிச் சொல்லுங்கள்...
ப: நான் இளவயதிலேயே ராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவிப் பயிற்சி பெற்றேன். அது சமயச் சார்பற்ற நிறுவனம். மெய்யியல் ரீதியாகப் பல சிறந்த பங்களிப்புக்களை இந்தியாவிற்கு அளித்திருக்கிறது. மடத்தில் சாதி, மதம், இனம் பார்ப்பதில்லை. மடத்தில் கிறிஸ்துவர்கள், இஸ்லாமியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள் என்று பலர் துறவிகளாகி இருக்கிறார்கள். சென்னை ஆலயத்திற்கு சர்வசமய சமரசக் கோயில் என்று பெயர். மிஷனிலிருந்து 88 மொழிகளில் நூல்கள் வெளிவருகின்றன. 30 லட்சத்துக்கும் மேலான குழந்தைகள் இதன் கல்வி நிலையங்களில் இலவசக் கல்வி கற்கிறார்கள். ராமகிருஷ்ண விஜயத்தின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போதுதான் நான் வேறுபட்டவன் என்பதை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. "இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. இதைக் கேவலமாக நினைக்கக் கூடாது. இதைப்பற்றிக் கவலைப்படக் கூடாது." என்றெல்லாம் அறிவுறுத்தியது மடத்தின் தலைமை. நம்மை உறவுகள் ஏற்றுக் கொள்ளுமுன், சமூகம் ஏற்றுக்கொள்ளுமுன், நம்மை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதற்கு மடம் மிகவும் உதவியது.

நான் பின்பு உயர்கல்வி கற்பதற்காக மடத்தைவிட்டு வெளியே வந்தேன். சிறிய வயதிலேயே மடத்தில் சேர்ந்துவிட்டதால் வெளியுலகம் எனக்கு மிகப்பெரிய பிரமிப்பைத் தந்தது. நாளடைவில் எனக்கு ஃபேஸ்புக் நட்பு ஒன்று கிடைத்தது. இடையிலிங்கத்தைச் சேர்ந்த அவருக்குத் தனது நிலை மிகுந்த வருத்தத்தைத் தந்தது. தனக்கு வந்திருப்பது மிகப்பெரிய வியாதி; குணமாகாதது, பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடியது, வீட்டில் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பார். அவரது மன அழுத்தம் நாளடைவில் தற்கொலையில் முடிந்தது. அது எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சி. இந்த நிலையை மாற்றவேண்டும், இவர்களுக்கு உண்மையைப் புரியவைக்க வேண்டும் என்று நினைத்தேன். என்.ஜி.ஓ. என்பதாக அல்லாமல் ஒரு மாணவர் குழுவாக, 2011ல் மதுரையில் 'ஸ்ருஷ்டி' அமைப்பைத் துவங்கினேன். 'ஸ்ருஷ்டி' என்ற பெயர் தேவி பாகவதத்திலிருந்து எடுக்கப்பட்டது. மதுரைதான் கலைகளின், வரலாற்றின், பண்பாட்டின் தலைநகரம். கோவில்களின் தலைநகரமும் அதுதான். அதனால்தான் மதுரையைத் தேர்ந்தெடுத்தோம்.



கே: ஸ்ருஷ்டி மூலம் நீங்கள் என்னென்ன பணிகளைச் செய்து வருகிறீர்கள்?
ப: ஆரம்பத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பாலினம் தொடர்பான வகுப்புகளை எடுத்தேன். 'பல்லுயிர் ஓம்புதல்' என்பது ஸ்ருஷ்டியின் லோகோவில் இருக்கும் வாசகம். எந்த ஓர் உயிரையும் கஷ்டப்பட விடக்கூடாது என்பது ஸ்ருஷ்டியின் நோக்கம். எந்த நேரமும் எங்களிடம் ஆலோசனை, உதவி பெறுவதற்காக 24x7 இயங்கும் ஹெல்ப்லைன் ஒன்றை நடத்தி வருகிறோம். இந்தியா முழுக்கத் தமிழ், தெலுங்கு, கொங்கணி, துளு, ஹிந்தி, மலையாளம் என எட்டுக்கு மேற்பட்ட மொழிகளில் கவுன்சலிங் கொடுக்கிறோம். ஒரு சிலருக்கு உங்கள் வார்த்தைகள் வாழ்க்கை; வேறு சிலருக்கு நீங்கள் செய்யும் உதவிகள் வாழ்க்கை. அவ்வளவுதான் வித்தியாசம். சிலரிடம் நீங்கள் பேசுவதால் அவர்களது உயிர் காக்கப்படுகிறது. நிறைய இலங்கை அகதிகள் எம்மைத் தொடர்பு கொண்டிருக்கிறார்கள் வேறு வேறு நாடுகளில் இருந்து. அதன் பிறகுதான் "பாலின அகதிகள்" என்பது பற்றிய புரிதலே எங்களுக்கு வந்தது.

இன்டர்செக்ஸ் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கிக் கொடுக்க ஸ்ருஷ்டி உழைக்கிறது. அவர் நல்ல குடிமகனாய், நல்ல இந்தியராய், நல்ல மனிதராய் பிறரைப்போல் சுதந்திரமாக வாழும் சூழலை உருவாக்கிக் கொடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஒரு குடும்பத்தில் இப்படி ஒருவர் இருந்தால் அவரும் மற்றவர்களைப் போலவே வளர வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

சிறு சிறு நாடகங்கள், பயிற்சிப் பட்டறைகள் மூலம் நாங்கள் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பால் என்பது ஓர் அடையாளம்தான். அது முக்கியமான அம்சம்தான். ஆனால், அதுவே வாழ்க்கையல்ல. அதைப் புரிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

ஸ்ருஷ்டியிண் 'கண்ணகி வாசகர் வட்டம்' தமிழ் வளர்ச்சிக்காக இயங்கி வருகிறது. 'ஸ்ருஷ்டி யோக வித்யா' மூலம் 4000 குழந்தைகளுக்கு யோகம் சொல்லிக் கொடுத்துள்ளோம். இது தவிர்த்து விளையாட்டு வீராங்கனை சாந்தி சௌந்தர்ராஜன் மூலம் 36 குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விளையாட்டுப் பயிற்சி அளிக்கிறோம். Literature Resource Center ஒன்று ஸ்ருஷ்டியின் கீழ் இயங்கி வருகிறது. அமெரிக்காவிலிருந்து அறுபதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ் கற்பதற்காக இதற்கு வந்து போயிருக்கிறார்கள். தற்போதுகூட ஜெர்மனியிலிருந்து வந்திருக்கிறார்கள். இவ்வாறு பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகிறோம்.

கே: இதில் நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?
ப: பள்ளி, கல்லூரிகளில் முதலில் எடுத்துப் போனபோது அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அமைச்சர்களுடன் பேசி அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர்தான் முன்னே நகர முடிந்தது. ஆரம்பத்தில் எங்களிடம் ஆலோசனைக்கு வந்தவர்களில் பலர் கிறிஸ்தவர்கள். அவர்களது சூழல் வேறாக இருந்தது. அதனை மாற்றுவதற்காக நாங்கள் மதத் தலைவர்களைச் சந்தித்துப் பேசினோம். புரொட்டஸ்டண்ட் கிறித்துவத் திருச்சபை பாதிரியார்களிடம் சர்ச் கூட்டங்களில் இதுபற்றிப் பேசக் கேட்டுக்கொண்டோம்.

என்னுடைய 'மறக்கப்பட்ட பக்கங்கள்' நூல் வெளிவருவதற்கு முன்பே நான் இதுபற்றி ஒரு சிறு அறிமுக நூலை எழுதியிருக்கிறேன். அதனை தேசியத் திருச்சபைகளின் கூட்டமைப்பிலிருந்து வெளியிட்டனர். அது செராம்பூர் பல்கலைக்கழகத்தின் பாடநூல்களில் ஒன்றாக இருக்கிறது. திருச்சபையைச் சேர்ந்தவர்களுக்கு Bachelor of Divinity (B.D.) என்ற படிப்பு உண்டு. அதனை அங்கீகரிக்கும் இடம் செராம்பூர் பல்கலைக்கழகம். ஆக, இன்றைக்கு யார் பாதிரியாராக வேண்டுமென்றாலும் என்னுடைய அறிமுக உரை இடம்பெற்ற அந்த நூலைப் படித்தாகவேண்டும்.

கே: இதற்கான நிதி ஆதாரங்கள்...?
ப: நான் அடிப்படையில் யோக ஆசிரியர் என்பதனால் அந்த வருவாயைக் கொண்டு ஆரம்பத்தில் இந்த அமைப்பை நடத்தினேன். இதற்குப் பணத்தை விட மனம்தான் தேவை. இதுவொரு தன்னார்வ இயக்கம். ஒரு குழந்தைக்கு 10 ஸ்பான்ஸர்கள். அவர்கள் பணமாக அளிக்க வேண்டியதில்லை. அந்தக் குழந்தைக்கு என்ன தேவையோ அதை ஒருவரோ, அந்தப் பத்து பேருமோ சேர்ந்து வாங்கித் தரலாம். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிறோம். அந்தக் குழந்தைகள் மாநில அளவில், தேசிய அளவில் போட்டியிடும் வீராங்கனைகளாக மாறியுள்ளனர். விரைவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கெடுப்பார்கள். சாந்தியால் வாங்க முடியாத பதக்கத்தை அவர்கள் வாங்குவார்கள்.

சென்ற வாரம் கூட ஒரு குழந்தை ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் நடத்திய விழாவில் தேசிய அளவில் இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறார். அந்தக் குழந்தை அப்போதுதான் தன் வாழ்வில் முதன்முதலாக விமானம் ஏறியிருக்கிறாள். அவர்கள் தங்கள் கிராமத்தைவிட்டே வெளி வராதவர்கள். 95% பெண்கள். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறோம். இதுதான் இன்றைய சூழல்.

கே: ஆர்வமுள்ள ஒருவர் உங்களுக்கு எந்த வகையில் உதவலாம்?
ப: விரும்பினால் நீங்கள் நேரடியாக வந்து அந்த குழந்தைகளைப் பார்த்து உதவலாம். அவர்களுக்குத் தேவையானதை நேரடியாக வாங்கிக் கொடுக்கலாம். பாலியல் தொழிலில் தள்ளப்பட்டு, மீட்டெடுக்கப்பட்ட திருநங்கைகளின் பாதுகாப்பிற்கு உதவலாம். அவர்களுக்கு வேலைவாய்ப்பு அமைத்துக் கொடுக்கலாம். அவர்கள் படிக்க ஆசைப்பட்டால் அதற்கு உதவலாம். எல்லாமே சாரதாதேவியின் அருளால் நடந்து கொண்டிருக்கிறது. "உலகத்தில் யாருமே ஆதரவற்றவர்கள் கிடையாது. எல்லாருமே என் குழந்தைகள் தான்" என்று அவர் சொல்லியிருக்கிறார். ஸ்ருஷ்டியின் புரவலராக அன்னை சாரதா தேவியைத்தான் கருதுகிறோம். நான் எழுதிய 'மறைக்கப்பட்ட பக்கங்கள்' நூலை அவருக்குத்தான் சமர்ப்பித்திருக்கிறேன்.



கே: உலக அளவில் இடையிலிங்கத்தவரின் நிலை என்ன?
ப: தற்போது ILGA அமைப்பின் செயற்குழு உறுப்பினராக என்னைத் தேர்ந்தெடுத்துள்ளனர். உலகெங்கிலும் உள்ள 38 நாடுகள் வாக்களித்துத் தேர்ந்தெடுப்பது இது. அனைத்துலக மாற்றுப் பாலினத்தவர்களுக்காக ஜெனிவாவிலிருந்து செயல்படுகிறது. நான் பல நாடுகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன். இடையிலிங்கத்தவர் உள்பட பல மாற்றுப் பாலினத்தவர்களைச் சந்தித்துள்ளேன். பலருடன் உரையாடியிருக்கிறேன். அதன் மூலம் எனக்குக் கிடைத்த பல தரவுகளை அடிப்படையாக வைத்துச் சொல்வதாக இருந்தால், அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இதுபற்றிய விழிப்புணர்ச்சி அதிகம் இல்லை. அமெரிக்காவிலேயே இது ஒரு பெரிய பிரச்சனைதான். பெரிய விவாதங்கள் இல்லை. என்னுடைய நண்பர் கட்ரி இனார்கா காசிஸ், ஸ்டான்ஃபோர்டு ஸ்கூல் ஆஃப் மெடிசினில் பேராசிரியை. இன்டர்செக்ஸ் கருத்தியலில் அதாரிடி. அவரே, இந்தியாவில் இடையிலிங்க மக்கள் குறித்து நடக்குமளவுக்கு அமெரிக்காவில் விவாதங்கள் நடக்கவில்லை என்கிறார்.

அமெரிக்காவில் ஹிடோவில் நாரியா, பிட்ஜியான் ஆகியோர் சேர்ந்து பல பணிகளைச் செய்து வருகிறார்கள். கிம்பர்லே ஒரு இடைப்பாலினர். அவர் இரண்டு குழந்தைகளுக்குத் தாய். அவர்தான் அமெரிக்காவில் இன்டர்செக்ஸ் சொசைட்டியை ஆரம்பித்தது. இன்டர் ஆக்ட் எனப்படும் இன்டர்செக்ஸ் குழந்தைகளின் பெற்றோருக்கான அமைப்பை அவர் நடத்தி வருகிறார்.

கே: அரசிடமிருந்து எந்தவிதமான உதவிகளை எதிர்பார்க்கிறீர்கள?
ப: முதலில், அரசாங்கம் காது கொடுத்து இந்தப் பிரச்சனைகளைக் கேட்க வேண்டும். இடையிலிங்கத்தவரின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அவர்களுக்கெனச் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். அரசாங்க மருத்துவமனைகள் ஆகட்டும் தனியார் மருத்துவமனைகள் ஆகட்டும் எதிலுமே இடையிலிங்கக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. அரசாங்கம் அந்தப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

பத்து வருடம் முன்பு 'பெண் சிசுவதை' எப்படி இருந்ததோ, அப்படி இன்றைக்கு 'இடையிலிங்கச் சிசுவதை' இருக்கிறது. நான் சந்தித்த பல மருத்துவச்சிகள் இடையிலிங்கச் சிசுவதை நடப்பதை என்னிடம் உறுதிப்படுத்தி உள்ளனர். அவ்வாறு கொல்லப்படும் குழந்தைகள் - ஆயிரமாக இருந்தாலும் சரி, ஒரே ஒரு குழந்தையாக இருந்தாலும் சரி - அதற்குப் பாதுகாப்பு வழங்கவேண்டும். அவர்களின் பெற்றோருக்கு இந்த நிலை பற்றிப் புரியவைக்க வேண்டும். பாலினத் தேர்வு அறுவை சிகிச்சை செய்யக்கூடாது. குழந்தைகள் வளரும்வரை அவர்களின் பால் அடையாளத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு அரசு துணை செய்ய வேண்டும்.

அந்தப் பெற்றோரை எப்படி வழிநடத்துவது என்பது பற்றிய சட்டதிட்டங்களை முதலில் கொண்டுவந்தது மால்டா. அடுத்து ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகள். கொலம்பியாவில் இதுபற்றிக் கலந்தாய்வு நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நாட்டில் இடைப்பாலினர் சுதந்திரத்திற்காக அடிப்படைச் சட்டங்கள் விரைவில் வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தச் செயல்படுகிறோம். 'ஸ்ருஷ்டி' அமைப்பானது, International Center for Indigenous Studies அமைப்புக்கான பிராந்திய மையமாக இந்தியாவில் இருக்க வேண்டும் என்பது எங்கள் ஆசை. மாற்றுப் பாலினத்தவர் கண்ணோட்டத்தைப் பல்வேறு களங்களில் ஆவணப்படுத்த விரும்புகிறோம். Getting education is not important. But what you are getting educated about is more important. இதுதான் ஸ்ருஷ்டியின் மோட்டோ.

உரையாடல்: அரவிந்த்
படங்கள்: ஸ்ருஷ்டி

*****
இன்டர்செக்ஸ் என்றால் என்ன
பிறக்கும்போது இருக்கும் பிறப்பு அடையாளத்தைப் பால் என்றும், வளரும்போது நாம் தேர்ந்தெடுக்கும் பால் அடையாளத்தைப் பாலினம் என்றும் கூறுகிறோம். பால் என்பது ஒரு குழந்தை பிறக்கும்போது அதனுடைய பிறப்புறுப்பை வைத்து, அதாவது குரோமோசோம்களை வைத்து அல்லது ஃபினோடைப், ஜினோடைப்பை வைத்து அக்குழந்தை ஆணா, பெண்ணா என்பது நிர்ணயிக்கப்படும். இது பாலியல் அடையாளம் (Sexual Identity). ஒரு குழந்தை ஆண்குறியோடு பிறந்தால் ஆண்; பெண்குறியோடு பிறந்தால் பெண். இவை தவிர்த்த மூன்றாம் பிரிவே இன்டர்செக்ஸ் எனப்படும் இடைப்பாலினர். இவர்களுக்கு ஆண், பெண் என இரு பால் உறுப்புகளும் தெளிவில்லாமல் இருக்கும். இவ்வகைக் குழந்தைகளுக்கு XX (பெண்) அல்லது XY (ஆண்) வகையில் குரோமோசோம்கள் இல்லாமல், XXX என்றோ, XXY என்றோ 14 வேறுபட்ட வகைகளில் அமையக்கூடும். இவர்கள் திருநங்கைகளோ, திருநம்பிகளோ அல்லர். ஒரு குழந்தை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது Inter Sex ஆகவோதான் பிறக்க முடியும். பாலினத்தில் ஆண், பெண், திருநங்கை, திருநம்பி தவிர்த்து 58க்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றன.

உலக மக்கள்தொகையில் 1.7% மேல் இடையிலிங்க மக்கள் உள்ளதாக ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் தெரிவிக்கிறது. அது கிட்டத்தட்ட தமிழகத்தின் மக்கள்தொகைக்குச் சமம்!

- கோபி ஷங்கர்

*****


கோபி ஷங்கர்
ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் இந்திய மெய்யியல் கற்றவர். இளம் சமூக சேவகர்களுக்கான காமன்வெல்த் நாடுகளின் விருது பெற்ற முதல் தமிழர். ஸ்பெயினில் நடைபெற்ற பாலின ஒருங்கிணைவு உச்சி மாநாட்டில் தென்னிந்தியாவிலிருந்து முதன் முதலாகப் பங்கெடுத்தவர். பால், பாலினம், பாலின ஒருங்கிணைவு பற்றிய இவரது சொற்பொழிவு ஸ்பெயின் பாராளுமன்றத்தில் பொதுப் பார்வைக்காக யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பியப் பாராளுமன்றத் தலைவர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டது. பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு பற்றி இவர் எழுதியிருக்கும் அறிமுக நூல் செராம்பூர் பல்கலைக்கழகத்தின் பாடநூலில் இடம்பெற்றுள்ளது. இவரது கட்டுரைகள் வர்ஜினியா பல்கலைக்கழக சமூகவியல் பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. கொலம்பியா, ஜார்ஜ் வாஷிங்டன், ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பாலினங்கள் குறித்து வகுப்புகள் எடுத்திருக்கிறார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவருக்குச் சிறப்பு முதன்மைத்துவப் பட்டம் வழங்கியுள்ளது. மாற்றுப் பாலினத்தவர்களுக்காக ஜெனிவாவிலிருந்து செயல்படும் ILGA (the International Lesbian, Gay, Bisexual, Trans and Intersex Association) செயற்குழுவில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறார்.

மறைக்கப்பட்ட பக்கங்கள்
தமிழில் பால், பாலினம், பாலியல் ஒருங்கிணைவு, இடையிலிங்கத்தவர் பற்றிய புரிதலை ஏற்படுத்த 'மறைக்கப்பட்ட பக்கங்கள்' என்ற நூலை எழுதி வெளியிட்டேன். இதில் பெரும்பங்காற்றியவர்கள் நண்பர் விஜய் விக்கி மற்றும் ஜான் மார்ஷல். இந்தப் புத்தகம் அடிப்படை வரையறைகள், ஒருபால் ஈர்ப்புக் கொண்டோரின் வரலாறு போன்றவற்றைக் கூறும் நூல். பால்புதுமையர், பால்நடுநர், முழுனர், திருநடுனர், மறுமாறிகள், இருநர், திரிநர், பாலிலி, எதிர்பாலிலி என பல்வகைப் பால் பிரிவினர் பற்றி விரிவாக இதில் எழுதியிருக்கிறேன். இது ஒரு புதிய தொடக்கம்.

எனது அடுத்த புத்தகம் எனது அனுபவங்களை விவரிக்கும். சாந்தி சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன். விளையாட்டுத் துறையில் சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பதிவு செய்யும் நோக்கமும் எனக்கு உண்டு.

- கோபி ஷங்கர்

*****


சொல்ல முடியாத அவமானங்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வாங்கிய வீராங்கனை சாந்தி சௌந்தர்ராரஜன். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய முன்னோர்களில் ஒரு பிரிவினர் இலங்கையிலிருந்து வந்தவர்கள். ஒரு சாரார் தமிழ்நாட்டினர். விளையாட்டுப் போட்டியைப் பொறுத்தவரையில் ஒரு ஆண், தன்னை ஆண் என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அதிகாரிகளுக்குச் சந்தேகம் வந்தால், பெண் மட்டும் தன்னைப் பெண் என்று நிரூபிக்க வேண்டும். அதில், ஒரு நாளைக்கு மேல் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டுப் பலவகையில் அவமானப்படுத்தப்பட்டவர் சாந்தி சௌந்தர்ராஜன். அவரைப் பத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதில் ஒருவர் மட்டும்தான் பெண். இந்தியாவின் சார்பில் சாந்தியுடன் சென்ற மருத்துவர், பரிசோதனைக் கூடத்தின் வெளியே காத்திருக்க, மற்ற ஆண் மருத்துவர்களின் முன்பு சாந்தியின் உடைகளைக் களைந்து நிர்வாணப்படுத்தினார்கள். பரிசோதனை என்ற பெயரில் வர்ணிக்கமுடியாத அளவுக்குக் கொடுமைகள் அரங்கேறின. கூனிக் குறுகி பெருத்த அவமான உணர்வோடு வெளியே வந்தார் சாந்தி.

சாந்தி சௌந்தர்ராஜன் போன்ற வீராங்கனைகள் இன்டர்செக்ஸ் கண்டிஷனில் இருப்பவர்கள். அவர்கள் உடம்பில் எஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அதிகமாகச் சுரக்கலாம். அல்லது குரோமோசோம்கள் XXY என்று மாறி இருக்கலாம். ஆனால் பெண்தான். அவர் பிறக்கும்போது பெண் என்று அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறார். பூப்பெய்தி இருக்கிறார். பெண்ணாகத்தான் வளர்ந்திருக்கிறார். ஆண்தன்மை அதிகம் கொண்டவர் என்பதற்காக அவரைப் பெண்ணல்ல என்று சொல்லக்கூடாது. ஆனால், அப்படிச் சொல்லி அவரது பதக்கம் பறிக்கப்பட்டது.

2013ல் எல்லோராலும் கைவிடப்பட்டு செங்கற் சூளையில் அவர் வேலை பார்த்து வந்தபோது நான் அவரைச் சந்தித்தேன். அவருக்கு ஒரு குடும்பமாக உதவ நாங்கள் இருக்கிறோம் என்று சொன்னோம். அவருடைய சகோதரியின் திருமணத்தை ஸ்ருஷ்டி மூலம் நடத்தினோம். பலமுறை மத்திய அரசிடம், பிற்படுத்தப்பட்டோர் இன ஆணையத்திடம் (NCSC - National Commission for Scheduled Castes) முறையிட்டும் பலனில்லை. அதனால் 'சாந்திக்கு நீதி' என்றொரு தொடர் செயல்பாட்டைச் செய்தோம். சில வருடங்கள் கழித்து நீதி கிடைத்தது. தமிழக அரசாங்கம் 2016ல் தமிழக விளையாட்டு மாநில ஆணையத்தில் நிரந்தரப் பயிற்சியாளராகப் பொறுப்புக் கொடுத்தது. முயற்சிகள் முழுக்க முழுக்க ஸ்ருஷ்டியே மேற்கொண்டதுதான். பின்தங்கியோர், தமிழர் என்றெல்லாம் பேசும் அரசியல் அமைப்புகள் கூட, நாங்கள் அணுகியபோதிலும் உதவவில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

- கோபி ஷங்கர்

*****


குற்றமா?
ஆசியாவின் எந்த நாடுமே - அவர் ஒருபாலின ஈர்ப்புக் கொண்டிருந்தாலும் சரி, இடைப்பாலினர் ஆக இருந்தாலும் சரி - அவர்களைத் தூக்கில் போடச் சொல்வதில்லை. ஆபிரகாமிய மதங்களிலும் முற்பட்ட ஆபிரகாமியக் கருத்துக்களில் அப்படிக் கிடையாது. பிற்காலத்தில்தான் அந்தப் பிரச்சனைகள் வருகின்றன. அந்த அடிப்படையில்தான் தடைச்சட்டம் இ.பி.கோ. 377 கொண்டு வரப்பட்டிருக்கிறது. தாமஸ் அக்வினாஸ் என்ற மதகுரு, குழந்தைப் பிறப்புக்குக் காரணமாக அமைவது மட்டுமே இயற்கைக்கு உட்பட்ட உடலுறவு என்று சொல்கிறார். அதிலிருந்து மெக்காலே 1836க்குப் பிறகு புதிய சட்டங்களைக் கொண்டு வந்தார்.

மாற்றுப் பாலினத்தவர்கள், ஆதிவாசிகள், பழங்குடிகள், இன்டர்செக்ஸ் என அனைவருமே குற்றவாளிகளாக அறிவிக்கப்படுகிறார்கள். பிரிட்டிஷார் ஆட்சி செய்த அத்தனை நாடுகளிலும் அந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. இன்றைக்கும் காமன்வெல்த் நாடுகளில் அந்தச் சட்டம் இருக்கிறது. இந்தியாவில் 377வது சட்டப் பிரிவாக இருக்கிறது. இந்தியாவைவிட அமெரிக்காவில்தான் இவர்களுக்கு அதிகப் பிரச்சனைகள் உள்ளன. ஒரு தனி மனிதனுக்கு அரசு அளிக்கும் அத்தனை பாதுகாப்புகளும் ஒரு பால் ஈர்ப்புடையவர்களுக்கும் அளிக்கப்படவேண்டும். அவர்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

- கோபி ஷங்கர்

*****
Share: 




© Copyright 2020 Tamilonline