Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி
நான் கண்ட காந்தி
- அரவிந்த்|மே 2026|
Share:
நான் அப்போது சென்னையில் கலாசாலையில் படித்துக் கொண்டிருந்தேன். தென் ஆப்பிரிக்காவில் குடியேறியிருந்த நம் நாட்டு மக்களின் நிலைமையைப் பற்றி அறிவிக்க காந்திஜி சென்னைக்கு வந்திருந்தார். சுங்குராம செட்டித் தெருவில் வசித்துவந்த திரு ஜி.ஏ. நடேசன் அவர்களுடைய வீட்டில் அவரைப் பார்ப்பதற்கு நானும் மற்ற மாணவர்களும் போயிருந்தோம். வெள்ளைத் தலைப்பாகை, வெள்ளைச் சட்டை, அதன்மேல் ஓர் அங்கவஸ்திரத்துடன் தரையில் விரிக்கப்பட்ட ஜமக்காளத்தின்மேல் அவர் உட்கார்ந்திருந்தார். நாங்களும் அவரைச் சுற்றி உட்கார்ந்தோம். மெல்லிய குரலில் தென் ஆப்பிரிக்க இந்தியர்களைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அன்று நாங்கள் கண்ட அவர் குஜராத்து நாட்டின் சாமானிய மனிதர் ஒருவரைப்போல் தான் எங்களுக்குத் தோன்றினார். அன்று ஓர் அவதார புருஷரோடு பேசும் பாக்கியம் எங்களுக்குக் கிடைத்ததென்று எங்கள் மனத்தில் தோன்றவில்லை.


பத்து ஆண்டுகள் கழிந்தன. மகாத்மா காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்தார். கோயமுத்தூருக்கும் வரப்போகிறார் என்று தெரியவந்தது. நான் அப்போது அவ்வூர் நகரசபையில் ஓர் அங்கத்தினராக இருந்தேன். மகாத்மாவுக்கு நகரசபையில் வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுக்கவேண்டுமென்று சபையில் சிலர் அறிவித்தனர். எதிர்ப்புப் பலமாக ஏற்பட்டது. மகாத்மா ஒத்துழையாமைப் பிரசாரம் செய்து வருவதால், அரசாங்கத்தோடு ஒத்துழைக்கக் கடமைப்பட்ட நகரசபை அவரை வரவேற்பது சரியன்று என்று சிலர் வாதித்தார்கள்.

"ஒத்துழையாமை இயக்கத்தை நாம் ஆதரிக்காவிடினும், மதுவிலக்கு, தீண்டாமை ஒழித்தல், கதர் முதலிய சீர்திருத்த வேலைகளை நாம் ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது?" என்று பலர் வாதித்தனர்.

"வரவேற்புப் பத்திரத்தில் வெறும் பாராட்டுக்களை மட்டும் சொல்லாமல், நம்முடைய உண்மையான கருத்தை விளக்கமாகச் சொல்லலாமென்றும், நாங்கள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கண்டிக்கின்றோம் என்றும்கூடக் குறிப்பிடலாம்" என்று நான் சொன்னேன். இப்படி ஒரு வரவேற்புப் பத்திரம் கொடுப்பது மகாத்மாவை அவமரியாதை செய்வதாகுமென்று பலர் கருதினார்கள். "மகாத்மா உண்மைவாதி. நம் மனத்தில் உள்ளதை ஒளியாமல் எடுத்துச் சொன்னால் அவர் மகிழ்ச்சியடைவார்" என்று நான் எண்ணங்கொண்டேன். கடைசியாக, சபையில் பெரும்பான்மையோர் என்னுடைய கருத்துக்கு இணங்கி, நான் குறித்தவண்ணம் வரவேற்புப் பத்திரம் கொடுக்கலாமென்று தீர்மானித்தார்கள்.

வரவேற்புப் பத்திரத்தைத் தயார் செய்யும் பொறுப்பு என்மீதே சுமத்தப்பட்டது. இவ்விதமான பத்திரங்களில் குறிக்கப்படும் உபசார வார்த்தைகளைச் சுருக்கமாக எழுதிவிட்டு நகரசபையில் பெரும்பான்மையோருடைய கருத்தையும் நம்பிக்கையையும் தெளிவாக எழுதினேன். "தங்களுடைய ஒத்துழையாமை இயக்கத்தில் எங்களுக்குச் சிறிதேனும் நம்பிக்கை இல்லை. ஒத்துழைப்பின் மூலமாகத்தான் நாடு விடுதலை அடையக்கூடும். ஆனால், நீங்கள் எடுத்துக்கொண்ட சீர்திருத்த வேலைகளை நாங்கள் முழுமனத்தோடு வரவேற்கின்றோம். தீண்டாமையை ஒழித்தல், மதுவிலக்கு, கதர் முன்னேற்றம், கிராம முன்னேற்றம் இவை போன்ற காரியங்களில் நாங்கள் தங்களுக்கு முழு ஆதரவையும் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்" என்று தெளிவாக வரவேற்புப் பத்திரம் எழுதப்பட்டது. இவ்விதமான ஒரு புதிய வரவேற்புக்கு மகாத்மா என்ன பதில் சொல்லப்போகிறார் என்று எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். நான் நினைத்தபடியேதான் மகாத்மாவின் பதிலும் இருந்தது.

"இன்று நான் என் எதிரிகளின் கூட்டத்தில் இருக்கிறேனென்று பலர் கருதலாம். ஆனால், கோயமுத்தூர் நகரசபையார் என்னுடைய உண்மையான நண்பர்கள் என்று நான் கருதுகின்றேன். வரவேற்புப் பத்திரத்தில் வழக்கம்போல் வெறும் புகழுரைகளைச் சொல்லாமல் அவர்கள் தங்கள் உண்மையான கருத்துக்களை விளக்கியிருப்பது எனக்கு அளவிலா மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. என்னுடைய ஒத்துழையாமை இயக்கத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையானால் அதை முற்றிலும் மறந்துவிடுங்கள். அதற்காக நான் வருந்தப்போவதில்லை. நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி எனது சீர்திருத்த வேலைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்று காட்டியிருப்பதே எனக்குப் போதுமானது. அவ்வேலைகளில் ஈடுபடுங்கள்" என்று பதில் அளித்தார்.

★★★★★


1936ஆம் ஆண்டு பின்னும் ஒருமுறை மகாத்மா கோயமுத்தூருக்கு எழுந்தருளியபோது என் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தார். அப்போதுதான் அவருடன் நெருங்கிப் பழகும் பேறு எனக்குக் கிடைத்தது. நாள்தோறும் அதிகாலையில் உலாவுவதற்குப் புறப்படுவார். நானும் அவருடன் செல்வது வழக்கம்.

ஒருநாள் காலையில் ஏதோ காரணத்தால் நான் அவருடன் போக முடியவில்லை. காலை சுமார் 8 மணிக்குத் திரும்பியவுடன் என்னை உடனே பார்க்கவேண்டுமென்று தெரிவித்தார். என்ன செய்தி என்று தெரிவதற்காக அவர் இருக்கும் அறைக்குச் சென்றேன்.



"இவ்வூர் போலீஸ் அதிகாரியை உனக்குத் தெரியுமா?" என்று அவர் கேட்டார்.

"சிறிது தெரியும்" என்று சொன்னேன்.

"நீ உடனே அந்தப் போலீஸ் அதிகாரியிடம் தூது போகவேண்டும்" என்றார்.

செய்தி என்னவென்று கேட்டேன். அதற்கு மகாத்மா, "தெருவில் போகையில் எண்ணெய் விற்கும் ஓர் எளிய மனிதன், தோள்மேல் உள்ள ஒரு மூங்கிலின் இருமுனையிலும் தொங்கிக்கொண்டிருக்கும் இரண்டு எண்ணெய் டின்களைச் சுமந்து போய்க்கொண்டிருந்தான். எதிரில் ஒரு போலீஸ் கூட்டம் ஓட்டமாக வந்து கொண்டிருந்தது. எண்ணெய்க்காரன் ரஸ்தாவின் மத்தியில் போய்க்கொண்டிருக்கவே, ஒரு போலீஸ்காரன் தன்னுடைய ஓட்ட வேகத்தில் அவனை மோதித் தள்ளிவிட்டுப் போனான். எண்ணெய்க்காரனும் கீழே விழுந்தான்: டின்களில் இருந்த எண்ணெயும் சிந்திவிட்டது. போலீஸ் கூட்டத்தில் எவரும் இந்தச் சம்பவத்தைப் பற்றிக் கவலைப்படவே இல்லை. சிலர் எண்ணெய்க்காரனைப் பார்த்துச் சிரித்துப் பரிகாசம் செய்தார்கள்

என்று கூறினார் மகாத்மா. எண்ணெய்க்காரனையும் கூட்டிக்கொண்டு என்னுடைய பங்களாவுக்கு வந்து சேர்ந்ததாகவும் அறிவித்தார்.

நடந்த விஷயத்தை நான் அவர் வாயினால் கேட்டபின் "கேஸ் ஏதாவது கொடுக்கவேண்டுமா?" என்று கேட்டேன். "கேஸ் எதுவும் வேண்டியதில்லை. போலீஸ் மேலதிகாரியிடம் சாந்த தூதனாக நீ போய், இதற்கு நிவர்த்தி தேடவேண்டும்" என்றார். "போலீஸ் மேலதிகாரியும், இந்த அக்கிரமத்தைச் செய்த போலீஸ்காரனும் இந்த எண்ணெய்க்காரனிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். சிந்திப்போன எண்ணெயின் விலையையும் இவனுக்குக் கொடுக்கவேண்டும். இதுதான் நீ செய்ய வேண்டிய வேலை" என்றார்.

அவ்வூர் போலீஸ் மேலதிகாரி ஒரு முரட்டு வெள்ளைக்காரன். என் தூது வெற்றி அடையும் என்னும் நம்பிக்கையே இல்லாமல் நான் அதிகாரியிடம் போய். நடந்த விஷயங்களைச் சொல்லி, மகாத்மா என்ன நிவர்த்தியைத் தேடுகின்றார் என்பதையும் அவரிடம் சொன்னேன். அதிகாரி இதற்குச் சம்மதப்படவில்லை.

"நீங்களே மகாத்மாவிடம் வந்து பேசினால், நலமாயிருக்கும்" என்று அவரிடம் சொன்னேன்.

சிறிதும் மனமில்லாதவராக அவ்வதிகாரி முணுமுணுத்துக்கொண்டே என்னுடன் வந்தார். மகாத்மாவிடம் பத்து நிமிடம் பேசியதும், வெள்ளை அதிகாரி எண்ணெய்க்காரனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு, எண்ணெயின் விலையைத் தாமே கொடுப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.

இச்சந்தர்ப்பத்தில் காந்தியாருடைய அன்பு மார்க்கத்தின் பலனை நான் நேரில் கண்டேன்.

அன்று மாலை மகாத்மாவின் போட்டோ ஒன்றை எடுத்துக்கொண்டு, அதில் அவருடைய கையெழுத்தை வாங்கவேண்டுமென்று அவர் இருக்கும் அறைக்குச் சென்று கேட்டேன்.

"என்னுடைய கையெழுத்தை இந்தப் போட்டோவில் போடவேண்டுமென்றால், அதற்குச் சரியான விலை நீ கொடுக்கத் தயாராக இருக்கின்றாயா?" என்று கேட்டார்.

'எவ்வளவுதான் பணம் கேட்டுவிடுவார். பார்ப்போம்!' என்று நினைத்து, "விலை கொடுக்கத் தயார். எவ்வளவு தொகை வேண்டும்?" என்று கேட்டேன்.

"எனக்கு நீ பணம் ஒன்றும் கொடுக்கவேண்டாம். நான் கேட்கும் ஒரு வாக்குறுதியைக் கொடுத்தால். அதுவே சரியான விலையாகும்" என்றார்.

என்ன கேட்கப்போகின்றாரோ என்று தெரியாமல். "என்னால் என்ன ஆகவேண்டும்?" என்று கேட்டேன்.

"நாள்தோறும் அரைமணி நேரத்துக்குக் குறையாமல் கைராட்டையில் நூல் நூற்பதாக நீ எனக்கு வாக்குறுதி செய்யவேண்டும்" என்றார்.

"சற்றுநேரம் யோசித்து, இது என்னால் முடியாத காரியம்" என்று சொன்னேன். நான் சொன்ன பதில் அவருக்கு என்மீது வெறுப்பு உண்டாக்கும் என்று நினைத்தேன். ஆனால், அவர் "நீ சொன்ன உண்மையான பதிலைப் பாராட்டுகின்றேன். எனக்கு வாக்குக் கொடுத்துத் தவறுவதைவிட, உன் அசக்தியை ஒப்புக் கொண்டதே மேல்" என்றார்.

"நான் ஒளியாமல் உண்மை பேசினதை ஒரு விலையாக வைத்துக்கொண்டு கையெழுத்துக் கொடுக்கக் கூடாதா?" என்று கேட்டேன்.

"நான் ஒரு 'பனியா' (வர்த்தகன்); நீயும் ஒரு 'பனியா'; ஆனால் வாணிபத்தில் நீயே வென்றுவிட்டாய்." என்று சிரித்துக்கொண்டே போட்டோவில் கையெழுத்திட்டார்.

★★★★★


திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஹரிஜனங்களுக்கு ஆலயங்கள் திறக்கப்பட்டன. இந்த விழாவைக் கொண்டாட மகாத்மா திருவனந்தபுரம் சென்றிருந்தார். நான் அப்போது அடுத்த கொச்சி நாட்டில் திவான் பதவியில் இருந்தேன். திருவாங்கூரில் ஆலயங்கள் திறக்கப்படவே, கொச்சியிலும் பெரிய கிளர்ச்சி உண்டாயிற்று. இந்த விஷயத்தில் எனக்கு என்ன ஊக்கம் இருந்தபோதிலும் கொச்சி மன்னர் அவ்வளவு ஊக்கம் காட்டவில்லை. அவர் ஒரு பெரிய வைதிகர். ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்கு ஒருநாளும் அவர் சம்மதிக்கமாட்டார். என் நிலைமை மிகவும் சங்கடமாகிவிட்டது. இந்த நிலைமையில் திருவனந்தபுரத்திலிருந்து மகாத்மா எனக்கு ஒரு தந்தி அனுப்பியிருந்தார். அத்தந்தியில் பின் வருமாறு குறிக்கப்பட்டிருந்தது: "கொச்சி நாட்டிற்கு ஆலயப் பிரவேசப் பிரசாரத்திற்கு நான் வரவேண்டும் என்று சிலர் மிகவும் வற்புறுத்துகிறார்கள். நீ திவான் என்பதை மறந்து, என் நண்பர் என்னும் நிலைமையில் எனக்கு என்ன ஆலோசனை சொல்லுகின்றாய்? உன்னுடைய உண்மையான கருத்தை உடனே தெரிவிக்கவும். நான் கொச்சிக்கு வரலாமா? வேண்டாமா?"

இந்தத் தந்தியைப் பார்த்தவுடன் என்ன செய்வதென்றே எனக்குத் தோன்றவில்லை. மகாத்மாவை ஓரிடத்திற்கு வரவேண்டாம் என்று சொல்வதற்கு யாருக்காவது மனம் வருமா? ஆனால் அவரை வரும்படி சொன்னால், கொச்சியில் கிளர்ச்சி அதிகம் ஏற்படும். வயது முதிர்ந்த வைதிக மகாராஜாவுக்கும் மனக்கவலை ஏற்படும். இவற்றையெல்லாம் நன்கு சிந்தித்து, "கொச்சிக்கு நீங்கள் வருவது எங்களுக்கு ஒரு பெரும் பேறேயாகும். எனக்கும் அளவிலா மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆனால் உமது திட்டத்தைக் கேட்டவுடன் வயோதிக மகாராஜாவின் மனம் உடைந்துவிடும். இவற்றையெல்லாம் யோசித்துத் தங்கள் இஷ்டம்போல் செய்யலாம்" என்று பதில் தந்தி அடித்தேன்.

உடனே மகாத்மாவிடம் இருந்து மறுபதிலும் வந்துவிட்டது: அதில் "கொச்சியின் நிலைமையை நான் நன்றாக அறிவேன். உன்னுடைய சங்கடமான நிலைமையும் எனக்குத் தெரிந்திருக்கிறது. நான் இப்போது கொச்சிக்கு வருவதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்" என்று குறிப்பிட்டிருந்தது.

★★★★★


டெல்லியில் நிதியமைச்சர் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். வங்காளத்திலிருந்து மகாத்மா டெல்லிக்கு வந்து சேர்ந்தார். மறுநாளே அவரைத் தரிசிக்க வேண்டுமென்று பிர்லா இல்லத்திற்குச் சென்றேன். அவருக்கென்றே தனிப்பட்ட சிரிப்புடன், "வாருங்கள், ஐயா! உட்காருங்கள். க்ஷேமம்தானா?" என்று தமிழில் உபசாரமொழி கூறி அழைத்தார்.

நானும் தமிழிலேயே, "நான் க்ஷேமம்தான், சுவாமி! இன்று முதல் என்னிடம் நீங்கள் தமிழிலேயே பேச வேண்டும் என்று கோருகிறேன்" என்றேன். உடனே சிரித்தார். அதற்குமேல் அதிகம் தமிழ் பேச அவருக்குத் தெரியாது. தென்னாப்பிரிக்காவில் தமிழ் மக்களிடையே வேலை செய்தபோது சில தமிழ் வார்த்தைகளை மட்டும் படித்திருந்தார். ஆதலின் மேற்கொண்டு உரையாடலை ஆங்கிலத்திலேயே ஆரம்பித்தார்.

"சுதந்திர இந்தியாவில் நீ மந்திரி ஸ்தானம் பெற்றிருக்கின்றாய், உன்னுடைய தோழர்களாகிய மற்ற மந்திரிகளுக்கு நீ தமிழ் கற்றுக்கொடுக்க வேண்டும். அது உன்னால் முடியாவிட்டால், நீ ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

"நான் ஹிந்துஸ்தானி கற்றுக்கொள்வது எளிது என்று எனக்குத் தோன்றவில்லை. தங்களுடன் நாள்தோறும் முப்பது ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய ராஜாஜி அவர்களே சரியாக ஹிந்துஸ்தானி பேசக் கற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், என்னால் எப்படி முடியும்?'' என்றேன்.

இவ்வாறு கூறியதைக் கேட்டதும் பலத்த சிரிப்புச் சிரித்தார்.

★★★★★


டெல்லியில் மகாத்மா உண்ணாவிரதம் ஆரம்பித்து விட்டார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட பாகப் பிரிவினையில், நாம் பாகிஸ்தானுக்குக் கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாய் பண விஷயத்தில் தகராறு ஏற்பட்டது. உண்ணாவிரதம் ஆரம்பித்த மறுநாள், இது சம்பந்தமாக மகாத்மா என்னிடம் பேச விரும்புகிறார் என்ற செய்தி வந்தது. காலை ஒன்பது மணிக்கு பிர்லா மாளிகைக்குச் சென்றேன்.

டெல்லியில் அப்போது குளிர்காலம். பிர்லா வீட்டுப் பூந்தோட்டத்தில் வெயிலில் ஒரு கட்டிலின் மீது அவர் படுத்திருந்தார். நான் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பண்டித ஜவாஹர்லால் நேரு. ஸர்தார் பட்டேல், டாக்டர் மத்தாய் இவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

மூன்று மணி நேரம் நமக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட தகராறு விஷயமாகப் பேச்சு நடந்தது. சட்டப்படிக்கும், நாம் செய்த ஒப்பந்தப்படிக்கும், அந்தச் சமயம் ரொக்கப் பணத்தைக் கொடுக்க நாம் கட்டுப்படவில்லை என்று நானும் ஸர்தாரும் வாதாடினோம். நாங்கள் சொல்வனவற்றை யெல்லாம் பொறுமையுடன் கேட்ட பிறகு, மெல்லிய குரலில், ஒரு மணி நேரம் ஆராய்ச்சி செய்து "பாகிஸ்தான் என்ன தவறுகள் செய்தபோதிலும், இந்தியாவின் அஹிம்ஸா தர்மத்துக்கு முரண்பாடாக இருக்கிறது உங்கள் மனப்பான்மை" என்றார். அவர் பேசப்பேச நாங்கள் செய்த முடிவு நியாயம் பொருந்தியது அன்று என்பது எங்கள் மனத்திலேயே தோன்றிவிட்டது.

மறுநாளே 'காபினெட்' கூட்டத்தில் 55 கோடி ரூபாய் ரொக்கத்தை உடனே பாகிஸ்தானுக்குக் கொடுத்துவிடுவதென்று தீர்மானித்துவிட்டோம்.

இந்தப் பேச்சு வார்த்தையின்போது ஒரு வேடிக்கை நடந்தது. வெயில் அதிகமாகவே, நான் என்னுடைய சிறு கைகுட்டையை எடுத்துத் தலையில் கட்டினேன். இதைப் பார்த்தவுடன் மகாத்மா. ஜவாஹர்லால் நேருவிடம் ஏதோ மெல்லப் பேசினார். உடனே ஜவாஹர்லால் நேரு பங்களாவுக்குள் போய் வெய்யிலுக்கென்று பர்மா தேசத்தார் தலையில் அணியும் கூடை போன்ற ஒரு பெரிய தொப்பியை எடுத்து வந்து மகாத்மாவின் கையில் கொடுத்தார். மகாத்மாவும் வெம்மை பொறுக்காமல் தொப்பியை அணிந்துகொள்ளப் போகிறார் என்று நான் நினைத்தேன். தொப்பியைக் கையில் வாங்கி, அதை என்னிடம் நீட்டி "இதைத் தலையில் அணிந்துகொள்" என்றார்.

★★★★★


ஜனவரி மாதம் 30ஆம் தேதி, மாலை சுமார் ஐந்தரை மணி இருக்கும். டெல்லியில் என்னுடைய அலுவலகத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ஸெக்ரடரி ஓடிவந்து, "மகாத்மாவை யாரோ சுட்டு விட்டார்களாம்!" என்றார். அவர் என்ன சொன்னார் என்று அந்தச் சமயம் எனக்குத் தோன்றவில்லை. மேஜை மேலிருந்த காகிதங்களை யெல்லாம் அப்படியே விட்டுவிட்டு எழுந்து வெளியே ஓடினேன். என்னுடைய வண்டியிலேறி பிர்லா வீட்டுக்குச் சென்றேன். கூட்டம் அதிகம் சேரவில்லை. மகாத்மா தங்கும் அறைக்குள் ஓடினேன்.

தரையில் விரிக்கப்பட்ட மெத்தையின் மீது மகாத்மா படுக்க வைக்கப்பட்டிருந்தார். ஜவாஹர்லால் நேருவும் வந்தார். ஸர்தார் பட்டேலும் அருகே உட்கார்ந்துகொண்டிருந்தார். தலைப்பக்கம் மகாத்மாவின் பேத்திகள் விம்மி விம்மி அழுத வண்ணம் கீதையைப் படித்துக்கொண்டிருந்தார்கள்.

என் வாழ்க்கையில் நான் கண்ணீர்விட்டு அழுதது மூன்று முறையாகும். அன்று அழுதது மூன்றாவது முறையாகும்.

மகாத்மாவைப் பார்க்கும்போது அவர் குண்டு பட்டவர் என்றாவது, உயிர் போன உடலினர் என்றாவது தோன்றவில்லை.

மறுநாள் அவரைத் தகனம் செய்தோம். சந்தனக் கட்டையின் தீ ஓங்கி எரிந்து ஒளிவிட்டது. ஆனால், அந்த வெளிச்சத்தோடு உலக சோதியும் மறைந்தது.
தொகுப்பு: அரவிந்த்
(ஆர்.கே. சண்முகம் செட்டியார் எழுதிய 'அறிவுக் கட்டுரைகள்' நூலில் இருந்து)
Share: 




© Copyright 2020 Tamilonline