|
| விஷ்ணுபுரம் சரவணன் |
   |
- தென்றல் | ஜனவரி 2026 |![]() |
|
|
|
|
 |
சிறார் இலக்கியத்தின்மீது மிகுந்த கவனம் செலுத்தி, எழுத்து, பேச்சு, கதை சொல்லல், உரையாடல் என்று இயங்கி வருபவர் விஷ்ணுபுரம் சரவணன். இவர் எழுதிய 'ஒற்றைச்சிறகு ஓவியா', 2025ஆம் ஆண்டுக்கான 'சாகித்ய அகாதமி' பரிசை வென்றது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய உலகில் இயங்கி வரும் சரவணன், 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் பெரும்பாலானவை சிறார் நூல்கள். சரவணன் எப்படி எழுத்தாளரானார்? அறிந்துகொள்வோமா?
சரவணன் பிறந்தது, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விஷ்ணுபுரம் என்னும் சிற்றூர். தந்தை சிவராமன், தாய் கல்யாணி. சிறுவயது முதலே சிறார் இலக்கியங்களை வாசிப்பதும், தன்னையொத்த சிறுவர்களுக்கு அவற்றைக் கதைகளாகச் சொல்வதும் சரவணனின் வழக்கம். உள்ளூர் தொடக்கப்பள்ளியில் பயின்றபின் ஊடகவியலில் பட்டயக் கல்வியை நிறைவு செய்தார். அக்காலத்திலும் தன் வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்குக் கதை சொல்வதைத் தொடர்ந்தார். சிறார் எழுத்துக்களோடு தீவிர இலக்கியங்களையும் வாசிக்கத் தொடங்கினார். எழுத்தின் சூட்சுமம் பிடிபட்டது. இதழ்களில் எழுதத் தொடங்கினார். தன் பெயருடன், தன் ஊரின்மீது கொண்ட காதலால் அதனையும் இணைத்து 'விஷ்ணுபுரம் சரவணன்' என்ற பெயரில் எழுதினார். தொடக்கத்தில் கவிதைகள், சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். 'ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி' என்கிற கவிதைத் தொகுப்பு 2008-ம் ஆண்டில் வெளியானது. அதுவே விஷ்ணுபுரம் சரவணனின் முதல் நூல்.

எழுத்தாளர் யூமா வாசுகி, சரவணனைச் சிறாருக்காக எழுதும்படி ஊக்கினார். சிறார் மொழிபெயர்ப்பு நூல்களை வாசிக்கும்படி வழிகாட்டினார். யூமா வாசுகி மலையாளத்தில் இருந்து மொழிபெயர்த்து எழுதிய நூல்கள் சரவணனின் கவனத்தை ஈர்த்தன. எழுத்தாளர் ரேவதியின் படைப்புகளாலும் கவரப்பட்டார். விரிவான வாசிப்பினால் சிறார் இலக்கியத்தின்மீது ஈடுபாடு அதிகமானது சிறார்களுக்கென்றே எழுதத் தொடங்கினார். முதல் படைப்பு சிறுவர் மணியில் வெளியானது. தொடர்ந்து எழுதினார்.
தமிழ் ஆழி, ஆனந்த விகடன், நியூஸ் தமிழ் போன்ற ஊடகங்களில் பணியாற்றினார். சுட்டி விகடனில் உதவி ஆசிரியராகவும் விகடன் தடம் இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராகவும் பணிபுரிந்தார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ஊஞ்சல், தேன்சிட்டு போன்ற மாணவர் இதழ்களின் இணையாசிரியராகப் பணிபுரிந்தார். பள்ளிக்கல்வித் துறை மாணவர்களுக்காக நடத்தும் 'கனவு ஆசிரியர்' இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவராக இடம்பெற்றார். பள்ளி மாணவர்களை எழுதவைக்கும் நோக்குடன் 'தி இந்து தமிழ் திசை'யில் 'மாணவர் எழுத்தாளரே' என்னும் தொடரை எழுதினார். ஒரு கவிதை நூல், ஒரு கட்டுரை நூல், நான்கு சிறார் நாவல்கள், ஒன்பது சிறார் சிறுகதை நூல்கள், நான்கு பெற்றோர்க்கும் ஆசிரியர்க்குமான நூல்கள் எனக் கிட்டத்தட்ட இருபது நூல்களை விஷ்ணுபுரம் சரவணன் எழுதியுள்ளார். இவரது நூல்கள் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சரவணனின் மொழி நடை எளிமையானது. குழந்தைகள் எளிதாக வாசிக்கும் வகையில் சிறு சிறு சொற்களை அமைத்துத் தனது படைப்புகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்குப் புரியும் வகையில் பல சமூகப் பிரச்சனைகளை, சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தனது நூல்களில் விவரித்துள்ளார்.
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினராகப் பணிபுரிந்து வரும் சரவணன், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கதை எழுதவும், சொல்லவும் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறார். சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துத் தொடர்ந்து மேடைகளில் பேசி கவன ஈர்ப்புச் செய்கிறார்.
தனது இலக்கியச் செயல்பாடுகளுக்காகப் பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் விஷ்ணுபுரம் சரவணன் பெற்றுள்ளார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இவரது நூல்களைச் சிறந்த நூல்களாகத் தேர்ந்தெடுத்துப் பரிசளித்துள்ளது. இவர் எழுதிய 'ஒற்றைச் சிறகு ஓவியா' நூலுக்கு ஆனந்த விகடன் இதழின் 'சிறந்த சிறார் இலக்கிய விருது', 'வாசகசாலை இலக்கிய அமைப்பு' அளித்த சிறார் இலக்கிய விருது ஆகியன கிடைத்தன. இதே நூலுக்கு சாகித்ய அகாதமியின் 'பால புரஸ்கார் விருது' கிடைத்தது குறிப்பிடத்தகுந்தது.

மனைவி பிரியதர்ஷினி, மகள் தமிழினியுடன் சென்னையில் வசித்து வருகிறார்.
நூல்கள்: கவிதைத் தொகுப்பு: ஓவியத்தில் பறக்கும் வண்ணத்துப்பூச்சி. சிறார் நூல்கள்: வாத்து ராஜா, வித்தைக்காரச் சிறுமி, வானத்துடன் டூ, கயிறு, சாதனாவின் தோழி, எங்க தெரு, எங்க பூங்கா, எங்க ஊரு, டிங் டாங், உறவுகளுக்கு ஒரு வாழ்த்து, நீலப்பூ, ஒற்றைச்சிறகு ஓவியா. கட்டுரை நூல்கள்: குழந்தைகளுக்கு மரியாதை, கதை கதையாம் காரணமாம் |
|
|
| தென்றல் |
|
|
|
|
|
|
|
|
|
|