FeTNAவில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பங்களிப்பு ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: 'த்விதி த்யுதி' நடன நிகழ்ச்சி
|
 |
பிரித்தானிய பாராளுமன்றத்தில் பெருமைப்படுத்தப்பட்ட அட்லாண்டா கவிஞர் கிரேஸ் பிரதிபா |
   |
- செய்திக்குறிப்பிலிருந்து | ஆகஸ்டு 2025 |![]() |
|
|
|
 |
ஜூன் 18, 2025: "செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம் சென்றிடனும் தமிழ் கொண்டே சென்றிடுவாய்" என்று பாடிய அட்லாண்டாவைச் சேர்ந்த கவிஞர் கிரேஸ் பிரதிபா (தேன் மதுரத்தமிழ் கிரேஸ்) அவரது தமிழ்ப் பணிக்காக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர் விருதளித்துச் சிறப்பிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு நடாஷா அயர்ன்ஸ் மற்றும் லண்டன் துணைமேயர் முகமது இஸ்லாம் இணைந்து கேடயம் மற்றும் விருதினை வழங்க, கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தின் திரு. சிவா பிள்ளை பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.
தமிழ் அறிஞர்களுக்கு விருதளித்துச் சிறப்பு செய்யும் இந்த அருமையான நிகழ்வை, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் பாட்டழகன், குரோய்டன் தமிழ்ச் சங்கம், லண்டன், குரோய்டன் மாநகராட்சிக் கவுன்சிலர் திரு அப்பு தாமோதரன், கோல்ட்ஸ்மித் பல்கலைக்கழகத்தின் திரு சிவா பிள்ளை ஆகியோர் இணைந்து நடத்தினர். லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் சதுக்கத்தில் அமைந்துள்ள பிரித்தானிய பாராளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு இனிதே தொடங்கியது.

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு வி.ஜி. சந்தோசம், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மாண்புமிகு ஸ்டீவ் ரீட், நடாஷா அயர்ன்ஸ், உமா குமரன், சியோபினி மெக்டோனா, சாரா ஜோன்ஸ், ஜிம் டிக்ஸன், குரீந்தர் சிங், ஜஸ் அட்வால், ஃப்ளோரன்ஸ் இஸலோமி, பாபி டீன், லண்டன் துணைமேயர் முகமது இஸ்லாம் முதலானோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட 24 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் சிறப்பிக்கப்பட்டனர். குரோய்டன் மாநகராட்சி மன்றக் கவுன்சிலர் திரு அப்பு தாமோதரன் வரவேற்புரை வழங்க, முனைவர் பாட்டழகன் நோக்க உரை வழங்கினார். குரோய்டன் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் குறித்து திரு அனந்த ராமகிருஷ்ணன் அவர்களும், கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தின் நோக்கம் குறித்து திரு சிவா பிள்ளை அவர்களும் உரையாற்றினர்.
முனைவர் பாட்டழகன் எழுதிய 'தன்னலம் இன்றி தழைத்த நிழல் அன்னை சரோஜினி சீனிவாசன்' வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. சுற்றுச்சூழல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு ஸ்டீவ் ரீட் (MP) நூலை வெளியிட்டார். பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் என்ற பெருமைக்குரிய மாண்புமிகு உமா குமரன் (MP) நூலின் முதல் பிரதியையும், திருமதி சுமதி இரண்டாம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலும் இருந்து அறிஞர்கள் உரையாற்றினர். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கவிஞர் கிரேஸ் பிரதிபா பேசும்பொழுது பிரித்தானியப் பாராளுமன்றத்தில் தமிழுக்காகச் சிறப்பிக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுவதாகவும் தமிழன்னை தன்னை அங்கு கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள் என்றும் நன்றி பாராட்டினார். தன்னுடைய தமிழ் இலக்கியப் பணியில் உறுதுணையாக இருக்கும் ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து பகிர்ந்த அவர் தமிழை மற்றவருக்கு எடுத்துச் செல்ல நினைப்பதும் பேசுவதும் தமிழின் தொன்மை குறித்து பெருமையினால் மட்டுமல்ல, மற்றவரைக் குறைத்துப் பார்ப்பதற்காகவும் அல்ல, ஆனால் தமிழ் மொழியில் இருக்கும் ஆழ்ந்த விழுமியங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவும்தான் என்று கூறினார். தொல்தமிழர் தம்மைச் சிறிய வட்டத்துக்குள் குறுக்கிக் கொள்ளாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று இயற்கையோடு இயைந்து அனைவருடனும் இணைந்து வாழ்ந்தனர் என்று குறிப்பிட்ட அவர், அந்தத் தமிழ் விழுமியங்களை இன்றைய உலகிற்கு எடுத்துச் சொல்வது தேவையானது என்று குறிப்பிட்டார்.
தமிழின் தொன்மையைத் தொல்லியல் ஆதாரங்களுடன் நிறுவ உழைக்கும் அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவையும் தமிழால் வளப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் தமிழர் ஈடுபட வேண்டும் என்றும் பேசியது பெரும் வரவேற்பினைப் பெற்றது.
ஆ.கோ.மோ. தமிழில் ஆய்வு மையச் செயலாளர் வழக்கறிஞர் திரு அகிலன் நன்றியுரை வழங்க நிகழ்வு இனிதே நிறைவுற்றது. |
|
செய்திக் குறிப்பிலிருந்து |
|
 |
More
FeTNAவில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் பங்களிப்பு ஸ்ரீக்ருபா நடனக் குழுமம்: 'த்விதி த்யுதி' நடன நிகழ்ச்சி
|
 |
|
|
|
|
|