திருக்கோயில்களைச் சார்ந்த குடிகளாக விளங்கி, தமிழையும், சைவத்தையும் வளர்த்தவர்களுள் ஓதுவார் மரபினர் குறிப்பிடத் தகுந்தவர்கள். எந்தப் பிரதிபலனையும் அங்கீகாரத்தையும் எதிர்பாராது, சமயத்தையும், தமிழையும் வளர்ப்பதையே தமது முக்கிய நோக்கமாகக் கொண்டு பரம்பரை பரம்பரையாகச் செயல்பட்டு வருபவர்கள். அவர்களது தன்னலமற்ற அந்தப் பணியை கௌரவிக்கும் பொருட்டு, அவர்களுள் ஒருவரான திருத்தணி சுவாமிநாதன் ஓதுவாருக்கு இந்திய அரசு 2026ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. சுவாமிநாதன் வாழ்க்கைப் பக்கங்களைச் சற்றே புரட்டிப் பார்ப்போமா?
பிறப்பும், ஆர்வமும் திருக்கருகாவூருக்கு அருகிலுள்ளது ஆலத்தூர். அவ்வூரில் பாரம்பரியமான வைணவக் குடும்பத்தில் பிறந்த சாரங்கபாணிக்கு, இளவயது முதலே, தன் குல வழக்கத்திற்கு மாறாகச் சைவ மரபின் மீதும், சைவ இலக்கியங்கள் மீதும் ஆர்வம் ஏற்பட்டது. தந்தை நாகரத்தினம் தீவிர வைணவர். தினமும் மகனைப் பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்யச் சொல்வார். பெருமாளை பிரபந்தம் ஓதி வழிபட்டு வந்தாலும், சாரங்கபாணிக்கு ஏனோ சிவபெருமான் மீது நாட்டம் ஏற்பட்டது. சைவ இலக்கியங்களான தேவாரத்தையும், திருவாசகத்தையும், பிற திருமுறைகளையும் வாசித்து, ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.
விருதுகள் * தமிழக அரசின் கலைமாமணி விருது * திருமுறை கலாநிதி * பண்ணிசைப் பேரறிஞர் * திருமுறை ரத்னா * இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ
மதுரை சோமுவுடன் சந்திப்பு மகனின் இந்த நடவடிக்கைகளைக் கவனித்து வந்த தந்தை, சைவத்தின் மீதான ஆர்வம் மகனுக்கு பிறப்புமுதல் இயல்பாகவே வந்திருப்பதை உணர்ந்தார். ஒரு சமயம் மதுரை சோமு, பாபநாசம் ஆலயத்திற்கு வந்திருந்து இரவு முழுவதும் கச்சேரி நிகழ்த்தினார். அந்த நிகழ்ச்சிக்கு மகனையும் அழைத்துச் சென்றிருந்தார் நாகரத்தினம். கச்சேரி முடிந்ததும் சோமுவைச் சந்தித்து தனது மகனின் ஆர்வத்தை எடுத்துரைத்தார். சோமு, சாரங்கபாணியை ஒரு பாடல் பாடும்படிக் கூறினார். சாரங்கபாணி, 'சிந்தனை செய் மனமே' என்ற 'அம்பிகாபதி' படத்தில் இடம்பெற்ற பக்திப் பாடலைப் பாடினார். சாரங்கபாணியைத் தட்டிக் கொடுத்த சோமு, நாகரத்தினத்திடம், "இவனது குரலும், பாவமும் மிகவும் நன்றாக இருக்கின்றன. இவனைக் குரல் சார்ந்த பணியிலேயே ஈடுபடுத்துங்கள்" என்று அறிவுறுத்தினார்.

தேவாரப் பாடசாலை மாணவர் அதை நிறைவேற்ற எண்ணிய நாகரத்தினம், சாரங்கபாணியை, திருக்கடவூர் பாடசாலையில் கொண்டுபோய்ச் சேர்த்தார். அதுவே சாரங்கபாணியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஆனது. சாரங்கபாணி, பிற்காலத்தில் சுவாமிநாத ஓதுவார் ஆவதற்கு அதுவே முழுமுதற் காரணமானது. சாரங்கபாணி அப்பாடசாலையில் குருகுலவாசமாக ஐந்தாண்டுகள் தேவாரப் பாடல்களைச் செம்மையாகக் கற்றார்.
தருமபுரம் ஆதினத்தில்... தொடர்ந்து சுவாமிநாதன் தருமபுரம் ஆதினப் பாடசாலைக்கு மேற்கல்விக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இரண்டு ஆண்டுகள் தேவாரம் பயின்றார். அங்கிருந்த தருமபுரம் ப சுவாமிநாதன், இவரை வழிநடத்தினார். தருமபுரம் ஆதினத்தில் முறைப்படி சைவத்தைத் தழுவிய சாரங்கபாணி, 'சுவாமிநாதன்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16.

ஓதுவார் சுவாமிநாதன், 17 வயதில், குன்றக்குடி ஆதினத்தில் ஓதுவார் மூர்த்தியாக நியமனம் செய்யப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, லால்குடிக்கு அருகிலுள்ள திருமங்கலம் ஆலயத்தில் ஓதுவாராகப் பணியாற்றினார். மிகக் குறைந்த வருமானம் கிடைத்தாலும், மனம் சலிக்காமல், அதனை ஒரு சேவையாகக் கருதிப் பணியைத் தொடர்ந்து வந்தார் சுவாமிநாதன்.
திருத்தணி சுவாமிநாதன் 1975ம் ஆண்டில், இந்து சமய அறநிலையத் துறை, புகழ்பெற்ற திருத்தணி ஆலயத்திற்கு ஒரு ஓதுவார் மூர்த்தி தேவை என்று விளம்பரம் செய்தது. அப்போது ஓதுவாரகப் பன்னிரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தார் சுவாமிநாதன். அப்பணிக்கு அவர் விண்ணப்பித்தார். விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 750 ரூபாய் மாத ஊதியத்தில் திருத்தணியில் ஓதுவாராகப் பணி சேர்ந்தார். 26 ஆண்டுகள் பணியாற்றி, 'திருத்தணி ஓதுவார் சுவாமிநாதன்' என்னும் தனித்துவமான அடையாளத்தோடு பணி ஓய்வு பெற்றார்.

ஆன்மிகப் பணிகள் தனது வாழ்வின் பிற்பகுதியில் சுவாமிநாத ஓதுவார், தமிழகத்தின் எல்லைகளைக் கடந்து பயணித்தார். திருப்பனந்தாள் மற்றும் தருமபுரம் ஆதினங்களின் தலைவர்களுடன் இணைந்து, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணப்பட்டார். தேவாரத்தையும் திருவாசகத்தையும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்தார். நவராத்திரி போன்ற விழாக்காலங்களில் தனது குழுவினருடன் முழு தேவார இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.
திருமுறைகளைத் தனது கம்பீரமான குரலில், மரபுவழி மாறாது, ஓதுவார்களுக்குரிய பண்ணிசையில் பாடி மக்களின் வரவேற்பைப் பெற்றார். ஒரு பதிகத்தைத் தொடங்கும் முன், 'பாடல்பெற்ற தலம்' குறித்த விளக்கத்தை எளிமையாக விளக்கிவிட்டுப் பாடத் தொடங்குவது சுவாமிநாத ஓதுவாரின் வழக்கம். அவரது குரலில் ஒலிக்கும் திருவாசகப் பாடல்கள், உலகளாவிய தமிழிசை ரசிகர்களின் வரவேற்பை அதிக அளவில் பெற்றன.
சுவாமிநாத ஓதுவார், 1970களில், திருவையாறில் நடைபெறும் 'அப்பர் கயிலாயக் காட்சி' நிகழ்வில் பாடத் தொடங்கி, இன்றளவும், அவ்விழாவில் ஆண்டுதோறும் கலந்துகொண்டு நாவுக்கரசரின் பாடல்களைப் பாடி வருகிறார். அகில இந்திய வானொலியின் 'ஏ கிரேடு' கலைஞராகவும் பணிபுரிந்தார். தேவாரப் பாடல்கள் அடங்கிய சுமார் 50 குறுந்தகடுகளை வெளியிட்டுள்ளார்.

திருமுறை ஆசிரியர் பணி ஓய்வுக்குப் பின் சுவாமிநாத ஓதுவார், சிதம்பரத்தில் உள்ள வி.எஸ். டிரஸ்ட் பாடசாலையில் திருமுறை ஆசிரியராகப் பணியாற்றினார். தற்போது தருமபுரம் ஆதினப் பாடசாலை மூலம் மாணவர்களுக்குத் திருமுறைகளையும், 63 நாயன்மார்களின் பெருமை, பாடல்பெற்ற சிவத்தலங்களின் வரலாறு மற்றும் தேவாரப் பாடல்களின் முக்கியத்துவம் போன்றவற்றைக் கற்பித்து வருகிறார். அவரிடம் பயின்ற மாணவர்களில் பலர் சுவாமிமலை, திருநள்ளாறு, திருவொற்றியூர் உள்ளிட்ட தலங்களில் ஓதுவார்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
தற்போது 76 வயதைக் கடந்திருக்கும் சுவாமிநாதன் ஓதுவார், "என் குரல்வளம் கெடாமல் இருக்கும்வரை, நான் இந்தப் புனிதப் பாடல்களைத் தொடர்ந்து பாடுவேன். இளைஞர்களையும் இந்தச் சேவையில் ஈடுபடுத்துவேன்." என்று கூறுகிறார். அடுத்த தலைமுறை ஓதுவார்களை உருவாக்குவதில் பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டு வருகிறார். பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் அவருக்கு நமது வாழ்த்துக்கள். |