Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | முன்னோடி
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
பத்மஸ்ரீ அங்கே கௌடா
- அரவிந்த்|ஜூன் 2026|
Share:
அண்மையில் இந்திய அரசின் உயரிய கௌரவமான பத்மஸ்ரீ விருது மேதகு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் வழங்கப்பட்டது. அவ்விருது பெற்றவர்களுள் ஒருவர் 77 வயதாகும் அங்கே கௌடா. கௌடா எதற்காக விருது பெற்றார் என்பது சுவாரஸ்யமானது. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் நூலகத்தை உருவாக்கி அதனை அனைவரும் இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் அமைத்திருப்பதற்காக இவ்விருது வழங்கப் பட்டிருக்கிறது. இந்திய அளவில் எழுத்தறிவு, கற்றல், புத்தகங்களை அணுகும் வாய்ப்பு ஆகிய துறைகளில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, 'புகழ்பெறாத நாயகர்கள்' (Unsung Heroes) என்ற பிரிவின்கீழ் அவருக்குப் பத்மஸ்ரீ அளிக்கப்பட்டுள்ளது. இத்தனைக்கும் அங்கே கௌடா உயர் வருவாய் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரல்ல. பேருந்து நடத்துனராகவும், சர்க்கரை ஆலைத் தொழிலாளியாகவும் பணியாற்றியவர்.

எது அவரை இந்தச் சாதனையைச் செய்யத் தூண்டியது?

அங்கே கௌடா, அக்டோபர் 17, 1949-ல், கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் சின்னகுர்லி கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில், மாரி கௌடா - நிங்கம்மா இணையருக்குப் பிறந்தார். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பம். கல்வி எட்டாக்கனியாகவே இருந்த சூழலில், உதவித்தொகை மூலமும், இலவச உணவுத்திட்டம் வழியாகவும் பள்ளிக்கல்வி கற்றார் கௌடா. ஒன்பதாவது படிக்கும்போது நூலகத்தில் இருந்து புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தரின் நூல்கள் இவருள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அதுதான் புத்தகங்களின் மீதான காதலுக்குப் பிள்ளையார் சுழி ஆனது.



மேல்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்ததும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பேருந்து நடத்துநராகப் பணி சேர்ந்தார். ஆனாலும் கல்விமீதான ஆர்வம் தொடர்ந்தது. மாலைநேரக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். தனது பேராசிரியரின் தூண்டுதலால் தொலைதூரக் கல்வி மூலம் கன்னட இலக்கியத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். பி.ஏ. படிக்கும் சமயத்தில், மைசூர் பல்கலைக்கழக அச்சகத்தில், பயிலும்போதே சம்பாதிக்கும் திட்டத்தின் கீழ் பணியாற்றினார். தினசரி கிடைத்த ஐந்து ரூபாய் வருமானத்தைக் கொண்டு, அக்காலத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ண இயக்கத்தினர் வெளியிட்ட நூல்களை வாங்கி வாசிக்கத் தொடங்கினார். கௌடாவின் பேராசிரியர் பல்வேறு நூல்களை வாங்கிப் படிக்குமாறு ஊக்குவித்தார். அந்த அறிவுரையே அவரது வாழ்வின் எஞ்சிய காலத்தை வடிவமைக்கும் வழிகாட்டியாக அமைந்தது. தான் படிப்பதோடு பிறருக்கும் அது பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில் நூல்களைச் சேமிக்கத் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 20. நடத்துநராகக் குறைந்த ஊதியமே பெற்றுவந்தார். என்றாலும் வாசிப்பின் மீதான ஆர்வம் குறையவில்லை. அந்த ஊதியத்திலேயே புத்தகங்களை வாங்க ஒரு தொகையை ஒதுக்கினார். தனக்குக் கிடைத்த நேரத்தை வாசிப்பதற்கும் புதிய விஷயங்களைக் கற்கவும் பயன்படுத்தினார்.

முதுகலைப் பட்டத்தால் அவருக்கு பாண்டவபுராவில் உள்ள ஒரு சர்க்கரை ஆலையில் நேரக் காப்பாளராக வேலை கிடைத்தது. அப்போதும் புத்தக வாசிப்பையும், சேமிப்பையும் தொடர்ந்தார். தனது சம்பளத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தைப் புத்தகங்கள் வாங்கவே செலவிட்டார். கௌடா, பாண்டவபுராவின் விஸ்வேஸ்வரநகரில் ஒரு சிறிய வீட்டில் வசித்தார். நாளுக்கு நாள் புத்தகங்களின் எண்ணிக்கை அதிகமானது. வீடு முழுவதையுமே புத்தகங்களால் நிறைத்தார். வீட்டின் ஒவ்வொரு மூலையையும் புத்தகங்கள் ஆக்கிரமிக்கவே சமையல் அறையில் படுத்து உறங்கினார். வீட்டில் உள்ள பொருட்களைக் கூட விற்று வீட்டைப் புத்தகங்களால் நிரப்பினார். 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற நிலையிலும் புத்தக சேகரிப்பைத் தொடர்ந்தார். மைசூரில் இருந்த சொந்த வீட்டையும் விற்றுப் புத்தகங்களை வாங்கினார். ஆனால், அவற்றைப் பராமரிக்கத்தான் வழியில்லாமல் போனது. காரணம், அவரது சேமிப்பில் இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை லட்சத்தைக் கடந்து விட்டிருந்தது.



இந்நிலையில்தான் தொழிலதிபர் ஸ்ரீஹரி கோடே, கௌடாவின் முயற்சிபற்றிக் கேள்வியுற்றார். அவரது உத்வேகத்தை அறிந்து இந்தப் புத்தகங்கள் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்ற எண்ணத்தில், ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஹரலஹள்ளி கிராமத்தில், 2005ல் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் நிலம் வாங்கி, 80 லட்சம் ரூபாய் செலவில் ஒரு பெரிய நூலகக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்தார். அந்த நூலகத்தைத் தனது புத்தகச் செல்வத்தால் நிறைத்தார் அங்கே கௌடா.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது வருவாயையும் வாழ்நாளையும் புத்தகங்களைச் சேகரிப்பதற்காவே முழுமையாக அர்ப்பணித்தார். 'அங்கே கௌடா புஸ்தக மனே' என்றும், 'புஸ்தக மனே' என்றும் அழைக்கப்படும் அந்த இல்லம் இன்றைக்கு இந்தியாவின் மிகப்பெரிய இலவச நூலகங்களில் ஒன்றாகவும், தனியார் நூலகமாகவும் திகழ்கிறது. 20 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அங்கே சேகரிக்கப்பட்டுள்ளன. கன்னடம் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் ஒரு புத்தக ஆலயமாக அந்நூலகம் திகழ்கிறது. 35,000 சர்வதேச இதழ்களும், 2,500 கன்னட இதழ்களும் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆய்வாளர்கள், போட்டித் தேர்வுக்குப் படிப்பவர்கள், அதிகாரிகள், நீதிபதிகள் எனப் பலர் அந்நூலகத்தின் வாசகர்களாக உள்ளனர்.



இருபதுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளைச் சார்ந்த, இரண்டு மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் இங்குள்ளன. செவ்வியல் இலக்கியம் முதல் அறிவியல், தொழில்நுட்பம், தத்துவம், புராணம், வரலாறு மற்றும் போட்டித் தேர்வு தொடர்பான நூல்கள் இங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. அரிய கையெழுத்துப் பிரதிகள், செய்தித்தாள்கள், இதழ்கள் மற்றும் ஏறக்குறைய 5,000 அகராதிகளும் இங்கு உள்ளன. இந்த நூலகத்தை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம், படிக்கலாம். அதற்காக உறுப்பினர் கட்டணமோ அல்லது வேறுவகைக் கட்டணங்களோ இல்லை. ராகுல் காந்தி, சதானந்த கௌடா, எச்.டி. குமாரசாமி உள்ளிட்ட பலர் இந்நூலகத்திற்கு வருகை தந்து பாராட்டியுள்ளனர்.

அங்கே கௌடாவுக்கு இந்த நூலகம்தான் வீடு. இங்கேதான் மனைவி விஜயலட்சுமி, மகன் சாகர் கௌடாவுடன் வசிக்கிறார். உணவு, உறக்கம் என அனைத்துமே இந்த நூலகத்தில்தான். குடும்பத்தினர் மூவரும் இணைந்து நூலகப் பராமரிப்புப் பணிகளைச் செய்கின்றனர். நூலகம் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படுகிறது. கௌடா சொந்தமாக வாங்கும் புத்தகங்கள் மற்றும் பிறரிடமிருந்து நன்கொடையாகப் பெறும் புத்தகங்கள் வாயிலாக, இந்த நூலகத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆனாலும் பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இன்னும் பட்டியலிடப்படாமல் உள்ளன. அவற்றுக்குப் பெரும் மனித உழைப்பு தேவைப்படுகிறது. நூலகத்தில் உள்ள நூல்களைப் பட்டியலிட்டு டிஜிட்டல் மயமாக்க அங்கே கௌடா ஆர்வமாக உள்ளார். அதற்கான தன்னார்வலர்களை எதிர்நோக்கி உள்ளார். புத்தகச் சேகரிப்பு ஆர்வத்தைப் பற்றிக் கூறும்போது, "விருதுகளுக்காகவோ புகழுக்காகவோ இதை ஒருபோதும் செய்யவில்லை. எனது நூலகத்திற்கு வரும் யாவருடனும் அறிவைப் பகிர்ந்துகொள்வதே எனது ஒரே விருப்பம். அதற்காகவே புத்தகங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய விரும்பினேன்" என்கிறார்.

அங்கே கௌடா பெற்ற விருதுகள்:
* கர்நாடக ராஜ்யோத்சவா விருது - 2014
* கன்னட புத்தக ஆணையத்தின் 'ஜி.பி. ராஜரத்தினம் சாகித்ய பரிசாரிகா' விருது
* 'ஆள்வாஸ் நுடிசிரி' விருது
* ஸ்வர்ண கர்நாடக விழாவில் வழங்கப்பட்ட 'அப்ரதிம ரத்னா' விருது
* 77வது அகில இந்திய கன்னட சாகித்ய சம்மேளனத்தில் பாராட்டு
* லிம்கா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனையாளர் - 2016
* நூலகவியல் மற்றும் எழுத்தறிவுத் துறைக்கு ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக, இந்திய அரசின் 'பத்மஸ்ரீ' விருது


கிராமப்புற, விளிம்புநிலை சமூகங்களிடையே வாசிப்புப் பழக்கத்தையும் அறிவுசார் பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்காக அங்கே கௌடா ஆற்றிவரும் பணி குறிப்பிடத் தகுந்தது. பேரார்வம், தியாகம், விடாமுயற்சி, கடும் உழைப்பு ஆகியவை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் அங்கே கௌடாவின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.
அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline