Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | முன்னோடி | மேலோர் வாழ்வில் | பொது
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | கவிதைப் பந்தல் | நூல் அறிமுகம் | சின்ன கதை
Tamil Unicode / English Search
முன்னோடி
ஓவியர் மாயா
- பா.சு. ரமணன்|மே 2025|
Share:
தமிழின் பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தனது தூரிகை மூலம் உயிர் கொடுத்தவர் ஓவியர் மாயா. ஓவியர், பக்க வடிவமைப்பாளர், இதழ் தயாரிப்பாளர் எனப் பல களங்களில் பணியாற்றிய மாயாவின் இயற்பெயர் மகாதேவன். பிப்ரவரி 26, 1927ல், கேரளாவில் உள்ள வைக்கத்தில், ராமசுப்பிரமணியம் – பாகீரதி இணையருக்குப் பிறந்தார். சொந்த ஊர் திருநெல்வேலி அருகே உள்ள கோபாலசமுத்திரம். மாயாவின் குழந்தைப் பருவம் அவ்வூரில் கழிந்தது. பின்னர் குடும்பம் சென்னைக்குக் குடிபெயர்ந்தது. மாயா, தொடக்க காலத்தில் செங்கல்பட்டில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் படித்தார். தொடர்ந்து தியாகராய நகரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை பயின்றார்.

மாயாவுக்கு இயல்பாகவே ஓவியக்கலை மீது ஆர்வம் இருந்தது. இரண்டாம் வகுப்புப் படிக்கும் போதே ஓவியங்கள் வரையத் தொடங்கிவிட்டார். பள்ளிக்காலத்தில் நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்து இதழில் பல ஓவியங்களை வரைந்தார். 1945ல் ஓவியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் மாயா. அக்காலத்தின் பிரபலமான 'பேசும்படம்' நிறுவனம் 'பிக்சர் போஸ்ட்' (Picture Post) என்ற ஆங்கில இதழையும் நடத்தியது. அதில் ஓவியராகச் சேர்ந்தார். பத்திரிகை ஓவிய நுணுக்கங்களை அங்கு கற்றுக் கொண்டதுடன் ஓவியம், கேலிச்சித்திரம், வடிவமைப்பு எனப் பல களங்களில் பணிபுரிந்தார். அவ்விதழைத் தொடர்ந்து 'பேசும்படம்' இதழில் ஓவியராகவும், பக்க வடிவமைப்பாளராகவும் பணியாற்றினார். 'பாலபாரதி' என்ற இதழில் (வ.வே.சு. ஐயர் நடத்திய இதழ் அல்ல) சில காலம் பணியாற்றினார். அக்காலத்தில் 'வீர சிவாஜி' என்னும் படக்கதைத் தொடருக்கான படங்களை வரைந்தார். 'தேவன்' என்ற பெயரிலும் படங்கள் வரைந்தார்.



மாயா 1955ல் ஆனந்த விகடன் இதழில் பணியில் சேர்ந்தார். அப்பணி அவரது வாழ்வின் பல கதவுகளைத் திறந்துவிட்டது. மாயாவின் முதல் ஓவியம், 1955 விகடனின் ஜனவரி இதழில் 'சாமிக்கண்ணு' எனும் சிறுகதைக்காக வரையப்பட்டு வெளியானது. தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களின் படைப்புகளுக்குப் பல்வேறு வகைப் பின்னணிகளில் ஓவியங்கள் வரைந்து வாசகர்களின் மனம் கவர்ந்தார். 'தேவன்' என்ற பெயரிலேயே வரைந்துகொண்டிருந்தார். அப்போது தேவன் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதனால் ஏற்பட்ட பெயர்க் குழப்பத்தைத் தவிர்க்க, 'மாயா' என்ற புனைபெயரைச் சூட்டிக் கொண்டார். 1959 செப்டம்பர் மாதம் 'அவனும் அவளும்' என்ற சிறுகதைக்காக வரைந்த ஓவியத்தில் 'மாயா' என்ற பெயர் இடம்பெற்றது. தொடர்ந்து 'மாயா' என்ற பெயரிலேயே வரைந்தார். விகடனில் 'மாயா' வரைந்த 'ஜமீன்தார் மகன்' ஓவியத் தொடர் சிறந்த வரவேற்பைப் பெற்றது.



ஜெயகாந்தன், கொத்தமங்கலம் சுப்பு, பரணீதரன், கோபுலு, சாவி, மணியன், தாமரை மணாளன், வாணி உள்ளிட்ட பல படைப்பாளிகளுடன் மாயா நல்ல நட்பில் இருந்தார். அவர்களில் பலரது கதைகளுக்கு வரைந்தார். மாயா, தமிழ் இதழ்களில் முதன் முதலில் வண்ணப் படம் வரைந்த ஓவியராக அறியப்படுகிறார். கைகளினால் வரைவதையே மாயா பெரிதும் விரும்பினார். தனது 'ஸ்ப்ரே பெயின்டிங்' ஓவியங்களால் தனித்து அறியப்பட்டார். பார்த்தவுடன் இது 'மாயாவின் ஓவியம்' என அடையாளம் காணும் வகையில் தனித்துவமாகவும், உயிரோட்டமாகவும் மாயாவின் ஓவியங்கள் அமைந்தன.

1978வரை ஆனந்த விகடனில் பணியாற்றினார், மாயா. பின்னர் 'இதயம் பேசுகிறது' இதழில் தனது ஓவியப் பயணத்தைத் தொடர்ந்தார். மணியன், தாமரை மணாளனின் பல புகழ்பெற்ற தொடர்களுக்கு வரைந்தார். 1978 முதல் 1986 வரை இதயம் பேசுகிறது இதழில் பணிபுரிந்தார். பின் சுதந்திர ஓவியராகச் செயல்படத் தொடங்கினார். கல்கி குழும இதழ்கள் உட்படப் பல இதழ்களுக்கு வரைந்தார். குமுதத்தில் வெளியான ஜெயலலிதாவின் தொடர் ஒன்றிற்கு ஓவியம் வரைந்து அவரது பாராட்டுதலைப் பெற்றார்.



'மாயா சித்ராலயா' எனும் பெயரில் ஓவியப் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி நடத்தினார். பல ஓவியர்களை உருவாக்கினார். கோவிட் தொற்றுக்காலம் வரை அப்பள்ளி செயல்பட்டது. பின் நின்றுபோனது.

மாயா, 2002ல், தனது 75வது வயதில் 'மாயா வெட்டிங் கார்ட்ஸ்' என்ற, அழைப்பிதழ்களை உருவாக்கி அச்சிடும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழி பேசுபவர்களின் திருமணம், நிச்சயத்தார்த்தம், உபநயனம், பூச்சூட்டல் உள்ளிட்ட பல்வேறு குடும்ப நிகழ்வுகளுக்கு, பாரம்பரியம் மற்றும் கலாசாரப் பின்னணி கொண்ட ஓவியங்களை வரைந்தளித்தார். கோவிட் தொற்றுக்காலம் வரை அந்நிறுவனம் இயங்கியது.

மாயாவின் வாழ்நாள் சாதனைகளைக் கௌரவிக்கும் வகையில், ஓவியர் மணியத்தின் நூற்றாண்டின் போது மாயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பணப்பரிசும் வழங்கப்பட்டன. அகரம் ஃபவுண்டேஷன் மூத்த ஓவியருக்கான விருதும், பணப்பரிசும் அளித்துச் சிறப்பித்தது.



மாயா, ஜனவரி 22, 2025 அன்று, தனது 98-ம் வயதில் காலமானார்.

தமிழ் இதழுலகம் என்றும் நினைவில் வைத்திருக்க வேண்டிய மறக்கக்கூடாத முன்னோடி ஓவிய ஆளுமை மாயா.
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline