|
| அன்றும் இன்றும்: கான சரஸ்வதி டி.கே. பட்டம்மாள் |
   |
- அரவிந்த் | ஜூன் 2026 |![]() |
|
|
|
|
 |
நம் தாய்நாட்டிலேயே பிரசித்திபெற்ற சில நகரங்களுள் ஒன்றாகிய, காஞ்சிமா நகரத்தில் 1919ம் ஆண்டில் பிறந்தேன். என் தகப்பனாருக்கு நல்ல உயர்ந்த கர்நாடக சங்கீதத்தில் மிகவும் ப்ரேமை. நான் சிறுமியாயிருக்கும் போதே எனக்கு அவர் க்ருஷ்ண கர்ணாமிருதம், அஷ்டபதி முதலியவற்றிலிருந்து அநேக சுலோகங்களை ராகபாவத்துடன் கற்றுக்கொடுத்தார். எனக்கும் அப்பொழுதிலிருந்தே சங்கீதத்தில் ஆசை பிறந்தது. அதை மேலும் மேலும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற ஆசையும் பிறந்தது. ஆனால் எனக்குச் சங்கீதம் கற்றுக் கொடுக்கக்கூடிய வசதிகள் அச்சமயத்தில் அவ்வூரிலில்லாததால் நாங்கள் சென்னைக்கு வர நேர்ந்தது.
தவிர, நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கும்பொழுது என் பள்ளியில் எந்த விசேஷம் வந்தாலும் என் உபாத்தியாயினிகள், என்னைப் பாடச் சொல்லுவார்கள். எனக்குத் தெரிந்த சில ஸ்லோகங்களையும் ஒன்றிரண்டு கீர்த்தனைகளையும் பாடுவது வழக்கம். இப்படியிருக்கையில் ஒரு வருடம் நடந்த பள்ளிக்கூடத்து ஆண்டு விழாவில் ஒரு நாடகத்தில் நானும் ஒரு பாத்திரமாக நடித்தேன். அந்த நாடக முடிவில், என் பாட்டுக்காக எனக்கு ஒரு தங்கப் பதக்க மளிக்கப்பட்டது. இந்த விஷயம் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட்டது. இதைக் கண்ட கொலம்பியா கிராமபோன் கம்பெனியார்கள் என் தகப்பனாரை அணுகி, என் பாட்டையும் இசைத்தட்டு மூலம் வெளியாக்க வேண்டுமென்றார்கள். ஆனால் என் தகப்பனார் மிகவும் பயந்து (தம் குலத்திற்கே கெட்ட பெயர் வந்து விடுமோ என்று) வந்தவர்களை அனுப்பி விட்டார். ஆனால், அவர்கள் அத்துடன் விட்டு விடாமல் அடிக்கடி தொந்திரவு செய்ததனால் அவர் தமக்கு முக்கியமாக வேண்டிய ஒரு சில நண்பர்களுடன் ஆலோசனை செய்தார். அவர்களெல்லோரும், கம்பெனிக்காரர்களுக்குச் சாதகமாகவே பேசி, அம்மாதிரி செய்வதில் யாதொரு தவறுமில்லையெனச் சொல்லி விட்டார்கள். அதன்பின் என் தகப்பனாரும் சம்மதிக்கவே இசைத்தட்டில் பாடினேன். அவைகள் வெளிவந்தன.

இந்த இசைத்தட்டுக்கள் வெளி வந்ததும் அவைகளைக் கேட்ட அநேக பிரமுகர்கள் தங்கள் வீடுகளில் கச்சேரி வைக்க வேண்டுமெனக் கேட்கலானார்கள். மறுபடியும் என் தகப்பனாருக்குக் கவலை ஏற்பட்டது. முன் போலவேதான் நண்பர்களை ஆலோசித்து அப்படிச் செய்வதிலும் தவறில்லையெனத் தீர்மானித்தார். அப்படித் தீர்மானித்தபிறகு நான் செய்த முதல் கச்சேரி எழும்பூர் மஹிளா சமாஜத்தில்தான். பெண்கள் கூட்டத்தில் இரண்டு மணி நேரம் கசசேரி நடந்தது.
அங்கு பாடியதில் நான் நன்றாகப் பாடியதாகச் சொல்லி, மேலும் மேலும் கச்சேரிகளுக்குக் கூப்பிட ஆரம்பித்தார்கள். என் தகப்பனாரும் இந்தத் துறையில் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி விட்டதால் அநேகக் கச்சேரிகளை ஒப்புக் கொண்டார். நானும் பல இடங்களில் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன்.
நான் முதன்முதலில் கச்சேரி செய்ய ஆரம்பித்தபொழுது எனக்கு வெகு சில கீர்த்தனங்கள்தான் பாடம். ஆதலால், மேலும் மேலும் கச்சேரிகள் செய்வதற்கு வேண்டுமென்றே சில கீர்த்தனங்களை, பெரிய பிரபல வித்வான்களின் வழியில் பாடம் செய்தேன். தவிர கச்சேரி செய்யாமற் போனாலும், எனக்கே அதிகமான கீர்த்தனங்களைப் பாடம் வேண்டுமென்ற ஆசையேற்பட்டு விட்டது. இதற்காக, சென்னையில் நடக்கும் பிரபல வித்வான்களின் கச்சேரி ஒன்றையாவது கேட்கத் தவறுவதில்லை. அப்படியே மேலும் மேலும் கேட்கக் கேட்க, என்னை யறியாமலேயே சில நுட்பமான விஷயங்களை யெல்லாம் க்ரஹித்துக் கொண்டேன். இன்று வரையில் அப்படித்தான் செய்து வருகிறேன். சங்கீத ஞானத்துக்கு முடிவே கிடையாதென்பது எல்லோரும் அறிந்த விஷயம். அப்படியிருக்கும் பொழுது நாம் அதைக் கற்றுக்கொள்ள ஏதாவது முடிவு உண்டா?
என்னைப் பல ஸ்நேகிதர்கள் வந்து தங்களுக்கோ, தங்கள் குழந்தைகளுக்கோ, ஸ்நேகிதர்களுக்கோ பாட்டுக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆனால் எனக்கு அவர்களைத் திருப்திசெய்ய இயலாமலிருப்பதற்கு வருந்துகிறேன். முன்னெல்லாம் போலில்லாமல், தற்காலத்தில் அனேக சங்கீத பாடசாலைகள் தோன்றியிருப்பதைக் காண்கிறேன். அவைகளில் அநேக பிரபல பாடகர்களும் உபாத்தியாயர்களா யிருப்பார்களென நம்புகிறேன். ஆகையால் நாம் சொல்லிக்கொடுக்கா விட்டால் குழந்தைகளுக்குச் சங்கீதம் பயில வசதியில்லாமற் போய்விடுமோ என்ற குறை எனக்குக் கிடையாது. |
|
|
| (நன்றி: பாரிஜாதம் இதழ், பிப்ரவரி 1947) |
|
|
|
|
|
|
|
|
|
|